வால்மீனில் ஆழ்குழி வடித்து அகிலாண்டத்தின் மூலத் தோற்ற உளவுகள் ! (Exploration of Comet with Deep Impact)

This entry is part [part not set] of 30 in the series 20050715_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா


கியூப்பர் முகில் வேலி தாண்டி,

வியாழக்கோள் வலையில் மாட்டிய,

வால்மீனைக்

கவண்கல் தாக்கிப்

புடமிட்டு,

உடம்பில் ஆழ்குழி உண்டாக்கி

அகிலாண்ட கோடிகளின்

ஆதி வடிவத்தை ஆய்ந்திடவும்,

உயிர்மூலப் பிண்டத்தை உளவிடவும்

முயல்வர்,

வானியில் நிபுணர்!

‘வால்மீன்களைப் பற்றி ஏன் அறிந்து கொள்ள வேண்டும் ? வால்மீன்களை விண்வெளியில் ஏன் உளவு செய்ய வேண்டும் ? காரணம்: பரிதி மண்டலத்தில் திரியும் வால்மீன்களே பிரபஞ்சத்தின் பூர்வீகக் கோள்கள்! அவற்றில் காணப்படும் பிண்டப் பொருட்களில்தான் அனைத்து அண்ட கோள்களும், பரிதியும் ஆக்கப் பட்டுள்ளன! ஆழ்மோதல் திட்டம் உயிரினத் தோற்றத்தின் ஆரம்ப உதயத்தை ஆராய உதவும். இதுவரைச் செய்யாத, துணிச்சலான, புத்துணர்வு மூட்டும், ஒரு பரபரப்பான முதல் விஞ்ஞான முயற்சி, அது!

ஆண்டிரூஸ் டான்ஸ்லர் [Acting Diretor, Solar System Division, NASA]

‘ஆழ்குழி உண்டான பின்பு வால்மீனின் மேற்தள, உட்தளப் பண்டங்கள் முகில் மூட்டம் போல் கிளம்பி, பரிதியின் ஒளிவீசி விண்வெளியில் எறியப்படும். மெதுவாக ஒளிவீச்சு அடங்கி வால்மீனில் வெடித் துணுக்குகள் வெளியே தள்ளப்பட்டு அல்லது உள்ளே மீண்டும் விழுந்து முடக்கப்பட்டுப் போகும். அண்டையில் பறந்து கொண்டிருக்கும் விண்சிமிழ் வாகனத்தின் [Flyby Spacecraft] மூலம், ஆழ்குழியின் உட்பகுதியை நோக்கி, வால்மீன் எப்பண்டங்களால் அமைக்கப் பட்டுள்ளது என்பதை உளவப் போகிறோம். ‘

ரிச்சர்டு கிராம்மியர் [NASA Deep Impact Project Manager]

‘நாங்கள் ஆழ்குழித் திட்ட விண்சிமிழ்ப் பயணத்தை மிக்கக் கூர்ந்து கண்காணித்து வந்தோம். பயணப் போக்கு மென்கல வழிமுறையால் [Software Program] முதல் ஆணை இயக்கத்தில் [Initial Maneuver] எதிர்பார்த்தபடி விண்சிமிழ் நான்கு மைல் தள்ளி விடப் பட்டது. ஆனால் இரண்டாவது, மூன்றாவது ஆணை இயக்கங்களில் விண்சிமிழின் போக்கு சீராக்கப்பட்டு வால்மீனை நோக்கிப் பயணம் செய்தது. ‘

ஷயாம் பாஸ்கரன் [Deep Impact Navigator, Jet Propulsion Lab.]

