விடுதலையின் ஒத்திகை.

This entry is part [part not set] of 25 in the series 20061130_Issue

எஸ். காமராஜ்



விளையாட்டைப் போலவே நடிப்பிலும் எந்த இடத்தைத்தேர்வு செய்யவேண்டும் என்பதில்
எல்லாருக்கும் மிகுந்த குழப்பம் வரும். ஆனால் வாத்தியார்களுக்கு அதிலெல்லாம் குழப்பமிருக்காது. அது தான் நாடகவாத்தியார் சங்கரலிங்கம் அவரை சாக்சன் துரை வேசத்தில் போட்டார். சக்கரையண்ணனுக்கு கட்டைக்குரல், நாலு கட்டைக்குமேல் ஏறினால் தகரத்தைத் தரையில் போட்டு இழுத்தது போலொரு சத்தம் வரும். வசனமும் தெளிவாக உச்சரிக்க வராது. வாத்தியாருக்கு நெருங்கின சொந்தக்காரராகிப்போனதால் அவரை நடிக்கவைக்கவேண்டிய நிர்ப்பந்தம் வாத்தியாருக்கு ஏற்பட்டது.
அதுவுமில்லாமல் ஊருக்கு வந்தநேரம் எல்லாம் சக்கரையண்ணன் வீட்டில் தான் சாப்பாடு. செஞ்சோற்றுக்கடன் கட்டபொம்மன் வேசத்தை குரிவைத்து சப்புக் கொட்டிக் கொண்டிருந்தவருக்கு சாக்சன் துரையின் பாத்திரம் கொடுத்தார். மத்த வேசக்காரர்களுக்கு ரெண்டு நாள் ஆகிற ஒத்திகை சாக்சன் துரைக்கு மட்டும் ஒம்பது நாள் பிடிக்கும். பொங்கலும் நெரு நெருன்னு நெருங்கிக்கொண்டிருந்தது. ‘அடுத்த பொங்கலுக்காவது ரெடியாகுமா சக்கரையண்ணே’ என்று விசனப்பட்டு கேலிசொல்வார் வாத்தியார். சாக்சன் ஆள் கருப்பு, ஒரு கால் ஒச்சம் சவக்கு சவக்குன்னு நடந்து கொண்டு

அண்டமெல்லாம் கிடு கிடுக்கத் தண்டோராக் குடுப்பனே
ஆண்மை பேசும் துஷ்டர்களைச் சப்ஜெயிலில் அடைப்பேனே

என்று அவர் மேடையில் கிந்திக் கிந்தி நடக்கும் போது சனம் கழுக் கழுக்கென்று சிரிக்கும், பக்கத்தில் சாக்சன் துரையின் சம்சாரம் இருக்குதான்னு பாத்துவிட்டு, ‘துரையவுக கரிச்சட்டிக்குள்ள இருந்து வாறாரா’ என்று கேலி பேசுவார்கள். சக்கரையண்ணன் கருப்புன்னா கருப்பு கரிச்சட்டி தோத்துப்போகும் கருப்பு.
சோத்துக்குத் தண்ணி ஊத்தி வைக்க, அழுத பிள்ளையைத்தொட்டிலில் போட பெண்கள் எழுந்து போய்விடுவார்கள். அதனாலேயே நாடக வாத்தியாருக்கு பெரும் மனக்கஷ்டம் வரும் சாக்சன் துரை வரும்போதெல்லாம் சனங்களிடம் கோபம் வருவதற்குப்பதிலாக சிரிப்பு வருவதை கண் கொண்டு பார்க்கச் சகிக்கமுடியாது வாத்தியாருக்கு. அந்தநேரத்தை ரெண்டுகிளாஸ் சாராயம் ஏத்திக்கொண்டு கத்திரிச் சீரெட்டுப் பத்தவைத்துக்கொண்டு மாரியம்மா வீட்டுக்குப் போவதற்கு ஒதுக்கிவிடுவார். ஆனால் கட்டபொம்மானாக வரும் கருப்பசாமியின் மீசையும் உயரமும், அளவெடுத்து செய்ததுபோலிருக்கும்.

