மத்தளராயன்
தோழர் நாயனார் காலமானார்.
ஏரம்பால கிருஷ்ணன் நாயனாரைப் பற்றிய கலைடாஸ்கோப் பிம்பங்களாக அடுக்கடுக்கான நினைவுகள்.
அசல் கண்ணூர் மலையாளத்தில் எந்தத் தலைவரையும் பற்றி ‘ஓன் ‘ (அவன்) என்று குறிப்பிடும் சகஜம், யார் எத்தனை சொல்லியும் கவலையே படாமல் தோழர் ஈ.எம்.எஸ் நம்பூதிரிபாட்டைக் கட்சிக் கூட்டத்தில் குறும்பாக ‘திருமேனி ‘ என்று உரக்க விளித்து உற்சாகமாக உரையாடும் நாயனார்.
அவரை நல்ல வண்ணம் அறியாதவர்கள் அவருடன் கைரளி டிவியில் உரையாடத் தொலைபேசியில் அழைக்கும்போது கொஞ்சம் பயப்பட வைக்கும் கனமான குரலும் நரைத்த கட்டை மீசையும் கனத்த பிரேம் போட்ட மூக்குக் கண்ணாடியுமாக ‘ஆரா விளிக்குன்னு ? கொல்லத்தில் நின்னா ? ஆய்க்கோட்டே. எந்தா வேண்டது ? ‘ என்று பொறுமையிழந்ததாகத் தோன்ற வைக்கும் முகபாவத்தோடு சொல்லி, அடுத்த நிமிடம் குலுங்கிச் சிரிக்கும் தோழமையுள்ள நாயனார்.
திருவனந்தபுரம் தர்பார் ஹாலில் போன வியாழக்கிழமை அதே கட்டை மீசையும், மூக்குக் கண்ணாடியுமாகக் குரலும் உயிரும் விலகிப் போய்ப் பேழையில் கிடத்தப்பட்ட நாயனார். அவர் மார்பின் மேல் மடித்து வைக்கப்பட்ட, அவர் உயிருக்கு உயிராக நேசித்து வளர்த்த, கம்யூனிஸ்ட் கட்சியின் தினப்பத்திரிகையான தேசாபிமானி. தர்பார் ஹாலுக்கு வெளியே பெருமழைக்கு அஞ்சாமல் நனைந்தபடியும் குடையோடும் மலைப்பாம்பாக நீளும் வரிசையில் சமூகத்தில் சகல நிலைகளிலும் இருக்கப்பட்ட மக்களின் பெருங்கூட்டம்.
கூட்டத்தை விட்டுச் சற்றே விலகி, நாயனாருடன் ஒரு காலத்தில் கட்சியில் முக்கியத் தலைவராக இருந்து அப்புறம் பிரிந்து ஏ.கே. ஆன்றணி அமைச்சரவையின் பங்கு பெற்றிருக்கும் கெளரி அம்மாளும், எம்.வி.ராகவனும் நிற்கிறார்கள்.
நாயனாரா ? மனுஷர் சாப்பாட்டுப் பிரியராச்சே. அதுவும் ஸ்வீட்டுன்னா எங்கே எங்கேன்னு அலைவாரே ? கட்சிப் பொதுக்குழுவுக்குக் கிளம்பிப்போக எல்லோரும் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்ததும் ‘சாப்பிட என்னப்பா இருக்கு ? ‘ என்று விசாரிக்க ஆரம்பித்துவிடுவார் என்கிற ராகவனிடம் கெளரி அம்மாள் சொல்கிறார் – ‘நீரிழிவு வியாதி வந்தா அப்படித்தான் அகோரப் பசி எடுக்கும் ‘.
(தோழர் ஜீவாவுக்கும் நீரிழிவு உண்டு. அவரைப் பெருந்தீனிக்காரனாகச் சித்தரித்துத் தமிழில் ஒரு நாவல் கூட வந்திருக்கிறது).
