விண்வெளி ஊர்திகள் கண்கண்ட செவ்வாய்க் கோளின் தளங்கள் [Rover Explorations on Planet Mars-2 (2006)]

This entry is part [part not set] of 32 in the series 20060210_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


‘கடவுள் இவ்வுலகைப் படைத்தார் என்றால், படைப்பதற்கு முன்னால் அவர் எங்கே யிருந்தார் ? ஆக்குவதற்கு வேண்டிய மூலப் பண்டங்கள் இல்லாமல், எப்படிக் கடவுள் உலகை உண்டாக்கி யிருக்க முடியும் ? உலகைப் படைக்கு முன்பு முதலில் மூலப் பொருட்களைக் கடவுள் படைத்தார் என்று சொன்னால், திரும்பத் திரும்ப முடிவற்ற ஒரு தர்க்கத்தில் சுற்றிவர வேண்டிய டிருக்கும்! முதலும், முடிவு மற்ற காலம் போல, படைக்கப் படாதது உலகம் என்பதை அறிந்து கொள்! அது ஒரு நியதி அடிப்படையில்தான் உருவாகி யிருக்கிறது! ‘

மகாபுராணம் ஜினஸேனா, இந்தியா [9 ஆம் நூற்றாண்டு]

‘நமக்குத் தெரியாமல் ஒளிந்திருக்கும் வானியல் புதிர்களை ஊடுறுவிக் கண்டுபிடிக்கச் செவ்வாய்க் கோள்தான் விண்வெளி விஞ்ஞானிகளுக்கு உதவி புரியக் கூடியது ‘.

ஜொஹானஸ் கெப்ளர் [German Astronomer Johannes Kepler]

‘செவ்வாய்க் கோள் மணற் படுகையில் [Sand Dunes] பனித்திரட்டு பரவிக் கிடக்கும் சான்று கிடைத்திருக்கின்றது. மணற் கட்டிகளைச் சேர்த்து வைத்திருப்பது நீர் என்பது எனது யூகம். எதிர்காலச் செவ்வாய்ப் பயண மாந்தர் பிழைப்பதற்கு அதை உதவவும், எரிசக்திக்குப் பயன்படுத்தவும் முடியுமென நினைக்கிறேன். அசுரக் குவியலான சில மணற் படுகையில் 50% நீர்மை இருப்பதாக செவ்வாய்த் தளப்பண்பியல் சான்றைக் [Topgraphical Evidence] காண்கிறேன். செவ்வாயில் பெருவாரியான நீர் வெள்ளம் கிடைக்கலாம் என்று நான் சொல்லவில்லை! முன்பு காணப்படாத ஓரிடத்தில் புதிதாக நீரிருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது என்பதைக் குறிப்பிடுகிறேன். ‘

மேரி போர்க், அரிஸோனா அண்டக்கோள் விஞ்ஞான ஆய்வுக்கூடம் [Mary Bourke (Sep 2005)]

‘ஆர்க்டிக் கடலில் உள்ள ஸ்வால்பார்டு தீவில் [Svalbard Island] காணப்படும் நீலப் பனிக்கட்டியின் இயற்கைத் துளைகளில் ‘நுணுக்க உயிரியல் ஊறணி ‘ [Microbiological Oasis] ஒன்றைக் கண்டுபிடித்துள்ளோம். அசாத்தியமான அந்த உச்சக் குளிர்ப் பகுதிகளில் அவ்வித உயிரியல் ஆதாரங்கள் கிடத்திருப்பதை நாங்கள் எதிர்பார்க்க வில்லை. 1996 ஆம் ஆண்டு அண்டார்க்டிக்கில் கண்டெடுத்த செவ்வாய்க் கோளின் விண்கல்லைப் [Meteorite] போன்று, எரிமலையில் தோண்டி எடுத்த அந்த ஒரே தீவின் காந்த உலோகப் பாறைப் பளிங்கு மாதிரிகள் [Magnetite Crystals] உள்ளன. ‘

