மத்தளராயன்
கண்ணப் பெருவண்ணான்.
தெய்யம் கூத்துக்கலைஞரான இவர் அண்மையில் எண்பத்தேழு ஆண்டு நிறைவான வாழ்க்கை வாழ்ந்து முடித்துக் காலமானார்.
‘தெய்யம் ‘ சொல்லாட்சி ‘தெய்வம் ‘ என்பதிலிருந்து வந்ததாகச் சொல்வார்கள். தேவராட்டம் போன்ற தெய்வ வழிபாடுக் கலையான இந்நிகழ்வில் நாட்டார் வழிபாட்டில் முக்கிய இடம் பெற்ற சிறு தெய்வங்கள் முதன்மைப் படுத்தப்படும் என்பதோடு, இந்த ஆட்டம் அம்பலங்களிலும், தரவாடுகளிலும் நல்லன நடக்க (ஊரில் தொற்றுநோய் பரவினால் அது மறைய, சுகப் பிரசவம் ஆக என்பது போல்) வேண்டி நடத்தப்பட்டவை.
சலவைத் தொழிலாளர் குலமே ஏறக்குறைய முழுமையாகப் பங்கு பெறும் இந்தக் கலைவடிவத்தை அழியவிடாமல் பாதுகாத்து அளித்த கலைஞர்களில் கண்ணப் பெருவண்ணான் முக்கியமானவர். இவருக்கு சிறைக்கல் கோவிலகம் வம்சத்தினர் வழங்கிய பட்டம் ‘பெருவண்ணான் ‘ என்று தெரிகிறது.
பெருந்தச்சன் போல், தொழில் அடிப்படையான சிறப்புப் பட்டம் பெருவண்ணான். (அழகான மரவேலைப்பாடமைந்த மலையாளக்கரைக் கோவில்களை – பன்றியூர் அம்பலம் முதலில் நினைவு வரும் – நிர்மித்த பெருந்தச்சனைப் பற்றிய நாட்டார் வழக்குக் கதைகள் ஏராளம். ஹரிஹரனின் இயக்கத்தில் இவற்றில் சில தொகுக்கப்பட்டுத் திரைப்படமாக வெளிவந்துள்ளது).
கண்ணப் பெருவண்ணான் தெய்யத்தில் உக்கிர மூர்த்திகளை சிறப்பாக ஆடிப் பிரபலமானவர். அவர் ஒரு பிரசித்தமான ஆயுர்வேத வைத்தியராகவும் இருந்திருக்கிறார். முக்கியமாகக் குழந்தை வைத்தியத்தில். எண்பது வயதுவரை அயராமல் குழந்தை மருத்துவப் பணியில் ஈடுபட்ட அவர், பிறகு உடல் தளர்வால் சிகிச்சை அளிப்பதை நிறுத்தினாலும், கொடக்காட்டில் அவருடைய மருத்துவமனைக்குக் குழந்தையும் கையுமாக வந்த அன்னையரின் வரிசை நீண்டுதான் இருந்தது. பெருவண்ணான் சிகிச்சை ஏதும் அளிக்க வேண்டாம், குழந்தையைத் தொட்டுத் தடவி ஆசியளித்தாலே உடல் நலம் மேம்பட்டு விடும் என்ற வலுவான நம்பிக்கை அவரைத் தேடிவந்த கிராமப் பெண்களுக்கு.
உக்கிர மூர்த்தியாக, அருகில் நிற்பவர் பயந்து விலகித் தொலைவில் நின்று மருட்சியோடு பார்க்கத் தெய்யமாடிய கண்ணப் பெருவண்ணான், வாழ்க்கையில் கருணா மூர்த்தியாக இருந்த வரலாறு இது.
****
அசல் வாழ்க்கையைத் திரையில் சித்தரித்த முதல் மலையாளப் படமான ‘நீலக் குயில் ‘ ஐம்பதாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. படத்துக்குக் கதை எழுதி இரண்டாவது கதாநாயகனாக நடித்த கவிஞர் பி.பாஸ்கரன் எண்பது வயதைத் தொட்டிருக்கிறதோடு எல்லா முக்கியமான சின்னத்திரைச் சானல், பத்திரிகைகளிலும் தன் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டாகி விட்டது.
நீலக்குயிலுக்கு முந்தைய, முதல் மலையாளப் பேசும் திரைப்படமான சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் ‘பாலன் ‘ படம் கடந்த வாரம் பேசப்பட்டது. 1938ல் வெளிவந்த இந்தப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக – அனாதை பாலனாக நடித்தவர் சென்னையைச் சேர்ந்த வேணுகோபால் என்ற தமிழர்.
திருவனந்தபுரத்திலிருந்து ஒரு குழு கிளம்பி வந்து வேணுகோபாலைப் பற்றி விசாரித்து மறைந்த வேணுகோபாலின் மனைவி இன்னும் உயிரோடு இருக்கிறார் என்று கண்டறிந்தது. வீடு வீடாகப் பத்துப் பாத்திரம் தேய்த்து வயிற்றைக் கழுவிக்கொண்டு சென்னைப் புறநகர் குடிசைப் பகுதியில் இருக்கும் அந்த அம்மாவை உடனே திருவனந்தபுரம் அழைத்துப் போனார்கள்.
அமைச்சர், அரசியல் பிரமுகர்கள், நடிக நடிகையர், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், பத்திரிகையாளர்கள் என்று பெருங்கூட்டத்தைக் கூட்டி மேடைக்கு அழைத்து வேணுகோபாலின் மனைவிக்கு அன்பளிப்பு கொடுத்துப் புகைப்படமும் வீடியோவும் எடுத்து கேரளம் முழுக்க வெளிச்சம் போட்டுக்கொண்டு பிரமுகர்கள் கலைந்து போனார்கள்.
ஆர்ப்பாட்டமாக விழா நடத்தி வேணுகோபாலின் மனைவிக்கு அளிக்கப்பட்ட தொகை பத்தாயிரம் ரூபாய்.
****
இந்த மாத ‘த ரெவ்யு ‘ இதழில், ‘த ஓக்ஸ்ஃபோர்ட் கம்பேனியன் டு இந்தியன் த்யேட்டர் ‘ என்ற புது நூலை ஞானபீடப் பரிசு பெற்ற நாடக ஆசிரியரும் நடிகருமான கிரிஷ் கர்னாட் திறனாய்வு செய்துள்ளார். தமிழ், பஞ்சாபி, மலையாளம் என்று பல இந்திய மொழிகளில் நாடக வரலாற்றைப் பதிவு செய்யும் இந்த நூலில் கன்னட நாடக வரலாறு பற்றிய கட்டுரையை கிரிஷ் கர்னாடே எழுதியுள்ளார்.
அவர் எழுதினால் என்ன, அடிக்குறிப்பு, புத்தகத்தின் பின்னால் விவரணைப் பட்டியல் வருமல்லவா ? அங்கே எல்லாம் தொகுப்பாளர் குழு புகுந்து விளையாடியுள்ளதை கிரிஷ் எடுத்துக்காட்டுவது இப்படி –
நான் எழுதிய ‘அக்னி மத்து மளே ‘ (நெருப்பு மற்றும் மழை – 1994 ராமாயணத்தில் யவக்ரிதாவின் கதையைச் சொல்கிறது என்று எழுதியிருக்கிறார்கள். முன்னுரையின் முதல் வரியிலேயே அது மகாபாரதக் கதை என்று சொல்லியிருக்கிறேன்.
அப்புறம், ‘கர்னாட் சிறு வயதாக இருக்கும்போது சென்னை, மும்பை, தில்லி, கொல்கத்தா நகரங்களில் ஆங்கிலேயத் துருப்புகளுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பின் மேற்கத்திய நாடகங்கள் நடிக்கப்பட்டதைக் கண்டிருக்கிறார் ‘ என்று எழுதியிருக்கிறார்கள். நான் மும்பைக்கு முதல் தடவையாகப் போனதே எனக்கு இருபது வயது ஆனதற்கு அப்புறம்தான். ஆங்கிலேயப் படைவீரர் அணி எதையும் நான் பார்த்தது கிடையாது.
மூச்சு விட்டுக் கொண்டிருக்கும் படைப்பாளிகளுக்கே இப்படி என்றால், இனிமேல் வந்து மறுக்கப் போகாத, மறைந்தவர்கள் பாவம் தான்.
****
சர்தார்ஜீ ஜோக் போல் மலையாளத்தில் நம்பூத்ரி பலிதமும், சீதி ஹாஜி சிரிப்பும் பிரபலம்.
சீதி ஹாஜி மலைப்புரம் தொகுதி முஸ்லீம் லீக் சட்ட மன்ற உறுப்பினராக இருந்தவர். ரொம்ப வெள்ளை மனசு. வெகுளியும் கூட. இவரை வைத்து எழுந்துள்ள ஜோக்குகளில் பல இங்கே எழுத முடியாதவை.
பகிர்ந்து கொள்ளக்கூடிய சில –
சீதி ஹாஜியும் நண்பரும் உள்ளாடை வாங்கக் கடைக்குப் போனார்களாம். நண்பர் ஏழு செட் வாங்கினாராம். ஹாஜியார் ‘எதுக்கு ஏழு ? ‘ என்று விசாரிக்க, நண்பார் சொன்னார் – ‘தினத்துக்கு ஒண்ணு – திங்கள்,செவ்வாய், புதன் .. ‘
‘அப்ப எனக்கு பன்னிரெண்டு கொடுப்பா ‘ என்றாராம் சீதி ஹாஜி. ‘ஜனவரி, ஃபிப்ரவரி, மார்ச்… ‘
சீதி ஹாஜி மலேசியா போக விமானம் ஏறியபோது விமானத்தின் மேல் KLM என்று எழுதியிருப்பதைப் பார்த்துவிட்டு வியந்தது – ‘அட நம்ம மலப்புரம் ரிஜிஸ்ட்ரேஷன்லே ப்ளேன் கூட ஓடுதே ‘ (கே எல் கேரளா – எம் மலப்புரம் என்று வாகன ரிஜிஸ்ட்ரேஷன் இருந்த காலம்).
சீதி ஹாஜி வெளிநாடு போய்விட்டு வந்தபோது அவருக்கு உற்சாக வரவேற்பு கரிப்பூர் (கோழிக்கோடு) விமானத் தாவளத்தில் தரப்பட்டது. வரவேற்க வந்தவர்கள் கோஷம் போட்டார்கள் – ‘சீதி ஹாஜிக்குப் பூச்செண்டு ‘.
ஹாஜி அவர்களைக் கூப்பிட்டுச் சொன்னார் – ‘இப்படிப் பெரிய கூட்டத்திலே மானத்தை வாங்கறீங்களே, என்கிட்டே பூனை இருக்குன்னு சத்தம் போட்டு ( ‘சீதி ஹாஜிக்குப் பூச்ச+உண்டு ‘); திருத்திச் சொல்லுங்க – சீதி ஹாஜிக்கு ஆனயுண்டு ‘.
ஹாஜியார் திருவனந்தபுரத்தில் பல்கலைக்கழகப் பக்கமாகக் காரில் போகும்போது உள்ளே வரலாற்றுத் துறை மாநாடு பற்றிய துணி பேனரைப் படித்தார் – ‘ஹிஸ்டரி காங்கிரஸ் ‘.
தலைமைச் செயலகம் போனதுமே முதலமைச்சர் ஆன்றணியின் அறைக்குள் வேகமாக நுழைந்து அவரைக் கேட்டார் – ‘என்ன சார், உங்க கட்சியிலே இன்னொரு கோஷ்டி புதுசா முளைச்சுடுச்சு போலே இருக்கே ‘.
கடந்த வாரம் மலையாள மனோரமா தினப்பத்திரிகையில் சீதி ஹாஜி ஜோக்குகளைத் தொகுத்துத் தந்திருப்பவர் அவருடைய சொந்த மகனும் லீக் பிரமுகருமான பி.கே.பஷீர்தான்.
—-
eramurukan@yahoo.com
- கடிதம் டிசம்பர் 23,2004
- மறக்கப்பட்ட பெண்முகமும், இரும்புச் சிலுவையும்: இரு நூல்கள்
- கதைகளின் சூதாட்டம் : யுவன் சந்திரசேகரின் புதுநாவல் ‘ பகடையாட்டம் ‘
- துறவியின் குற்றம் (அ) துறவின் குற்றம்
- ஓவியப்பக்கம் – பத்து – ப்ரான்சிஸ் பேகான் – சதை, பருண்மை, மனிதார்த்தம்
- உலகெங்கும் கிறிஸ்துமஸ் பெருவிழா!
- ஒரு கடலோரக் கிராமத்தின் கதை-சில அபிப்ராயங்கள்
- மனத்தோடு உறவாடும் கவிதைகள் – இளம்பிறையின் ‘முதல் மனுசி ‘ தொகுப்பை முன்வைத்து
- விதைகளை வைத்திருக்கும் செடி கொடி மரங்கள்
- ஆழ்வார் பாசுரங்களில் பக்தி ரஸம்
- விடுபட்டவைகள் -2 கல்யாணம் செஞ்சுக்கோங்கோ….
- உயர்பாவை- 2
- ஹரப்பா நாகரிகத்தின் ‘மொழி ‘
- அழுதாலும் பிள்ளை அவள்தான் பெறவேண்டும் தொடர்ச்சி பகுதி – 2
- புதிய மானுடம் – (மூலம் நளினிகாந்த குப்தா)
- மெய்மையின் மயக்கம்-31
- கடிதம் டிசம்பர் 23, 2004 – கயமை வேண்டாம்
- கடிதம் டிசம்பர் 23,2004
- நேச குமாருக்கு விளக்கம்: பர்தாவும் அன்னை ஜைனப்பின் திருமணமும்!
- கடிதம் டிசம்பர் 23,2004
- நம்மவர்களின் தாழ்வு மனப்பான்மை (திரு புதுவை ஞானம் அவர்கள் தமிழ் அளவைகள் பற்றி)
- கடிதம் டிசம்பர் 23,2004
- கடிதம் டிசம்பர் 23, 2004 – பழையன கழிதலும், புதியன புகுதலும்!
- கடிதம் 23,2004 – ஞானம் கெட்டவர்களின் கோணல் பார்வை!
- கடிதம் டிசம்பர் 23, 2004 – ஞாநிக்கு சில கேள்விகள்
- கடிதம் 23, 2004 – நேச குமாருக்கு விளக்கம் 3. கண்ணியம் காக்க!
- கடிதம் டிசம்பர் 23, 2004
- கடிதம் டிசம்பர் 23,2004
- ஜெயேந்திரர் கைது குறித்து ஜெயகாந்தன்
- தீவட்டி நிறுவனம் வழங்கும் புதுமைஜித்தன் நசிவிலக்கிய விருது – அறிஞர் ச.க.தி. பெறுகிறார்
- கவிக்கட்டு 41
- அறிவியல் சிறுகதை வரிசை 6 – உற்றுநோக்கும் பறவை
- போராட்டம்
- போதி மரம்
- மாச்சுபிச்சுவின் சிகரங்கள் – தொடர்ச்சி (மூலம் பாப்லோ நெரூதா)
- நீண்ட உறக்கம்
- வயதுகளோடு….
- யாரிடமாவது….
- நிராகரிப்பின் வலி
- காமதகனம்
- தெருவிளக்குகள்
- வெண்ணிலாப்ரியன் கவிதைகள் 8 – ஓர் இரவு
- பெரியபுராணம் – 23
- கீதாஞ்சலி (9) – மாலையில் சேராத மலர் (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)
- புத்தாண்டு-பொங்கல் வாழ்த்துக்கள்
- நீலக்கடல் -(தொடர்) – அத்தியாயம்-51
- காஷ்மீரிலிருந்து தபால் அட்டை (மூலம் : ஆகா ஷாஹித் அலி)
- புலம்பல்
- குழந்தைகளின் உயிரோடு விளையாடும் பாலிவினைல்
- பிரான்சில் பட்டாம்பூச்சி போல் உயர்ந்த உலகத்தின் பிரமிக்கத் தக்க வான்வீதிப் பாலம் [World ‘s Highest Butterfly Bridge in France :
- வாரபலன் டிசம்பர் 23,2004 – தளர்வில்லா கண்ணப் பெருவண்ணான் , நீலக்குயிலுக்கு ஐம்பது, கிரீஷ் கார்னாடுக்கு ஆக்ஸ்ஃபோர்ட் குளறுபடி , ச
- குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டும் குருமூர்த்தி!
- இராக்கில் இஸ்லாமிய மக்களாட்சி ? – பகுதி 1
- உழவர்களை நாடு கடத்தும் அரசு
- அணுவாற்றல் அறிவுதான் விஞ்ஞான அறிவா ?
- இசை விழா 2004 – I
- விளக்கு பரிசு பெற்ற பேராசிரியர் சே ராமானுஜம் அவர்களுக்கு பரிசும் பாராட்டுவிழாவும்
- எண்(ணங்)கள்: பாலாஜி : விரிகுடா தமிழ் மன்ற நாடக விழா -ஒரு தப்புக்கணக்கு
- பேராசிரியர் இராமானுஜம் அவர்களின் நாடகப் பங்களிப்புகளும், விருதும்