‘யூமா வாசுகியிலிருந்து சமுத்திரம் வரை’ – விமர்சனக் கட்டுரைகள்

This entry is part [part not set] of 29 in the series 20091129_Issue

வே.சபாநாயகம்


‘தலைப்பே படிக்கத் தூண்டுவதாக இருக்க வேண்டும்’ என்பார்கள். அப்படி ‘எனி இந்தியன் பதிப்பகம்’
வெளியிட்டுள்ள வெங்கட்சாமிநாதனின் இந்த விமர்சனத் தொகுப்பின் தலைப்பும் உள்ளே நுழையத் தூண்டுகிறது.
ஒரு புதிய எழுத்தாளர் தொடங்கி புகழ்பெற்ற மூத்த எழுத்தாளர் வரை தமிழ் இலக்கியப் படைப்புகளின் பரிணாம
மாற்றங்களைச் சொல்வதாக இருக்கும் என்று கருதி உள்ளே நுழைந்தால் மேற் சொன்ன இருவரையும் உள்ளடக்கிய, பல்வேறு சந்தர்ப்பங்களில் தானாகவும் – அவரே தலைப்பினடியில் குறிபிட்டுள்ளபடி ‘கேட்டீர்கள், சொல்கிறேன்’ என்று – கேட்கப்பட்டும் எழுதப்பட்ட விமர்சனக் கட்டுரைகள் என்று தெரிய வருகிறது. தலைப்பு பற்றிய நமது குழப்பத்தை எதிர் பார்த்தே வெ.சா தனது முன்னுரையில் (முன்னுரையே ஒரு சுவாரஸ்யமான கட்டுரை) எழுதுகிறார்: ‘யூமாவாசுயிலிருந்து’ – என்று நான் இத்தொகுப்பின் தலைப்பைத் தொடங்குவது ஒரு கோட்டின் தொடக்கத்தைக் குறிக்க. சு.சமுத்திரம் அக்கோடு முடியும் புள்ளி. இக்கோட்டைப் பலவாறாக அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். இதன் பல நிலைகளில்,
பரிமாணங்களில் பலவும் உண்டு. வண்ணங்களில், தரும் சுவாரஸ்யத்தில், எழுத்துத்திறனில், இலக்கிய நோக்கில்
தான் பெற்ற அனுபவத்திலிருந்து அர்த்தம் பெறப்படுகிறதா அல்லது வெளியிலிருந்து பெற்ற அர்த்தம் அந்த அனுபவத்துக்குள் திணிக்கப்படுகிறதா என்று பலவாறாக அவரவர் பார்வைக்கேற்றவாறு பொருள் கொள்ளலாம்’.

இப்படி ஒரு விளக்கம் தருவதற்கு, தொடர்ந்து அதே முன்னுரையில் அவர் தன்னைப்பற்றி சொல்கிற –
‘நான் பிறக்கும்போதே சங்கிலிப் பிணைப்புடன் பிறந்தவன். சாதி மற்றவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள குண்டாந்தடி.
அதை நான் மறந்தாலும் மற்றவர்கள் மறப்பதில்லை. அதெப்படி மறப்பார்கள்? அதுதான் அவர்களுக்குக் கிடைத்த
வலுவான ஆயுதமாயிற்றே, என் சுதந்திரப் போக்குப் பிடிக்காதவர்கள் என்னை தாக்க’ – என்கிற சுய பச்சாதாபமும்
காரணமாக இருக்கக்கூடும். ஆனால் நடுநிலையான சிந்தனையுள்ள வாசகர்கள் – அவர் அகிலனையும், வல்லிக் கண்ணனையும், தி.க,சியையும், சமுத்திரத்தையும், தன்னை விமர்சிக்கிற ச.தமிழ்ச்செல்வன் போன்ற இன்னும் சிலரையும் கடுமையாய்த் தாக்கினாலும், தன்னைக் கடுமையாய்த் தாக்கும் சோலை சுந்தரப் பெருமாள் போன்றவர்களின்
‘தப்பாட்டம்’ போன்ற தரமான படைப்புகளை மனமாற லயிப்புடன் பாராட்டுதைப் பார்க்கும்போது, அவரது விமர்சனத்
திறனையும், தரமானவற்றை மறுக்காமல் பாராட்டும் நேர்மையையும் மட்டுமே கருத்தில் கொள்வார்கள்.

