வாழ்க்கையும் வடிகாலும் ( எனக்குப் பிடித்த கதைகள்-14 – ஜி.நாகராஜனின் ‘ஓடிய கால்கள் ‘ )

This entry is part [part not set] of 30 in the series 20020610_Issue

பாவண்ணன்


ரங்கநாதன் ஐயா திருக்குறள் நடத்துவதே தனி அழகு. வகுப்பில் அவர் சொல்லிக் கொடுக்கிற ஒவ்வொரு குறளும் பச்சை மரத்தில் ஆணியடித்த மாதிரி மனத்தில் பதியும்படி நடத்துவார். ஒரு வகுப்புக்கு ஒரு குறள்தான். ஏகப்பட்ட துணைக்கதைகளும் விளக்கங்களும் சொல்லி, இறுதியாக அந்த இரண்டு வரிகளைச் சொல்வார். நச்சென்று அக்குறள் நெஞ்சில் இறங்கும்.

‘அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம் ‘ என்ற குறளை ஒருநாள் சொல்லித் தந்தார் ஐயா. முகம் என்று சொல்லப்பட்டிருப்பதை உடல் என்றார் ஐயா. பிறகு உடலின் ஒவ்வொரு உறுப்பின் செயல்பாட்டிலும் நெஞ்சில் இருக்கும் உணர்வு பிரிதிபலிக்கும் என்றார். ‘ஒருவருக்கு கோபம் வருகிறது. உடனே கையை ஓங்கி மேசை மீது குத்துகிறார். கால்களால் எதிரில் கிடைப்பதை உதைக்கிறார். கையும் காலும் வெளிப்படுத்துவது என்ன ? நெஞ்சில் குமுறும் கோபத்தைத்தானே ? ‘ என்று முடித்தார். அதற்குள் ‘அப்புறம் ஏன் வள்ளுவர் முகத்தை மட்டும் சொன்னார் ? ‘ என்று கேட்டான் குமாரசாமி. ‘முகம் முதல் கண்ணாடி. மற்ற உறுப்புகள் அடுத்தடுத்த கண்ணாடிகள். முக உணர்வுகளை மறைத்துக் கொள்கிற சாமர்த்தியம் சிலருக்கு உண்டு. அப்போது மற்ற உறுப்புகளின் செயல்களே கண்ணாடி ‘ என்று விளக்கமளித்தார் ஐயா. ‘பாக்கறதுக்கு பூச்சிமாதிரி இருந்துகிட்டு என்ன காரியம் பண்ணிட்டு வந்து நிக்கறான் பாரு ‘ என்று வாய்வழக்கில் இருக்கும் தொடரை நினைவூட்டினார். அந்தப் பதிலில் குமாரசாமிக்குத் திருப்தி ஏற்படவில்லை என்பதை அவன் முகம் காட்டியது.

ஐயா அவனுக்காக ஒரு கதை சொன்னார். அவர் சிறுவனாக இருந்த போது நடந்த கதை என்றார். அவர் ஊரில் ஒரு பண்ணையார் வீடு. அங்கே காத்தவராயன் என்னும் மாடு மேய்க்கும் சிறுவன் இருந்தான். காலையில் ஓட்டிச் செல்கிற மாடுகளை பொழுது சாய்ந்ததும் பத்திரமாகத் திருப்பி ஓட்டி வந்து தொழுவத்தில் அடைத்துவிட்டு அங்கேயே சாப்பிட்டுவிட்டுப் படுத்துக் கொள்வான். ஒருநாள் மேயப் போன மாடுகளில் ஒன்று வழிதவறி எங்கேயோ போய்விட்டது. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. வீட்டுக்குத் திரும்பி நடந்ததைப் பண்ணையாரிடம் சொன்னான் காத்தவராயன். தொலைந்து போன மாடு அவருக்குப் பிரியமான மாடு. காலையிலும் இரவிலும் பத்து நிமிஷமாவது அத்துடன் கொஞ்சுவது அவருடைய பழக்கம். மாட்டைக் காணவில்லை என்றதும் கோபம் தலைக்கேறி விட்டது அவருக்கு. புளிய மிளாரால் அவனை அடித்து நொறுக்கிவிட்டார். உடல் முழுக்க ரத்தக் காயங்களோடு அழுது களைத்துச் சோறில்லாமல் துாங்கிப் போனான். விடிந்து பார்க்கும் போது அவன் அருகே காலை நக்கியபடியே நின்றிருந்தது தொலைந்துபோன மாடு. அதைப் பார்த்ததும் பெரிய நிம்மதி அவனுக்கு. வலியையெல்லாம் மறந்து அதைக்கட்டிப் பிடித்துக் கொஞ்சிவிட்டு புல்லை எடுத்துப் போட்டு தொழுவத்தில் கட்டினான். ஓடிப்போய் பண்ணையாரை அழைத்து வந்து காட்டினான். மாடு திரும்பியதில் அவருக்கு நிம்மதி. காத்தவராயனுக்குப் பழைய சோறு போட்டாள் பண்ணையாரம்மாள்.