எட்டுத்திசையும் எழுகடல் சீமையும்
வெட்டிச் ஜெயம் கொண்டான் கட்டபொம்மு,
கட்டபொம்மன் என்று பேரு சொன்னால்
காடை பதுங்குமாம் கதுவாளி முட்டை கருக்கலங்குமாம்

என்று எட்டுக்கட்டையில் பாடும்போது மைக்கில்லாமல் பக்கத்தூருக்கும் கேக்கும். சங்கீத ஞானமில்லாத கருப்பசாமி, அதை சரளி யெடுத்து பாடக்கேட்கும்போது அருக்கே பொறாமையாயிருக்கும். ஆனால் அவருக்கும் ஒரு கண் மாறுகண். சாக்சன் துரையைப் பார்த்து வசனம் பேசினால் வாத்தியக்கோஷ்டியைப் பார்த்துப் பேசுவது போலிருக்கும்.
அது போலவே ஆட்டுக்கார சின்னத்தம்பியின் குரல் கனீர்க் குரல் வெங்கலக் கும்பாவைத் தட்டி விட்டநீண்ட நேரத்துக்குபின்னும் ஓசை வருவது போலொரு குரல். முகம் மட்டும் கொஞ்சம் நீண்டிருக்கும், அது எத்துப்பல்லால் வந்துசேர்ந்த அழகு. சின்னப்பிராயத்தில் விரல் சூப்புகிற எல்லார்க்கும் எத்துப்பல் தான். தாய்ப்பாலும் சோறும் தட்டுப்பாடான குடும்பத்துப் பிள்ளைகளுக்கு பெருவிரல் தான் பசியடக்கும் கருவி. அந்த ஆடுமேய்க்கிற சின்னத்தம்பிக்கு நடிக்க வந்த பிறகு ஒரு சேகரம் வந்து சேர்ந்தது. பேச்சியப்ப பிள்ளையின் மனைவி கோமதியம்மாளுக்கு பாட்டுன்னா கிறுக்கு, பிள்ளைக்கோ யாரும் ராகம் போட்டுப்பேசினாலும் பொறுக்காது.
பிள்ளையவுகளின் பம்புசெட்டுப்பக்கம் ஆடு பத்திவரும் நடு மத்தியான நேரம் சின்னத்தம்பிக்கும் கோமதியம்பாளுக்கும் சங்கீதமாகக்கழியும்.
தெக்குதெரு குருசாமிக்கு பொட்டிப்பகடை வேசம். அந்த வேசம் கதைப்படி ரெண்டு சீன் மட்டும் வருவதால். குருசாமியை கோமாளி வேசத்துக்கு ஒதுக்கி வைத்துக்கொண்டார் நாடக வாத்தியார். மேடை நாடக வழக்கப்படி கோமாளி வேசங்கட்டுகிற ஆள் நாடகத்தை ” வந்தேனே ” என்று பாடி துவக்கி வைக்கவேண்டும். அவர் தான் வரவேற்புறை, நன்றியுரை எல்லாம் ,
ஊட ஊடே கர கரக்காத ஒழுங்கான மைக் செட்டுக்கும்,
உட்கார்ந்து பேயாடும் பச்சை சேலை பாட்டிக்கும்
பல்லுப்போன பாட்டிகிட்ட பட்டாணி விக்கும் யாவாரிக்கும்
ஓரமா நின்னு சீட்டியடிக்கும் எளவட்டச்சேட்டைக்கும்
வணக்கம், வணக்கம், வணக்கம்
சொல்லுவார். ராஜபார்ட், ஸ்ரீபார்ட் நடிகர்கள் வரத்தாமதமானால் அந்த நேரத்தை ஈடு கட்ட, நாடகம் போரடிக்கிற இடத்தில் ரெண்டு சினிமாப்பாட்டுப் பாடி, ரெட்டை அர்த்த வசனம் பேசி உற்சாகப்படுத்தவேண்டிய
பெரும் பொறுப்பு அவர் தலை மேலேற்றப்படும். அவரும் எல்லா வித்தையையும் படித்திருப்பார். ஆனால் ஏதுமறியாக் கோமாளிகிவிடுவார். அவரவர்க்கான வசனத்தையும், பாட்டையும் மனப்பாடமாக்கி அதில் மெருகூட்ட பயிற்சி பண்ணிக்கொண்டிருப்பார்கள். குருசாமி மாத்திரம் எல்லா வேசத்துக்கான சங்கதிகளையும் தெரிந்து வைத்திருப்பார். களத்து வேலை முடிந்து பம்புசெட்டில் குளித்து திரும்புகிற தனிமையில் ஈரவேட்டியை தலைக்குமேல் பரக்கவிட்டபடி

கொண்டையங்கோட்டையாம் மறவர்குலம் நான்
கோடையிடி போன்ற பாதர் வெள்ளை
இதை மூன்று தினுசான ராகத்தில் பாடுவார்.
அந்த பாட்டுப்பாடும்போது அவர் முகம் இறுக்கமாகும்.

