என்.கணேசன்
‘என்னால முடியும்னு நிஜமாவே நினைக்கிறீங்களா ‘- நூறாவது முறையாக
சின்னசாமி கேட்டான்.
‘கண்டிப்பா முடியும் ‘ அஸ்வின் பழைய பதிலையே சிறிதும் பொறுமை
இழக்காது சொன்னான். இந்த சாருக்கு உண்மையில் பைத்தியம் தான் பிடித்து
விட்டதோ என்ற சின்னசாமியின் சந்தேகம் மேலும் வலுத்தது.
‘சாப்பாட்டை டைனிங் டேபிளில் வெச்சிருக்கேன். நேத்து மாதிரி
மறந்துடாதீங்க. வரட்டுமா ‘
அவன் போய் விட்டான். சின்னசாமிக்கு நடப்பதெல்லாம் கனவு
போலவே இன்னமும் தோன்றியது. அந்த பிளாட்பார ஏழை ஓவியன் இந்த
சொகுசு பங்களாவுக்கு வந்து ராஜ வாழ்க்கை வாழ ஆரம்பித்து சரியாக
பதினான்கு நாட்கள் ஆகி விட்டது. நாளை மாலை அவன் திரும்பத் தனது
சேரிக்கே போய் விடுவான். பழையபடி தரித்திரம், குடிசை, பிளாட்பாரம்
என்று வாழ்க்கை சுழல ஆரம்பித்து விடும். இந்தப் பதினைந்து நாட்களையும்,
அஸ்வினையும் ஒரு பொக்கிஷமாக தனது மனதின் ஒரு மூலையில் வைத்து என்றுமே
பாதுகாப்பான். எல்லாமே ஒரு வெள்ளிக் கிழமை அஸ்வின் அவனைப்
பார்த்ததில் இருந்து ஆரம்பித்தது…
அன்று துர்க்கை பேரழகுடன் அந்தப் பிளாட்பாரத்தில்
பிரத்தியட்சமாகிக் கொண்டிருந்தாள். இந்த உலகையே மறந்து தன்
படைப்பிலேயே லயித்துப் போயிருந்த அந்தத் தெருவோர ஓவியனை அஸ்வின்
பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது கால்களை ஊனமாக்கிய கடவுள்
அத்ற்குப் பிராயச்சித்தமாக கைகளுக்கு ஓவியக்கலையைத் தாரை வார்த்துக்
கொடுத்து விட்டானோ என்று அஸ்வினுக்குத் தோன்றியது. அனாயாசமாக வரைந்து
முடித்த பின்பு தான் அமர்ந்திருந்த சக்கரங்கள் பொருத்திய பலகையை ஓரமாக
நகர்த்தி சுவரில் சாய்ந்து கொண்டான் அந்தப் படைப்பாளி. பலரும்
நாணயங்களை வீசி விட்டுச் சென்றார்கள். அஸ்வின் மட்டும் உன்னிப்பாக
துர்க்கையையே பார்த்துக் கொண்டிருந்தான். பல நிமிடங்கள் கழிந்த பின்பு
பாராட்டினான். ‘நல்லா வரைஞ்சிருக்கீங்க ‘.
நிறைய நேரம் நின்று கவனிப்பதும், அவனையும் ஒரு பொருட்டாக
நினைத்துப் பாராட்டுவதும் அந்தக் கலைஞனுக்குப் புதிய அனுபவம். அவனுக்குத்
தெரிந்து மேல் மட்ட மனிதர்கள் காசிலாவது தாராளமாக இருப்பதுண்டு.
ஆனால் அவனைப் போன்ற ஒரு பரம தரித்திரனை ஒருவன் கவனித்து, மதித்து
மனதாரப் பாராட்டுவது அதிசயமாயிருந்ததது.
‘என் பெயர் அஸ்வின். உங்க பெயர்… ‘
‘சின்னசாமிங்க ‘
அஸ்வின் நிறைய நேரம் நின்று சின்னசாமியுடன் பேசினான்.
அவனைப்பற்றிய தகவல்கள் எல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டான்.
சின்னசாமிக்கு உறவு என்று தற்போது யாருமில்லை என்பதையும், சிறு வயதில்
போலியோவால் இப்படி ஆகி விட்டது என்பதையும் கேட்டு இரக்கம் காண்பித்து
அவனைப் புண்படுத்தவில்லை. சேரியில் வசிக்கும் அவனிடம் சரிசமமாகப்
பேசி விட்டு நாளை அவன் எங்கு வரைவான் என்பதையும் தெரிந்து கொண்டு
போனான்.