முன்னுரை: இருபதாம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில் நாசாவின் முப்பெரும் விண்வெளித் திட்டங்கள் தயாராகி, அமெரிக்க அரசின் ஆசியைப் பெற்றன. முதல் திட்டம், விண்மீன்தூசி [Stardust]. இரண்டாம் திட்டம், ரோஸெட்டா [Rosetta]. மூன்றாம் திட்டம், ஆழ்மோதல் [Deep Impact]. முதல் திட்டப்படி விண்மீன் தூசியில் நாசாவின் ஏவுகணை தூக்கிச் செல்லும் எறிகணை, வால்மீன் ஒன்றின் பனிமுகில் [Coma -the Cloud of Ice] ஊடே நுழைந்து, அதன் மாதிரிகளை எடுத்துக் கொண்டு பூமிக்கு மீளும்! அத்திட்டம் 2006 ஜனவரியில் முடிந்து, வால்மீனின் பனித்துணுக்கு மாதிரிகள் பாராசூட் குடையில் வந்திறங்கும்! ரோஸெட்டா வென்னும் இரண்டாம் திட்டத்தில் ஈசா [European Space Agency (ESA)] 2004 மார்ச் 2 ஆம் தேதியில் அனுப்பிய விண்சிமிழ் ஒரு வால்மீன் கருமீது [Cometary Nucleus] இறங்கித் தடம் பதித்து அதன் தளத்தின் பண்டங்களையும், அமைப்பையும் உளவு செய்யும். அத்துடன் வால்மீனின் ஆதிகாலத் தோற்றத்தை அறிந்து, பிரபஞ்சத்தின் அண்டங்களையும், பரிதியின் மண்டலத்தையும் ஒப்பிட்டுப் பார்க்க விளக்கம் அளிக்கும். மூன்றாவது திட்டம்தான் 2005 ஜனவரியில் ஆரம்பமான ‘ஆழ்மோதல் ‘ எனப்படும் நாசாவின் தற்போதைய வால்மீன் தாக்குதல் பயணம். 2005 ஜூலை மாதம் வால்மீன் ஆழ்மோதல் உளவுத் திட்டத்தை நாசா வெற்றிகரமாகச் செய்து காட்டியது.

டெம்பெல்-1 வால்மீனைக் கண்டுபிடித்த பிரெஞ்ச் விஞ்ஞானி

1867 ஏப்ரல் 3 ஆம் தேதி அந்த வால்மீனை அண்டவெளியில் முதலில் கண்டுபிடித்தவர், பிரெஞ்ச் விஞ்ஞானி எர்னெஸ்ட் வில்ஹெல்ம் டெம்பெல் [Ernesr Wilhelm Tempel]. தன் வாழ்நாளில் அவர் தனியாகவோ அல்லது கூட்டாகவோ கண்டுபிடித்தவை 12 வால்மீன்கள். அவரது பெயரைப் பெற்ற முதல் வால்மீனைத்தான் நாசா விஞ்ஞானிகள் தமது ஆழ்மோதல் உளவாய்வுக்குத் தேர்ந்தெடுத்தார்கள். பரிதி மண்டலத்தைச் சுற்றிவரும் எண்ணற்ற வால்மீன்கள் சிலவற்றின் நீள்வட்டச் சுழல்வீதி [Elliptical Orbit] கணிக்கப்பட்ட ஒன்பதாவது வால்மீனே டெம்பெல்-1. பரிதியை மணிக்கு 66,880 மைல் வேகத்தில் (சுமார்: விநாடிக்கு 20 மைல்) மிக்க விரைவாகச் சுற்றிவரும் டெம்பெல்-1 வால்மீன், பரிதியை ஒருமுறைச் சுற்ற 5.5 ஆண்டுகள் எடுக்கிறது! அதாவது டெம்பெல்-1 பூமியை மட்டும் சுற்றினால் [சுற்றளவு: 24900 மைல்] சுமார் அரை மணி நேரத்திற்கும் குறைவாகவே ஒருமுறை சுற்றி விடும். குன்றிய காலத்தில் பரிதியைச் சுற்றும் டெம்பெல்-1 குறுகிய கால வால்மீன் [Short Period Comets] இனத்தைச் சேர்ந்தது. [3-200 ஆண்டுகள்] சுற்றுக் காலம் கொண்ட வால்மீன்கள் யாவும் குறுகிய கால ரகத்தைச் சேர்ந்தவை. பூதக்கோள் வியாழனுக்கும், சிவப்புக் கோள் செவ்வாயிக்கும் இடைப்பட்ட ஒரு சுழல்வீதியில் அந்த வால்மீன் பரிதியை வலம் வருகிறது! மேலும் விந்தையாக டெம்பெல்-1 தன்னைத் தானே தன்னச்சில் சுமார் 41 மணிக்குள் சுற்றி விடுகிறது! நீண்டகால வால்மீன்கள் [Long Period Comets] பரிதியை ஒருமுறைச் சுற்ற 200 ஆண்டுக்கு மேலாக ஆகிறது.

