மலர் மன்னன்
(அக்டோபர் 29, 2005 அன்று சென்னை திருவல்லிக்கேணி பாரதி நினைவு இல்லத்தில்
நடைபெற்ற பொற்றாமரை கலைஇலக்கிய ஆய்வரங்கக் கூட்டத்தில் உரையாக வாசிக்கப் பட்ட கட்டுரை)
திறனாய்வு செய்வதற்காக நான் தேர்ந்தெடுத்துக் கொண்டுள்ள நூல் ‘க. அயோத்திதாசர் ஆய்வுகள். ‘ நூலின் ஆசிரியர் ராஜ் கவுதமன். நாகர்கோவில் காலச்சுவடு பதிப்பக வெளியீடு.
கவனியுங்கள், அயோத்திதாசர் என்கிற பெயருக்காகவே என்னைப் போன்றவர்கள் அவரைக் கொண்டாடக் கடமைப் பட்டிருக்கிறோம். நான் என்னை மட்டுந்தான் முன்வைத்துப் பேசுகிறேன் எவரும் சங்கடப்பட வேண்டாம்.
சரி, திறனாய்வுக்கு வருவோம். ஒரு நூலைத் திறனாய்வுக்கு எடுத்துக்கொள்ளும்போது கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கியமான அம்சங்களாக நான் கருதுவது:
முதலில் அதன் உள்ளடக்கம். கதையா, கவிதையா, கட்டுரையா, ஆய்வா என்பது. ஏனென்றால் உள்ளடக்கத்தின் தன்மைக்கு ஏற்பவே திறனாய்வின் போக்கையும் அமைத்துக்கொள்ளவேண்டியிருக்கும். மேலும், எடுத்த எடுப்பிலேயே திறனாய்வு செய்ய முனைபவர் அந்த
நூலைத் திறனாய்வு செய்யத் தனக்குத் தகுதி உள்ளதா என்பதை முடிவு செய்துகொள்ள முடியும். உதாரணமாக, கவிதை நூல்களைத் திறனாய்வு செய்ய எனக்குத் தகுதி இருப்பதாக நான் கருதவில்லை. நல்ல கவிதையை அடையாளம் காண்பதில் நிச்சயமாக எனக்குச் சிரமம் இருக்கிறது.
இரண்டாவதாக, திறனாய்வுக்கு எடுத்துக் கொள்ளும் நூலின் ஆசிரியருக்கு அந்த நூலை எழுதுவதற்கு உள்ள தகுதியும் தேர்ச்சியும். உதாரணமாக, கவிதை என்பது இன்னது என்று தெரியாமலேயே பலர் கவிதை எழுதத் தொடங்கிவிட்டதால் அது மரபு சார்ந்த கவிதையாகவும் இல்லாமல் நவ கவிதையாகவும் அமையாமல் வெறும் விளையாட்டுத்தனமான துணுக்காகப் போய்விடுவது. பலருக்கும் சிந்தனையில் கவிதை பூக்கும். ஆனால் வெளிப்படுத்துவதற்குப் போதிய சொல்வளமோ சொற்களை அமைக்கும் திறமையோ, சொல்லாமலே சொல்லத் தெரிந்த சாதுரியமோ இல்லாததால் அவை சிந்தனை அடுக்குக்குள்ளேயே வாடி உலர்ந்து மடிந்துபோகும்.
ஒருமுறை ஈரோடு அருகே ஊஞ்சலூரில் ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் ஆராதனைக்குச் சென்றுவிட்டு அதிகாலை வேளையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்திறங்கியபோது, கண்ணில் தென்பட்ட எல்லாருமே சிவலிங்கங்களாகத் தோன்றினார்கள். விரைவாக நடந்து செல்லும் சிவலிங்கங்கள், அமர்ந்திருக்கும் சிவலிங்கங்கள், தலையில் பெட்டிகள் சுமந்த சிவலிங்கங்கள், ஆண்பெண் பேதமின்றி எல்லாருமே சிவலிங்கங்கள். வெறும் பிரமை என்று சிரிக்கலாம். ஆனால் அந்தக் கணத்தைப் பொருத்தவரை அது சத்தியம். பிரமையென்று பார்த்தால் நாம் வாழும் முழு வாழ்க்கை உள்பட எல்லாமே பிரமைகள்தாம்.