மறு நாள் மாலையும் அஸ்வின் சின்னசாமியைத் தேடி வந்தான். காரைத்
தெருவின் எதிர்புறம் நிறுத்தி விட்டு வந்து அவன் வரைந்திருந்த சிவனை
நிறைய ரசித்தான். ‘சிலர் வரையறதில் அழகு இருக்கும், உயிர் இருக்காது.
நீங்க வரையறதில் ரெண்டும் இருக்கு. ‘
‘அதெல்லாம் எனக்குத் தெரியாதுங்க, சார். ஏதோ வரைவேன்.
அவ்வளவு தான் ‘
அஸ்வின் புன்னகைத்தான். ‘நீங்க கேன்வாசில் எல்லாம் வரைவீங்களா ? ‘
‘அப்படான்னா… ‘
‘துணியில், பெரிய வெள்ளைப் பேப்பரில் எல்லாம் வரைவீங்களா ‘
‘பெரிய பெரிய வார்த்தைகள் எல்லாம் சொல்றீங்க. அதெல்லாம்
பெரிய இடத்து சமாச்சாரம். நானே வயத்துப் பொழப்புக்கு வரையறவன்.
அதெல்லாம் எனக்கு வராதுங்க ‘
அவனது வார்த்தைகளில் இருந்த யதார்த்த உண்மை அஸ்வினுக்கு உறைத்தது.
ஓவியங்களைப் பற்றி சிறிது பேசிக்கொண்டிருந்து விட்டுக் கிளம்பும் முன் மறு
நாள் எங்கு வரைவான் என்று கேட்டுத் தெரிந்து கொண்டு கிளம்பினான். தான்
வரைவதைப் பார்ப்பதற்காகவே அவன் வருவது சின்னசாமிக்கு பெருமையாக
இருந்தது. ‘நான் நிஜமாவே அவ்வளவு நல்லா வறையறேனா ‘.
மறுநாள் அஸ்வின் வருவான் என்றே வழக்கத்தை விட அதிக சிரத்தை
எடுத்துக் கொண்டு வரைந்தான். மனதில் இதுவரை இல்லாத உற்சாகம் இருந்தது.
அதைக் கெடுக்கும் விதமாக சில இளைஞர்கள் குடித்து விட்டு தள்ளாடியபடி
வந்தார்கள்.
‘மாம்ஸ். இது ராமர் படமா, க்ரிஷ்ணர் படமா ‘
‘எவனாயிருந்தா எனக்கென்னடா ‘
‘எனக்கும் ஒண்ணும் இல்லை. சும்மா கேட்டேன். ஏம்ப்பா, உன்
பேரென்ன ? ‘
‘சின்னசாமிங்க ‘
‘ஓ. ஸ்மால் காட் ‘
‘என்ன சொன்னீங்க ‘
‘உன் பேரை இங்கிலீஷில் சொன்னேன். வரையற படம் மட்டுமல்ல
வரையற ஆளும் சாமிதாம்ப்போய் ‘
‘இனி எத்தனை காலத்துக்கு இந்த சாமி படமே வரைவீங்கப்பா. ஒரு
அழகான பொண்ணு படம் வரையேன் ‘
‘அதுவும் நிர்வாணமா வரைஞ்சா நோட்டு மழையா கொட்ட நாங்க ரெடி.
நீ ரெடியா ‘
‘நீங்க எல்லாம் படிச்சவங்க தானா. இவ்வளவு மட்டமா பேசறீங்களே ‘
‘உன் உயரத்துக்குத் தகுந்த மாதிரி தான் பேசினோம். ‘ என்ற ஒருவன்
அவனது கலர் சாக்பீசுகளைத் தள்ளி விட்டான்.
‘நீயே பிச்சைக்காரன். பெரிய மனுசன் மாதிரி ஏண்டா பேசறே ‘
என்று இன்னொருவன் சாயங்கள் இருந்த கிண்ணங்களைத் தட்டி விட்டான்.
சின்னசாமிக்கு இரத்தம் கொதித்தது. ‘….ப்பசங்களா ‘ என்று
கத்த மாணவர்கள் மூர்க்கமாய் தாக்க ஆரம்பித்தார்கள். தெருவில் ஆள்
நடமாட்டமே இல்லாதிருந்தது அவர்களுக்கு வசதியாகப் போய் விட்டது. அவன்
மயங்கி விழுந்தவுடன் ஓடி விட்டார்கள். இந்த சமயம் அந்தப் பக்கம் வந்த
ஒருவன் அசுர வேகத்தில் ஓவியத்தின் மேல் இருந்த காசுகளைப் பொறுக்கி
எடுத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் மறைந்தான்.
எதிர்பாராது கிடைத்த திடார் சந்தர்ப்பங்களை உடனடியாக முதலாக்கிக்
கொள்ளும் மனிதர்கள் என்றுமே இருக்கிறார்கள்.
அஸ்வின் அங்கு வந்த போது சின்னசாமியை ஒரு நாய் மட்டும்
விசாரித்துக் கொண்டிருந்தது. பதைத்துப் போய் ‘சின்னசாமி….
சின்னசாமி ‘ என்று அழைத்தான். சின்னசாமி அசையவில்லை. தூரத்தில்
நின்றிருந்த ஆட்டோவில் உறங்கிக் கொண்டிருந்த ஆட்டோக்காரனை உதவிக்கு
அழைத்து சின்னசாமியைத் தூக்கித் தன் காரில் போட்டுக் கொண்டு
ஆஸ்பத்திரிக்கு விரைந்தான்.
சின்னசாமி கண் விழித்த போது அஸ்வின் அருகில் இருந்தான்.
‘எப்படி இருக்கு சின்னசாமி ‘
‘பரவாயில்லைங்க ‘
‘என்ன ஆச்சு ‘
சின்னசாமி சொன்னான்.
‘கொஞ்சமும் மனிதாபிமானமில்லாமல் சிலர் இப்படிக்
காட்டுமிராண்டித்தனமாய் நடந்துக்கறாங்களே ‘ அஸ்வின் அங்கலாய்த்தான்.
‘சில பசங்களுக்கு ஜாலியாய் இருக்கிறதுக்கும் அடுத்தவங்களுக்கு
தொந்தரவு கொடுக்கிறதுக்கும் வித்தியாசம் தெரியாதுங்க. இதெல்லாம்
எனக்குப் பழக்கமானது தான். பொதுவா கோபப்பட மாட்டேங்க. ஆனா சில
சமயம் என்னையும் மீறி கோபம் வந்துடுதுங்க. நானும் மனுசன் தானே ‘
அவன் வார்த்தைகள் அஸ்வினின் மனதைத் தொட்டன. ‘போலிசுக்குப்
புகார் தரணும் சின்னசாமி ‘
‘ஐயோ அதெல்லாம் வேண்டாம் சார். அவங்க உபத்திரவம் இன்னும்
அதிகமாகும். வந்து வரைஞ்சது மேலே தண்ணி கொட்டுவான். போலிசுக்குக்
காசு கொடுத்து ட்ராபிக்குக்கு இடைஞ்சல்னு விரட்ட வைப்பான். இப்படி ஏழைக்குத்
தொந்தரவு தர அவங்களுக்கு எத்தனையோ வழி இருக்குங்க. எதிர்த்து நின்னா
என் பொழப்பு நடக்காது. மழைக்காலம் வரதுக்கு முன்னாடி நான் கொஞ்சம்
சம்பாதிச்சா தான் அப்புறம் ரெண்டு மூணு மாசம் என் வயத்தை நிரப்ப முடியும் ‘.
‘சரி விடுங்க. டாக்டர் பெரிசா எதுவுமில்லை, இன்னைக்கே
வீட்டுக்குப் போகலாம்னு சொல்லிட்டார். இங்கிருந்து போகறதுக்கு முன்னாடி
உங்க கிட்ட முக்கியமா ஒரு விஷயம் பேசணும் ‘
‘சொல்லுங்க சார் ‘
‘ உங்க கிட்ட பிரமாதமான திறமை இருக்கு. அது
பிளாட்பாரத்தோட நின்னுடக்கூடாது. இன்னும் பதினைந்து நாளில் இந்த ஊரில்
ஒரு பெரிய ஓவியப் போட்டி நடக்கப் போகுது. இது ஒரு அகில இந்தியப்
போட்டி. இதுல நீங்க கலந்துக்கப் போறீங்க. என்ன சொல்றீங்க ‘
‘சார். நீங்க நல்லவங்க. ஆனா நீங்க நினைக்கிற அளவு திறமை
எல்லாம் எனக்கு கிடையாது. இந்தப் போட்டி ஒரு ப்ளாட்பாரத்தில் நடக்கிற
சாக்பீசுல வரையற போட்டியில்ல. எனக்கு பிரஷ் பிடிக்கக் கூடத்
தெரியாது ‘.
‘அதையும் வேற சில நுணுக்கங்களையும் நான் சொல்லித்தர்றேன்.
பதினைந்து நாளில் நீங்க எல்லாமே கத்துக்க முடியும் ‘
‘சார் நீங்க தப்பா நினைக்கக்கூடாது. உங்களுக்குப் பைத்தியம்
இல்லையே ‘
அஸ்வின் வாய் விட்டுச் சிரித்தான். ‘பைத்தியம் தான். கலைப்
பைத்தியம். திறமை எங்க வீணாப் போனாலும் தாங்க முடியாத பைத்தியம்.
சரின்னு சொல்லுங்க சின்னசாமி. என் கூட என் வீட்டுக்கு வந்துடுங்க. எண்ணி
பதினைந்து நாள் இருங்க. இந்தப் பதினைந்து நாளில் நீங்க எவ்வளவு
சம்பாதிப்பீங்களோ அதை நான் தர்றேன். சரியா ‘
‘என்ன மனிதனிவன் ‘ என்று சின்னசாமி வியந்தான். ஏளனம்,
அவமானம், சில சமயங்களில் இரக்கம் இதை மட்டுமே மற்றவர்கள் அவனுக்குத்
தந்திருக்கிறார்கள். இப்படி ஒரு முக்கியத்துவமும், அன்பும் இது வரை யாருமே
அவனுக்குத் தந்ததில்லை. என்னென்னவோ சொல்லிப் பார்த்தான். அஸ்வின்
அதற்கெல்லாம் மசியவில்லை. அவனுக்கு எல்லாமே கனவில் நடப்பது போல
இருந்தது. கடைசியில் சரியென்றான்.
அஸ்வின் ஒரு பெரிய கம்பெனியில் கம்ப்யூட்டர் இஞ்சீனியர் என்றும்
திருமணமாகவில்லை என்றும் பெற்றோர் இருவரும் உயர்ந்த அரசாங்கப்
பதவிகளில் பெங்களூரில் இருக்கிறார்கள் என்றும் சின்னசாமி தெரிந்து
கொண்டான். அவன் வீட்டுக்குள் நுழையவே சின்னசாமி சங்கடப்பட்டான்.
சேரிக்கே பொருத்தமான தன் உருவம் இந்தப் பணக்கார வீட்டில் சிறிதும்
பொருத்தமில்லாமல் இருப்பதாக அவனுக்குப் பட்டது. தயக்கத்துடன் நுழைந்தான்.
அன்றே அஸ்வின் ஏகப்பட்ட உபகரணங்களை அவனுக்கு அறிமுகப்படுத்தினான்.
உபயோகப்படுத்தும் முறைகளை மிகவும் பொறுமையோடு சொல்லிக்
கொடுத்தான். சிறிது நேரத்தில் சின்னசாமி ஒரு குழந்தையின்
உற்சாகதோடும் பிரமிப்போடும் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள
ஆரம்பித்தான்.
‘சார் நீங்களும் வரைவீங்களா ‘
‘ம்.வரைவேன் ‘ என்று சுருக்கமாகச் சொல்லி அஸ்வின் பேச்சை
மாற்றினான்.
மூன்று நாட்கள் லீவு போட்டு அவனுடனேயே இருந்து எல்லாவற்றையும் கற்றுக்
கொடுத்தான். அவனுக்கு உணவு, உடை எல்லாம் கொடுத்தான். தொடர்ந்த
நாட்களில் சின்னசாமி நேரம், காலம் எல்லாவற்றையும் மறந்தான். வரையும்
போது எத்தனையோ முறை அஸ்வின் வந்து நின்று பார்ப்பான். பல சமயங்களில்
அவன் வந்தது, நின்றது, போனது எதுவுமே சின்னசாமிக்குத் தெரிந்ததில்லை.
பல சமயம் வைத்த காபி, சாப்பாடு எல்லாம் வைத்த இடத்திலேயே இருக்கும்.
அஸ்வின் பல முறை நினைவு படுத்த வேண்டி இருக்கும். லீவு முடிந்து
கம்பெனிக்குப் போக ஆரம்பித்த பின்னும் சின்னசாமிக்கு மதியம் சாப்பிடத்
தேவையானவற்றைத் தயார் செய்து வைத்து விட்டுப் போவான். ஆரம்பத்தில்
சின்னசாமிக்கு அது மிகவும் தர்மசங்கடமாக இருந்தது. ‘சார் இதெல்லாம்
வேண்டாங்க ‘ என்று சொல்லிப் பார்த்தான். ‘இதெல்லாம் ஒரு விஷயமே
இல்லை. வரையறதைத் தவிர வேற எல்லாத்தையும் நீங்க மறந்துடுங்க
சின்னசாமி ‘ என்று வாயடைத்தான். அவன் சொன்னது போலவே சின்னசாமி
எல்லாவற்றையும் மறந்து தான் வரைந்து கொண்டிருந்தான். போட்டிக்கு முந்தைய
நாளான இன்று தான் மனம் ஏனோ பழையதை அசை போடுகிறது.
அன்று மாலை அஸ்வின் வந்தவுடன் சின்னசாமி கேட்டான். ‘இப்ப இதில்
நான் நல்லா வரையறேனா சார் ‘
‘ஜமாய்க்கிறீங்க. முதல் பரிசு எவ்வளவு தெரியுமா ? ஒரு லட்சமும் ஒரு
கப்பும். போட்டியில் ஒரே ஒரு முக்கியமான விஷயம். அதில் மட்டும் நீங்க
தேர்ந்தெடுக்கிறது சிறப்பாய் இருந்தால் பரிசு நிச்சயம். ‘
‘என்ன சார் அது ‘
‘ஒரு தலைப்பு தருவாங்க. அதற்குப் பொருத்தமான ஓவியத்தை நீங்க
உங்க கற்பனையில் தேர்ந்தெடுக்கணும். அதுக்கு மட்டும் நான் உங்களைத் தயார்
செய்ய முடியாது ‘.
சின்னசாமியின் உற்சாகமெல்லாம் வடிந்து போனது. ‘சார் அதெல்லாம்
என் தலைக்கு எட்டுங்களா ‘
‘எல்லாம் எட்டும். எத்தனை அனுபவங்கள் எத்தனை காட்சிகள் நீங்கள்
பார்த்திருப்பீங்க. அதில் எதாவது அந்தத் தலைப்புக்குப் பொருந்தும். அதை
வரைஞ்சிடுங்க ‘ என்று சின்னசாமிக்கு தைரியம் சொன்னாலும் அந்த
விஷயத்தில் அஸ்வினுக்கே சந்தேகம் இருந்தது. இதை வரை என்றால்
சின்னசாமி சிறப்பாய் வரைவது நிச்சயம். ஆனால் பெரும்பாலும்
வித்தியாசமான தலைப்புகளே தரப்படும். சென்ற வருடம் டில்லியில் போட்டி
நடந்த போது ‘சாரி ஜஹாங் சே அச்சா ‘ என்ற தலைப்பு தந்து எல்லா இந்திய
மொழிகளிலும் தலைப்பை மொழிபெயர்த்தும் கொடுத்தார்கள். இப்படி கவிதைத்
தலைப்பாய் தந்தால் அதற்குப் பொருத்தமாய் சின்னசாமிக்கு வரைவதைத்
தேர்ந்தெடுக்க முடியுமா என்று தான் யோசனையாய் இருந்தது.
போட்டி நாள் அன்று இரண்டு செட் உபகரணங்களை எடுத்து வைப்பதைக் கண்ட
சின்னசாமி ‘எதுக்குங்க ரெண்டு செட் ‘
‘எனக்கும் உங்களுக்கும் ‘ என்று அஸ்வின் புன்னகையோடு சொன்னான்.
தனக்குச் சொல்லிக்கொடுக்கும் அளவு ஞானம் உள்ளவன், இந்தக் கலையில்
இவ்வளவு ஆர்வம் உள்ளவன் போட்டியில் கலந்து கொள்வான் என்று தனக்கு
உறைக்காதது ஏன் என்று சின்னசாமி தன்னையே கேட்டுக் கொண்டான். ஆனால்
தனக்குப் போட்டியாக தானே ஒருவனை வலுக்கட்டாயமாக உருவாக்குவானா என்பது
தான் ஆச்சரியமாக இருந்தது.
போட்டி நடக்கும் இடத்தில் காரிலிருந்து அவர்கள் இறங்கிய போது பல
பத்திரிக்கை மற்றும் டிவி நிருபர்கள் அவர்களைச் சூழ்ந்து கொண்டார்கள்.
‘தொடர்ந்து மூன்று வருடங்கள் முதல் பரிசு வாங்கியிருக்கிறீர்கள். இந்த
தடவையும் வாங்கிடுவீங்களா ‘ என்று ஒரு நிருபர் அஸ்வினைக் கேட்ட போது,
‘இந்த தடவை போட்டி கடுமையாக இருக்கும்னு எதிர்பார்க்கிறேன் ‘ என்று அவன்
சொல்லி சின்னசாமியைப் பார்த்து லேசாகக் கண்ணடித்தான்.
சின்னசாமிக்கு நாக்கு வரண்டது. அஸ்வின் இவ்வளவு பிரபலமான ஓவியன்
என்று இப்போது தான் தெரிகிறது. அங்கு கிட்டத்தட்ட நூறு போட்டியாளர்கள்
வந்திருந்தார்கள். ஓவியர்கள் தங்களது ஓவியங்களை முன்பே அனுப்பி அவற்றின்
தரத்தை ஒரு குழு ஆராய்ந்து பார்த்து தான் போட்டியில் கலந்து கொள்ளவே
அனுமதி கிடைக்கும் என்றும் அஸ்வின் மிகவும் சிபாரிசு செய்து தான் தனக்கு
மட்டும் விதிவிலக்கு அளித்திருக்கிறார்கள் என்றும் அவர்களில் சிலர் பேசும்
போது சின்னசாமிக்குத் தெரிந்தது. பெரும்பாலோரின் நாகரிக உடையும்
நுனி நாக்கு ஆங்கிலமும் பத்திரிக்கை டிவி கேமராக்களும் கண்டு சின்னசாமி
பயந்து போனான். எல்லாமே அன்னியமாகவும் தன் தரத்திற்கு எட்டாத தூரத்தில்
இருப்பதாகவும் அவனுக்குப் பட்டதால் அங்கிருந்து தப்பித்தால் போதும் என்று
தோன்றியது. அஸ்வின் அவனருகே வந்த போது ‘என்னங்க என்னை இப்படி மாட்ட
விட்டுட்டாங்களே. எனக்கு இதெல்லாம் வேண்டாங்க. நான் போயிடறேன் ‘
என்றான்.
‘போட்டி முடிஞ்சாப் போயிட வேண்டியது தான். அது வரைக்கும்
எந்தப்பேச்சும் கூடாது. சொல்றதை கவனமாய் கேளுங்க. அவங்க ஒரு தலைப்பு
தருவாங்க. அதைத் தமிழிலேயும் சொல்வாங்க. நல்லா யோசிச்சு அதை
வைத்து உங்களுக்கு என்ன வரையணும்னு தோணுதோ அதை வரையிங்க.சரியா.
எத்தனை கடவுள்களை வரைஞ்சிருப்பீங்க. அத்தனை கடவுள்களும் உங்களுக்குக்
கண்டிப்பாய் உதவி செய்வாங்க ‘. பதிலுக்குக் காத்திராமல் தனது இடத்திற்குப்
போய் விட்டான்.
சின்னசாமிக்கு வரைய செளகரியமாக எல்லா ஏற்பாடுகளும் தனியாக
செய்திருந்தார்கள். அவன் மனதில் மட்டும் நம்பிக்கையோ உற்சாகமோ இல்லை.
தனக்கு எதாவது பரிசு கிடைக்கும் என்று அவன் சிறிதும் நம்பவில்லை.
‘கடவுளே அந்த சாரின் நல்ல மனசுக்கு இந்த தடவையும் அவருக்கே முதல் பரிசு
கிடைக்கணும் ‘ என்று வேண்டிக்கொண்டான்.
தலைப்பை அறிவித்தார்கள். ‘நெஞ்சு பொறுக்குதிலையே ‘. இந்த முறை
பாரதியின் கவிதை வரி.
சின்னசாமி யோசித்தான். எல்லாரும் தலைப்பைக் கேட்டவுடன் வரைய
ஆரம்பித்து விட்டார்கள். ‘எத்தனை அனுபவங்கள், காட்சிகள் உங்கள்
வாழ்க்கையில் பார்த்திருப்பீங்க. அதில் ஏதாவது தலைப்புக்குப் பொருந்தும்.
அதை வரையுங்க ‘ என்று அஸ்வின் சொல்லி இருந்தது நினைவில் வந்தது. அவனுக்கு
நெஞ்சு பொறுக்காத அனுபவம் சமிபத்தில் அடி பட்டது தான். அஸ்வின் தன்னை
எந்த நிலையில் கண்டான் என்று சொல்லி இருந்தான். ‘பார்க்க மனசுக்குப்
பொறுக்கலே ‘ என்ற அவனது வார்த்தையும் நினைவுக்கு வர அந்தக்காட்சியையே
வரைய தீர்மானம் செய்தான். எதாவது ஒன்றை வரைந்து அங்கிருந்து போனால்
போதும் என்று தோன்றவே அத்ற்கு மேல் யோசிக்கவில்லை.
வரைய ஆரம்பித்த பின் வழக்கம் போல் எல்லாவற்றையும் மறந்தான்.
அவன் மனக்கண்ணில் அந்தக் காட்சி விரிய திரைச்சீலையில் அந்தக் காட்சி
உயிர் பெற ஆரம்பித்தது. மற்றவர்களை விட முன்பாகவே வரைந்து முடித்தும்
விட்டான். எல்லோருடைய ஓவியங்களையும் ஒருவர் வந்து வாங்கிக் கொண்டு
போனார். பரிசை சிறிது நேரத்தில் அங்கேயே அறிவிப்பார்களாம்.
அஸ்வின் ஆர்வத்துடன் வந்து கேட்டான். ‘என்ன வரைஞ்சீங்க ? ‘.
சின்னசாமி சொன்னான்.
‘நான் ஒரு குழந்தைத் தொழிலாளியை வரைஞ்சேன் ‘ என்ற அஸ்வின் ஒரு
கணம் யோசித்து விட்டுச் சொன்னான் ‘நான் மட்டுமல்ல எல்லாரும்
மத்தவங்களையோ வேற காட்சிகளையோ வரைஞ்சிருப்பாங்க. அதில் எங்க
திறமை மட்டும் இருக்கும். உங்க ஓவியத்தில் நீங்களே இருக்கீங்க, உங்க
சொந்த அனுபவமே இருக்கு. உங்க திறமையைப் பத்தி சொல்ல வேண்டியதில்லை.
பரிசு கண்டிப்பாய் கிடைக்கும். வாழ்த்துக்கள் ‘
‘சார், எனக்காக இவ்வளவு செய்யறீங்க. இதுக்கு நான் எத்தனை
ஜென்மம் எடுத்து கடன் தீர்க்கப் போறேன்னு தெரியல ‘
‘பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாதீங்க சின்னசாமி. உங்க
திறமை உங்களுக்குத் தெரியாது. அது ஒரு பிளாட்பாரத்தில் ஆரம்பிச்சு
அங்கேயே முடிஞ்சுடக் கூடாது. அது மேடை ஏறணும். நீங்க நிறைய வரையணும்.
நான் ரசிச்ச மாதிரி உலகமே ரசிக்கணும்… ‘
பரிசை அறிவிக்கப் போகிறார்கள் என்று அறிவித்தார்கள். அரங்கில்
பேரமைதி நிலவியது.
‘முதல் பரிசு சின்னசாமிக்கு…. ‘
சின்னசாமி அதிர்ச்சியில் பிரமை பிடித்தவன் போல் இருந்தான்.
இது கனவா நனவா என்று ஒன்றும் புரியவில்லை. அவனைக் கேமராக்கள் படம்
பிடிக்க ஆரம்பித்தன. அஸ்வின் முகத்தில் மகிழ்ச்சி எல்லையில்லாமல்
விரிந்தது. சின்னசாமிக்கு ஒரு வேளை தன் தாய் உயிரோடு இருந்திருந்தால்
இப்படி சந்தோஷப் பட்டிருக்கலாம் என்று தோன்றியது.
முதல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட காரணத்தை தேர்வுக் குழுவின்
தலைவர் ஆங்கிலத்தில் சொல்லிக் கொண்டிருந்தார் ‘…ஒரு உடல் ஊனமுற்ற
கலைஞன் யாரும் கேட்பாரற்று நிராதரவாய் தன் ஓவியத்தின் மீதே விழுந்து
கிடக்கும் இந்த நிலை நிஜமாகவே தலைப்புக்குப் பொருத்தமாக இருந்ததாலும்,
ஓவியம் உயிரோட்டத்துடன் தத்ரூபத்துடன் இருந்ததாலும் … ‘ சின்னசாமிக்கு
அவர் பேசியது என்ன என்றே தெரியவில்லை.
இரண்டாம் பரிசு அஸ்வினுக்கும் மூன்றாம் பரிசு ஒரு பஞ்சாபிக்கும்
கிடைத்தது.
நிருபர்களுடன் கேமராக்களும் மைக்குகளும் சின்னசாமியை நெருங்கின.
‘உங்களைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன் ‘
‘என்னப் பத்தி சொல்ல ஒண்ணும் இல்லைங்க. நான் பிளாட்பாரத்தில்
சாக்பீசையும், சாயத்தையும் வெச்சு வரைஞ்சிட்டிருந்த ஒரு சாதாரணமான
ஆளுங்க ‘.
‘சமூக ஓவியங்கள் எல்லாம் முன்பு வரைந்ததுண்டா ‘
‘இல்லைங்க. கடவுள் படம் தான் வரைஞ்சிருக்கேன். அதுக்கு தான் காசு
விழும். ஒரு கடவுள் படம் தவிர எல்லாக் கடவுள் படமும் வரைஞ்சிருக்கேங்க. ‘
‘எந்தக் கடவுளை படம் வரைந்ததில்லை ‘ ஒரு நிருபர் ஆர்வத்துடன்
கேட்டார்.
‘அந்தக் கடவுளைத் தாங்க ‘ என்று அஸ்வினைக் காட்டிக் கண் கலங்கிய
சின்னசாமிக்கு மேற்கொண்டு பேச முடியவில்லை.
____
நன்றி:மரத்தடி.காம்
என்.கணேசன்
nganezen@yahoo.com
- பட்டு
- ஓடுகிறேன் ஓடுகிறேன்
- காகிதம்
- தமிழோவியத்தின் தீபாவளி மலர்
- கிருஷ்ணனின் நிலங்களில் கிருத்துவ அறுவடை பற்றி அப்துல் கலாமிற்கு ஒரு கடிதம்
- மனப்புள்ளிகள் உரசி மீளும் தருணங்கள் – (அனைத்தும் கடந்து-பன்மொழிக் கதைத்தொகுதி அறிமுகம்)
- நவீன இலக்கியத்தின் காலியிடத்தில் உடைத்த அழுகிய கோழி முட்டை
- இருப்பு தெரிந்தாலல்லவா இழப்பு வருத்தும் !
- நைல் நதி நாகரீகம், எகிப்தின் பிரமிக்கத் தக்க பிரமிட்கள் – 1 (The Great Pyramids of Egypt)
- உலகின் அதி பழமையான டைனசோர் முளையம்.
- நவ நவமாய்….
- புண்ணாடை
- சேணம் காத்திருக்கிறது
- யாரும் இங்கு மரணிக்கவில்லையே!
- கீதாஞ்சலி (38) என்னிதயம் நாடுவது உன்னை! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- /ா/
- கவிதை
- கோடி கோடி ஆண்டுகளில்…
- பெரியபுராணம் – 54 – ( திருநாவுக்கரசர் புராணம் தொடர்ச்சி )
- முதலாளித்துவ சூழலியற் சிக்கல் – (செலவு நன்மைப் பகுப்பாய்வுச் சூழலியல்) – 01 யானைகள் (Elephants)
- கனடாவின் ஷரியா நீதிமன்றங்களை எதிர்த்து உலகளாவிய ஆர்ப்பாட்டம்
- தமிழ் சினிமாவும் அதில் பெண்கள் நிலையும்
- திண்ணை அட்டவணை – செப்டம்பர் 2,2005 – உலக ஆயுத விற்பனைச் சந்தை
- ஆறு பள்ளமாகி வாய்க்கால் மேடான கதை
- திண்ணை அட்டவணை – செப்டம்பர் 2, 2005 – தமிழ்நாட்டின் சுயநிதிக் கல்லூரிகள்
- நடை -புத்தூரில் கட்டு – பாகம் 3
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-6)
- பிறழ்வு
- வரையப்படாத கடவுள்