வாஷிங்டன் சந்திப்பு: எழுத்தாளர் வாஸந்தி

This entry is part [part not set] of 60 in the series 20040429_Issue

காஞ்சனா தாமோதரன்


வாஸந்தி எனக்கு அறிமுகமானது பெரும்பத்திரிகைகளில் வந்த அவரது எழுத்தின் மூலம், எனது இளம்பருவத்தில். இந்தியாவிலும் யு.எஸ்.ஸிலுமாய்த் தமிழுடன் தொடர்பில்லாத இருபது வருடங்களுக்குப் பின், மீண்டும் வாஸந்தியை நான் சந்தித்தது 1990-களில், தமிழ் ‘இந்தியா டுடே ‘ இதழின் ஆசிரியராய்.

எல்லாப் பத்திரிகைகளுக்கும் அனுப்புவது போல் சில சிறுகதைகளை ‘இந்தியா டுடே ‘வுக்கும் அனுப்பினேன். ‘வரம் ‘, ‘அகத்திணை ‘ முதலான சிறுகதைகள் அவ்விதழில் பிரசுரம் கண்டன; ஒரு கதை நிராகரிக்கப்பட்டது. அக்காலத்தில், நம்பிக்கையளிக்கும் புதியவர்கள் உள்படப் பலதரப்பட்ட சிறுகதையாளர்களுக்கும் களம் அமைத்துத் தந்தது அந்த இதழ். ஒவ்வொரு கதைக்கும் சன்மானமாக ரூ.1500/- வழங்கியதாய் நினைவு. தமிழ்ப் பத்திரிகையுலகத் தரநிர்ணயப்படி இது பெரும் தொகை. ‘இந்தியா டுடே ‘யின் வருடாந்தர இலக்கியச் சிறப்பிதழ்கள் பரவலான கவனத்தைப் பெற்றன. கடந்த சில வருடங்களாய், என் நேரம் கருதித் தமிழ் இதழ்கள் வாசிப்பதைத் தவிர்த்துத் தமிழ்ப் புத்தகங்கள் மட்டுமே வாசிக்கும் நிர்ப்பந்தம்; எனவே, இன்றைய ‘இந்தியா டுடே ‘ இதழ் பற்றி அறியேன்.

‘இந்தியா டுடே ‘ இதழாசிரியர் பொறுப்பில் ஒன்பது வருடங்கள் கழிந்த பின், தற்போது இதழின் மூத்த ஆலோசக ஆசிரியராக இயங்குகிறார் வாஸந்தி. இதழில் தொடர்ந்து பத்தி எழுதி வருகிறார்; தினமணி போன்ற பிற இதழ்களில் அவ்வப்போது பத்திகள் எழுதுகிறார். 1997-99 காலகட்டத்தில் எழுதிய பத்திகளின் தொகுப்பு ‘சிந்திக்க ஒரு நொடி ‘ என்ற தலைப்பில், அசோகமித்திரன் முன்னுரையுடன், கலைஞன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. 1999-2003 காலகட்டத்தில் எழுதிய பத்திக்கட்டுரைத் தொகுப்பு ‘பார்வைகளும் பதிவுகளும் ‘ என்ற தலைப்பில், வாஸந்தியின் முன்னுரையுடன், உயிர்மை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. பொதுவாக, அரசியல் மற்றும் சமூகம் பற்றியான இவரது பத்திகளைச் சுற்றி விவாதங்கள் உருவானதாய் முன்னுரைகள் குறிப்பிடுகின்றன; இதழ் வாசகரல்லாத எனக்கு முழு விவரங்கள் தெரியவில்லை; இவரது கட்டுரைத் தொகுப்புகளை இனிமேல்தான் வாசிக்கவிருக்கிறேன். வாஸந்தியின் தேர்ந்தெடுத்த சிறுகதைகளின் ஆங்கில மொழியாக்கம் ‘The Guilty and Other Stories ‘ என்கிற தலைப்பில் indialog பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. தற்போது தமிழ்நாட்டின் வரலாறு பற்றிப் பெங்குவின்-இந்தியா பதிப்பகத்துக்காக ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டிருக்கிறார். ( ‘டிஸ்க்ளெய்மர் ‘ குறிப்பு: இந்தியப் பதிப்பகம் எதிலும் எனக்கு நேரடி/மறைமுக முதலீடு கிடையாது.)

