அ.முத்துலிங்கம்
என் வாழ்க்கையில் நான் சந்தித்த ஆக இக்கட்டான சம்பவம் என்னவாயிருக்கும் என்று சமீபத்தில் நினைத்துப் பார்த்தேன். உடனே ஒன்றும் மூளையில் தோன்றவில்லை. ஆனால் சில நிமிடங்கள் கழிந்ததுமே ஒரு விசயம் ஞாபகத்துக்கு வந்தது. என் உடம்பிலே உயிர் இஇருக்கும்வரை மறக்கமுடியாத ஒரு சம்பவத்தை எப்படி மறந்தேன் என்பது வியப்பாக இருந்தது. யோசித்துப் பார்த்தபோது இன்னொன்றும் நினைவுக்கு வந்தது. பேராசை. பேராசை என்றால் என்ன என்பதை நேரில் பார்த்ததும் அந்தச் சந்தர்ப்பத்தில்தான்.
இது முப்பது வருடங்களுக்கு முந்திய கதை. என்னுடைய நாலாவது வேலையில் அப்போது சேர்ந்திருந்தேன். நான் பார்த்த வேலைகள் எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் இது பல கோடி ரூபாய் முதலீட்டுடன் ஆரம்பமாகிய புதுக்கம்பனி. உள்நாட்டில் இருந்து மட்டுமல்லாமல் வெளிநாட்டில் இருந்தும் இதில் முதலீடு செய்திருந்தார்கள். இதன் எதிர்காலம் பற்றி பத்திரிகைகளும் நல்லாக எழுதியிருந்தன.
இலங்கை சுதந்திரம் அடைந்து இருபது ஆண்டுகள் கழிந்தபிறகும் எஞ்சியிருந்த சில ஆங்கிலேயர்கள் ஒவ்வொருவராக வெளியேறிக்கொண்டிருந்தனர். அந்தச் சமயத்தில் இங்கிலாந்தில் இருந்து வருவித்த ஒரு வெள்¨ளைக்காரரை அந்தக் கம்பனிக்கு முதன்மை இஇயக்குநராக நியமித்திருந்தார்கள். இவர்தான் என்னுடைய மேலாளர். இவருடன் வேலைசெய்வதற்கு சேர்க்கப்பட்ட முதல் ஆளும் நான்தான். நாங்கள் இரண்டுபேரும் சேர்ந்து இந்த புதுக்கம்பனியை கட்டி எழுப்பவேண்டும் என்பதுதான் எங்கள் இயக்குநர்களின் எதிர்பார்ப்பு.
அந்தக் காலத்தில் வந்த ஆங்கிலப் படங்களில் நடித்த கரி கிராண்ட் என்ற பிரபலமான நடிகரை நினைவில் வைத்திருப்பவர்களுக்கு நான் சொல்லப்போவது சுலபமாகப் புரியும். எங்கள் மேலாளர் பார்ப்பதற்கு அந்த நடிகரைப்போலவே இருப்பார். வயது ஐம்பது இஇருக்கலாம். எப்பொழுது பார்த்தாலும் ஒழுங்காக தலைவாரி, கன்ன உச்சி பிரித்து, மடிப்பு கலையாத ஆடை அணிந்து பார்த்த உடனேயே மதிப்பு வரும் தோற்றத்தில் காட்சியளிப்பார். அவரைச் சுற்றி சூடான கேக்கில் இருந்து கிளம்பும் ஒருவிதமான நறுமணம் இருக்கும். அவருடைய பெயர் எழுதிய மிருதுவான தோல்பை ஒன்று அவர் கையில் எப்போதும் காணப்படும். காலை ஒன்று, மாலை ஒன்று என்று அணியும் வெள்ளை நிற நீளக் கைச்சட்டையின் முனையில் ஒரு வெள்ளைக் கைக்குட்டையை சொருகிவைத்திருப்பார். முகத்தில் வியர்க்கும் போதெல்லாம் அதனால் ஒற்றிக்கொள்வார்.
