வாரபலன் – ஜூன் 17,2004 – டில்லிக்குப் போன கவுன்சிலரு , ஆயிரம் இதழ் கண்ட கலா கெளமுதி , வாத்துக்களின் வட்டார வழக்கு , அஞ்சலி : காச

This entry is part [part not set] of 52 in the series 20040617_Issue

மத்தளராயன்


கட்சி இங்கே தோற்றுப் போனால் என்ன, நம்மாளுங்க அங்கே பதவியேற்கறதைப் பார்க்க வேணாமா ?

அதே அதே என்று இடுப்பில் முண்டு இறுக்கிக் கொண்டு ஒரே குரலில் சொன்னார்கள் வடக்கன் கேரளத்தில் ஒரு சிறிய நகரசபையின் பகுமானப்பட்ட உறுப்பினர்கள்.

அப்ப டில்லி சலோ.

போகலாம், அதுக்குக் காசு வேணுமே சேட்டா.

கவுன்சிலர்கள் சோகமாகப் பெருமூச்சு விட, நாங்க எதுக்கு இருக்கோம் என்றார்கள் கக்கத்தில் கனத்த தோல்பை இடுக்கிய காண்ட்ராக்டர்கள்.

மழை பெய்யாவிட்டால் குளத்திலும் குட்டையிலும் தூர் வாறக் காண்ட்ராக்ட், மழை பெய்து கரை உடைந்துபோய் பக்கத்தில் எல்லாம் வெள்ளக்காடாக்கினால், கரையை உயர்த்திக் கட்டித் தண்ணீர் இரைக்கக் காண்ட்ராக்ட், தெருவிளக்கு காண்ட்ராக்ட், குப்பைத் தொட்டி காண்ட்ராக்ட், சைக்கிள் ஸ்டாண்ட் காண்ட்ராக்ட், நாய் பிடிக்க, எலி பிடிக்க காண்ட்ராக்ட், சந்தைக்கடை காண்ட்ராக்ட், சுடுகாட்டு காண்ட்ராக்ட் என்று ஏகப்பட்ட காண்ட்ராக்களை நகரசபையிலிருந்து பெற்று தோல்பையும் தொப்பையும் பெருத்த காண்ட்ராக்டர்கள் அவர்கள் எல்லாரும். நன்றிக் கடனாக, நாளைய காண்ட்ராக்டுகளுக்கு உத்திரவாதம் ஏற்படுத்திக்கொள்ள அவர்கள் கவுன்சிலர் தெய்வங்களை தில்லிக்கு உற்சவ மூர்த்திகளாக எழுந்தருளப் பண்ணி தீர்த்த வாரி நடத்தித்தர திருவுள்ளம் கொண்டார்கள்.

கவுன்சிலர் படை தில்லிக்குப் புறப்பட்டுப் போனது ஏக கோலாகலமாக.

தில்லி போனால் சும்மா அறையிலேயே அடைந்து கிடக்க முடியுமா என்ன ? செங்கோட்டை, பாலிகா பஜார், குதுப்மினார், லோதி கார்டன் என்று ஊர் சுற்றிப் பார்க்க, பணிக்கர் டிராவல்ஸில் பதிவு செய்து புஷ் பேக் சீட் பஸ்ஸில் ஆக்ரா போய்த் தாஜ்மகால் வாசலில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டு வர என்று தடபுடலாக இரண்டு மூன்று நாள் போனது. அதற்கேற்றாற்போல் சோனியாம்மா பிரதமராக மறுத்து, அவரை எல்லோரும் வேண்டிக் கொண்டு, அவர் திரும்பவும் மறுத்து, சரி வேறே யாரைப் பிரதமராக்கலாம் என்று முடிவு செய்வதில் அந்த நேரத்தில் தில்லியிலும் அரசியல் எல்லாப் பக்கமும் அலைபாய்ந்து கொண்டிருந்தது.

ஒரு வழியாக மன்மோகன் தலைமையில் மந்திரிசபை பதவி ஏற்கப் போகிற செய்தி. அதை நம்ம கவுன்சிலர்கள் கடைசி வரிசையிலாவது உட்கார்ந்து கண்குளிரக் காண ஏற்பாடு செய்யக் காண்ட்ராக்டர்கள் க்ிளம்பிப் போனார்கள். போனவர்கள் போனவர்கள் தான்.