நியூயார்க் ஜனத்தொகைக் கழகம் ஏற்பாடு செய்த சொற்பொழிவு தவிர்த்து, இம்முறை வாஸந்தியின் பயணம் தனிப்பட்ட காரணங்களுக்காக மட்டுமே. வாஸந்தி, அவர் கணவர் திரு.சுந்தரம், அவர்களது உறவினர் முனைவர் ராஜு ஆகியோரை நானும் என் கணவரும் எங்கள் மகளும் வாஷிங்டனில் சந்தித்தோம். வாஸந்தி-சுந்தரம் தம்பதியினரின் முதல் மகன் யு.எஸ்.ஸில் மேற்படிப்பை முடித்த பின், விருப்பப்பட்டு இந்தியா திரும்பி விட்டவர். இங்கு மேற்படிப்பை முடித்த இரண்டாம் மகன் தற்போது இங்குள்ள பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராக வேலை பார்க்கிறார். உடன் வந்திருந்த ராஜுவும் இங்கே மேற்படிப்பு முடித்து வேலை பார்ப்பவர். அமெரிக்க வாழ்க்கைமுறை என்பது அங்கிருந்த யாருக்குமே புதியது அல்ல. மூன்று மணி நேர உரையாடல். புலம்பெயர் வாழ்வு, குடும்பம், தொழில், அரசியல், பொருளாதாரம் என்று அனைவருக்கும் ஆர்வமுள்ள விஷயங்கள் பற்றி, மிக இயல்பானதாய் மிகச் சரளமானதாய் உரையாடல் அமைந்தது.

தமிழிலக்கியம் மற்றும் தமிழ்நாட்டு எழுத்துலகம் பற்றி எதுவும் பேசவில்லை.

*

என் கணவரும் ராஜுவும் நானும் இங்கு வந்த புதிதில் அனுபவித்த(!) வாழ்க்கை பற்றிப் பேசியது பழைய நினைவுகளைக் கிளறி விட்டது.

நாங்கள் மூவரும் திருமணமாகாத தனிக்கட்டைகளாய், கையில் ஒரு பெட்டியும் நூறு டாலருக்கும் குறைவான தொகையும், பல்கலைக்கழகத்தின் சொற்ப உதவிப்பணமுமாய் வந்தவர்கள். உதவித்தொகைக்கான வேலையில் குறை வைத்தால் உதவிப்பணம் போகும். மதிப்பெண்கள் குறைந்தால் மாணவர் விசா பறிபோகும். முதலில் தங்கியிருந்த அப்பார்ட்மெண்ட்டுகள் எல்லாம் ஒண்டுக்குடித்தனங்கள் போன்றவை; உதவிப்பணத்தில் அதுதான் சாத்தியம். வாடகையைப் பகிர்ந்து கொள்ளும் ரூம்-மேட்டுகளும், செலவில்லாமல் சுதந்திரமாய்த் திரியும் கரப்பான்பூச்சி வகையறாக்களும், ஒருவரையொருவர் பொறுத்துக் கொண்டு, தன் வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் தானே செய்து வாழும் வாழ்க்கை. (வேலைகளைத் தாமே செய்வது இன்னும் தொடர்கிறது; அதுவே இப்போது இயல்பாகவும் ஆசுவாசம் தருவதாகவும் தெரிகிறது.) ‘கராஜ் ஸேல் ‘களில் மலிவாக வாங்கிய, பிறர் உபயோகித்துக் கழித்த பாத்திர பண்டங்களுடன் குடித்தனம். ‘கராஜ் ஸேலில் ‘ பத்து டாலருக்கு வாங்கிய கறுப்பு-வெள்ளைத் தொலைக்காட்சிக்குக் கேபிள் இணைப்பு கொடுக்கப் பணமிருக்காது. ஆண்ட்டெனாவை அங்குமிங்குமாய்த் திருகித் திருப்பி எப்படியோ பொம்மை பார்க்க வேண்டியிருக்கும்.

‘தூர்தர்ஷன் ‘ மட்டுமேயுள்ள காலத்திலிருந்து வந்த என் போன்றவர்களுக்கு அப்போதைய அமெரிக்கத் தொலைக்காட்சி விளம்பரங்கள் வியப்பூட்டும். ஒரு பொருளில் இத்தனை ‘ப்ராண்டுகளா ‘, தேவைதானா என்றிருக்கும். விளம்பரங்களில் வரும் பெரும்பான்மைப் பெண்கள் சமையலறையையும் குளியலறை/கழிப்பறையையும் எப்போதும் சுத்தம் செய்து கொண்டிருப்பார்கள். அல்லது, ஒரு குறிப்பிட்ட கேக் தூளிலிருந்து செய்த கேக்கினால் கணவரையும் பிள்ளைகளையும் மகிழ்விப்பார்கள். துணிகளின் பச்சைப்புல் கறையுடன் விடாமல் போராடி வெண்மையை நிலைநாட்டுவார்கள். விளம்பரங்களின் கணவர்கள் பெரும்பாலும் மனைவியரை விட அசடாக இருப்பார்கள். ஆண் அருந்தும் பியரின் முத்திரையையோ காரின் விலையையோ அவன் கொடுக்கும் வைரக் காரட்டுகளையோ பொறுத்து அழகிய பெண் அவனை நாடுவாள். பெண் பாவிக்கும் வாசனைப்பொருளையும் ஷாம்ப்பூவையும் பொறுத்து அழகிய ஆண் அவளை நாடுவான். எல்லாரும் எதையாவது நாடிக் கொண்டேயிருப்பார்கள். எல்லாரும் அழகாக இருப்பார்கள். ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள்ளான தேடல். ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள்ளான அழகு.

