வாணர்களும் விந்தியமலையும்

This entry is part [part not set] of 34 in the series 20061026_Issue

கோ. தில்லை கோவிந்தராஜன்



தென்னிந்திய வரலாற்றில் பல்லவர், சோழர், சேர, பாண்டியர் இவர்களுக்கு அடுத்த நிலையில் போர்க்குடியாகவும், குறுநில மன்னர்களாகவும் ஆட்சி செய்த குடிகளில் மிகவும் முக்கியமான குடிகள் வாணர் எனவும் பாணர் எனவும் அழைக்கப்படும் மகாபலியின் வம்ச குடியினரே ஆவார்கள். சங்க இலக்கியத்தில் முக்கிய நூலான பத்துப்பாட்டில் வாணரைப் பற்றி

“தென்புல மருங்கின் விண்டு நிறைய
வாணன் வைத்த விழுநிதி பெறினும்
பழிநமக் கெழு வெண்ணாய் விழுநிதி” (அடி 202 – 204 மதுரைகாஞ்சி)
– எனக் குறிப்பிடுகிறது.

இவ்வரிகளில் குறிக்கும் தென்புலம் என்பது இந்தியத் திருநாட்டிற்கு தென்புறம் தடுப்புச்சுவர் போல் உள்ள விந்திய மலையாகும். இது தக்காணம், தஷ¤ணபாதம், தக்கண பாதம் எனவும் வட மொழியில் அழைக்கப்படுகின்றன.

இப்பாடல் அடி 202-204க்கு உரையாசிரியர் நச்சினார்க்கினியர் பொருள் கூறும்போது “தென்திசை நிலத்தின் மலைகளெல்லாம் நிறையும்படி வாணன் என்னும் சூரன் வைத்தப் பொருள் திரள்” என்று வாணனை சிறப்பித்துக் கூறுகின்றார்.

சங்க இலக்கியத்தில் விண்டு என்னும் விந்திய மலை

வாணன் என்பவன் விண்டு என்னும் மலை நிறையும்படி வைத்த நிதி எனக் குறிக்கப்படுவது விந்திய மலையே. இதனை புறநானூறு பாடல் அடிகளால் அறியலாம்.

கல்லாடனார் என்னும் புலவர் தமது புறநானூறு பாடலில் (391இல்) பொறையாற்றுக் கிழானை

“தண்டுளி பலபொழிந் தெழிலி யிசைக்கும்
விண்டு வனைய விண்டோய் பிறங்கல்
முகடுற உயர்ந்த நெல்லில் மகிழ்வரப்
பகடுதரு பெருவளம் வாழ்த்திப் பெற்ற”

– என்று குறிப்பிடுகின்றார்.

அதில் விண்டு (விந்திய) மலையைப் போன்று உயர்ந்த தானியப்போர் காட்சியளிப்பதாகக் கூறுகின்றார்.

‘விண்டு வனைய வெண்ணெற் போர்வின்’ (பா.58 ஐங்குறுநூறு)

‘விண்டு சேர்ந்த வெண்மழைபோலச்’ (பா.55 பதிற்றுப்பத்து)

– என்றும் குறிக்கப்படுகிறது.

இதன் பொருள் மலையுச்சியை அடைந்த வெள்ளி முகிலைப் போன்று என்று கூறப்படுகிறது.

நாம் மேற்கண்ட பாடல் வரிகளில் காணும் விண்டு என்பது விந்தியமலை என்பதற்கு மேலும் ஆதாரங்கள் உண்டு. பத்துப்பாட்டு வரிகளில் சொல்லப்படும் விண்டு இந்த விந்தியமலையேயாகும்.

தேவாரம் மற்றும் பிற இலக்கியத்தில் விந்திமாமலை

சங்க இலக்கியத்திற்கு அடுத்து தேவாரம், பிற இலக்கியத்தில் விண்டு என்பது விந்தமாமலை அதாவது விந்தியமலை என வழங்கப்படுவதைப் பார்க்கலாம்.

அப்பர் சுவாமிகள் (பொது) தேவாரத்தில் விந்திய மலையை ‘விந்தமாமலை’ என்றே கூறுகின்றார்.

“மந்தமாம் பொழிற் சாரல் வட பார்ப்பத
மகேந்திர மாமலை நீலமேகம் கூடம்
விந்த மாமலையே தஞ்சைய மிக்க
வியன்பொதியின் மலை மேருவுதயமத்தம்”

– இத் தேவாரப் பாடலில் விந்தமாமலை என்பது விண்டு மலையாகும். ‘அடவி விந்தத் தியானை மருப்பு’ என்ற கொங்குவேள் இயற்றிய பெருங்கதை (1. உஞ்சை காண்டம், 58 செயந்தியுபுக்கது) விந்திய மலை ஒட்டிய காட்டிலுள்ள யானைகளில் தந்ததைக் குறிப்பதாகக் கூறப்படுகிறது. இந்த விந்தமாமலை விந்தியமலையே.

கல்வெட்டில் விந்திய மலை

அரிகேசரி பராக்கிரம பாண்டியர் கல்வெட்டில் (கி.பி.1442 முதல் கி.பி.1463 வரை ஆட்சி செய்த அரசன்)

“காண்டகு சீர்புனை தென்காசிக் கோபுரக் கற்பணியா
றாண்டில் முடித்தக் கயிலை சென்றானகி லேசர்பதம்
பூண்டுரை சிந்தை யரிகே சரி விந்தைப் போர் கடந்த
பாண்டியன் பொன்னின் பெருமாள் பராக்கிரம யாண்டியனே.”

– என்று கூறிக்கொள்கிறான்.

தென்காசிக் கோபுரத்தினை ஆறு ஆண்டுகளில் கட்டி முடித்து திருக்கயிலாயம் செல்ல அகிலத்தை ஆளும் இறைவனைக் காண விந்திய மலையில் உள்ள எதிரிகளை வெற்றிக் கொண்டு சென்றான் என்பது இதன் பொருள். இக்கல்வெட்டில் விந்தை என்பது விந்தியமலையாகும்.

பிற்கால இலக்கியத்தில் விஞ்சையும் என்னும் விந்திய மலை

‘விஞ்சையம் பெருமலை’ என்பது விந்திய மலையாகும்.

“குடற்கடற் பிறந்த வெண்சுடர் மணியும்
விஞ்சையம் பெருமலை விளங்கொளி வெள்ளியும்” (பெருங்கதை – 1 உஞ்சை, 58 செயந்தி)

கொங்கு வேளியரால் இயற்றப்பட்ட இந்நூலில் பிறிதொரு இடத்திலும் விஞ்சையும் பெருமலைக் குறிக்கப்படுகிறது.

“உயிர்பி னோர்க்கும் முணர்த்தா காகா
விஞ்சையம் பெருமலை நெஞ்சகம் பிளந்து” (பெ.கதை, 51-5 உஞ்சை)

மேலே கூறப்பட்ட விஞ்சையம் பெருமலைக்கு மகோபாத்தியாய உ.வே.சா. அவர்கள் பொருள் கூறும் போது விஞ்சையம் பெருமலை, வித்தியாதரகிரி, விந்திய மலை என்றும், வெள்ளிமலை எனவும் கூறுகின்றார்.

வாணர்களும் இசைத் தொடர்பும்

பெருங்கதையின் பொருளடக்கத்தில் கூறும்போது விஞ்சையம் பெருமலை, வெள்ளிமலை என்பன வித்தியாதரர்களிருந்தற்குரிய இடம் இவ்வித்தியாதரர்களைக் குறிக்கும் போது இசைக்குரியர்களாக கூறுவர். ஜைன மதத்தில் வித்தியாதரர் உருவங்கள் காட்டப்படுவதுண்டு.

புறநானூற்று வாழ்துறை பாடலில் வரி 10இல்

பதினென்கண மேத்தவும் படுமே’ – என்றும்

பத்துப்பாட்டு திருமுருகாற்றுப்படையின் அடி 168இல்

“நால்வே றியற்கைப் பதினொரு மூவரொ
டொன்பதிற் றிரட்டி யுயர்நிலை பெறீ இயர்”

– என்று இந்நூலில் பதினெண் கணங்களை குறிப்பிடுகின்றார்கள். இதில் புறநானூறில் வித்தியாதரர் கூறப்படுகிறார்கள். பத்துப்பாட்டில் விஞ்சையர்கள் கூறப்படுகின்றார்கள். இதை நோக்கும்போது வித்தியாதரரும் விஞ்சையரும் ஒரே குழுவினராவர் எனத் தெளிவாகிறது. வித்தியாதரும், விஞ்சையரும் பதிணென் கணங்களில் ஒருவராகக் குறிப்பிடுவதும் இவர்களும் இசைத் தொடர்பு உடையவர்கள் என்பதால் இவற்றை நோக்கும் போது வாணர்களும் இசைத் தொடர்புடையராவர். கல்லாடத்தில் வாணன் ஆயிரம் கைகள் கொண்டு சிவபெருமான் நடனத்திற்கு குடமுழா வாசிப்பவனாகக் குறிக்கப்படுகிறான். இதனை தில்லைச் சிற்றம்பலவாணர் கோயிலில் ஊர்த்துவத் தாண்டவம் புரியும் மண்டபத்தின் அடியில் இவன் உருவம் நான்கு கைகளுடன் பஞ்சமுக வாத்தியம் (குடமுழா) இசைப்பதாக சிற்பம் வடிக்கப்பெற்றுள்ளது. இது கி.பி.13 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த சிற்ப அமைதி.

கல்வெட்டில் வித்தியாதரர்

பல்லவ அரசன் ஒருவன் வாத்திய வித்தியாதரன்[2] என்ற பட்டப் பெயரும் தாங்கியுள்ளான்.

வாண அரசர்களில் வாண வித்தியாதரன் எனவும் வாண விச்சாதர பிரபுமேரு என்று தங்களைக் குறிப்பிட்டுக் கொள்கின்றார்கள்.

விக்கரம சோழனின் 4ஆம் ஆட்சி ஆண்டு கல்வெட்டில் வாணகோவரையன் வேண்டுகோளின்படி எலவானரூர் அருகில் மலைய விச்சாதிரி நல்லூர் என்ற ஊரை ஏற்படுத்தியுள்ளான்.[3]

விக்கரம சோழனின் 6ஆம் ஆட்சி ஆண்டில் விருதராஜப பயங்கர வாண கோவரையன் வாணவிச்சாதிரி நல்லூரிலுள்ள முடிகொண்ட சோழ ஈச்சரமுடைய மாதவருக்கு திருப்பணி செய்துள்ளான்.[4] அழகர் கோயிலில் உள்ள கல்வெட்டில் வாணவிச்சாதரன் என்ற பாண்டிய அதிகாரி ஒருவன் குறிக்கப்படுகின்றான்.[5] மேலும் பலகல்வெட்டுகளில் விச்சாதிரி என்ற குறிப்புகள் கிடைக்கப் பெறுகின்றன.

இவ்வரசர்கள் இசைத் தொடர்பினால் விச்சாதரர் என்று விச்சாதிரி என்றும் பெயர்களை சூடிக்கொண்டிருக்கலாம்.

வாணர்களும் தாய் தெய்வ வழிபாடும்

(விந்த அணங்கு) அரிகேசரி பராக்கிரம பாண்டியன் கல்வெட்டில் (கி.பி.1442 முதல் கி.பி.1463 வரை ஆட்சி செய்த அரசன்)

“அணிகொண்ட விந்த வணங்குமொன றேஅடியேற்குணக்கும்
மணி கொண்ட வாசற் பணியும் ஒன் றேபகை மன்னரையும்”

– என்று குறிப்பதை பொருள் விளக்கம்தரும் வித்துவான் வை.சுந்தரேசவாண்டையார் அவர்கள் விந்த அணங்கு என்பது வெற்றித் தெய்வமாகிய கொற்றவை (புறப்பொருள் வெண்பாமலையில் அறிக. விந்த மலையில் இருப்பதால் விந்தை எனவும் நகர் கோட்டை வாயிலில் இருப்பதால் துர்க்கை எனவும் கூறப்படும்). (துர்க்கம் – கோட்டை) என்று கூறுகின்றார். விந்தியாவாசி – துர்க்கை (விந்திய மலையில் வசிக்கும் துர்க்கை) என்றே கூறும் மரபு உண்டு.

செயங்கொண்டார் இயற்றிய கலிங்கத்துப் பரணியில் காணும் போது

“நிறைவாழ்வைப் பெறமைக்கு மணத்தென்று
நிலப்பாவை களிப்ப விந்தத்
துறைவாளைப் புயத்திருத்தி யுடை வாளைத்
திருவரையி நொளிர வைத்தே” (அடி 244:கலி பரணி)

இதிலும் விந்தத்து உறைவாள் என்பது விந்திய மலையில் வசிப்பவளாகிய வீரமகள் என்று கூறப்படுகின்றது. இவ்வாறு விந்தம் என்பது விந்திய மலையை குறிக்கப்படுவதைப் காண்கிறோம்.
வாணர்களும் கொற்றவை வழிபாடு செய்யும் மரபினராக இருக்கலாம். பாகவதத்தில் வாணன் தாய் கொட்டார எனக் கூறப்படுகின்றாள். இவள் கொற்றவை எனப்படும் தெய்வமாக இருக்கலாம்.[6] மகாபலியானவன் வழிபாடு செய்த அஸான அல்லது விந்தியாவலி எனப்படுகிறது. ஆனால் வாணனின் உண்மையான தாய் அஸான அல்லது விந்தியாவலி எனப்படுவார் ஆவார் என்று கூறப்படுகிறது.[7] விஷ்ணு புராணத்தில்வாணசூரனை விஷ்ணு (கிருஷ்ணன்) சம்ஹாரம் செய்யவரும் போது, பார்வதியானவள்’ அண்ணா இவனுக்கு நான் அபயம் கொடுத்துள்ளேன். அந்த வாக்கை நீகாப்பாற்ற வேண்டும்’ என்று கூறுவதாகக் காண்கிறோம். பாகவதத்தில் கொட்டார என்பவள் கிருஷ்ணன் முன்பு நிர்வாணத்தில் நின்று வாணனைக் காப்பாற்றியதாகக் கூறப்படுகின்றது. கொட்டாரா என்பது கொற்றவையே எனலாம். கொட்டாரம் என்பதும், துர்க்கம் என்பதும் கோட்டையைக் குறிக்கும். எயில் என்பதும் சோ என்பதும் கோட்டை மதிலைக் குறிப்பதும் நாம் அறிந்ததே. துர்க்கை என்பவள் சோ (கொடொடை) இறைவியே.

வாணர்களும் தலைநகரமும்

விந்தியமலை என்பது, ஜைனப் பிராகிருதம் நூல்களில் விண்ட்ய, விந்ச, வெயட்ட (Veyadda) எனப் பல வகையில் குறிப்பிடப்படுகிறது. எனவே விண்டு என்பது விந்திய மலை என்பது தெளிவாகும். தென்புலம் என்பது தக்காம் அல்லது தக்காணம் எனப் பொருள்படும். தஷணபதம் எனத் தக்காணப் பகுதியினைக் கௌடலீயம் (அர்த்த சாஸ்திரம்) குறிப்பிடுவதால் இவ்வாறு பொருள் கொள்வது தவறாகாது. எனவே மகாபலிவாணர்களின் தொடக்கக்கால ஆட்சிப் பகுதி தக்காணமே எனலாம். விந்திய மலையை யட்டித் தெற்கே அமைந்துள்ள மலைத் தொடர் மாவால் என்றும் மாவாள எனவும் சாதவாகனர் கல்வெட்டுகளில் கி.பி.முதல் நூற்றாண்டில் கூறப்பட்டுள்ளது. (Early History of Andhradesa) இப்பகுதி பழங்குடிகள் மாவலியர் என்று அழைக்கப்பட்டனர் என மராட்டியர் வரலாற்று நூல்களால அறியலாம். எனவே வாணர்களின் பூர்வீகம் மாவால மலைத்தொடரும் தக்காணமும் எனக் கொள்ளலாம். இத்தகைய தோற்றத்தின் காலம் கி.மு.முதலாயிரம் ஆண்டுகளாக இருக்கலாம்.

கிருஸ்து சகாப்த முதல் ஆயிரம் ஆண்டுகளில் வாணர்கள் தலைநகரங்கள் கர்நாடகா, ஆந்திரப் பகுதிகளிலும் இருந்துள்ளதைக் காணலாம். இவர்கள் ஆட்சிக் காலத்தில் இரு மாநிலங்களுடன் தமிழகத்தின் பகுதியும் அடங்கியிருந்தது. இன்று மைசூரில் வெள்ளில் (Silver) கிடைக்கிறது. கர்நாடகாவில் கோலாரில் (Kolar Gold Field) தங்க வயலில் உள்ளது. இவற்றை நோக்கும் போது சங்க இலக்கியத்தில் வாணன் வைத்த விழுநிதி என்பது அவன் ஆட்சி செய்த காலத்தில் இருந்த செல்வ வளங்களைப் பற்றி கதைகளோ அல்லது நிகழ்ச்சிகளோ நடந்திருக்க வேண்டும். மேலும் இக் கணிமங்களைப் பிரித்தெடுக்கும் முறை இவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். இக்கருத்தை உறுதி செய்வது போல் அதிவீரராம பாண்டியர் இயற்றிய கூர்ம புராணத்தில் வாணன் தன் மகள் உசைக்குச் செம்பொன் கொடுத்ததாகக் கூறுகிறது. விஞ்சையும் பெருமலை விளங்கொளி வெள்ளி என்ற பெருங்கதைக் குறிப்பையும் இத்துடன் தொடர்புபடுத்திப் பார்க்கலாம்.

ஆடகச் செம்பொன் மேனி
யனுருத்தற் கன்பி னொடு
மோடரி நெடுங்கட் செவ்வா
யுசையினை யளித்து வாணன்
கோடிமேற் கோடி செம்பொன்
கொடுத்தடி போற்றக் கண்ண
னீடுயுயர் மாட மோங்கு
நிகரெறி துவரை சேர்துதான். – கூர்மபுராணம் பூருவகால் 33. பாடல் பக்கம் 5

இக்கருத்ததை நோக்கும் போது நச்சினார்க்கினியர் கூறும் விழுநிதி செல்வம் வாணனிடம் நிறைந்திருந்தது என்பதை அறியலாம்.

செம்பியன் மகாபலி வாணன் எனப்படும் சங்க அரசன் இரண்டாம் பிரிதிவிபதியின் தலைநகரம் பரிகிபுரமாகும்.[8]

முதல் ராஜராஜன் காலத்து அரசியல் அதிகாரியான மறவந்தர சிம்மகபன்மனான ரஜ்ஜ ராஜ வாணகோவரையர் தலைநகர் பரிவைபுரமாகும்.[9]

பரிவை, பரிவிபுரி, பரிஜிபுரம் என்பது வாணர்களின் தலைநகரமாக இருந்துள்ளது. பரிஜி என்பதற்கு இரும்பாலான துண்டு என்ற் அபொருள் வடமொழி அகராதியில் காணப்படுகின்றது. இந்த ஊர் இரும்புத்துண்டுகளைக் கொண்டு கட்டப்பட்டது போல் கோட்டை இருந்திருக்க வேண்டும். மேலும் பரிஜி என்ற ஆயுதம் வாணன் வைத்திருந்ததாக பாகவத புராணத்தில் கூறப்படுகிறது. இதனை உறுதி செய்வது போல் கல்லாடத்தில் தாரகாட்சன், கமலாட்சன், வித்துயுன்மாலி போன்றவர்களின் முப்புரங்களையும் சிவபெருமான் அழித்ததாகக் கூறப்படுகின்றது. அதில் வித்தியுமாலி என்பவன் விந்தியமலை மாவலி வம்சமாகிய மாவலி வம்சத்தவனாகிய (விந்தியமாவலி) வாணா சூரனை குறிக்கும் என்பது கல்லாடத்தில் புலனாகிறது. முதல் இருவரையும் சிவன் தனக்கு வாயில் காவலர்களாகவும், மூன்றாமவனை குடமுழா இசைப்பவனாகவும் வைத்துக் கொண்டார் என்று கல்லாடத்தில் கூறப்படுகிறது. எனவே விந்திய மலைவாசியான வாணன் உலோகங்களை முப்புரங்கள் இயக்கியவர்களில் ஒருவன் என்று தெரிவதால் உலோக கோட்டை அமைக்கக் கூடிய வல்லமை பெற்றிருந்தவன் என்பதற்கு இதுவும் சான்றாகும். இவற்றை நோக்கும் பரிஜி என்பது வலிமையான கோட்டையாக இருந்திருக்க வேண்டும்.

வாணர்களும் கோபுரமும்

‘வாணன் பேரூர் மறுகிடை நாந்து நீணில் மளந்தோணாடிய’ (சிலம்பு 6 45-5)

‘வாணன் பேரூர் மறுகிடைத் தோன்றி
நிணில மளந்தோன் மகன் முன்னாடிய’ (மணி:3:12:4)

வாணன் பேரூர் என்பது சோ நகரமாகும். சோப்பூரு என்று கல்வெட்டில் குறிப்பிடப்படக் கூடியது தொப்பூர், சேலம் தர்மபுரி மாவட்ட எல்லைகளில் உள்ளது. இது ஒரு பெருங்கற்கால புதைகுழி உள்ள ஊராகும். தமிழ்நாடு தொல்லியல்துறை மாணவர் திரு.ஜான் பீட்டர் என்பவர் இவ்வூரில் சில கல்வெட்டுகளில் வாமன முத்திரை என்பது மகாபலி வம்சத்தவரிடமிருந்து நிலத்தைக் கைப்பற்றி வைதீக சமய கோயில்களுக்கு கொடையாக கொடுத்த அடையாள சின்னமாகலாம். இவ்வூரும் சோபுரம் என்றும் கூறலாம்.

தொண்டை நாட்டிலுள்ள முக்கியத் துறைமுகப்பட்டினத்திற்கு எயிற்பட்டினம். இதற்கு சோபட்டினம் என்று பெயர் இருந்தது. எயில் என்றாலும் சோ என்றாலும் மதில் என்பது பொருள். இது பிற்காலத்தில் மரக்காணம் என்று பொருள். சோபுரம் என்பது தேவாரப் பாடல் பெற்ற தலமாகும், இது கடலூர் அருகில் உள்ள ஆலம்பாக்கம் என்ற ஊருக்குப் பக்கம் உள்ளது. இவ்வூருக்கு கானலாற்றைக் கடந்து செல்ல வேண்டும்.

இச்சோபுரத்தில் கோயில் கொண்டுள்ள இறைவருக்கு சோபுரநாதர் என்று இறைவிக்கு சோபுரநாயகி என்றும் பெயர். இப்போது இவ்வூர் தியாகவல்லி என்றழைக்கப்படுகிறது. இந்தியாகவல்லி முதல் குலோத்துங்க சோழன் மனைவியாவாள். இவளால் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. இக்கடலூரிலுள்ள திருபாதிரி புலியூரில் ஜைன பிராகிருத நூல் வினைய விநிதையம் இயற்றப்பட்டது. திருபாதிரிபுலியூர் பகுதி பாணராட்டிரத்தைச் சேர்ந்ததாகும். இக்கருத்தைக் கொண்டு இவ்வூரே வாணர்களின் சோபுரமாக இருக்கலாம்.

முடிவுரை:

வாணர்களின் கல்வெட்டுகளில் வடுகவழி பன்னிராயிரம் என்றே குறிப்பிடுகின்றனர்.[11] பாணன் நன்னாடு வடக்கே இருந்ததாகக் குறிக்கின்றது.[12] இதனை நோக்கும் போது வாணர்களும் விந்திய மலைக்குத் தொடர்பு இருந்தது என்பது நன்கு புலப்படும்.

அடிக்குறிப்புகள்:

1. இக்கருத்தை வாணர்களும் தலைநகரமும் தலைப்பில் காண்க.
2. கல்வெட்டில் வாழ்வியல் டாக்டர் அ.கிருஷ்ணன், பக்கம் 171
3. Annual Report on Epigraphy 168/1606
4. ARE 112/1895
5. பாண்டிய நாட்டில் வாணாதிராயர்கள், வேதாசலம்
6. SACRED BOOK OF EAST (BHAAVT PURANAM) X 63-20-I VOL.10
7. Ibid VOL.II PAGE 221 AND VI 18,16,17.
8. UDAYENDIRAM PLATES OF PRITHIVIPATI II S.I.I. VOL.II PARTS III, IV AND V PAGE NO.388
9. South Indian Inscriptions VOL.XXII PART I NO.86 ARE 86/1906
10. பழங்காலத் தமிழர் வாணிகம் (சங்க காலம்) மயிலை சீனி. வேங்கடசாமி பக்கம் – 75.
11. TRAVANCORE ARCHAEOLOGICAL SERIES VOL.I T.A.GOPINATHA RAO.
12. அகநானூறு (பாடல் 325)

(இக்கட்டுரை எழுதுவதற்கு ஊக்கமளித்த திரு எஸ். இராமச்சந்திரன் அவர்களுக்கும், வரலாற்று அறிஞர் திரு நெல்லை நெடுமாறன் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.)

(22.12.96 அன்று சேலம் அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் வாசித்தளிக்கப்பட்டது.)

thillai.g@gmail.com

Series Navigation

கோ. தில்லை கோவிந்தராஜன்

கோ. தில்லை கோவிந்தராஜன்