சுதந்திரப் போராட்டக் காலம். திருவிதாங்கூர் அல்லாத கரையோரப் பிரதேசங்கள் பிரிட்டாஷ் ஆட்சிக்கு உட்பட்டிருந்தபோது நிகழ்ந்த அரசு எதிர்ப்பு இயக்கமான கையூர் சமரத்தில் ஈடுபட்டு, அரசு அலுவலரான போலீஸ்காரரைக் கொலை செய்த வழக்கில் மூன்றாம் எதிரியாகக் குறிப்பிடப்பட்டுத் தேடப்படுகிறார் நாயனார். நாள்கணக்கில் இளநீரில் ஊறவைத்த அவலை மட்டும் உண்டபடி காலில் புரையோடிய புண்ணையும், கடும் பசியையும் தாகத்தையும் பீடிப் புகை வலித்துத் தாங்கிக் கொண்டு ஒரு சிவந்த புலர்காலப் பொழுதுக்காகக் காத்திருந்தபடி நெடிய தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்ட அந்த நாயனாருக்குச் சாப்பிடப் பிடிக்கும்தான். யாருக்குத்தான் பிடிக்காது ?
நாயனார் கையூர் சமரத்தில் ஈடுபடவே இல்லை என்று பின்னால் ஒரு கூட்டம் பிரசாரம் செய்ய ஆரம்பித்தபோதும் (போலீஸின் இறுதிக் குற்றப் பத்திரிகையில் அவருடைய பெயர் இல்லையாம்) அவருடைய பங்களிப்பு அப்புறம் சந்தேகத்து இடமில்லாமில்லாமல் நிரூபிக்கப்பட்ட போதும், அதைப் பற்றிக் கோபமோ, மகிழ்ச்சியோ காட்டாமல் ஒரு புன்சிரிப்போடு ‘டோ, ‘நீக்கறியல்லே அதொண்ணும் ‘ என்று புறங்கையை அசைத்துவிட்டுப் போன நாயனார்.
கட்சிக் கூட்டத்தில் ஓர் அகில இந்தியத் தலைவர் (தற்போதைய காலகட்ட கிங் மேக்கர்களில் ஒருவர்) வீர உரை நிகழ்த்த முற்பட்டபோது, பக்கத்து நாற்காலியில், மைக்கில் தான் பேசுவது விழுந்து ஒலிபரப்பாகும் என்ற நினைவே இல்லாமல், ‘அது சரி, வச்சுக் காய்ச்சு. ‘ம்ப்ட ‘ங்கள் கேள்கட்டே. உனக்கு உங்க ஊர்லே நாலு தாடிக்காரங்களைக் கட்சியிலே இழுத்துப் போட முடியலே. சும்மா சித்தாந்தம் பேசிக்கிட்டு தில்லியிலே குந்திக்கிட்டு இருந்தாப் போதுமா ? ‘ என்று உரக்க முணுமுணுத்த நாயனார்.
மலையாளக் கவிதாயினியும், ஐபிஎஸ் அதிகாரியுமான சந்தியா திருச்சூரில் டி.எஸ்.பியாகப் பொறுப்பேற்று முதலமைச்சர் நாயனார் பேசும் கூட்டத்தில் பாதுகாப்பு அளிக்கப் போனபோது, பிரசங்கம் செய்து கொண்டிருந்த நாயனார் அவரைப் பார்க்கிறார். பேசியதைப் பாதியில் விட்டுவிட்டு, ‘திருச்சூர் ஜனங்களுக்கு நிம்மதி. கைக்கூலி வாங்காத பெண் டி.எஸ்.பி இல்லியா உங்களுக்கு இப்போ ? அதுக்காக ரொம்பப் பெருமைப் பட்டுக்க வேணாம். சீனாவுக்குப் போயிருந்தபோது அங்கே பயணம் முழுக்க எனக்குப் பாதுகாப்பு கொடுத்தது பெண் போலீஸ் தான். அவங்களோட ஒப்பிடும்போது இங்கே பெண்கள் இப்படிப் பதவி வகிக்கறது ரொம்பக் குறைச்சலாக்கும். ‘
தேசாபிமானியில் ஃப்ரூப் ரீடராகத் தொடங்கி, பத்திரிகையாளராகவும், தீவிரவான படிப்பாளியாகவும், ‘சகாவு லெனின் ‘, ‘காலத்தின்றெ கண்ணாடி ‘ போன்ற புத்தகங்களின் ஆசிரியருமான நாயனார். திருவனந்தபுரம் ஏ.கே.ஜி செண்டரில் (கட்சியின் தலைமை அலுவலகம் இது) பதினெட்டாம் எண் அறையில் ஊரில் அச்சுப்போடும், வந்து சேரும் எல்லாப் பத்திரிகைகளும் வேணும் என்று பிடிவாதம் பிடித்து வாங்கி வரிவிடாமல் படிப்பது மட்டுமில்லாமல், பத்திரிகைக்கு நடுவே செருகி வைத்த பிட் நோட்டாசுகளையும் வாசிக்கத் தவறாத முன் முக்கியமந்திரி நாயனார்.
வாட்டிகனில் போப்பாண்டவரைச் சந்தித்தபோது அவர் விவிலியத்தைப் பரிசாகத் தர, பதிலுக்கு மாத்ருபூமி பதிப்பித்த பகவத்கீதையைக் கொடுத்த நாத்திகரும், மாத்ருபூமிக்கு எதிரணியில் முன் நிற்கும் தேசாபிமானியின் ஆசிரியராகவும் இருந்த நாயனார்.
அறுபத்தேழில் பாலக்காடு தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகவும், எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் மலம்புழயிலிருந்தும் தலைச்சேரியிலிருந்தும் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்து, இந்தத் தேர்தலில் வாக்களிக்க முடியாத ஏமாற்றத்தை வெளிப்படுத்தியபடி தில்லிக்கு சிகிச்சைக்குப் புறப்பட்டுப்போன நாயனார். நெருக்கடி நிலைப் பிரகடனத்தைக் கடுமையாக எதிர்த்த தன் நெருங்கிய தோழரும் அரசியல் தலைவருமான ஏகேஜி என்ற ஏ.கே.கோபாலன் அந்தக் காலகட்டம் முடிந்த நேரத்தில் அதை அறிய முடியாமல் உயிர் விட்டது போல், அறுபத்தி இரண்டு இடத்தை இந்த லோக்சபையில் இடதுசாரிகள் வென்ற செய்தி வெளிவந்தபோது அது தெரியாமலேயே உயிர் துறந்த நாயனார்.
கட்சிப் பணியிலும் கட்சி தடைசெய்யப்பட்ட போதெல்லாம் தலைமறைவு வாழ்க்கை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திலும் இடைக்கிடை சிறை வாழ்க்கையிலுமாகக் குடும்பம், திருமணம் பற்றி எல்லாம் நினைக்க நேரமில்லாமல் போய், நாற்பதாவது வயதில் சாரதா டாச்சரைக் கல்யாணம் செய்து கொண்ட நாயனார். கேரள சரித்திரத்திலேயே அதிகக் காலம் (கிட்டத்தட்ட பனிரெண்டு வருடம்) முதலமைச்சராகக் கணவர் இருந்தாலும், தன் உத்தியோகத்தை விடாமல் தொடர்ந்து ரிடையரான சாரதா டாச்சர் ‘சாரதேஎஎஎ ‘ ன்னு நீட்டி முழக்கிப் பிரியமாய் ஒரே ஒரு தடவை கூப்பிட மாட்டாங்களா ‘ என்று அவருடைய உடல் வைத்திருந்த திருவனந்தபுரம் தர்பார் ஹாலில் கண்ணாடிப் பேழையை அணைத்தபடி குமுறிக் குமுறி அழ, ஒரு அனக்கமும் இல்லாமல் அந்திம உறக்கத்தில் ஆழ்ந்திருந்த நாயனார்.
நல்ல பேனாக்கள், வெயில் சுட்டெரிக்கும்போதும் சட்டைக்கு மேல் அணியும் பாதி கோட், நல்ல சாப்பாடு, பால் பாயசம், கால் பந்து விளையாட்டில் ஈடுபாடு, நாய் வளர்ப்பு, வெளிநாடு போனால் அணிந்து போக ஒரு சூட் என்ற சின்னச் சின்ன ஆசைகள் கொண்ட நாயனார். கண்ணூர் கல்லியாசேரியில் சாரதா டாச்சர் கட்டிய நடுத்தர வீட்டில் ஒரு அறை முழுக்கத் தான் படிக்க வேண்டிய புத்தகங்களை வாங்கி அடுக்கி வைத்த நாயனார். சீக்கிரம் எம்.பி பென்ஷன் கிடைத்து அந்த வீட்டில் நிரந்தரமாகக் குடியேறித் தீவிர அரசியலிலிருந்து சற்றே விலகிக் குடும்பத்தோடும் புத்தகங்களோடும் மிச்ச வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்ற கனவு நிராசையாகிப் போன நாயனார்.
திருவனந்தபுரத்திலிருந்து திருச்சூர், தலைச்சேரி மார்க்கத்தில் இரண்டு நாள் பயணமாக அவருடைய உடல் தகனத்துக்குக் கண்ணூர் வந்து சேர்வதற்குள் வழிநெடுக மழையில் சொட்டச் சொட்ட நனைந்து இரவெல்லாம் விழித்துக் கேரளமே காத்து நின்றது. ஏ.கே.கோபாலன், ஈ.எம்.எஸ் நம்பூதிரிபாட் போன்ற மற்ற முக்கியமான கேரள அரசியல் தலைவர்களுக்குக் கூடக் கிடைக்காத அத்தகைய அன்பும் நேசமும் மரியாதையும் கிட்டிய மக்களுக்கு நெருக்கமான மக்கள் தலைவர் நாயனார்.
அரபிக் கடலின் அலைகள் வெகு அருகில் முழக்கமிட்டுக் கொண்டிருக்க, தென்னை மரங்களும் செடிகொடிகளுமாகப் பசுமை விரியும் தன் மனதுக்குப் பிரியமான நிலப்பரப்பில், ஏகேஜி, அழிக்கோடன் ராகவன் போன்ற மனதுக்குப் பிரியமான தோழர்கள் வெந்தடங்கிய பய்யாம்பலம் மயானத்தில் மலையாள மண்ணோடும் நீரோடும் காற்றோடும் கலந்து போன நாயனார்.
‘முத்தச்சா லால் சலாம் ‘. தொலைக்காட்சியில் தனக்கு மழலையில் வணக்கம் சொன்ன குழந்தையோடு குழந்தையாக உற்சாகத்தோடு முட்டி மடக்கி லால் சலாம் என்று தளராத குரலில் முழக்கமிட்ட எண்பத்தாறு வயதான நாயனார்.
சகாவே, லால் சலாம்.
****
இருநூற்று பதினெட்டு டாலர், முப்பத்திரெண்டு செண்ட். கிட்டத்தட்டப் பத்தாயிரம் ரூபாய் ? வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும் ? தேவையை உத்தேசித்து அக்ஷய திரிதியைக்கு ரெண்டு பவுனோ, ஒரு சிறிய சைஸ் டிவியோ, பழைய லாம்பி ஸ்கூட்டரோ வாங்கலாம்.
ஜோனதன் கவெட் இந்த இருநூற்றுப் பதினொட்டு சொச்சம் டாலர் செலவழித்து எடுத்தது டார்னேஷன் என்ற திரைப்படம். பழைய குடும்பப் புகைப்படங்களையும், வீட்டு வீடியோவில் இருபது வருடம் முன்னால் எடுத்த பதிவுகளையும் ஆப்பிள் மெக்கிண்டோஷின் ஐமூவி மென்பொருளை உபயோகித்துப் பாந்தமாக இணைத்து அவர் உருவாக்கிய படம் சொந்தக் கதை, சோகக் கதையைச் சொல்வது. குடித்து விட்டு வந்து அம்மாவை அடிக்கிறவரும், மகனுக்கு முன்னால் அவளைப் பலாத்காரம் செய்கிறவருமான அப்பா, சித்தப்பிரமை ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் எலக்டிரிக் ஷாக் சிகிச்சை கொடுக்கப்படும் அம்மா என்று போகும் இந்ப் படம் போன வாரம் கேனில் நடந்த சர்வதேசத் திரைப்பட விழாவில் கவனிக்கப்பட்டதோடு, கமர்ஷியலாகவும் வெற்றி பெற்றிருக்கிறது.
இயக்குனர் தான் பள்ளியில் படிக்கும்போது நடித்த நாடகத்தில் வந்த தேவதை பொருத்தியிருந்த சிறகுகளைச் சினிமாவுக்காக இன்னொரு தடவை உருவாக்காமல் இருந்திருந்தால் இந்த இருநூறு டாலர் செலவு கூட ஏகமாகக் குறைந்திருக்குமாம்.
படம் அமெரிக்காவில் விலை போய்விட்டதாகவும், பிரிட்டனில் விற்க ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் கார்டியன் பத்திரிகை சொல்கிறது.
பெரும் செலவு செய்து தமிழிலும் இந்தியிலும் தயாரித்த ஆய்த எழுத்தையும் யுத்தையும் வெளியிட்டு விட்டு நகத்தைக் கடித்துக் கொண்டிருக்கும் மணிரத்னம் பற்றி போன வாரம் எகனாமிக் டைம்ஸும் இந்தியன் எக்ஸ்பிரஸும் விரிவாக எழுதியிருக்கின்றன.
****
நாலு வருடம் முன் விகடன் இண்டர்நெட் காலத்தில் மத்தளராயன் (அச்வினாக) ஆலிவுட் இயக்குனர் பிரான்சிஸ் கொப்பொலாவின் இணையத் தளம் பற்றியும், சிறுகதை வளர்ச்சி குறித்த அவருடைய ஈடுபாடு குறித்தும் எழுதியிருந்ததை நினைவு வைத்திருக்கும் நண்பர்களையும் அவர்களின் சந்ததியினரையும் காட் ஃபாதர் (ஒண்ணு,ரெண்டு, மூணு..) காத்து ரட்சிக்கட்டும்.
இடைப்பட்ட காலத்தில் சினிமா, சிறுகதையோடு கொப்பொலா கலிபோர்னியாவில் ஒயின் தயாரிப்பதிலும் மும்முரமாக இறங்கிப் பெருவெற்றி பெற்றதாகத் தகவல்.
இப்போது மறுபடி கொப்பொலா செய்தியில் கடந்த வாரம் வந்திருக்கிறார். லத்தீன் அமெரிக்க நாடான கவுதமாலாவின் பக்கத்து பெலைஸில் ‘ஆமை இல்லம் ‘ என்ற பெயரில் ஒரு தங்கும் விடுதி த்ிறந்திருக்கிறார். கரிபீயக் கடலோரம் சக்கைப் போடு போட ஆரம்பித்திருக்கிறதாம் கொப்பொலாவின் புதிய படைப்பு.
தமிழில் ஓட்டல் நடத்திய திரைப்படத் துறையைச் சேர்ந்த ஒருவர் அந்தக்கால நகைச்சுவை நடிகர் ஏ கருணாநிதி. அறுபதுகளின் இறுதியில் அவர் சென்னையில் நடத்திய ஓட்டலின் பெயரே வித்தியாசமானது – ‘ஓட்டல் மாமியா ‘.
மாமியார் வீட்டுச் சாப்பாடு போல் சுவையான உணவு என்பதால் இப்படிப் பெயர் வைத்ததாகச் சொன்ன கருணாநிதி அவர் நடித்த படத்தில் எல்லாம் உலகம் புரியாத அப்பாவியாக வருவது வாடிக்கை. ஆனாலும் மாமியா ஓட்டலில் அந்தக் காலத்திலேயே தொழில் நுட்பத்தைப் புகுத்தியவர் அவர். சமையல்கட்டில் சரக்கு மாஸ்டர்களுக்கு டேபிளிலிருந்து ஆர்டரைச் சொல்ல வாக்கி டாக்கிகளை உபயோகித்த புதுமை அது.
கொப்பொலா ஓட்டலில் தொலைபேசியே கிடையாது. அறைக்குள் இருந்து ரிசப்ஷனைக் கூப்பிட வேண்டும் என்றால் செல் ஃபோனை அல்ல, ஷெல் ஃபோனைத் தான் உபயோகிக்க வேண்டும். அதாவது மேஜையில் வைத்திருக்கும் வெண்சங்கை எடுத்து – இல்லை, அதைக்கஷ்டப்பட்டு ஊதிச் சேகண்டி எல்லாம் அடித்துச் சாப்பாடு கொண்டு வரச் சொல்லிக் கூப்பாடு போட வேண்டாம் – பேசினால் போதும். உள்ளே என்ன இருக்கு, சொல்லாழி வெண்சங்கே என்று கேட்டால், மறைவாகப் பொருத்தி வைத்த சிறிய இண்டர்காம் என்று பதில் வரக்கூடும்.
கொப்பொலா ஓட்டலில் இது தவிர வேறே தொழில்நுட்ப சாதனங்களான டெலிவிஷனோ, டேப் ரிக்கார்டர், வானொலி, டிவிடியோ கிடையாது. ஓனர் எடுத்த பிரபலமான திரைப்படங்களாவது அவ்வப்போது திரையிடப்படலாம் என்று எதிர்பார்த்துப் போனால் ஏமாற்றம் தான். நீச்சல் குளம், ஸ்பா போன்ற சமாச்சாரங்களும் ‘வசதிகள் ‘ லிஸ்டில் இல்லை. சுற்றி இயற்கைச் சூழலில் நுங்கும் நுரையும் சுழியுமாக வெள்ளப் பெருக்கு இருக்கிறபோது அம்மா குளி, அய்யா குளி என்று வருந்தி அழைச்சு நீச்சல் உடை மாட்டி விட்டு குளோரின் போட்ட தண்ணீரில் தள்ள எதுக்கு நீச்சல் குளம் ? வெளியிலே தண்ணீரில் ஆனந்தமாக நீந்தி விளையாடிக் குளித்து அறைக்கு வந்தால், உள்ளே திருப்தியாக இறக்க இருக்கவே இருக்கிறது கொப்பொலாவின் பதினைந்து ஸ்பெஷல் பிராண்ட் ஒயினும். புள்ளிக்காரனின் கலிபோர்னியா தொழிற்சாலையிலிருந்து வருத்தியது அதெல்லாம்.
ஆனாலும் முழுக்க முழுக்க கமர்ஷியலாக இல்லாமல், அவ்வப்போது தன்னுடைய மற்றைய ஈடுபாடான சிறுகதை வளர்ச்சிக்கும் கொஞ்சம் போல் ஆமை விடுதியில் இடம் கொடுத்திருக்கிறார் கொப்பொலா. அவ்வப்போது இங்கே சிறுகதை எழுதுவது எப்படி என்று எழுத்துப் பட்டறை நடப்பதோடு, ஓட்டல் தனிச் சுற்றுப் பத்திரிகையில் தொடர்ந்து கொப்பொலா எழுதி வருகிறாராம்.
ஆமை ஓட்டல் இருக்கட்டும், ஆமை வேகத்தில் சர்வ் செய்யும் எங்களூர் பெங்களூர் மாவலி டிஃபன் ரூம்ஸ் என்ற எம்.டி.ஆர் பற்றி எழுதாமல் இதை பூர்த்தி செய்ய முடியாது.
ஒரு பத்து வருடத்துக்கு முன்னால் கூட சுத்தமான உணவு விடுதியாக இருந்தது எம்.டி.ஆர். வாசலில் கல்பகோடி காலம் காத்திருந்தால், உள்ளே இடம் கிடைக்கும். கடுக்கன் போட்ட வெயிட்டர்கள் அக்கறையாக விசாரித்து இட்லி – நெய், தோசை – நெய், உப்புமா – நெய், பொங்கல் – நெய், பூரி – நெய், சாப்பிட்டதற்கு பில் – நெய் என்று எதைக் கேட்டாலும் சின்னக் கிண்ணத்தில் கமகமவென்று பசுநெய்யையும் கூடவே கொண்டுவந்து வைத்துவிடுவார்கள். காப்பியாகப்பட்டது சூடாக, கடித்துச் சாப்பிடுகிற பதத்தில் இருக்கும். ஒரு காலை நேரத்தில் போய்ப் பசியாறினால் பக்கத்து லால்பாக்கில் நேர்ந்து கொண்டது போல் இருபது தடவை சுற்றி ஓடி வந்தாலே கொஞ்சம் போல் ஜீரணமாகும்.
போன வாரம் எம்.டி.ஆரில் காலைச் சிற்றுண்டிக்காகப் போயிருந்தபோது, சனிக்கிழமை காலை எட்டு மணிக்கு ஓட்டலுக்குள் நிரம்பி லால்பாக் ரோடில் வழியும் கூட்டத்தை ஒரு நோட்டம் விட்டேன். அத்தனையும் பஞ்சாப சிந்து குஜராத்த மராட்டா தான். திராவிட வாடையே இல்லை. உள்ளே நுழையும்போதே லுங்கி உடுத்த கிளீனர்கள் சாம்பார் தீர்ந்து விட்டதால் இட்லிக்குத் தொட்டுக் கொள்ள உருளைக்கிழங்கு மசாலாதான் என்று இரண்டு நிமிடத்துக்கு ஒரு முறை அறிவித்துப் போனார்கள். அழுக்குப் படிந்த சுவர்களும், அலமாரியில் தூசி படிந்த பீங்கான் கோப்பைகளும், இரைச்சலோடு மார்வாடிக் குடும்பமும் சூழ்ந்திருக்க, எல்லோரும் கேட்ட இட்லியானது கேட்காத உருளைக்கிழங்கோடும் எப்பவும் போல் நெய்யோடும் வர எடுத்துக் கொண்ட நேரம் சுமார் இருபது நிமிடம். பக்கத்து நாற்காலி மார்வாடி மொபைலில் பேசியபடியே காப்பி தருகிற அழுக்கு சாசரில் வைத்து எடுத்து வந்து சுற்றி சர்க்கரைக் குழம்பு சிந்தச் சிந்த வெயிட்டர் மரமேஜையில் வைத்துப்போன குலோப்ஜாமூனில் ஆழ்ந்திருந்தார். காப்பி மட்டும் என்று நான் கேட்டதற்குக் கிட்டியதைவிடத் தெருவோர சாந்தி சாகரில் எல்லா சுபமுகூர்த்த வேளைகளிலும் மணமான தீர்க்க சுமங்கலிக் காப்பி கிடைக்கும்.
கன்னடர்கள் தொங்கு சட்டசபைக்கு ஓட்டுப் போட்டுவிட்டு நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருப்பதால் எம்.டி.ஆரில் பசியாற வரவில்லையா என்று நண்பரைக் கேட்டேன். மத்தியானம் லஞ்சுக்கு வருகிற கூட்டம் முக்காலே மூணு வீசம் கன்னடத்திலே தான் சாப்பிடும் என்றார். என்ன மெனு ? சர்பத், நாலு ஸ்வீட், பாயசம், தோசை, நடுநடுவிலே பிசிபேளா, புரூட் சாலட், ஐஸ் கிரீம்.
