லா.ச.ரா.வின் பாற்கடலும் போர்க்களமும்

This entry is part [part not set] of 42 in the series 20071213_Issue

பா. உதயகண்ணன்


இந்த நூற்றாண்டின் மகத்தான சிறுகதைச் சாதனையாளர் லா.ச.ரா.வின் மறைவையொட்டி, காலத்தில்அவருடைய இருப்பைக் கணக்கெடுத்து, மொழிக்கு அவரது கொடையை கவனப்படுத்தி, பல்வேறு கருத்துவளாகங்களில் அவரைப் பற்றிய மதிப்பீட்டை ஒரே குடையடியில் போல நூல் ஒன்று கொணர்வது அன்னாருக்கு நாம் செய்யும் நியாயமான அஞ்சலி என நினைத்தோம். கூடவே, வாசக அனுபவத்தைக் கருத்தில் கொண்டு அவரது சிறந்த இரு படைப்புகளையும், திருச்சி வானொலி நிலையத்திற்கு அவர் அளித்த பேட்டியையும் இணைக்கிறோம். பிற்பாடு சுவடுகள் இலக்கிய இதழிலும் அது பதிவு கண்டது.

தினமணி அசோகமித்திரனிடம் கேட்டுவாங்கிய அஞ்சலிக் கட்டுரையையும், மணா நெகிழ்ந்து சன்டே இந்தியன் வார இதழில் எழுதிய குறிப்பையும், இத்தாலியில் தமிழ் கற்று, லா.ச.ரா. எழுத்தில் மனம் பறிகொடுத்து, அவரது படைப்புகளில் தோய்ந்து, ஆய்வுசெய்த காபிரிலா, லா.ச.ரா.வின் இரு குறுநாவல்களை ‘கதா’ வெளியீடாக ஆங்கிலத்தில் திருமதி பத்மா நாராயணன் மொழிபெயர்த்துத் தந்தபோது எழுதிய பின்னுரைக் குறிப்பும், அபிதாவை நாடகமாக அரங்கேற்றிய டாக்டர் ருத்ரனின் நினைவுக் குறிப்பும், ‘லா.ச.ரா.வின் படைப்புலகம்’ கலைஞன் பதிப்பக வெளியீட்டில் அபி தந்த சிறப்பு முன்னுரையும், திண்ணை இணையதள இதழில் லா.ச.ரா. மறைவுச்செய்தி அறிந்து நினைவுகளை நீளவிட்டு மலர்மன்னன் எழுதிய படைப்பும் (பிற்பாடு இதே படைப்பு காலச்சுவடு மாத இதழிலும் வெளியாயிற்று), மனஓசை இதழில் முருகு மற்றும் சுரேஷ் விமரிசித்து எழுதிய கண்ணோட்டமும், டிசம்பர் தீராநதி இதழில் ந. முருகேசபாண்டியன் லா.ச.ரா.வின் உச்சமும் வீழ்ச்சியும் என வடித்த சிந்தனைகளும், இவற்றோடு காலமும் நட்பும் என மனதை விரித்து எஸ். ஷங்கரநாராயணனின் பார்வையும், இறுதியாக ஜெயமோகன் தமிழினி வெளியீடாகத் தந்த ‘சென்றதும் நின்றதும்’ புத்தகத்தில் லா.ச.ரா. பற்றிய அவரது பார்வையுமாகப் புத்தகம் வெவ்வேறு தளங்களில் லா.ச.ரா.வின் எழுத்துக் கொடையை விரித்து அலசுகிறது.

லா.ச.ரா.வின் படைப்புகளாக, அவரது குடும்ப வாழ்க்கை ரசிப்பும், லயிப்பும், பரிவும், பிரியமும் வெளிப்படும் ‘பாற்கடல்’ சிறுகதையும், உலகளாவிய ஒருதளத்தில் இயங்கும் குரு-ஷேத்திரம் சிறுகதையும், அவரது மேலான எழுத்தின உயர்ந்த சாட்சிகளாக விளங்கும் என நம்புகிறோம்.

என்றும் அழியாது லா.ச.ரா. புகழ்.

>>>
‘சந்நிதிகள் பிராகாரங்கள் வீதிகள்’
லா.ச.ரா. நினைவாக – தொகுப்பு எஸ். ஷங்கரநாராயணன்
பதிப்பாளர் – பா. உதயகண்ணன், அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், 41 கல்யாணசுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை 600011

நூல்வெளியீடு ஆர்.கே. சுவாமி அரங்கம், (சர். சிவசாமி கலாலயா, சித்திரைக்குளம், மயிலாப்பூர், சென்னை 600 004. நாள் – 23 டிசம்பர் ஞாயிறு காலை பத்து மணி.


bookudaya@rediffmail.com

Series Navigation

பா. உதயகண்ணன்

பா. உதயகண்ணன்