ரமேஷ் மெய்யப்பனின் புதிய நாடகம் ‘இந்த பக்கம் மேலே ‘(This Side Up)

This entry is part [part not set] of 27 in the series 20050930_Issue

ரெ பாண்டியன்


முன்னோட்டம்

****

ரமேஷ் மெய்யப்பனின் புதிய நாடகம் ‘இந்த பக்கம் மேலே ‘(This Side Up)

தேதி : 7,8 அக்டோபர் 2005, இரவு 8 மணி

இடம் : Necessary Stage BlackBox, Marine Parade Community Building,

278, Marine Parade Road, #B1-02 ,Singapore

கட்டணம் : $20/-

****

காது கேளாததால் குறைந்துபோன பேச்சுமொழி பரிமாற்றங்களை ஈடுசெய்ய, ரமேஷ் சிறு வயதிலேயே இன்னொரு

மொழியை தேர்ந்தெடுத்துக்கொண்டார். தனது நெற்றி, புருவம், உதடு, கன்னம், தாடை, கழுத்து, தோள், முதுகு,

விரல்கள், இடுப்பு ஆகிய அசைவுகளின் வேகம், விட்டேற்றி, இறுக்கம், தளர்ச்சி, துடிப்பு, இயலாமை, உல்லாசம்,

தடுமாற்றம் ஆகியன கொண்டு ஒரு உடல்மொழியை உருவாக்கினார்.

இந்த உடல்மொழியை அவர் முதலில் நாடக விமர்சகர்களிடமோ கலாரசிகர்களிடமோ செய்துகாட்டவில்லை.

பள்ளிக் குழந்தைகள் முன் பரீட்சீத்துப் பார்த்தார். ஏனெனில், குழந்தைகள் எப்பொழுதும் நேர்மையான ரசிகர்கள் –

ஒரு விஷயம் அவர்களது கவனத்தை கவராவிட்டால், அதை வெளிப்படையாகவே நமக்கு உணர்த்திவிடுவார்கள்.

ரமேஷ் தனது நிகழ்த்துதலை காட்சி அரங்கு(visual theatre) என்று குறிப்பிடுகிறார். தினசரி மனிதர்களின்

உடல்மொழியைக் கொண்டும் நாட்டிய அடவுகளையும் கொண்டும் விகட நடிப்புமுறையைக்(mime) கொண்டும்

இந்த அரங்கை அவர் உருவாக்குகிறார்.

தன்னுடைய நிகழ்த்துதல் தனது ஊனத்தை மீறும் ஒரு சக்தியாக – தமது நண்பர்கள், காது கேளாதோர் சமூகம்,

பிற கலாச்சாரத்தவர்கள் அனைவரையும் சென்றடைவதற்கான ஒரு குரலாய் அது அமைவதாக சொல்கிறார் ரமேஷ்.

ஆனால், காதுகேளாதவர்களின் சைகைமொழியை அவர் தனது நாடகங்களில் பயன்படுத்துவதில்லை. காது கேளாதவர்களுக்கான தனியான அழகியலை உருவாக்கினால், அது காது கேளாதவரை இன்னும் தனிமைப்படுத்தும்

என்பதால் அதில் தனக்கு விருப்பமில்லை என்கிறார் ரமேஷ்.

இங்கிலாந்து, ப்ரான்ஸ், ஆஸ்திரியா, நியூசிலாந்து, ஸ்காட்லாந்து என்று பல நாடுகளில், பல மொழிபேசுவோரிடத்தில்

தனது நிகழ்த்துதலை அவர் அரங்கேற்றியுள்ளார். இணையத்தில், ரமேஷின் அரங்கைப்பற்றி பல்வேறு மொழிகளில்

விமர்சனங்கள் இடம்பெற்றுள்ளன. பல்வேறு பல்கலைக் கழகங்களிலிருந்தும் நடிப்புப்பயிற்சி பற்றி பட்டறைகள் நடத்த அழைப்புகள் அவருக்கு வந்த வண்ணமிருக்கின்றன. அண்மையில் இடம்பெற்ற பிபிசி தொலைக்காட்சி நிகழ்ச்சியில்

ரமேஷ் மெய்யப்பன் ஐரோப்பாவில் காது கேளாதோருக்கான கலைகள் மற்றும் கலாச்சாரத்தில் பாதிப்பை நிகழ்த்திவரும் மேடைக்கலைஞராக சிறப்பிக்கப்பட்டார்.

ரமேஷின் புதிய நாடகம் ‘இந்த பக்கம் மேலே ‘. நவீன நகர்புற வேலை வாழ்க்கையின் மந்தகதியிலிருந்து விலகி

நகரின் பூங்காவிற்கு தாரைவார்க்கப்பட்ட கொஞ்சம் இயற்கையைத் தேடி ஒருவன் செல்லும்போது, வழியில்

அவனுக்கு ஏற்படும் அனுபவங்களையும் இயற்கையை முழுவதுமாக எதிர்கொள்ளாத முடியாத அவனது

இயலாமையையும் அனுபவமின்மையையும் பற்றி நாடகம் பேசுகிறது. இந்த நாடகத்தில் வரும் அத்தனை

கதாபாத்திரங்களையும் ரமேஷ் ஒருவரே செய்கிறார். ஓரிடத்தில் துரத்தும் நாயாகவும், துரத்தப்படும் மனிதனாகவும்

துல்லியமான கணங்களில் லாவகத்துடன் மாறி மாறி பாத்திரமேற்கும் ரமேஷின் செய்திறன் இந்த நாடகம்

மேடையேறிய பல நாடுகளில் அவருக்கு பெரும் வரவேற்பையும் பாராட்டையும் மதிப்பையும் பெற்று தந்துள்ளது.

ரமேஷ் தென்னிந்தியாவில் பிறந்தவர் . காதுகேளாத சிறுவனுக்கு எதிர்காலம் சிங்கப்பூரில்தான் என்று தந்தையார்

முடிவு செய்ததால், சிறுவயதிலேயே அவர் பெற்றோருடன் சிங்கப்பூர் வந்து சேர்ந்தார். அவரது பால்ய பருவத்தில்,

காது கேளாத குழந்தைகளுக்கு தமிழ் சொல்லிக்கொடுக்கும் பள்ளிக்கூடம் எதுவும் இல்லை. ஆதலால், அவர் தமிழ்

படிக்கமுடியாமல் போனது. அவர் கற்றது ஆங்கிலமும் அமெரிக்க சைகை மொழியும். இங்கிலாந்தின் லிவர்பூல் பல்கலைக்கழகத்தின் கலைத்துறையில் சிறப்பு தேர்வு பெற்ற முதல் காது கேளாதவர் இவரே.

உங்களது ரசிகர்கள் உங்களை எவ்வாறு நினைவு வைத்துக்கொள்ளவேண்டும் என்று அவரைக் கேட்டபோது, ‘காபியும் சிறுபேச்சிலுமாக இருந்தவர்கள் ஆர்வத்தில் திரும்பிப் பார்ப்பதாய் எனது நிகழ்த்துதல் இருக்கவேண்டும். என் புதிய

நாடகத்தைப் பார்த்துவிட்டு அவர்களில் சிலராவது உள்ளுக்குள் சிரித்துக்கொண்டால், எனக்கு திருப்திதான் ‘ என்றார்.

வெறுமனே மனதுக்குள் சிரித்துவிட்டுப் போனால் போதுமா என்றேன். ‘அந்த மனதுக்குள் சிரிப்பதை குறைத்து

நினைக்கவேண்டியதில்லை; அதுதான் ஒரு புதிய தினத்தை சாத்தியமாக்குகிறது; கவலைகளை உதறச் செய்வதும்

அதுதான்; நகைச்சுவைகளில் உள்ள அங்கதம்தான் நம்மிடம் ஒரு எண்ணத்தை விதைத்து, மறைமுகமாக நம்மை நாமே கேள்வி கேட்கவும் விவாதிக்கவும் தூண்டுகிறது ‘ என்கிறார் பார்வையாளர்களுக்கு எப்படி ஓசையற்ற கைதட்டலை

செய்வது என்பதை தனது நிகழ்வுக்கும் முன்பு செய்து காட்டும் ரமேஷ் மெய்யப்பன்.

****

pandian_rethinam@sembdc.com.sg

Series Navigation

ரெ.பாண்டியன்

ரெ.பாண்டியன்