வால்மீன்களின் பூர்வீகத் தோற்றம் பற்றி வானியல் வல்லுநர்

கிரேக்க மேதை அரிஸ்டாடில் (கி.மு. 388-322) வால்மீன்கள் பூகோளத்திலிருந்து கிளம்பும் ஒருவகையான வானவீச்சு [Some Kind of Emission from Earth] என்று கருதினார். ஒழுங்கு நியதியில் இயங்கி வரும் அண்டக் கோள்கள் போல் இல்லாமல் திடாரென வருவதும், போவதுமாய்ப் பழுதாக நகர்ந்து வரும் வால்மீன்கள், அகிலாண்டக் கோட்டையின் [Celestial Vault] இனத்தைச் சேர்ந்தவையாக எண்ணப்படா! 1577 இல் டேனிஷ் வானியல் நிபுணர் டைகோ பிராஹே [Tycho Brahe (1546-1601)] இரவு வானில் பின்புறம் விண்மீன்கள் நிலைத்து நிற்க, நிலவு விரைவில் நகரும் காட்சியைக் கண்டு வால்மீன்களின் தூரமான இடத்தை ஊகித்தார். குறைந்த அளவு வால்மீன்கள் நிலவைவிட, பூமியிலிருந்து ஆறு மடங்கு தொலைவில் இருக்க வேண்டும் என்று கருதினார்.

ஆங்கில விஞ்ஞான மேதை ஐஸக் நியூட்டன் (1642-1726) 1680 இல் தோன்றிய வால்மீன் ஒன்றின் நகர்ச்சியைப் பின்பற்றி, அதன் சுற்றுவீதி பிறைவட்டம் [Parabolic Orbit] என்று கூறினார். அடுத்து ஆங்கில வானியல் நிபுணர் எட்மண்டு ஹாலி [Edmund Halley (1656-1742)] நியூட்டனைப் பின்பற்றி 24 வால்மீன்களின் நகர்ச்சியை உளவி, 1531, 1607, 1682 ஆண்டுகளில் தோன்றிய மூன்று வால்மீன்களின் சுற்று வீதிகள் ஒரே மாதிரியாக உள்ளன வென்று அறிவித்தார். இறுதியில் ஹாலி அம்மூன்று வால்மீன்களும் பரிதியை 75 ஆண்டுகளுக்கு ஒருமுறைச் சுற்றிப் பூமியில் தெரியும் ஒரே வால்மீன் என்று முடிவு செய்து, துல்லியமாக அதன் அடுத்த வருகை ஆண்டையும் (1758-1759) அறிவித்தார்.

