பன்னீர்செல்வம்
பொதுவாகவே இந்திய சினிமாவில் வரும் பீரியட் பிலிம்களுக்கு ஒரு சாபகேடு உண்டு. அதில் ஒன்று சரித்திர படங்கள் கூட ஹாலிவுட் சினிமாவை பார்த்து காப்பியடிப்பார்கள். ப்ரெவ் ஹார்ட் க்ளாடியேட்டர் படங்களின் கேமரா ஆங்கிள்கள், போர் காட்சிகளை அப்படியே இருக்கும். புனைவு பீரியட் பிலிம்கள் ஹாலிவுட் கதையையே திருடி படமாக்க பட்டிருக்கும். ஒரு சிறந்த எடுத்துக்காட்டு, அமீர்கானின் லகான். கதை சுடப்பட்ட ஆங்கில படத்தில் தென்னாப்பிரிக்க பழங்குடிகள் ஆங்கிலேயருக்கு எதிராக புட்பால் விளையாடுவார்கள். இதில் கிரிக்கெட்.
அதே போல விக்டோரியன் ஆங்கிலத்தை செம்மொழியாக மாற்றி கொள்வார்கள். முக்கியமாக சொல்ல வேண்டியது படத்தின் அலங்காரம் மற்றும் செட் அமைப்புக்கள். தமிழ் ஹிந்துவில் ஒரு அன்பர் அங்கலாய்த்தது போல மன்னர்கள் என்றாலே வைரமும் நவரத்தினங்களும் பதிக்கப் பட்ட கீரீடங்களும், ஜரிகை பதிக்கப் பட்ட ஆடை ஆபரணங்களையும், உடல் முழுக்க நகைகளையும் அணிந்து கொண்டு ஒரு நன்கு அலங்கரிக்கப் பட்ட நடமாடும் கிறிஸ்மஸ் மரம் போல, நடமாடும் நகைக் கடை போல வருவார்கள். உணர்ச்சி பொங்க நரம்புகள் முறுக்கேற கண்கள் சிவக்க அடுக்கு மொழி பேசுவார்கள். காதல் செய்வார்கள். நவரசங்களையும் பொழிந்து நடிப்பார்கள். அவர்கள் வாழும் அரண்மனைகள் மாட மாளிகைகளுடனும், கூட கோபுரங்களுடனும், கோட்டை கொத்தளங்களுடனும் இருக்கும், மந்திரி சபையோ டிஸ்னி லேண்டின் அரங்கம் போல பள பளப்பாகக் காட்சி அளிக்கும். ராணிகளும், சேடிகளும், இளவரசிகளும் இன்னமும் அதிக ஜரிகை ஆடைகளுடனும், நகைகளுடனும் காட்சியளிப்பார்கள். யாருமே யதார்த்தமான வழக்கு மொழியில் பேசி விட மாட்டார்கள். உணர்ச்சி வயமாக எதுகை மோனைகள் தப்பாமல் அடுக்கு மொழியில் உரையாடிக் கொள்வார்கள். ஒவ்வொரு இறப்பிற்கும் சோகத்திற்கும் குறைந்தது பத்து பக்கங்களாவது வசனம் பேசி நம்மை சோகத்தில் பிழிவார்கள். இவற்றை தவிர்த்து படம் எடுக்க பட்டதே இல்லை. கண்ணதாசன் எளிமையாக வசனம் அமைத்து எதார்த்தமான மன்னர்களை காண்பித்த படம் அவர கையை சுட்டது. ஆனல் பழசி ராஜா இந்த விஷ்யத்தில் வெற்றி பெற்றுள்ளது. என்றாலும் தமிழில் வசனங்கள் தெளிவாக இல்லை. திரையரங்குக்கு படம் ஆரம்பிக்க பத்து நிமிடம் இருக்கும் போது தான் பட பெட்டி வந்தது. முந்தா நாள் இரவில் தான் கருப்பட்டி டீ குடித்துக் கொண்டே டப்பிங் பேசினார்கள் போல.
சில விதி விலக்குகள் மிக குறைவாக இருக்கிறது. இந்திய தன்மை மிளிர் விடும் படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அவ்வாறான ஒரு படம், பழசி ராஜா. இந்திய சினிமாவின் மேக்னம் ஒபஸ் கே.ஆஸிப் அவர்களின் mughal-e-azam. ஹரிஹரனின் பழசி ராஜா இன்று அந்த பட்டத்தை தட்டி சென்று இருக்கிறது.
