மத்தளராயன்
பெங்களூர் பிரிகேட் ரோட். பிற்பகல் அந்தியாக நீளத் தொடங்கும் முன்னால் இதோ வந்தாச்சு என்று மழை இறங்குவதற்காக எடுத்துக் கொள்ளும் முன்னேற்பாடுகள் அவ்வப்போது சிறிய இடியாகவும், வினாடிகளில் தோன்றி மறையும் மின்னலாகவும், கவிந்து வரும் மேகக் கருப்பாகவும் கோடிகாட்டிப் போனபடி இருக்கின்றன.
நீலகிரி பேரங்காடிக்கு அருகே மக்கள் வெள்ளத்துக்கு முதுகு காட்டியபடி தெருவின் போக்குவரத்து இரைச்சலை ஒரு சுவாரசியமும் இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தவனுக்குப் பின்னால் தேய்ந்து போன மத்தளச் சத்தம். திரும்புகிறேன்.
ஒரு குழந்தை. சின்னஞ் சிறுமி. மிஞ்சிப் போனால் ஐந்து அல்லது ஆறு வயது இருக்கலாம். குறுகிய நடைபாதையில் நகர்ந்தபடி இருக்கும் கால்களின் தொடர்ந்த அணிவகுப்புக்கு நடுவே ஒரு சிறிய மத்தளத்தை மெல்லத் தட்டிக் கொண்டு அதன் சத்தத்தில் தானே லயித்துப் போனவளாகத் தலையை ஆட்டியபடி புழுதியில் உட்கார்ந்திருக்கிறாள். மகா ரசிகையாக இருக்க வேண்டும். வாகன இரைச்சலையும், தெருவின் இரைச்சலையும் மனதளவில் கடந்து, தமிதம் தும்தும் தமிதம் தும்தும் என்ற அந்தத் தாள லயத்தில் அவளால் அமிழ்ந்து லயிக்க முடிகிறது. பக்கத்தில் வைத்திருந்த அலுமினியத் தட்டை நடக்கிற யாரோ கவனமில்லாமல் காலால் இடறிப் போக, தானே சிருஷ்டித்த ஒழுங்கமைந்த ஒலியுலகிலிருந்து இறங்கி வந்து அந்தத் தட்டை அலட்சியமாகத் தன் பக்கம் நகர்த்திக் கொள்கிறாள். அவளைச் சுற்றி இயங்கும் எல்லாமே அவள் கட்டுப்பாடுக்குள் இருப்பதுபோல் ஒரு நிதானமும் அழுத்தமும் அந்தச் சின்னக் கண்களில் மின்னுகிறது மசங்கலாகிக் கொண்டிருக்கும் தெரு வெளிச்சத்தில் நன்றாகவே தெரிகிறது.
தெருவுக்குப் பார்வையைத் திருப்புகிறேன். இந்த ஓரம் தொடங்கி அந்தப் பக்கம் எம்.ஜி ரோடு வரை நீண்டு போகிற கார்களின் வரிசை ஒன்று ஓரமாக நிற்க, மிச்ச இடத்தில் ஒன்றன்பின் ஒன்றாக நகர்ந்து கொண்டிருக்கும் வாகனங்கள் இயக்கம் உறைந்து போனதாக ஒரு தோணல்.
என் பார்வைக்கு நேரே ஒரு பெரிய சுமோ காரில் நடுவயதுக்கு அந்தப்புறம் போன சர்தார்ஜி ஸ்டியரிங்கைப் பிடித்தபடி ஒரே பார்வையாக முன்னால் பார்த்தவண்ணம் காரில் முழங்கும் பழைய ராஜ்கபூர் இந்திச் சினிமாப்பாட்டை அனுபவித்தபடி உட்கார்ந்திருக்க, என் பக்கத்தில் நீலகிரி சூப்பர் மார்க்கெட் வாசலில் பழக்கடையை ஒட்டி நிற்கும் நெடுநெடுவென உயர்ந்த சர்தாரிணி அவரைச் சத்தம் போட்டு விளிக்கிறார்.
