1.உஷ்ணம்
வானையே குடித்த பின்னும்
உஷ்ணமாய் புகைகிறது பூமி
பாரம் தாங்காத காளையின்
ஊமை அழுகை
உமிழ்நீர்க் கோலமாகிறது மண்ணில்
அரைப் பாவாடைச் சிறுமி
கையேந்தி இரந்து நிற்கிறது
இதயங்களை
குழாயில் அலகுசெருகி
அண்ணாந்து பருகுகிறது காகம்
எத்தனைப் பிரளயங்கள்
எனக்குள்
நான் வரைந்திருக்கும்
காலவரலாற்றின்
பிரபஞ்ச ஓவியம்
கண்ணுக்குப் புலனாகா.
2.மோனம்.
ஒரு துளியாய் வீழ்ந்தப் போதுதெரியவில்லை
சேரப்போவது ஒரு சமுத்திரமென
அலைஅலையாய் அலைகிறேன்
அகண்டு கிடக்கிறது கடலென அறியாமல்
கரையிலே ஒதுக்கிப் போடும்
உன்கரங்களை
இறுகப் பற்றிக் கொள்கிறேன்
உள்ளே இழுத்துச் செல்.
3.தவம்.
ஒற்றை விரலால்
கிணறு தோண்டும் முயற்சி
காலம் இருட்டி
வைகறையாயிற்று
தாரை தாரையாய்
தண்ணீர் வழிந்தது
எட்டிப் பார்க்கையில்
எதிரொலித்தது உன் முகம்
உள்ளே விழுந்து
ஒன்றாகி விட்டேன்
3.ஓலம்.
திக்கற்றவள் தேவதைதெருவில் திரியும்
துண்டுக் காகிதமாய் அலைபவள்
பாக்கியசாலி
ஆனந்த நதியின் பயணம்
அலைகடல் சேரும் வரை
துயரத்தின் ஓலமோ
அலைஓயும் காலதூரம்.
4.துளிகள்.
அலைகிறது ஒரு நதிஅலைகளற்ற கடல் தேடி
இதயத்தை தொலைக்காதவரை
தூண்டிலின் புழுவாய் இதயம்
பின்னும்…
மழையின் ஓய்தலில்
முகம்பார்க்கத் தெளிந்து கிடக்கும்
குட்டைகள்.
நான் பயணிக்கும் பேருந்து
என்னைக் கடந்து செல்வது
நான் இறங்கிய பின்பு தான்.
5.
கவியும் இருளில்தொலைந்த முகத்தைத்
தடவித் தேடுகிறேன்
தட்டுப் படுவது
முகம்தானா என்றறிய
தொலைக்கும் முன்
ஒரு முறையேனும்
தன் முகத்தை உணர்ந்திருக்கவேண்டும்.
நன்றி: புது விசை, நவம்பர் 1999.
திண்ணை
|