வாக்கிற்காக ஒரு வாக்

This entry is part [part not set] of 45 in the series 20040916_Issue

மா. இரவிசங்கர்.


தமிழ்நாடு முழுதும் பரபரப்பாய் ஒரு நடைபயணத்தை நடத்திக்கொண்டிருக்கிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள். எதற்காக இந்த நடைப்பயணம் ? இவர் திமுக-வை விட்டு வெளியேரும்போது இவருக்காக உயிர் நீத்த அந்த அப்பாவி ஏமாளிகளுக்காகவா ? இல்லை இவரை நம்பி ஏமாறப்போகும் இவரின் தொண்டர்களுக்காகவா ? இவரின் நடைபயணத்தால் தமிழ்நாட்டில் போக்குவரத்து நெரிசலையும், காவல் துறையினருக்கு கொஞ்சம் தலைவலியையும் கொடுத்ததுதான் மிச்சம். தேர்தல் வாக்கிற்காக இந்த வாக் இல்லை கொள்கைக்காக மட்டுமே என்கிறார் வைகோ. இவரின் கொள்கைதான் என்ன ? திமுக இவரை அவமானப்படுத்தியதால் ஆவசேமாய் வெகுண்டெழுந்தார். இவரடைந்த அவமானம் தாங்கள் பெற்ற அவமானமென பல தொண்டர்கள் உயிர் துறந்தனர். இன்று திமுகவை அரவணைத்ததன் மூலம் உயிர் நீத்த அந்த ஆத்மாக்களின் உறக்கத்தை கெடுத்துவிட்டார். கொள்கைதான் முக்கியம் என நினைத்து திமுகவிடம் இறுதிவரை சரணடையாமல் இருந்திருந்தால் ஓரளவிற்கு நற் பெயராவது இருந்திருக்கும். இவருக்காக உயிர் துறந்தவர்களையே ஏமாற்றிவிட்ட வைகோவால் எப்படி மக்களை ஏமாற்றாமல் இருக்க முடியும் ? அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை என மேடைக்கு மேடை இவர் வேண்டுமானால் பேசலாம் ஆனால் ஏமாற்றப்படுவது இவரை நம்பும் இவரது தொண்டர்களும், மக்களும்தான். விசா இல்லாமல் இவர் இலங்கைக்கு சென்றதைப்போல் இஸ்லாமியர்களில் யாரும் பாகிஸ்தான் சென்றிருந்தால் தீவிரவாதி என மகுடம் சூட்டியிருப்பார்கள். இலங்கையிலிருந்து அகதிகளாய் தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள இந்த தமிழர்களின் அவதிகள் இவர் கண்ணுக்கு புலப்படாததேன் ? கொள்கைக்காகத்தான் இவரின் அரசியல் என மீண்டும் பேசி, கொள்கைக்காக வாழ்ந்த அரசியல்வாதிகளை கொச்சைப்படுத்தாமல் இருப்பது நல்லது. அரசியல்வாதிகள் ஏமாற்றும்வரை, ஏமாந்துக்கொண்டிருக்கும் தமிழக மக்களை நினைத்து வேதனைப்படாமல் இருக்க முடியவில்லை. நிறம்மாறும் அரசியல்வாதிகளை அடையாளம் கண்டபின்பும் கண்மூடிக்கிடக்கும் தமிழக மக்களே விழித்துக் கொள்ளுங்கள்! தமிழகம் ஒளிரட்டும் விழித்துக் கொள்ளுங்கள்!

அன்புடன்

மா. இரவிசங்கர்.

Series Navigation

மா. இரவிசங்கர்

மா. இரவிசங்கர்