படம் கமல் prologue சொல்லும் விதமாக ஆரம்பிக்கிறது. மலையாளத்தில் மோகன்லாலும் ஹிந்தியில் ஷாருக்கானும் விவரிக்கிறார்கள். படம் மம்மூட்டி,ஹரிஹரன்,வாசுதேவ நாயர் என்று மூன்று சினிமா விற்பனர்கள் சேரும் இரண்டாம் படம். முதல் படமான ஒரு வடக்கனே வீர கதா மிகவும் சிறப்பான படம் என்று சொல்கிறார்கள்.
பதினேழாம் நூற்றாண்டின் இறுதி கட்டம் புரட்சிகளின் காலகட்டம். அமெரிக்க சுதந்திரமும் ப்ரென்ச் புரட்சியும் மிக முக்கியமான நிகழ்வுகள். இஙகே இந்தியாவில் மராத்தியர்களும் திப்பு சுல்தானும் வெள்ளையர்களிடம் கலகம் செய்து கொண்டிருந்தார்கள். அந்த நேரம் கோட்டயத்தில் அரசபரம்பரையை சேர்ந்த பழசி கேரள வரமாவும் ஆங்கிலேயருக்கு எதிராக போர்கொடி தூக்கினார்.வரி கட்ட மறுத்தார். படம் அங்கிருந்து துவங்குகிறது. வரி கட்டாத பழசி ராஜாவை கைது செய்ய கிழக்கிந்திய கம்பெனி அவருடைய படிஞ்சரே கோவிலகத்திற்க்கு படை ஒன்றை அனுப்புகிறது. மன்னர் இல்லாத அந்த அரண்மனைக்குள் நுழைந்த படை அங்கு நிலவறையில் உள்ள தங்கத்தையும் நகைகளையும் கொள்ளை அடிக்கிறது.ராணியான கனிகா அரண்மனையில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு அனுப்ப படுகிறார். இந்த இடத்தில் தான் மம்முட்டி அறிமுகமாகிறார்.தனக்கு எதிராக படை அனுப்ப சொன்ன தன் மாமா வீர வர்மாவை அவருடைய குரும்பங்காடு அரன்மணையிலேயே சந்தித்து தன் பக்க நியாயத்தை விளக்குகிறார் பழசி. படத்தின் முதுகெலும்பான புரட்சியின் சாரம் இதில் சொல்ல படுகிறது. தன் கொள்கைகாக போராடுகிற பழசியின் வாழ்வும் வீழ்வும் தான் படத்தின் மீதி கதை.
மம்மூட்டி நான்கு முறை தேசிய விருது பெற்றவர். நடிக்க சொல்லி தரவே தேவையில்லை. பழசி ராஜாவாகவே வாழ்ந்திருக்கிறார். பிறக்காத தன் குழந்தை மரணமடைந்த சேதி தெரியும் போதும், அமைதி ஒப்பந்த காட்சியிலும் தன் உணர்வுகளை கட்டுபடுத்தும் தம்புரானாக அமர்க்கள படுத்தியிருக்கிறார். மிக எளிமையாக கேமரா கூர்மையாக இவர் நடந்து வரும் காட்சி முதற் கொண்டு வெள்ளி திரை ராஜாவாக மிளிர்கிறார். படத்தின் உண்மையான ஹீரோ இளையராஜா. இவரை பற்றி நான் கேள்வி பட்ட விஷ்யம் உண்டு. மற்ற இசையமைப்பாளர்கள் எல்லாம் ஒவ்வொரு காட்சியாக பார்த்து இசையை தேர்ந்தெடுத்து பிண்ணனி இசை அமைக்க, இவர் காட்சிகளை தொடர்ச்சியாக பார்த்து நாம் சின்ன வயதில் ஆங்கிலம் எழுதி பழகிய நாலு வரி நோட்டில் இசை குறிப்பு எழுதி இசையமைப்பாராம். அதனால் தான் சூராவளி,புயல்,சுனாமி என்று சொல்லாமல் இசை ஞானி என்று சொல்கிறார்கள் போல. தேவாரத்திற்கு பயன்படுத்திய ஹங்கேரி சிம்பனி ஆர்கேஸ்ட்ரா குழுவான LESLI KOVACKS மூலம் இன்னோரு இசை சகாப்த்ததையே உருவாக்கி இருக்கிறார். முக்கியமாக சொல்ல படவேண்டியது ஆதி முதல் காலம் என்ற பாடல். பிண்ணணியில் ஒலிக்கும் போது