வழிப்போக்கன்

This entry is part [part not set] of 33 in the series 20080724_Issue

பா.அ.சிவம் , மலேசியா



சமிக்ஞை விளக்கு சிவப்பாக இருக்கும் போது சாலையில் நின்று பச்சை விளக்கு வரும் வரை

காத்திருக்க எனக்குப் பிடிக்காது.அதற்கான பொறுமையை நான் இழந்து விட்டேன். எதிர்முனையில் எந்த

வாகனமும் வரவில்லையென்றால் சிவப்பு விளக்கையும் பொருட்படுத்தாமல் செல்வதே எனக்கு மகிழ்ச்சியை

அளிக்கும். மோட்டாரை அப்பார்ட்மெண்ட்டு-க்கு கீழே நிறுத்தி வைத்து பூட்டிவிட்டு லிப்ட்டுக்காக காத்திருக்கும் போதெல்லாம் பல்வேறு மனிதர்களை நான் பார்த்திருக்கிறேன். இந்த அப்பார்ட்மெண்ட்டில் தங்கியிருப்பவர்களில் பெரும்பாலானோர் வாடகைக்கு குடியிருப்பவர்களே.ஒரு

சிலரே நிரந்தர குடிவாசிகள்.

வழக்கம்போல் மோட்டாரை பூட்டிவிட்டு லிப்ட்டுக்காக காத்திருந்த போது, எனக்கு மிகவும்

பிடித்தமான அந்த மலாய் பெண்மணியைச் சந்தித்தேன்.மிகவும் வசீகரமானவள்.பகலிலே துணிச்சலாக கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு நடமாடுபவள்.இன்று ஓர் ஆப்பிரிக்க ஆடவனோடு இவளைக் காண்கிறேன். பலமுறை வெவ்வேறு மனிதர்களுடன் இவளைக் கண்டிருக்கிறேன்.மெல்லியதாய் அவள் சொன்ன ஹாய் எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. எப்போதும் இப்படித்தான். சோர்ந்து போகிறவர்களை இவள் போன்றவர்கள் ஒரு புன்னகை செய்து, அல்லது ஒரு நலம் விசாரிப்பின் வழி உற்சாகப்படுத்தி விடுகிறார்கள். இந்த

அப்பார்ட்மெண்ட்டில் ஒன்பது வருடங்களாக வாடகைக்கு இருக்கிறேன். கடந்த மூன்று வருடங்களாகத்தான் இவளைத் தெரியும். கடந்த இரண்டு ஆண்டுகளாக லிப்ட்டில் ஏறும் போதும் இறங்கும் போதும் இவளை உற்று கவனித்து வந்ததில், அதிசயமாக அன்றுதான் எனைப்பார்த்து புன்னகை செய்து விட்டு , ஹாய் என்று

சொன்னாள். அதன் பின்னர் லிப்ட்டில் பார்க்கும் போதெல்லாம் பிச்சை போடுவதாய் எண்ணி ஒரு புன்னகை செய்து விட்டுதான் செல்வாள். பலமுறை சோகத்தோடும் சோர்வோடும் வீடு திரும்பும் எனக்கு இதுபோன்ற அர்ப்ப விஷயங்கள்தான் உற்சாகத்தை அளித்திருக்கின்றன.

இவள் மட்டுமல்ல. இந்த அப்பார்ட்மெண்ட்டில் பலரை நான் அறிந்து கொண்டது லிப்ட்டில்தான்.அவர்கள் அனைவரையும் நண்பர்கள் என்று சொல்லி விட முடியாது. வழிபோக்கர்கள்தான். லிப்ட்டில் அறிமுகமாகி லிப்ட்டில் பேசி, லிப்ட்டிலே ஹாயும் பாயும் சொல்லிக் கொள்பவர்களை வேறு எப்படி அழைக்க முடியும்.

குறிப்பிட்டுச் சொல்வதற்கு ஒன்றிரண்டு பேர்கள்தான் உள்ளனர். அவர்களில் ஒருவர்தான் என் வீட்டிற்கு மேல்

மாடியில் தங்கியுள்ள நபர். ஒரு முறை லிப்ட்டில் என்னோடு ஏறியவர் , என்னையே உற்று உற்று பார்த்தார். ஏன் என சிரித்தேன். லிப்ட்டு நிற்பதற்குள் உங்களைக் கொஞ்ச நேரம் கட்டி அணைத்துக் கொள்ள முடியுமா என கேட்டார். எனக்கு வியப்பாகவும் அவரைப் பார்க்க பரிதாபமாகவும் இருந்தது. நான் ஒன்றும் சொல்லவில்லை.

பிடிக்கவில்லையென்றால் சொல்லி விடுங்கள். ஏன் அமைதியாக இருக்கிறீர்கள் என்று கேட்டார். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அதற்குப் பின்னர் பலமுறை நாங்கள் லிப்ட்டில் சந்தித்துக் கொண்டோம். ஆனால் அவர் என்னை நிமர்ந்து கூட பார்த்தது கிடையாது.

பதினான்காவது மாடியில் இறங்கி பதிமூன்றாவது மாடியிலுள்ள வீட்டுக்கு வந்தவுடன் அலுப்போ,

மகிழ்ச்சியோ,சோகமோ எதுவென்றாலும் நான் முதலில் செய்வது வீட்டின் சன்னலில் இருந்து கீழே செல்லும்

மனிதர்களைக் காண்பதுதான். கிட்ட திட்ட தவிர்க்க முடியாத அன்றாட கடமையாகி விட்டது அது. உலகமய

மாதலுக்கு அடிமையாகி விட்ட கோலாலும்பூர் வாழ்க்கையின் பரபரப்பை,அவசரத்தை,அலட்சியத்தை சன்னல் வழி ஒரு பார்வை காட்டி விடுகிறது. மாலை வேளையில் பெரும்பாலானோர் சாப்பாட்டு பொட்டலங்களுடன் வீடு

திரும்புவதையும், இரவில் காதலர்கள் காதலிகளுக்காக அப்பார்ட்டுமெண்ட் கீழே தங்களது கார்களில்

காத்திருப்பதையும் காண முடியும். சில கார்கள் பல மணி நேரமாய் நகரவே நகராது. காருக்குள் ஆள்

இருக்கிறார்களா – இல்லையா என சந்தேகமாக இருக்கும்.

பெரும்பாலும் வீட்டிலிருந்து வரும் அழைப்புக்களை நான் ஏற்பதில்லை. முக்கியமான செய்திகளை குறுந்தகவல் வழியாக அனுப்பி விடுவார்கள். அதுவும் கூட இப்போதெல்லாம் கிடையாது. ஆனால் இன்றென்னவோ

அதிசயமாக இருக்கிறது. தொடர்ந்து அழைத்துக் கொண்டே இருக்கிறார்கள் வழக்கத்துக்கு மாறாக.அழைக்கட்டும் என கைத்தொலைப்பேசியை மேசையில் வைத்து விட்டு, குளிக்கச் சென்று விட்டேன். குளித்து

விட்டு வந்து பார்த்ததில் இருபத்து மூன்று முறை அழைத்திருக்கிறார்கள். இப்படி தொடர்ந்து அழைத்தால் எனக்கு பேய் பிடிக்கும் என்பது அவர்களுக்குத் தெரியாது. குறுந்தகவல் வந்திருந்தது அப்பா இறந்து விட்டார் என்று.

மிகவும் கேவலமாக இருந்தது; அப்பாவின் சாவை குறுந்தகவலில் தெரிந்து கொள்வதற்கு.

பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்,எஸ்.பி.எம் தேர்வை முடித்தவுடனேயே கீதாவுடன் கோலாலும்பூருக்கு ஓடி வந்த அந்த அதிகாலை காட்சி இன்னும் விடியாமல் மனதுக்குள்ளேயே இருக்கிறது. புடுராயாவில்

வந்திறங்கியவுடன் எங்கு செல்வது, என்ன பண்ணுவது என ஒன்றும் தெரியாமல் கொஞ்ச நாள் கோலாலும்பூரில் நாய் படாத பாடாய் அலைந்து திரிந்தோம். ஓர் உணவகத்தில் நானும் கீதாவும் வேலைக்குச் சேர, முதலாளியின் தயவில் ஓர் அறையில் வாடகைக்கு தங்கினோம். வேலை, வேலை முடிந்தால் வீடு என நாட்கள் கழிந்தன. எங்களது தெய்வீகக் காதல் ஒரு மூன்று மாதம் வரை கூட நீடிக்கவில்லை. கடைக்கு அடிக்கடி வந்து போகும் ஒரு நபருடன் கீதா ஒருநாள் ஓடிப்போனாள். அவளைத் தேடாத இடமில்லை, அழாத நாளில்லை. தேடித்தேடி அலுத்து வெறுத்துப் போனப் பின்னர் இனி அவளை கனவில்கூட நினைக்கவே கூடாது என முடிவு செய்து

விட்டேன். நாய்க்காதலுக்காக வீட்டையும் பகைத்துக் கொண்டு , தோட்டத்திலிருந்து ஓடி வந்ததற்கு

கேடுகெட்ட கோலாலும்பூர் வாழ்க்கை சரியாக முகத்தில் காரி உமிழ்ந்து விட்டது. எந்த முகத்தை வைத்துக்

கொண்டு இனி நான் தோட்டத்திலுள்ள வீட்டுக்குத் திரும்புவேன். விளக்குமாற்றால் அடித்து விரட்டி விடுவார்கள்.

கீதாவுக்காகத்தான் ஓடி வந்தேன் என்றும் சொல்லிவிட முடியாது. அப்பாவின் கொடுமை தாங்க

முடியாமல் என்றாவது ஒருநாள் வீட்டிலிருந்து நான் வெளியேறிருப்பது நிச்சயம்.

தொடக்கப்பள்ளி படிக்கும் போதே நான் அதிகம் வெறுத்த நபர் அப்பாதான். அதற்கு ஆணித்தரமான

காரணம் இல்லையென்றாலும் பால்ய காலத்தில் கண் முன் நிகழ்ந்த சில சம்பவங்கள் அப்பாவை நான் கடுமையாக வெறுப்பதற்கு காரணமாகி விட்டன. அப்போது நான் இரண்டாம் வகுப்பு படிக்கிறேன் என்று நினைக்கிறேன்.

சரியாக நினைவில்லை. அப்பா குடித்து விட்டு அம்மாவை அடியோ அடியென அடித்து உதைத்தார். தடுக்கப்போன என்னை ஓங்கி அறைந்து தரையில் தள்ளி விட்டார். அம்மாவை இழுத்துக் கொண்டு அறைக்குச் சென்றார். சிறிது நேரத்தில் அம்மாவின் கதறல் ஓய, பயந்து பதறிப் போய் விட்டேன் நான். சாத்தியிருந்த கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்த போது நான் கண்ட காட்சி அம்மா – அப்பாவின் முன் இனி என்றும் நிற்க முடியாத அளவுக்கு வெட்கத்தையும் வேதனையையும் ஏற்படுத்தி விட்டது . ஆரம்பத்தில் எனக்கு ஒன்றும் தெரியவில்லை.

பின்னர்தான் கொஞ்சம் கொஞ்சமாக அன்று அந்த அறைக்குள் நிகழ்ந்த சம்பவம் எனக்கு புரிந்தது. ஒவ்வொரு முறையும் அப்பா அம்மாவை அடிக்கும் போதும், அறைக்குள் இழுத்துச் செல்லும் போதும் , உள்ளே இப்போது என்ன நடக்கும் என கற்பனை செய்து பார்க்க மட்டுமே என்னால் முடிந்தது அப்போது .. அப்பாவின் பேச்சும் செயல்களும் அச்சுறுத்தி வைத்திருந்தன அப்படி எனது பால்ய காலத்தை.

வீட்டில் எவரிடமும் சொல்லாமல், பக்கத்து லயன் நண்பர்களுடன் திருட்டுத்தனமாக ஊத்துக்குளிக்கு

குளிக்கச் சென்றதற்கு விறகுக்கட்டையால் அப்பாவிடம் வாங்கிய அடி இன்றுவரை புடைத்துக் கொண்டிருக்கிறது ஆறா தளும்பாய். ஒரு முறை எதற்காகவோ மாங்காய் மரத்தில் கயிற்றால் கட்டிப் போட்டார் காலையிலிருந்து

மாலை வரை. ஊரே வேடிக்கை பார்த்தது. மறுநாள் பள்ளிக்குச் செல்லவே அவமானமாக இருந்தது. எல்லாரும் கேலி செய்தார்கள். பள்ளியில் ரிப்போர்ட் கார்ட் கொடுத்தாலே வீட்டுக்குச் செல்ல முடியாது. ரோத்தான் பட்டையை வைத்துக் கொண்டு தயாராக இருப்பார். படிக்காட்டி போனா பின்னால சீவுவதற்கு கூட

மரமிருக்காது; நாக்கு வழிக்கணும்னு அடிக்கடி சொல்வார். அம்மாவுக்கு உதவியாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தீம்பாருக்குச் சென்று மரம் சீவினால், மீ£சையை நல்லா வழிக்கிற ? காயம் போடாம சீவ முடியாதா என

கத்துவார் . சுள்ளிக் குச்சியை உடைத்துக் கொண்டு அடிக்க வருவார். மற்றவர் மீது கொண்ட ஆத்திரத்தால் பால் கிண்ணத்தில் தேங்கிய நாற்ற மழை நீரை முகத்தில் வீசுவார்.

வீட்டில் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சண்டை நடக்காத நாளே இல்லை எனலாம். நன்றாகத்தான் இருப்பார்கள். திடீரென வீட்டிக்குப் பின்னால் சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள். ஒரு முறை இப்படித்தான் என்னடா இருவரையும் காணவில்லை என்று தேடிய போது, அம்மா கதறும் சத்தம் கேட்டு சமையற்கட்டுக்கு

விரைந்தேன். அம்மாவின் குரவலியை நசுக்கியவாறு அவரை இரு கைகளிலும் தூக்கி தடார் என சிமெண்டு தரையில் போட்டார் அப்பா. ரத்தம் பீறிட்டு வெளியேறியது. அந்த வயதில் எனக்கு என்ன செய்வது என்றே

தெரியவில்லை. பக்கத்து வீட்டுக்காரர்கள் ஓடி வந்தார்கள். பின்னர் கொஞ்ச நாளைக்கு சண்டையே இருக்காது.

பழையதை எல்லாம் ஒவ்வொன்றாக தொடர்ந்து நினைத்துப் பார்க்க முடியவில்லை. அனைத்தும் நேற்று நிகழ்ந்ததைப் போல கண்களில் பசுமையாக ஒழிந்திருந்து பயமுறுத்துகின்றன. மிகவும் கஷ்டமாக

இருக்கிறது. கடந்த பதினெட்டு ஆண்டுகளுக்கு முன் வீட்டிலிருந்து ஓடி வந்த நாள் முதல் இன்று வரை

வீட்டுடன் எந்தவொரு தொடர்பும் இல்லை. மிகவும் சுயநலத்தோடு அன்று நான் நடந்து கொண்டிருக்கிறேன். தினமும் அப்பாவிடம் அடிவாங்கி சாகும் அம்மாவையும் , ஒன்றுமே தெரியாத தம்பிகளையும் கொஞ்சமும் நினைத்து பார்க்காமல் நான் ஓடிவந்து விட்டேன். எவ்வளவு பெரிய பாவத்தைச் செய்திருக்கிறேன். நினைத்தாலே கேவலமாக இருக்கிறது. எனது முகத்தைப் பார்த்து காரி உமிழலாம் போலிருக்கிறது. இரு கன்னத்திலும் பளார் பளார் என அறையலாம் என்று ஆத்திரமாக இருக்கிறது. இங்கு ஓடி வந்தது முதல் அவ்வப்போது பணம் அனுப்பி வருகிறேன் .அதைத் தவிர வேறு என்ன செய்திருக்கிறேன். ஒரு மண்ணும் செய்யவில்லை. மனதில் எங்கோ ஒரு மூளையில் ஒட்டிக்கொண்டிருக்கிற வெறுப்பு என்னை ஆட்டிவைத்துக் கொண்டிருக்கிறது.

எனக்குத் தெரிந்த நண்பர் வழி, எப்போதாவது ஒருமுறை வீட்டைப் பற்றி விசாரிப்பேன். ஆகக் கடைசியாக மூன்று மாதங்களுக்கு முன் விசாரித்த போது, அப்பாவின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக

இருப்பதாகவும் , இரண்டு தம்பிகளும் அப்பாவையும் – அம்மாவையும் பார்த்துக் கொள்வதாகவும் கூறினார்.

வீட்டிலிருந்து ஓடி வந்தது ஒரு அவமானம் , போதாக்குறைக்கு கீதா என்னிடமிருந்து ஓடிப்போனது மற்றொரு அவமானம். இதற்குப் பின்னர் கடைசி காலம் வரை தோட்டத்துக்குத் திரும்பவே கூடாது என்ன ஆனாலும் என்றிருந்தேன். தீபாவளி வரும் போது மட்டும் ரொம்ப ஏக்கமாக இருக்கும். அதுகூட சில ஆண்டுகளாய் சலித்துப் புளித்துப் போய் விட்டது. இப்போது அப்பா இறந்து விட்டதாக செய்தி வந்திருக்கிறது. இந்த நேரத்தில் புறப்பட முடியாது. விடிந்து பார்த்துக் கொள்ளலாம் என பழைய சம்பவங்களையெல்லாம் நினைத்தவாறு தூங்க முயன்றேன்.

தாமதமாக தூங்கச் சென்றாலும், வழக்கமாக எழும் நேரத்தில் கண்கள் விழித்துக்

கொள்கின்றன. மணி ஆறரை.. எழுந்து குளித்து விட்டு , கைத்தொலைப்பேசியைப் பார்த்தேன். மாலை மணி

நான்குக்கு எடுக்கிறார்களாம். செய்தி வந்திருந்தது. கைத்தொலைப்பேசியைக் கொண்டுச் சென்றால் போகிற வழியில் மனம் மாறி விடலாம் என்ற அச்சத்தில் அதனை வீட்டிலேயே வைத்து விட்டு , வேலைக்கு கிளம்பி

விட்டேன்.


sivam_balan@yahoo.com

Series Navigation

பா.அ.சிவம் , மலேசியா

பா.அ.சிவம் , மலேசியா