வானப்பிரஸ்தம்

This entry is part [part not set] of 38 in the series 20071018_Issue

கௌரிகிருபானந்தன்



வாசற்கதவு திறந்துதான் இருந்தது. உள்ளே அடியெடுத்து வைக்கு போதே “அதோ, வந்துவிட்டாள்” என்றார் என் கணவர் என்னைப் பார்த்தும். போனில் யாருடன் பேசிக் கொண்டிருந்தாரோ தெரியவில்லை. “இந்தா பேசு.உன் மகள்” என்று சொல்லிக் கொண்டே போனை என்னிடம் நீட்டினார்.
“அம்மா! எங்கே போயிருந்தாய்?” கல்யாணி அழுகை கலந்த குரலில் கேட்டாள். நான் பதில் சொலவதற்குள் மேலும் தொடர்ந்தாள். “சொல்லாமல் கொள்ளாமல் எங்கே போய் விட்டாய்? அப்பா செய்தியைச் சொன்னது முதல் எவ்வளவு கவலைப் பட்டுக் கொண்டிருந்தேன் தெரியும்¡? சுவாமியை எப்படியெல்லாம் வேண்டிக்கொண்டேனோ ……..”
அவள் பேச்சை நிறுத்தப் போவதில்லை என்று நினைத்தவளாய் இடையில் புகுந்து “வழி தவறிப் போய்விட்டடேன். தேடி கண்டு பிடித்து வருவதற்குள் தாமதமாகவிட்டது” என்று விவரமாக சொன்னேன். யாரோ கதவைத் தட்டிய சத்தம் கேட்டது. அவர் போய் கதவைத் திறந்தார்.
என்னுடைய மகன்தான். ஆபீஸிலிருந்து சீக்கிரமாக வந்து விட்டான் போலும். என்னைப் பார்த்ததும் “அம்மா! வந்து விட்டாயா? எங்கே போயிருந்தாய்?” என்றான் பதற்றமும், கவலையும் கலந்த குரலில்.
நான் முறுவலித்தேன். விழிகளை உருட்டி கோபமாக என்னைப் பார்த்தார் என் கணவர். பதற்றத்தில் மகனின் முகம் வெளிறிப் போயிருந்தது.
“யார் வந்திருக்காங்க?” கல்யாணி சத்தமாக கேட்டாள். போன் இன்னும் கையில் இருக்கும் விஷயத்தையே மறந்து விட்டிருந்தேன்.
“உன் அண்ணன்தான். அவனிடமும் சொல்லி அவனையும் பதற்றப்பட வைத்துவிட்டார் உங்க அப்பா. பாவம்! ஆபீஸிலிருந்து பாதியிலேயே வந்துவிட்டான்.”
“சொல்லாமல் என்ன செய்வார்? பாவம் அப்பா! நீ எங்கே போயிருக்கிறாய் என்று தெரியாமல் அவர் எவ்வளவு பயந்துபோனாரோ தெரியுமா? அக்கம் பக்கத்தில் யாரையும் சரியாக தெரியாது. இந்த வயதில் புதிய இடத்தில் வீட்டையும் பூட்டிக் கொண்டு அவர் எங்கே என்று உன்னைத் தேடுவார்? உனக்கு மட்டும் சின்ன வயசா? இருந்தாலும் சொல்லிக் கொள்ளாமல் போவானேன்? ஏதாவது சண்டை நடந்ததா காலையில்?” கல்யாணி நீட்டி முழக்கிக் கொண்டே கேட்டாள்.
“சரிதான். அப்படி எதுவும் இல்லை. நான் அப்புறம் சாவகாசமாக பேசுகிறேன். வைத்து விடட்டுமா.” போனை வைத்து விட்டேன்.
காலில் இருந்த ஷ¥வைக் கூட கழற்றாமல், கையில் ப்ரீ·ப்கேஸ¤டன் நின்றபடியே மகன் ஆரம்பித்தான். “வீட்டில் சொல்லாமல் எங்கே போனாய்? எதற்காக போனாய்?” என்னிடம் கேட்டுக் கொண்டே தந்தையின் பக்கம் சந்தேகத்துடன் பார்த்தான்.
“என்னிடம் சொல்லிக் கொள்ளாமல் எங்கே போயிருந்தாய்? நான் என்ன சொல்லிவிட்டேன் உன்னை?” என்றார் அவர் நடுங்கும் குரலில்.
