ராம், ராம் என்னும் போதினிலே!

This entry is part [part not set] of 48 in the series 20060519_Issue

சி. ஜெயபாரதன், கனடா


மோட்ச புரி கதவை மூடியது!
நரபலிச் சவங்கள் எரியும்
நரகத்தின் வாய் பிளந்தது!
கீதையின் நாதம் ஒலிக்க வில்லை!
வேதனையில் வெந்த
பேதையர் குரல் கேட்கிறது!
மதம் பிடித்தோடும் யானைகள்
தாக்க வரும்
மணியோசை கேட்கிறது!
சவப் பெட்டிகளான
ரயில்பெட்டி கருகி ஆத்மாக்களின்
கோரக் குமுறல் கேட்கிறது!
பாரதி கனவு கண்ட
விடுதலை நாட்டு உறவுகளை
வேரறுக்கும் வாளோசை கேட்கிறது!
வில்லேந்திப்
பவனி வந்த ராமன்
பாரத ரத யாத்திரையில்
சக்கரங்கள் நசுக்கிய மானிடச்
சத்தங்கள் கேட்கின்றன!
ஓரிரவில் மசூதியை மட்ட மாக்கிப்
போரைத் துவக்கிய
மூடர்களின்
மோசத் தனத்தால்
ஆயிரக் கணக்கில் அரங்கேறின,
நாசப் படுகொலைகள்!
வேத நூல்கள் விழிகள் பிதுங்கி
வெந்நீரைக் கொட்டின!
குஜராத் கலகத்தில் எரிந்த
அபலையர் குரல் கேட்கிறது! அங்கே
மனித நேயம் வளர்த்த
மகாத்மாவின் மந்திரம்,
அகிம்சா நெறி
புகைந்து கரியாய்ப் போகிறது!
ஊதா நிறத்தோன் பேரைச் சொன்னால்
தாகூர் படைத்த
கீதாஞ்சலி வாடிப் போகிறது!
வெண் புறாக்களின் குரல் கேளாது,
பிளாஸ்டிக் வெடிகளின்
பிரளயக் காட்சிகள் தெரிகின்றன!
வில்லாதி வில்லன்,
வாலியை மறைந்து கொன்ற
போலிக் குணம் தெரிகிறது!
சிறை மீட்ட
ஜானகியை மீண்டும்
கானகம் ஓட்டிய
மானக் கதை கேட்கிறது!
ஜின்னாவுக்குப் பிறகு
பாரதத்தைச்
சின்னா பின்னா மாக்கிய ராமன்
அயோத்தியா புரியிலே
அவதரிக்க வில்லை!
செத்து விட்ட ராமனுக்கு,
எத்தனை பேரின்னும் செத்து எரிவது?
உத்தமனுக்கு
ஜென்ம பூமிக் கோயிலை,
ஈராக்கில் எழுப்புங்கள்,
போராடும் சீடர்களே!

*****************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (May 16, 2006)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா