எஸ். இராமச்சந்திரன்
அண்மையில் தமிழகத்தில் நிகழ்ந்த மூன்று வெவ்வேறு தன்மையுடைய நிகழ்ச்சிகளுக்கிடையே ஒரு குறிப்பிட்ட கவலைக்குரிய அம்சம் அடங்கியிருப்பதாகக் கருதுகிறேன். அந்தக் கவலைக்குரிய அம்சம் பற்றி விரிவாக எடுத்துரைக்க விரும்புகிறேன்.
முதலாவதாக, இந்திய நாடாளுமன்றத்தின் மீது நிகழ்ந்த தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளியாக உச்சநீதி மன்றத்தின் முன் நிறுத்தப்பட்டுத் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட அப்துல் பசல் குரு பற்றிய பிரச்சினை. தமிழக முதல்வர் திரு. மு. கருணாநிதி அப்துல் பசலுக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையைச் சிறைத் தண்டனையாகக் குறைப்பதே சரியானது என்ற கருத்தைத் தெரிவித்துள்ளார். தூக்குத் தண்டனையை நிறைவேற்றினால் ஓரிரு நிமிடங்களில் அப்துல் பசலின் உயிர் பிரிந்துவிடும். ஆனால், சிறைத் தண்டனை மூலம் அவரைத் திருத்தி நல்ல மனிதனாக வெளியில் கொண்டுவருவதுதான் சரியான வழிமுறை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் இவ்வாறு குறிப்பிடதற்குப் பிறகு, அப்துல் பசலுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத்தண்டனையை நிறைவேற்ற விடாமல் தடுத்து விடவேண்டும் என்ற உள்நோக்கத்துடன் மரணதண்டனை எதிர்ப்புக் கருத்தரங்களும் தமிழகத்தில் சில அமைப்புகளால் நடத்தப்பட்டுள்ளன. சென்னையில் நடந்த அத்தகைய கருத்தரங்கு ஒன்றில் பார்ப்பன எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பப்பட்டு (மரண தண்டனை ஒழிப்புக்கும் இத்தகைய கோஷங்களுக்கும் என்ன தொடர்பு என்பது வேதியியல் தொடர் நிகழ்வுகள் போன்ற ஒரு சிக்கலான பிரச்சினை என்பது அனைவரும் அறிந்ததே) அந்தக் கூட்டம் கூச்சல் குழப்பத்தில் முடிந்ததாகச் செய்தி வெளிவந்திருந்தது.
அடுத்ததாக, திருவரங்கத்தில் அரங்கநாதப் பெருமாள் கோயில் ராஜகோபுரத்துக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த கான்க்ரீட்டிலான பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக இந்து மக்கள் கட்சி என்ற இயக்கத்தைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டனர். அக்கட்சியின் மாநிலச் செயலாளரான ஜெயசங்கர் என்பவர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் வகுப்பு மோதல்களைத் தூண்டுகின்ற வகையில் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன என்ற அடிப்படையில் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவர் சிறையில் அடைக்கப்படுவார் எனச் சென்னை நகரக் காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார் என்ற செய்தியும் நாளிதழ்களில் வெளிவந்துள்ளது .
மூன்றாவதாக பல்வேறு கொலை, ஆள்கடத்தல்களில் தொடர்புடைய சென்னை நகரைச் சேர்ந்த தாதா ஒருவரைச் சென்னைப் புறநகர்ப் பகுதியான திருநீர் மலையை அடுத்த சங்கர் நகர் பகுதியில் காவல் துறையினர் சுட்டுக் கொன்றதாகச் செய்திகள் வந்துள்ளன.
இம் மூன்று செய்திகளிலுமே, முதல்வர் கருணாநிதி நேரிடையாகத் தொடர்புபட்டுள்ளார். முதலாவதாகக் குறிப்பிடப்பட்ட செய்தியில் முதல்வரே நேரடியாக இடம்பெற்றுள்ளார். அப்துல் பசலுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையைக் குறைத்துச் சிறைத் தண்டனை வழங்கவேண்டும் எனத் தெரிவித்தவர் அவர். மற்ற இரண்டு செய்திகளிலும் காவல்துறை நேரடியாகத் தொடர்புபட்டுள்ளது. காவல்துறை முதலமைச்சரின் கட்டுப்பாட்டிலுள்ளது.
