ஆர்.உஷாராணி
முதலில் பார்த்தவுடனே எனக்கு அடையாளம் தெரிந்துவிட்டது அவனும் என்னை திரும்பிப் பார்த்ததும், சந்தேகமே இல்லை,கோப்புதான்.நினைவுகளை தள்ளி போட்டு விட்டு, எதிரில் இருப்பவர்களின் பேச்சைக் கவனிக்க ஆரம்பித்தேன்.
அவர்களும் பேச்சையும்,சாப்பாட்டையும் முடித்துக்கொண்டு ஒரு வழியாய் எழுந்தார்கள்.பில் கொண்டு வைத்த பேரரிடம் கிரடிட் கார்டையும்,தனியாக பத்து திராம்ஸ் டிப்சையும் வைத்தேன். திரும்ப வந்தவனிடம்,தமிழனா என்று பேச்சை ஆரம்பித்தேன்.
‘ஆமா ஸார், எம்பேரு அப்துல் ரஹ்மான் ‘என்றவனிடம்,பக்கத்து டேபிளை துடைத்தவனைப் பற்றி விசாரித்தேன். ‘சந்தோஷ கேக்குறீங்களா,உங்களுக்கு தெரிஞ்சவரா ? என்று கேட்டவனிடம் தலை அசைத்தேன்.
ரெண்டு மணிக்கு அவருக்கு டியூட்டி முடியும்,இன்னும் பத்து நிமிஷம் இருக்கு ஸார் ‘ என்றான்.
‘லவுன்சில் காத்து இருக்கிறேன்,கட்டாயம் அவரை வர சொல் ‘ என்று சொல்லி விட்டு, வெளியேறினேன்.அவன் கோப்பெரும்சோழன் தான்,பேரை மாற்றி கொண்டால் ஆள் அடையாளம் தெரியாமல் போய்விடுமா ?
நம்முடன் படித்தவர்கள்,பழகியவர்கள்,சொந்தகாரர்கள் என்று இவர்களை இப்படி நம்முடைய நிலைக்கு கீழே பார்த்தால் மனம் எப்படி துடித்துப் போகிறது!தமிழ் ஆசிரியரின் மூத்தமகன்,இவனுக்கு அடுத்தது கருணாநிதி, பன்னீர் செல்வம், வளர்மதி,தமிழ் ஓளி.
வளர்மதியை, வளர்,வளரு கூப்பிடுவாங்க! ஆனா அந்த வளர் மிகவும் குள்ளமாய் இருப்பா! வளருன்னு கூப்பிடுறதால தான் அவ வளரலன்னு நாங்க கிண்டல் செய்வோம். கருணாநிதி என்னோட கிளாஸ்மேட்,கோப்பு அண்ணனோட கிளாஸ்மேட்.
ஸார் தமிழ்,தமிழ்ன்னு எப்போதும் சொல்லிக்கிட்டு இருப்பார். தமிழ் சோறு போடும் என்று தன் பிள்ளைகளிடம் ஸ்பீச் கொடுப்பார்.அப்பா எந்த மொழி மட்டும் போதாது கணக்கும், விஞ்ஞானமும்தான் முன்னேற்றத்தை கொடுக்கும் என்பார்.
ஒரு முறை கருணா சோறுன்னு சொல்லாமல்,சாதம் போடுன்னு சொல்லிட்டான்னு சூடு வைத்துவிட்டார்.ஸ்கூலிலும், உள்ளூர் கட்சிஆட்களிடம் நல்ல செல்வாக்கு. மேடை பேச்சில் சொல்வதற்கு ஆங்கில வார்த்தைக்களையும், ஷேக்ஸ்பியர், ஷெல்லி என்று அப்பாவைக் கேட்டு எழுதிக் கொண்டுப் போவார்.
சுயமரியாதை கல்யாணம்,ஆனா அந்த அம்மா படிக்காதவள். அவளுடைய பெயர் லஷ்மி,ஆனா லக்குமின்னுதான் கூப்பிடுவார்.
ஒரு முறை அப்பாவை ஜாதி பேரைச் சொல்லி கமண்ட் அடித்ததை நானும்,அண்ணாவும் கேட்டுவிட்டு, அப்பாகிட்ட சொன்னோம்,அதை அவர் பெரியதாக்கவில்லை என்றாலும், எங்களால் அதை மறக்கமுடியவில்லை.பிள்ளைகள் மூலமாய் விஷயம் தெரிந்து,மன்னிப்புக் கேட்கும் தோரணையில் வந்தவரிடம்,அப்பா மனம் நொந்து பேசியது , கிட்டதட்ட முப்பது வருஷம் கழித்தும் அப்படியே ஞாபகம் இருக்கிறது.
எஸ்!ஸார்! என்ற குரல் காதில் விழுந்தவுடன் நனவுலகம் வந்தேன். அவனை நன்றாக பார்த்தேன். முகத்தில் எந்த சலனமும் இல்லை.
நீங்க கோப்பெருஞ்சோழன் தானே!
ஒரு நிமிட மெளனத்துக்கு பிறகு, ‘வெளிய போய் பேசலாமா ? ‘ ‘ என்றான்.
‘நீங்க லஞ்சு சாப்பிட்டு இருக்க மாட்டிங்க! லாம்சி பிளாசா போயிடலாம்,சாப்ட்டுகிட்டே பேசலாம் ‘காரை ஸ்டார்ட் செய்தேன் ‘இங்க பாவ்பாஜி நன்றாக இருக்கும் ‘ என்று,இரண்டு பிளேட் கொண்டு வந்தேன். உடல் உழைப்பவன் அல்லவா! நிமிடத்தில் பிளேட் காலியானது.
‘அப்புறம், ஊர்ல எல்லோரும் சவுக்கியமா ? கருணா எப்படி இருக்கிறான் ? ‘ என்று ஆரம்பித்தேன்.
பாத்ரூம் போயிட்டு வந்துவிடுகிறேன் ‘சட்டென்று எழுந்து சென்றான்.வந்தவன் கண்கள் கலங்கி இருந்தன. ஏதோ சரியில்லை,இனியும் பேச்சை வளர்ப்பது முறையில்லை.
‘வாங்க உங்களை ஹோட்டலில் டிராப் பண்ணுகிறேன் ‘ இடத்தை விட்டு எழுந்தேன்.கோப்பு என்னை உட்கார சொல்லி சைகை செய்தான், ‘இப்போ என் பேர் சந்தோஷ் குமார்,கருணாநிதி பேரு அசோக் குமார் ‘,சிரிப்பில் கசப்பு வழிந்தது.
ஸ்ரீதர் எப்படி இருக்கான் ?
அண்ணா கலிபோர்னியால இருக்கான்,அப்பாவும், அம்மாவும் இங்கையும் அங்கையும் மாத்தி மாத்தி இருப்பாங்க ‘ குரலில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் பதில் அளித்தேன்.
ஒரு பதினஞ்சு வருஷம் இருக்குமா நாம்ப சந்திச்சு!
’95ல பன்னீர டிரைன்ல பார்த்தேன்,நீங்க கட்சில செல்வாக்கா இருக்கிங்கன்னும்,கருணா ஸ்டேட் கவர்மெண்ட்ல,அவன் M.B.B.S படிப்பதாகவும்,தமிழும்,வளரும் டாச்சரா இருக்காங்கன்னும் சொன்னதா ஞாபகம் ‘
இப்ப நா இங்க டேபிள் தொடைக்கிறேன்,பன்னீர் முதுகு எலும்பு முறிஞ்சி,இடுப்புக் கீழே உணர்ச்சி இல்லாம கெடக்குறான்.கருணா ஒரிசால கம்பனில வேல செய்றான்.தங்கச்சிங்க நல்லா இருக்காங்க! அம்மா போன வருஷம் எறந்துட்டதாக லெட்டர் வந்துது,அப்பா ஒரு மாதிரி ஆயிட்டாரு!
‘என்னால நம்ப முடியல, ஏன் இந்த நிலம, என்ன நடந்தது!
எங்க அம்மாபாவம்,சாமி குத்தம்னு பொலம்பிக்கிட்டே செத்துது,அதெல்லா ஓண்ணும் இல்ல,எங்க அப்பாதான் யோசிக்க தவறிட்டார்னா,அதே தப்ப நானும்தானே செஞ்சேன்,எவனோ அவ பொழப்புக்கு சொன்னா எங்களுக்கு எங்க போச்சு அறிவு!புத்திசாலிதனமும்,யோசிக்கிற புத்தியும் இருந்தா நீ என்னதான் அமுக்கினாலும்,அவன் முன்னுக்கு வந்து விடுவான் ‘ ஒருத்தன் சொன்னா,அப்படியே நம்பிடறதா! மூள இருக்கு இல்ல! யோசிக்கணும் ‘.
நீங்க யார சொல்றீங்க ? எனக்கு புரியலை ‘ என்றேன்.என்னை ஆழமாகப் பார்த்தான்.
பெருமூச்சுடன், ‘ ஸ்ரீதர் ஐ.ஐ.டி சேர்ந்தது எனக்கு தெரியும்,நா டிகிரி படிக்கும் போதே கட்சில சேர்ந்துட்டேன். அப்பா சின்ன வயசுல பட்ட அவமானங்களுக்கு தீர்வா கட்சிய நெனச்சார்னா, நா முன்னேறதுக்கு இது ஈஸியான வழியா நினச்சேன்.அப்பதான் எமர்ஜென்சி வந்துதா, எங்க வாழ்க்கையும் மாற ஆரம்பிச்சு!
அந்த எமர்ஜென்சியாலதான் எனக்கு பி.ஈ சீட் கெடச்சிச்சு!அப்பதான் கட்சி சிபாரிசு,பணம்னு இல்லாம மெரிட்ல ஆள் எடுத்தாங்க!என்று சொன்னேன்.
அப்பாவ அரஸ்ட் பண்ணிட்டாங்க,நல்ல அடி, வேலைய விட்டுட்டாரு! நாங்களும் எங்க தாத்தா வீட்டுக்குப் போய் விட்டோம்.எங்க கட்சியும் தேய ஆரம்பிச்சு, ஒடம்பு வலிய விட சொந்த கட்சிகாரங்க துரோகங்கள்தாலத்தான் அப்பா நொடிச்சி போயிட்டாரு!
நா எங்க மாவட்டசெயளாளர் கிட்ட,பி.ஏ மாதிரி இருந்தேன், அவருக்கு ஆறு பசங்க,ரெண்டு பொண்ணும்,ரெண்டு பசங்களும் வெளிநாட்டுல மேல் படிப்பு படிச்சி அங்கேயே செட்டில் ஆயிட்டாங்க!ரெண்டு பசங்க சுமாராதான் படிச்சாங்க,இங்க கட்சியிலும், பிஸினஸ்சிலும் கொழிக்கிறாங்க!
தமிழ்,தமிழ்ன்னு டயலாக்விட்டாங்களே,அது அவுங்களுக்கு இல்ல, எங்க மாதிரி முட்டா பசங்களுக்குதான்,எல்லாத்தையும் பார்த்துக்கிட்டே இருந்தோம்,ஆனா மண்டைல ஏறல!எங்க கட்சியிலே இருந்து வெளியேத்தபட்டவரு,புது கட்சி ஆரம்பித்து,ஆட்சிய பிடிச்சாரு!
அப்புறம் நெறயபேரு, ஆள்ற கட்சிக்கு மாறிட்டாங்க! எங்களால அப்படிமாற முடியல!
நா பெயிண்ட் கட ஆரம்பிச்சேன்,நல்லா ஓடிக்கிட்டு இருந்துச்சு! கருணாவும் நல்லா படிச்சி, கவர்மெண்ட் வேலைல சேர்ந்துட்டான், பன்னீர தவிர எல்லாருக்கும் கிராண்டா கல்யாணமும் ஆயிடுச்சு!பன்னீர டாக்டருக்கு படிக்க அனுப்பினோம்,+2வர தமிழ் மீடியம் படிச்சதால அவனால சமாளிக்க முடியல்!,சேர்மானமும் சரியில்ல!
ஒரு சமயம் பிரச்சன ஆயி,காலேஜ்ல சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க! படிக்கமாட்டேன்னு வீட்டுக்கு வந்துட்டான்!டெய்லி வீட்டுல பிரச்சனைதான்,அப்பாவ திட்டிக்கிட்டே இருப்பான், பயித்தியம் பிடிச்சாமாதிரி ஆயிட்டான்,எங்க கட்சி ஆளுங்க யாரு கோவிலுக்கு போராங்க,பசங்க எந்த மீடியம் படிக்குது,செகண்ட் லாங்வேஜ் என்னன்னு!ஆதார பூர்வமாய் சொல்வான்!
நானும்,அப்பாவும் அப்பதான் யோசிக்க ஆரம்பித்தோம்,ஒருவாட்டி எங்க கட்சில பெரிய தலைவரு என்ன சொன்னாரு தெரியுமா ? டாக்டரு,வக்கீலு,ஆடிட்டருங்க உங்க ஆளுங்கதான் வெச்சிப்பாராம்,ஏன்னா இவுங்கதான் ஒழுங்கா படிச்சி பாஸ் பண்ணி இருப்பாங்களாம்,எப்படி இருக்கு கத பாத்தியா! பாம்ப வுட்டுடு,உங்கள அடின்னு சொல்லி,சொல்லிதானே ஆட்சிய பிடிச்சாங்க!அன்னைக்கு கட்சியே வேணாம்னு முடிவு பண்ணினேன்!பாலிடிக்ஸ்னாலே சொல்றது ஒண்ணு,செய்றது ஒண்ணுன்னு வெறுப்பாயிடுச்சு!
போன தடவ ஆட்சிக்கு வந்தபோதுக்கூட அந்த பக்கமே போகம இருந்தேன், மூணு வருஷம் முன்னாடி அந்த அம்மாவ கைது பண்ணினாங்களே,அப்ப ஆரம்பிச்சது பிரச்சன!கருணாவ , ஒதைக்க போரேன்னு ,அந்த அம்மா கட்சி பசங்க வாசல்ல வந்துக் கத்திக்கிட்டு இருந்தாங்க! பன்னீரு ரொம்ப பயந்துட்டான்,ராத்திரி தூங்கும் போது வந்து கத்தி இருக்காங்க! பயத்துல மாடில இருந்து குதிச்சிட்டான்,நல்ல அடி,இடுப்பு கீழ உணர்ச்சி இல்லாம போயிடுச்சு!
ரெண்டு பேருமே கொஞ்ச நேரம் பேசாமல் தவித்தோம்.
கருணா அவுங்ககூட சண்டைக்கு போய் அடிதடி,போலீஸ் கேஸ் ஆயிடுச்சு! கட்சில, இப்ப மட்டும் வந்தியான்னு நக்கலடிச்சாங்க! அவனுக்கு வேலையும் போச்சு! இந்த குழப்பத்துல கடையும் நஷ்டமாயிடுச்சு!
அப்பதான் நாங்க பேர மாத்திக்கிட்டோம்!அவனால பாஸ்போர்ட் வாங்க முடியில,ஒரிசால அக்கவுண்ட்டா இருக்கான், நா துபாய் வந்துட்டேன்.
ஒனக்கு ஞாபகம் இருக்கா! உங்க அப்பா சொன்னாரு,நாங்க அந்த காலத்துல உங்கள அடிமை படுத்தி இருக்கலாம், ஆனா இப்ப நாங்க செத்த பாம்புங்க,எங்கள அடின்னு மேடைக்கு மேடை பேசுறீங்ளே,உயிரோட மல பாம்பு உங்கள கொஞ்ச,கொஞ்சமா முழுங்கிட்டு இருக்கு, அது உங்களுக்கு தெரியலேன்னார்! அப்பா இத சொல்லி,சொல்லி அழுவாரு!
இருவருக்கும் தொண்டை அடைத்தது.
நேரமாயிடுச்சு! நா கிளம்பரேன்! என்று எழுந்தவனிடம், ‘ வாங்க கொண்டு விடுகிறேன் ‘ எழ முற்பட்டேன் , ‘இல்ல,இல்ல நானே போய்கிறேன் ‘என்று நான் எழுவதற்கு முன், வேகமாய் கூட்டத்தில் மறைந்தான் கோப்பெருஞ்சோழன் இல்லை சந்தோஷ் குமார்.
***
ramachandranusha@rediffmail.com
- இராம.கி. -இன் இரண்டு கவிதைகள் (உப்புத் தாலாட்டு , அரபு நுழைவு)
- மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது (தொடர்கவிதை -2)
- சுகம்
- நான்காவது கொலை முயற்சி!!!
- தீபாவளி வெடி பற்றி… சொன்னாலும் சொல்வாங்க
- தமிழ் நவீன பயன்பாட்டுக்கு உதவுகிறதா ?
- கலாச்சாரமும் கலங்கரை விளக்கங்களும் (எனக்குப் பிடித்த கதைகள் -34 – கர்த்தார்சிங் துக்கலின் ‘விந்தைச் செயல் ‘)
- பேரழிவுப் போராயுதம் ஆக்கிய எட்வர்டு டெல்லர் (1908-****)
- அறிவியல் மேதைகள் -ஹோமி ஜஹாங்கீர் பாபா (Dr Homi Jehangir Bhabha)
- அம்மா சொன்னது
- ஆசை
- ஆணின் வெற்றிக்குப் பின்னால்……
- அப்பாவின் படம்
- பா சத்தியமோகனின் மூன்று கவிதைகள்
- நகர் வலம்
- காதல் பூக்கும் காலம்
- விடுமுறை
- வளரும் நாடுகளின் மனித உரிமையைக் காக்கும் கட்டாய மதமாற்ற தடைச் சட்டம்
- தமிழ் நவீன பயன்பாட்டுக்கு உதவுகிறதா ?
- காமம்
- நான்காவது கொலை!!! (அத்யாயம் 14)
- வாய் சொல்லில் வீரரடி
- நிழல் (ஒரு நாடகம்)