சாப்பிட்டுக் கையைக் கழுவியவனிடம் உலையில் கொதித்துக் கொண்டிருந்த சுடுநீர்ப் பானையைப் பண்ணையார் குளிப்பதற்காக கிணற்றடிக்குத் துாக்கிக் கொண்டு போய் வைக்கச் சொன்னார். அவனும் அப்படியே செய்தான். குனிந்து நிமிரும்போது முதுகுத் தழும்பில் சுரீரென்று வலித்தது. சட்டென்று கோபம் கொப்பளித்தது. அக்கம்பக்கத்தில் யாருமில்லை என்று உறுதிப்படுத்திக் கொண்டதும் மறுகணமே அந்தத் தண்ணீர்க் குடத்தில் குனிந்து சிறுநீர் கழித்தான். அடுத்த கணமே அவன் கோபம் வடிந்தது. அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு தொழுவத்துக்குள் புகுந்து கொண்டான்.

கோபத்தில் ஒருநாள் செய்த காரியத்தை அடுத்தடுத்த நாட்களிலும் தொடர்ந்தான். அதில் ஒரு ருரத் திருப்தி. அந்தத் திருப்தியை நெஞ்சில் மட்டும் சுமந்து கொண்டிருந்தால் பரவாயில்லை. தனது வீரப்பிரதாபத்தை நிலைநாட்டும் ஆவேசத்தில் மாடு மேய்க்கிற மற்ற சிறுவர்களுடன் பகிர்ந்து கொள்ள, ரகசியம் கசிந்து விட்டதும் கோபத்திலும் அவமானத்திலும் துடித்துப் போனார் பண்ணையார். விபரீதத்தைப் புரிந்து கொண்ட காத்தவராயன் ஊரை விட்டுப் போய்விட்டான்.

கதை கேட்டு நாங்கள் சிரித்தோம். ஐயாவும் சிரித்தார். நெஞ்சில் இருப்பதை முகத்தில் காட்ட முடியாதவர்கள் செய்கைகளில் காட்டுகிறார்கள் என்று முடித்தார் ஐயா. புராணத்தில் அதற்கு எடுத்துக்காட்டாகச் சகுனியைச் சொன்னார். நெஞ்சில் இருப்பதை முகத்திலும் காட்டி, செய்கைகளிலும் காட்டி விடுவார்கள் சிலர் என்றார். புராணத்தில் அதற்கு எடுத்துக்காட்டாகத் துரியோதனனின் தொடையைப் பிளந்த பீமனைச் சொன்னார். போலீஸ்காரர்களும் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் நவீனகாலத்துப் பீமன்கள் என்று முடித்தார்.

அந்தக் குறள் வாழ்வில் மறக்கவே முடியாத குறளாகி விட்டது. வளர வளர என் வாழ்வில் நடந்த பல சம்பவங்களையும் இக்குறளுடன் பொருத்திப் பார்த்துப் புரிந்து கொண்டேன். ஆசிரியருக்காகத் தேநீர் வாங்கப் போன மாணவன் அதில் எச்சில் துப்பி எடுத்து வந்து தந்ததைப் பார்த்த போதும் வேதம் தெரிகிறது, ராமாயணம் மகாபாரதம் தெரிகிறது என்பதெல்லாம் சரி, நீந்தத் தெரியுமா உங்களுக்கு ? முடிந்தால் நீந்திக் கரைசேர்ந்து பிழைத்துக் கொள்ளுங்கள் என்றபடி ஆற்றில் குதித்த படகோட்டியின் கதையை அம்மாவின் மூலம் கேட்டபோதும் ஒருவரின் சுயம் அவமானமான முறையில் சீண்டப் படுவதால் வெளிப்படும் விளைவுகளாக அவற்றை எண்ணிக் கொண்டேன். மீண்டும் மீண்டும் அக்குறள் நெஞ்சில் அலைமோதியது. குறளுடன் ஞாபகத்துக்கு வரும் சிறுகதை ஜி.நாகராஜன் எழுதிய ‘ஓடிய கால்கள் ‘ என்னும் சிறுகதை. இருபதாண்டுகளுக்கு முன்னால் ‘விழிகள் ‘ என்கிற சிறுபத்திரிகையில் படித்த கதை.