யாரு மினிஸ்டர், எப்போ பதவி ஏற்பு எல்லாம் தெரியற வரைக்கும் இன்னும் கொஞ்சம் ஊர் சுற்றல், வீட்டில் பெண்டாட்டிக்கு சவுரி, குழந்தைக்கு பொம்மை, மச்சினனுக்கு ஸ்வெட்டர், பிரம்பு மோடா வாங்குவது, நாயர் ஓட்டலாகத் தேடிச் சோறும் பப்படமும் கூட்டானுமாக ஒரு பிடி பிடிப்பது, அப்புறம் களைத்துப் போய் வந்து ஹோட்டல் அறையில் சோடா சேர்த்தும் சேர்க்காமலும் நல்ல தண்ணி பருகி ஓய்வெடுப்பது – கவுன்சிலர்கள் தொடர்ந்து ஏக பிசி.

ஐயய்யோ, இப்போ பதவி ஏற்பு நடக்கிறதாச் சொன்னாங்களே ?

யாரோ திடாரென்று நினைவுக்கு வர அலறியடித்துக் கொண்டு எழுந்தார்.

தில்லிக்கு வந்ததே அந்த வைபவத்தில் கலந்து கொண்டு சந்தோஷப்படத்தான். அந்த நேரத்தில் இப்படியா ஓட்டல் அறையில் அடைந்து கிடப்பது.

சேட்டா, ற்றீவியை ஒண்ணு ஓண் செய்யு.

ஒரு மூத்த கவுன்சிலர் கிளாஸை வாய்க்கு நேரே உயர்த்திக் கொண்டு சொன்னார். யாரோ ஓடிப்போய் அறையில் டி.வியைப் போட, அப்துல் கலாம் சார் பள்ளிக்கூட வாத்தியார் மாதிரி மேஜை போட்டுக்கொண்டு பின்னால் உட்கார்ந்திருக்க, நேற்று நடத்திய பாடத்தை உரக்கப் படிக்கிற பிள்ளைகள் போல் அறுபது சில்லறை அமைச்சர்கள் வரிசையாக ஒரே தினுசு காகிதங்களைக் கண்ணுக்குப் பக்கத்திலும் தூரத்திலும் பிடித்துப் படித்துக் கையெழுத்துப் போட கோலாகலமாக நடந்தது பதவியேற்பு விழா.

கவுன்சிலர்கள் திரையில் ஒரு கண்ணும் பாட்டிலில் ஒரு கண்ணுமாக ஓட்டல் அறைக் கட்டிலில் ஓய்வெடுத்தபடி திருப்தியடைந்து ராத்திரி ரயிலில் ஊரைப் பார்க்கக் கிளம்பினார்கள். பதவி ஏற்பைப் பார்க்க தில்லிக்கு வந்து அதைப் பார்க்காமலேயே ஊருக்குத் திரும்பி விட்டதாக யார் நாக்கில் பல்லுப் போட்டுச் சொல்ல முடியும் ?

தொடர்ந்து, கேரளத்தில் பருவமழை பெய்து கொண்டிருக்கிறது. பாதிக்கு மேல் காண்ட்ராக்டர்கள் காட்டில்.