சி.என்.என். என்னும் முழுநாள் செய்திச்சேவை அப்போதுதான் துவங்கியிருந்தது. பஞ்சுமிட்டாய்க் கதைகளைச் சின்னத்திரையில் பழகிய அமெரிக்கப் பார்வையாளர்களுக்கு அது ரசிக்காது, சி.என்.என். லாபகரமாக நீடிக்காது என்று சிலர் பந்தயம் கட்டினார்கள். தொலைக்காட்சிக்காகவே கட்டமைக்கப்பட்டது போல் தெரியும் சில வரலாற்று நிகழ்வுகள் பின்னாளில் வரப்போவதும், அவற்றைப் பொட்டலம் கட்டி $19.95-வுக்கும் $29.95-வுக்கும் விற்கலாம் என்பதும் அவர்களுக்கு அப்போது தெரியாது. மீடியாவின் சில அங்கங்கள் தம்மையே கதாநாயகராயும் ஊடக விவாதப் பொருளாயும் கோமாளிகளாகவும் ஏமாற்றுக்காரர்களாயும், கட்டமைப்பும் கட்டவிழ்ப்பும் செய்து, மக்களுக்கு எரிச்சலூட்டும் யுகம் இன்னும் வந்திருக்கவில்லை. எம்.டி.வி.யும் மடானாவும் கூட அப்போது வந்திருக்கவில்லையே.

*

நான் என் முதல் முதுகலைப் பட்டம் பெற்ற 1980-களில் முற்பகுதியிலும், பொருளாதாரம் ஆட்டம் கண்டு கொண்டிருந்தது. ரிப்பப்ளிக்கன் கட்சிக்கார ரானல்ட் ரேகனின் ஆட்சியில் பெரும்பணக்காரர்களுக்கு வரிச்சலுகைகள் தரப்பட்டன. இதனால் சேமிக்கும் பணத்தை அவர்கள் மீண்டும் சமூகத்தில் முதலீடு செய்வார்கள், வேலைகள் பெருகும், அடிமட்ட மக்கள் பயன்பெறுவார்கள் என்கிற அக்காலத்திய trickle-down தியரியை நம்புவோர் இன்றும் கூட இருக்கிறார்கள். அன்று நடந்தது வேறு. பொருளாதாரம் மந்தப்பட்டது. பெருநிறுவனங்கள் தமது உற்பத்திச் சம்பந்தப்பட்ட பல வேலைகளை, குறைந்த சம்பள அமைப்புள்ள மெக்ஸிக்கோ, தைவான், ஃபிலிப்பின்ஸ் போன்ற அயல்நாடுகளுக்கு நகர்த்தின. மத்திய வர்க்கம் சுருங்கி, அடிமட்ட வர்க்கம் பெரிதாயிற்று. உள்நாட்டுப் பொதுநலத் திட்டங்களுக்கு அரசு ஒதுக்கும் நிதித்தொகை குறைந்து, அடிமட்டத்தின் நிலை இன்னும் மோசமானது. இருப்போர்க்கும் இல்லார்க்கும் இடையேயான இடைவெளி விரிந்தது. என் போன்ற பொறியியலாளர்களுக்கும் வேலை கிடைப்பது சிரமமான நிலை. இன்னும் சில வருடங்களும் மற்றொரு துறையில் மற்றொரு பட்டப்படிப்பும் கழித்து, நான் வேலை பார்க்கத் துவங்கிய சமயத்தில், வறட்சியினால் சிறு விவசாயிகளின் குடும்பங்கள் வீதியில் வீசப்பட்டன. எப்படியோ எதிர்நீச்சல் போடு அல்லது அமிழ்ந்து உயிர்விடு என்னும் சூழல். ‘அமெரிக்கக் கனவின் ‘ ஒரு முகம்.