ஏதோ ஒரு குற்றச்சாட்டில் கைதானவன் காவல்நிலையத்தில் இருக்கிறான். நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லும் வழியில் தப்பிக்க முயன்று மறுபடியும் அகப்பட்டுக் கொள்கிறான். அகப்படாமல் போயிருந்தால் துணைக்குப் போயிருந்த மூன்று போலீஸ்காரர்கள் வாழ்வில் மண் விழுந்திருக்கும். இடமாற்றம், சஸ்பென்ஷன், சர்வீஸில் கரும்புள்ளி என என்னென்னமோ நேர்ந்திருக்கலாம். அப்படி எதுவும் நேராமல் கைதி அகப்பட்டு விடுகிறான். அவன் எதற்கா கைது செய்யப்பட்டான், அக்குற்றச் சாட்டில் உண்மை உண்டா இல்லையா என்பதெல்லாம் பிரச்சனை இல்லை. போலீஸ்காரர்கள் கண்களில் மண்ணைத் துாவி விட்டு செல்ல வேண்டுமெனில் அவனுக்கு எவ்வளவு கொழுப்பு இருக்க வேண்டும் ? அப்படி ஓடிப் போக எண்ணுகிறவன் உத்தமனாக எப்படி இருக்க முடியும் ? போலீஸ்காரர்களின் சுயம் சீண்டப்பட்டு விட்டதில் ஒவ்வொருவனும் உள்ளூரக் கொதிக்கிறான். ஒவ்வொருவனாக சிறைக்குள் புகுந்து அவனை அடித்துக் கோபத்தைத் தணித்துக் கொள்கிறார்கள். மூன்றாவது போலீஸ்காரன் தனக்கிருக்கும் மின்சார அறிவைப் பயன்படுத்தி அவனுக்கு மின் அதிர்ச்சி தருகிறான். துடித்து வாயில் நுரைபொங்க இறந்து போகிறான் கைதி. திரும்பிக் கூடப் பார்க்காத போலீஸ்காரன் ஸ்விட்டை ஆஃப் செய்துவிட்டு ஒயர்களைச் சுருட்டிக் கொண்டு நாற்காலிக்கு வருகிறான்.

சாதாரணமானவனின் சுயம் சீண்டப்படுவதன் விளைவே எண்ணிப் பார்க்க இயலாதததாக இருக்கிறது. நெஞ்சின் ஆழத்தில் உறங்கும் மிருகம் விழித்துக் கொண்டால் என்ன செய்யும் என்பது யாராலும் கணிக்க முடிவதில்லை. அதிகாரம் என்னும் போதையில் இருக்கிறவனின் சுயம் சீண்டப்படும் போது விளைவுகள் எத்தனை மடங்காக இருக்கும் என்பதற்கான சான்றுகளாக ஏராளமாகச் சம்பவங்கள் தினந்தோறும் நடந்தபடி உள்ளன. காவல் துறை ச்முக அதிகார அமைப்பின் ஓர் உறுப்பு. அந்த அதிகாரத்தின் உதவியோடு நாட்டில் சட்ட ஒழுங்கும் நீதியும் நிலைநாட்டிக் காக்க வேண்டியவர்கள் போலீஸ்காரர்கள். ஆனால் அளவுகடந்த அதிகாரம் அவர்களை மெல்ல மெல்ல சகிப்புத் தன்மை அற்றவர்களாக ஆக்கி விடுகிறது. அவசரக்காரர்களாகவும் அடித்துக் கொல்லத் தயங்காதவர்களாகவும் மிருக உணர்வுகளில் மிதப்பவர்களாகவும் மாற்றி விடுகிறது.

எல்லாப் போலீஸ்காரர்களும் இப்படி இருப்பார்கள் என்று பொதுமைப்படுத்த முடியாது. நன்மை செய்பவர்களும் இருக்கிறார்கள். சிரித்துப் பேசுகிறவர்களும் இருக்கிறார்கள். தொழில் செய்பவனிடம் டா வாங்கிக் குடிப்பவர்களும் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களையும் ஜி.நாகராஜன் தம் கதைகளில் வேறு வேறு இடங்களில் காட்டுகிறார். தண்ணீர் கேட்கிற ஒரு கைதியைப் பார்த்து ‘இடியட் ப்ளடிஃபூல் ‘ என்று ஆங்கிலத்தில் திட்டுகிற போலீஸ்காரர் ஒருவரை ஜி.நாகராஜன் ‘பூவும் சந்தனமும் ‘ என்றொரு கதையில் காட்டுகிறார்.

‘ஓடிய கால்கள் ‘ கதையில் தப்பநினைத்து அகப்பட்டுச் சிறைக்குள் கோரமான முறையில் கொல்லப்படும் கைதியை நினைத்தால் பாவமாக இருக்கிறது. சட்டென பழிஉணர்ச்சிக்கு அடிமைப்பட்டு விடுகிற அளவுக்கு சுயத்தால் துாண்டப்படுகிறவர்களிடம் அதிகாரம் குவிந்திருப்பதை எண்ணும் போது இந்தத் தேசத்தை நினைத்து வருத்தமாக இருக்கிறது. வருத்தத்துக்கு ஆளாகும் ஒவ்வொரு கணமும் ‘போலீஸ்காரர்களும் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் நவீனகாலத்துப் பீமன்கள் ‘ என்று ஐயா சொன்ன வாக்கியம் அசரீரி போல நெஞ்சில் எதிரொலிக்கிறது.

*

தமிழ்ச் சிறுகதை உலகில் என்றும் அழிக்க முடியாத ஒரு பெயர் ஜி.நாகராஜன். தன் கதையுலக விசேஷத் தன்மையால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். ஓடிய கால்கள் என்னும் சிறுகதை முதலில் விழிகள் என்னும் சிறுபத்திரிகையில்

1982ல் வெளியானது. காலச்சுவடு பதிப்பகம் தொகுத்து வெளியிட்ட ஜி.நாகராஜன் சிறுகதைகள் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது.

***

paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்