1950 ஆம் ஆண்டில் அமெரிக்கன் வானியல் வல்லுநர் பிரடெரிக் விப்பில் [Fred Whipple (1906-2004)] வால்மீனின் கருவுக்கு [Comentary Nucleus] பனிப் புழுதிப் பந்து மாதிரி [Dirty Snowball Model] உள்ள வடிவம் ஒன்றை விளக்கிக் காட்டினார். வால்மீனின் கரு சுமார் 1 கி.மீடர் முதல் 10 கி.மீடர் வரை [0.5-6.0 மைல்] விட்டம் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த வடிவ மாதிரி பலரால் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது. வால்மீன் கருவில் கரிய ஆர்கானிக் பிண்டம், பாறைத் துணுக்குகள், நீர்ப்பனி [Organic Material, Rocky Grains, Water Ice] ஆகியவற்றின் கலவை நிரம்பி இருப்பதாக எண்ணப்படுகிறது. [ஆர்கானிக் பிண்டம் என்பது கார்பன், ஹைடிரஜன் ஆகிய இரண்டின் இரசாயனக் கலவைகள்]

வால்மீன்களில் பனிப் பண்டங்கள் இருக்கிறதால், வால்மீன்கள் சற்று வெப்பமுள்ள பரிதியின் உள் மண்டத்தில் உருவாகி இருக்க முடியாது. 1950 இல் டச் வானியல் நிபுணர் ஜான் ஹென்டிரிக் ஓர்ட் [Jan Hendrick Oort (1900-1992)] பரிதிக்குப் பல பில்லியன் மைல் தொலைவில் [50,000 AU (Astronomical Unit) (1 AU= Distance between Earth & Sun)] சூழ்ந்திருக்கும் வால்மீன் முகில் மந்தையிலிருந்து அவை உதயமாகி வருகின்றன என்னும் கருத்தை நிலவினார். அந்த விண்வெளி மந்தையே ‘ஓர்ட் முகில் ‘ [Oort Cloud] என்று இப்போது அழைக்கப்படுகிறது.

ஓராண்டுக்குப் பிறகு அடுத்த டச் அமெரிக்க வானியல் விஞ்ஞானி ஜெரார்டு கியூப்பர் [Gerard Kuiper (1905-1973)], ‘ஓர்ட் முகில் கோளம் ‘ குறுகிய கால வால்மீன்கள் [Short Period Comets] உற்பத்திக்கு ஏற்றபடி அருகே அமையாமல், பரிதிக்கு வெகு, வெகு தொலைவிலே உள்ளது என்று மறுப்புக் கூறினார். கியூப்பர் கருத்துப்படி பரிதி மண்டலத்தை (30-100) AU தூரத்தில் நெருங்கிய குறுகிய கால வால்மீன்களை உற்பத்தி செய்யும் வேறொரு ‘வால்மீன் வளையம் ‘ உள்ளதென்னும் ஒரு புதிய கருத்தை வெளியிட்டார். பின்னால் அதுவே ‘கியூப்பர் வளையம் ‘ என்று அழைக்கப்பட்டது. நீண்ட கால வால்மீன்கள் [Long Period Comets] ஓர்ட் முகிலிலிருந்து உதயம் ஆகின்றன என்றும், குறுகிய கால வின்மீன்கள் கியூப்பர் வளையத்திலிருந்து கிளம்புகின்றன என்றும் தற்கால வானியல் விஞ்ஞானிகள் ஒப்புக் கொண்டுள்ளார்கள்.

நாசா வெற்றிகரமாகப் புரிந்த ஆழ்மோதல் திட்டம்

2005 ஜூலையில் அமெரிக்கா 333 மில்லியன் டாலர் நிதியைச் செலவு செய்து, 370 கிலோ கிராம் விண்ணுளவியை [Space Probe] அண்டவெளியில் அனுப்பி, டெம்பெல்-1 என்னும் வால்மீனை [Comet: Tempel-1] வயிற்றில் அடித்துப் பெரும் வெடிப்பொளியைக் கிளப்பி வரலாற்று முக்கியத்துவம் பெற்றது. அந்தப் பேரடி வால்மீனைப் பிளக்க முடியா விட்டாலும், ஆராய்ச்சி செய்ய ஒரு பெரும் வட்டக்குழியை உண்டாக்கி விட்டது! இதுவரை வால்மீன் மீது இம்மாதிரி விண்வெளியில் ஓர் அசுர சாதனை செய்யப்பட வில்லை! பரிதி மண்டலத்தில் பயணம் செய்து, பூமியை நெருங்கும் ஒரு வால்மீனை அருகிக் கணையால் காயப்படுத்தித் துணுக்குகளையும், வாயுக்களையும் இவ்விதம் வெளியேற்றிய தில்லை! எறிகணை மோதி வால்மீனில் ஒளிக்கனல் பற்றியதை ஹப்பிள் தொலைநோக்கியும் [Hubble Telescope] படமெடுத்து அனுப்பி யுள்ளது!