‘அமெரிக்கக் கனவு ‘ எனப்படுவதன் தொடர்கின்ற நிச்சயமின்மையும் நிலையாமையும் புரிந்தேதான் வந்தேறிகள் இங்கு வருகிறார்கள் என்றார் ராஜு. இந்த நிச்சயமின்மையும், வலியும், மாறுதல்களை எதிர்கொள்ளும் திறமையும், தனிப்பட்ட வலிமையைத் தருவது என்பது அவரது பார்வை. ஓரளவு வரை இது உண்மைதான். ஆனால், ஒரு சராசரி அமெரிக்க மத்தியவர்க்கக் குடும்பம் வேலையிழந்தால், அவர்கள் வீதிக்கு வர ஒரு வருடம் கூட ஆவதில்லை என்கிறது ஒரு சமீபத்திய ஆய்வு. கடனை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கைமுறை, அதை ஊக்குவிக்கும் பொருளாதார அமைப்பு ஆகியன பற்றி வாஸந்தியின் கணவர் சிறிது பேசினார்; இந்தியாவிலும் தனிமனிதப் பொருளியல் மதிப்பீடுகள் மெல்ல மாறி வருவதைக் குறிப்பிட்டார்.

வாஸந்தி இன்றைய ‘ஒளட் ஸோர்ஸிங் ‘ பற்றியும், சான்ஃபிரான்ஸிஸ்கோ பகுதியில் பல இந்தியக் கணிப்பொறியியலாளர் குடும்பங்களைச் சந்தித்தது பற்றியும் பேசினார். ‘பாடி ஷாப் ‘ வழியாக வந்த பலருக்கும் ஒரு சிறு தொகையை மட்டும் கொடுத்து, மிச்சத்தைத் தானே வைத்துக் கொள்ளுவது பல பாடி ஷாப்காரர்களின் வழக்கமென்று அந்தக் கணிப்பொறியாளர்கள் வாஸந்தியிடம் சொல்லியிருக்கிறார்கள். வேலையிழக்கும் சாத்தியம் அதிகம், இந்த விலைவாசியில் தாக்குப் பிடிப்பது கடினம், இதுவரை சேமித்ததை எடுத்துக் கொண்டு பிற நண்பர்களைப் போலவே இந்தியாவுக்குத் திரும்பப் போகிறோம் என்று பல இளம் கணிப்பொறியாளர்கள் சொன்னார்களாம். (டாட்காம்களின் உச்சத்தில் வானைத் தொட்ட ‘சிலிக்கான் வேலி ‘யின் வீட்டுவிலை/வாடகை இன்றும் விழாதிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.)

கடந்த இருபத்தைந்து வருடங்களில் நான் கண்ட மாறுதல்களை விட இன்றைய மாறுதல் வித்தியாசமாய்த்தான் தெரிகிறது எனக்கு.

யு.எஸ்.ஸின் தனித்துவம் மழுங்கும் சாத்தியம் பற்றித் தாமஸ் ஃப்ரீட்மனின் சமீபத்திய ‘நியூயார்க் டைம்ஸ் ‘ பத்திக்கட்டுரை ஒன்று சுருக்கமாக அலசியிருந்தது. காரணங்களுடன். அயலுறவுக் கொள்கை, உள்நாட்டு அடிமை வரலாறு ஆகியவற்றின் பொருளாதார விளைவுகளை உள்ளிட்ட சரித்திரத்தை மறக்கவில்லை; சரித்திரத்தை வேரறுத்து நிகழ்காலத்தைப் புரிந்து கொள்ள முடியாது; எனினும், சொல்ல வருவதை இங்கு மிக எளிமைப்படுத்தியே சொல்லுகிறேன்:- அதிசிறப்பான முதுநிலை உயர்கல்வி, (பெண்களுக்கும் பொருந்தும்) கண்ணியமுள்ள வேலைச்சூழல், அன்றாட வாழ்க்கையின் நேரடித் தன்மை, குறிப்பிடத்தக்க சுதந்திரத்துடன் இயங்க விடும் சூழல் முதலியவையே பொறியியலிலிருந்து கலை வரையிலான பல்துறை விற்பன்னர்களையும் யு.எஸ்.ஸுக்கு அழைத்து வந்திருக்கின்றன–உலகம் முழுதிலிருந்தும், குறிப்பாகக் கடந்த எழுபத்திச் சொச்சம் ஆண்டுகளாய். இவை குறையும் பட்சத்தில், அயலிலிருந்து திறமையின் அடிப்படையில் உள்ளே நுழைபவர்களின் எண்ணிக்கை குறையும். தொடுவானில் மினுங்கும் அந்த ‘அமெரிக்கக் கனவு ‘ வந்தேறிகளுள் உந்தும் உழைப்பால், அறிவால், திறமையால், குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் கண்ட நாடு இது. வந்தேறிகள் குறையும் எதிர்காலம் எப்படியிருக்கும் ?

*

வாஸந்தி தனது ஆங்கில மொழியாக்கப் புத்தகத்தை எங்கள் மகளுக்குப் பரிசளித்து வாழ்த்தினார். மகளின் எதிர்காலத் திட்டம் பற்றி அவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார்.

இங்கு பிறந்து வளரும் இளைய தலைமுறை பற்றி இயல்பாய்ப் பேச்சுத் திரும்பியது. இந்த விஷயத்தைப் பொதுமைப்படுத்தி எளிமையாக்க எனக்கு மனமில்லை. முந்தைய இந்தியாவிலிருப்பது போலவே குழந்தை வளர்த்துத் திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்களும், அவர்கள் விருப்பப்படியே நடக்கும் பிள்ளைகளும் இருக்கிறார்கள். தம் காலம் போலவே குழந்தைகள் வளர வேண்டுமெனப் பெற்றோர் விரும்பினாலும், ஒரு கட்டத்துக்கு மேல் பெற்றோரைக் கடந்து, தமக்கான பாதையைத் தானே வகுத்துக் கொள்ளும் குழந்தைகள் இருக்கிறார்கள். தம் மண்ணின் சாரத்தை முடிந்த அளவு குழந்தைக்குக் கொடுத்த பின் சற்று ஒதுங்கி, தமக்கு அயலான இம்மண்ணில் குழந்தைகள் வேர் பரப்பி வளர இடம் கொடுக்கும் பெற்றோர்களும் உண்டு. இடைப்பட்ட வண்ணங்கள் பல. அவரவர்க்கு அவரவர் வழி.

இங்கு பிறந்த குழந்தைகளை ABCD (American Born Confused Desi–அமெரிக்காவில் பிறந்த குழம்பிய இந்தியன்) என்றழைக்கும் பழக்கம் பற்றியும் பேசினோம். எல்லாரையும் நமக்கு வசதியான ஒரு பெட்டிக்குள் போட்டடைத்து, பெயரிட்டு முத்திரை குத்த விரும்புவது நம் மனித இயல்பு போலும். தம் கற்பனையிலும் ஞாபகத்திலும் உயிர்த்திருக்கும் ஒரு காலவெளியில் தம் குழந்தைகள் வளர வேண்டுமென்று நினைக்கும் சில பெற்றோரினால், அவர்களுடன் ஒத்துப் போகாத குழந்தைகளுக்குத் தீவிர மன அழுத்தம் ஏற்படுவதைப் பார்த்து வருந்தியிருக்கிறேன். இவர்களைத் தவிர்த்த பிற குழந்தைகள், முழுத் ‘தேசி ‘களோ குழம்பியவர்களோ அல்ல என்றே தோன்றுகிறது.

பெற்றோர்-குழந்தைகளுக்கிடையே இருக்கும் இயல்பான அதிகார அரசியலையும், அன்றாடத்தின் தற்காலிக மனவருத்தங்களையும் ஒதுக்கி விட்டு இது பற்றி நினைத்துப் பார்க்கலாம். தமது பிறப்புச் சூழலையும், தம் பெற்றோர் பிறந்த சூழலையும் இந்தக் குழந்தைகளால் பெருமளவு புரிந்து கொள்ள முடிகிறது. பெற்றோர் மனங்களை மதித்து, இரு வேறுபட்ட சூழல்களுக்கு நடுவே, தம்மைத் தாமே வரையறுக்க இவர்கள் முயல்வதைப் புரிந்து கொள்ளுகையில், நம்முள் பரிவு மட்டுமே பிறக்கும். எதையும் கேள்விக்குள்ளாக்கும் பழக்கம் இவர்களுக்குப் பள்ளியிலிருந்து வருகிறது; பல விஷயங்களிலும் தெளிவான, சுயசிந்தனையுள்ள, தர்க்கபூர்வமாக விவாதிக்கக்கூடிய பார்வைகள் இவர்களுக்கு இருக்கின்றன. நம்மை விட வயதில் இளையவராய் இருந்தாலும், நமக்கு அவர்கள் வயதில் இருந்திராத முதிர்ச்சியுடன், வெளிப்படையாக அவர்கள் முன்வைக்கும் பார்வையை மதித்துக் கேட்கவே தோன்றுகிறது. இது என் தனிப்பட்ட பார்வை மட்டுமே. ஓர் இந்திய வம்சாவழி அமெரிக்கப் பெண்ணைத் திருமணம் செய்திருக்கும் ராஜுவும் புன்சிரிப்புடன் ஆமோதித்தார்.

(குறிப்பு: இவ்வார ‘டைம் ‘ இதழ்க் கட்டுரையொன்று, இந்தியப் ‘பாப் ‘ கலாச்சாரம் எப்படி அமெரிக்காவின் மையநீரோட்டத்தினுள் நுழைய ஆரம்பித்திருக்கிறது என்பதைச் சுருக்கமாக அலசுகிறது. ‘த மோட்ஸார்ட் ஆஃப் மெட்ராஸ் ‘ என்று ‘டைம் ‘ அழைக்கும் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பிலான ‘பாம்பே ட்ரீம்ஸ் ‘ இசைநாடகம், அமெரிக்கப் பார்வையாளர்களுக்கு ஏற்ற பல மாற்றங்களுடன் லண்டனிலிருந்து நியூயார்க் ப்ராட்வே மேடைக்கு இம்மாதம் இடம்பெயருவதை முன்னிட்டு எழுதப்பட்டது இக்கட்டுரை. ரோஹிந்தன் மிஸ்திரி, அருந்ததி ராய், ஜும்ப்பா லஹரி, இலங்கைக் கனேடியர் மைக்கல் ஒண்டாட்ஜி, ‘பெண்ட் இட் லைக் பெக்கம் ‘ மற்றும் ‘ஈ.ஆரின் ‘ பர்மிந்தர் நக்ரா, எம்.ஷியாமளன், மீரா நாயர் போன்றோருடன், ஐஸ்வர்யா ராய், ‘தேவ்தாஸ் ‘, ‘கன்னத்தில் முத்தமிட்டால் ‘ ஆகியவற்றையும் தொட்டுக் கொள்ளுகிறது கட்டுரை.)

*

மார்த்தா ஸ்டூவர்ட் வழக்கின் தீர்ப்பு பற்றி என்ன நினைக்கிறீர்களென்று என் கணவரிடம் வாஸந்தி கேட்கவும் அடுத்த விவாதம் துவங்கியது. மறுநாள் பங்குமதிப்பு சரியுமென்று தெரிந்ததும் முந்தைய நாள் தன் பங்குகளை விற்றுப் பணம் பண்ணியதாய் ஸ்டூவர்ட் மேல் குற்றம் சாட்டப்பட்டது. விற்றது சுமார் 4000 பங்குகள்; பெற்ற லாபம் சுமார் 50,000 டாலர்கள்; ஸ்டூவர்ட் போன்ற பெரும் செல்வந்தருக்கு இந்த லாபத்தொகை பெரிதே அல்ல. (ஆனாலும், பேராசை விடவில்லை ?!)

டைக்கோ மற்றும் அடெல்ஃபியா பெருநிறுவனங்களில் ‘பெரியவர்கள் ‘ கையாடல் செய்தது பல நூறு மில்லியன் டாலர்கள். என்ரான் ‘பெரியவர்க ‘ளும் வோர்ல்ட்காம் ‘பெரியவர்க ‘ளும் சேர்ந்து அடித்த கொள்ளையினால், யு.எஸ். உள்பட உலகம் முழுதும் வேலையிழந்தவர்களும் தமது ஓய்வூதியத்தை இழந்த முதியோர்களும் ஏராளம். இந்தப் பெருநிறுவன ஊழல்மன்னர்களுடன் ஒப்பிடுகையில், மார்த்தா ஸ்டூவர்ட் செய்தது சிறிய தவறாய்த் தோன்றலாம். ஆனால், தான் செய்ததைச் செய்யாததாய்ப் பொய் சொல்லி, நீதிக்கு முட்டுக்கட்டை போட்டது சட்டத்தின் முன் தவறே. அப்பீல் செய்யப் போவதாய் ஸ்டூவர்ட் சொல்லியிருக்கிறார்.

மார்த்தா ஸ்டூவர்ட் ஒரு பெண் — லெளகீக வெற்றி பெற்ற வித்தியாசமான பெண் — என்பதால் இந்த வழக்கு இவ்வளவு கவனம் பெற்றதா, ஜூரிக்கு அவர் மேல் இருந்திருக்கக் கூடிய காழ்ப்புணர்வு தீர்ப்பைப் பாதித்திருக்குமா, என்பவை விவாதிக்கப்பட்ட கேள்விகள்.

செய்ததைச் செய்யவில்லையென்று சொல்லிச் சட்டத்திடம் சிக்கி, அதிகக் கவனம் பெற்ற இன்னொரு வழக்கு பற்றிப் பேச்சுத் திரும்பியது. அதிபர் க்ளிண்ட்டன் விவகாரம். அரசியல்வாதிகளின் தனிமனித ஒழுக்கத்தைப் பார்க்க ஆரம்பித்தால் பலரும் மிஞ்ச மாட்டார்களே, இது மட்டும் ஏன் பெரிதானது என்றார் வாஸந்தி. ஆஸ்திரேலியாவிலிருக்கும் தன் நண்பர் அமெரிக்கர்களைப் பழமைவாதிகள் என்று சொல்லிச் சிரித்ததாய் ராஜு சொன்னார்.