இத்தொகுப்பில் உள்ள 39 விமர்சனக் கட்டுரைகளில், இரண்டு விதமான விமர்சனப்போக்கைக் காண
முடியும். ஒன்று- தில்லி வானொலி, அமுதசுரபி, சி•பி.டாட்காம், கணையாழி போன்றவை கேட்டதன் பேரில் எழுதியுள்ள – அவரது அடையாளமற்ற, யாரும் எழுதக்கூடிய சாதாரண விமர்சனங்கள். மற்றது அவரே விரும்பி, அல்லது இலக்கிய நெறிகள் மீறப்படும் போது பொங்கி எழும் உணர்வின் சீற்றத்தால் காத்திரத்துடன் எழுதியுள்ள விமர்சனங்கள் மற்றும் முன்னுரைகள். பின்னதிலுல் இரு வகை. தனக்குப் பிடித்தவற்றை வஞ்சனையின்றி ஓகோ என்று பாராட்டுவதும், தனக்குப் பிடிக்காதவற்றை, தாட்சண்யமற்றுக் கடுமையாய்ச் சாடுவதுமான விமர்சனங்கள்.

தனக்குப் பிடித்த நூல்களை – நீல பத்மனாபனின் ‘தலைமுறைகள்’, அமிர்தம் சூர்யாவின் கட்டுரைத்
தொகுப்பு, கந்தர்வனின் ‘கொம்பன்’ சிறுகதைத் தொகுப்பு, சு.தமிழ்ச்செல்வியின் ‘கீதாரி’ நாவல், அஸ்வத்தின் ‘நல்லூர் மனிதர்கள்’ கதைத்தொகுப்பு, என்.சிவராமனின் ‘சுவர்கள்’ போன்றவற்றின் நயங்க¨ளையும் சிறப்புகளையும் ரசித்துச்
சொல்லி அவற்றைத் தேடிப் படிக்கவைக்கும் விமர்சனங்கள் அவரது ஆரோக்கியமான நேரிய சிந்தனைக்கு
உதாரணங்களாகும்.

ஜெயகாந்தனோடு பலசமயங்களில் முரண்பட்டாலும், அவருக்கு ‘ஞானபீட விருது கொடுக்கப்பட்ட போது, அவரது தகுதியை மனமாரப் பாராட்டியும், அவரது எழுத்தின் கம்பீரத்தை வியந்தும் எழுதிய இரு கட்டுரைகளும் இத்தொகுப்பில் உள்ளன.

தனக்குப் பிடிக்காதவர்களை இவர் சாடுவதும் ரசமானதுதான். அகிலனுக்கு ‘ஞானபீட விருது’ கிடைத்த தற்கும், தி.க.சிக்கு வல்லிக்கண்ணனின் சிபாரிசில் சாகித்ய அகாதமி விருது கிடைத்ததற்கும் அவரது சாடல்கள் அத்தகையவை. சு.சமுத்திரத்துக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்தபோது இவருக்கு அது சம்மதமில்லை எனினும்அகாதமியின் ‘Indian Literature’ன் அப்போதைய ஆசிரியர் D.S.ராவின் வற்புறுத்தலின் பேரில் விருப்பமின்றி அப்பரிசு
பற்றி, சமுத்திரத்தைப் பற்றிய பாராட்டா அல்லது கேலியா என்பது புரியாதபடி எழுதியது பற்றி முன்னுரையில்
குறிப்பிடுகிறார். ‘அவர் வேலை பாதிக்கப்படக்கூடாது என்று, ஒரு வார்த்தைகூட பாதகமாக இல்லாது மறைமுகமாகவே கிண்டலாகவே சமுத்திரத்தின் எழுத்தைப் பற்றியும் பரிசு பெற்ற புத்தகத்தைப் பற்றியும் எழுதினேன். ‘சாமிநாதனே என்னைப் பாராட்டி விட்டார். மற்றவர்களைப் பற்றி எனக்குக் கவலை இல்லை’ என்று சமுத்திரம் சொல்லிக் கொண்டி ருந்தார்/எழுதி இருக்கிறார் என்று கேள்விப் பட்டேன். அந்தக் கட்டுரையும் இத்தொகுப்பில். எத்தகைய பாராட்டு அது என்பதை எல்லோரும் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.’ என்று வெளிப்படையாகவே எழுதியுள்ளார். பாவம் சமுத்திரம்! சாமிநாதனைப் பிடிக்காதவர்களில் ஒருவராக இருந்தும், அவரது வஞ்சகப் புகழ்ச்சியைப் புரிந்து கொள்ளாமல்
அகமகிழ்ந்தது, தனக்குப் பாராட்டுக் கிடைத்தால் பழையதை மறந்து போகும் பலரது பலவீனத்துக்கு உதாரணம்.

பாராட்டானாலும் மறுப்பானாலும் அவரது விமர்சனங்கள் சுவாரஸ்யமானவை. யூமா வாசுகியின் ‘ரத்த உறவுகள்’ நாவலை விமர்சிக்கும் போது, ‘யூமா வாசுகியின் ரத்த உறவு படிக்க சுவாஸ்யமான புத்தகம் அல்ல. வல்லிக்
கண்ணன் குறிப்பிடும் எத்தகைய, எந்த ரக இன்பமும் அதில் கிடைப்பதற்கில்லை. படிப்பதற்கு மிகவும் மனதைச் சிரமப் படுத்தும் வாழ்க்கையைச் சொல்கிறது இந்த நாவல். நமக்குக் கொஞ்சம்கூட வாசிப்பு இன்பம் தராத இதை நாம் ஏன் படிக்க வேண்டும், யூமா வாசுகி இதை ஏன் எழுதியிருக்க வேண்டும் என்றால், யூமா வாசுகி, ‘நான் வாழ்ந்த வாழ்வு
யாருடைய சுவாரஸ்யத்துக்காவும் இலக்கிய இன்பத்துக்காவும் மாற்றி எழுதக் கூடிய ஒன்றல்ல; இது என் அனுபவம்;
இதற்கு நான் என்ன செய்ய முடியும்?” என்று சொல்லலாம். நம்மில் ஒருவர் வாழ்ந்த வாழ்வும் பெற்ற அனுபவமும்
இப்படி என்றால், நம்முன் அது வைக்கப்பட்டுள்ளது என்றால் நாம் அதை ஒதுக்க முடியாது.’ என்று எழுதுவது அவரது பொறுப்புமிக்க விமர்சனத்துக்கு ஒரு சான்று.

ஒரு வகையில் வெ.சாவின் விமர்சனங்களைப் படிப்பது அவற்றின் சுவாரஸ்யத்துக்காக மட்டுமின்றி, எத்தனையோ புதிய தகவல்கள், நாம் அறிந்துகொள்ள வேண்டிய இலக்கிய ஆளுமைகள், நமக்குப் பரிச்சயமில்லாத
புதிய எழுத்தாளர்கள், இலக்கிய இதழ்கள், படிக்க வேண்டிய புத்தகங்கள் என்று அறிமுகங்கள் பெறுவதற்கும் உதவும்.

சில இலக்கிய ஆளுமைகளை இத்தொகுப்பில் அறிமுகப் படுத்துகிறார். ‘அதிசயப் பிறவி வ.ரா’, ‘செல்லப்பா நினைவில்’. ‘என்னைக் கேட்டால்’ – கணையாழியில் இத்தலைப்பில் பத்தி எழுதிய என்.எஸ்.ஜெகந்நாதன் ஆகிய
கட்டுரைகள் சம்மந்தப்பட்ட அறிவுஜீவிகளின் நம் அறியாத பெருமைக¨ளைச் சொல்வன.