‘கர் கே லியே கியா ஃபல் லேனா ஹை ஜீ ? ‘
சர்தார்ஜி பாட்டு சத்தத்தைக் குறைக்காமலேயே செல்ஃபோனை எடுத்தபடி சொல்கிறார் – ‘மம்மி சே பூச்லேங்கே ‘.
நகரச் சொல்லிப் பின்னால் இருந்து கூப்பாடு போடும் ஹாரன் ஒலிகளையும், பார்க்கிங்க் டிக்கெட் வசூலிக்க நிற்கும் பையன் அவர்களை இருக்கச் சொல்லிக் கைகாட்டி விட்டு சர்தாரின் கவனத்தைக் கவர முயற்சிப்பதையும் லட்சியமே செய்யாமல் அவர் வீட்டுக்குத் தொலைபேசி எண்பதோ தொண்ணூறோ கடந்த அம்மாவிடம் என்ன பழம் வாங்கி வரட்டும் என்று கேட்டு, நடைபாதை சர்தாரிணிக்கு அறிவிக்கிறார் – அல்போன்சா மாம்பழம் வாங்கிட்டு வா.
வாழ்க்கையின் முக்கியமான முடிவு பெரியவர்களால் எடுக்கப்பட்ட நிம்மதியோடு அவர் காரைக் கிளப்பி முன்னேற, கார்களின் வரிசை நகர ஆரம்பிக்கிறது.
நான் திரும்ப நடைபாதையைப் பார்க்க, அந்தச் சிறுமி ஒரு இரும்பு வளையத்தில் தன் கால்களை நுழைத்து உடம்பைப் பாம்பு போல் அப்படியும் இப்படியும் நெளித்து வளையத்தை இடுப்புக்கு உயர்த்தி இருக்கிறாள். மத்தள ஒலியில் லயித்தபோது முகத்தில் எழுதியிருந்த அந்த முழுமுனைப்பு இப்போதும் விலகவில்லை.
வரிசையாக நகர்ந்து சாஃப்டி ஐஸ்கிரிம் சாப்பிட்டுக் கொண்டு போனவர்களில் யார் கையிலிருந்தோ தவறியோ அலுத்துப்போயோ பாதி நிறைத்த கூம்பு கீழே விழுவதற்கு முன் தொளக்கான் சட்டையும் கிழிந்த நிஜாரும் அணிந்த சின்னப் பையன் பாய்ந்து பிடிக்கிறான். அவன் இடுப்பில் இருக்கும் நக்னமான குழந்தை அதுவும் வேடிக்கைபோல என்று அழகாகச் சிரிக்கிறது. குழந்தைக்கு ஊட்டியபடி அவன் மீதி இருந்த எச்சில் சாஃப்டியை அனுபவித்துச் சாப்பிடுகிறபோது முதல் தூறல் என் கைத் தண்டையில் விழுகிறது.
அந்தச் சிறுமி இப்போது வளையத்தைக் கழுத்து வரை உயர்த்தி இருக்கிறாள். மெலிந்த உடல் சொன்னபடிக்கு ஒத்துழைக்கிறது. மத்தளமும் அலுமினியத் தட்டும் நானும் பழக்கடையில் ஆரஞ்சுப் பழம் வாங்க வந்து நிற்கும் சீன யுவதியும் தான் பார்வையாளர்கள். அந்தச் சீனப் பெண் இடது பக்கமாக மூக்குக் குத்தியிருப்பது சட்டென்று மனதில் பதிகிறது. படிக்க வந்தவளாக இருக்கும். முகத்தை ஒட்டிப் படர்ந்து கொஞ்சம் கூட முன்னால் அதிகப்பிரசங்கியாக நீளாமல் கிடக்கும் அந்த அடக்கமான மூக்கில் எப்படி இத்தனை பெரிய மூக்குத்தியைப் பொருத்த முடிந்தது ? இவள் பெய்ஜிங்க் திரும்பும்போது மூக்குத்தியோடு போனால் என்ன வரவேற்பு கிடைக்கும் ?