ராத்திரி மெனு ரொம்பவே வித்தியாசமாக இருக்குமாம். சர்பத், நாலு ஸ்வீட், பாயசம், புரூட் சாலட், பிசிபேளா. தோசை கிடையாது. பூரியும் இனிப்பு சட்னியும்.
பிரியப்பட்ட நாயனாரில் தொடங்கி நாயனார் பற்றிய இனிப்பான நினைவுகளுடன் தான் முடிக்க வேண்டும் போலிருக்கிறது.
– மத்தளராயன்
- நிறமற்றவனின் குரல் : சுடலை மாடன் வரை-கவிதைத்தொகுதி அறிமுகம்
- கிருஸ்துவ மதத்தில் புரொடஸ்டண்ட் பிரிவு தோன்றியது போல இஸ்லாமில் உருவாக வேண்டும்
- பலியர்களுடன் உரையாடல்
- தமிழ்நாட்டு அரசியல் – என் கருத்துக்கள்
- வாரபலன் மே 27,2004 – லால் சலாம் நாயனார் , இருநூற்று எட்டு டாலர் படம் , கொப்பாலாவின் எம் டி ஆர் ஹோட்டல்
- தமிழ்க் கணிமை ஆர்வலர்களுக்கு ஓர் அவசர வேண்டுகோள்
- பூமித்தின்னிகள்
- தேர்தல் வெற்றி மக்களின் வெற்றியா ?
- ஈரோட்டுப் பாதை சரியா ? – 3
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 7
- குண்டலகேசி – சில குறிப்புகள்
- ஜெயமோகனும் ஸ்ரீரங்கத்து தேவதைகளும்….
- மந்திர உலகின் தந்திரங்கள்
- கலிங்கத்துப்பரணி- சில குறிப்புகள்
- ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 4)
- ஃ –> இளமையான பழைய(ஆயுத) எழுத்து.
- மெய்மையின் மயக்கம் – 1
- தண்டவாளங்கள்
- இருதுளி கண்ணீர்
- சமீபத்தில் வாசித்த நூல்கள்- 4 -சக்கரியா(தமிழாக்கம் சுகுமாரன்), சிவகுமார் , எம் ஜி சுரேஷ் , வசந்த், அ. கா. பெருமாள் , தேவதேவன் ,
- ஆயுத எழுத்து பற்றி
- Dahi pasanday
- ஜஃப்ராணி ஷாமி கபாப்
- கடிதங்கள் மே 27,2004
- கடிதங்கள் மே 27, 2004
- கடிதம் மே 27,2004
- பொன்விழாக் கொண்டாட்டம்- 3
- கவிதைகள்
- தமிழவன் கவிதைகள்-ஏழு
- கவிக்கட்டு 8 – யார் நீ ?
- தீவு
- பூமகன்
- கவிதைகள்
- அறை
- இல்லம்…
- அன்புடன் இதயம் – 19 – அம்மா வந்தாள்
- நாய்கள்
- பார்த்தசாரதியும் பகவத்கீதையும்
- கவிதைகள்
- உள் நோக்கு
- தாய் மனம்
- வதை
- … உலக போலீஸ் …
- ரேடியோவின் கதை
- தேனீ – மொழியும் பணியும்
- அமெரிக்காவின் ஐம்பெரும் ஏரிகளை அட்லாண்டிக் கடலுடன் இணைக்கும் ஸெயின்ட் லாரென்ஸ் கடல்வீதி [St Lawrence Seaway Connecting The Great
- சீதைகளைக் காதலியுங்கள் !
- பிறந்த மண்ணுக்கு – 3
- நீலக்கடல் -(தொடர்) அத்தியாயம் 21
- இலவசம்
- வலை
- காத்திருப்பு
- வள்ளி வோட்டு போட போறா!
- மஸ்னவி கதை — 09சிங்கமும் முயலும்