இதென்ன பெரிய விஷயமா என்றுதான் உலகமே கேட்டது.

பெரிய விஷயம்தான்.

தான் சொல்வதெல்லாம் உண்மையென்று நீதிமன்றப் பிரமாணம் செய்த பிறகு பொய் சொன்னது, சட்டத்தின் முன் க்ளிண்ட்டன் செய்த முக்கியத் தவறு. சாமானியரோ தலைவரோ சட்டம் ஒன்றே. யேல் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்துப் பட்டம் பெற்ற க்ளிண்ட்டனுக்குப் ‘பெர்ஜுரி ‘ என்பதன் சட்டபூர்வ விளைவு தெரியாததா ? ஆட்சி நிர்வாகத்துறை, நீதித்துறை, சட்டத்தை உருவாக்கும் ‘காங்கிரஸ் ‘ துறை என்று மூன்று கிளைகளாய்ப் பிரிந்து செயல்படுவது அமெரிக்க அரசாங்க அமைப்பு; காங்கிரஸ் உருவாக்கித் தந்த சட்டமசோதாவைக் கையெழுத்திட்டுச் சட்டமாக ஆக்கவும், வீட்டோ செய்து காங்கிரஸுக்கே திருப்பியனுப்பவும் அரசியலமைப்பால் அதிகாரம் பெறும் ஆட்சி நிர்வாகத்துறையின் தலைவர், சக அரசுக்கிளையான நீதித்துறையிடம் பொய் சொல்லுவது மிகப்பெரும் தவறே. மக்களால் நம்பித் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவர் இந்த விஷயத்துக்கு இப்படிப் பொய் சொன்னால், இவர் மக்களின் நம்பிக்கைக்கு உரியவர்தானா என்பதும் கேள்வி; ஒரு திறமையான நிர்வாகிக்கு இருக்க வேண்டிய — நிலைமையைத் தீர எடைபோட்டு முடிவுக்கு வரும் — தெளிவு இவரிடமிருக்கிறதா என்பதும் கேள்வி; தன்னை விட அதிகாரத்தில் குறைந்த பாலா ஜோன்ஸ் என்கிற பெண்ணை, அவரது விருப்பத்துக்கு எதிராகத் தனக்கு இணங்க வைக்க, தன் உயர்பதவி தரும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினாரா என்பதும் முக்கிய கேள்வியே.

மக்களுக்குத் தம் தலைவர்களிடம் ஒரு குறைந்தபட்ச எதிர்பார்ப்பும், அது நிறைவேறாத போது எதிர்க்கேள்வியும் இருப்பது அவசியமென்பது என் தனிப்பட்ட உறுதியான கருத்து. அதிபரும் மனிதர்தான் என்பது புரியாமலில்லை. நாம் உள்பட நம் மனித உலகம் சில-பல சமரசங்கள் செய்துதான் வாழுகிறது என்கிற யதார்த்தமும் புரியாமலில்லை. ஆனால், குறைபட்ட யதார்த்தத்தைச் சாக்கிட்டுத் தொலைவிலுள்ள இலட்சியவாதத்தை நோக்கி நகர மறக்கும் தனிமனிதரும் சமூகமும், மெல்ல மெல்ல நீர்த்து இறுதியில் அழுகிப் போவரோ என்பது என் தனிப்பட்ட பயம். எனவே, மேற்சொன்ன கருத்து.