“யாரும் என்னை எதுவும் சொல்லவில்லை. எனக்கு ஒன்றும் ஆகவில்லை. முதலில் கொஞ்சம் நிதானப் படுத்திக்கொள். காபி கலந்து தருகறேன்” என்றேன் மகனிடம்.
“அவனுக்குக் காபி கலந்து தருவது இருக்கட்டும். நீ இன்னும் சாப்பிட வில்லையே?” என்றார் அவர்.
“நீங்க சாப்பிட்டீங்களா?” டைனிங் டேபிள் மீது கவிழ்த்து வைக்கப் பட்டிருந்த தட்டுகளைப் பார்த்துவிட்டு கேட்டேன்.
“நீ பரிமாறாமல் சாப்பிடுவேன் என்று எப்படி நினைத்தாய்?” என்றார்.
‘நீ இல்லாமல் எப்படி சாப்பிடுவேன்?’ என்று கேட்கணும்னு அவருக்குத் தோன்றாததை எண்ணி மனதிலேயே சிரித்துக் கொண்டேன்.
அதற்குள் போன் ஒலித்தது. மகன் ப்ரீ·ப்கேஸை மேஜை மீது வைத்துவிட்டு போனை எடுத்தான். மறுமுனையில் சொன்னதைக் கேட்டுவிட்டு “ஊம். தெரியும். வீட்டுக்கு வந்துவிட்டாள்” என்று சொல்லிக் கொண்டிருந்தான்.
போன் செய்தது யாரு? இவர் எல்லோரிடமும் சொல்லி பதற்றப்பட வைத்துவிட்டார் போலும். வெட்கக்கேடு!
போனை என்னிடம் நீட்டிக் கொண்டே “லலிதா” என்றான்.
“ஹலோ!” என்று நான் சொன்னதுதான் தாமதம் ” அத்தை! சொல்லாமல் எங்கே போயிட்டீங்க? எங்க ஆபீஸில் இன்ஸ்பெக்ஷன் நடந்து கொண்டு இருக்கு. உடனே கிளம்பி வரணும் என்றால் எப்படி முடியும்? யாரிடமாவது சொல்வோம் என்றாலும் எவ்வளவு தலைகுனிவு? எவ்வளவு கேள்விகளைக் கேட்பாங்க? என்ன பதில் சொல்ல முடியும்? ஏன் இப்படிச் செய்தீங்க?” மருமகள் அடுக்கிக் கொண்டே போனாள்.
குற்றவாளி கூண்டில் நிற்பது போல் இருந்தது என் நிலைமை. “கவலைப் படுவதற்கும் ஒன்றுமில்லை. வீட்டுக்கு வந்த பிறகு விவரமாக சொல்கிறேன்.” போனை வைத்து விட்டேன்.
காலையில் நடந்த நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது.
காலையில் அவர் தியானத்தில் ஈடுப்பட்டிருந்தார். அந்த தியானம் முடிய மேலும் அரைமணியாவது ஆகும். வர வர அவருடைய ஆன்மீக வழிப்பாட்டு நேரம் அதிகரித்துக் கொண்டே போகிறது. உணவு வேளை தாண்டிவிட்டாலும் தியானத்திலிருந்து மீண்டு வரமாட்டார். மகன், மருமகள் ஆபீஸ¤க்கும், குழந்தைகள் ஸ்கூலுக்கும் போன பிறகு நிம்மதியாக இருக்கும் என்று அறையில் ஒ/ரு மூலையில் சின்ன பாயை போட்டுக் கொண்டு பத்மாசனத்தில் அமர்ந்துவிடுவார்.
தினமும் சாப்பிட்ட பிறகு நான் போட்டுக் கொள்ள வேண்டிய ரத்த அழுத்தத்திற்கான மாத்திரைகள் தீர்ந்து விட்டிருந்தன. ஒரு வேளை கூட நிறுத்தக் கூடாது என்று டாக்டர் சொல்லியிருந்தார். தீர்ந்து போய் மூன்று நாட்களாகிவிட்டன. மகனிடம் இரண்டு மூன்று முறை சொல்லியும் இதோ வாங்கி வருகிறேன் என்று சொன்னானே தவிர வாங்கி வரவில்லை. மகனிடம் இரண்டு மூன்று மு¨று சொல்லியும் இதோ வாங்கி வருகிறேன் என்று சொன்னானே தவிர வாங்கி வரவில்லை.ஆபீஸ¤க்குப் போனதுமே வீட்டைப் பற்றிய நினைப்பு இருக்காது போலும். வாங்கிக் கொண்டு வந்தாச்சா என்று கேட்டால் இரண்டு பேருமே கையை விரிப்பார்கள். மருமகள் பஸ்ஸில் போவாள். அதனால் அந்த பரபரப்பில் தன்னால் முடியாது என்று சொல்லிவிட்டாள். மகன் ஸ்கூட்டரில் போவான். சாலையில் ட்ரா·பிக் மும்மரத்தில் ஸ்கூட்டர் ஓட்டுவதே உயிர் பிரச்னையாக இருக்கும். கவனம் முழுவதும் சாலையின் மீதுதான் இருக்கும். வேறு நினைப்பே மனதில் வராது என்று சொல்லி விடுவான். வீட்டுக்கு வரும்போது மருமகள் களைத்துப் போய் பிடுங்கிப் போட்ட கீரைத்தண்டாக துவண்டு இருப்பாள். மகன் வரும் போது தாமதமாகிவிடும். குழந்தைகளைப் பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை. ட்யூஷன், கோசிங் கிளாஸ் என்று வீட்டில் இருக்கும் நேரமே குறைவு. அப்படியே இருந்தாலும் அவர்களுடைய அறையில் கதவைச் சாத்திக் கொண்டு உள்ளே இருப்பார்கள்.
நாங்கள் இங்கே வந்தது முதல் ஏதோ இனம் புரியாத இடைஞ்சல் இருப்பதாக அவர்கள் எல்லோரும் உணருவது எனக்குப் புரியாமல் இல்லை. நாங்கள் மட்டும் வேண்டுமென்றோ, வசதியாக இருக்கணும் என்றோ எதிர்பார்த்து இங்கே வந்தோமா? கிருகப் பரவேசத்திற்கு வரச்சொல்லி வற்புறுத்தி கடிதம் எழுதியதால் கிளம்பி வந்தோம். தாய் தந்தை வரவில்லை என்றால் பத்து பேர் ஏதாவது சொல்வார்களே என்று பயந்து அதற்காகத்தான் அழைத்தார்கள் போலும். மருமகளின் பெற்றோர்கள் பங்ஷன் முடிந்த மூன்றாவது நாள் போய் விட்டார்கள். நாங்களும் அப்படி போய் விடுவோம் என்று நினைத்தார்களோ என்னவோ. ரொம்ப நாள் கழித்து மகன் வீட்டுக்கு வந்திருக்கிறோம். நான்கு நாட்கள் இருந்துவிட்டு போகலாம் என்று தோன்றுவது சகஜம்தானே. எப்போ கிளம்பிப் போவார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பது போல் தோன்றும், குழந்தைகளின் தோரணையைப் பார்த்தால். மகனோ நாங்கள் வீட்டில் இருக்கிறோமா இல்லையா என்று லட்சியம் இல்லாதது போலவே நடந்துகொண்டான். எங்களுடன் பேசுவதற்கு அவனுக்கு எந்த விஷயமும் இருக்காது. சிறு வயதில் அவன் அப்பாவிடம் போவதற்கு பயந்து கொண்டு என் மடியிலும், பக்கத்திலும் வந்த அமர்ந்துகொண்டு ஸ்கூல் சமாசாரங்களை வாய் மூடாமல் சொல்லுவான். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது கூட அம்மா அம்மா என்று பின்னாலேயே சுற்றிக் கொண்டு ஏதாவது சொல்லிக் கொண்டே இருப்பான்.
வேலைக்காக அவன் பட்டணத்திற்கு போன பிறகு தூரப் பயணம் என்பதுடன் மனதளவிலும் பரிவு ஏற்படத் தொடங்கியது. போன புதிதில் அடிக்கடி கடிதம் எழுதினாலும் போகப் போக அதுவும் குறைந்து விட்டது. கல்யாணம் ஆகி குழந்தைகள் பிறந்த பிறகு அவரவர்களின் குடித்தனம் என்றாகிவிட்டது. வருடத்திற்கு ஒரு முறை விருந்தாளியாக வருவது, பத்து நாட்கள் எங்கள் வீட்டிலும், நாலைந்து நாட்கள் வேட்டாத்திலும், மேலும் ஒரு வாரம் குழந்தைகளுக்காக ஏதாவது புதிய ஊருக்குப் போவதுமாக வருடங்கள் கழிந்து கொண்டிருந்தன.
அங்கே ஊரில் எங்களுக்குத் துணையாய் ஒரு நாயும் கொல்லைப்புரத்தில் சில செடி கொடிகளும் இருந்தன. அவருக்கு சில வெளி விவகாரங்கள், பொழுது போக்குகள். இதனால் வீட்டையும், ஊரையும் விட்டு விட்டு நாங்களும் நகரவில்லை. எப்போதும் அவர்கள்தான் வந்துவிட்டுப் போவது வழக்கம், அதுவும் கால்களில் சக்கிரத்தைக் கட்டிக் கொண்டு. எங்களுக்கு ஒரு அவசரம் என்றாலும் அவர்களுக்கு ஒரு தேவை ஏற்பட்டாலும் அவர்கள்தான் வந்து போவார்கள்.
இங்கே எல்லாமே புதுசு. மேலும் ஊர் எல்லையில் வாங்கிய வீடு இது. அதுவும் தனி வீடு இல்லை. ஒவ்வொரு மாடியில் நான்கு பிளாட்கள் இருக்கும் ஆறடுக்கு மாடிக் கட்டிடம். சுற்று வட்டாரத்தில் இதே போல் இன்னும் பல கட்டிடங்கள், கடைகள் உருவாகிக் கொண்டிருந்தன. சில கடைகள் இரண்டு மூன்று பர்லாங்கு தொலைவில் இருந்தன. மருந்து மாத்திரை வாங்க வேண்டுமென்றால் அங்கேதான் போக வேண்டும். ஒரு தடவை மகன் யாருடனோ பேச்சு வாக்கில் சொன்னதிலிருந்து புரிந்து கொண்டேன்.
வாயில் வார்த்தை இல்லையா என்ன? மருந்துக் கடை எங்கேயிருக்கு என்று கேட்டால் யாராவது சொல்லாமல் போக மாட்டார்கள். நானே போய் வாங்கி வரலாம் என்று நினைத்தேன். இவருடைய தியானம் இப்போதைக்கு முடிவதாகத் தெரியவில்லை. ஏதாவது கனவுலகில் சஞ்சரிக்கிறாரோ என்னவோ? எந்த தியானமாக இருந்தாலும் ஆண்களுக்குத்தான் கட்டுப் படியாகும். தரையில் சம்மணம் இட்டபடி உட்கார்ந்து அரைமணி கூட வேண்டாம், பத்து நிமிடங்கள் தியானம் செய்யணும் என்றால் பெண்களுக்கு நடக்கிற காரியமா என்ன? எத்தனை இடைஞ்சல்கள் வரும்? யாராவது கதவைத் தட்டுவார்கள். வேலைக்காரி அழைப்பாள். இல்லையா பூனை சமையலறைக்குள் புகுந்து பால் பாத்திரத்தை உருட்டும். குழந்தைகள் வீட்டில் இருந்தால் ரகளை செய்வார்கள். ஏதோ ஒன்று. இப்படி உலக ரீதியான தொல்லைகளாலும், பலவிதமான எண்ணங்களாலும் திக்கு முக்காடிக் கொண்டிருக்கும் போது ஆன்மீக சிந்தனைக்கு நேரம் எங்கே இருக்கும்?
தியானத்திலிருந்து அவர் மீண்டு வருவதற்குள் மருந்துக் கடைக்குப் போய் திரும்பி வந்து விடலாம் என்று நினைத்துக் கொண்டேன். ஆட்டோமேடிக் லாக் என்பதால் வாசற்கதவை பலமாக சாத்திவிட்டு வெளியில் கிளம்பினேன். நான் திரும்பி வரும் போது அவருடைய தியானம் முடிந்திருக்கும். கதவைத் தட்டினால் திறந்துவிடப் போகிறார் என்று எண்ணியவளாய் கையில் பணத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டேன். கடைத்தெருவுக்குப் போய் பழக்கம் இல்லை என்றாலும் பிடிவாதமாக கிளம்பினேன். அடிக்கடி மற்றவர்களை தொந்தரவு செய்தால் அவர்களுக்கு நம் மீது எரிச்சல் வரத்தானே செய்யும்? முடிந்த வரையில் நம் வேலைகளை நாமே செய்து கொள்ள பழகிக் கொண்டால் யாருக்குமே தொல்லையில்லை. அந்தக் காலத்தில் எந்தக் காரணத்தினாலேயோ வெளி வேலைகளை ஆண்கள்தான் செய்யணும் என்று பெண்களை வீட்டிலேயே கட்டிப் போட்டு விட்டார்கள். தெருவில் தனியாக நடந்து போகணும் என்றாலே கூச்சமும் பயமும் சூழ்ந்து கொள்ளும். இந்தக் கால பெண்களுக்கு அந்தப் பிரச்னையில்லை என்றாலும் வேறுவிதமான பிரச்னைகள். வீட்டு வேலைகளையும், வெளி வேலைகளையும் சமாளிக்க முடியாமல், பஸ்ஸில் போக்கு வரத்து நெரிசலில் நலிந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.
வெளி கேட்டு தாண்டியதும் எதிரே வந்த பெரியவரிடம் மருந்துக் கடை எங்கே இருக்கு என்று கேட்டேன். அவர் சொன்னது போல் நேராக போய் இரண்டு தெருக்கள் திரும்பி மெயின் கேட் வரையிலும் நடந்தேன். போகும் போது சரியாகத்தான் போய் விட்டேன். திரும்பி வரும் பொது வலது பக்கம் திரும்புவதற்கு பதில் இடது பக்கம் திரும்பி விட்டேன் போலும். வழி தவறிப் போய்விட்டேன். எத்தனை தெருக்கள் திரும்பினாலும் நாங்கள் குடியிருந்த கட்டடம் இருந்த சாலை வரவில்லை. அந்த கட்டிடத்தின் பெயர் கூட புது தினுசில் இருக்கும். சமயத்திற்கு நினைவுக்கு வரவில்லை.புதிதாக கட்டப்பட்ட பில்டிங் என்று சொன்னால் அது போன்ற கட்டடங்கள் சுற்று வட்டாரத்தில் நிறைய இருக்கு என்றார்கள். மகன் குடியிருக்கும் பில்டிங்கிற்கு சற்று தள்ளி சின்னதாக அம்மன் கோவில் இருப்பதாக ரொம்ப நேரம் கழித்து நினைவுக்கு வந்தது. அதைக் குறிப்பட்டு விசாரித்த பிறகு யாரோ புண்ணிவான் வழியைச் சொன்னான். அலைந்து திரிந்து வந்து சேருவதற்குள் மதியம் தாண்டிவிட்டது. மாடி ஏறிய பிறகு கதவைத் தட்ட வேண்டிய அவசியம் இருக்கவில்லை. வாசற்கதவு திறந்துதான் இருந்தது. அவர் போனில் பேசிக் கொண்டிருந்தார்.
சொல்லாமல் போய்விட்டேன் என்று எல்லோரும் ஒரே குரலில் குற்றச்சாட்டு. அசல் விஷயத்தை சொன்னால் யாருமே நம்பவில்லை. நானேதோ கோபத்தில் வீட்டை விட்டு போய்விட்டேன் என்று எண்ணி ஆளாளுக்குப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
காலையில் அவருடைய மீசை கத்தரிக்கோல் காணவில்லை என்று என் மீது எரிந்து விழுந்தார். நான் பார்க்கவேயில்லை என்று மன்றாடி கேட்டுக் கொண்டாலும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.
“எத்தனை வயதானால் என்ன? இத்தனை வருடங்கள் குடித்தனம் செய்து என்ன பிரயோஜனம்? என்னுடைய பொருட்களை தொடாதே என்று சொன்னால் கேட்க மாட்டாய். எடுத்ததை அதே இடத்தில் வைக்கும் பழக்கம் இருந்தால்தானே?” என்று பழித்தார். கடைசியில் அந்த கத்திரிக்கோல் டெலிபோன் பக்கத்தில் இருந்த சிறிய மேஜை மீது இருந்தது. யார் எடுத்து அங்கே வைத்தார்களோ அந்த கடவுளுக்குத்தான் வெளிச்சம். இந்த வீட்டில் இருப்பது நான் ஒருத்தி மட்டும் இல்லையே? தனக்கும் மறதி வந்துவிட்டது என்ற விஷயத்தை அவர் ஒப்புக் கொள்ளவும் மாட்டார். என்னைக் கண்டால் அவருக்கு இளக்காரம். எந்த விஷயத்திலும் என்னை குற்றவாளியாக்கி சாடிக் கொண்டே இருப்பார். இன்னிக்கும் அதே போல் வசை பாடியதை, அதிலும் மகன் வீட்டில் இருக்கும் போது மருமகள்,பேரன் பேத்தி முன்னிலையில் கத்தியதற்கு கோபம் கொண்டு வீட்டை விட்டு போய் விட்டேன் என்று நினைத்து விட்டார்கள் போலும்.