‘அட்லாண்டிக்குக்கு அப்பால்’ கட்டுரைகள் எழுதியுள்ள பி.கே.சிவகுமார், ‘மேட்டுக்குடியினரின் தலித்துகளா’ன சவுண்டி பிராமணர்களது வாழ்க்கையின் அவலத்தைச் சித்தரிக்கும் ‘கல்மண்டபம்’ எனும் நாவலின் ஆசிரியர் வழக்கறிஞர் சுமதி, ‘அடிவாழை’ கதைத்தொகுப்பின் பெங்களூரு தமிழாசிரியர் சகதேவன் என்று குறிப்பிடத்தக்க புதிய இளம்
படைப்பாளிகளை உற்சாகப்படுத்தி வாழ்த்தும் உள்ளமும் வெ.சாவுக்கு இருப்பதை அவர்களைப் பற்றிய கட்டுரைகளில்
பார்க்க முடிகிறது.

ந.முத்துசாமி – சி.மணி நடத்திய ‘நடை’. இவரது ஆசிரியர் பொறுப்பில் வெளிவந்த ‘யாத்ரா’, இவருக்குக் கென்றே இவர் பெயரில் தஞ்சை பிரகாஷ் நடத்திய ‘வெ.ச.எ’ ஆகிய இதழ்களின் தோற்றம் மற்றும் சாதனைகள்
பற்றியும் வெ.சா இத்தொகுப்பில் விரிவாக எழுதியுள்ளார்.

‘நேற்றையவற்றின் மதிப்புகள் இன்று நமக்குத் தரப்படும்போது, புனர் விசாசரணை செய்யப்பட வேண்டி
இருக்கின்றன என்று தொடங்கும் ‘ஒரு மறுவிசாரணை’, ‘தமிழ் நாவலில் சில புதிய முயற்சிகள்’, ‘எதிர்ப்பு இலக்கியம்’,
‘நாமும் எழுத்தாளர்களும்’ ஆகிய இலக்கிய விசாரம் பேசும் – சிந்தனையைக் கிளறும் அரிய கட்டுரைகளும்
இத்தொகுப்பில் உள்ளன.

சிட்டியும் சிவபாதசுந்தரமும் இணைந்து எழுதிய ‘தமிழ் நாவல் நூறாண்டு வளர்ச்சி’ என்கிற நூல் பல
முக்கியமான- அன்றுவரை தெரிந்திராத பல நீண்ட உரைநடை நூல்களை வெளிக் கொணர்ந்திருப்பதைச் சொல்லும் போது, அவற்றில் மிக முக்கியமானதும் சுவாரஸ்யமானதுமான ‘முத்துக்குட்டி ஐயரின் வசன சம்பிரதாயக் கதை’ நூலை வெ.சா மிக அருமையாய் அறிமுகப்படுத்துகிறார். வாய்மொழியாகச் சொல்லப்பட்ட அக்கதையின் வித்தியாசமான
உரைநடைக்கு ஒரு சில மாதிரிகளைக் காட்டி, அது பிறந்த கதையையும், அதன் சிறப்புகளையும் ரசமாகச் சொல்லி அவசியம் படிக்க வேண்டிய நூல் என்று அவர் சிபாரிசு செய்திருக்கும் பாணியே அதைத் தேடிப் படிக்கத் தூண்டுகிறது. இன்னும் இது போன்ற அரிய நூல்களை அறிமுகம் செய்து தொகுப்பை கவனத்துக்குள்ளாக்குகிறார்.

விமர்சனங்கள் எப்படி எழுதப்பட வேண்டும் என்று காட்டும் கட்டுரைகளும் அவற்றை அவர் சொல்லியுள்ள
வாசிப்பை சுவாரஸ்யமாக்கும் நடையும் கொண்ட இத்தொகுப்பை வெ.சாவின் ரசிகர்கள் மட்டுமின்றி, மாற்றுக் கருத்து உள்ளவர்களும் படிக்கலாம். 0

நூல் : யூமா வாசுகி முதல் சமுத்திரம் வரை.
ஆசிரியர் : வெங்கட் சாமிநாதன்.
வெளியீடு : எனி இந்தியன் பதிப்பகம், சென்னை.

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்