தெருக்கோடியில் திரும்பச் சத்தம். உடல் பருத்த பொலீஸ்காரர்கள் காட்டுப் பிரதேசக் கொள்ளைக்காரனைப் பிடிக்கிற தீவிரம் முகத்தில் தெரிய ஒருவர் இரண்டு பேராக முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். நடைபாதையில் குழந்தைகளுக்கான வண்ண முகமூடியும், மலிவு விலை உடுப்பும், கைப்பையும் மற்றதும் விற்கிறவர்கள் பரத்தி வைத்த விற்பனைச் சரக்கை அள்ளி அவசரமாகப் பாலிதீன் பைகளில் அடைத்துக் கொண்டு முன்னேறி வரும் பொலீஸ்காரர்களையே பார்த்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாகப் பதுங்கிப் பயந்து இடித்துக் கட்டிக் கொண்டிருக்கும் கட்டடத்திற்குள் ஓடி மறைகிறார்கள். உடம்பெல்லாம் துணிப்பையும், கைக்குட்டையும் காய்த்துத் தொங்க, இரண்டு தோளிலும் பெரிய சஞ்சிகளில் உள்ளாடைகள் துருத்திக் கொண்டு தெரிய மெல்லத் தெருவில் நடக்கிறவன் ஒரு கைக்குட்டையாவது வாங்கச் சொல்லிக் கேட்கிறான். அவன் தோளிலும், கையிலும் உடலிலும் சுமந்து போகிறது பையும், கைக்குட்டையும் இல்லை. குழந்தைகளும் பெரியவர்களுமாக அவனைச் சார்ந்து இருக்கிற ஒரு குடும்பம் அங்கே முகங்கள் குழம்பித் தெரிகிறது.
நான் அந்தச் சிறுமியைப் பார்க்கிறேன். வளையத்தைத் தலையில் இருந்து வெற்றிகரமாகக் கழற்றி விட்டு, தலையும், பாதங்களும் மட்டும் தரையைத் தொட வில்லாக வளைந்து அந்த வளையத்தைத் திரும்பவும் காலில் மாட்டிக் கொண்டிருக்கிறாள்.
அலுமினியத் தட்டில் நான் சட்டைப்பையிலிருந்து எடுத்த நாணயங்கள் சிலதைப் போட்டுவிட்டு நடக்க ஆரம்பிக்கிறேன். மழை நீள விழும் தாரைகளாக இறங்க ஆரம்பித்திருக்கிறது.
நான் பின்னால் திரும்பிப் பார்க்கிறேன். இடது புறம் மூக்குக் குத்திக் கொண்ட அந்தச் சீனப் பெண் கையில் பிடித்த ஆரஞ்சுப் பழப் பொதியோடு என்னைக் கடந்து விரைவாக நடந்து போகிற போக்கில் சிறுமியின் தட்டில் ஆரஞ்சுப் பழம் ஒன்றைப் போடுகிறாள். வளையம் இடுப்புவரை வந்திருக்கிறது. அந்தக் குழந்தை தன் வித்தையில் மூழ்கியிருக்க, ஒலியில்லாத மத்தளத்தின் பரப்பில் மழைத்துளிகள் சாய்வாக இறங்கிக் கருப்புத் திட்டுக்களாகப் படிகின்றன.
எனக்கு முன்னால் ஒதுங்கி நனைய ஆரம்பித்து நிற்பவன் பக்கத்துத் தாழ்வாரத்தில் ஒண்டுவதற்கு முன்னால் இன்னொரு தடவை நம்பிக்கையோடு கேட்கிறான் – சார், கர்ச்சீப் வேணுமா ?
****
கேரளத்திலிருந்து நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஒரு காங்கிரஸ் தலைவரும் தேர்ந்தெடுக்கப்படாமல் போய் இடது சாரிகள் கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் வெற்றிவாகை சூடியிருக்கிறார்கள். தேசிய அளவில் கம்யூனிஸ்ட் – காங்கிரஸ் நட்புக் கரங்கள் அரிவாளையும் சுத்தியலையும் இறுகப் பற்றிக் கொண்டிருக்க முக்கிய இடதுசாரிப் பேச்சாளரான தோழர் சோம்நாத் சாட்டர்ஜி பேச்சிலராக லோக்சபை சபாநாயகரானபோது கேரளத்தில் இன்னும் எதிர் எதிர் அணியில் தான் இரண்டு கட்சியும்.
நாடாளுமன்றத் தேர்தலின் போது வி.எஸ். அச்சுதானந்தன் போன்ற மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்களையே தடுமாற வைத்தது இந்த ‘மத்தியில் உறவுக்குக் கைகொடுப்போம் – மாநிலத்தில் எப்பவும் போல் மோதிக் கொண்டிருப்போம் ‘ பாலிசி. மலையாள பூமி முழுக்கச் சுற்றிப் புயல் வேகச் சுற்றுப்பயணமாக வந்து ஆன்றணியின் காங்கிரஸ் ஆட்சியைப் போகிற இடமெல்லாம் ஒரு பிடி பிடித்த தோழர் வி.எஸ் அப்படியே கேரளத்தில் மாஹிக்குப் போய்ச் சேர்ந்து பொதுக்கூட்டத்தில் வழக்கம்போல் அரைமணி நேரம் காங்கிரஸை வைத்துக் காய்ச்ச, பின்னால் இருந்து யாரோ துண்டு சீட்டு அனுப்பினார்கள்.
பிரித்துப் பார்த்த தோழர் ஒரு வினாடி அமைதியானார். சிவப்புத் துண்டால் முகத்தை அழுத்தத் துடைத்துக் கொண்டார். அப்புறம் கூட்டத்தைப் பார்த்துச் சொல்லியது – ‘நான் இதுவரைக்கும் பேசினதை எல்லாம் மறந்துடுங்க. புதுசா ஆரம்பிக்கறேன். ‘
இருக்காதா பின்னே ? புதுவை யூனியன் பிரதேசமான மாஹியில் காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒரே கூட்டணியில் இல்லையா இருப்பது ?
அழிச்சுடுங்க என்று சொன்னால் மனதிலிருந்து அழித்து விட்டு புதுசாகக் கேட்கவும் நம்பவும் நம்ம நாட்டில் காதுகளுக்குப் பஞ்சமே இல்லையாக்கும்.
____
கோளரங்கத்திற்குப் போகிறவர்கள் சுக்கிரனையும் செவ்வாயையும் சூரியனையும் புதனையும் பற்றி அறிந்து கொள்ளப் போவார்கள். ஆன்றணியும் அவரைச் சார்ந்தவர்களும் போனது வானியல் படிக்க இல்லை. அரசியல் பாடத்தை அலச.
அவர்கள் போனார்களே என்று திருவனந்தபுரம் பிளாணடேரியத்துக்குத் தாங்களும் புறப்படுவதற்கு முன் மாஜி கேரள மாநில காங்கிரஸ் பொதுக்காரியதரிசிகளான ராஜ்மோஹன் உண்ணித்தானும் சரத் சந்திர பிரசாத்தும் கோளறு திருப்பதிகமாவது பாராயணம் செய்துவிட்டுப் போயிருந்தால் நிலைமை கோளாறாகி இருக்காது.
நாடாளுமன்றத் தேர்தலில் வரலாறு காணாத தோல்வியைச் சந்திக்கக் காரணம் என்ன என்று ஆராய, திருவனந்தபுரம் பிரியதர்சினி கோளரங்கத்தில் போன வாரம் கேரள பிரதேச காங்கிரஸ் நிர்வாகக் குழுவின் கூட்டத்தை வைத்திருந்தார் ஏ.கே.ஆன்றணி. கட்சியிலிருந்து விலக்கப்பட்டு அப்புறம் கடைசி நிமிடத்தில் திரும்பச் சேர்க்கப்பட்ட ராஜ்மோஹனுக்கும் சரத்துக்கும் இந்தக் கூட்டத்துக்கு அழைப்பு இல்லை.