குருசாமிதான் முதலில் வெள்ளையத்தேவன் வேசத்துக்கு தேர்வானார், முதல் மூணு மாசம் ராத்திரி நேரங்களில் மேலத்தெருமடத்தைப் பூட்டிக்கொண்டு பாடம் நடக்கும். மங்கலான குண்டு பல்பு வெளிச்சத்தில் பாட்டுக்களும் வசனங்களும் சொல்லிக்கொடுக்கிற சங்கரலிங்க வாத்தியார் வேர்த்து வடிய வடிய அங்கும் இங்கும் அலைவார். தனியரு மனிதனாக சுதந்திர வெப்பத்தை ஊதி ஊதி தீயாக மாற்றுவார். அவர் கண்ணும் குரலும் சுற்றியிருப்போர் ரத்தத்தை சூடேற்றுகிற ஆம்ப்ளிபயராக மாறும். ஜன்னல் துவாரத்து வழியாக சிறுசும் பெருசும் வேடிக்கை பார்க்கும். உள்ளே விடாத கோபத்தில் கதவை டமாரென்று தட்டுவார்கள். காவக்கார வள்ளிமுத்து கம்பெடுத்துக்கொண்டு விரட்ட எல்லோரும் ஓடிப்போவார்கள்.
ஊரில் காட்டுவேலையின் போதும், பொதுக்கிணத்திலும், ஓடைப்பக்கமும் இந்தப்பேச்சாகவே இருந்தது.

” குருசாமி எண்ணமாப்பாடுறாம் பாரு ”

ஆணும் பெண்ணும் ஆச்சரியப்பட்டார்கள். குருசாமி போகிற இடமெல்லாம் ஒரு மரியாதையும் சலுகையும் கூட வந்தது. மூணு மாசம் போனபின்னொரு நாள் ஊர்த்தலைவர், நாடக வாத்தியாரிடம் ஒரு விண்ணப்பம் வைத்தார்.
” ஊர்ச்சணங்களுக்கு முன்னாள் ஒரு நாளைக்கு ஒத்திகை பாக்கலாமுல்ல வாத்தியாரையா”
பொங்கல் வந்தால் தான் கரகாட்டம் நாடகம் ஓசிச்சினிமா எல்லாம். பொங்கலுக்கின்னும் ஒம்பது மாசமிருக்கு.
சனம் பொழுது போகாமல் தெருச்சண்டை தேடி அலைந்து கொண்டிருந்தது. அதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டுதான் ஊர்த்தலைவர் அப்படிச்சொன்னார்.
நாள் குறித்து அரிதாரச்சாமான்கள், மைக்செட், தாக சாந்தி இப்படிச்செலவுகளை ஊர்ப்பணத்திலேயே ஏற்றுக்கொள்ள ஏற்பாடாகியிருந்தது. ஸ்ரீபார்ட், டான்ஸ் காமிக்ஸ், வெள்ளையம்மாள் வேசத்துக்கு மதுரையிலிருந்து ஆள் கொண்டு வரவேண்டும். அது இப்போதைக்கு கட்டுபடியாது. பிரதானக்கதைக்கான வேசக்காரர்களோடு நாடகம் ஆரம்பமானது.
குருசாமியின் வேசப்பொருத்தமும், கிறக்குகிற குரலும் ராஜ பார்ட்டைக்கூடத்தூக்கி சாப்பிட்டது. குருசாமி வரும்போதெல்லாம் விசில் சத்தம் பறந்தது. கூட்டத்து மூளையில் ஓரமாக குருசாமியின் குடும்பமும், கூட்டமும்
பூரிச்சுப்போய் நின்றிருந்தார்கள். பாதர் வெள்ளைக்கும், கும்பெனித்துரைக்கும் தர்க்கம் நடக்கிறப்போது வார்த்தைகள் தடிக்கும், வசனங்களில் தீப்பறக்கும் ” அடே வெள்ளைக்கார நாயே மன்னரின் மடியில் கைவைத்த உன் தலை துண்டு
துண்டாகட்டும் ” சொல்லிக்கொண்டு குருசாமி வாளை உறுவினார்.
கூட்டத்துக்குள் சல சலப்பு வந்தது. கூட்டம் குபீரென்று எழுந்தது.
” இன்னைக்கும் சிலுவையிழுத்துட்டாங்களா, நாலு குடிகாரப்பயக இருந்துக்கிட்டு ஒரு நாளும் ஒழுங்கா கூத்துப்பாக்க உடமாட்டுக்கானுகளே” ஊர்த்தலைவர் வேட்டியைத்திரைத்துக்கொண்டு கூட்டத்தை விலக்கிக்கொண்டு நடந்தார்.
அவர் நினைத்துப்போன பழரசம் சின்னக்காளி, கள்ளுமுட்டி ராவணன் யாரும் அங்கே இல்லை.
சாக்சன் துரை வீட்டாளுகளும், சொந்தக்காரர்களும், சத்தம் போட்டுக்கொண்டிருந்தார்கள்.
” யாரப்பாத்து யாரு நாயேன்னு கேக்குறது, யோவ் ரோசங்கெட்ட மனுசா நீரு நொட்டுனது போதும்,
கீழ இறங்கி வாரும் ”
சாக்சனின் மனைவி பேயாட்டம் ஆடினாள். குருசாமியைத் தூஷனமாகத் திட்டினாள்.
நடிப்புக்குத்தானம்மா நெசத்துக்கா சொல்லிட்டாரு அவரு
கூட்டத்துக்குள் யாரோ சொல்ல
”என்ன மசுத்துக்கும் சொல்லப்பிடாது, யாரு யாரப்பாத்து நாயேன்னு கேக்குறது ”
செத்த மாடு திங்கிற சின்னச்சாதிப்பய போடா வாடான்னு கேக்குறான்”
ஒத்திகை நாடகம் பாதியிலே நின்றுபோனது. ஊரின் சந்து பொந்து மூலை முடுக்கெல்லாம் குருசாமிக்கு எதிராகவும் ஆதரவாகவும் பேச்சு நடந்தது. நாடக வாத்தியாருக்கு கிறுக்குப் பிடித்தது போலாகியது. ரவ்வும் பகலும் குடித்துக்கொண்டே இருந்தார். ஒரு நாள் மதுரைக்கு வண்டியேறி அவரது வாத்தியார் வீட்டுக்குப் போனார்.
ரெண்டு பேரும் இரவு மொட்டை மாடியில் உட்கார்ந்து சாமம் வரை பேசினார்கள்.