நம் உடல் சிலிர்கிறது. அவருடைய அம்பும் கொம்பும் பாடலை மிகவும் எதிர்பார்த்திருந்தேன். அது நான்கு வரியே வருவது மிக பெரிய சோகம். போர்கள காட்சி இசையும் முக்கியமாக பழசி ராஜாவின் தளபதிகள் ஒவ்வொருவராக மரணத்தை தழுவும் போதும் ஒலிக்கின்ற இசை நெஞ்சை பிழிகிறது. மிக பெரிய சரித்திர படங்களுடன் ஒப்பிட்டு சிறப்பு பேசபடவேண்டிய இசை. ரஹ்மானாக இருந்தால் காதில் கடுக்கான் போட்ட புரட்சிகாரர் புகழ்ந்திருப்பார். பரவாயில்லை,இளைய ராஜாவிற்கு டார்ச் லைட் தேவையில்லை,
படத்தில் இன்னொரு பக்கபலம் சரத்குமார். கட்டம் போட்ட சட்டை போட்டு கொண்டு மியாவ் மியாவ் பாட்டுக்கு எல்லாம் ஆடாமல், வெற்றுடம்புடனும் வளமையான உடல்கட்டுமாக திரை முழுக்க மிளிர்கிறார். படத்திற்கு வந்த பாதி கூட்டம் இவரது கட்சிகாரர்கள். பத்மபிரியாவை காப்பாற்றும் விதமாக குதிரையில் இவர் திரையில் வரும் காட்சியில் தியேட்டர் அதிர்ந்தது. படத்தில் தூக்கு கயிறில் தொங்க விரும்பாமல் கத்தியால் தன்னை குத்தி கொண்டு வீர மரணம் அடையும் காட்சியில் அந்த கண்ணில் தெரியும் நடிப்பு உண்மையிலேயே அருமை.அனாதை சிறுவனாக பிறந்து பழசி படைக்கே தளபதியாகிய எடசன குங்கன நாயராக சிறப்பாக நடித்திருக்கிறார். அதை இன்னொரு தளபதியிடம் சொல்லும் காட்சியிலும் நடிப்பு பிரமாதம்.
ராணியாக நடித்திருக்கும் கனிகாவுக்கு ஒன்றும் பெரிய வேலையில்லை. குன்றத்து கொன்றைக்கும் பாடலுக்கு மிக அழகாக முகபாவம் காட்டியிருக்கிறார். தன் பங்கை நிறைவாக செய்திருக்கிறார். கதையில் நம்மை கவர்வது பத்மபிரியா தான். பழங்குடி பெண்ணான நீலியாக படம் முழுதும் பாவாடையில் வருகிறார். என்றாலும் பட்டியலில் நம்ம காட்டிலே மழை பெயுது பாட்டிற்கு பாவாடையில் இடுப்பை வளைத்து நெளித்து ஆடியது போல் இல்லாமல், சண்டை போடுகிறார், மரத்தில் இருந்து குதிக்கிறார், வில் மூலம் விஷுக் விஷுக் என்று அம்பு விடுகிறார். முக்கியமாக இவர் உதைத்து படை சிப்பாய்கள் தள்ளி சென்று விழுவது. நமீதா செய்திருந்தால் நம்பியிருப்போம், ஜகன்மோகினியில் அதை செய்தும் காட்டியிருக்கிறார். படத்தின் இறுதியில் அத்தனை சிப்பாய்களுக்கு எதிராக தனி ஆளாக போராடுகிறார். அவர் முடிவு என்னாயிற்று என்று காட்டாமல் விட்டு விட்டார்கள். படத்தின் நீளம் கருதியா இல்லை பெண் மர்ணத்தை காட்ட வேண்டாமோ என்றோ விட்டு விட்டார்கள் போல. படத்தில் அது ஒரு குறை.
அதே போல படத்தில் பழங்குடி வீரன் தக்கல் சந்து வாக வரும் மனோஜ் கே ஜெயினும், சுமனும் மற்றவர்களும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். அசிஸ்டண்ட் கலக்டர் தாமஸ் பேபராக வரும் ஹாரி கீ கும் அதே சொல்லலாம். அவரின் காதலியாக வரும் டொனா கதாபாத்திரம் மிகவும் நீர்வார்த்து போன கதாபாத்திரம்.
இயக்குனர் ஹரிஹரன் மிக பிரமாதமான படத்தை எடுத்ததற்காக போக்கிரி ஸ்டைலில் சட்டை காலரை தூக்கி விட்டு கொள்ளலாம். இவர்கள் அனைவரையும் சொல்லி விட்டு எம் டி வாசுதேவ நாயரை பற்றி சொல்லா விட்டால் கருவறை காணாமல் கோயிலை விட்டு வந்ததற்கு சமம். கோவை காந்திபுரத்தில் ஐந்தாவது கட்டில் நாலுகெட்டு என்று ஒரு மலையாள உணவகம் உள்ளது. மசாலா தடவி வாழை மீனில் வறுக்கபட்ட மீன் அங்கு மிகவும் பிரபலம். அங்கு அந்த பெயரின் அர்த்தம் கேட்ட போது அது எம் டி வாசுதேவ நாயரின் பிரபலமான நாவலின் பெயர் என்றும் அதன் அர்த்தம் சமையற்கட்டு என்றும் சொன்னார்கள். எம் டி வாசுதேவ நாயர் சமையற்கட்டு,சீட்டுகட்டு,தலைப்பாகட்டு என்றேல்லாம் நிறைய எழுதியிருப்பார் போல. திரைகதையும் வசனமும் நேர்த்தியாக இருக்கின்றன. வெள்ளையர்கள் பேசும் வசனங்கள் எனோ எட்டாம் வகுப்பு non detail போல எளிமையாகவும் சின்னபுள்ள தனமாகவும் உள்ளது.
ஆனாலும் படத்தில் அவர் புகுத்தி உள்ள படிமங்கள் அவரது பாய்ச்சலை காடடுகிறன. அரண்மனையில் தன்னை விட்டுவிட்டு செல்லும் பழசியிடம் ராணி தன் பயத்தை சொல்ல, “அவ்வாறு அவர்கள் செய்ய மாட்டார்கள். துரைகளை பற்றி எனக்கு தெரியும்” என்கிறார். கிராவும் கோபல்ல கிராமத்தில் ஒரு காட்சி வரும். வியாபாரம் செய்ய வரும் வெள்ளையர்கள் அனுமதி கேட்க, அந்த கிராமத்து மக்கள் அந்த ஊரின் மிக வயதானவரிடம் ஆலோசனை கேட்பார்கள். இவங்க துளுக்கனை போல பொண்ணை தொடுவாங்களா எனறு கேட்க இல்லை என்று பதில் வரும். அப்ப அனுமதி அளிக்கலாம் என்பார். அந்த காலத்து மக்களின் சிந்தனைகளை இவை காட்டுகிறன. அதே போல அந்த அசிஸ்டண்ட் கலக்டர். பழசியை உயிரோடு பிடிக்க முயற்சி செய்து அது முடியாமல் போக தன் பல்லக்கிலே அந்த ராஜாவின் உடலை வைத்து மரியாதை அளிப்பார்.
ஜெயமோகன் வசனங்களில் மெல்லிய அங்கதம் கலந்து தந்திருக்கிறார்.அவர் பெயரை பார்க்க நெடு நேரம் படம் முடிந்து காத்திருந்தேன். Language translator என்று அவர் பெயரை போட்டார்கள்
படத்தின் ஒளிப்பதிவு வயநாட்டின் அழகுகளை கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது.வேணு, ராம்நாத் செட்டி என்ற இரு ஜாம்பவான்களுக்கு கட்டியம் கூறுவது சண்டை காட்சிகளே. வெள்ளையரின் ஆயுதங்களை குரிச்சியார் மலைமக்கள் உதவியுடன் பழசிபடை கைப்பற்றும் போது அந்த அடர்வன பகுதி காட்சி இவர்கள் ஒளிப்பதிவில் மைல்கல். அடுத்து பாராட்ட பட வேண்டியது சண்டை காட்சி அமைப்பாளரான ரவி திவான். என்றாலும் சில காட்சிகளில் அந்த கயிறு கட்டி பறக்கும் டெக்னிக் கண்களில் உறுத்துகிறது.
படத்தின் இன்னொரு ஆச்சரியம் ரசூல் பூகுட்டி. மலையாளியான இவர் ஒலியியல் வடிவமைப்பாளராக பணியாற்றும் முதல் மலையாள படம். சரத்குமார் மம்மூட்டி பயிற்சி எடுத்து கொள்ளும் வாள் வீச்சு காட்சியிலும் போர் காட்சியிலும் வாட்களின் அதிர்வு சத்ததை கூட இயல்பாக வெளி கொணர்ந்திருக்கிறார்.இன்னொன்று அமைதி ஒப்பந்த காட்சியில் அனைவரும் மவுனமாய் இருக்க, அங்கு இருக்கும் எரிந்து கொண்டிருக்கும் மெழுகுவர்த்தியில் இருந்து அரக்கு வழியும் சத்தம் கூட கேட்கிறது. அதே போல் படத்தின் penultimate காட்சியில் வரும் மழை சத்தம். அது மண்ணில் செம்புலம் சேர்ந்த நீர்துளியாகும் ஒலி கூட தவற விடவில்லை. பூக்குட்டிககு ஒரு பூந்தொட்டி.
படம் முடிந்த பின் நம்முள் எராளமான எண்ணங்களை எற்படுத்துகிறது.அதில் ஒன்று, அந்த கால மக்கள் எவ்வாறு ஒற்றுமையில்லாமல் வெள்ளையர்கள் வேறூன்ற வழி வகுத்தார்கள் என்று. இன்னொன்று, அந்த காலத்தில் பழசி ராஜா பழங்குடிகளை சேர்த்திக் கொண்டு அன்னியருக்கு எதிராக காட்டில் இருந்து நம் நாட்டுக்கு சண்டையிட்டார். ஆனால் இன்று அதே பழங்குடிகளை அன்னிய சீனாவுக்காக காட்டில் வைத்து நம் நாட்டுக்கு எதிராக போராட வைக்கும் மாவோயிஸ்டுகள். முக்கியமான ஒன்று, இவ்வாறு சிறு சிறு கங்குகளாக கிளம்பி, காந்தியின் வழிகாட்டுதலில் “புகை நடுவினில் பூமி இருபபது” போல காட்டு தீயாய் பெருகி பெற்ற சுதந்திரம் எந்த நிலைமையில் உள்ளது என்று.
என்று தணியும் அந்த சுதந்திர தாகம்?!!!!!!!!!!!!!!!!!!!!!
vpannerselvam@gmail.com
- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள்! பூர்வீக விண்மீன்கள், அபூர்வக் கரு விண்மீன்கள்(Earlier Stars & Dark Stars)!(கட்டுரை:66
- நிரப்புதல்…
- இராக்காலங்களில் அவர்களின் வருகைக்காய் காத்திருக்கலாம்
- அமீரக தமிழ் மன்றம் இன்பச்சுற்றுலா
- ஜனவரி 2010 முதல் மும்மாத இதழாக வருகிறது நேர்காணல்
- சந்திரவதனாவின்-‘மனஓசை’
- வயநாட்டு சிங்கத்தின் தணியாத சுதந்திர தாகம்
- நட.சிவகுமாரின் எதிர் கவிதையும் எதிர் அழகியலும்
- அழியாப் புகழ் பெறும் இடங்கள்
- ‘யூமா வாசுகியிலிருந்து சமுத்திரம் வரை’ – விமர்சனக் கட்டுரைகள்
- கவிதைகள் எழுதவில்லையெனில் ஒருவேளை தற்கொலைகூட செய்திருப்பேன் – கவிஞர் அய்யப்பமாதவனுடன் ஒரு கவிதை சந்திப்பு
- வேத வனம் விருட்சம் -61
- காத்திருந்தேன்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << புன்னகையும், கண்ணீரும் >> கவிதை -20
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -1 தடம் காண முடியாச் சுவடு
- புத்திசாலி
- பாரதியாரிடம் ஒரு வேண்டுகோள்
- கனவுகளின் நீட்சி
- பனிவிழும் அதிகாலையொன்றில்
- உதிரும் வண்ணம்
- புனிதமோசடி — உள்ளொன்று வைத்துப்புறமொன்று பேசுதல் 1
- தொலைதூர வெளிச்சங்கள்
- விளம்பரம் தரும் வாழ்வு
- தத்ரூப வியாபாரிகள்
- ‘அமெரிக்காவிலிருந்து கடைசியாக கிடைத்த தகவலின் படி காந்தி ஒரு காஸ்மோபோலிடனிஸ்ட்’-2
- வில்கின்ஸ் கண்ட நவீன இந்துமதம்
- முள்பாதை 7 (தெலுங்கு தொடர்கதை)
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -9
- முடிவுறாத பயணம்