நான் கண்ட அந்தக் கண நேரத்தோற்றத்தை ஒரு ஞானக் கூத்தனோ, ஒரு எஸ். வைத்தீஸ்வரனோ, ஒரு தருமு சிவராமுவோ, ஒரு விக்ரமாதித்யனோ, ஒரு பசுவய்யா என்கிற சுந்தர ராமசாமியோ, ஒரு நகுலர்னா கண்டிருந்தால் ஓர் அருமையான கவிதை தமிழுக்குக் கிடைத்திருக்கும். என்னுள் அபூர்வமாக ஒரு கவிதை மலர்ந்துங்கூட, அதனை வெளியே மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டும் வகை தெரியாததால் என்னுள்ளேயே வாடி மடிந்து போயிற்று. ஆக, விஷய ஞானம் இருந்தாலும் அதைச் சரியாகப் புலப்படுத்துவதற்கு நல்ல தேர்ச்சியும் அவசியமாகிறது.
மூன்றாவதாக, என்ன காரணத்திற்காக எழுதப்படுகிறது என்கிற நூலின் நோக்கம். நான்காவதாக, அந்த நூலால் வாசகனும், பொதுவாகச் சமுதாயமும் அடையப்பெறும் பயன். இறுதியாக, நூலின் உள்ளடக்கத்தை எடுத்துக் கூறுவதில் நூலாசிரியன் எந்த அளவுக்கு வெற்றி பெற முடிந்திருக்கிறது என்ற பெறுமானம்.
இந்த அடிப்படையில் முதலாவதாக நூலின் உள்ளடக்கம் என்னவென்றால் க. அயோத்திதாசர் என்பவரைப் பற்றியும் அவர் மேற்கொண்ட ஆய்வுகள் குறித்துமான ஓர் அறிமுகம். மரித்துப்போய் எண்பது ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்ச் சிந்தனாவுலகுக்கு ஒருவர் மறுபிறப்பெடுத்து வந்திருப்பதே தெரிந்துகொள்வதற்கு மிகவும் அவசியமான விஷயம்.
அடுத்து, இந்த நூலின் ஆசிரியர், ராஜ் கவுதமன் என்ற பெயரில் எழுதிவரும் புதுச்சேரி காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்தின் தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் எஸ்.கவுதமன். தமிழ்ச் சமூக நாவல்களின் முன்னோடிகளில் ஒருவரும், சடங்காச்சாரங்களிலும்
மதிப்பீடுகளிலும் காலத்துக்கு ஏற்ற திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தியவருமான அ.மாதவையாவின் படைப்புகள் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். தனது வாழ்வனுபவத்தையே ஒரு சுவையான நாவலாக இரு பாகங்களில் எழுதியிருப்பதோடு, தர்க்கமாகவும் ஆய்வாகவும் பத்து நூல்கள்போல எழுதியிருப்பவர்.
நாம் நியாயப்படி எப்போதோ தெரிந்தும் புரிந்துங்கொண்டு, உரிய மரியாதை செய்திருக்க வேண்டிய ஒரு சிந்தனையாளரை, ஓய்வொழிச்சல் இல்லாத ஒரு போராளியை, இனிமேலாவது நாம் தெரிந்துகொண்டு, அவர் ஆற்றிய பணிகளையும், அவரது கோட்பாடுகளையும் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக இந்த நூலை எழுதியிருக்கிறார், ராஜ் கவுதமன்.
இந்த நூலால் வாசகனுக்கும் பொதுவாகச் சமுதாயத்திற்கும் கிடைக்கும் பயன் என்னவென்று பார்த்தோமானால், மிகச் சிறந்த சிந்தனையாளர்களையெல்லாம் நாம் பெற்றிருந்தும், அவர்களைப் பற்றி எதுவுமே தெரியாமல் இருந்துவருகிறோம். இனிமேலாவது இவ்வாறு பொறுப்பற்று இருக்கலாகாது என்ற உணர்வு நமக்கு வரும். பல சிறந்த மனிதர்கள் பல்வேறு சமூகக் காரணங்களால் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் வந்திருக்கிறார்கள். இந்த அடாத செயலை இனியும் நாம் அனுமதிக்கலாகாது என உறுதிபூணச் செய்வதே இந்த நூலின் மிக முக்கியமான பயனாக நான் காண்கிறேன்.
இனிமேல் நூலின் உள்ளடக்கம் எடுத்துக் கூறப்பட்டுள்ள முறை. இதில்தான் ஆசிரியரின்
ஆளுமையை விருப்பு வெறுப்பற்று எடைபோடும் திறனாய்வை மேற்கொள்ள வேண்டிய பணி தொடங்குகிறது.
முதலில், அயோத்திதாசர் என்பவர் யார் ?
