விலங்குகளுக்கு ஆறாம் அறிவு உண்டு என்ற நம்பிக்கையை வலுப்படுத்துகிறது ட்சுனாமி

This entry is part [part not set] of 44 in the series 20041230_Issue

எட் ஸ்டோட்டார்ட்


இந்தியப் பெருங்கடலில் தோன்றிய ட்சுனாமி காட்டுவிலங்குகளைப் பாதிக்கவில்லை என்பது விலங்குகளுக்கு ஆறாம் அறிவு உண்டு என்ற நம்பிக்கையை வல்லுனர்களிடம் வலுப்படுத்தியிருக்கிறது.

24000 பேர்களைக் கொன்ற ட்சுனாமி இலங்கையின் கடலோரத்தில் இருக்கும் வனவிலங்கு சரணாலயத்தில் ஒரு விலங்கையும் கொல்லவில்லை என்பதை இலங்கை வனத்துறை அலுவலர்கள் கூறியிருக்கிறார்கள்.

‘எந்த ஒரு யானையும் இறக்கவில்லை. ஒரு முயல் கூட இறக்கவில்லை. விலங்குகள் வரப்போகும் பேரழிவை உணர்ந்துகொள்ளும் சக்தி படைத்தவையாக இருக்கலாம். விலங்குகளுக்கு ஆறாம் அறிவு உண்டு என்று நினைக்கிறேன். மறுபாடான விஷயங்கள் நடப்பதை அவை அறிந்துகொள்கின்றன ‘ என்று இலங்கை வனத்துறையின் உதவி இயக்குனராக இருக்கும் ஹெச் டி ரத்னாயகே கூறினார்.

தென் கிழக்கு இலங்கையின் யாலா தேசிய பூங்காவில் சுமார் 2 மைல்கள் தொலைவுக்குகடலலைகள் உள்ளே வந்திருக்கின்றன. இந்த பூங்காவில் நூற்றுக்கணக்கான காட்டு யானைகளும் ஏராளமான சிறுத்தைகளும் இருக்கின்றன. ‘எரிமலை வெடிப்பதற்கு முன்னர் நாய்கள் கத்துவதும், பறவைகள் அங்கிருந்து பறந்துவிடுவதைப் பற்றியும் பலமுறை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இவை நிரூபிக்கப்படவில்லை ‘ என்று ஜோஹன்னஸ்பர்கில் இருக்கும் விலங்குகள் சரணாலயத்தில் இருக்கும் விலங்குகள் குணாம்ச நிபுணர் மாத்தியூ வான் லைரோப் தெரிவித்தார்.

‘ ஒரு பரிசோதனைச்சாலையில் இவற்றை பரிசோதித்திப்பார்த்து நிரூபிக்க முடியாது என்பது ஒரு காரணம் ‘ என்றும் அவர் குறிப்பிட்டார்.

மற்றும் பலர் இந்த கருத்தோடு ஒத்துப்போகிறார்கள்.

‘பறவைகள் வரப்போகும் பெரும் அழிவை உணர்ந்து கொள்கின்றன என்பதைப் பலர் குறிப்பிட்டிருக்கிறார்கள். ‘ என்று கிளைவ் வாக்கர் கூறினார். இவர் ஆப்பிரிக்க வன உயிர்களைப்பற்றி ஏராளமான ஆராய்ச்சிகள் செய்து புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.

விலங்குகள் தம் மோப்ப உணர்வையும், கேட்கும் சக்தியையும் பயன்படுத்தி தமக்கு வரும் ஆபத்துகளிலிருந்து தப்புவது தெரிந்த விஷயமே.

விலங்குகளுக்கு ஆறாம் அறிவு உண்டு என்ற பரவலான நம்பிக்கையை, இலங்கையின் அழிக்கப்பட்ட கடற்கரையோரம் வலுப்படுத்துகிறது.

ரோமானியர்கள் ஆந்தைகளை இப்படிப்பட்ட அழிவை முன்னமே எடுத்துரைக்கும் சகுனங்களாகக் கருதினார்கள். பல மூதாதையர் கலாச்சாரங்கள் யானைகளை இப்படிப்பட்ட புனித மிருகங்களாக, வரப்போகும் அழிவைத் தெரிவிக்கும் சக்தி படைத்தவை என்று கருதின.

Series Navigation

எட் ஸ்டோட்டார்ட்

எட் ஸ்டோட்டார்ட்