ஹான்ஸ் அமுட்ஸன், ஆய்வாள அதிபதி, ஆஸ்லோ பலகலைக் கழகம்

முன்னுரை: ரோவர் ஸ்பிரிட் [Rover: Spirit] 2004 ஜனவரி 2 ஆம் நாளும், ரோவர் ஆப்பர்சுனிடி [Rover: Opportunity] 2004 ஜனவரி 24 ஆம் தேதியும் செவ்வாய்க் கோளத்தில் எதிர்ப்புறத் தளங்களில் வந்திறங்கின! செவ்வாய்க் கோளின் வாய்க்கால் வழிகளில் ஒருகாலத்தில் ஆறுகள் ஓடின என்பதைச் தளவியற் சான்றுடன் [Geologic Evidence] நிரூபிப்பதில் அவை வெற்றி பெற்றன! திட்டமிட்ட மூன்று மாத ஊர்தி ஆயுள் எப்படி 24 மாத ஆயுளைத் தாண்டித் தொடர்ந்து வருகின்றன என்று கேட்டால், அவை அதிர்ஷ்ட வசமாக அப்படிப் பணி புரிகின்றன என்று நாசா விஞ்ஞானிகள் ஆச்சரியப் படுகின்றார்! ஊர்திகளின் சூரியசக்தி தட்டுகளின் [Solar Power Panels] மீது படிந்த தூசிகள், பேய்ப் புயல்கள் அடித்துப் பலமுறை துடைக்கப் பட்டதால், அவை மீண்டும் புத்துயிர் பெற்று மீண்டும் பணி செய்யத் துவங்கின! ரோவர் ஆப்பர்சுனிடி பணி புரிய ஆரம்பித்த முதலே நாசா விஞ்ஞானிகளை வியப்பில் தள்ளியது! பல யுகங்களுக்கு முன்பாகச் [Eons Ago] செவ்வாய்த் தளத்தில் நீரிருந்த வரலாற்று முக்கியமான சான்றை அது கண்டுபிடித்தது! அந்த அரிய சான்று செவ்வாய்க் கோளில் ஒரு காலத்தில் உயிரினம் வாழ்ந்திருக்கலாம் என்று ஊகிக்க வழியை உண்டாக்கியது!

அயர்லாந்து டப்ளினில் நடந்த விஞ்ஞான மேம்பாட்டு விழா

2005 செப்டம்பரில் டப்ளின் நகரில் நடந்த விஞ்ஞான மேம்பாட்டு விழாவில் [Advancement of Science Festival] அரிஸோனா அண்டக்கோள் ஆய்வக விஞ்ஞானி மேரி போர்க் ஆற்றிய தன் சொற்பொழிவில் கூறினார். ‘100,000 ஆண்டுகளுக்கு முன்னால் செவ்வாய்க் கோளில் கடைசி யுகப் பனிப்பொழிவு பெய்துள்ளது என்று நான் நம்புகிறேன். செவ்வாயில் தற்போது புதிதாகக் கண்டுபிடிக்கப் பட்டிருக்கும் மணற் படுகைகள் [Sand Dunes] அப்போதுதான் தோன்றி யிருக்க வேண்டும். உயிரினங்கள் அவ்விடங்களில் உதித்து வளர்ச்சி பெற்றிருக்க முடியாது என்பது என் கருத்து. அதைப் போன்ற காலநிலை மாறுதலில் நிகழ்ந்த பனிப்பொழிவு ஒன்று 20,000 ஆண்டுகளுக்கு முன்பாக, பூகோளத்தில் அண்டார்க்டிகா குளிர்க் கண்டத்தில் நேர்ந்துள்ளது! ஆனால் அத்ததைய இடங்களில் உயிரின வளர்ச்சிகள் ஆரம்பம் ஆவதற்கு வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கின்றன! ‘

2005 ஆகஸ்டு 12 இல் கிளம்பிய நாசாவின் செவ்வாய் சுற்றுக் கப்பல் [NASA Mars Orbiter], பிளவுகள், முன் துருத்திகள், நெடுஞ் சாய்வுத் தளங்கள் [Cracks, Protrusions, Steep Slopes] போன்ற பல நுணுக்கமான, விளக்கமான தளப் படங்களை எடுத்து அனுப்பி யுள்ளன. பூகோளத்தின் தென்துருவ அண்டார்க்டிகா பனித்தளங்கள் போன்ற மணற்படுகை செவ்வாயிலும் காணப் பட்டுள்ளன! பரிதி மண்டலத்தின் மாபெரும் மணற் படுகைச் செவ்வாய்த் தளத்தில்தான் உண்டாகி யிருக்கிறது! செவ்வாய் அண்டத்தின் தென்பாதிக் கோளத்தில் உள்ள கெய்ஸர் குழி [Kaiser Crater] மாபெரும் மணற்படுகைத் தளத்தைக் கொண்டதாக அறியப் படுகிறது என்கிறார், மேரி போர்க். 475 மீடர் [1558 அடி] உயரத்தில் உள்ள அந்தக் குழி 6.5 கி.மீடர் [4 மைல்] அகலம் கொண்டது. சிவப்புக் கோள் செவ்வாயின் தளவியல் பண்புகளை ஆராய்ந்தால், அவற்றை போலிருக்கும் பூகோளத்தின் ஒப்பான தளவியல் பகுதிகளின் பண்பை ஒத்துள்ளன என்கிறார் அவர். படர்ந்து பரவும் ஸகாராப் பாலைவனத்தின் படுகை மணல் போலின்றி, ஆனால் அண்டார்க்டிகா பாலை மணலைப் போன்று செவ்வாய் மணற் கட்டிகளின் வடிவங்கள் இறுகப் பிணைக்கப் பட்டு ஓர் தனித்துவ தோற்றத்தைக் கொண்டுள்ளன.

‘செவ்வாய்க் கோள் மணற் படுகையில் [Sand Dunes] பனித்திரட்டு பரவிக் கிடக்கும் சான்று கிடைத்திருக்கின்றது. மணற் கட்டிகளைச் சேர்த்து வைத்திருப்பது நீர் என்பது எனது யூகம். எதிர்காலச் செவ்வாய்ப் பயண மாந்தர் பிழைப்பதற்கு அதை உதவவும், எரிசக்திக்குப் பயன்படுத்தவும் முடியுமென நினைக்கிறேன். அசுரக் குவியலான சில மணற் படுகையில் 50% நீர்மை இருப்பதாக செவ்வாய்த் தளப்பண்பியல் சான்றைக் [Topgraphical Evidence] காண்கிறேன். செவ்வாயில் பெருவாரியான நீர் வெள்ளம் கிடைக்கலாம் என்று நான் சொல்லவில்லை! முன்பு காணப்படாத ஓரிடத்தில் புதிதாக நீரிருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது என்பதைக் குறிப்பிடுகிறேன். ‘

ஈசாவின் விண்ணுளவி அனுப்பிய தகவல்

ஈரோப்பியன் விண்வெளித் துறையகம் [European Space Agency (ESA)] ஜூன் 2, 2003 இல் 150 மில்லியன் ஈரோச் [Euro] செலவில் [133 மில்லியன் US டாலர்] தயாரித்து, 240 மில்லியன் மைல் பயணம் செய்ய அனுப்பியது, செவ்வாய் வேகக்கப்பல் [Mars Express with Beagle-2 Lander]. அது செவ்வாய்ச் சுற்றுச்சிமிழ் [Mars Express Orbiter] ஒன்றையும், தள ஆய்வுச்சிமிழ் பீகிள் [Beagle 2 Lander] ஒன்றையும் சுமந்து கொண்டு, ரஷ்யாவின் சோயஸ்-ஃபிரிகட் ராக்கெட் [Russian Soyuz-Fregat Rocket] ரஷ்யாவின் பைகோனூர் காஸ்மோடிரோம் [Baikpnur Cosmodrome] ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டது.

2003 டிசம்பர் 26 ஆம் தேதி செவ்வாய்க் கோளை 150 மைல் குறு ஆரத்தில் நெருங்கி, ஐரோப்பிய சுற்றுச்சிமிழ் நீள்வட்டத்தில் சுற்றப் போவதாக எதிர்பார்க்கப் பட்டது. சுற்றுச்சிமிழில் செவ்வாயின் சூழ்மண்டலம், கோளின் அமைப்பு, தளவியல் பண்பு, தள உட்பகுதி ஆகியவற்றை ஆராய ஏழு கருவிகள் அமைக்கப் பட்டுள்ளன. ஜெர்மனியின் விரிநோக்கிக் காமிரா [Stereoscopic Camera], பிரான்ஸின் தாதுக்கள் காணும் தளக்கருவி [Mineralogical Mapper], இத்தாலியின் சூழக உளவு கருவி [Atmospheric Sounder], இத்தாலி & ஜெட் உந்து ஆய்வகம் [JPL California] செய்த ரேடார் உளவி [Radar Probe] அவற்றில் குறிப்பிடத் தக்கவை.

பீகிள் மிகவும் சிறிய தள உளவி. 1831 இல் உயிரியல் விஞ்ஞான மேதை சார்லஸ் டார்வின் [Charles Darwin], தகவலைத் தேடி பூமியில் தடம்படாத தளத்துக்குச் செல்லப் பயன்படுத்திய கப்பலின் பெயர் பீகிள்-2! அந்தப் பெயரே ஐரோப்பியத் தள உளவிக்கு வைக்கப்பட்டது! செவ்வாய்த் தளத்தில் உயிரினங்கள் இருந்தனவா என்று, பீகிள் உளவு செய்யும். தளத்தில் நிலை பெற்றபின், பீகிள் விண்வெளிக் கோளில் வாழ்ந்த உயிரினம் [Exobiology], தளவியல் இரசாயன [Geochemistry] ஆய்வுகளைச் செய்யும். சுற்றுச்சிமிழ் நான்கு ஆண்டுகள் [2003-2007] தகவல் அனுப்பும் தகுதி வாய்ந்த சாதனங்களைக் கொண்டது.

நீர் வாயு சேமிப்புள்ள செவ்வாய்த் துருவ பனிப்பொழிவுகள்

செவ்வாய்க் கோளின் வடதென் துருவங்களில் நீரும், கார்பன் டையாக்ஸைடும் கட்டிகளாய்த் திரண்டு போன பனித்தொப்பியாய்க் குவிந்துள்ளது! இரண்டு விதமான பனித்தொப்பிகள் செவ்வாயில் உள்ளன. ஒன்று காலநிலை ஒட்டிய பனித்திரட்டு, அடுத்தது நிரந்தர அல்லது எஞ்சிடும் பனித்திரட்டு. காலநிலைப் பனித்திரட்டு என்பது செவ்வாய்க் கோளில் குளிர்கால வேளையில் சேமிப்பாகி, வேனிற்கால வேளையில் உருகி ஆவியாகச் சூழ்வெளியில் போய் விடுவது! எஞ்சிடும் பனித்திரட்டு என்பது வருடம் முழுவதும் நிரந்தரமாய் துருவங்களில் நிலைத்திருப்பது!

செவ்வாய்க் கோளின் காலநிலைப் பனித்திரட்டு முழுவதும் சுமார் 1 மீடர் தடிப்பில் காய்ந்த பனித்திணிவு [Dry Ice] வடிவத்தில் படிவது. தென்துருவ காலநிலைப் பனித்திரட்டு உச்சக் குளிர் காலத்தில் சுமார் 4000 கி.மீடர் [2400 மைல்] தூரம் படர்ந்து படிகிறது! குளிர்காலத்தில் வடதுருவ காலநிலைப் பனித்திரட்டு சுமார் 3000 கி.மீடர் [1800 மைல்] தூரம் பரவிப் படிகிறது! வேனிற் காலத்தில் வெப்பம் மிகுந்து 120 C [150 Kelvin] உஷ்ணம் ஏறும் போது காலநிலைப் பனித்திரட்டுகள், திரவ இடைநிலைக்கு மாறாமல் திடவ நிலையிலிருந்து நேரே ஆவியாகிச் சென்று சூழ்வெளியில் தப்பிப் போய்விடுகிறது! அவ்விதம் மாறும் சமயங்களில் கார்பன் டையாக்ஸைடு வாயுவின் கொள்ளளவு மிகுதியாகி, செவ்வாய் மண்டல அழுத்தம் 30% மிகையாகிறது!