மேற்பார்வையிட அவர் புறப்படும்போது என்னால் அவரைப்போல வேகமாக நடக்கமுடியாது. நாலு அடிக்கு ஒருதரம் நான் ஓடிச் சரிப்படுத்திக்கொள்வேன். இவருடைய வேலை விதிகள் எளிமையானவை. இரண்டே இரண்டு வரிகளில் அவற்றை எழுதி முடித்துவிடலாம். அவர் அலுவலகத்துக்கு வரும்போது பணி ஆரம்பமாகும்; அவர் திரும்பி வீட்டுக்கு போகும்போது முடிவுக்கு வரும். அவர் அலுவலகத்தில் இருக்கும் அத்தனை நேரமும் வேலை நடக்கவேண்டும். இதில் பிரச்சினை என்னவென்றால் அவர் சிலவேளைகளில் காலை ஐந்து மணிக்கே வேலைக்கு வந்துவிடுவார். இரவு பதினொரு மணிவரை உழைத்த நாட்களும் உண்டு.
ஒருநாள் முதன்மை இயக்குநருக்கு எவ்வளவு ஊதியம் கொடுக்கிறார்கள் என்பதை நான் கண்டறிந்தபோது மலைத்துப்போய்விட்டேன். அவர் வாங்கும் சம்பளத்தை வசனமாக ஒரு செக் புத்தகத்தில் எழுதமுடியாது. அவ்வளவு நீளமான தொகை. என்னுடைய சம்பளம், அங்கு வேலைபார்த்தவர்கள் அத்தனை பேருடைய சம்பளம், இந்த இஇரண்டின் கூட்டுத்தொகையைவிட அவருடைய சம்பளம் அதிகமானது. அது மாத்திரமல்ல, கம்பனி அவருக்கு மாளிகை போன்ற ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து இலவசமாகக் கொடுத்திருந்தது. ஜாஎல வீதிகளின் இஇரு கரைகளையும் தொடுவதுபோல ஒரு பெரிய கார். இரண்டு சாரதிகள், நாலு காவல்காரர்கள், மூன்று வேலைக்காரர்கள், தோட்டக்காரர், சமையல்காரர் என்று அவரைப் பராமரிக்க ஒரு கிராமமே அங்கே வேலை செய்தது. மின்கட்டணம், தண்ணீர் கட்டணம், டெலிபோன் கட்டணம் ஒன்றுமே அவர் கட்டத்தேவை இல்லை. அவருடைய முடியலங்காரச் செலவை மட்டுமே அவர் கையில் வைத்திருக்கும் மெல்லிய தோல்பைக்குள் இஇருக்கும் சொந்தப் பணத்திலிருந்து எடுத்துக் கொடுப்பார். இத்தனை பெரிய சம்பளம் வாங்கிக்கொண்டு ஒரு குட்டி மகாராசா போல வாழ்ந்த அவர் தனக்கு வரவேண்டிய ஒவ்வொரு சதத்துக்கும் கணக்கு வைப்பார். சின்னச் சின்ன செலவுகளை எல்லாம் குறித்து வைத்து கம்பனி காசாளரிடம் வாராவாரம் அறவிடுவார். இஇன்னும் சில வருடங்கள் சென்றதும் அவர் பேராசையின் உச்சம் என்னை திடுக்கிடவைக்கும்.
என்னுடைய மேலாளரிடம் இருந்த வல்லமைகளில் உச்சமானது அவருடைய உளவு அறியும் திறமை. இஇவர் பிரிட்டிஷ் படையில் சேவையாற்றியபோது உளவுப் படையில் இருந்தாரோ என்னவோ எங்களுக்கு எதிராக இஇயங்கும் கம்பனிகள், நட்பான கம்பனிகள், முக்கியமான அரசாங்கத் துறைகளில் எல்லாம் இவருக்கு ஆட்கள் இஇருந்தார்கள். ஒரு புதிய சட்டம் அரசாங்கம் பிறப்பிக்கப் போகிறது என்றால் இவருக்கு அது முதலில் தெரியவரும். எதிராளிக் கம்பனி ஒரு புதிய பொருளை இறக்குமதி செய்யப் போகிறதென்றால் அது இவருக்கு தெரியும். உடனேயே அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்க தயங்க மாட்டார். அவருடைய வெற்றிக்கு அது முக்கிய காரணம் என்றே நான் நினைக்கிறேன்.