திரும்ப வந்து , சாக்சனையும், குருசாமியையும் உட்காரவைத்து சமாதானம் பேசினார்கள். குருசாமி வெள்ளையத்தேவனுக்கான வசனம் பாட்டு எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து விட்டு,
பொட்டிப்பகடைக்கான வசனங்களை மனப்பாடம் செய்ய ஆரம்பித்துவிட்டார். அந்தா இந்தாவெனப் பொங்கலும் வந்தது. தெருவில் வேப்பங்குலை தொங்கியது. நையாண்டி மேளமும், தினையிடிப்பும், தூசிபடிந்த ஆட்டுரல் சுத்தம் செய்யப்பட்டு பொங்கல் களைகட்டியது. கரிநாளுக்கு நாடகம் அரங்கேரியது.

பெத்தன்னா நுவ் ராரா பெருமாளன்ன நுவ்வு ராரா
ஒரே, ரண்டரா ரண்டா மன மஹாராஜா பிளிசேதி ரண்டரா ரண்ட

கோமாளியாகவும், எடுபிடியாகவும் சிங்கிடிசிங்கிடியென்று ஆடும்போது செட்டுக்குள்ளே வேசம்போட்டுக்கொண்டிருந்த எல்லாரும் ஓரப்படுதாவில் ஒளிந்து கொண்டு, பார்த்தார்கள். சாகசன் மட்டும் வரவில்லை.

குருசாமி சிரிப்பு மாறாமல்.

அதாகப்பட்டது, ஏதோ அவசரா ஜோலியாக மஹாராஜா அழைத்தததானால், நாமெல்லாரும் களத்து வெலைகளைப்போட்டுவிட்டு அரண்மனை நோக்கி செல்லக்கடவது

எதுக்கு அங்கயும் போயி கருது அடிக்கவா ?

ஒத்திகைநோட்டில் இல்லாத, இட்டுக்கட்டிய அந்த வசனம் சாக்சனைத் தவிர்த்த கூட்டத்தைச் சிரிக்க வைத்தது.


skraj_125@yahoo.co.in

Series Navigation

எஸ். காமராஜ்

எஸ். காமராஜ்