ஞாநி
தமிழக அரசியலில் அண்மையில் அதிகம் அடிபடும் சொல் உள் நோக்கம். சாதாரண மனிதர்கள் முதல் அரசியல்வாதிகள், ‘ஆன்மிக ‘ தலைவர்கள் வரை எல்லாருக்குமே எதிலும் உள் நோக்கம் உண்டு என்பது மனித இயற்கை. அதனால்தான் வள்ளுவர் எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருளின் மெய்ப்பொருள் காண்பது தேவை என்று வலியுறுத்துகிறார்.
சமூகத்துக்கு சாதகமான நிகழ்ச்சிகள் நடக்கும்போது அதைச் செய்தவரின் உள் நோக்கம் என்னவாக இருந்தாலும், அதை விடுத்து நிகழ்ச்சியின் சாதகத் தன்மையைப் பாராட்டுகிறோம். இதற்கான சிறந்த எடுத்துக்காட்டுதான் சங்கராச்சாரி ஜயேந்திரர் கைது. தமிழக அரசுக்கும் ஜெயலலிதாவுக்கும் இதில் என்ன உள் நோக்கம் இருந்தாலும் சரி, சங்கராச்சாரி கைது என்பது சமூக நன்மைக்கு உதவுகிற ஒரு முன்னோடி நடவடிக்கை என்பதில் யாருக்கும் ஐயம் இல்லை. உள் நோக்கங்கலை ஆராய்வது, அறிந்துகொள்வது எல்லாம் கூட சமூக நலனுக்கு உதவி செய்தால் அடுத்த கட்டத்தில் அதையும் வரவேற்கலாம்.
ஆனால் உள் நோக்கம் என்ன என்று பேசி திசை திருப்புவது ஜயேந்திரரையும் சங்கர மடத்தையும் காப்பாற்ற உதவுவதாக அமைந்தால் உள் நோக்கம் பற்றி கேள்வி எழுப்புவோரின் உள் நோக்கத்தையும் கேள்விக்குள்ளாக்கித்தான் தீர வேண்டும்.
இன்று தமிழ் நாட்டில் ஜயேந்திரர் கைதானாலும் சரி, ஜெயலட்சுமி -போலீஸ் துறை கூட்டு அராஜகங்களானாலும் சரி, இவற்றைப் பற்றி மக்களிடையே கருத்து பரப்புவதில் மீடியா எனப்படும் பத்திரிகைகள், தொலைக்காட்சிகளின் பங்கு மிக முக்கியமானது. பத்திரிகைத்துறையைப் பொறுத்த மட்டிலும் தினமணி, தினத்தந்தி, தினமலர், தினகரன் என்று நான்கு பெரிய தினசரிகளும், ஆனந்த விகடன், குமுதம், குங்குமம், கல்கி, இந்தியா டுடே, ஜுனியர் விகடன், நக்கீரன், குமுதம் ரிப்போர்ட்டர் என்று எட்டு முக்கிய இதழ்களும் உள்ளன. ஒவ்வொன்றிலும் வெவ்வேறு பார்வை அடிப்படையில் செய்திகள் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதால், வாசகர்கள் இந்தப் பத்திரிகைகளின் மிகைப்படுத்தல், பரபரப்புத்தன்மை, சார்பு நிலை, இவற்றையெல்லாம் மீறி உண்மை நிலையை ஒப்பீட்டு அறிந்துகொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.
ஆனால் தொலைக்காட்சிகளைப் பொறுத்த மட்டிலும் சன், ராஜ், விஜய், ஜெயா, பொதிகை என்ற ஐந்து பெரிய தொலைக்காட்சிகள் மட்டுமே உள்ளன. சன்னிடம் மட்டுமே தனியே சன் நியூஸ் என்ற செய்தி ஒளிபரப்பும் இருக்கிறது. பொதிகையைப் பொறுத்த மட்டில் தன்னாட்சி உடைய பிரசார் பார்தி கார்ப்பரேஷனுடையது என்றாலும், இன்னமும் அரசு சார்ந்த தொலைக்காட்சிதான். எனவே மத்தியில் ஆட்சி மாற்றங்களுக்கேற்ப, இதன் செய்திகளிலும் அழுத்தங்கள் மாறும் இயல்பின.
சன் திமுக சார்பானது. ஜெயா அதி.முக சார்பானது. இந்த இரு சார்புகள் தவிர வேறு பார்வையில் செய்திகள் மக்களுக்கு வழங்கப்பட இருந்த ஒரே வாய்ப்பு விஜய், ராஜ் டிவிகல் மட்டும்தான்.
