வறுமை நிறம் சிவப்பல்ல – செழுமை

This entry is part [part not set] of 32 in the series 20061116_Issue

கே ஆர் மணி


அந்த சிறுவனுக்கு சின்ன வயதிலிருந்தே, ஏழ்மை கண்டு வெறுப்பு. நாளாக, நாளாக அந்த வெறுப்பு அதிகமாகிக்கொண்டே
போனதோயழிய, குறைந்தபாடில்லை. தனது தொழில்நுட்ப படிப்பு, மேலாண்மை படிப்பு எல்லாம் காகித குப்பை என ஏற்றுக்கொள்ள மனமில்லை. தனது படிப்பு, அறிவு, பதவி எல்லாம் உபயோகித்து இந்த வளரும் நாடுகளின் ஏழ்மையை துரத்திவிடும் கானல் நீர் கனவு மட்டும் ஓயவேயில்லை. அடித்தட்டு ஏழ்மை – வெறும் அரசாங்களோ, தன்னார்வ தொண்டு நிறுவனங்களோ அடிக்கடி பாடும் தெருமுனை பஜனையாகிப்போகிவிட்டதே என்ற நிதர்சன கவலை.

உலகப்பந்தின் மொத்த ஜனத்தொகை 6 பில்லியன். அதில் 4 பில்லியன் வறுமைக்கோட்டின் கீழ். உலகம் செல்வத்தின் 85% மக்கட்தொகையின் வெறும் 14% பேரால் மட்டுமே உருவாக்கி, உபயோகப்படுத்தப்படுகிறது. இதில் அடித்தட்டு மக்களின் பங்களிப்பு 1.5 % கீழே. கவனிக்கவும், கவலைப்படவும் வேண்டிய முக்கியமான விசயம், பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும், அடித்தட்டு அதலபாதளத்திற்கு போய்க்கொண்டுருக்கிறது என்பதும்தான். இருப்பவர்களுக்கும், இல்லாதவர்களுக்குமான இடைவெளி, பிளவு உயர்ந்துகொண்டே போகிறது. (Have and Have not) இந்த சமச்சீரின்மை சமுதாய பதற்றங்களையும், குற்றங்களையும், தீவிரவாதத்தையும் தூண்டுகிறது என்பது
மிகையாகாது. நமது நாட்டில் மட்டும் 117 மாவட்டங்கள் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளன என்றும், அந்த எல்லா மாவட்டங்களிலும் உள்ளூர் தீவிரவாதம் தலைவிரிதாடுகிறது என்றும் நாம் அறிய முடிகிறது. இதே கதைதான் உலகம் முழுவதும். .

வெறும் அரசாங்களோ, தன்னார்வ தொண்டு நிறுவனங்களோ மட்டும் தீர்க்ககூடிய பிரச்சனையில்லை. பணபலம், மூளைபலம், ஆட்பலம் பொருந்திய பன்னாட்டுநிறுவனங்களின் கூட்டால், இது சாத்தியப்படுமா ? அடித்தட்டால் அவர்களுக்கு ஏதாவது லாபம் இருக்குமா ?உலகப்பந்தின் பொருளாதாரத்தின் மைய அச்சான பன்னாட்டு நிறுவனங்கள் ஏன் இந்த அடித்தட்டை அடியோடு ஓதுக்கிவிட்டது என்ற கவலையும் குழப்புமான கேள்வி குடைகிறது அந்த மனிதனை. பன்னாட்டு நிறுவனங்களுக்கு தேவையான லாப நோக்கும், அடித்தட்டின் தேவைகளும் இணையுமானால் மாயாஜாலம் நடக்கலாமா ? ஏழைகளின் கண்ணீரும் மறையும், பன்னாட்டு நிறுவனங்களின் கஜானவும் நிறையும் – என்பது சாத்தியமானால் பூமிப்பந்தில் வறுமை ரேகையை கொஞ்சம் அழித்துவிடலாம் தான்.? ஆகவே ‘எல்லாருக்கும் எல்லாவும் கொடுத்தல்’ முடியாதாயினும் ஓரளாவாவது சமச்சீரான பொருளாதாரம் – என்பது உலகத்தின் கட்டாயமும் கூட. அது சரி, தீண்டப்படாத அடித்தட்டின் கதவுகளை பன்னாட்டு மேலாளர்களுக்கு யார் திறந்து காட்டுவது ? பூனைக்கு யார் மணி கட்டுவது. ?

சி.கே. பிரகலாத் கட்டியிருக்கிறார். அவரின் பல்லாண்டு கேள்விக்குடைச்சலின் விடையாய், ஏழ்மை தூரத்த இந்த நூற்றாண்டின்
வரமாய், சபிக்கப்பட்ட பாலைவனத்தை, சிரபுஞ்சியுடன் கைகோர்க்கவைக்கும் திட்டத்தோடும், ஆசைகளோடும் நம்பிக்கை விதை தூவிகிறார்.

இன்றைக்கு மேலாண்மை படிக்கும், பழகும் எல்லோருக்கும் தெரிந்த பெயர் சி.கே.பிரகலாத். அரசாங்கங்கள், அரசாங்கத்தின் கொள்கை இயற்றுபவர்கள், பன்னாட்டு நிறுவனங்கள், லாபம் நோக்கா தொண்டு நிறுவனங்கள், வளரும் நாடுகளின் வர்த்தக நிறுவனங்கள், தொழில் முனைவர்கள் – இப்படி எல்லோருமே இவரின் ‘BOTTOM OF PYRAMID ‘ எண்ண நோக்கை தலைமேல் வைத்து கொண்டாடுகிறார்கள். பல பன்னாட்டு நிறுவனங்கள் லாபத்தோடு புதிய சந்தையையும் அடித்தட்டு மக்களை அடைந்துவிட்டதான சமுக கடமையையும், சந்தோசத்தையும் ஒரு சேர அடைகிறது. லாபம் நோக்கா தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்களின் குறிக்கோள்களை நல்ல வழியில் அடைந்ததாய் பெருமைப்படுகிறார்கள். அரசாங்கங்கள் ஏழையின் சிரிப்பில் இறைவனை கண்டதாய் பெருமையடித்துக்கொண்டிருக்கின்றன. ஜ.நா. சபை உலகை சுற்றி, ஓரே குடையின் கீழ் கொண்டுவர சரியான அறிவு நூலாய் ( knowledge threat) பார்க்கிறது.

கடந்த பத்து வருடமாய் இந்த பொருளாதரக் கவிதை பூமி நெம்புகோலை மெளனமாய் புரட்ட ஆரம்பித்திருக்கிறது. கத்தியின்றி,
ரத்தமின்றி, சத்தமின்றி நம்மை சுற்றி அது நடந்து கொண்டுருக்கிறது. இது வரை வறுமைக்கோடு என்பது வளரும் நாடுகள் வாங்கிவந்த வரம் என்பது போன்ற எண்ணம் துடைக்கப்பட்டு, வசந்தங்கள் எல்லாம், எல்லார் சன்னலுக்கும் சொந்தம், வறுமை நிறம் செழுமையும் கூட என்ற நம்பிக்கை துளிர்விட ஆரம்பித்திருக்கிறது.

பொருளாஷ்ரம தர்மம் :

டயர் 1:: வளர்ந்த நாட்டின் மேல்தட்டு, நடுத்தட்டு மற்றும் வளரும் நாடுகளின் மேல்தட்டு மக்கள்
டயர் 2 & 3 : வளர்ந்த நாட்டின் அடித்தட்டு மற்றும் வளரும் நாட்டின் நடுத்தட்டு மக்கள்
டயர் 4 : வளரும் நாடுகளின் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மகாஜனம்.( இதில் ஒரு பில்லியன் மக்களின் வருமானம் $1 கீழே)

இந்த மாற்றங்கள் எப்படி சாத்தியமாகும் ?
அ) பன்னாட்டு நிறுவனங்களுக்கும் லாபம் [ 4 பில்லியன் மக்களை வாங்க வாக்கில்லாத மக்களாக பார்க்காமல், அவர்கள் வாங்கும்
பொருட்களையோ, சேவைகளையோ தயாரிக்கமுடியுமா ? ]
ஆ) அடித்தட்டு மக்களை பொருத்தவரை, வராது வந்த மாமணி. பணக்கார வீட்டுக்கே குடிபோகும் பொருட்களும், சேவைகளும் தம்மாலும் வாங்கி தூய்க்கமுடியும் என்கிற கனவு கைப்படுகிறது. [ ‘நான் குளிக்கும்போது சோப்பு போடக்கூடாதா என்ன ? நான் வாங்குகிற காசுக்கு எனக்கு வீடு கிடைக்காதா ? நான் தங்க நல்ல விடுதி அறை -என் காசுக்கேற்ப கிடைக்காதா ? எனக்கு சொத்து இல்லை- நான் பிழைத்து வாழ கடனுதவி கிடைக்காதா ? என் வறிய மகளுக்கு குறைச்சல் விலையில் கணிப்பொறி கிடைக்காதா? ]

சாத்தியப்படுத்திய ஜாம்பவான்கள் :

நிர்மா : அது ஒரு சின்ன கம்பெனி. அதன் தலைவர் கர்சன்பாய் (அகமாதாபாத்) தனது சைக்கிளில் தனது சின்ன தொழிற்சாலை சோப்புகளை தெருதெருவாய் அவரே விற்றுக்கொண்டு வருவார். அடித்தட்டு மக்களுக்கான சோப்பு அது. கிராமம், கிராமமாய், நகரத்தின் குடிசைகளுக்கும் அதன் பொருட்கள் குடிபுகுந்தது. கிராமத்தில் குளிப்பவர்கள் பெரும்பாலும் ஆற்றிலோ, கிணற்றிலோ குளிப்பார்கள். அவர்களுக்கான சோப்பில் எண்ணெய் வீதம் குறைத்து , குறைந்த விலையில் எல்லா இடங்களிலும் கிடைக்குமாறு செய்த நிறுவனம். மெல்ல மெல்ல அந்த கம்பெனியின் விசுவருப வளர்ச்சி, சந்தை ஆக்கிரமிப்பு, பன்னாட்டு நிறுவனத்தின் இந்திய வாலான – HLL ய் கதிகலங்க வைத்தது. எலி கண்டு யானை பயப்படுமா ? HLL பயந்து போனது. பின் அதற்கு பிறகு சுதாரித்து எழுந்து, தனது தவறை உணர்ந்து, அடித்தட்டு மக்களுக்கான “WHEEL” என்ற பிராண்டை அறிமுகப்படுத்தியது. அதன் தாய் நிறுவனமான யூனிலிவர் நிறுவனத்திற்கு அது பெரிய பாடம். அடித்தட்டு மக்களின் சந்தை ஒதுக்கக்கூடியதல்ல. சரியான விலை, தாழாத தரம், எங்கும் எப்போதும் கிடைக்கிற பரவல் தளம், உள்ளூர் சந்தைக்கேற்ப பொருள் மற்றும் விளம்பர மாற்றம் இருந்தால் – அடித்தட்டு 4 ஒரு லாபகரமான சந்தை என்பதை நிர்மா என்ற இந்திய கம்பெனியிடமிருந்து கற்றுக்கொண்டது. அந்த அறிவை பயன்படுத்தி பிரேசில் நாட்டில் ‘அலா’ என்ற
பிராண்டை அறிமுகப்படுத்தியது. அதன் அமோக வெற்றி – ‘Bottom of Pyramid ‘ கொள்கையை உறுதிப்படுத்தியது. அதை தொடர்ந்து எல்லா பன்னாட்டு நிறுவனங்களும் இதை நம்பி தனது நிறுவனத்தின் வளர்ச்சிக்கான ஒரு கொள்கையாய் ஏற்றுக்கொண்டன.அடித்தட்டு மக்களின் மீது பன்னாட்டு நிறுவனங்களின் பார்வையும், வெளிச்சமும் விழ ஆரம்பித்தது. அது ஒரு விடிவெள்ளி என்றெல்லாம் வர்ணிக்கமுடியாதெனினும் வறுமை முடிவின் ஒரு சின்ன தொடக்கமாய் இருக்கும் என நம்பலாம்.

அமுல் : பாலுக்காய் அழுத பிள்ளையாய் மற்ற நாடுகளுடன் கையேந்தும் நிலை – இந்தியாவுக்கு சில பத்தாண்டுகளுக்குமுன். ஆனால், ஒரு சின்ன கிராமம் இந்த விதியை வென்று, இன்று உலக நாடுகளிலே அதிக பால் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா வளர்ச்சி பெற்றிருக்கிறது. தலை வணங்குவோம் அந்த ‘ஆனந்த்’ கிராமத்துக்கும் (குஜராத் மாநிலம்) – ‘செரியன் ‘ என்கிற மாமனிதனுக்கும். சின்ன பொறியாய் ஆரம்பித்த பால் கூட்டுறவு சங்கம், பல்கி பெருகி, ஆல் போல் தழைத்து, ‘அமுல்’ எனும் பிராண்டாய் உலகம் சுற்றியது.

சின்ன கிராமத்தின் பால் உற்பத்தி திட்டமிட்டபடி, செரியனின் அறிவால், தொழில் நுட்ப உதவியால் அசுர வளர்ச்சி பெற்று, அதன்
பாலும், பால் சார்ந்த உப பொருட்களும் உலகப்பிரசித்திபெற்றவை. ஒரு சின்ன அடித்தட்டு கிராமமும் அதன் பொருளாதாரமும் இன்று பல பன்னாட்டு நிறுவனங்களுக்கு சவாலாய் அமைந்தது – ‘Bottom of pyramiad ‘ என்ற கொள்கை சாத்தியமானதே என்பதன் வாழும் சான்றாக அமைகிறது.

கிராமயன் வங்கி : ஏழை மக்களுக்கு வங்கிக்கு சென்று கடன் வாங்கும் அளவுக்கு படிப்போ, அறிவோ, அசையா சொத்துக்களோ கிடையா. அப்படிப்பட்ட அடித்தட்டு மக்களுக்கு பங்களாதேஷில் 20 வருடங்களுக்கு முன்னால் மொகமத யூசுப் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. சின்ன பரிசோதனை முயற்சியாய் ஆரம்பிக்கப்பட்ட விசயம், இன்று 25 மில்லியன் மக்கள் பயன்பெறும் வகையில் – நுண்கடன்உதவி திட்டம்(Microfinance) – பெரும்வளர்ச்சி பெற்று, அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை உயர்த்தியிருக்கிறது. இதில் கடன் வாங்கும் பெரும்பாலோனோர் மகளிர் என்பதும், இதில் வாங்கும் கடன்கள் பெரும்பாலும் திருப்பி அடைக்கப்படுகின்றன என்பதும், அதோடு லாபத்தையும் கொடுக்கின்றன என்பதால் – வங்கிகளை இந்த அடித்தட்டு மக்களை நோக்கி தங்கள் கடைக்கண்களை செலுத்த ஆரம்பித்திருக்கின்றன. செளத் ஆப்பரிக்காவின் ஷ்டாண்ட் பேங்க் – இதுவரை வங்கி வாசலையே மிதிக்காத அடித்தட்டு மக்களுக்காய் ATM மற்றும் இதர வசதிகளை அவரவர் சொந்த மொழியிலேயே விளக்கி சொல்லும்படியான சேவையை ஆரம்பித்தது. அதன் மாபெரும் வெற்றி, வங்கிகளின் தொழில்நுட்பம் அடித்தட்டு மக்களுக்கான சந்தையை அடைய செலவு குறைவான வழியும் கூட என்று புரிந்துகொள்ள ஆரம்பித்தன.

இதைப்போல் ஒரு சில எடுப்பான எடுத்துக்காட்டுகள் :

இந்தியாஒன் (indiaone ) – டாடா கம்பெனியின் குறைந்த விலை தங்குமிடங்கள் நடுத்தட்டு வியாபார நிமித்தமான சுற்றலுக்கான தங்குவருக்காக.
கவின்கேர் : ஒரு ரூபாய் ஷாம்பு ( அடித்தட்டு மக்கள் அதிக விலைகொடுத்து வாங்கி சேமித்துவைக்கமுடியாத ஷாம்பூவை, குளிக்கும்போது
மட்டும் விலைகொடுத்து வாங்கி கொள்ளும் அளவிலான பாக்கெட் வடிவமைப்பு)
SELF : சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரித்து கிராமப்புறங்களுக்கு வழங்கும் லாபகரமான திட்டம். கிராமமக்களாலே நடத்தப்பட்டு கிராமப் பொருளாதாரம் வளர வகை செய்யும் அதே நேரத்தில் பன்னாட்டு நிறுவனங்களின் கஜானவும் நிறையச் செய்யும்
தொலைநோக்குத்திட்டம்.
இ-செப்பல் : கிராமம் மக்கள் தங்களக்கு தேவையான விபரங்களை( தானிய விலைகள், தட்பவெப்பம், அரசாங்க சலுகைகள் ..) பெற
இண்டர்நெட் இணைக்கப்பட்ட கணிப்பொறி தகவல் மையமாய் செயல்படுகிறது.

மற்ற பன்னாட்டு கம்பெனிகள் : சிட்டி வங்கி, டுயு பாண்ட், ஷ்டார் பக்ஷ், யூனிலிவர், HP, ட்வொ, எபிபி.

இதன் கருத்தினால் கவரப்பட்ட MITன் தலைவர் வளரும் நாடுகளின் குழந்தைகளுக்காக $100 ல் கணிப்பொறி தயாரித்து கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். நல்ல சத்தான கல்வி குழைந்தகளுக்கு கொடுக்கப்பட்டால் பூமிப்பந்தின் அநேக பிரச்சனைகள் ஆவியாகிவிடும் என்று ஆழமாய் எண்ணுகிறார்.

கம்பெனிகள் இல்லாது தொண்டு நிறுவனங்களையும், அரசாங்களையும் சி.கே.பிரகலாத்தின் – Bottom of Pyramid (BOP)
அசைத்திருக்கிறது. ஏழ்மையை ஒளிக்கும் பதிலுக்காய் தன் வாழ்க்கையின் பெரும்பகுதியை – தனது கண்டுபிடிப்பான BOPவிற்காய்
செலவிட்டதுமில்லாமல் பல மேடைகளிலும், தளங்களிலும் இதற்காய் ஓயாது குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.

சில விமர்சனக்குரல்களும் கூடவே ஒலிக்கிறது.

விமர்சனங்கள் :
அ) இந்த பொருளாதாரக்கொள்கை வெறும் பன்னாட்டு நிறுவனங்களின் சந்தை விரிவுபடுத்தலின் ஒரு ஊத்தி
[அட.. அதனாலென்ன.. என் பட்ஜெட்டில் கார் கிடைக்கிறதே.. அவன் இதில் எத்தனை சம்பாதித்தான். என்பதைவிட நான் வாங்கும்
பொருள் கொடுக்கும் விலையைவிட அதிகமாயிருக்கிறதா.. Value for money ]
ஆ) இதனால் பயன் பெறப்போவது பன்னாட்டு நிறுவனங்கள் மட்டுமே. இந்திய நிறுவனங்கள் அல்ல.
[ முற்றிலும் உண்மையில்லை. அமுல், நிர்மா, அரவிந்த் போன்ற காலத்திற்கேற்ப மாறும் நிறுவனங்கள் விளையாட்டின்
விதிகளையே திருத்தி எழுதிவிடுகின்றன. அதில்லாமல், இப்போது இந்திய நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு
இணையாக போட்டி போட தயாரிகிவிட்டன. வறுமையையும், அடித்தட்டையையும் நம்மைவிட யாருக்கு அதிகமாய் தெரியும்.]

இதையும் தாண்டி, சி.கே.பிரகலாத்தின் – Bottom of Pyramid (BOP) – பூமிப்பந்தின் பொருளாதார நெம்புகோல் கவிதை
என்கிறார்கள் – பெரும்பாலான மேலாண்மை நிபுணர்கள்.

“தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை …”

கொஞ்சம் பொறுங்கள் பாராதி.. சி.கே.பிரகலாத்தின் – Bottom of Pyramid (BOP) – என்ன செய்கிறது எனப்பொருத்திருந்து பார்க்கலாம்.

[நன்றி : கலைமகள் : நவம்பர் 2006, இதழ் ]


K R Mani [mani@techopt.com]

Series Navigation

கே ஆர் மணி

கே ஆர் மணி