அதே சமயத்தில், விசாரணையின் முதன்மை வழக்கறிஞரும் தீவிர எதிர்க்கட்சி ரிப்பப்ளிக்கனுமான கென் ஸ்டார், சொந்த அரசியல் ஆதாயங்களுக்காக இந்த விசாரணையை இழுத்தடித்து, பெரிதாக்கி, மீடியா நிகழ்வாக்கினாரா என்பது நியாயமான கேள்வி. வைட்வாட்டர் ஊழல் விசாரணையாகத் துவங்கியதை விரிவாக்க அட்டர்ணி-ஜெனரல் ஜானெட் ரீனோவிடம் கென் ஸ்டார் கோரியதும், க்ளிண்ட்டன் ஆட்சிக்குழுவின் ரீனோ அதற்குச் சம்மதித்ததும் சற்று வினோதமான நிகழ்வுகள். (அதிபர் புஷ்ஷின் இறுக்க-நெருக்கமான ஆட்சிக்குழு அங்கத்தினர் அட்டர்ணி-ஜெனரல் ஆஷ்கிராஃப்ட், ஒத்த சூழலில், என்ன செய்வார் என்று கற்பனை ஓடுகிறது; நிர்வாகக் குழுக்கள் பல விதம்!) வைட்வாட்டர் ஊழல் குற்றச்சாட்டு, பாலா ஜோன்ஸின் பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டு, மோனிக்கா லூவின்ஸ்கி தொடர்பு என்று வழக்கு விரிந்து ஊடகங்களை ஆக்கிரமித்துக் கொண்டது. நீதிமன்ற விசாரணையின் முழுமையான எழுத்துப்பதிவை, வழக்கத்துக்கு மாறாக, உடனேயே ஊடகங்களுக்குக் கசிய விட்டது கென் ஸ்டார் குழு. மீடியா சர்க்கஸில் ஆனந்தமாய் வட்டமடித்த கென் ஸ்டார் குழுவை நீதித்தேவதையின் ஒட்டுமொத்தப் பிரதிநிதிகளாய் ஒப்புக் கொள்ளுவது கடினம்.

பொதுவாக, பல்வேறு பொறுப்புகளை நிர்வகிக்க வேண்டிய அதிபரது விசாரணையும் இவ்வளவு நீளமாக இருந்திருக்க வேண்டுமா, அதனால் ஏற்படும் இழப்புகள் என்ன என்பவை முக்கியக் கேள்விகள். பொறுப்பிலிருக்கும் ஓர் அதிபர் விசாரணையில் மாட்டினால் உதவி அதிபர் தற்காலிகப் பொறுப்பேற்கலாமே என்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கான கேள்வி; பதில் இருக்கக் கூடும், சட்டநிபுணரல்லாத எனக்குத் தெரியவில்லை. இந்தக் குறிப்பிட்ட விசாரணையினால் க்ளிண்ட்டனின் கவனம் திசைதிரும்பியதும், அதனால் ஏற்பட்ட சில முக்கியப் பாதிப்புகளும், பின்பே தெரிய வந்தன.

அயல் பத்திரிகையாளர் குழு அங்கத்தினராய் முன்பு இங்கு வந்திருக்கையில், க்ளிண்ட்டனின் உள்நாட்டுப் பத்திரிகையாளர் சந்திப்பை நேரில் பார்த்த அனுபவத்தை வாஸந்தி பகிர்ந்து கொண்டார். சமீபத்தில் ஒளிபரப்பப்பட்ட அதிபர் புஷ்ஷின் பத்திரிகையாளர் சந்திப்புப் பற்றிய கருத்துகள் பரிமாறப்பட்டன. அது நன்றாக அமையவில்லை, தெளிவான பதில்கள் இல்லை என்பது வாஸந்தியின் கருத்து. புஷ் சரியாகப் பேசவில்லைதான்; க்ளிண்ட்டனுக்குக் கைவந்த மக்கள் தொடர்புக் கலை புஷ்ஷிடம் கிடையாது என்பது ஒருமித்த கருத்து. சில கேள்விகளுக்கான பதில்கள் நழுவுதல் போன்ற வெளித்தோற்றம் கொண்டிருந்தன. ஆனால், அனைத்துக் கேள்விகளுக்குமான புஷ்ஷின் பதில்கள் தப்பாமல் ஒரே புள்ளியில் அழுத்தத்துடன் குவிவதாய் இருந்தன: என் தேசத்துக்கு நன்மையென்று நான் நம்புவதைத்தான் நான் செய்கிறேன், பிடிக்கவில்லையென்றால் மக்கள் தேர்தலில் கவனித்துக் கொள்ளட்டும் என்கிற புள்ளி.

*

நேரமானதால், இத்துடன் பேச்சை முடித்துக் கொள்ள வேண்டியிருந்தது. வாஷிங்டனில் அன்று நடக்கும் கருக்கலைப்பு உரிமைப் பேரணியைப் பார்க்கப் போவதாய்ச் சொல்லி வாஸந்தி விடைபெற்றார். (அது பற்றிய விவரங்கள் தனிக்கட்டுரையில்.) இருபத்தைந்து வருடங்கள் இங்கே தமிழற்ற சூழலில் வாழும் என் போன்றோருக்குத் தாயகத்திலிருந்து வருவோரைச் சந்தித்துப் பேசுவதிலுள்ள மகிழ்ச்சி மிக இயல்பானது. மிகையில்லை.

ஏப்ரல் 25, 2004

KanchanaThamo@aol.com

Series Navigation

காஞ்சனா தாமோதரன்

காஞ்சனா தாமோதரன்