வாரக் கடைசியான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இஇவர் முற்றிலும் வேறு மனிதராக மாறிவிடுவார். ஆடம்பர வாழ்க்கைப் பிரியர்களுக்கென்றே உண்டாக்கப்பட்ட அத்தனை கிளப்புகளிலும் அவர் அங்கத்தவர். இரவு இரவாக அங்கே நடக்கும் கேளிக்கைகளில் கலந்துகொள்வார். சீட்டாடுவார். பியானோ இசைத்தபடி உரத்த குரலில் பாடுவார். அவருக்கு குடிப்பதை ஆரம்பிப்பதற்கு தெரியுமே ஒழிய அதை நிறுத்துவதற்கு தெரியாது. சின்னப் பெண்களைக் கட்டிப்பிடித்துக்கொண்டு நடுநிசி தாண்டி நடனமாடுவார். ஒரு கட்டத்திற்கு பிறகு இவருக்கு என்ன நடக்கிறது, தான் எங்கே இருக்கிறார் என்பதெல்லாம் மறந்துவிடும்.
திங்கள் காலைகளில் எனக்கு என்ன நடக்கும் என்பது தெரியும். எல்லாம் அனுபவம்தான். அளவுக்கு அதிகமாக மேக்கப் பூசிய ஓர் இளம் பெண் வந்து வரவேற்பறையில் உட்கார்ந்திருப்பாள். அவளுடைய உடை, அதிவேகமாக களைவதற்காக உருவாக்கப்பட்டதாக இருக்கும். அவள், என்னுடைய மேலாளர் கொடுத்த பெயரட்டையை கையிலே வைத்திருப்பாள். முதன்மை இயக்குநரைப் பார்க்கவேண்டும் என்று அடம்பிடிப்பாள். அவர் முக்கியமான வேலையில் இருக்கிறார், அவரைப் பார்க்க முடியாது என்று வரவேற்பாளினி சொல்வாள். அவர் தன்னை திங்கள் காலை வந்து பார்க்கச் சொன்னதாக அவள் கூறுவாள். ஏன் என்று கேட்டால் அவர் தனக்கு பொதுசனத் தொடர்பு அதிகாரி பதவி தருவதாக வாக்களித்திருக்கிறார் என்பாள். அவளைப் பார்த்தால் அவளுக்கு ஏற்கனவே நிறைய பொதுசனத் தொடர்பு இருப்பது தெரியும். எப்பொழுது அந்த வாக்கை கொடுத்தார் என்று கேட்டால் நாடியில் கையை வைத்து சிறிது யோசித்துவிட்டு முந்திய இரவு 12 மணிக்கு பின்னராக இருக்கலாம் என்று ஊகிப்பாள். இவ்வளவும் நடக்கும்போது மேலாளர் உள்ளே ஒளிந்துகொண்டு இருப்பார். நானும், இன்னும் சில அலுவலக சகாக்களும், மெய்காப்பாளருமாகச் சேர்ந்து பல கனவுகளுடன் வந்த அந்தப் பெண்ணை அகற்றுவோம்.
அடுத்த திங்கள் காலையும் ஓர் இளம்பெண் வருவாள். அதற்கு அடுத்த திங்கள் காலையும். அதற்கு அடுத்ததும். இவர்கள் எல்லாம் வெவ்வேறு பெண்கள். எல்லோருமே அழகாக இருப்பார்கள். எல்லோருமே 19 வயதுக்குள், மிஞ்சிப்போனால் 20 வயதுக்குள், மெலிந்துபோய், நிறைய ஒப்பனையுடன், தண்ணீர் கொடிபோல ஆடிக்கொண்டு, எந்தக் கணமும் ஒடிந்து விழுந்துவிடும் போன்ற இடையுடன் வருவார்கள். அரை வினாடியில் கழற்றி வீசக்கூடிய உடையலங்காரம் எல்லோருக்கும் பொதுவானது. கொழும்பு மாநகரத்தை நிறைத்து இவ்வளவு அழகான பெண்கள் உலாவுவதை எங்கள் மேலாளர் கண்டுபிடித்த பிறகுதான் நாங்கள் கண்டுபிடிப்போம்.
ஞாயிற்றுக்கிழமை இரவுகளில் எவ்வளவுதான் குடித்துக் குலாவினாலும், திங்கள் காலை மேலாளர் வழக்கம்போல அலுவலகம் வந்துவிடுவார். நாலு வருடங்களில் கம்பனியை கட்டி எழுப்பி, உற்பத்தியை விஸ்தரித்து, விற்பனையை கூட்டியிருந்தார். முதன்முதலாக இலங்கை சந்தையில் ஸ்கூட்டர் என்ற பொருளை உற்பத்தி செய்து அறிமுகம் செய்தது எங்கள் கம்பனிதான். ஸ்கூட்டர் மட்டுமல்ல மூன்று சக்கரத்தில் ஓடும் வாகனத்தையும் சந்தையில் இறக்கினோம். ஒரு கட்டத்தில் விற்பனை பிய்த்துக்கொண்டுபோக உற்பத்தி போதாமல் பல வாடிக்கையாளர்கள் முதலிலேயே வாகனங்களுக்கு முழுக்காசையும் கட்டிவிட்டு பல மாதங்கள் தங்கள் முறைக்காக காத்திருக்கும் நிலைமை ஏற்பட்டது.
பல மேடு பள்ளங்களைத் தாண்டி கம்பனி லாபம் ஈட்டத் தொடங்கியது. என்னுடைய மேலாளரின் ஒப்பந்தம் முடிவுக்கு வர இன்னும் ஒரு வருடம் இருந்தது. அவர் போனபின்னர் யாராவது கம்பனியை ஏற்று நடத்தவேண்டும். அதற்கு தகுந்த ஆளை நியமிப்பதற்காக கூடிய இயக்குநர்கள் ஒருவித முன்னறிவித்தலும் இஇன்றி எனக்கு யுவராசா பட்டம் சூட்டினார்கள். அதாவது, சர்வ வல்லமை பொருந்திய எங்கள் மேலாளருடைய மணிமகுடத்தை, கொழும்பு மாநகரத்து கிளப்புகள் எந்த எந்த திசைகளில் இயங்குகின்றன என்ற சின்ன அறிவுகூட இல்லாத நான் ஏற்று நடத்தவேண்டும் என்பதுதான் முடிவு.
இந்த திடீர் உத்தியோக உயர்வு எனக்கு மகிழ்ச்சியை தந்தது என்பது உண்மைதான். ஆனால் எனக்கு கிடைத்த யுவராசா பதவியை முற்றிலும் அனுபவிக்க முடியாதவாறு ஒரு சம்பவம் சீக்கிரத்திலேயே நடந்தது. இஇதை நானோ என்னுடைய மேலாளரோ எதிர்பார்க்கவில்லை. கம்பனி இயக்குநர்களும் எதிர்பார்க்கவில்லை என்றே நினைக்கிறேன். திட்டமிடாமல் நடந்ததால் இது என்னைப் பெரிதும் தடுமாற வைத்துவிட்டது.