****

ஆயிரம் பிறை கண்ட மூத்தோருக்குச் சுற்றமும் நட்பும் விழா எடுத்து மகிழ்வது போல் ஆயிரம் இதழ் கண்ட வாரப் பத்திரிகை கொண்டாடுவது தமிழில் இல்லை. ஆனால் மலையாளத்தில் ‘கலாகெளமுதி ‘ பத்திரிகை ஆயிரம் இதழ் கண்டபோது சீறும் சிறப்புமாக அது வெளியானது. பத்திரிகையின் ஆசிரியர் ஜெயச்சந்திரன் நாயரின் கட்டுரையும், வழக்கமான பகுதிகளாக சச்சிதானந்தன், ஒ.வி.விஜயன், விஷ்ணு நாராயணன் நம்பூத்ரி, சாஹித்ய வாரபலம் கிருஷ்ணன் நாயர், பத்திரிகையாளர் டி.என்.கோபகுமார், கமலாதாஸ் என்ற மாதவிக்குட்டி, தில்லிப் பத்திரிகையாளர் வி.கே.மாதவன் குட்டி, கதகளி ஆட்டக்காரர் கலாமண்டலம் கிருஷ்ணன் நாயர், முன்னாள் முதலமைச்சர் அச்சுத மேனோன் என்று மலையாளத்தின் முக்கியமான எழுத்தாளர், பத்திரிகையாளர், கலைஞர், அரசியலார் எல்லாம் எழுதிய படைப்புகளுமாக அந்த இதழ் இருந்தது. இவர்கள் எல்லோரும் கலாகெளமுதியை ஒரு கல்ட் ஸ்டேற்றஸுக்கு உயர்த்திய அந்தப் பொற்காலம் இன்னும் நினைவில் இருந்து மறையவில்லை. அதற்குள், போனவாரம் கலாகெளமுதியின் ஆயிரத்து ஐநூறாவது இதழ் வெளியாகியிருக்கிறது.

இடைப்பட்ட கிட்டத்தட்டப் பத்தாண்டில் மலையாளியின் பொதுவான கலை இலக்கிய ரசனை வெகுவாக மாறியதற்கு அடையாளமாகக் கலாகெளமுதியும்தான் மாறிப்போனது. இப்போது கலாகெளமுதி அங்கே பத்தோடு பதினொன்றாக இருந்தாலும், முக்கியமான எழுத்தாளர்கள் அதில் தொடர்ந்து கதையும் கவிதையும் எழுதாவிட்டாலும் அவ்வப்போது கட்டுரையாவது எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

டி.பத்மநாபனின் நல்ல நல்ல சிறுகதைகளைக் கலாகெளமுதியில் படித்துப் பழகியவர்களுக்கு இப்போது அங்கே அவர் தொடர்ந்து எழுதிவரும் வாழ்க்கை வரலாற்றில் லயிக்க முடியவில்லை. பத்மநாபன் பத்து வருடம் முன்னால் மத்திய அரசு நிறுவனமான ஃபாக்ட் உரக் கம்பெனியின் திருவனந்தபுரம் நிர்வாக அலுவலகத்தில் தளவாடத் துறை மேலாளராக இருந்தபோது நிர்வாக இயக்குனருடன் மோதிய அலுவலக விஷயங்களை எல்லாம் மெமோ, எதிர் மெமோ, விசாரணை, சம்பளப் பிடித்தம், மேல் முறையீடு என்று விலாவாரியாக எழுதித் தள்ளிக்கொண்டு இருக்கிறார். ரிடையர் ஆகிப் பென்ஷன் வாங்கும் அவருக்கு சுவாரசியமாக இருக்கக் கூடும் அதெல்லாம்.

பத்மநாபன் இருக்கட்டும். கமலா சுரையாவான மாதவிக்குட்டி சுஷ்மா சுவராஜுக்கு இணையாக – கொஞ்சம் தாமதமாக – கலாகெளமுதியில் எடுத்து விட்ட வீர வசனம் இது. ‘சோனியா காந்தி இந்தியப் பிரதமராகி அவர் ஆட்சியில் ஜீவித்து இருப்பதை விடத் தற்கொலை செய்துகொள்வதே உத்தமம் என்று நினைத்தேன். ‘

சுஷ்மாவின் தலைமுடியும், உமா பாரதியின் முதலமைச்சர் பதவியும், கமலா சுரையாவின் உயிரும் பிழைக்க ஏற்பாடு செய்த சோனியாவுக்கு நன்றி சொல்ல நினைத்தபடி கலாகெளமுதியை மூடிவைத்து டி.வியைப் போட வெங்கையா நாயுடுகாரு தீர்மானமாகச் சொல்கிறார் – பா.ஜ.க இந்துத்வாவைக் கைவிடவில்லை. விடமாட்டாது.

கமலா சுரையா அடுத்த வாரம் கலாகெளமுதியில் என்ன எழுதுகிறார் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

****

இங்கிலாந்தின் கார்டியன் பத்திரிகைக்கு அப்புராணியான மூத்த நிருபர் யாராவது இருந்து அவருக்குக் கொஞ்சம் ஓய்வாக உட்கார இடம் ஒழித்துக் கொடுத்திருக்கிறதோ என்னவோ, கொஞ்ச நாளாக கிட்டத்தட்ட தினமும் பிராணி நலச் செய்திகள் நிறையவே வருகின்றன.

லீட்ஸ் நகருக்குப் பக்கம் வளர்ப்பு மிருகங்கள் வசதியாகத் தங்க அட்டாச்ட் பாத்ரூம், ஏர் கண்டிஷன், டெலிவிஷன், ரூம் சர்வீஸ் வசதியோடு ஒரு ஹோட்டல் திறந்திருக்கிறார்களாம். நாலரை மில்லியன் பவுண்ட் செலவழித்துச் சிரத்தையாகக் கட்டி முடித்துப் போன வாரம் திறந்த இந்த ஓட்டலில் நாலுகால் விருந்தாளிகள் தங்க ஒரு நாளைக்கு இருபது பவுண்ட் தான் அறை வாடகை. கிட்டத்தட்ட நூறு மனுஷப் பிராணிகளுக்கு வெய்ட்டர், ரூம் பாய், மேனேஜர், மருத்துவர் என்று வேலை வாய்ப்பை அளிக்கும் ஓட்டல் இது.

ஓட்டல் விஷயம் இங்ஙனம் இருக்க, இங்கிலாந்து ஆராய்ச்சியாளர் ஒருத்தர் கார்ன்வால் பிரதேச வாத்துக்களின் கூவலையும், லண்டன் வாத்துக்களின் கூவலையும் கவனமாக ஆராய்ந்து, கார்ன்வால் வாத்து வட்டார வழக்கு லண்டன் வட்டார வழக்கோடு வேறுபட்டது என்று கண்டுபிடித்திருக்கிறார். லண்டன் வாத்துக்கள் சென்னைத் தமிழில் வார்த்தையை எல்லாம் சுருக்கி அவசர அவசரமாகப் பேசுவதுபோல், வேக வேகமாக ஆனால் உச்ச ஸ்தாயில் கூவுகின்றனவாம். மாநகர இரைச்சலை மீறி ஒலியெழுப்ப வேண்டியதால் சத்தம் தானாகவே கூடிப்போனதாம். ஆனால் அவற்றின் கார்ன்வால் பந்துமித்திரர்களோ, வாழ்க்கை துரித கதியில் போக வேண்டிய அவசியம் இல்லாத காரணத்தாலும், நாட்டுப் புறத்தில் இன்னும் கொஞ்சம் அமைதி மிஞ்சி இருப்பதாலும், சாவதானமாக நீட்டி நிறுத்தி, குரலைத் தாழ்த்தியே கூவுகின்றனவாம். கதவிலக்கம் பத்து, டெளனிங்க் தெரு, லண்டன் மற்றும் பக்கிங்ஹாம் அரண்மனை வளாகத்தில் எல்லாம் வாத்து வளர்க்கிறார்களா, அவை என்ன மாதிரிக் கூவுகின்றன என்று தெரியவில்லை.

முழுக்க பிராணி மயமாகாமல் மனிதர்களைக் கவுரவப் படுத்தும் செய்தியும் உண்டு. இங்கிலாந்தில் குதிரைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே நடைபெறும் வருடாந்திர ஓட்டப் பந்தயத்தில் இந்த வருடம் வழக்கம்போல் குதிரை ஜெயிக்கவில்லை. மனிதன் தான் ஜயித்தானாம். ஜோனதன் ஸ்விஃப்டின் ‘கல்லிவர்ஸ் டிராவல்ஸை ‘ பள்ளிக்கூடத்தில் நாண்டிடெய்லாகப் படித்து, அதில் வரும் குதிரை நாட்டை இன்னும் நினைவு வைத்திருக்கும் கனவான்களும் சீமாட்டிகளும் கைதூக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஒரு நாயைப் பற்றியும் கார்டியன் செய்தி உண்டு. இது இங்கிலீஷ் பேசுகிற நாய் இல்லை. டொய்ச் (ஜெர்மன்) நாய். போன வாரக் கணக்குப்படி, இருநூறு ஜெர்மன் வார்த்தைகள் தெரியுமாம். புதுசாக ஒரு வார்த்தை சொன்னால் சடாரென்று பிடித்துக் கொள்கிறதாம் – தினசரி படிப்பதால், இருநூறுக்கு மேலே போயிருக்கும் இப்போதைய கணக்கு.

சிலபல வருடம் முன்னால், தொலைக்காட்சி என்றால் சென்னைத் தொலைக்காட்சியான தூரதர்ஷன் மாத்திரம் தன்னிகரில்லாமல் கொடிகட்டிப் பறந்த காலம் உண்டு. அப்போது ஒரு ராத்திரி செய்தி அறிக்கையில் சென்னையில் ஒரு வீட்டில் பேசும் பூனை இருப்பதாகக் கவிஞர் தமிழன்பனோ ஷோபனா ரவியோ, பாத்திமா பாபுவோ செய்தி படித்ததோடு, கூடவே அந்தப் பூனையையும் வளர்க்கும் வீட்டம்மாவையும் பேட்டி வேறு கண்டார்கள். இது எல்லாம் அறிவியல் பூர்வமாகச் சாத்தியம் இல்லை என்று அறிவியலார் சொல்ல, பூனை பேசினதா இல்லை யாராவது டப்பிங்க் குரல் கொடுத்தாரா என்று பத்திரிகைகள் கலக்கல் ரிப்போர்ட் அலசல்களை அவிழ்க்க ஆரம்பிக்க, இரண்டே நாளில் பூனை செத்துப் போய்விட்டதாகச் செய்தி.

பேசக் கூடியவர்கள் பேச வேண்டிய நேரங்களில் பேச மறந்து போகிற, பேசக் கூடாததைப் பேசத் தேவையில்லாதவர்கள் பேசி வைத்துப் பூசை வாங்கும் புண்ணிய பூமியான தமிழ்நாட்டில் அதற்கப்புறம் யாரும் பூனை மொழி பற்றி வாயைத் திறக்காமல் அரசியல்வாதிகளையும் சாமியார்களையும் ஓட்டல் அதிபர்களையும் தேடிப் போய்விட்டார்கள்.

****

திரும்பத் திரும்ப எழுத அலுப்பாகத்தான் இருக்கிறது, என்ன செய்ய ? எழுத்தாளனை மதிப்பதில் மலையாளம் தமிழை விட எவ்வளவோ முன்னால் நிற்கிறது. இருந்தாலும் இறந்தாலும் எழுத்துக்காரனுக்கு அங்கே பத்திரிகைகளும் சின்னத்திரையும் அளிக்கும் கவனமும் மதிப்பும் அலாதியானவை. எழுத்தாளர் வி.கே.என் காலமானபோது ஏஷியாநெட்டிலும், கைரளி டிவியிலும் ஃப்ளாஷ் நியூஸாக அந்தச் செய்தி ஓடிக் கொண்டிருந்தது. தமிழில் அரசியல்வாதிகளுக்கும் மார்க்கெட் உள்ள, போன பெரிய நடிகர்களுக்கும் மட்டும் அளிக்கப்படும் மரியாதை அது.

ஊடகங்களின் உதவியில்லாமல், தமிழில் இரண்டு முக்கியமான எழுத்தாளர்களின் மறைவுச் செய்தியை நண்பர்கள் மூலமே அறிய வேண்டிவந்தது. முதலாமவர் காசியபன். எழுத்தாளர் ஆர்.வெங்கடேஷ் தன் நண்பர் வட்டத்துக்கு மின்னஞ்சலில் வாராவாரம் கரிசனமாக அனுப்பும் ‘நேசமுடன் ‘ என்ற இணைய இதழ் மூலம் காசியபனின் மறைவுச் செய்தி கிடைத்தது. (நேசமுடன் பற்றி சாவகாசமாகச் சொல்கிறேன்).