ஆனாலும் என்ன ? சம்மன் இல்லாமல் ஆஜர் ஆகி, லீடர் கருணாகரனும் ஆன்றணியும் சேர்ந்து கட்சிக்கு உலை வைத்து விட்டார்கள் என்று மேடையில் முழங்க ராஜ்மோஹனும் சரத்தும் கோளரங்கம் போய்ச் சேர்ந்தார்கள்.
அங்கே அவர்களை வெற்றிலை பாக்கு வைத்துப் பன்னீர் தெளித்து வரவேற்க ஒரு பெரிய கூட்டமே காத்திருந்தது. வெற்றிலை பாக்குப் போட்டது போல் வாயும் மூக்கும் சிவந்து ரத்தம் ஒழுக அடித்து, ராஜ்மோஹனின் வேட்டியை உருவி அதைக் கிழித்துக் காருக்கு வெளியே பீஸ் பீஸாகப் பறக்க விட்டார்கள் அந்தக் கூட்டத்தினர். நிகழ்ச்சியைப் படம் பிடித்த டி.வி, பத்திரிகை காமிராக்காரர்களையும் பயமுறுத்தும் விதமாகக் கோளரங்கப் பூத்தொட்டிகளை அங்கேயும் இங்கேயும் வீசியெறிந்து வெறியாட்டம் ஆடிவிட்டு, வந்த சுவடு தெரியாமல் ஓடியே போனார்கள் எல்லோரும்.
எல்லோரும் அவரவரைத் தவிர வேறு எல்லோரையும் குற்றம் சொல்லிக் கொண்டிருக்க ராஜ்மோஹனும், சரத் சந்திரப் பிரசாத்தும் இன்னும் மருத்துவமனையில் கார்பனேட் மிக்சர் குடித்தபடி படுத்திருக்கிறார்கள்.
ஆனாலும் கேரள காங்கிரஸ் வட்டாரத்தில் சொல்லப்படுவது இது –
கட்சிக் கூட்டத்தில் அவ்வப்போது இப்படிச் ‘சலசலப்பு ‘ ஏற்பட்டுக் கட்டியிருந்த கதர் வேட்டி பறி போகிறது வழக்கமாக நடக்கிற காரியம் தான். இதுவரை இப்படி உடுக்கை இழந்தவர்கள் எல்லோரும் அடுத்தடுத்து கட்சியில், மாநில, மத்திய ஆட்சியில் நல்ல நிலைமைக்கு வந்து சீரும் சிறப்புமாகத்தான் வாழ்ந்திருக்கிறார்கள். ராஜ்மோஹனுக்கும் இனிமேல் அப்படியான நல்ல காலம் காத்திருக்கிறது.
இந்திராவின் எமர்ஜென்சி ஆட்சி முடிந்து மொரார்ஜி தலைமையில் ஜனதா ஆட்சி வந்த 1977 நினைவுக்கு வருகிறது. அப்போது சென்னையில் ஜனதா கட்சிக் கூட்டத்துக்கு வந்த கேரள ஜனதா தலைவர் தம்பான் தாமஸின் வேட்டியை சென்னை ஜனதாவைச் சேர்ந்த நந்தமிழர்கள் உருவிக்கொண்டு போன செய்தியைப் பத்திரிகையில் படித்தது நேற்று நடந்ததுபோல் இருக்கிறது.
தம்பான் தாமஸ் அப்புறம் மாநிலத்திலோ மத்தியிலோ பெரிய அளவில் வரவில்லை. அவர் காங்கிரஸ்காரராக இல்லாததால் வேட்டி ஜோசியம் பலிக்காமல் போயிருக்கலாம். ஆனாலும் அதற்கு அப்புறம் தம்பான் சென்னைக்கு வந்ததாகத் தகவல் இல்லை.