இந்த மூன்று நிகழ்வுகளிலும் இருக்கக்கூடிய அடிப்படையான முரண்பாடு ஏன் தமிழ்நாட்டிலுள்ள எந்தப் பத்திரிகையாளருக்கோ, ஊடகத் துறையினருக்கோ புலப்படவில்லை என்பது வியப்பிற்குரியது. தூக்குத் தண்டனை ரத்து செய்யப்படவேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வரும் ஹிந்து ஆங்கில நாளிதழ், 16-12-2006 சென்னை நகரச் செய்திகள் பகுதியில் (பக்கம் 3) சட்டம் ஒழுங்கு குறித்த பத்தியில் சென்னை தாதா காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதைப் பாராட்டியுள்ளதோடு இத்தகைய நடவடிக்கைகள் தொடரவேண்டும் என்ற தனது விருப்பத்தையும் செய்தியாக வெளியிட்டுள்ளது. நாடாளுமன்றத் தாக்குதலில் தொடர்புடைய , தேசத்துரோக சதிச்செயல் புரிந்த ஒரு குற்றவாளியைக்கூடச் சிறையில் வைத்துத் திருத்தி நல்ல மனிதனாக (வாராவாரம் கோழிக்கறி கொடுப்பதுகூடத் திருத்தும் நடவடிக்கையில் ஓர் அம்சமே போலும்) வெளியில் அனுப்ப வேண்டும் என்று கூறுகிற அளவுக்குக் கருணை உள்ளம் படைத்த ஒரு முதல்வர் சென்னை நகர தாதா ஒருவருக்கு மட்டும் அந்த வாய்ப்பை வழங்க மறுத்தது ஏன் என்பதுதான் புரியாத விஷயமாக இருக்கிறது.
மத்திய அரசு எடுக்கக்கூடிய பல முடிவுகளை நிர்ணயிக்கிற அதிகாரமும் செல்வாக்கும் தமிழக முதல்வரைச் சார்ந்துள்ள கட்சிக்குத்தான் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனாலும் மத்திய அரசோ, குடியரசுத் தலைவரோ கருத்தளவில் தமிழக முதல்வரின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டவர்கள். தமிழகக் காவல்துறை அப்படிப்பட்டதல்ல. முற்ற முழுக்கத் தமிழக முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கும் துறையாகும். சென்னை நகர தாதாவின் தாக்குதல்களை எதிர்கொள்ள நேர்ந்தாலும், அவரைக் கொன்றுவிடாமல் உயிருடன் சிறைப்பிடித்து நீதிமன்றத்தின் முன் நிறுத்தி விசாரித்து உரிய தண்டனை வழங்கிச் சிறையிலடைத்துச் சிறைத்தண்டனையின் மூலம் அவரை நல்ல மனிதனாக மாற்றி வெளியே விடுகின்ற வாய்ப்பும், அதிகாரமும் முதலமைச்சரிடம்தாம் உள்ளன. அந்த வாய்ப்பையும் அதிகாரத்தையும் அவர் ஏன் பயன்படுத்தவில்லை என்பதுதான் நமது கேள்வி.
திருவரங்கம் பெரியார் சிலை விவகாரம் என்பது ஏதோ சிலரின் உணர்ச்சி வேகத்தில் நடந்துவிட்ட ஒன்றல்ல. 1970ஆம் ஆண்டிலிருந்தே ஸ்ரீரங்கம் கோயில் கோபுரத்துக்கு முன்னால் அந்தக் குறிப்பிட்ட இடத்தில்தான் சிலையை வைக்க வேண்டுமென்று திராவிடர் கழகத்தினர் முயன்று வந்துள்ளனர். இத்தனைக்கும் அந்த இடம் அதற்கு முன்பு அந்த இயக்கத்தினருக்கு உரிய இடமன்று. 1972இல் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, அப்போது இருந்த ஆட்சியை ஆதரித்த இயக்கத்தினர் நிலத்தைப் பெற்றனர். கோயில் கோபுரத்துக்கு மிக அருகில் அந்தச் சிலையை வைக்க வேண்டுமென்று அந்த இயக்கத்தினர் வலியுறுத்தி வந்ததன் நோக்கம் என்னவாக இருக்கும்? திருவரங்கத்திலேயே வேறு இடம் கிடைக்கவில்லையா?
இது ஜனநாயக நாடு, ஒரு பெரிய தலைவரின் சிலையை வைப்பதற்கு இன்னின்ன இடங்கள் தகுதியற்றவை என்றெல்லாம் சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்பது அந்த இயக்கத்தினரின் வாதமாக இருக்கலாம். ஆனால், அந்தச் சிலையின் பீடத்தின் கீழ் கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், பரப்பியவன் அயோக்கியன், வணங்குபவன் காட்டுமிராண்டி என்பன போன்ற கடுமையான (அவதூறு பரப்புபவை என்று கருதத்தக்க) வாசகங்களைப் பொறித்து வைத்தால் அது நியாயமான செயலாக இருக்க முடியுமா? அது மட்டுமல்ல, ஜாதி துவேஷங்களைத் தூண்டுகிற, புண்படுத்துகிற வாசகங்களை ஈ.வே.ரா. பெரியார் சிலையின் பீடத்தில் பொறித்து வைக்கும் வழக்கம் இருந்தது என்பதற்கும் சில உதாரணங்களைக் குறிப்பிடமுடியும், கும்பகோணம் பழைய பேருந்து நிலையத்தின் முன்னர் அமைச்சர் கோ.சி. மணியால் திறந்து வைக்கப்பட்ட சிலையில் “பார்ப்பானை பிராமணன் என்று அழைக்காதீர்” என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. தஞ்சை பழைய பேருந்து நிலையத்தின் அருகில் நிறுவப்பட்டுள்ள பெரியார் சிலையில் “தமிழர் கடன் பார்ப்பானைத் தரைமட்டம் ஆக்குவதே” என்ற பாரதிதாசனின் பாடல் வரி இடம்பெற்றுள்ளது. இத்தகைய வாசகங்கள் சாதி ஒழிப்பு என்ற சமூகச் சீர்திருத்தச் செயல்பாட்டிற்கு உறுதுணையாக நிற்கக்கூடியவை என்பது அந்த இயக்கத்தினரின் வாதமாக இருக்கலாம். ஆனால், இத்தகைய வாசகங்கள் வகுப்புகளுக்கிடையே மோதலைத் தூண்டக்கூடியவை என்றும் சட்டபூர்வமாக வாதாட இயலும்.
திருவரங்கம் கோயில் தெற்குக் கோபுரத்திற்கு மிக அருகில் நிறுவ முற்பட்ட பெரியார் சிலையின் பீடத்தில் எத்தகைய வாசகங்கள் இடம்பெற உள்ளன என்பது நமக்குத் தெரியவில்லை. கடவுள் மறுப்பு வாசகங்கள் முன்னர் அந்த இடத்தில் கல்லில் பொறித்து வைக்கப்பட்டிருந்தன எனத் தெரிகிறது. ஆயினும் சிலை நிறுவுவதற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் சிலை நிறுவுபவர்களின் நோக்கம் குறித்த நமது ஐயத்தை வலுப்படுத்தவே செய்கின்றன. இந்தச் சிலை இந்த இடத்தில் நிறுவப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கான்க்ரீட்டால் அமைந்த அச்சிலையின் தலைப்பகுதியைச் சிலர் சேதப்படுத்தியிருக்கிறார்கள். சேதப்படுத்தியவர்கள் என்று சிலர் காவல்துறையினரால் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் திரு. ஜெயசங்கர் திருவரங்கம் கோயில் கோபுரத்துக்கு முன்னர் பெரியார் சிலை வைக்கப்படுவதை எதிர்த்து வெளியிட்ட அறிக்கை சற்றுக் காட்டமாக அமைந்திருந்தது என்பது உண்மையே. ஆனால் வகுப்புகளுக்கிடையே மோதலைத் தூண்டிவிடக்கூடிய ஓர் அறிக்கை என்றுஅதனை எவ்வாறு பொருள்படுத்தினார்கள் என்பதுதான் நாம் அறிய விரும்புகின்ற மர்மம்.
தான் சார்ந்திருக்கிற அல்லது செல்லம் கொஞ்சிக் கொண்டிருக்கின்ற கொள்கைகளுக்கு எதிராக யார் பேசினாலும் அவர்கள் வகுப்புகளுக்கு இடையே மோதலைத் தூண்டுபவர்கள் என்பதுதான் முதல்வர் கருணாநிதி வகுத்து வைத்திருக்கின்ற இலக்கணம் போலும். இந்திய இறையாண்மை என்பது இவர் செல்லம் கொஞ்சுகிற ஒன்றல்ல. எனவே, அதற்கு எதிராகச் செயல்படுகின்றவர் யாராக இருந்தாலும் – இஸ்லாமிய பயங்கரவாதி அப்துல் பசலாக இருந்தாலும் சரி, சந்தனக் காட்டுக் கடத்தல் மன்னன் வீரப்பனாக இருந்தாலும் சரி – அவர்கள் இவருக்கு வேண்டியவர்களே. சுட்டுக் கொல்லப்பட்ட சென்னை தாதாகூட நேற்றுவரை இவர்களுக்கு வேண்டியவராகத்தான் இருந்தார் என்று ஜூனியர் விகடன் போன்ற இதழ்களில் வெளிவந்த செய்திகள் மூலம் தெரியவருகிறது. இவருக்கு வேண்டியவர்கள் யாரிடமோ அந்த தாதா இடம் தெரியாமல் மோதிவிட்டார் போலும் அல்லது இனி அந்த தாதா இவர்களுக்குப் பயன்படமாட்டார் போலும். அதனால் அவருடைய காலம் முடிவுற்றுவிட்டது.