எங்கள் மேலாளருக்கு ஓர் அந்தரங்கக் காரியதரிசி இருந்தாள். இந்தப் பெண் பேர்கர் இனத்தைச் சேர்ந்தவள்; பாதி வெள்ளை, பாதி கறுப்பு. ஆனால் அவளுக்கு தான் ஒரு முழு வெள்ளைக்காரி என்ற நினைப்பு. கம்பனி விதிகள் அவளைக் கட்டுப்படுத்துவதில்லை என்ற எண்ணமும் இருந்தது. தோள்மூட்டு தேவைப்படாத கவுண் மாத்திரமே அணிவாள். அது எந்த நேரமும் இறங்கிவிடக்கூடும் அபாயத்தை அவள் அறியாதவளாகவே இருந்தாள். நாங்கள் ஒன்றாக வேலைசெய்த அந்த நாலுவருடங்களில் ஒரு முறைகூட என் பெயரை அவள் சரியாக உச்சரிக்கவில்லை. என் பெயர் அவள் வாய்க்குள்ளே போனால் திரும்பி வரும்போது அது வேறு சத்தத்துடன் வரும். சில அந்தரங்க கோப்புகள் அவளிடமே இருக்கும். ஒரு முறை ஒரு கோப்பை கேட்டபோது நான் ஏதோ அவளுடைய ரத்தத்தை கேட்டதுபோல ஒரு பார்வை பார்த்தாள். அந்த நேரம் அவள் சுழல் நாற்காலியில் சுழன்றபடி ஒரு மலிவான ஆங்கில நாவல் படித்துக்கொண்டிருந்தாள். படித்த இடத்தை தவறவிடாமல் இருக்க ஒருவிரலை வைத்தபடி மறு கையால் நாலு இடத்தில் தேடி கோப்பை கண்டுபிடித்து, பிருட்டத்தை ஓர் ஆட்டு ஆட்டிவிட்டு, என்னிடம் நீட்டினாள். அந்தக் கோப்பை படித்துப் பார்த்தபோது, அதில் சேராத ஒரு டெலக்ஸ் தகவல், இதற்கு முன்னர் நான் பார்க்காதது, கண்ணில் பட்டபோது வியப்பாக இருந்தது. எதற்கும் இருக்கட்டும் என்று அதைக் குறித்துவைத்துக்கொண்டு கோப்பை திருப்பிவிட்டேன்.
அந்த டெலக்ஸ் செய்தி என்னை தொந்திரவு செய்தது. மீண்டும் அந்தக் கோப்பை தருவித்துப் பார்த்தபோது அது இல்லை. மாயமாக மறைந்துவிட்டது. அது இன்னும் சந்தேகத்தைக் கிளப்பியது. அந்தக் கோப்புடன் சம்பந்தமுள்ள வேறு சில கோப்புகளில் தகவல்களைத் திரட்டியபோது இருட்டறையில் புகைப்படம் கழுவும்போது மெள்ள மெள்ள படம் துலங்குவதுபோல ஒரு காட்சி உண்டானது. அது நல்ல காட்சியில்லை. ஆரம்பத்தில் இருந்து கணக்குப் பார்த்தபோது ஒரு கணிசமான தொகை கம்பனிக் கணக்கில் சேராமல் வெளியே நின்றது. அந்த தொகை என்னுடைய மேலாளர் பெயரில் அவருடைய வங்கிக்கு போயிருக்கலாம் என்ற ஊகம் எனக்கு. ஆனால் அதை என்னால் நிரூபிக்கமுடியவில்லை.
இரண்டு மூன்று இரவுகள் நித்திரையின்றி இதுபற்றியே சிந்தித்தேன். என்ன செய்வது என்று தெரியாமல் ஒரே குழப்பம். ஒன்று, மேலாளரிடம் நேரிடையாகக் கேட்கலாம். ஆனால் ஊகம் தவறு என்றால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும். இரண்டு, ஒன்றுமே செய்யாமல் மேலும் ஆவணங்கள் கையில் சிக்கும் வரைக்கும் காத்திருக்கலாம். ஆனால் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஆபத்தானது. மூன்று, கம்பனி இயக்குநர்கள் தலைவருக்கு விசயத்தைக் கூறி, முதன்மை இயக்குநர் இல்லாமல் ஒரு கூட்டத்தைக் கூட்டுவது. அவர்கள் எடுக்கும் முடிவுப் பிரகாரம் காரியம் ஆற்றலாம்.
எனக்கு யுவராசா பட்டம் கட்டியிருந்தபடியால் நான் என் முடியை அபகரிக்க காலத்தை துரிதப்படுத்துகிறேன் என்று யாரும் அவதூறு பேசக்கூடாது என்பது என் எண்ணமாக இருந்தது. கம்பனி தலைவருடன் கலந்து ஆலோசித்து ஒரு தேதியைக் குறித்து ரகஸ்யக் கூட்டத்தை அறிவித்தேன். வழமையான இடத்தில் கூடாமல் ஒரு புதிய இஇடத்தை இதற்காக தேர்ந்திருந்தேன். ஓர் அரசனின் ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்வதுபோல எல்லாம் மிக ரகஸ்யமாகவே பாதுகாக்கப்பட்டது.
குறிப்பிட்ட தேதியில் ஒருவரும் அறியாமல் அந்த ரகஸ்ய இடத்தில் கூடினோம். முதலில் தலைவர் வந்தார். அவரைத் தொடர்ந்து மற்ற இயக்குநர்களும் ஒவ்வொருவராக வந்து சேர்ந்தார்கள். வழக்கம்போல ஒருவருடன் ஒருவர் ஒன்றும் பேசவில்லை. காற்று இறுக்கமாக இருந்தது. ஒரு வாளிருந்தால் அதை துண்டாக வெட்டியிருக்கலாம்.
தலைவர் கூட்டத்தை தொடக்கினார். அது ஒரு மரண அஞ்சலிக் கூட்டம்போலவே அமைந்திருந்தது. நான் என்னுடைய பேச்சை பலவிதமான ஆதாரங்களுடனும், ஆவணங்களுடனும் ஆரம்பிப்பதற்கு முன்பாக தலைவர் சுருக்கமாக நாங்கள் கூடியிருக்கும் காரணத்தைக் கூறினார். ஒரு பாரதூரமான முடிவை அன்று நாங்கள் எடுக்கவேண்டியிருக்கும். அது பதவியிலிருக்கும் முதன்மை இயக்குநர்பற்றி. அதனால்தான் அவர் கூட்டத்தில் பிரசன்னமாகியிருக்கவில்லை என்பதை விளக்கினார்.
அந்த நேரம் பார்த்து கதவை தள்ளித் திறந்துகொண்டு ஓர் உருவம் உள்ளே நுழைந்தது. பார்த்தால் முதன்மை இயக்குநர். அவருடைய முகம் கழுவிய இறைச்சிபோல சிவந்திருந்தது. பட்டன் பூட்டாத கோட்டு அவர் வந்த வேகத்தில் இரண்டுபக்கமும் செட்டைபோல அடித்தது. தலையிலே உண்டாகிய வியர்வை வழிந்து அவர் முகத்தில் கோடாக ஓடியது. சிலும்பிய தலைமுடி விழுந்து முகத்துடன் ஒட்டிக்கொண்டிருந்தது. அவர் கையிலே அவர் பெயர் எழுதியிருக்கும் மெல்லிய தோல் கைப்பை இல்லை. நீண்டகை வெள்ளை சட்டையில் எப்பவும் சொருகிவைத்திருக்கும் கைக்குட்டை இல்லை. யாரோ துரத்த ஓடிவந்தவர்போல மூச்சிரைக்க நின்றார்.
எங்கள் கம்பனித் தலைவர் பிரபலமான ஓய்வுபெற்ற நீதிபதி. பலமுறை தூக்கு தீர்ப்பு எழுதிவிட்டு பேனாவை மேசையில் குத்தி உடைத்தவர். கொழும்பில் அவருடைய பெயரைச் சொன்னால் தெரியாதவர் ஒருவரும் இருக்கமுடியாது. சமயோசிதபுத்திக்காரர். ஆவென்று ஆச்சரியத்தைக் காட்ட வாயைப் பிளந்தவர் அதை அப்படியே மூடாமல் ஆனந்தத்தைக் காட்டும் உணர்ச்சியாக மாற்றி, அவர் பேசிக்கொண்டிருந்த அதே தோரணையில், தொனி மாறாமல் ‘Ah Tomlison, there you are! We are waiting for you’ என்றார். ( ஆ, ரொம்லிஸன், வந்துவிட்டீர்களா! உங்களுக்காகத்தான் காத்துக்கொண்டிருக்கிறோம்.)
தலைவர் என்னைப் பார்த்தார். சொல்லிவைத்தாற்போல எல்லோருடைய முகங்களும் என் பக்கம் திரும்பின. ரொம்லிஸனும் என் பக்கத்துக்கு தலையை திருப்பினார். முன்னெப்போதும் இல்லாதமாதிரி எனக்கு முன்னால் கிடந்த கோப்பில் என் முகம் ஆழமாகப் புதைந்திருந்தது.
{ அ.முத்துலிங்கம் எழுதி விரைவில் வெளிவரப்போகும் சுயசரிதைத் தன்மையான நாவலின் ஓர் அத்தியாயம்தான் மேலே தந்திருப்பது. }
amuttu@gmail.com
- குடும்பதின வாழ்த்துக்கள்
- திப்பு சுல்தானும், திரிபுவாதிகளும், அண்டப் புளுகர்களும் – II
- இரண்டு தமிழ்க் கவிதைத் தொகுப்புகள் – ஆங்கிலத்தில்
- ராஜ்தாக்கரேவின் ராஜாபார்ட் நாடகமும் சில உண்மைகளும்
- வெயில் மற்றும் மழை சிறுகதைகள்/ மீரான் மைதீன் : காலப் பம்பரத்தைக் கையில் ஏந்திக்கொண்டு
- “பாலைவனத்தில் பூக்களைத் தேடி”
- “கடைசி பேருந்து”
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பூமியில் விழும் அகிலக் கற்கள் !(கட்டுரை: 17)
- கோட்டாறு பஃறுளியாறான கதை
- நந்தனார் தெருக்களின் குரல்கள் – விழி. பா. இதயவேந்தனின் படைப்புலகம்
- ‘எழுத்துக்கலை பற்றி இவர்கள்………….13 புதுமைப் பித்தன்
- கங்கா பிரவாகமும் தீபாவளி விருந்தும்
- தீயாய் நீ!
- மொழிபெயர்ப்பு கவிதைகள்
- எஸ். ராமகிருஷ்ணன் இணையதளம்
- FILMS ON PAINTERS
- இன்னும் ஓர் இஸ்லாமிஸ்ட்
- பள்ளிகளில் தமிழைக் கட்டாயமாக்கிய அரசின் சட்டம்
- ‘உலக தாய்மொழி நாள்’
- நீதி, தர்மம், திருவள்ளுவர், சமணம்: ஜெயமோகன் கட்டுரை குறித்து..
- National Folklore Support Centre
- தாகூரின் கீதங்கள் – 17 – உன்னுள்ளே தாய் மகத்துவம் !
- வன்முறையைத் தூண்டும் விதமாக விகடன் நடந்து கொள்வதை வருத்தத்துடன் கண்டிக்கிறோம்
- ஒரு நாள் உணவை…
- பஞ்சவர்ணக்கிளிகள் பேசுமா?
- யுவராசா பட்டம்
- “தெருவிளக்கும் குப்பிவிளக்கும்”
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 8
- சம்பந்தமில்லை என்றாலும் பௌத்த தத்துவ இயல்- ராகுல்சாங்கிருத்தியாயன்
- கலைஞர் துணிந்து முடிவெடுக்க வேண்டிய நேரம் இது!
- லூதரன் ஆலயம், லூதரன் சபை, லூதரனியம் மார்டின் லூதர் பெயரால் அழைக்கப்படும் கிறிஸ்தவ சமயப் பிரிவு
- கஸ்தூரி ராஜாராம்: நடப்பு அரசியலுக்குப் பொருந்தாத அரசியல்வாதி
- செக்கு மாடும் பௌர்ணமி நிலவும்
- மலையாளம் – ஓர் எச்சரிக்கை
- பின்னை தலித்தியம்:அர்சால்களின் எழுச்சி
- முடிவென்ன?
- புலம்பெயர்ந்த கனடா
- காற்றினிலே வரும் கீதங்கள் -7 எனது அடங்காத மோகம் !
- ஒரு தாய் மக்கள் ?
- புலன்கள் துருத்தும் உணர்வுகள்
- பாலா என்றழைக்கப்பட்ட சத்தீஷ்