அவரை ராஜ் கவுதமன் வாசகனுக்கு அறிமுகம் செய்துவைக்கிற விதமே சுவாரசியமாக இருக்கிறது. ‘தொண்டை மண்டல வல்ல காளத்தி தெய்வப் புலமை வைத்திய சிம்ஹம் சங்கை கவிராஜ பண்டிட் க. அயோத்திதாஸ தம்ம நாயகர் ‘ என்றும், ‘ஸ்ரீலஸ்ரீ அயோத்திதாஸ
பண்டிதர் ‘ என்றும் 19ம் நூற்றாண்டின் இறுதியிலும், 20ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் பவுத்த தலித்துகளால் மிகுந்த மரியாதையுடன் விளிக்கப் பட்டவர் க. அயோத்திதாசர் ‘ என்று ராஜ் கவுதமன் அவரை நமக்கு அறிமுகம் செய்துவைக்கிறார். அயோத்திதாசர் ஒரு தலித்தாக இருந்த காரணத்தாலும், அவருக்குப்பின் அவர் மீட்டெடுத்த பவுத்தத்தையும் வரலாற்றையும் பவுத்த தலித்துகளும் பிறரும் போராடி வளர்க்காத காரணத்தாலும், வழக்கம்போல் தமிழ் அறிவுலகத்தின் சனாதன மேட்டிமை என்னும் காரணத்தாலும் இருபதாம் நூற்றாண்டு முடிவுற்ற காலத்தில்தான் அவர் மறுபிறப்பெடுத்தார் என்று மேலும் விவரம் தருகிறார் நூலாசிரியர். இந்தச் சுருக்கமான அறிமுகக் குறிப்பின் மூலமாகவே நூலின் நோக்கம், பயன் இரண்டையும் உணர்த்திவிடுவதிலிருந்து, எடுத்துக் கொண்ட விஷயத்தை எப்படிச் சொல்ல வேண்டும் என்பதில் தமக்குள்ள தேர்ச்சியை ராஜ் கவுதமன் நிரூபணம் செய்துவிடுகிறார்.
அயோத்திதாசர் மறைந்த பிறகான இந்த எண்பது ஆண்டு காலத்தில் தலித்துகளின் சக்திகள் இந்திய தேசிய காங்கிரஸ், பிராமணர் அல்லாத திராவிட இயக்கம், வர்க்கப் போராட்டத்தை வலியுறுத்திய பொதுவுடமை இயக்கங்கள் போன்ற ‘அயலார் ‘களின் இயக்கங்களுக்காகத் தொடர்ந்து எரிக்கப்பட்டன என்று ராஜ் கவுதமன் நினைவூட்டும்போது, அதில் அடக்கி
வைக்கப்பட்டுள்ள கோபம் ஓர் அம்பு மாதிரி நெஞ்சைத் தைக்கிறது. ‘அயலார் ‘ என்ற ஒரு வார்த்தை போதாதா, சரியான சூடுபோட!
வழக்கம்போல் நமது சமுதாயத்தின் ஒரு மிகப்பெரும் பிரிவினரின் உழைப்பு சூறையாடப்
படுவது சமூகபொருளாதார ரீதியில் மட்டுமின்றி, அரசியல் அரங்கிலும் நடந்து வருவதைத்தான் நூலாசிரியர் இங்கு சுட்டிக்காட்டுகிறார்.
நான் மொழிகளிடையே பேதம் பார்த்துத் தீட்டும் பார்ப்பவன் அல்ல என்றாலும், ஒரு தகவலுக்காகச் சொல்கிறேன்: ‘தலித் ‘ என்பது தமிழ்ச் சொல் அல்ல. யார் இந்த தலித்துகள்ஹ உடல் உழைப்பை ஓயாமல் சமுதாயத்திற்கு வழங்கி, ஓடாய்த் தேய்ந்துபோகும் பறையர், பள்ளர், அருந்ததியர் ஆகியோருக்கான பொதுப் பெயர்தான் ‘தலித் ‘ என்பது. ஒரிரு தலைமுறைகளில் உடல் உழைப்பின் மூலமாகத்தான் ஒருவேளை கஞ்சியாவது குடிக்கமுடியும் என்ற நிலையிலிருந்து உயர்ந்து விடுபவர்கள் ‘தலித் ‘ என்கிற தகுதியை இழந்துவிடுகிறார்கள் என்பது என் கருத்து. பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், ஆகியோருக்கும் இது பொருந்தும். இவ்வாறு ஓரிரு தலைமுறைகளில் உடல் உழைப்பையே நம்பியிருக்கத் தேவை இல்லாது போகும் இவர்கள், தம் பிரிவினரில் உள்ள மற்றவர்களும் தங்களைப் போலவே வயிற்றுப் பிழைப்பிற்கு உடல் உழைப்பைச் சார் ந்து இருக்கத் தேவை இல்லாதவர்களாக உயர்வதற்கு வழிவிடுவதோடு, வழிகாட்டவும் வேண்டும்.
ஆக, தலித் என்றால் தீண்டாதார்கள். கவனியுங்கள், நான் சொல்வது தீண்டாதார்கள்.
தீண்டத் தகாதவர்கள் அல்ல. அதாவது மற்றவர்கள் வெளியே பார்ப்பதற்கு எப்படியிருந்தாலும் உள்ளுக்குள் அடை அடையாக அழுக்கு மண்டிக்கிடப்பதால் ‘உங்களைத் தீண்ட மாட்டோம் ‘ என்று விலகி நிற்பவர்கள் தலித்துகள்.
‘எங்கள் மனத்துக் கண் மாசையெல்லாம் அழுந்தத் தேய்த்துத் துடைத்தெறிந்துவிட்டோம், வாருங்கள், எங்களைத் தீண்டுங்கள், ஆரத் தழுவுங்கள் ‘ என்று மற்றவர்கள் தலித்துகளை இறைஞ்சும் நிலையை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே உழைத்தவர் அயோத்திதாசர்.
ஒரு மாபெரும் சமுதாயம் தலைமுறை தலைமுறையாக அடக்கிக் கொண்டிருந்த சீற்றம் அயோத்திதாசர் மூலம் பீறிட்டெழுந்ததை இந்த நூலின் வாயிலாக அறிந்துகொள்கிறோம். ஹிந்து சமூகத்திற்கு ஓர் அதிர்ச்சி வைத்தியமாகத் தம் பிரிவினர் அனைவரும் புத்த மதத்தைத் தழுவுமாறு தூண்டியதில் டாக்டர் அம்பேத்கருக்கு முன்னோடியாக இருந்தவர் அயோத்திதாசர்.
இதில் நாம் கவனிக்க வேண்டிய நுட்பமான விஷயம் ஒன்றுள்ளது. எல்லாச் சமயக் கோட்பாடுகளையும் உள்வாங்கிக் கொண்டது ஹிந்து சமயம். அயோத்திதாசரோ, அந்த ஹிந்து சமயத்தையே உள்வாங்கிக் கொள்ளும் முயற்சியாகப் ‘பூர்வ பவுத்தம் ‘ என்பதாக ஒரு சமயத்தை நிறுவ முற்படுகிறார். ஹிந்து சமயத் தத்துவங்களையும், மகான்களையும், ஞானிகளையும் அவர் புறந்தள்ளவில்லை. ஏன், ஹிந்து சமயப் பன்டிகைகளைக் கூட அவர் திரஸ்கரிக்கவில்லை. மாறாக, அனைவருக்கும், அனைத்துக்கும் பூர்வ பவுத்தம் என்கிற ஞானஸ்னானம் செய்வித்து சுவீகரித்துக் கொள்கிறார்.
காலத்துக் கொவ்வாத சடங்காச்சாரங்களுக்குத் தலைமுழுகுவதில் ஹிந்நு சமுதாயம் எப்போதும் தயாராகவே இருந்து வந்துள்ளது. ‘இது எங்கள் சமய நம்பிக்கையிலும் உரிமையிலும் தலையிடுவதாகும் ‘ என்று எதையும் ஏற்க மறுக்கும் பிடிவாதம் ஹிந்து சமயத்திற்கு இல்லை. ஆகையால் அயோத்திதாசர் ஹிந்து சமூகத்தின் சடங்காச்சாரங்களை ஒதுக்கித் தள்ளுகிறபோது நாம் முகஞ் சுளிக்கத் தேவையில்லை.
மாந்தர் அனைவரையும் அவர்களின் சமயக் கோட்பாடுகளையும் பூர்வ பவுத்தமாக்கும் முயற்சியில் அயோத்திதாசர் இஸ்ரவேலின் மோசேயைக் கூட விட்டுவைக்கவில்லை. ஆனால் நடைமுறை என்று ஒன்று இருக்கிறதே, அதற்காக 1898ல் இலங்கை சென்று பவுத்த சமயத்திற்கு மாறினார், அயோத்திதாசர். சென்னை பெரம்பூரில் மஹாபோதி சங்கம் நிறுவப்படுவதற்கும் காரணமாக இருந்தார். ஆனால் பவுத்த சமயத்தின் சடங்காச்சாரங்களோடும் ஒத்துப் போகமுடியாமல் தமக்கெனப் பூர்வ பவுத்த வழியைத் தேர்ந்துகொண்டார், அவர்.