‘ஆழ மோதல் ‘ [Deep Impact] என்று நாசாவால் பெயரிடப் பட்டது அத்திட்டம்! 1998 ஆம் ஆண்டில் ‘ஆழ மோதல் ‘ என்னும் திரைப்படம் ஒன்று அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. அத்திரைப்படத்தைப் பின்னணியாகக் கொண்டு பெயரிடப்பட்ட அத்திட்டம், அதில் வரும் ஒரு முக்கியப் பிரச்சனைக்குத் தீர்வையும் காண முற்பட்டு மகத்தான வெற்றியும் பெற்றது! விண்வெளியிலிருந்து பூமிநோக்கி விழும் ஒரு விண்கல்லை அணு ஆயுத வெடி மூலம், விண்வெளி விஞ்ஞானிகள் திசை திருப்ப முற்படும் ஒரு புனைகதை அது! பூமியிலிருந்து மனிதரற்ற வாகனத்தை அனுப்பி மெய்யாக வால்மீனைக் குறிவைத்து எறிகணையால் வெற்றிகரமாக மோதி அடித்தது, அத்தகைய ஓர் அசுர சாதனைக்கு வழி வகுத்து விட்டது என்று உறுதியாகச் சொல்லலாம்!

4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பரிதி மண்டலம் தோன்றிய போது, ஆர்கானிக் அண்டச் சிதறலைப் [Organic Intersteller Dust] ஓர்ட் முகில் வெளியில் [Oort Cloud Space] பற்றிக் கொண்டு, வால்மீன்கள் தோன்றியதாகக் கருதப்படுகிறது. அமெரிக்க, ஐரோப்பிய விஞ்ஞானிகள் வரலாறு முதன்மையும், முக்கியத்துவமும் பெற்ற இந்த திடார்மோதல், வால்மீன் பனித்தளத்தின் கீழே பதுங்கிக் கிடக்கும் உயிர் மூலவிகளின் பிண்டத்தை [Living Matter] உடைத்து வெளியே கொண்டு வரலாம் என்று நினைக்கிறார்கள். வால்மீனை நோக்கி விண்சிமிழ் [Spacecraft] ஏவிய 820 பவுண்டு எடையுள்ள எறிகணைத் தாமிர உலோகத்தில் [Copper Projectile] தயாரிக்கப்பட்டது. தாமிர எறிகணை பயன்படுத்தப் பட்டதின் காரணம்: வால்மீனில் தாமிர உலோகமோ அல்லது அதன் கலவையோ கிடையாது; எறிகணை மோதி வால்மீனின் துணுக்குகளோடு சேர்ந்து தூளாகும் போது, தாமிரத் தூள்களைத் தவிர்த்து மற்றவற்றை உளவ வசதி உண்டாகும்.

தாமிரக் கட்டி வால்மீனை 5 டன் TNT வலுவில் தாக்கிய போது, அதன் வேகம் மணிக்கு 23000 மைல்! அப்பேரடி வால்மீன் வயிற்றில் 100 மீடர் விட்டம், 15-20 மீடர் ஆழத்தில் பெருங்குழியைத் தோண்டி 100,000 டன் நிறையுள்ள பொருட்களை வெளியேற்றினும், வால்மீனின் சுற்றுவீதியைச் [Comet ‘s Orbit] சீர்குலைக்காது என்று நாசா நிபுணர்கள் சொல்கிறார்கள்! விண்வெளியில் சிதறிய அந்தச் சிதைவுப் பொருட்களால் பூகோளத்துக்கு எவ்வித இன்னலும் விளையாது என்றும் நாசா விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அதாவது கவண்கல் மோதலை ஒப்பிட்டால், பறக்கும் 767 ஜெட் விமானத்தை கொசு ஒன்று தாக்குவதற்குச் சமமாகும்!