மகளும் அதே ஊரில்தான் இருக்கிறாள். சமீபத்தில்தான் அவர்களுக்கு இந்த ஊருக்கு மாற்றலாகியிருந்தது. அவள் வீட்டுக்கு போய் விட்டேனோ என்று நினைத்திருப்பார். தனியாக போக வழியும் தெரியாதே என்று பயந்து போய் மகளுக்கு போன் செய்துவிட்டார் போலும்.
எங்களுடைய சாப்பாடு முடிந்த பிறகு மறுபடியும் மகளிடமிருந்து போன் வந்தது.
“அம்மா! உண்மையைச் சொல்லு. அப்பாவிடம் சொல்லாமல் எதற்காக வீட்டை விட்டு போனாய்?” என்று ஆர்வத்துடன் கேட்டாள்.
“உண்மைதான் சொல்கிறேன். மாத்திரை வாங்கணும் என்றுதான் போனேன். அப்பா தியானத்தில் மூழ்கியிருந்தார். போனோம் வந்தோம் என்று வந்து விடலாம்னு நினைத்தேன்” என்றேன்.
“அதற்காக வீட்டில் சொல்லாமல் போவானேன்? உனக்குத்தான் வெளி வேலைகள் செய்து பழக்கமே இல்லையே?”
“நன்றாக இருக்கு. தேவை ஏற்பட்ட போது கூட பழக்கம் இல்லை என்று உட்கார்ந்துகொண்டால் எப்படி நடக்கும்? எல்லா விஷயங்களிலும் ஆண்களைச் சார்ந்திருப்பதால்தான் பெண்களின் வாழ்க்கை இப்படி இருக்கு.” சலித்துக் கொண்டேன்.
“அவ்வப்பொழுது இப்படி சலித்துக் கொள்வாய் இல்லையா. அதான் அப்பாவிடம் நான் கேட்ட முதல் கேள்வி என்ன தெரியும்? ‘அம்மாவை ஏதாவது சொன்னீங்களா? இன்றைக்கு என்ன நடந்தது என்று?’ வழக்கம் போல் காலையில் எதுக்காகவோ கோபித்துக் கொண்டேன். அவ்வளவுதான் என்றார். எவ்வளவு கோபித்துக் கொண்டாலும், எவ்வளவு திட்டினாலும் வீட்டை விட்டு எங்கே போய்விடப் போகிறாள் என்ற தைரியம் உங்களுக்கு. இப்போ பாருங்கள் என்று அப்பாவிடம் சொன்னேன்.” கல்யாணி சொன்னாள்.
“அது சரி. இதெல்லாம் வழக்கமாக நடப்பதுதானே. கல்யாணம் ஆன பிறகுதானே உங்க அப்பாவிடம் பேசும் தைரியம் உனக்கு வந்தது?” என்றேன்.
“சமீபத்தில் முதியோர் இல்லத்தைப் பற்றி விசாரித்தாய் இல்லையா. அதான் எனக்கு சந்தேகம் வந்து விட்டது, அங்கேதான் போய் விட்டாயோ என்று வழியும் தெரியாதே, என்ன ஆகியிருக்குமோ என்று பயந்துவிட்டேன். என்ன செய்வதென்று புரியாமல் தவித்துப் போய்விட்டேன். இந்த நேரம் பார்த்து உங்க மாப்பிள்ளையும் ஊரில் இல்லை” என்றாள்.
“நல்ல வேளை. போலீஸில் ரிப்போர்ட் கொடுக்காமல் விட்டீங்க. ஆண்கள் எங்கே போவார்களோ, எத்தனை மணிக்கு திரும்புவார்களோ சொல்லிவிட்டுத்தான் போகிறார்களா? தாமதமாக வந்த போது வீட்டில் மனைவி கவலைப்பட்டால் அவளையே திட்டவும் செய்வார்கள். உங்க அப்பாவே அது போல் நடந்துகொண்டவர் தானே. நான் ஒரு தடவை அப்படிப் போனதும் ஏதோ வீடே பற்றி எரிந்து விட்டது போல் ரகளை செய்து விட்டீங்க எல்லோருமாக சேர்ந்து.” நிஷ்டூரமாக சொன்னேன்.
பக்கத்திலேயே கட்டில் மீது படுத்துக் கொண்டிருந்த கணவர் போனில் மகளிடம் நான் பேசுவதைக் கேட்டு விருட்டென்று எழுந்து உட்கார்ந்துகொண்டார். “ஆண்களுடன் உனக்கு போட்டியா? ஆண்களும் பெண்களும் ஒன்றாகி விடுவார்களா என்ன?” ஆவேசமாக சொன்னார். அவருக்கு எடுத்துச் சொல்வது முடியாத காரியம் என்று எனக்குத் தெரியும். பெண்ணாக பிறந்தவளுக்கு எதுவும் தெரியாது என்றும், மனைவியை அடக்கி ஆளுவது கணவனின் கடமை என்றும் நினைப்பவர்.
மாலையில் ஆபீஸிலிருந்து மருமகள் திரும்பி வந்ததும் கணவன் மனைவியுமாக சேர்ந்து என் மீது படை எடுத்தார்கள், சொல்லாமல் வீட்டை விட்டு ஏன் போனீங்க என்று. வீட்டை விட்டு போகவில்லை சாமீ, மருந்து வாங்க கடைக்குப் போனேன் என்று சொன்னால் அவர்கள் நம்பினால்தானே.
“அப்படி என்றால் உங்களுக்கு வேண்டிய மருந்து மாத்திரை நாங்கள் வாங்கித் தரவில்லை என்றுதானே? நாங்கள் உங்களை சரியாக பார்த்துக் கொள்ளவில்லை என்று பத்து பேருக்கு பறைச்சாற்றணும் என்ற எண்ணம்தானே? அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள், ஆபீஸ்க்காரர்கள், உறவினர்கள் இவர்களுக்கு நடுவில் எங்களுடைய மரியாதை என்ன ஆவது?” ஜோடிக் கவிகளாக ஆளாளுக்கு பாட்டை எடுத்து விட்டார்கள். அவர்களுடைய குறையை மறைப்பதற்கு குற்றத்தை என் மீது தள்ளிவிட்டார்கள்.
பேரன், பேத்திக்கு மட்டும் இந்தக் கதை ரொம்ப த்ரில்லிங்காக இருந்தது. நான் ஏதோ அட்வெஞ்சர் செய்து விட்டேனாம்.
“கிராண்ட் மா! ரொம்ப துணிச்சல் உங்களுக்கு” என்று சொல்லிவிட்டு கையை குலுக்கினார்கள். மகன் மருமகளை விட இவர்களே தேவலை என்று தோன்றியது. பிரியத்தைக் காட்டவில்லை என்றாலும் என்னுடைய தைரியத்ததை பாராட்டினார்கள்.
உண்மையைச் சொல்லணும் என்றால் இப்போ இருக்கும் தைரியம் கூட இளமையில் எனக்கு இருந்தது இல்லை. ஒரு தடவை நடந்த நிகழ்ச்சியை என்னால் எப்போதும் மறக்க முடியாது. வேறொரு பெண்ணின் வியாமோகத்தில் விழுந்து என்னை புறக்கணித்து வருகிறார் என்ற சந்தேகம் பலப்பட்டுக் கொண்டிருந்த நாட்கள் அவை. ஒரு நாள் இரவு தாமதமாக வீட்டுக்கு வந்த போது விளக்கம் கேட்டேன் என்பதற்காக அவர் பாதி சாப்பாட்டிலேயே கையை அலம்பிவிட்டு போய் படுத்துக் கொண்டார். எனக்கு அந்த வீட்டில் ஒரு நிமிடம் கூட இருக்க பிடிக்கவில்லை. ஆனால் வீட்டை விட்டு எங்கே போவது? என்ன செய்வது? அதுவும் புரியவில்லை. யோசித்துக் கொண்டே இருட்டில் வாசல் திண்ணையின் தூணைப் பிடித்துக் கொண்டு ரொம்ப நேரம் நின்று கொண்டிருந்தேன். நான் தனியாள் இல்லை. இரண்டு வயதில் மகன் இருக்கிறான். மறுபடியும் கருவுற்று இருந்தேன். பிறந்த வீட்டுக்குப் போகும் தைரியமும் இல்லை. தன்மானமும் அதற்கு இடம் கொடுக்கவில்லை.
பத்தாம் வகுப்பு வரையில் படித்தவளுக்கு என்ன வேலை கிடைத்து விடும்? முதலில் வீட்டை விட்டு வெளியே போனால் எங்கே போய் தங்குவது? கையில் சல்லிக்காசு இல்லாத போது எப்படி வாழ முடியும்? இது போன்ற நிலைமையில் அவருடைய பணத்தை எப்படி தொடுவது? என்ன செய்வது என்று புரியவில்லை.
இப்போ அவர் என்னை வீட்டை விட்டு வெளியில் போ என்று சொல்லவில்லையே? அப்படியிருக்கும் போது எதற்காக போகணும்? விஷயம் அவ்வளவு தூரத்திற்கு வந்தால் அப்போ பார்த்துக் கொள்வோம் என்று முடிவு செய்து, தன்மானத்தை குழி தோண்டி புதைத்துவிட்டு மறுபடியும் உள்ளே போனேன்.
அப்படி இருக்கும் போது, இன்று நடந்த நிகழ்ச்சிக்கு வீட்டை விட்டு போகணும் என்ற யோசனையை எனக்கு வரவில்லை. ஆனால் ரொம்ப தீவிரமாக தோன்றியிருந்தால் போயிருப்பேனோ என்னவோ. வீட்டை விட்டு போகணும் என்றால் இதற்கு முன் இருந்தது போல் சந்தேகங்களோ, பயமோ இப்போ எனக்கு இல்லை. பயத்தை உண்டு பண்ணும் சமுதாயமோ சூழ்நிலையோ இல்லை. எதிர்காலத்தைப் பற்றி, சமுதாயத்தைப் பற்றி நாமாக ஏற்படுத்திக் கொண்ட பயங்கள்தான் காரணம் என்று புரிந்து கொண்டேன். உண்மையிலேயே தாங்கள் நினைத்ததை செயலாக்க நினைப்பவர்களுக்கு எதுவும் தடையாக இருக்காது. ராமாரை யாரால் தடுக்க முடிந்தது? சித்தார்த்தனுக்கு யாரால் தடை விதிக்க முடிந்தது? அவரவர்களின் செயல்களுக்கு அவரவர்கள்தான் பொறுப்பு.
இரவு படுத்துக் கொள்ளும் போது கட்டில்மீது உட்கார்ந்தபடி மறுபடியும் கேட்டார், இந்த முறை கொஞ்சம் நயம் கலந்த குரலில். ” சொல்லாமல் எங்கே போயிருந்தாய்?”
“மருந்து வாங்கணும் என்று சொன்னால் நீங்க என்னை போக விட்டிருப்பீங்களா? அது போகட்டும் விடுங்க. வேண்டுமென்றே சொல்லிக் கொள்ளாமல் வீட்டை விட்டு போய் விட்டதாக ஏன் நினைத்தீங்க?” என்று கேட்டேன்.
“சாப்பாடு கூட போடாமல் போய் விட்டால் நான் வேறு எப்படி நினைப்பது? எல்லோருக்கும் முன்னால் உன்னைக் கோபித்துக் கொண்டதற்கு ரோஷப்பட்டுக் கொண்டு போய் விட்டாயோ என்று சந்தேகம் வந்தது. இரண்டு மணி நேரம் ஆனாலும் நீ வீடு திரும்பவில்லை. வீட்டில் என்னை தனியாக விட்டு விட்டுப் போய் விட்டால் நான் என்ன செய்வது?” என்றார்.
தனிமை என்றால் தனக்கு இருக்கும் பயத்தை, எல்லா வேலைகளுக்கும் மனைவியைச் சார்ந்திருக்கிறோம் என்ற உண்மையை ஆணாதிக்கியம் என்ற திரைக்குப் பின்னால் மறைத்துவிட்டு, வழக்கமான அதட்டல் தோரணையில் “இனி ஒரு போதும் இது போல் அசட்டுத்தனமாக நடந்துக் கொள்ளாதே” என்று சொல்லிக் கொண்டே விளக்கை அணைத்துவிட்டு நிம்மதியாக படுத்துக் கொண்டார்.
எதிர்பாராத விதமாக இவர்கள் எல்லோரையும் கொஞ்ச நேரம் ஆட்டி வைத்தேன் என்ற சந்தோஷத்தில் ரொம்ப நேரம் வரையில் எனக்கு உறக்கம் வரவில்லை.
முற்றும்


தெலுங்கில் Abbori Chayadevi
தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்
email id; tkgowri@gmail.com

Series Navigation

கௌரிகிருபானந்தன்

கௌரிகிருபானந்தன்