மத்தளராயன்
- உலகத் தமிழ் குறும்பட/ஆவணப்பட விழா-கனடா டோரோண்டோவில்
- சமீபத்தில் வாசித்த நூல்கள் 5 – மூவாலூர் ராமாமிர்தத்தம்மாள் , ராஜமார்த்தாண்டன் , எர்னெஸ்ட் ஹெமிங்வே (தமிழ் எம் எஸ்) , சுஜாதா
- இசை கேட்டு…
- பிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன் – ழான்-நோயெல் பங்க்ராஸி (Jean-Noel Pancrazi)
- வண்ணாத்திக்குளம்-குறுநாவல்-ஒரு வாசகாின் கண்டோட்டம்
- மெய்மையின் மயக்கம்: தொடர்ச்சி – 3
- நியூயார்க் சந்திப்பு: கவிஞர் கே. சச்சிதானந்தன்
- நியூயார்க் சந்திப்பு: கவிஞர் பாலா
- ஆட்டோகிராஃப் ‘மூத்தவள்(ன்) நீ கொடுத்தாய் ‘
- கடிதங்கள் – ஜூன் 10,2004
- கடிதம் ஜூன் 10, 2004
- கடிதம் ஜூன் 10, 2004
- அஜீரண மருந்துகள் உணவு ஒவ்வாமையை அதிகரிக்கலாம்
- கடிதம் ஜூன் 10,2004
- கடிதம் ஜூன் 10 ,2004
- கடிதம் – ஜூன் 10,2004
- வண்ணத்துப்பூச்சி விளையாட்டு….
- எலக்ட்ரான் எமன்
- கவிதைகள்
- மல மேல இருக்கும் சாத்தா.
- வாழ்வைப் பறிக்கும் பூச்சிக்கொல்லிகள்
- பூச்சிக்கொல்லி பாதிப்புகள்
- நஞ்சில் விளையும் பருத்தி
- இந்தியாவில் பூச்சிக்கொல்லிகள்
- கடிக்காமல் விடுவேனோ ?
- முகமிருக்கையில் முகமூடி எதற்கு ?
- போர்வை
- பூச்சி மருந்து தெளித்துவிட்டுப் போனவர்
- பெண் ஒன்று கண்டேன்
- நீலக்கடல் -(தொடர்) – அத்தியாயம் – 23
- மனிதன் பிறந்தபின் கடவுள் பிறந்தார்
- வாரபலன் – ஜூன் 10,2004 – தெருவில் மலரும் கலைகள் , மறந்துடுங்க வேறே கூட்டணி , வேட்டி போச்சு வேகம் வந்துச்சு
- ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 6)
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 8
- சென்ற வாரங்களில் 10-6-2004 (குற்ற மந்திரிகள், கட்டற்ற சோனியா, ரொனால்ட் ரீகன், டார்ஃபார் அவலம்)
- சூடானின் டார்ஃபர் குழந்தைகள் பசியால் இறக்கிறார்கள்
- பிறந்த மண்ணுக்கு – 5
- தமிழவன் கவிதைகள்-ஒன்பது
- தீந்தழல் தோழியொருத்தி…!!!
- அம்மாவின் கடிதம்!
- நாத்திக குருக்கள்
- கவிக்கட்டு 10 -கதையாகிப் போனவளே !
- பறத்தல் இதன் வலி
- நிழல்
- பாரதத்தில் முன்னேறி வரும் பூதக் காற்றாடி யந்திர மின்சக்தித் துறைகள் [Giant Wind Power Development in India]
- தேனீ – அடை கட்டுமானமும் தற்காப்பும்
- தாய்மை – ஒரு உளவியல் பரிசோதனை
- புதிய உயிரினம் பிறப்பதை அறிவியலாளர்கள் கண்ணெதிரே பார்க்கிறார்கள்