காசியபன் கணையாழியில் எழுபதுகளில் எழுதிய முகம்மது கதைகள் மூலம் தீவிர வாசகர்களிம் கவனத்தை ஈர்த்தவர். கி.கஸ்தூரிரங்கனோ, இந்திரா பார்த்தசாரதியோ இந்தப் பெயரில் எழுதுவதாகப் பல காலம் நினைத்தது பொய்யாக, அதை எழுதியவர் குளத்து என்ற பெயரைக் கொண்ட பாலக்காட்டுத் தமிழர் என்று அறிந்தபோது தனி மகிழ்ச்சி. இங்கிலாந்து தொலைக்காட்சித் தொடர்களில் தொடர்ந்து முதல் இடத்தைப் பிடித்து வரும் ‘ஓஃபீஸ் ‘ சீரியலைப் பார்க்கும்போதெல்லாம் அதேபோல் அலுவலகச் சூழலை இதமான நகைச்சுவையுடன் சொன்ன முகம்மது கதைகள் தமிழ்ச் சின்னத்திரையில் காட்சி ரூபத்தில் அரங்கேறினால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்ததுண்டு. அவையெல்லாம் புத்தகமாகக் கூடத் தொகுக்கப்பட்டு வந்ததா என்று தெரியவில்லை.

காசியபன் எழுதிய ‘அசடு ‘ நாவலும் குறிப்பிடத்தகுந்த படைப்பு. நாற்பதுகளின், ஐம்பதுக்களின் சற்றே பரபரப்புக் குறைந்த வாழ்க்கையைச் சொல்லும் அந்த நாவல் தமிழ்ச் சூழலில் கவனிக்கப்படாமலே போன நல்ல படைப்புகளில் ஒன்று. நாவல் மட்டும் என்ன, காசியபனையே காசியப்பன் என்று அவர் பங்குபெற்றுப் பேசிய ஒரு (ஒரே ?) கூட்ட அழைப்பிதழில் அலட்சியமும் அதனால் விளைந்த தவறுதலுமாகப் பெயர் குறிப்பிட்டிருந்தார்கள்.

அசடு காசியபன் இறந்து பத்து நாள் கழித்தே அவரைத் தெரிந்தவர்கள் அவர் இல்லாமல் போனதை அறிந்தார்கள்.

காசியபன் போல், இலங்கையின் மூத்த தமிழ் எழுத்தாளர் கே.கணேஷ் காலமான செய்தி நண்பர் ரமணீதரன் மூலம் தெரிய வந்ததும் அது நிகழ்ந்து பத்து நாள் சென்றுதான்.

லண்டன் பத்மநாப ஐயர் மூலம் கே.கணேஷ் பற்றிக் கேள்விப்பட்டதே இரண்டு ஆண்டு முன்புதான். லா.ச.ரா போல் எண்பது வயது கடந்த கணேஷ் மலையக எழுத்தாளர். பொதுவுடைமையாளர். பாரதி அன்பர். தமிழ்நாட்டில் ஐம்பதுகளில் தங்கித் தோழர் ஜீவா, தொ.மு.சி.ரகுநாதன் போன்றோரோடு இடதுசாரி இலக்கிய வளர்ச்சிக்குப் பாடுபட்டவர் அவர். இலங்கையில் அவருக்குப் பரம்பரைச் சொத்தாகக் கிட்டிய சிறிதளவேயான தோட்ட நிலத்தையும் இலக்கியப் பத்திரிகை நடத்தி இழந்தவர். படைப்பிலக்கியத்தோடு, லூசியானின் சீனக் கதைகளின் மொழிபெயர்ப்பு, ஹோசிமின் வாழ்க்கை வரலாறு என்று மொழிக்கு அணிசேர்த்தவர் எனப் பன்முக ஆளுமை கொண்ட கணேஷின் வாழ்க்கை வரலாற்றைப் பதிப்பிக்க பத்மநாப ஐயர் முயற்சி எடுத்துக் கொண்டிருப்பதாக அறிகிறோம். ஒரு கர்மயோகியாக, எந்தத் துன்பத்தாலும் துயரத்தாலும் பாதிக்கப்படாமல் எடுத்த பணியில் சற்றும் தளராது இயங்கும் ஐயருக்கு வாழ்த்துகளும் நன்றியும்.

****8

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்