இந்த மதமாற்ற விஷயத்தில் மிகவும் தெளிவாகவே இருந்திருக்கிறார், அயோத்திதாசர். பறையர் முதலான தலித்துகள் வேறு மதங்களுக்கு மாறுவதால் சாதிபேதம் அகலாது என்ற உறுதியான முடிவுக்கு அவர் வந்திருக்கிறார். வேறு மதங்கள் என அவர் இனங்காண்பது கிறிஸ்தவம், முகமதியம் ஆகிய மதங்களைத்தான். ஹிந்து சமயத்தைத்தான் பூர்வ பவுத்த மலைப் பாம்பாக விழுங்கத் தலைப்பட்டிருந்தாரே! சமணத்தையும் அவர் சுலபமாகச் செரித்துக் கொண்டார்.
1894 வாக்கில் பறையர் முதலான தலித்துகள் கிறிஸ்தவர்களாகவோ முகமதியர்களாகவோ மதம் மாறினால்தான் முன்னேற முடியும் என்று ஹானரபிள் ஸ்ரீநிவாச ஐயங்கார் என்பவர் அரசுக்கு ஆலோசனை கூறியிருக்கிறார். இதனை அயோத்திதாசர் வன்மையாகக் கண்டித்தார். வேலை வாய்ப்புகளிலும், பொருளாதார முன்னேற்றத்திற்கான முயற்சிகளிலும் தங்களுடன் பங்குக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகவே மற்றவர்கள் தலித்துகளை ஹிந்து மதத்திலிருந்து மாறச் சொல்கிறார்கள் எனக் கண்டனம் செய்தார். கிறிஸ்தவ, முகமதிய மதங்களுக்கு மாறுவதால் தலித்துகளுக்கு ஒரு பயனும் விளையாது என்றார். பிறகு என்னதான் பரிகாரம் ?
ஏற்றத் தாழ்வுகளற்ற, அனைவருக்கும் பொதுவான ஆதி சமயமான பூர்வ பவுத்தத்திற்கு தலித்துகள் மட்டுமின்றி அனைவருமே திரும்பிவிடலாம் என்கிறார், அவர். அயோத்திதாசர் அவர் வழியில் ஆய்வுகள் செய்து திருத்தியெடுத்த ஹிந்து சமயந்தான் பூர்வ பவுத்தம்.
ஆகையால் எவரும் அயோத்திதாசரை ஹிந்து சமயத்தைப் புறக்கணித்தவராகக் கொள்ளத் தேவையில்லை. ஆரிய சமாஜம் கண்ட தயானந்த சரஸ்வதி போலவும், பிரம்ம சமாஜம் நிறுவிய ராஜா ராம்மோஹன் ராய் போலவும், சமரச சுத்த சன்மார்க்கம் அமைத்த வடலூர் வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் போலவும் அயோத்திதாசரும் பூர்வ பவுத்தம் கண்ட சீர்திருத்தச் சிந்தனையாளர்தான் எனக் கொள்வதற்குத் தேவையான ஆதாரங்களை ராஜ் கவுதமன் இந்த நூலின் வாயிலாக நமக்குத் தந்து உதவுகிறார்.
ஹிந்து சமயத் தத்துவங்கள் அனைத்தையுமே சுவீகரித்துக் கொள்ளும் அயோத்திதாசர், சைவர்கள் பூசும் திருநீறான விபூதியின் மூலச் சொல் ‘மாபூதி ‘ என்கிறார். அது புத்தரின் அஸ்தியைக் குறிப்பது என விளக்குகிறார். வைணவர்கள் தொழும் திருமாலின் சங்கு சக்கரம் பவுத்த சங்கத்தையும் தர்மச் சக்கரத்தையும் குறிக்கும் என்கிறார். உபநிடதங்களை ஏற்றுக்கொண்டு, புதுப் பெயர்களும் விளக்கங்களும் கூறுகிறார். வேதங்களுக்கு வியாக்கியானம் தந்த ஆதி சங்கரரைக் கூட ‘சங்கஅறஆச்சாரியார் ‘ எனப் பதம் பிரித்து அது புத்தரின் நாமங்களுள் ஒன்று என்கிறார். ஹிந்துக்களின் சங்கராந்திப் பண்டிகையை சங்கர அந்தி எனப் பிரித்து, அது புத்தரின் மறைவு தினம் என்று நிறுவுகிறார். மரணம் என்பது மகா நிர்வாணம் ஆதலால் அதனை அனைவரும் மகிழ்ந்து கொண்டாட வேண்டும் என்று புத்தர் கூறியதை நினைவூட்டுகிறார்.