2006 மார்ச்சில் சுற்றப் போகும் செவ்வாய் ஆர்பிட்டர் விண்கப்பல்

நாசா [NASA-National Aeronautics & Space Admistration] 2003 இல் செவ்வாய்க் கோளுக்கு சர்வேயர் [Surveyor], ஆடிஸ்ஸி [Mars Odyssey] என்னும் இரண்டு விண்கப்பல்களை ஏவியது. பிறகு ஈரோப்பில் ஈசா [ESA-European Space Agency] செவ்வாய் எக்ஸ்பிரஸ்ஸை [Mars Express] அதே சமயத்தில் அனுப்பியது. ரோவர் ஊர்திகள் இரண்டும் 2004 ஜனவரியில் அடுத்தடுத்துச் செவ்வாய்த் தளத்தில் தடம் வைத்து நடமாட ஆரம்பித்தன. அதன் பிறகு நாசா 2005 ஆகஸ்டு 12 இல் செவ்வாய் விண்சுற்றிக் கப்பலைச் [Mars Orbiter] செவ்வாய்க் கோளுக்கு ஏவியது. விண்சுற்றி 2006 மார்ச் 10 ஆம் தேதி செவ்வாயைச் சுற்ற ஆரம்பித்து, அடுத்து ஆறு ஆண்டு காலங்கள் வலம்வரும்! அப்பயணத்திற்கு நிதித்தொகை ஒதுக்கம்: 720 மில்லியன் டாலர்! முதலிரண்டு வருட காலம் அது செவ்வாய்க் கோளின் துருவப் பனித்தொப்பியின் [Polar Ice Cap] வரலாற்றை அறிய முனையும். இன்னும் மூன்று வாரத்திற்குள் நாசாவின் ஆர்பிட்டர் செவ்வாயைக் கோளை அண்டி சுற்றத் துவங்கி, ஆய்வுகள் செய்து பல விஞ்ஞானப் புதிர்களை விடுவிக்கப் போகிறது!

****

தகவல்கள்:

Picture Credits: NASA, JPL; National Geographic; Astronomy Magazine.

1. Mars Exploration Rover Mission [http://marsrovers.jpl.nasa.gov./mission/status.html] (Jan 27, 2006)

2. Space Today Online – Exploring the Red Planet, Future Mars Probes from Earth

3. Water on Mars -Polar Ice Caps By: Elisabeth Ambrose

4. Mars Polar Caps – Martian Pole Reveals Ice Age Cycles [Feb 25, 2005] Encylopedia of Astrobiology, Astronomy & Spaceflight.

5. Mars Rovers Advance Understanding of the Red Planet.

6. Twin Mars Rovers Still Exploring After Two Years [Jan 24, 2006]

7. Mars Rovers Explore Hints of Salty Water By: Robert Roy Britt [Feb 19, 2004]

8. Rovers Still Exploring Mars After Two Years By: Associated Press [Jan 2, 2006]

9. Cornell University Scientists to Lead NASA ‘s 2003 Mars Mission By: David Brand

10 2001 Mars Odyssey Space flight Now [October 24, 2001]

11 Mars Surveyor Orbiter [April 7, 2001]

12 Special Report Odyssey Mission to Mars

13 Mars Global Surveyor [Nov 7, 1996], Mars Path Finder [Dec 1996].

14 Destination to Mars, Space flight Now By: William Harwood [July 8, 2003]

15 Twin Roving Geologists Bound for Surface of Mars By: William Harwood [May 29, 2003]

16 Science & Technology: ESA ‘s Mars Express with Lander Beagle-2 [Aug 26, 2003]

17 Future Space Missions to Mars By: European Space Agency [ESA]

18 http://www.thinnai.com/science/sc0925031.html

18A http://www.thinnai.com/sc0203062.htmlAuthor ‘s [Article on Mars Missions]

19 Spacecraft Blasts off to Gather Mars Data By: Associated Press [Aug 12, 2005]

20 NASA Facts, Mars Exploration Rover By: NASA & JPL [Sep 2004]

21 Arctic Microbes Raise Cope for Life on Mars By: Associated Press [Oct 25, 2005]

22 Making A Splash on Mars By: Charless W. Pitt National Geographic [July 2005]

23 Scientist Sees Water in Martian Sand Dunes, Similarities to Antarctic Formations Noted [Sep 5, 2005]

24 Mars Reconnaissance Orbiter on the Approach By: JPL [Feb 8, 2006]

****

jayabarat@tnt21.com [February 9, 2006]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா