வாடகை வாழ்க்கை…

This entry is part [part not set] of 22 in the series 20010917_Issue

சேவியர்.


வெள்ளைச்சட்டை போட்டு
பேருந்தில் ஏறும்போதெல்லாம்
அழுக்காகி விடுமோ எனும் கவலை தான்
அகம் முழுதும்.

அலுவலகம் அருகில் என்றால்
நடந்தே போய் விடலாம்….
ஆனால் அது அரை மணி நேரத் தொலைவு.

ஆட்டோவில் போக நினைத்தால்
பரிதாபப் பாக்கெட்டை
பத்து தடவை பார்த்து….
அந்த காசுக்கு… என்று
மனசு காய்கறிக் கணக்கு போடும்.

சைக்கிளில் போகலாம் என்றால்
அந்த
வறட்டுக் கெளரவமும்.
இந்த முரட்டு வெயிலும் முரண்டு பிடிக்கும்.

மாதச் சம்பளம்
கரைந்து முடிந்திருக்கும்
காலண்டரின் கீழ் வரிசை நாட்களில்
வெயிலுக்கு இளநீர் குடிக்கவே
நூறு முறை மனம் யோசிக்கும்.

தோளிலிருக்கும் பையை மாற்றலாம் என்று
ஒவ்வொரு முறை முடிவெடுக்கும் போதும்,
ஏதேனும் பள்ளிக்கூட ரசீதோடு
சிரிப்பாள் சின்ன மகள்…
மறந்து போன மளிகைக் கணக்கை
ஞாபகப் படுத்துவாள் மனைவி.

நடுத்தர வர்க்க வாழ்க்கை,
அது
இடுக்கிக்குள் பிழியப்படும்
எலுமிச்சைப் பாதி போல தான்.

என் புள்ளை கவர்மெண்ட் வேலைல இருக்கான்
என்று அப்பாவும்,
என் பொண்ணை ஆபீசருக்கு தான் கொடுத்திருக்கேன்
என்று என் மாமனாரும்
கிராமத்தில் கிலாகித்துக் கொண்டிருக்கிறார்கள்.
எங்கள் வாடகை வீட்டின் வாசனை நுகராமல்.

Series Navigationபாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு. >>

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்