விஜய் டி.வியில் அந்நிய முதலீட்டாளரான ஸ்டார் நிறுவனத்தின் பங்கு இருப்பதால், தற்போதுள்ள சட்ட விதிகளின்படி அது நேரடியாக எந்த செய்தி ஒளிபரப்பும் செய்ய முடியாது. இந்த விதியின் அடிப்படையிலேயே அதில் வந்த என்.டி.வி தயாரிப்பான தினசரி செய்தி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. செய்தி அலசல் விவாத நிகழ்ச்சியான மக்கள் யார் பக்கம், மத்தியில் தி.மு.க ஆளுங்கட்சியான பிறகு திரை மறைவு அச்சுறுத்தல்களால் நிறுத்தப்பட்டது.
ராஜ் டிவியில் மட்டுமே தினசரி செய்திகள் இருந்து வந்தன. இப்போது அதுவும் நிறுத்தப்பட்டுவிட்டது.
நிறுத்தப்பட்டதற்குக் காரணம் என்ன ?
ராஜ் டி,.வியின் விதி மீறல் என்று சொல்லப்படுகிறது. தங்கள் நிலையத்தில் தயாரிக்கும் நிகழ்ச்சிகளை ஒரு டி.வி நிலையம் விண்ணில் இருக்கும் செயற்கைக்கோளுக்கு அனுப்புகிறது. அந்த அலைகளை செயற்கைக் கோளிலிருந்து கேபிள் ஆப்பரேடர் தன் இடத்துக்கு தருவித்து பின் வீடுகளுக்கு அனுப்புகிறார். இதுவே தற்போதைய ஒளிபரப்பு முறை. இதில் நிலையம் செயற்கைக்கோளுக்கு நிகழ்ச்சி அலைகளை அனுப்புவதற்கு அரசுக்கு சொந்தமான விதேஷ் சஞ்சார் நிகாம் லிமிட்டெட் எனப்படும் வி.எஸ்.என்.எல் அமைப்பை சார்ந்திருக்கிறது. வி.எஸ்.என்.எல் மூலமாகவும் செயற்கைக் கோளுக்கு அனுப்பலாம். தானே ஒரு பூமி நிலையம் வைத்து அதிலிருந்து நேரடியாகவும் அனுப்பலாம். இரண்டுக்கும் அரசின் லைசன்ஸ் தேவை. முன்னர் எல்லா நிலையங்களும் இதை வெளி நாட்டிலிருக்கும் கம்பெனிகள் முலம் செய்து வந்ததால், இந்திய அரசின் லைசன்ஸ் தேவைப்படவில்லை. இப்போது எல்லாருமே இந்தியாவுக்குள்ளிருந்தே அனுப்புகிறார்கள். அரசின் தொழில் நுட்ப வசதியையும் ( வாடகை செலுத்தி) பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
இந்த லைசன்ஸ் விஷயத்தில் ராஜ் டி.வி ஒரு தவறு செய்தது. லைசன்ஸை உரிய நேரத்தில் புதுப்பிக்கவில்லை.தாமதமாக அபராதத்துடன் பணம் கட்டி புதுப்பிக்க முன்வந்தது. ஆனால் தொலைத்தொடர்புத் துறை ராஜ் டிவியின் லைசன்ஸ் ரத்தாகிவிட்டதாகச் சொல்லி டெலிபோர்ட் வசதியை மறுத்துவிட்டது. இது தொடர்பான வழக்கு இப்போது நிலுவையில் இருக்கிறது.
டெலிபோர்ட் வசதி ரத்தாகிவிட்டதால் ராஜ் டிவியால் செய்தி ஒளிபரப்பை செய்ய முடியவில்லை. எனவே தமிழ் மக்கள் சன் அல்லது ஜெயா என்ற இரு தீவிர அரசியல் சார்புள்ள செய்திகளை மட்டுமே பார்த்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். செய்தி ஒளிபரப்பு இல்லாததால் ராஜ் டி.வி இந்த பிரிவின் ஊழியர்களை வேலையை விட்டு அனுப்பும் அபாயமும் ஏற்பட்டிருக்கிறது.
ராஜ் டிவியின் வணிக விதி மீறல்கள் எதுவானாலும் அதற்கு சட்டப்படியான நடவடிக்கைகள் எடுப்பதை நாம் எதிர்க்கவில்லை. சட்டம் எல்லாருக்கும் சம்மானதாக இருக்க வேண்டும் என்பதையே நாம் தொடர்ந்து வலியுறுத்த வேண்டும். வணிகப்போட்டியின் காரணமாக ஆளும் வர்க்கங்களுக்குள்ள்ளேயே சண்டைகள் நடப்பது இயற்கை. இதற்கு முன்பும் ராஜ் டிவி கருவிகள் இறக்குமதியில் விதி மீறியதாக சுங்கத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. வணிக நலன்களுக்கு அரசியல் செல்வாக்கு எந்த அளவுக்கு உறு துணையானது என்பதை சன் டி.வி – தி.மு.க அனுபவங்களிலிருந்து தாமதமாகக் கற்றுக் கொண்டு ராஜ் டிவி அதிபர் ராஜேந்திரன் அன்றைய ஆளுங்கட்சியான பி.ஜே.பியில் போய்ச் சேர்ந்தார். அது பி.ஜே.பி ஆட்சியின் கடைசி காலம் என்பதால் ராஜ் டி,விக்கு அதன் பயன் கிட்டவில்லை. ஆளும் அமைப்புக்குள் இப்படி மோதல்கள் நடப்பது இயற்கையானது. இதில் இரு தரப்பும் அம்பலமானால் அது சமூகத்துக்கே லாபம்.
அதே சமயம் எப்படி பத்திரிகைத் துறையில் பல விதமான கருத்துக்களும் உடைய நிறைய பத்திரிகைகள் இருப்பதுதான் ஆரோக்கியமான சூழலாக இருக்குமோ அதே போலத்தான் தொலைக்காட்சியிலும். ஆனால் தற்போது இந்த நிலை இல்லை. எப்படி அச்சுத்துறையில் ஏகபோகம் (monopoly) என்பதை பத்திரிகையாளர்களின் தொழிற்சங்கங்கள் கடந்த ஐம்பது ஆண்டுகளாக எதிர்த்துக் கொண்டிருக்கின்றனவோ அதே போல டி.வி ஊடகத்திலும் ஏகபோகம் என்பது இப்போது தீவிர கவனத்துக்குரியதாகும்.
இதில் யார் என்ன செய்ய முடியும். ராஜ் டி.வி லைசன்ஸை தக்க நேரத்தில் புதுப்பித்துக் கொள்ளாதது அதன் தவறுதானே என்று வாதிடலாம். உண்மைதான்.அது அந்த நிலையத்தின் தவறுதான். அதற்கான தண்டனை – அபராதம் விதிப்பது. அபராதம் செலுத்தப்பட பிறகு தொடர்ந்து ஒளிபரப்பை நடத்திக் கொள்ள அனுமதித்திருக்க வேண்டும். ஆனால் இது செய்யப்படவில்லை.
ஏன் என்கிற போதுதான் உள் நோக்க அரசியலுக்கு வந்து சேருகிறோம்.
ராஜ் டி.வி லைசன்ஸ் சம்பந்தப்பட்ட துறையின் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன். இவருடைய தொலைத் தொடர்புத் துறையின் அதிகாரத்துக்கு உடபட்டதுதான் இந்தியாவின் மிகப் பெரிய கம்பெனியான ரிலையன்ஸ் கம்பெனியின் செல்பேசி பிரிவுமாகும்.
ரிலையன்ஸ் கம்பெனி மிகப் பெரிய மோசடி செய்திருப்பது தொலைத் தொடர்புத் துறையால் கண்டுபிடிக்கப்பட்டது. தன் செல்பேசித் தொடர்பில் வெளி நாட்டு கால்களையெல்லாம் உள் நாட்டு கால்கள் என்று மோசடியாகக் காட்டி சுமார் 500 கோடி ருபாய் வரை இந்திய அரசை ரிலயன்ஸ் ஏய்த்துவந்திருக்கிறது. இது கண்டு பிடிக்கப்பட்டதும் அரசு ரிலையன்ஸ் கம்பெனிக்கு சுமார் 150 கோடி ரூபாய் வரை அபராதம் விதித்தது. இந்த அபராதத்துக்கு உச்ச நீதி மன்றத்தில் ரிலையன்ஸ் இடைக்கால தடை வாங்கியது. கடைசியில் அபராதத் தொகையை சுமார் 90 கோடியாகக் குறைத்து நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. ரிலையன்ஸ் இதைக் கட்ட ஒப்புக் கொண்டது.
