தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்
சலனமற்று தரையில் கிடந்தார் நாராயணன். என்ன நடந்தது என்று ஜானகிக்குப் புரியவில்லை. காலையிலேயே எழுப்பி உடம்பைத் துடைத்து காபி குடிக்க வைப்பதற்காக சமைலறைக்குள் அழைத்து வந்திருந்தாள். திடீரென்று அவர் ஒரு மாதிரியாக கத்திக் கொண்டே தரையில் சரிந்துவிட்டார். முணகிக் கொண்டிருந்தாரே ஒழிய கூப்பிட்டால் பதில் வரவில்லை. ஹார்ட் அட்டாக்காக இருக்குமோ என்று நினைத்தாள் ஜானகி. முதலில் 911 கூப்பிட வேண்டுமா இல்லை கணவனை கூப்பிட வெண்டுமா என்று புரியவில்லை. அந்த நிமிடம் அவளுக்கு திடீரென்று ஒரு எண்ணம் தோன்றியது. “கடவுளே! இந்த நபர் இப்படியே இறந்து போனால் அதை விட அதிர்ஷ்டம் அவருக்கு வேறு இருக்காது, இருக்கவும் முடியாது. இப்போ 911யை கூப்பிட்டால் அம்புலென்ஸ்காரர்கள் வருவார்கள். போய்க் கொண்டிருந்த உயிரை மறுபடியும் மீட்டுத் தருவதற்கு முயற்சி செய்வார்கள். தான் கொஞ்சம் தாமதப்படுத்தினால்? ஒருக்கால் அவருடைய உயிர் பிரிந்து போனால்? அதில் தவறு என்ன இருக்கிறது? அதனால் யாருக்கு நஷ்டம்? ஜானகியின் மனதில் போராட்டம் தொடங்கிவிட்டது.
“இவர் இப்போ இந்த இடத்திலேயே இறந்து போனால் தான்தான் அவரை கொன்று விட்டோம் என்று வாழ்நாள் முழுவதும், ஒவ்வொரு நிமிடமும் மன உளைச்சலுடன் தன்னால் வாழ முடியுமா? மனநிம்மதிதான் இருக்குமா?”
எண்ணங்களின் கொந்தளிப்பால் அவள் மனம் கலங்கிவிட்டது. கடியாரத்தைப் பார்த்தாள். மணி 9.35. அவர் விழுந்தது 9.30க்கு. இனியும் பொறுத்துக் கொள்ள முடியாமல் கணவரின் செல் நம்பருக்கு கூப்பிட்டாள். ஆன்ஸரிங் மிஷினில் மெஸேஜ் வந்தது. அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. உடனே 911யை அழுத்தினாள்.
அய்யோ! இவர் பிழைத்துக் கொண்டுவிட்டால் எப்படி? அதன் விளைவுகள் எப்படி இருக்கும்? அவருடைய வாழ்க்கை எப்படி இருக்கும்?எங்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கும்? விதவிதமான எண்ணங்கள் கடல் அலைகளாய் மனதில் கொந்தளித்துக் கொண்டிருந்தன. பதினைந்து நிமிடங்களில் அம்புலென்ஸ்காரர்கள் வந்தார்கள். கவனமாக தூக்கி ஸ்ட்ரெச்சரில் வைத்தார்கள். பேஷண்டை அருகில் இருக்கும் ஹாஸ்பிடல் எமர்ஜென்ஸிக்கு அழைத்துப் போவதாகவும், அங்கே வந்து பார்த்துக் கொள்ளச் சொல்லிப் போய்விட்டார்கள்.
கணவருக்கு மறுபடியும் ·போன் செய்து மெஸேஜை விட்டு, சுவாமி ருமுக்குச் சென்று கதவைச் சாத்திக் கொண்டு அழுதாள் ஜானகி.
சிறுவயது முதல் ஜானகிக்கு பக்தி அதிகம், காலையில் பூஜை செய்யாமல் வெளியில் கிளம்பமாட்டாள். தினமும் செய்வது போலவே பூஜையை முடித்துக் கொண்டு மாமனாரை எழுப்பி உடம்பைத் துடைத்துவிட்ட பிறகு இந்த ரகளை நடந்திருக்கிறது.
“கடவுளே! இவரை உன்னிடம் அழைத்துக் கொண்டுவிடு. சனிக்கிழமைதோறும் கோவிலுக்கு வந்து பிரதட்சிணம் செய்கிறேன். ஒவ்வொரு வாரமும் தேங்காய் உடைக்கிறேன்.” கண்மூடித்தனமாக வேண்டிக் கொண்டாள் ஜானகி. உடனே இனம் புரியாத பயம் ஏதோ அவளை சூழ்ந்து கொண்டது. “நான் என்ன செய்துக் கொண்டிருக்கிறேன்? ஒரு மனிதனின் உயிரைப் பறித்துக் கொள்ளச் சொல்லி கடவுளை வேண்டிக் கொள்கிறேனே? அது பாவம் இல்லையா? பின்னே என்னவென்று வேண்டிக் கொள்ளணும்? அவர் பிழைக்கணும் என்று வேண்டுக் கொள்ளணுமா? அதற்காக அவரை எடுத்துக் கொண்டு போய் விடு என்று வெண்டிக் கொள்வது நியாயமாகுமா? இப்படி வேண்டிக் கொண்டேன் என்று என்னால் பத்து பேருக்கு நடுவில் தைரியமாக சொல்ல முடியுமா? அப்படி சொல்ல முடியாத பட்சத்தில் நான் வேண்டிக் கொள்வது நியாயம்தானா?
பலவிதமான எண்ணங்கள் ஜானகியை அலைக்கழித்துக் கொண்டிருந்தன. அதற்குள் ·போன் மணி ஒலித்தது. மறுமுனையில் ரமேஷ். ஜானகி நடந்தவற்றை எல்லாம் சொன்னாள். அவர் குரலில் நடுக்கத்தை உணர்ந்தான் ரமேஷ்.
“ஜானகீ! ஏன் இப்படி பதற்றமாக இருக்கிறாய்? அவர் கட்டாயம் தேறிக் கொள்வார். இதில் உன்னுடைய தவறு எதுவும் இல்லை. நீ பயப்பட வேண்டியதில்லை. நான் ஹாஸ்ஹிடலுக்கு வருகிறேன். அங்கே சந்திப்போம்.” ·போனை வைத்துவிட்டான்.
தான் பயப்படுகிறாளா? எதற்காக பயப்படுகிறாள்? அவர் இறந்து போய் விடுவாரே என்றா? இல்லை பிழைத்துக் கொண்டு விடுவாரோ என்றா? இந்த விஷயத்தை கணவரிடம் மனம் விட்டு வெளிப்படையாய் தன்னால் சொல்ல முடியுமா? சொன்ன பிறகு நிம்மதியாக வாழ முடியுமா? தனக்கு அவ்வளவு தைரியம் இருக்கிறதா? மனதில் கலவரமாய் இருந்தது. அறைக்குள் சென்று உடைகளை மாற்றிக் கொண்டு, கார் சாவியை பர்ஸை எடுத்துக் கொண்டு காரில் உட்கார்ந்துக் கொண்டாள். அவள் மனம் கடந்த காலதை அசை போட்டது.
*********************************************************************************************************
ரமேஷ் ஜானகிக்குத் திருமணமாகி கால் நூற்றாண்டு ஆகி விட்டது. நாராயணன், சீதா தம்பதிகளின் கடைக் குழ¨ந்தை ரமேஷ். ரமேஷ¤க்கு இரண்டு அண்ணன், ஒரு அக்கா. பெரிய அண்ணா மும்பாயிலும், சின்னவன் பெங்களுரிலும், அக்கா ஹைதராபாத்திலும் நல்ல வேலைகளில் இருந்தார்கள். அவரவர்களின் குடும்பங்களில் மூழ்கியிருந்தார்கள். ரமேஷ் இன்ஜினியரிங் முடித்து விட்டு அமெரிக்காவுக்கு வந்தான். சொந்த மண்ணின் பண்பாட்டில் ஈடுபாடு அதிகம் என்பதால் படித்திருந்தாலும் தன்னுடைய சுபாவத்துடன் ஒத்துப் போகும் துணைக்காக தேடித் தேடி ஜானகியைத் திருமணம் செய்துக் கொண்டான். ஜானகி இலக்கியத்தில் எம்.ஏ. படித்து விட்டு பி.ஹெச்.டி. செய்துக் கொண்டிருந்தாள். கல்யாணமானதும் படிப்பை நிறுத்திவிட்டு கணவருடன் அமெரிக்காவுக்கு வந்தாள். கணவருடன் செய்து கொண்டு உடன்படிக்கையின் படி குழந்தைகளை வளர்க்கும் போது வேலைக்குப் போகவில்லை. மகன்கள் இருவரையும் தங்களுடைய பண்பாட்டின் படியே வளர்த்து ஆளாக்கினாள். அமெரிக்காவில் குடியிருந்த இந்திய இல்லத்தரசிகள் வேலைக்கும் போய்க் கொண்டும் மளமளவென்று வேலைகளை செய்துக் கொண்டும் தங்களுடைய அனுபவங்களைப் பற்றி சொல்லும் போது சில சமயம் ஜானகியின் மனதில் சுருக்கென்று தோன்றும், மகன்கள் இருவரும் வளர்ந்து கல்லூரிக்கு போன பிறகு வேலைக்கு போய்க் கொள்ளலாம் என்று தன் மனதை சமாதானப் படுத்திக் கொண்டாள் ஜானகி. பெரியவன் காலேஜுக்கு போன போது சின்னவன் பத்தாம் வகுப்பிற்கு வந்தான். இன்னும் மூன்று வருடங்கள் கண்ணை மூடிக் கொண்டால் தனக்கு சுதந்திரம் கிடைத்துவிடும் என்று நினைத்துக் கொண்டாள். அது ஆறு வருடங்களுக்கு முன்பு. அதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்புதான் மாமியார் இறந்துவிட்டிருந்தாள். மாமனார் மட்டும் தனியாக சமையல்காரியை ஏற்பாடு செய்துகொண்டு தனியாக இருந்து வந்தார். ஆனால் நாள் போகப் போக அவருக்கு மறதி அதிகமாகிவிட்டது. உறவுக்காரர்களை, தெரிந்தவர்களை, பொருட்களை கூட அடையாளம் தெரியாமல் போனதும் சமையல்கார மாமி பதற்றமடைந்து விட்டாள். நாராயணன் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் ராஜாராமன் அவருக்கு ரொம்ப நெருக்கமான நண்பர். அவரைக் கொண்டு குழந்தைகளுக்குக் கடிதம் எழுதி போடச் செய்தாள். அவரவர்களுக்கு முடிந்த போது வந்து தந்தையை டாக்டரிடம் அழைத்துச் சென்று பரிசோதனைகளை செய்ய வைத்தார்கள். எல்லாம் சரியாகத்தான் இருக்கு. வயோதிகத்தினால் ஏற்படும் மறதிதான் என்று முடிவு கட்டிவிட்டு அவரவர்கள் ஊருக்குப் போய்ச் சேர்ந்தார்கள். பெங்களுரில் இருக்கும் சுரேஷ் தந்தையை தன்னுடன் அழைத்துப் போக நினைத்தாலும் மனைவியின் ஒத்துழைப்பு கிடைக்காததால் சும்மாயிருந்துவிட்டான்.
சில மாதங்கள் கழிந்தன. நாராயணனின் நிலைமை மேலும் மோசமாகிவிட்டது. உயிர் நண்பன் ராஜாராமைனை கூட சில சமயம் அவருக்கு அடையாளம் தெரியவில்லை. மறுபடியும் டாக்டரிடம் காட்டிய போது ஆல்ட் ஹைமர் டிஸீஸ் என்று தெரிந்தது. இனி இவரை யாராவது ஒருத்தர் அருகில் இருந்து பார்த்துக் கொள்ளத்தான் வேண்டும் என்று நாராயணனின் குழந்தைகளுக்கு மறுபடியும் கடிதம் போட்டார் ராஜாராமன். வேலை மும்மரத்தில் இருந்ததால் ரமேஷால் தந்தையைப் போய்ப் பார்க்க முடியவில்லை. நான்கு குழந்தைகள் இருந்தும் அப்பா நர்ஸிங்கஹோமில் எதற்காக இருக்கணும் என்று மனைவியுடன் வாதம் புரிந்தான் ரமேஷ். அவளை சம்மதிக்க வைத்து தந்தையை அமெரிக்காவுக்கு அழைத்து வந்தான். சிடிசனாக இருப்பதால் தந்தைக்காக கிரீன் கார்ட்டுக்கு அப்ளை செய்தான். ஒரு வருடத்தில் தந்தைக்கு கிரீன் கார்ட் கிடைத்துவிட்டது. அமெரிக்காவுக்கு வந்த புதிதில் மகனையும், மருமகளையும் சிலசமயம் நாராயணன் அடையாளம் புரிந்து கொண்டார். வீட்டில் இருந்த பேரனைப் பார்த்து வேற்று மனிதனை விசாரிப்பது போல் “சௌக்கியமா தம்பீ?” என்று குசலம் விசாரிப்பார். எப்போதும் டி.வி.யைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பார். அருகில் இருந்து குளிப்பாட்ட வேண்டியிருந்தது. பாத்ரூமுக்கும் உடன் இருந்து அழைத்துப் போக வேண்டிய நிலைமை. தந்தையின் நிலைமையைப் பார்த்த போது ரமேஷ¤க்கு வேதனையாக இருந்தது.
தான் வீட்டிலேயே இருப்பதால் அவரை பார்த்துக் கொள்வது சிரமமாக இருக்காது என்று சொன்னாள் ஜானகி. மூன்று வருடங்கள் கழிந்துவிட்டன. இரண்டாவது மகனும் காலேஜுக்குப் போய்விட்டான். தனக்கு நாற்பத்தைந்து வயதாகிவிட்டது. பெரியவனுக்கு இருபத்தி இரண்டு. காலேஜில் சீனியர். இரண்டாவது மகனுக்கு பதினெட்டு வயது. அப்பொழுதுதான் காலேஜில் சேர்ந்து இருந்தான். கம்ப்யூட்டர் வகுப்புகளில் சேர்ந்து கோர்ஸ் ஏதாவது படித்துவிட்டு வேலைக்கு போகணும் என்று ஜானகி ரொம்ப ஆசைப்பட்டாள். ஆனால் மாமனாரின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டிருந்தது. தான் வேலைக்குப் போய்விட்டால் அவரை எப்படி சமாளிப்பது என்பது பெரிய கேள்விக்குறியாக இருந்தது.
அவருடைய மருத்துவச் செலவுக்காக சோஷல் செக்யூரிடீகாரர்கள் மாதத்திற்கு முன்னூறு டாலர்கள் தந்து கொண்டிருந்தார்கள். அந்தப் பணத்துடன் இன்னும் ஐநூறோ அறுநூறோ கொடுத்தால் யாரவது ஆள் கிடைக்காமல் போக மாட்டார்கள். அவர்களுடைய பொறுப்பில் மாமனாரை விட்டு விட்டு தான் வேலைக்கும் கம்ப்யூட்டர் கோர்ஸ¤க்கும் போகலாம் என்று நினைத்தாள் ஜானகி. ரமேஷ¤ம் அதற்கு ஒப்புக்கொண்டான். ஆனால் சரியான ஆள் கிடைக்கவில்லை. குஜராதி பெண் ஒருத்தி வந்தாள். எப்போதும் டி.வி.யைப் பார்த்துக் கொண்டோ, ·போனில் பேசிக் கொண்டோ இருந்தாளே ஒழிய வீட்டில் என்ன நடக்கிறது என்று லட்சியப்படுத்தாமல் இருந்தாள். இரண்டாவதாக ஒருத்தி வந்தாலும் வீட்டை முழுவதும் களேபரமாக்கி விட்டாள். அலுத்து சலித்து வீட்டுக்கு வந்தால் மாமனாரையும் அவர் இருக்கும் நிலைமையையும், வீட்டையும் பார்த்தால் ஜானகிக்கு அழுகைதான் வரும். நான்கு குழந்தைகள் இருக்கும் போது இந்த பொறுப்பு தன் மீது தான் விழணுமா என்ற ஆதங்கம் அவளுக்கு. ஏகப்பட்ட வேலைகளுடன் நலிந்து போய்க் கொண்டிந்த ஜானகியைப் பார்த்து ஒரு நாள் ரமேஷ் சொன்னான். “ஜானகீ! மாதம் இரண்டாயிரம் டாலர்கள் சம்பாதிக்கிறாய். டாக்ஸ் போக கைக்கு ஆயிரத்தைநூறு டாலர்கள் சம்பாதிக்கிறாய். அதில் பாதியை அப்பாவைப் பார்த்துக் கொள்வதற்காக செலவு செய்கிறாய். உனக்கு மிச்சம் எழுநூறு டாலர்கள். போகட்டும், சந்தொஷமாக இருக்கிறாயா என்றால் அதுவும் இல்லை. வீட்டு வேலை முழுவதும் நீதான் செய்கிறாய். நிம்மதியாக வீட்டோடு இருந்து கொண்டு, ஓய்வு எடுத்துக் கொண்டு அப்பாவையும் நீயே பார்த்துக் கொண்டால் ஆகாதா? நீ ஏன் கஷ்டப்படணும்? நான் சொன்னேன் என்பதற்காக இல்லை. நீயே யோசித்து, உன் மனதுக்கு பிடித்த விதமாக முடிவு செய்” என்றான் ரமேஷ்.
கணவன் சொன்னதில் இருந்த உண்மையைப் புரிந்து கொண்டாள் ஜானகி. வேலைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, இரவு நேரத்தில் கம்ப்யூட்டரிலேயே கோர்ஸ¤களை படிக்கலாம் என்று முடிவு செய்தாள். மேலும் மூன்று வருடங்கள் கழிந்தன. நாராயணனின் நிலைமை மெலும் க்ஷ£ணமாயிற்று. பெற்ற தந்தைக்கு ஒரு நாளும் அருகில் இருந்து பரிமாறியதில்லை. இவருக்கு சின்னக் குழந்தைக்கு ஊட்டுவது போல் சாதம் ஊட்ட வேண்டும். எந்த ஜென்மத்தில் கடன் பட்டு இருக்கிறேமோ என்று ஜானகிக்குத் தோன்றும். மெதுவாக மனதைச் சமாதானப்படுத்திக் கொண்டாள். நாட்கள் கழிந்துக் கொண்டிருந்தன. ஏதோ ஒரு நாள் தனக்கு விமோசனம் கிடைக்காமல் போகாது என்ற நம்பிக்கை ஜானகிக்கு. அவளுக்கு இப்போ வயது நாற்பத்தி எட்டு. பெரிய மகன் மெடிகல் காலேஜில் ஜூனியர். சின்னவன் காலேஜில் சீனியர். வீட்டில் கைக்குழந்தை இருப்பது போல் ஜானகிக்கு மாமனாருடன் நித்தியப்படி வாழ்க்கை பழகிவிட்டது.
செல்·போன் ஒலித்ததும் இவ்வுலகிற்கு மீண்டாள் ஜானகி. “ஹாய் மம்மீ! வீட்டுக்கு போன் செய்தால் நீ இருக்கவில்லை. அதான் செல்லுக்கு செய்கிறேன். பிளயிட்டில் டிக்கெட்டை புக் செய்து விட்டேன். அடுத்த வெள்ளிக் கிழமை இரண்டு மணிக்கு வருகிறேன். உன்னால் ஏர்போர்ட்டுக்கு வர முடியுமா?” சின்ன மகன் ஸ்ரீனிவாஸ் கேட்டான்.
“தாத்தாவின் நிலைமை எப்படி இருக்குமோ தெரியவில்லை” என்றபடி விவரங்களை தெரிவிததாள் ஜானகி.
“அம்மா! நீ ஒன்றும் நினைத்துக் கொள்ளவில்லை என்றால் ஒன்று சொல்கிறேன். இப்படி எல்லாம் அரக்கத்தனமாக யோசிப்பார்களா என்று நினைக்காதே. தாத்தாவுக்கு தீவிரமாக சிகிச்சை செய்து பிழைக்க வைக்க வேண்டாம் என்று டாக்டர்களிடம் அப்பா சொல்லணும் அம்மா. தாத்தாவுக்கு வயது இப்போ ஏறக்குறைய எண்பது. அவருக்கும் வெளி உலகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அப்படிப் பட்ட நிலைமையில் அவரை பிழைக்க வைத்தால் மறுபடியும் அவரை நரகத்தில் தள்ளி விட்டாற் போலாகி விடும் இல்லையா. அவர் இறந்து போவதைத்தான் நான் மனப்பூர்வமாக விரும்புகிறேன்” என்றான் ஸ்ரீனிவாஸ்.
ரொம்ப வேடிக்கையாக இருந்தது ஜானகிக்கு. தன் மகனும் தன்னைப் போலவே யோசிக்கிறான். ஆனால் இந்த விஷயத்தை டாக்டர்களிடம் பிரஸ்தாபிக்க கூடிய தைரியம் தனக்கு இருக்கிறதா? ·போனை வைத்துவிட்டு ஜானகி ஆஸ்பத்திரிக்குக் கிளம்பினாள். ஏற்கனவே ரமேஷ் அங்கே வந்திருந்தான். டாக்டர்கள் நாராயணனை பரிசோதித்துவிட்டு அவருக்கு பக்கவாதம் வந்திருப்பதாகவும், இடது பக்கம் செயலிழந்து விட்டதாகவும், உயிருக்கு பயமில்லை எனறும் தெரிவித்தார்கள். அவரை மரணத்தின் வாயிலிலிருந்து மீட்டு விட்டதில், தங்களுடைய கடமையை சரிவர செய்து முடித்தில் அவர்களுக்கு ரொம்ப திருப்தி. அவர்களுயை சந்தோஷம் அவர்களுக்கு.
நாராயணன் சற்று தேறிக்கொண்டதும் எமர்ஜென்ஸி ரூமிலிருந்து ஐ.சி.யு.வுக்கு மாற்றும் போது மாலை ஆறு மணியாகிவிட்டது. களைத்துப் போய்விட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள் ரமேஷ¤ம் ஜானகியும். இருவருக்கும் பசிக்கவே இல்லை. காலையில் ஒரு கப் காபியும், நடுவில் டீயும் குடித்ததுதான். சமைக்கத் தேவையில்லை என்றான் ரமேஷ். முதல் சமைத்ததை சூடுபண்ணி ஆளுக்கு ஒரு வாய் சாப்பிட்டுவிட்டு படுத்தார்கள்.
இருவரும் ரொம்ப நேரம் மௌனமாக இருந்தார்கள்.
“ஜானகி! உன்னிடம் ஒரு விஷயம் சொல்லட்டுமா?” என்றான் ரமேஷ்.
“சொல்லுங்கள்” என்றாள் ஜானகி.
“அப்பா போய் விட்டால் தேவலை” என்றான் ரமேஷ்.
வியப்புடன் பார்த்தாள் ஜானகி.
“உண்மைதான் ஜானகி! அண்ணன்களும், அக்காவும் சேர்ந்து அப்பாவை நர்ஸிங் ஹோமில் சேர்த்த போது எனக்கு ரொம்ப கோபம் வந்தது. அவர்களால் அந்த விதமாக எப்படி நடந்துகொள்ள முடிந்தது என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் அவரை நீ எந்த விதமாக பேணி பாதுகாத்து வந்தாய் என்பதை கண்ணால் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இருப்பது போறாது என்று இப்போ கைகாலும், பேச்சும் விழுந்து விட்ட நபருக்கு பணிவிடை செய்துகொண்டு வீட்டிலேயே இரு என்று உன்னிடம் எப்படி சொல்ல முடியும் சொல்லு? எங்க அண்ணாக்கள், அக்கா செய்த காரியத்தைத்தான் நானும் செய்ய வேண்டியிருக்குமோ என்று தோன்றுகிறது. ஆளை போட்டுக் கொண்டாலும் பிரச்னைகள்தானே தவிர நிம்மதி இருக்காது. அவர் பிழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தால் நர்சிங் ஹோம்தான் அவருக்கு லாயக்கு. வேறு வழி எனக்குத் தெரியவில்லை. இந்த நிலைமையில், இந்த சூழ்நிலையில் இதை விட வேறு என்ன செய்வது என்று புரியவில்லை.” பெருமூச்சு விட்டுக் கொண்டே சென்னான் ரமேஷ்.
“ஆனால் ஒரு மனிதனின் உயிரை எடுக்கச் சொல்லி கடவுளிம் நம்மால் எப்படி வேண்டிக்கொள்ள முடியும்? நீங்களே சொல்லுங்கள்” என்றாள் ஜானகி.
“ஜானகி! அது தவறு என்று எனக்கு படவில்லை. அப்பாவுக்கு எண்பது வயது. அவருடைய மூளைக்கும், உடல் உறுப்புகளுக்கும் சம்பந்தம் விடுபட்டுக் கொண்டிருக்கிறது. இந்த உலகத்துடன் அவருக்க சம்பந்தம் இல்லை. அப்படியிருக்கும் மனிதருக்கு வாழ்வுக்கும் சாவுக்கும் வித்தியாசம் தெரியும் என்கிறாயா? ஆயுசு வளர்ந்தால் மட்டும் சந்தோஷமும், திருப்தியும் ஏற்படும் என்கிறாயா? அப்பா பிழைத்துக் கொண்டால் நஷ்டப் போவது யாரு? அவர்தானே? பிழைத்துக் கொள்வதால் அவருக்குக் கிடைக்கப் போகும் சுகம் என்ன?” ரமேஷ் பேச்சை நிறுத்தினான்.
தன்னுடைய மகனும் இதே போல் யோசித்தான். ஆனால் கணவனும் அதே எண்ணத்தை வெளிப்படுத்திய போது அதை பலப்படுத்துவதற்கு ஏனோ ஜானகியின் மனம் சம்மதிக்கவில்லை. ஏனோ அந்த உரையாடலை நீடிக்க விரும்பாமல் மௌனமாக இருந்துவிட்டாள். இருவரும் ஏதோ இனம் புரியாத மனப்போரட்டத்தை அந்த இரவு அனுபவித்துக் கொண்டிருந்தார்கள்.
பத்து நாடகள் கழித்து வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்தார்கள் நாராயணனை. ரொம்ப இளைத்துப் போய், பிச்சைக்காரனைப் போல் தென்பாட்டார் ரமேஷின் கண்களுக்கு. முகத்தில் முறுவல் மட்டும் அப்படியே இருந்தது. அய்யோ! இன்னும் குழந்தையாகி விட்டாரே என்று வருத்தமாக இருந்தது. இப்படி இருக்கும் நபரை எப்படி பார்த்துக் கொள்வது? ஆறு வருடங்களாக அவரை ஜானகிதான் பேணிக் கொண்டிருந்தாள். இது போன்ற கஷ்டமான நிலைமையில் அவளையே பார்த்துக் கொள்ளச் சொல்ல அவனுக்கு மனம் ஒப்பவில்லை. போகட்டும் ஆளைப் போட்டுக் கொண்டு பார்த்துக் கொள்ளலாம் என்றால் அதில் இருக்கும் சாதகபாதகங்களை எண்ணி பார்க்கும் போது அது சரியான தீர்வு இல்லையோ, ஜானகி மேலும் நலிந்து போய் விடுவாளோ என்று ரமேஷ¤க்கு தோன்றியது. என்ன செய்வது என்று புரியாமல் குழம்பிக் கொண்டிருந்தான். பத்துநாடகள் லீவ் போட்டு விட்டு தந்தையின் தேவைகளை தானே கவனித்துக் கொண்டான். அப்பொழுதுதான் அவனுக்கு புரிந்தது, நோயாளியாய் இருக்கும் நபருக்கு பணிவிடை செய்வது எவ்வளவு கஷ்டமான காரியம் என்று.
தந்தையின் நிலைமையைப் பற்றி அண்ணன்களுக்கும் அக்காவுக்கும் கடிதம் எழுதினான். அவர்களிடமிருந்து பதில்கள் வந்தன. தந்தையை இவ்வளவு சிறப்பாக கவனித்துக் கொண்டிருக்கும் தம்பி உத்தமப் புத்திரன் என்றும், ஜானகியைப் போன்ற மருமகள் இந்த உலகத்தில் இருப்பது அரிது என்றும் எழுதியிருந்தார்கள். அவர்களுக்கு உண்மையிலேயே உதவி செய்ய வேண்டும் என்று இருந்தாலும் பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருப்பதால் என்ன செய்வதென்று புரியவில்லை என்றும் எழுதியிருந்தார்கள். அவர்களிடமிருந்து அது போன்ற பதில்தான் வரும் என்று ரமேஷ¤க்கு முன்பே தெரியும். தந்தையுடன் பகலும் இரவும் கழித்த அந்த பத்து நாட்களில் ரமேஷ¤க்கு மனநிம்மதியில்லாமல் போய்விட்டது. ஒரு பக்கம் தந்தையின் பரிதாபமான உடல்நிலை, இன்னொரு பக்கம் ஜானகிக்கும் நிம்மதியில்லாமல் செய்து கொண்டிருக்கிறோமே வருத்தம். கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தான். தந்தைக்கு வரும் சோஷல் செக்யூரிடியின் உதவியுடன் அவரை ஒரு நர்ஸிங் ஹோமில் சேர்ப்பது என்று முடிவு செய்தான். பெற்ற குழந்தைகள் இருக்கும் போது தந்தையை நர்சிங் ஹோமில் சேர்த்து விட்டோமே என்ற வருத்தம் தனக்குத் தானே தவிர அவருக்கு ஒன்றும் தெரியப் போவதில்லை. அவருக்கு தான் எங்கே இருக்கிறோம், யாருடன் இருக்கிறோம் என்ற உணர்வே இருக்கப் போவதில்லை. அதனால் அவர் வேதனைப்படக் கூடும் என்ற பேச்சே இல்லை.
அந்த முடிவுக்கு வந்த பிறகு ரமேஷின் மனம் கொஞ்சம் நிம்மதி அடைந்தது. உடனே தன் உடன் பிறந்த மூவருக்கு தன்னுடைய முடிவை தெரிவித்து கடிதம் எழுதினான்.
அன்புள்ள பெரிய அண்ணன், சின்ன அண்ணன் மற்றும் அக்காவுக்கு,
இந்த விதமான கடிதம் உங்களுக்கு எழுத வேண்டி வரும் என்று கனவில் கூட நான் நினைக்கவில்லை. அப்பா அம்மா நம்மை உயிருக்கும் மேலாக வளர்த்தார்கள். அவர்களுக்கு நம் உயிரைக் கொடுத்தாலும் தகும் என்று நினைத்து வந்தேன். அதனால்தான் ஆறு வருடங்களுக்கு முன்பு அப்பாவை நர்ஸிங் ஹோமில் சேர்ப்பதாக நிங்கள் எல்லோரும் முடிவு செய்த போது எனக்குக் கோபம்தான் வந்தது. அவரை வீட்டில் வைத்து பராமரிப்பதில் இருக்கும் சாதக பாதகங்களை என்னால் உணர்ந்து கொள்ள முடியவில்லை. உங்களால் செய்ய முடியாத காரியத்தை நானும் என் மனைவியும் செய்து காட்டணும் என்று அப்பாவை இந்த நாட்டுக்கு அழைத்து வந்தேன். ஆல்ட் ஹைமர் நோயாளியை பராமரிப்பதில் இருக்கும் கஷ்டங்களை என் மனைவி அனுபவித்தாள். போறாதக் குறைக்கு அப்பாவுக்கு பக்கவாதம் வந்து விட்டது.
என் சின்ன வயதில் நம் தாத்தா பக்கவாதம் வந்து படுக்கையில் விழுந்த போது அவருடன் நம் அம்மா எத்தனை கஷ்டங்களை அனுபவித்தாளோ இன்றும் அந்த காட்சி என் கண் முன்னால் இருக்கிறது. வீட்டில் வேலைக்காரர்கள், அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் இப்படி எல்லோருமே அவரைப் பேணி பாதுகாப்பதில் கைகொடுத்து வந்தார்கள். அந்த நாட்களில் தாத்தா எல்லோருக்கு நல்லதை செய்தார். அவருக்கு என்ன தேவை எற்பட்டாலும் கைகொடுக்க சமுதாயம் இருந்தது. ஆனால் இந்த காலம் வேறு. எண்பது வயது நிறைந்த பெரியவருக்கு ஒரு குழந்தைக்கு செய்தது போல் எல்லாம் செய்ய வேண்டும். கடந்த பத்து நாட்களாக அப்பாவின் தேவைகளை கவனித்துக் கொண்டிருந்த எனக்கு இப்போதுதான் ஒரு உண்மை புரிந்தது. உண்மையிலேயே வயோதிகம் என்பது ஒரு சாபம். அதில் காலடி வைத்துவிட்டால் புதைகுழியில் சிக்கிக் கொண்டாற்போல்தான். கூட இருப்பர்கள் அவர்களை வெளியே இழுக்க முயன்றால் அவர்களும் அந்த புதைகுழியில் மாட்டிக் கொள்ள வேண்டியதுதான். அதனால்தான் அந்த காலத்தில் வயதான காலத்தில் வானபிரஸ்த்தம் என்ற பெயரில் காடுகளுக்கு, மலையடிவாரத்திற்கு போய்க் கொண்டிருந்தாகளோ என்னவோ. தம் குழந்தைகளின் வாழ்க்கையில் தங்களால் எந்த பிரச்னை வரக் கூடாது என்று நினைத்திருப்பார்கள்.
ஆனால் நாமாக நம்மை சேர்ந்தவர்களை தொலைவாக அனுப்பி வைக்கணும் என்றால் மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது. ஆனால் வேறு வழியிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அதனால்தான் அப்பாவை நர்சிங் ஹோமில் சேர்க்கப் போகிறேன். புது விதமான வானப்பிரஸ்த்தம்! அதிர்ஷ்ட வசமாக அவருக்கு நாம் எடுத்துக் கொண்ட முடிவுகளை பற்றித் தெரியப் போவதில்லை. நான் தினமும் கடவுளை இனி வேண்டிக் கொள்ளப் போவது ஒன்றுதான் . கடவுளே! அப்பாவுக்கு நாளைய சூரியோதயம் இல்லாமல் செய் என்று. அவர் நரகத்தில்தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். அது கூட அவருக்குத் தெரியாது. இப்படிப்பட்ட நிலைமை பகையாளிக்குக் கூட வரக் கூடாது. கடவுள் கருணை காட்டி அவரை தன்னிடம் அழைத்துக் கொண்டால் உங்களுக்கு தெரிவிக்கிறேன்.
இப்படிக்கு,
ரமேஷ்.
கடிதத்தை எழுதி முடித்ததும் ரமேஷின் கண்கள் குளமாயின. அறைக்குள் சென்று ஜானகியிடம் காண்பித்தான். படிக்கும் போது ஜானகிக்கு துக்கம் பொங்கிக் கொண்டு வந்தது.
“நீங்க மாமாவை வானபிரஸ்த்தாஸ்ரமத்திற்கு அனுப்புவதாக நினைக்கிறீங்க. ஆனால் நான் அதை அனுமதிக்க மாட்டேன். அவரை அனுப்பிய பிறகு இந்த வீடு சிதிலமடைந்த வீடு போல், பேய்களின் குடியிருப்பு போல் மன நிம்மதி இல்லாமல் செய்து விடும். அதைப் பற்றி யோசித்துப் பார்த்தீங்களா?” என்றாள் ஜானகி.
கேள்விக் குறியுடன் மனைவியின் பக்கம் பார்த்தான் ரமேஷ்.
“இதோ பாருங்கள். உங்களுக்கு இப்போ வயது ஐம்பத்தி மூன்று. எனக்கு நாற்பத்தியெட்டு. குழந்தைகள் இருவரும் பெரியவர்களான பிறகு வீட்டை விட்டு போய்விட்டார்கள். முக்கியமாக இந்த நாட்டில் அவரவர்களின் வாழ்க்கை அவரவர்களுக்கு. இப்போ நமக்கு எந்தக் கடமைகள் பாக்கியிருக்கு? நாளைக்கே எனக்கு இப்படி ஆகிவிட்டால் இப்படி அனுப்பிவிடுவீங்களா? இந்த காலத்தில் எல்லோருடைய வாழ்க்கையும் ஹைவேயில் பயணிப்பது போல் வேகம்தான். சேர வேண்டிய இடத்திற்கு போய்ச் சேருவதற்குள் எத்தனையோ விதமான மனஅழுத்தங்களுக்கு ஆளாகிக் கொண்டு இருக்கிறோம். நாம் போய் சேர வேண்டிய இடம் என்னவென்று நமக்கே தெரியாது. ஓடிப் போய் பாலைக் குடிப்பதை விட நின்று நிதானமாக தண்ணீர் குடிப்பது மேல் இல்லையா. என்னால் முடிந்த வரையில் மாமாவை பார்த்துக் கொள்கிறேன். முடியாத நிலைமை ஏற்பட்டால் அப்போ பார்த்துக் கொள்வோம்” என்று சொல்லிவிட்டு கையிலிருந்த கடிதத்தைக் கிழித்து குப்பைக் கூடையில் போட்டாள். நன்றி கலந்த விழிகளுடன் மனைவியைப் பார்த்தான் ரமேஷ்.
மறுநாள் காலையிலேயே எழுந்துக் கொண்டு ஏழுமணிக்கெல்லாம் ஆபீசுக்கு தயாராகிவிட்டான். இரவு முழுவதும் நாராயணன் ஜானகியைத் தூங்க விடவில்லை. எப்படியோ நள்ளிரவு தாண்டிய பிறகு இரண்டு மணிக்கு மேல் தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டாள்.
“ஜானகி! நான் ஆபீசுக்குக் கிளம்புகிறேன். கவனம்!” தாழ்ந்த குரலில் சொல்லிவிட்டு வெளியே வந்தான். ஜானகி ரொம்ப நல்லவள். பொறுமையாக பார்த்துக் கொள்வாள். ஆனால் எத்தனை நாட்களுக்கு தாக்குப் பிடிக்க முடியும் என்று ரமேஷ¤க்கு சந்தேகமாய் இருந்தது. தந்தையை விட்டு விட்டு போகணும் என்றால் என்னவோ போல் இருந்தது. ஒரு தடவை பார்த்து விட்டுப் போகலாம் என்று தந்தையின் அறைக்குள் நுழைந்தான். கட்டில் மீது அவர் தென்படவில்லை. பதற்றத்துடன் சுற்றும் முற்றும் பார்த்தான். எங்கேயும் காணவில்லை. அவசர அவசரமாய் படிகளில் இறங்கிக் கொண்டிருந்த போது படிகளின் கீழே நினைவில்லாமல் கிடந்தார் நாராயணன். உடனே 911 யை அழைத்தான். பத்து நிமிடங்களில் அம்புலென்ஸ்காரர்கள் வந்தார்கள். நாராயணன் இறந்து போய் ஒரு மணி நேரத்திற்கு மேலேயே ஆகியிருக்கும் என்று தெரிவித்தார்கள். பிணத்தை மோர்க்குக்கு எடுத்துக் கொண்டு போனார்கள். ரமேஷ¤க்கு துக்கம் வரவில்லை. அப்பாவை அழைத்துக் கொண்டு போகச் சொல்லி கடவுளிடம் வேண்டிக் கொண்டது நினைவுக்கு வந்தது. தான்தான் அப்பாவைக் கடவுளிடம் அனுப்பிவிட்டோமோ என்ற எண்ணம் அவனை அலைக்கழித்துக் கொண்டிருந்தது. ஜானகியை எப்படி தேற்றுவது என்று புரியவில்லை அவனுக்கு.
தெலுங்கில் Mrs.Poodipedhi Seshu Sarma (seshusarma@yahoo.com)
தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்
tkgowri@gmail.com
- ஜெயமோகனும் இயல் விருதும்
- தாகூரின் கீதங்கள் – 13 கண்ணீர்ப் பூக்கள் !
- கடைசி கிலோ பைட்ஸ் – 6 [ Last Kilo bytes -4 ]
- கருணாகரன் கவிதைகள்
- போய்விடு அம்மா
- சம்பந்தமில்லை என்றாலும் – ஒப்பியன் மொழிநூல் திராவிடம் தமிழ்- (மொழி ஞாயிறு ஞா. தேவநேயப்பாவாணர் )
- ஆச்சர்யகரமான அரசுவிழாவும் அரிதான அரசு யந்திரமும்
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! அகிலக் கதிர்கள் ! அடிப்படைத் துகள்கள் ! (கட்டுரை: 13)
- எழுத்துக்கலைபற்றி இவர்கள்………(9) – இந்திராபார்த்தசாரதி.
- பட்டுப்பூவே !
- கவிதைகள்
- இரு நாட்டிய நிகழ்வுகள்
- புதிய குரல்கள் புதிய தடுமாற்றங்கள் :தமிழ்ச் சிறுகதை , இன்று…
- திருப்பூரில் பரிசு பெறும் உஷா தீபன்
- கொட்டாவி
- மீராவின் கவிதை
- இரண்டில் ஒன்று
- கடிதம்
- சிங்கப்பூரில் 59வது இந்திய குடியரசுதினம்
- தாரெ ஜமீன் பர் (தரையில் நட்சத்திரங்கள் : அமீர்கானின் திரைப்படம் ) ::: ஓர் அற்புத அனுபவம்
- ‘மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்’ – ஜெயானந்தன் எழுதிய புத்தக மதிப்புரை
- ஊர் சுற்றிய ஓவர் கோட்
- நீரின்றி அமையாது எங்கள் வாழ்க்கை!
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 4
- மொழி
- மாத்தா- ஹரி அத்தியாயம் -46
- தம்மக்கள்
- மாலதி மாற மாட்டாள்!
- வானபிரஸ்த்தாசிரமம்
- தைவான் நாடோடிக் கதைகள் – 10. மானின் கொம்புகளை நாய்மாமாவுக்குத் திருப்பிக்கொடு.
- திண்ணைப் பேச்சு – ஜனவரி 24. 2008
- மழை பிடிக்காது! மழை பிடிக்காது!
- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 17 -பரவி வரும் நோய்
- எண்ணச் சிதறல்கள் : திண்ணை, வைக்கோல்போர், போர்னோகிராஃபி, மலர்மன்னன், வஹ்ஹாபி, முகமதியம், புறங்கைத்தேன்.
- பங்குச்சந்தை வீழ்ச்சி, முதலீட்டியத்தின் தோல்வியா?
- இருப்பின் திறப்புகளும் அங்கீகாரமும்
- குடியரசுதின சிறப்புக் கட்டுரை
- இரவுமீது அமர்ந்திருக்கும் சிவப்புப் பறவை
- காற்றினிலே வரும் கீதங்கள் – 1 & -2
- காற்றினிலே வரும் கீதங்கள் – 3 மூச்சு விடுவதே பெரும்பாடு !