மத்தியிலும் நாங்களே, மாநிலத்திலும் நாங்களே, ஊராட்சியிலும் நாங்களே, ஊடகங்களிலும் நாங்களே என்ற சர்வ அதிகார நிலையை எய்திய பின்னரும்கூட, மாற்றுக் கருத்து கொண்டவர்களையோ, மாற்று முகாம்களில் இருப்பவர்களையோ சகித்துக் கொள்ளாத இத்தகைய மனநிலையை என்ன பெயரிட்டு அழைப்பது? அதிகார வெறியும் ஆசை வெறியும் ஒன்றுதான். மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்று முன்னோர்கள் குறிப்பிட்டது இத்தகைய ஓர் அதிகார வெறிபிடித்த மனநிலையைத்தான். அதிகாரம்; மேலும் மேலும் அதிகாரம் – ஆம் அதுதான் சர்வாதிகாரம்.
தாயுமானவரின் பாடல் ஒன்றுதான் நினைவுக்கு வருகிறது. அந்தப் பாடலைச் சொல்லி யாவது மனச் சமாதானம் பட்டுக்கொள்வோம்:
ஆசைக்கோர் அளவிலை அகிலமெலாம் கட்டி ஆளினும் கடல் மீதிலே
ஆணை செலவே நினைவர் அளகேசன் நிகராக அம்பொன் மிக வைத்தபேரும்
நேசித்து ரசவாத வித்தைக்கலைந்திடுவர் நெடுநாள் இருந்த பேரும்
நிலையாக வேயினும் காயகற்பந்தேடி நெஞ்சு புண்ணாவரெல்லாம்
யோசிக்கும் வேளையில் பசிதீர உண்பதும் உறங்குவதுமாக முடியும்
உள்ளதே போதும் நான் நானெனக் குளறியே ஒன்றைவிட் டொன்று பற்றிப்
பாசக் கடற்குளே வீழாமல் உறவற்ற பரிசுத்த நிலையை அருளாய்
பார்க்குமிடமெங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற பரிபூரணாநந்தமே.
maanilavan@gmail.com
- திண்ணை
- திருக்குறள் ஒரு சமண நூல்தான்
- காதல் நாற்பது எலிஸபெத் பாரட் பிரௌனிங் (1806-1861)
- தி. ஜானகிராமனின் மோகமுள்
- அவள் நடந்த பாதையிலே – சாருஸ்ரீ அவர்களின் ‘நான் நடந்த பாதையிலே’
- அவதூறு பரப்புதல் ஆய்வாகாது
- இப்படியும் ஒரு தமிழரா ?
- ஐயாசாமியும் தெனாலிராமனும்
- பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 1
- உயிர்மை பதிப்பகத்தின் 12 நூல்கள் வெளியீட்டு விழா
- ஈசனுக்கு மறக்குமா அவள் தாட்சாயினி என்பது
- பழைய மொந்தையில் பழைய கள்
- ஸ்ரீ ஸ்ரீ யின் அரசியல்
- பொ. கருணாகரமூர்த்தியின்இருநு}ல்கள் வெளியீடு.
- ப்ரவாஹனின் தொடரும் “போலி சாதி ஒழிப்பு” பிரச்சாரங்கள்
- கடித இலக்கியம் – 37
- வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 16
- ஆளுடையப்பிள்ளையின் புதியன படைத்த திறம். (பதிக எண் 71 முதல் பதிக எண் 80 வரை)
- கடவுளைப் பற்றிய கருத்தாடல்களும் கதைசொல்லல்களும்
- இலை போட்டாச்சு 7 – எள்ளுப் பொடி
- நுண் துகள் உலகம்
- காதல் நாற்பது (1) – உன்னை நேசிப்பது எவ்விதம் ?
- பெரியபுராணம் – 117 ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.
- நடை பாதை
- யோசிக்கும் வேளையில்…
- போப் வாயாலேயே பொய்த்துப் போன புனித தோமையார் கதை
- இஸ்லாமிய சோசலிசம்
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:9) கிளியோபாத்ரா எகிப்துக்கு மீளல்.
- மஜ்னூன்
- மடியில் நெருப்பு – 17
- நீர்வலை (3)