ஆழ்மோதல் திட்டத்தின் முக்கிய குறிக்கோள்கள்

வால்மீனில் ஏற்படுத்திய ஆழ்குழி அண்டவெளி விஞ்ஞானத்தில் சில அரிய புதிய கண்டுபிடிப்புகளை வெளியிடப் போகிறது. முதலில் ஆழ்குழி பயணப் பணியின் குறிக்கோள்கள் என்ன என்பதைப் பார்ப்போம்:

1. வால்மீனின் கருவைப் [Cometary Nucleus] பற்றி இதுவரை அறிந்த அதன் பண்புகளில் திருத்தமும், விருத்தியும் செய்வது. எறிகணை மூலம் தாக்கி, ஆழ்குழி உண்டாக்கி முதன்முதல் வால்மீன் கருவின் உட்பண்டங்களை உளவு செய்வது.

2. வால்மீன் மேலடுக்குத் தளத்தின் திணிவு [Density], துளையியல் [Porosity], உறுதிப்பாடு [Strength], கூட்டமைப்பு [Composition] ஆகியவற்றை அறிவது.

3. வால்மீனைத் தாக்குவதற்கு முன்னும், பின்னும் இருந்த மேற்தள மாறுதல்களை ஆராய்தல். ஆழ்குழியில் காணப்படும் புராதன மூல பண்டங்களின் பண்புகளை அறிவது. அவ்வித உளவில் வால்மீன்களின் மூலப் பிறப்புகளை ஊகிப்பது.

4. ஆழ்குழி 60 அடி ஆழத்தில் உண்டானால், கீழ்க் காணப்படும் பண்டம் கார்பன் மொனாக்ஸைடு பனிக்கட்டியாகவோ அல்லது கார்பன் டையாக்ஸைடு பனிக்கட்டியாகவோ திடாரென்று மாறுகிறதா ?

5. வால்மீனில் தென்படும் பனிக்கட்டி பெரும்பான்மையாக நீரைக் கொண்டுள்ளதா ? அவ்விதம் பனிக்கட்டி நீர்ப் பனிக்கட்டி என்று அறியப்பட்டால், நீர்ப்பனி சீரான வடிவமைப்புப் படிகமாக [Crystalline] உள்ளதா அல்லது சீரற்ற வடிவமாக [Amorphous] உள்ளதா என்று தெரிந்து கொள்வது.

6. வால்மீனின் மேற்தட்டில் [Mantle] ஆவித்துவம் அடையும் பண்டங்கள் [Volatile Materials] உள்ளனவா ?

அவ்விதம் இருந்தால் செ.மீடர், மீட்டர் அல்லது பத்து இருபது மீடர் ஆழத்தில் இருக்கின்றனவா ?

7. அடுத்தடுத்து வால்மீனின் கட்டமைப்பு ஓரினத்தன்மை [Homogeneous Structure] கொண்டுள்ளதாய் இருக்கிறதா ?

8. வால்மீனில் உருகும் பனிக்கும், உருகாத பனிக்கும் ஒளித்திரிபு [Refractory] வேறுபாடு உள்ளதா ? அவ்விதம் இருப்பின் அவற்றின் ஒளித்திரிபு விகிதம் [Ratio of Refractory] என்ன ?

9. வால்மீனின் மேற்தளப் புழுதியின் வயதென்ன ?

10 ஆவித்துவ மாகும் பண்டங்கள் கீழிருந்து கசியா வண்ணம் எவ்விதம் தடுக்கப் படுகின்றன ? ஆவித்துவப் பண்டங்கள் இல்லாத தளங்களும் அங்கே உள்ளனவா ?

பூமியில் உயிரினம் பயிரின மூலம் தெளித்த வால்மீன்கள்

பூமியில் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பயிரினங்கள், உயிரினங்கள் ஆகியவை தோன்றுவதற்கு வேண்டிய ஆர்கானிக் மூலவிகளைப் புவிமீது கொட்டியவை வால்மீன்கள் என்னும் கருத்தைப் பூகோளவியல், வானியல் விஞ்ஞானிகள் கூறி வருகிறார்கள். 3.9 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக வால்மீன்கள், சிற்றுருவக் கோள்கள் [Asteroids] ஆகியவைப் பெருமளவில் மோதிச் சிதைவாகி நின்று போன காலநிலை வந்தது என்று அண்டக் கோள்களின் வரலாற்றுப் பதிவுகளில் காணப்படுகிறது. ஏறக்குறைய அதே யுகத்தில்தான் புவியில் உயிரினமும், பயிரினமும் தோன்றின என்றும் அறியப்படுகின்றது. நீர்க் களஞ்சியமும், கார்பன் சார்ந்த மூலக்கூறுகளும் [Carbon Based Molecules] பேரளவில் சேமித்துள்ள வால்மீன்கள், முன்பு ஒரு காலத்தில் பூகோளத்துக்கு வாரி வாரி வழங்கி வந்துள்ளன என்று வானியல் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். வால்மீன்களில் எடை நிறையில் 50% நீர், (10%-20%) கார்பன் சார்ந்த பண்டங்கள் இருக்கலாம் என்று தற்போது ஊகிக்கப் படுகிறது. வால்மீன்கள் இவ்விதம் பூமியில் உயிரனங்கள், பயிரினங்கள் ஆகியவற்றைத் தோற்றுவிக்கும் படைப்புக் கோள்களாக இருந்தாலும், 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை வால்மீன் ஒன்று கடலில் வீழ்ந்து, பெருங் கொந்தளிப்பை உண்டாக்கி டைனோஸார்ஸ் போன்ற கோடான கோடி வன விலங்குகளை அழித்துப் புதைத்துள்ளது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்!

****

தகவல்:

1. Deep Impact Prepares for Comet Crash By: Declan McCullagh [www.news.com] July 2, 2005

2. NASA Probe Could Reveal Comet Life, By UK Team Cardiff University, U.K. [July 5, 2005]

3. Photo Credits NASA, JPL-Caltech, California [July 5, 2005] & Toronto Star Daily [July 5, 2005]

4. Watch Deep Impact ‘s Comet Collision Via Webcast By: Tariq Malik [www.space.com July 1, 2005]

5. NASA to Study Comet Collision www.PhysOrg.com [2005]

6. NASA Looks for Signs of Success from Celestial Broadside www.PhysOrg.com [2005]

7. Deep Impact Makes a Better Impact than Planned http://english.people.com.cn/ [July 5, 2005]

8. Deep Impact Slams into Comet By: Anthony Duignan-Cabrera Space.com Managing Editor {July 4, 2005]

9. Watch a Deep Impact By: Alan Dyer Sky News (July-Aug 2005)

10 European Space Agency (ESA) Science & Technology [http://sci.esa.int/science-e]

11 Comets & Deep Impact ‘s Encounter with Temel-1 from NASA Press Kit (Jan 9, 2005)

12 Deep Impact is a Smashing Success By: William Harwood (July 4, 2005)

13 Overview of NASA ‘s Deep Impact Comet Mission from NASA Press Kit (June 28, 2005)

14 The Science Objectives of Deep Impact from NASA Press Kit (Jan 9, 2005)

****

jayabarat@tnt21.com [S. Jayabarathan (July 14, 2005)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா