மலர் மன்னன்
ரோமானிய ராஜீய ஏகாதிபத்தியத்தின் மத ரீதியான மேலாதிக்கப் பிரதிநிதியாகப் போப் என்கிற மத குரு ஐரோப்பிய கிறிஸ்தவ சமயம் முழுமைக்கும் தலைமை வகித்து, அங்குள்ள ஆட்சி பீடங்கள் மீதும் அதிகாரம் செலுத்தி வந்த நாட்களில் ஐரோப்பிய நாடுகள் பலவற்றின் அரசர்களும் அவரது கட்டளைகளுக்குத் தலைவணங்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி சங்கடப் பட்டுக் கொண்டிருந்தது போலவே போப்பின் சர்வாதிகாரத்தையும் அவரது பிரதானிகளின் அத்துமீறல்களையும் சகித்துக் கொள்ள மாட்டாமல் மனங்குமுறிக் கொண்டிருந்த மதகுருமார்களும் பல்வேறு நாடுகளில் இருக்கவே செய்தனர். அந்த மனக் குமுறல்கள் எல்லாம் பெருகிப் பெருகி உருண்டு திரண்டு வருகையில் 1500 களின் வாக்கில் அதற்கு ஒரு வடிவத்தை அளிக்கும் பொறுப்பு, ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவ மத குரு மார்டின் லூதர் தலையில் விழுந்தது.
போப்பும் அவருடைய பிரதானிகளும் சமயத்தை ஒரு லாபகரமான வியாபரமாகவே நடத்தத் தொடங்கி விட்டிருந்ததோடு நிற்காமல், தங்கள் சமயச் சரக்கை வாங்கித்தான் தீர வேண்டும் என்று கட்டாயப் படுத்தவும் தொடங்கியபோது பொறுமை எல்லை மீறிப் போய் கிறிஸ்தவ சமயச் சீர்திருத்தத்தைப் பிரகடன சாசனமாக எழுதி தேவாலயக் கதவில் மாட்டி வைத்தார், லூதர். கிறிஸ்தவ சமயப் புனிதர்கள் சேமித்து வைத்துள்ள ஆன்மிக மேன்மைகளை ஒரு கிறிஸ்தவர் தங்களிடமிருந்து விலைக்கு வாங்கிக் கொண்டால் அதன் பயனாகத் தன் கணக்கில் உள்ள பாவத்தைக் கரைத்துப் புண்ணியத்தைச் சேர்த்துக் கொள்ளலாம் என்று சமயப் புனிதர்களின் பவித்திரங்களைக் கூட போப் கடைச் சரக்காக்கிவிட்டதுதான் லூதர் கொதி நிலைக்குப் போய், வெளிப்படையாகவே போப்பிற்கு எதிராகக் குரல் எழுப்ப நேர்ந்தது. ஆனால் அவருக்கும் முன்னதாகவே மதத்தை மலினப் படுத்துவதாக
போப்பின் சமயச் சாம்ராஜ்ஜியத்திற்கு ஆங்காங்கே கிறிஸ்தவ சமயக் கிளைகளில் எதிர்ப்பு கிளம்பத் தொடங்காமல் இருந்து விடவில்லை. அவருக்கு முன்பே ஜான் வைக்ளிஃப், ஜான் ஹஸ் எனச் சிலர் சீர்திருத்தத்தில் முன்னோடியாக இருந்தனர். லூதருக்குப்பின், ஜான் கால்வின், உல்ரிஷ் எனச் சிலர் தொடர்ந்தனர்.
மார்டின் லூதர் தமது பிரகடன சாசனத்தைச் சீர்திருத்தம் என்றுதான் குறிப்பிட்டார். பிறகு மற்றவர்களால்தான் அது எதிர்ப்பாளர் சீர்திருத்தம் (புராட்டஸ்டன்ட் ரிஃபார்மேஷன்)எனப் பேசப்படலாயிற்று. ஆக, மார்டின் லூதர் தமக்கோ, தமது சீர்திருத்தக் கோட்பாட்டிற்கோ புரொட்டஸ்டர், புராட்டஸ்டன்ட் என்கிற ஆங்கிலச் சொற்களுக்கு இணையான பெயர்களை வைத்துக் கொள்ள வில்லை. அவரும் அவரது கருத்தை ஆதரித்தவர்களும் தொடக்கத்தில் சீர்திருத்தக்காரர்கள் என்றுதான் அழைக்கப்பட்டார்கள். பின்னர் குறிப்பாகக் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள்தான் லூதரையும் அவரது கோட்பாட்டைப் பின்பற்றிச் செல்பவர்களையும் எதிர்ப்பாளர் (புராட்டஸ்டன்ட்) என்று அடையாளப் படுத்தினார்கள். நியாயப்படித் தாம் வலியுறுத்தும் கோட்பாடுதான் கிறிஸ்தவ சமயத்திற்கு இயைந்ததேயன்றி, போப் என்கிறவரின் ராஜாங்க அமைப்பாகச் செயல்படும் கத்தோலிக்கம் அல்ல என்று வாதித்த லூதரும் அவரைப் பின்பற்றியவர்களும் தாம்தான் அசலான கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக் கொள்வார்களேயல்லாமல் தங்களை எதிர்ப்பாளர்கள் என்று அறிமுகப் படுத்திக் கொள்வார்களா என்று யோசித்துப் பார்க்க வேண்டும். வாஸ்தவத்தில் சீர்திருத்தக்காரகள் என்றுதான் அவர்கள் தங்களை முன்னிறுத்திக் கொண்டார்கள்.
லூதர் காலத்திலேயே அவர் தொடங்கிய சீர்திருத்தம் சிற்சில மாற்று வியாக்கியானங்களுடன் பலவாறாகப் பிரிந்துவிட்டது. ஆங்கிலியன் சீர்திருத்தம், கால்வினியம், பிரெஸ்பைடேரியன், அனபாப்டிஸ்ட் என்றெல்லாம் பிரிவுகள் தோன்றி எல்லாவற்றுக்கும் மொத்த அடையாளமாகக் கத்தோலிக்கத்திலிருந்து விலகி வந்த கூறுகள் புராட்டஸ்டன்ட் என்று பொதுப் பெயரிட்டு அழைக்கப் படலாயின. மற்றபடி, போப்பின் கீழுள்ள கத்தோலிக்க சபையிலிருந்து விலகி வந்த பிரிவினர் தங்கள் அனைவரையும் புராட்டஸ்டன்ட்டுகள் என்று அழைக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவிக்கவில்லை. மற்றவர்கள்தான் கத்தோலிக்க சபையைச் சேராத பிற கிறிஸ்தவப் பிரிவினரை அப்படி அழைக்கிறார்கள். மற்றபடி, மார்டின் லூதர் தொடக்கத்தில் கத்தோலிக்க சபைக்கு மாற்றாக நிறுவிய சீர்திருத்தக் கிறிஸ்தவ சபை இன்றளவும் லூதரன் ஆலயம், லூதரன் சபை (லூதரன் சர்ச்)என்றெல்லாந்தான் அழைக்கப் படுகிறது. அவர்களின் சீர்திருத்தக் கோட்பாடு லூதரனியம் என்றுதான் அடையாளப் படுத்தப் படுகிறது. தங்களைப் புராட்டஸ்டன்ட் என்றுதான் அழைக்க வேண்டும் என்றோ, நியாயப்படிப் பார்த்தால் சீர்திருத்தக்காரர்கள் என்றுதான் எங்களைச் சொல்லவேண்டும் என்றோ பெயர் விஷயத்தில் கூடப் பிரச்சினை செய்பவர்களாக அவர்கள் இல்லை. தங்களை அடையாளப் படுத்துக் கொள்ளத் தாம் பின்பற்றும் கோட்பாட்டை வகுத்துத் தந்தவர் யாரோ அவர் பெயரலேயே தாம் அழைக்கப் படுவதை அவர்கள் பெருமையாகவே கருதுகிறார்கள். தங்கள் சமயப் பிரிவைத் தொடங்கியவர் பெயரால் தமது சபையும் தாமும் அழைக்கப்படுவது தம்மை இழிவுபடுத்துவதற்காகத்தான் என்கிற எண்ணம் அவர்களுக்கு இல்லை. கத்தோலிக்கத்திலிருந்து முதன் முதலில் பிரிந்து மாபெரும் சீர்திருத்த சபையாக இருந்து வருகிற அமைப்பு, லூதரன் சப என்றுதான் தன்னை அழைத்துக் கொள்கிறது. புராட்டஸ்டன்ட் என்பதாக அல்ல. அதேமாதிரி பிற சபைகளும் வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றன. காலிவினியக் கிறிஸ்தவ சீர்திருத்த சபை கால்வின் பெயரால்தான் அழைக்கப்படுகிறது.
மார்டின் லூதர் சீர்திருத்தக்காரர் என்பதால் அவரைப் பற்றி கற்பனைகளை வலர்த்துக்கொள்ளக் கூடாது. யூதர்களை அடி, கொல்லு, அவர்களின் ஆலயங்களை உடைத்தெறி என்று கூவியவர்தான் அவர். அதன் காரணமாகவே அவரை நாஜிகளின் ஆதர்சம் என்று சொல்வார்கள்.
சமயச் சச்சரவுகளிலிருந்து விலகி நிற்பதையே எப்போதும் விழைகிறேன். ஏனெனில் சமயங்களைத் தாண்டி ஆன்மிகம் என்கிற உள்ளுணர்வு ஒன்று உள்ளது. அது ஒரு தத்துவ விசாரம். அலைகள் புரண்டு புரண்டு அரற்றாத சமுத்திர மையத்தின் சலனமற்ற ஆழத்துள் மூழ்கி, உள்ளே, உள்ளே போய்க்கொண்டே இருக்கிற சமாசாரம். அதில் சமய விவகாரங்களுக்கோ விகாரங்களுக்கோ இடமில்லை. அந்த வெளியில் சஞ்சரிக்கத் தொடங்கிவிட்ட பிறகு தேசிய சுபாவம், சமூகம், கலாசாரம், கவின் கலைகள், மரபு, தொன்மை ஆகிய கண்ணோட்டங்களில்தான் பிரச்சினைகளை அணுகத் தோன்றுமேயன்றி சமயச் சார்பில் அல்ல. எனவேதான், பொறுமையாகச் சமயம் சாராமல் ஒரு விஷயத்தை எடுத்துக் கூறும்போது, நீ சொல்வது சரிதான் என்று எவ்வித மனமாச்சரியமும் இன்றி என்னிடம் சொல்கிற சிலராவது பிற சமயங்களிலும் இருக்கக் காண்கிறேன். எச் ஐ வி தொற்றுள்ள ஆடவர் பெண்டிர் எம்மதத்தவராயினும் அவர்களை மானிடராக மட்டுமே பார்த்து, அவர்களைப் பாவிகளாகக் கருதாமல் ஆறுதல் சொல்லி அரவணைக்கையில், “”என் அப்பாவோ அம்மாவோ கூட என் அருகில் வர விரும்பாத போது எங்களை அணைத்து ஆறுதல் சொல்லித் தைரியமூட்டுகிறீர்களே, நீங்கள் அல்லவா என் நிஜமான அப்பா” என்று ஒரு வேற்று சமயம் சார்ந்த பெண்ணோ, பையனோ சொல்லிக் கண் கலங்குகிற போது, மதவெறியன், பிற மதத் துவேஷி என்றெல்லாம் என்மீது பூசப்பட்டுள்ள சாயங்கள் அதில் கரைந்தே போகின்றன.
இங்கேதான் காந்திஜியிடமிருந்து வேறுபடுகிறேன். அவர் தம்மை ஒரு மதத்தைச் சார்ந்தவனாகவே அடையாளப் படுத்திக்கொண்டு சமூகத்தையும் கலாசாரத்தையும் சமயத்தின் அடிப்படையில் பார்த்தார். தான் ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்தவன். மாற்று மதத்தவரை மாற்றார் எனக் கருதுவது எனது மதத்தின் கோட்பாடு அல்ல, அதற்கிணங்க மற்ற மதத்தினரையும் அரவணைத்துக் கொள்கிறேன் என்று சொன்னார். விட்டுக் கொடுப்பது எனது சமயத்தின் கோட்பாடு; எனவே விட்டும் கொடுக்கிறேன் என்று மதத்தின் அடிப்படையில் தமது செயலுக்குச் சமாதானம் சொன்னார். எனக்கு மட்டும் ஒரு நாள் ஆட்சி அதிகாரம் கிடைத்தால் கஜுராஹோ சிற்பங்களையெல்லாம் உடைத்துப் போடுவேன் என்று சொல்கிற அளவுக்குத்தான் கலைகளைப் பற்றிய புரிந்துணர்வு அவருக்கு இருந்தது. அப்படிச் சொல்கிறபோது மட்டும் அவர் தனது மதத்தின் அடிப்படைக் கோட்பாடான சகிப்புத் தன்மையையும் தாராள சிந்தனைச் சுதந்திரத்தையும் மறந்து அதற்கு முற்றிலும் மாறுபட்ட போக்குள்ள மதங்களைச் சார்ந்தவராக முரண்பட்டுப் போனார். மதப் பிரக்ஞையுடனேயே இருந்துகொண்டிருந்தமையால்தான் ஒத்துழையாமையுடன் கிலாஃபத்தைப் பிணைத்துக் கொண்டார். மாற்று மதப் பிடிவாதப் போக்காளர்களுடன் கை கோத்து, அந்த மார்க்கத்தில் சீர்திருத்த எண்ணங்கொண்டவர்களிடமிருந்து விலகிச் சென்றார். அதன் காரணமாக, மாற்று மதப் பிடிவாதப் போக்காளர்களுக்கு அவர்களின் சமூகத்தைச் சேர்ந்த பாமர மக்கள் மீது மேலாதிக்கம் ஏற்பட வழியும் செய்து கொடுத்தார். நான் நானாகவே இருக்கிறேன், நீ, நீயாகவே இரு; நாம் இருவரும் மோதிக்கொள்ளாமல் ஒருவருக் கொருவர் அனுசரித்துப் போவோம் என்கிற வரைதான் அவரது எல்லை. நாம் நாமாக ஒன்றிவிடுவோம் என்கிற தாபம் அதில் இல்லை. ஆகவே அது மதச் சார்புதான். ஆன்மிகம் அதுவல்ல. ஆழ்ந்த தத்துவார்த்த நோக்கு அவரிடம் இருக்கவில்லை. கீதையை ஒரு மத நூலாகத்தான் அவருக்குப் பார்க்கத் தெரிந்தது. அதனால்தான் அம்பேத்கர், “காந்தி பழைமைக் கண்ணோட்டத்துடன் கீதையைப் பார்க்கிறார். ஒரு பழைமைவாதியாக விளக்கம் சொல்கிறார்’ என்று விமர்சித்தார். கீதசாரியனின் வர்ணாசிரமக் கோட்பாட்டிற்கு அம்பேத்கர் தான் தத்துவார்த்தமாகச் சரியான விளக்கமும் கொடுத்தார். அப்பன் தொழிலைத்தான் மகன் செய்ய வேண்டும் என்று கீதை சொல்லவில்லை என்று அம்பேத்கர் அடித்துச் சொன்னார்.
காந்திஜி ஒரு குறிப்பிட்ட வருடம் வரைதான் தமது சத்திய சோதனையை எழுதினார். அதன்பிறகு அவர் வாழ்க்கையில் சத்தியத்திற்கு எத்தனையோ சோதனைகள் வந்து, அவற்றிலிருந்து அவரால் மீள முடியாமலும் போயிருக்கிறது. ஆனால் அவற்றையெல்லாம் அவர் பதிவு செய்ய வில்லை. எனவே காந்தியை விமர்சிப்பவர்கள் காந்தியே தம்மைப்பற்றி வெளிப்படையாகத் தெரிவித்துக் கொண்ட குறைபாடுகளின் அடிப்படையில்தான் அவரை விமர்சிப்பதாகக் கூறுவது ஓரளவுக்குத்தான் சரியாக இருக்கும்.
- குடும்பதின வாழ்த்துக்கள்
- திப்பு சுல்தானும், திரிபுவாதிகளும், அண்டப் புளுகர்களும் – II
- இரண்டு தமிழ்க் கவிதைத் தொகுப்புகள் – ஆங்கிலத்தில்
- ராஜ்தாக்கரேவின் ராஜாபார்ட் நாடகமும் சில உண்மைகளும்
- வெயில் மற்றும் மழை சிறுகதைகள்/ மீரான் மைதீன் : காலப் பம்பரத்தைக் கையில் ஏந்திக்கொண்டு
- “பாலைவனத்தில் பூக்களைத் தேடி”
- “கடைசி பேருந்து”
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பூமியில் விழும் அகிலக் கற்கள் !(கட்டுரை: 17)
- கோட்டாறு பஃறுளியாறான கதை
- நந்தனார் தெருக்களின் குரல்கள் – விழி. பா. இதயவேந்தனின் படைப்புலகம்
- ‘எழுத்துக்கலை பற்றி இவர்கள்………….13 புதுமைப் பித்தன்
- கங்கா பிரவாகமும் தீபாவளி விருந்தும்
- தீயாய் நீ!
- மொழிபெயர்ப்பு கவிதைகள்
- எஸ். ராமகிருஷ்ணன் இணையதளம்
- FILMS ON PAINTERS
- இன்னும் ஓர் இஸ்லாமிஸ்ட்
- பள்ளிகளில் தமிழைக் கட்டாயமாக்கிய அரசின் சட்டம்
- ‘உலக தாய்மொழி நாள்’
- நீதி, தர்மம், திருவள்ளுவர், சமணம்: ஜெயமோகன் கட்டுரை குறித்து..
- National Folklore Support Centre
- தாகூரின் கீதங்கள் – 17 – உன்னுள்ளே தாய் மகத்துவம் !
- வன்முறையைத் தூண்டும் விதமாக விகடன் நடந்து கொள்வதை வருத்தத்துடன் கண்டிக்கிறோம்
- ஒரு நாள் உணவை…
- பஞ்சவர்ணக்கிளிகள் பேசுமா?
- யுவராசா பட்டம்
- “தெருவிளக்கும் குப்பிவிளக்கும்”
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 8
- சம்பந்தமில்லை என்றாலும் பௌத்த தத்துவ இயல்- ராகுல்சாங்கிருத்தியாயன்
- கலைஞர் துணிந்து முடிவெடுக்க வேண்டிய நேரம் இது!
- லூதரன் ஆலயம், லூதரன் சபை, லூதரனியம் மார்டின் லூதர் பெயரால் அழைக்கப்படும் கிறிஸ்தவ சமயப் பிரிவு
- கஸ்தூரி ராஜாராம்: நடப்பு அரசியலுக்குப் பொருந்தாத அரசியல்வாதி
- செக்கு மாடும் பௌர்ணமி நிலவும்
- மலையாளம் – ஓர் எச்சரிக்கை
- பின்னை தலித்தியம்:அர்சால்களின் எழுச்சி
- முடிவென்ன?
- புலம்பெயர்ந்த கனடா
- காற்றினிலே வரும் கீதங்கள் -7 எனது அடங்காத மோகம் !
- ஒரு தாய் மக்கள் ?
- புலன்கள் துருத்தும் உணர்வுகள்
- பாலா என்றழைக்கப்பட்ட சத்தீஷ்