கோடிக் கணக்கான ரூபாய்கள் அரசை ரிலையன்ஸ் மோசடி செய்த இந்த வழக்கில் எந்தக் கட்டத்திலும் ரிலையன்சின் செல்பேசி லைசன்ஸ் ரத்து செய்யப்படவில்லை. அந்த பேச்சே எழவில்லை.
வடக்கே ஒரு பத்திரிகை நிருபர் அமைச்சர் தயாநிதி மாறனிடம் கேட்டார். ரிலையன்ஸ் லைசன்ஸை ரத்து செய்யும் யோசனை ஏதாவது உண்டா ? அமைச்சர் சொன்னார் : இதில் எதற்கு லைசன்சையெல்லாம் ரத்து செய்ய வேண்டும் ? பெனாலிட்டி தண்டனையே போதுமானது.
பல கோடி ரூபாய்கள் மோசடி செய்த கம்பெனிக்கு சில கோடி ரூபாய் அபராதமே போதுமானது.தற்காலிகமாகக் கூட லைசன்ஸ் ரத்து கிடையாது. சில லட்ச ரூபாய் லைசன்ஸ் கட்டணத்தை தாமதமாகக் கட்டும் ராஜ் டிவிக்கு மட்டும் லைசன்ஸ் ரத்து. ஏன் இப்படி ?
தயாநிதி மாறனின் உள் நோக்கம் என்ன என்று உள் நோக்க ஸ்பெஷலிஸ்ட்டான அவர் தாத்தாதான் விளக்க வேண்டும். அதிகபட்சம் எனக்கு வயிற்றெரிச்சல் என்று இன்னொரு கார்ட்டூன் போடலாம். சின்னக் குத்தூசி மாதிரி சிந்தனை கொத்தடிமைகளை விட்டு காஞ்சி மடத்தைக் காப்பாற்ற கட்டுரைகள் எழுதச் செய்வது போல இதற்கும் எழுதச் செய்யலாம். சில உள் நோக்கங்களை என்ன மறைத்தாலும் மக்களுக்கு அவை பகிரங்கமாகத் தெரிந்துவிடும். இதுவும் அத்தகைய ஒன்றுதான்.
ராஜ் டிவி ஊழியர்கள் சார்பில் இதர பத்திரிகையாளர்களின் ஆதரவு கோரி பத்து நாட்கள் முன்பு ஒரு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த இதழ் அச்சுக்கு செல்லும் வரையில் ஜுனியர் விகடன், நக்கீரன், குமுதம் ரிப்போர்ட்டர், ஹிந்து பத்திரிகை எதிலும் இந்தக் கூட்டம் பற்றியோ ராஜ் டிவிக்கு ஒரு நீதி ரிலையன்சுக்கு ஒரு நீதி என்று தயாநிதி மாறனின் அமைச்சகம் நடந்து கொள்வது பற்றியோ ஒரு வரி வெளியாகவில்லை. இவர்களின் உள் நோக்கங்கள் என்ன என்றும் உள் நோக்க ஸ்பெஷலிஸ்ட் விளக்க உரை எழுதலாம். நக்கீரனின் தி.மு.க சார்பு தெரிந்ததுதான். விகடன் குழுமத்துக்கு சன் டிவியில் தொடர் நிகழ்ச்சி காண்ட்டிராக்ட்டுகள் இருக்கின்றன. குமுதத்துக்கு இதுதான் கேரக்டர் என்று சொல்ல எந்த கேரக்டரும் கிடையாது. ஹிந்து குடும்பத்தின் மருமகன் தயாநிதி. காஞ்சி மடத்தைக் காப்பாற்றுவதில் இப்போது ஹிந்துவும் தி.மு.கவும் ஒரு நேர்க் கோட்டில் இணைந்திருக்கின்றன.
சில உள் நோக்கங்களின் விளைவாக சமூகத்துக்கு சாதகமானவை கூட நடக்கலாம் என்று ஜயேந்திரர் கைதில் பார்த்தோம். நிச்சயம் ராஜ் டிவி பிரச்சினையில் இருக்கும் உள் நோக்கங்கள் எதுவானாலும் சமூகத்துக்கு சாதகமானவை அல்ல.
தீம்தரிகிட டிசம்பர் 16-31 2004
dheemtharikida @hotmail.com
- பெண்கள் சந்திப்பு மலர் – 2004 -ஒரு பறவைப் பார்வை
- எம்.எஸ் – ஒரு வரலாற்றுப் பதிவு
- நபிகள் நாயகத்தின் வாழ்வு – அன்னை ஜைனப்பின் மணம் – இறுதி நபி : சில விளக்கங்கள்
- வஞ்சிக்கப்பட்ட மலையகத் தமிழர்களின் வரலாறு
- ராஜ் டி.வி Vs தயாநிதி மாறன் : உள் நோக்கம் ?
- ஜயேந்திரர் : மனித உரிமை, மீடியா பிரச்சினைகள்
- விளக்கு நிறுவனத்தின் 2003-ம் ஆண்டுக்கான புதுமைப்பித்தன் இலக்கிய விருது – சே ராமானுஜம் பெறுகிறார்
- மதுரை ஷண்முகவடிவு சுப்புலஷ்மி – 1916-2004 – ஒரு அஞ்சலி
- இசை அரசி எம்.எஸ்.
- ச.சுரேந்திர பாபுவின் ‘தமிழகத்தில் பாரதப்போர் ‘நூலில் இருந்து….ஆய்வுப் பான்மை
- ஓவியப்பக்கம் ஒன்பது – ரொமேர் பியர்டன் – ஓவியமும் எழுச்சியும்
- தமிழின் மறுமலர்ச்சி – 8 தமிழ் எழுத்துக்களின் வளர்ச்சி ‘ என்ற கட்டுரையிலிருந்து…பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை
- எம் எஸ் :அஞ்சலி
- வாரபலன் டிசம்பர் 16,2004 – நாடாளுமன்றச் சிலைகள், கும்பாரன் குரல், கோல்கீப்பரின் மரணம், தோசை சப்பாத்தி ஐஸ்கிரீம்
- உயர் பாவைக்கு ஒரு முன்னுரையும் விளக்கமும்
- அழுதாலும் பிள்ளை அவள் தான் பெற வேண்டும்
- மெய்மையின் மயக்கம்-30
- மக்கள் தெய்வங்களின் கதைகள் – 14. வன்னிராசன் கதை
- விடுபட்டவைகள் -1
- ஜோதிர்லதா கிரிஜா: தியாகு: ஜெயேந்திரர்: ஆதி சங்கரர்
- விளக்கு நிறுவனத்தின் 2003-ம் ஆண்டுக்கான புதுமைப்பித்தன் இலக்கிய விருது – சே ராமானுஜம் பெறுகிறார்
- கடிதம் டிசம்பர் 16,2004
- ஜெயமோகனின் இவ்வருடத்திய நூல்கள்
- டிசம்பர் 16,2004 – இரு கடிதங்கள்
- நடேசனின் இரு நூல்களின் வெளியீடு
- கடிதம் 16,2004
- மாந்தரென்றால்….
- நீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் -50
- அக்கரையில் ஒரு கிராமம்
- பேயும் பேயோட்டியும் சேர்ந்த கூட்டணி
- ஒரு சிறுவனின் கனவு
- மாச்சுபிச்சுவின் சிகரங்கள் – தொடர்ச்சி (மூலம் பாப்லோ நெரூதா)
- கவிக்கட்டு 40-உள்ளத்தை மட்டும் !
- வெண்ணிலாப்ரியன் கவிதைகள் 7-அது..அவன்..அவள்.!
- இறைத்தூதர்
- என்ன சொல்ல…. ?
- பிரியாதே தோழி
- நாற்காலி
- பூமியின் கவிதை
- அறிவியல் புனைகதைவரிசை 5 – பித்தம்
- மாச்சுபிச்சுவின் சிகரங்கள் – தொடர்ச்சி (மூலம் பாப்லோ நெரூதா)
- கவிதைப் பம்பரம் -கூ ற ா த து கூ ற ல் – 1
- குருஷேத்ரம்
- கீதாஞ்சலி (8) கானம் இசைக்கும் தருணம்-மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
- பெரியபுராணம் – 22
- பேன்
- பரமேசுவரி
- தெரு நாய்
- மண்ணெண்ணெய்
- தண்ணீர் விட்டா வளர்த்தோம் ? இப்பேரணையைக் கண்ணீரால் கரைத்தோம்! கனிவு, கவனம், கண்காணிப்பு, கட்டுப்பாடுடன் பேரணைகள் கட்டப்பட வேண்டு
- சரித்திரப் பதிவுகள் – 5 : நார்மண்டி தாக்குதல் (D Day Landing)
- மலேசிய மகுடம்