ஆக, அயோத்திதாசர் காலப் போக்கில் ஹிந்து சமயத்தில் படிந்துபோன கசடுகளைக் களைய முற்பட்டவரேயன்றி ஹிந்து சமயத்தைப் புறக்கணித்தவரல்ல என்று புரிந்துகொள்கிறோம். ஹிந்து சமயத்திற்கு ‘பூர்வ பவுத்தம் ‘ என்ற மாற்றுப் பெயரை அவர் சூட்டியுள்ளார் என்ற முடிவுக்கு நம்மால் வரமுடிகிறது. இந்த முடிவை எடுப்பதற்கு இந்த நூல் உறுதுணையாக உள்
ளது.
அயோத்திதாசர் காலத்திற்கு ஒவ்வாத, கைகழுவப்பட வேண்டிய சடங்காச்சாரங்களுக்கு ‘பிராமணியம் ‘ என்று பெயரிட்டு, அவற்றை மிகக் கடுமையாக விமர்சித்து வந்திருக்கிறார். எதற்கும் அடையாளப்படுத்துவதற்கு ஒரு பெயர் தேவைப்படுகிறது அல்லவாஹ அயோத்திதாசர் ‘பிராமணியம் ‘ என்று குறிப்பிடுவதை இப்படித்தான் அர்த்தப்படுத்திக் கொள்ளவேண்டும்.
‘சேரிப் பெண்கள் எல்லாம் ரவிக்கை போட்டுக்கொள்ளத் தொடங்கியதால்தான் துணி விலை ஏறிவிட்டது ‘ என்று விளக்கம் சொன்னார் ஒரு பெரியவர். இந்த மனப்போக்கைத்தான் அயோத்திதாசர் ‘பிராமணியம் ‘ என அடையாளப்படுத்தி அதனைக் கடுமையாக விமர்சித்தார். துணி விலை ஏறியதற்குச் சேரிப் பெண்கள் ரவிக்கை போட்டுக் கொள்ளத் தொடங்கிவிட்டதுதான் காரணம் என்று சொல்லுகிற அளவுக்கு மேலாதிக்க ஜாதியபிமானம் மிகுந்து தலித்துகளை இழிவுபடுத்தியவர், காலமெல்லாம் பிராமணிய எதிர்ப்புப் பிரச்சாரத்தை நடத்தி வந்தவரும், நம்மில் பலரால் ‘பெரியார் ‘ என்று கொண்டாடப் படுபவருமான திரு. ஈ.வே.ரா. அவர்கள்தான். ஆக, ‘பிராமணியம் ‘ என்ற பதப் பிரயோகம் யார்யாருக்கு, எப்படியெப்படியெல்லம் அடையாளப்படுகிறது என்பதை மற்றவர்களின் விவாதத்திற்கே விட்டுவிடலாம் .
அயோத்திதாசர் தமது பூர்வ பவுத்த ஆய்வுகளை வெளியிட்டு ஊரைக் கலக்குவதற்கு ‘தமிழன் ‘ என்ற இதழை நடத்தி வந்திருக்கிறார். மேடைகளிலும் பேசி கதி கலங்க அடித்திருக்கிறார். பரம சாதுவாக நாம் அறிந்த திரு.வி.கலியாண ஸுந்தரரே இளமைத் துடிப்பில்
அயோத்திதாசர் பேசிய கூட்டத்தில் குறுக்குக் கேள்வி கேட்டு இடையூறு செய்திருக்கிறார். ஆனால் பிற்பாடு அதற்காக மனம் வருந்தி, புத்த பகவானைப் போற்றிப் பேசி, அயோத்தி தாசரையும் புகழ்ந்துள்ளார் என்ற செய்தியை நூலாசிரியர் பதிவு செய்துள்ளார்.
அயோத்திதாசர் ஒரு மருத்துவராகவும் இருந்திருக்கிறார். சித்த வைத்தியத்தில் சிறந்து விளங்கிய அவர், திரு.வி.க. இளம்பிள்ளை வாதத்திற்கு இலக்கான தருணத்தில் உரிய சிகிச்சை அளித்துக் காத்ததையும் திரு.வி.க. நினைவு கூர்ந்து அயோத்திதாசருக்கு நன்றி
செலுத்தியதும் நூலில் பதிவாகியுள்ளது.
ஆண்டாண்டுக் கால ஒடுக்கப்படுத்தலின் காரணமாகக் கிளர்ந்த ஆத்திரத்தில் அயோத்திதாசர் தமது ஆய்வுகளைத் தடாலடியாகவே செய்திருக்கிறார். இதனை ராஜ் கவுதமனும் தமது நூலில் ஒப்புக் கொண்டிருக்கிறார். அயோத்திதாசரின் அதிரடியான ஆய்வு முடிவுகளைக் கண்டு நூலாசிரியரே அயர்ந்துபோய்விட்டிருக்கிறார். அவரே ஓர் ஆய்வாளராதலால் அவரால் இதனை ஒப்புக்கொள்ள முடிந்திருக்கிறது.
இந்த நூலின் குறிப்பிடத்தக்க அம்சம், அயோத்திதாசரின் கருத்துகளைக் குறிப்பிடும்போது, அவர் கையாண்ட மொழி நடையினையே ராஜ் கவுதமன் பதிவு செய்திருக்கிறார். இதன் பயனாக அன்றைக்கிருந்த வாசிப்புத் தமிழ், சமூகச் சூழல் ஆகியவற்றை நன்கு தெரிந்து அனுபவிக்க முடிகிறது.
எண்பது ஆண்டுகளுக்குப் பிறகு அயோத்திதாசர் தமிழ்ச் சிந்தனாவுலகில் பூமியைப் பிளந்துகொண்டு வெளியே வந்திருப்பதற்கு ஞான. அலாசியஸ் என்பவர் காரணம் என்று நூலாசிரியர் குறிப்பிடுகிறார். ஆனால் 2003 வரை, ஏறத்தாழ எண்பது வயதுவரை நம்மிடையே வாழ்ந்தும், நம்மால் சரியாக அடையாளம் காணப்படாமலேயே மறைந்துவிட்ட அன்பு. பொன்னோவியம் என்ற தலித் சிந்தனையாளரும் அயோத்திதாசரை நாம் அறிந்துகொள்ள ஒரு கருவியாக இருந்துள்ளார். நூலை எழுதிய சந்தர்ப்பத்தில் கவுதமனுக்கு இத் தகவல் தெரியாமல் போயிருக்கக் கூடும். அடுத்த பதிப்பில் இந்தக் குறையை அவர் சரி செய்ய வேண்டும் என்பது எனது விருப்பம்.
ராஜ் கவுதமன் மிகவும் மனமொன்றி இந்நூலை இயற்றியிருக்கிறார். எனவேதான் இது மிகத் தரமானதாக வெளியாகியுள்ளது. புத்தகங்களின் கட்டமைப்பும் அச்சும் மிகச் சீராக அமையுமாறு புத்தகங்களை வெளியிடும் பதிப்பகங்களுள் காலச் சுவடு குறிப்பிடத்தக்கது. ஆதலால் இந்நூல் உள்ளடக்கத்திற்கு இணையாக வெளித்தோற்றத்திலும் சிறப்பாக அமைந்துள்ளது.
இறுதியாக இந்த நூலின் உள்ளடக்கம் மிகச் சிறப்பாக அமைந்தமைக்கு நான் கருதும் இன்னொரு காரணம் என்னவென்பதையும் பதிவு செய்துவிட விரும்புகிறேன்:
தன்னைப் பறையன் என்று தலை நிமிர்ந்து சொல்லிக்கொள்வதில் பெருமைப்படும் ராஜ்கவுதமன், ரோமன் கத்தோலிக்கக் கிறிஸ்தவராகப் பிறந்து, ஹிந்து சமயத்திற்குத் திரும்பி,அதன் பின் பவுத்தரானவர். தனது வாழ்க்கைச் சரிதத்தையே ‘சிலுவைராஜ் சரித்திரம் ‘ என்ற தலைப்பில் அவர் எழுதியிருப்பதைப் படித்து மகிழ்ந்த பல வாசகர்களில் நானும் ஒருவன் என்பதையும் இங்கு குறிப்பிட்டு, ‘க. அயோத்திதாசர் ஆய்வுகள் ‘ என்ற நூலைத் தந்து நம்மையெல்லாம் சிந்திக்கத் தூண்டியமைக்காக அவருக்கு எனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்து இந்தத் திறனாய்வை நிறைவு செய்கிறேன்.
