விடுதலைக்கு முன் புதுக்கோட்டை

This entry is part [part not set] of 41 in the series 20060901_Issue

என்னார்



ஹிஸ் ஹைனஸ் ஸ்ரீ பிரகதாம்பாதாஸ் இராஜ மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் பகதூர் ஜி.சி. ஐ.இ. (1886முதல்)
இவர் பதினொரு வயதுடையவராயிருக்கும் பொழுது. 1886-ல் திருக்கோகரணத்தில் இவருக்கு முடி சூட்டு விழா நடந்தது . சிறு வயதிலேயே இம்மன்னர் தமிழ், ஆங்கிலம் முதலிய மொழிகளில் மிக்க தேர்ச்சி பெற்றார். 19-வது வயதிலிருந்து இராச்சியத்தைத் தாமே பார்த்து வருவாராயினர் . குதிரை யேற்றம் முதலியவற்றில் அளவு கடந்த திறமையுடையவர். மண் உப்புக் காய்ச்சுவதால் புதுக்கோட்டை அரசாங்கத்தார்க்கும் , ஆங்கில அரசாங்கத்தார்க்கும் ஏற்பட்ட வழக்கு இம் மன்னர் காலத்தில் முடிவுற்றது. இம் முடிவுப்படியே ஆங்கில அரசாங்கத்தார் ஆண்டு தோறும் முப்பத்தெட்டாயிரம் ரூபாய் இம்மன்னருக்கு கொடுக்கம்படி நேரிட்டது . புதுக்கோட்டை அரசாங்கத்தில் மூன்று லட்சம் ஏக்கர் நிலம் வரையிலும் இனாமாக விட்பபட்டிருந்தது. இந்த இனாம் நிலங்கள் பகுதி நிலங்களைவிட மிகுதியாயிருந்தன . ஆதலால் ஆங்கில அரசாங்கத்தாரின் யோசனைமேல் இனாம் நிலங்களையெல்லாம் அளந்து சிறிது வரிவிதித்தனர். அதனால் ஒரு லட்சம் ரூபாய் ஆண்டு தோறும் அரசாங்கத்திற்கு மிகுவதாயிற்று . பயிர் செய்யாத தரிசு நிலங்களெல்லாம் பயிர் செய்யப்பட்டு நிலக்காரரெல்லாம் பணக்காரராயினர். இவர் காலத்தில் பட்டணம் சீர்திருத்தப்பட்டது . கல்லூரி மருத்துவ நிலையம், அலுவலம் இவற்றின் கட்டிடங்கள் திருத்தி அமைக்கப்பெற்றன. நீதி இலாக்காவும் மீண்டும் திருத்தி அமைக்கப்பெற்றன . இதன் படி மூன்று நீதிபதிகள் அடங்கிய உயர்நீதி மன்றம் ஆக 1887-ல் அமைக்கப்பட்டது.

உப்பு காய்ச்சலுக்கு ராயலிட்டி கேட்கப்போக இனாம் நிலத்துக்கும் நிலவரி விதித்து விட்டான் வெள்ளையன் பாருங்கள்

1898-ல் இவர் ஐரோப்பா கண்டத்திற்குப் போக வேண்டியிருந்தமையால் , திவான், தமையனாகிய விஜய ரகுநாத துரை ராஜா இவர்களிடத்தில் அரசாட்சியை விட்டுச் சென்றனர் , ஐரோப்பாவில் பல இடங்களுக்ச் சென்று பிறகு இங்கிலாந்துக்ச் சென்ற பொழுது இளவரசர் ஏழாவது எட்வர்ட் மன்னரால் தமது அரண்மனையில் மே மாதம் 23 ந் தேதி வரவேற்று சிறப்பிக்கப்பட்டார், ஜுலை 14ல் மகாராணியார் தமது அரணமனையில் வரவேற்று கெளரவப் படுத்தினார்கள் . 1898 நவம்பரில் இவ் வேந்தர் புதுக்கோட்டைக்கு திரும்பி பொழுது மக்கள் இவரைப் பேரார்வத்துடன் வரவேற்றனர். மகாராணியார் இம் மன்னரைவரவேற்று கெளரவப் படுத்தியதற்கு அறிகுறியாகப் புதுக்கோட்டையில் நகர மன்றம் (டவுன் ஹால் ) கட்டப்பெற்றது.

1902-ல் 30 உறுப்பினர் அடங்கிய பெருமக்கட் கழகம் (மக்கள் பிரதிநிதிச் சபை) ஒன்று அமைக்கப் பெற்றது. மக்களுடைய குறைகளை யெல்லாம் தீர்த்து வைப்பதற்கு இக்கழகம் பெரிதும் உதவியாய் இருந்து வருகிறது . 1907ல் இருந்து இதில் 18 உறுப்டபினர் மக்களாலேயே தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். வினைப்பொறுப்புக் கழகம் (காரிய நிர்வாக சபை) ஆனது திவான் , நாட்டுக்காவற் தலைவர் ( ஸ்டேட் சூப்பரிண்டெண்ட்) ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி இவர்கள் அடங்கியதாகும. இம்மனர்காலத்தில் நாடு பல வழியிலும் சீர்திருத்தி மேனிலைக்குக் கொண்டுவரப்பட்டது . 1911 டிசம்பர் 12-ல் டில்லி மாநகரில் நடந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் பெருமான் முடிசூட்டு விழாவுக்க இவ்வரசரும் அழைக்கப்பட்டிருந்தார் .

1913-ல் இவர் பட்டத்திற்கு வந்த இருபத்தைந்தாதவது ஆண்டு விழா புதுக்கோட்டையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது . அப்பொழுது இவருக்கு ஜி.சி.ஐ.இ. (கிராண்ட் கமாண்டர் ஆப் தி இண்டியன் எம்பையர் ) என்னும் பட்டம் ஜார்ஜ் சக்கரவர்த்தியால் அளிக்கப்பட்டது.

இவ்வரசர் தமது சமஸ்தானத்திற்குச் செய்த சிறப்புடைய நன்மைகளாவன:-

புதுக்கோட்டைச் சீமையில் வேளாண்மையை வளம் சேர்க்கும் பொருட்டுக் கால்நடை மருத்துவ சாலையும், கால் நடைக் கண் காட்சியும் ஏற்படுத்தியதுடன் , விதையும் உழவு மாடும் வாங்குதற்குக் குடியானவர்களுக்கு வட்டியின்றிப் பணம் கொடுத்துதவ ஏற்பாடு செய்தார்.

பல சாலைகளையும் வெள்ளாற்றுப் பாலத்தையும் உண்டாக்கி வாணிகம் பெருகும்படி செய்தார்.

பத்திரங்களைப் பதிவு செய்வதற்குத் தொலை விலுள்ளோர் புதுக்கோட்டைக்கு வரும் வருத்தம் நீங்குப்படி காப்புக்களரிகள்(பத்திர பதிவு அலுவலகங்கள் ) பல இடங்களிலும் ஏற்படுத்தினார்.

புதுக்கோட்டை நகரத்தில் ஓர் பெரிய ஆங்கில மருத்துவ சாலையும் மற்றும் பல வைத்திய சாலைகளும் ஏற்படுத்தினார்.

நகரத்தில் வீதிதோறும் குழாய்கள் வைத்துப் புதுக்குளத்திலிருந்து நல்ல தண்ணீர் வரும்படி செய்தார்.

குழந்தைகள் சம்பளமின்றிப் படிக்கும்படி ஊர்தோறும் ஆரம்பப் பள்ளிக்கூங்கள் வைத்தார்.

தொழிற்சாலை, விவசாயசாலை முதலியன ஏற்படுத்தினார்.

எளியவர்கள் அதிக வட்டிக்குப் பணம் வாங்காது தொழில் செய்து வாழ்வதற்கு உதவியாகக் கூட்டுறவுத் தொழிற் சங்கங்கள் ஏற்படுத்தினார்.

நீதிமன்றத்தில் பெரிய குற்றங்களை விசாரிக்கும் போது நீதிபதிகளுக்கு உதவியாக இரண்டு அல்லது மூன்று அஸெஸர்கள் இருந்து நியாயம் வழங்க ஏற்பாடு செய்தார் .

மக்கள் பிரதி நிதிச் சபை ஏற்படுத்தினார்.

rethinavelu.n@gmail.com

www.ennar.blogspot.com

Series Navigation

என்னார்

என்னார்