இந்த நேரத்தில் இன்னுமிரண்டு விஷயங்களைக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன்.
முதலாவதாக, அயோத்திதாசர் பற்றிச் சிறு கட்டுரை எழுதி அவர் பெருமையைச் சுருக்கமாக எடுத்துக் கூறிய ஆர். பி. முருகேசன் அவர்களுக்கும் அதனை வெளியிட்டுச் சிறப்பித்த ‘ஒரே நாடு ‘ இதழுக்கும் எனது நன்றியும் பாராட்டும்.
அடுத்து, பொற்றாமரை கலைஇலக்கிய ஆய்வரங்கத்திற்கு ஒரு வேண்டுகோள்:
சென்னை தாம்பரத்தில் சமீபத்தில் திறக்கப்பட்ட தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையத்திற்குச் சிறந்த சித்த வைத்திய ஆய்வாளராகவும் விளங்கிய அயோத்திதாசரின் பெயரைச் சூட்டுமாறு வின்ணப்பிக்கும் தீர்மானத்தை இக்கூட்டத்திலேயே நிறைவேற்றி, மைய அரசின் சுகாதார அமைச்சகத்திற்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறான வேண்டுகோள் ஒன்றை பாரதப் பிரதமருக்கு விடுக்குமாறு தமிழக முதலமைச்சரைக் கேட்டுக்கொள்வதாகவும் தீர்மானம் அமைவது சிறப்பாக இருக்கும்.
தற்சமயம் புற நோயாளிகள் பிரிவுக்கு மாத்திரமே அயோத்திதாசர் பெயரிடப்பட்டிருப்பதாக அறிகிறேன். இப்படி அரைக் கிணறு தாண்டாமல் மையம் முழுவதுமே அவர் பெயரால் அறியச் செய்வதுதான் முறையாக இருக்கும்.
முற்றும்
—-
malarmannan97@yahoo.co.uk
- வனத்தின் அழைப்பு – அஸ்வகோஸ்: ‘மகனும்,ஈ கலைத்தலும் ‘ (சிறு குறிப்பு)
- காலத்தை எரித்த சுடர் தொலைவிலிருக்கும் கவிதைகள் – சுந்தர ராமசாமியின் மொழிபெயர்ப்புக் கவிதைகள் அறிமுகம்
- சுப்ரபாரதி மணியனின் ஆதாரக்கவலைகள்
- சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – IV
- சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – III
- காளபைரவி, நாகவல்லி, சந்திரமுகி மற்றும் கொஞ்சம் உங்
- நியூ யார்க் திரைப்படவிழாவில் ‘ஒருத்தி ‘ திரைப்படம்
- வானகமே. . வையகமே. . .சுற்றுச் சூழலுக்கென்று முதன் முதலாக தமிழில் நடத்தப்படும் இலவச இரு மாத இதழ்
- புஷ்ஷாரே இணையகுசும்பனின் இலவசச் சேவை
- வெள்ளமும் நிவாரணமும்
- ராஜ் கவுதமன் எழுதிய ‘க. அயோத்திதாசர் ஆய்வுகள் ‘: ஒரு திறனாய்வு
- 108 வது கவிதை எங்கே ?
- ‘சொற்களிடமிருந்து மெளனங்களுக்குள் ‘
- மலேசிய இலக்கிய நிகழ்வுகள்
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஜோன் எரிக்கப்பட்டு 25 ஆண்டுகள் கழித்து) (ஏழாம் காட்சி பாகம்-2)
- சோபா சக்தி: ‘ம் ‘ – அதிகாரம் கோலாச்சும்போது ‘ம் ‘ மக்கள் மொழியாகும்! ‘…. ‘, ம்…. ஆமா,ஓம்-ஓம்! ம்….இது ?
- சுந்தர ராமசாமியின் வாழ்க்கை -படிமங்கள் நிறைந்த அழகிய கவிதை!
- ஜெயமோகனின் காடு
- நைல் நதி நாகரீகம், எகிப்தின் உன்னத ஓவியக் கலைத்துவம் -5 (Ancient Great Egyptian Paintings)
- கீதாஞ்சலி (47) – எழிலான வளைகாப்பு! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- பெரியபுராணம் – 63 -29. பெருமிழலைக் குறும்ப நாயனார் புராணம்
- காட்சில்லா
- முரண்
- தீபாரயா
- நியூயார்க் நியூயார்க்
- அடித்து நொறுக்க வேண்டாமா ஆண்கள் படைத்த உலகை. ?
- மறுபக்கம்
- காலை