கே ஆர் மணி
இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய நாவ்ல் புனைவுலகமான விஸ்ணுபுரம் போல, முழுக்க முழுக்க புனைவுலகம் தவிர்த்து, நிகழுலுக சாயல் கலந்த கற்பனை உலகத்தை தான் யுவனின் நாவல் எழுத்துக்கள் செதுக்க முயல்கின்றன. வாசகனை அவதியுற செய்யாது, தத்துவம், ஆன்மீகம் மற்றும் சம கால வரலாறு கொண்ட தளத்தை காவியமற்ற தளத்தில் படைக்கமுயன்றிருப்பதே தமிழ் படைப்புலகத்தில் கொஞ்சம் விலகிய பயணப்படாத பாதைதான்.
யுவனின் இரு நாவல்களும் [குள்ளச்சித்தன் சரித்திரம், பகடையாட்டம்] ஏற்கனவே ஓரளவு முதிர்ச்சி கொண்ட இந்திய ஆன்மிக மனதிற்கான நாவல்களாகத்தான் படுகிறது. இதன் அப்பட்டமான ஆங்கில மொழிபெயர்ப்பு ஒரு சாதாரண மேற்குலக வாசகனால் ஒரு மாயாஜாலக்கதையாகவோ, ஒரு மைத்தாகவோ(myth) தான் வாசிக்கப்படும் சாத்தியக்கூறுகள் அதிகம். ஆனால் இங்கு அதற்கான வெளி(space) எல்லா இந்திய ஆன்மீக, தத்துவ மனதிற்கும் ஓரளவு உள்ளது என்கிறதான வாசக சந்தையிலே யுவனின் எழுத்துக்கள் வலம் வருகின்றன.
சுருங்கக்கூறின், ஒரு லெளகீக வாழ்க்கையிலிருந்து அறுந்துபோக ஆசைப்படும் மனதின் தள்ளாட்டத்திலிருந்து எழுகிற புறவுலகு காணும் ஆசைகளை சூத்திரமாய், பாத்திரங்களாய், களமாய் மாற்றி அதற்குள் தனது மொழி விளையாட்டு பின்னலை சுற்றி கொடுக்கப்படும் யுவனின் நாவல்கள் இரண்டுமே தொடர் கண்ணி கொண்டவை.
தன்னை சுற்றியுள்ள உலகத்தின் கதைகள் ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டன, அதிலென்ன சொல்லயிருக்கிறது என்று நினைக்கும் ஆசிரியர் தனக்கான புனைவுலகத்திற்குள் தனது கதைக்கான தளத்தை, அது புரட்சியோ, அரசியலோ, தத்துவமோ, ஆன்மீகமோ எதுவோ ஓன்றை பரப்பி வெயில் காய வைத்துகொள்கிறார்.
ஆக, ஒரு கற்பனை உலகத்தின் மீதான நாவல் ஓன்றும் புதிதல்ல. அந்த கற்பனை எதற்காக, எப்படி செய்யப்பட்டிருக்கிறது என்பதைக்கொண்டே ஆசிரியரின் புனைவுலக பலமும், காலம் கடந்து அது நிற்பதற்கான உள்வலிமையும் பெறுகிறது. நிகழ்கால குமிழிகளை விட தத்துவமும், ஆன்மிகமும் கலந்த வெளி இந்திய இலக்கிய மனதிற்கு வெகு அருகாமையிலான இடத்தை பிடித்துக்கொள்கிறது.
*
எத்தனையோ களமும், கதையுமிருக்க நிறைய கால, பொருட் செலவு செய்து ஏன் ஒரு நாவலாசிரியன் ஒரு விதையை தேர்ந்தெடுத்து மரமாக்குகிறான் என்பது பிரபஞ்ச ரகசியத்திற்கு இணையான கேள்வி. இதற்கான பதிலை அவனே சொன்னாலும், அவன் சார்ந்த வாசக, விமர்சகர்கள் சொன்னாலும் அது யானைத்தடவும் குருடர்களின் விளக்கம்தான். கதைசொல்லி சொல்வது போல அதுவும் தர்க்கத்திற்கு அப்பாற்பட்டதுதான் போல.
ஆனால் அவரின் நாவல் படைப்புலகத்திற்கு அடிநாதம் ஏற்கனவே ந.பிச்சமூர்த்தி மற்றும் மெளனியால் எழுதப்பட்ட ஒரு படைப்புலகத்தின் நீட்சியாகத்தானிருக்க வேண்டும் என்று நினைக்கிறது எனது சாதரண வாசக மனம். அது பிரம்மையாகவோ, எப்படியோ பழையதோடு இணைத்து பெருமூச்சுவிடும் வழக்கமாக கூடயிருக்கலாம்.
*
குண்டூசி தேட யானையை கூப்பீடாதீர்
(யுவன் சங்கரின் குள்ளன் சித்தன் சரித்திரம்)
”ஏ .. இது என்னடே.. ” கோபு மாமா புத்தகத்தை எடுத்து அதை திருப்பியபடியே கேள்விகள் கேட்டார். அது ஒரு அவசர மேய்தல். கோபு மாமா எனது நண்பர். ஒரு வெகுசன வாசிப்பின் அடையாளத்துளி.
நான் பதில் சொல்லவில்லை.. இது அவர் படிக்கும் புத்தகமில்லை. ச்சை. அப்படி நினைப்பது தவறு.. ஆனாலும் அப்படி நினைத்துவிடுகிறது மனம்.கதை கேட்பார். கதை சுருக்கமின்றி அவர் எந்த கதைக்குள்ளும் போவதில்லை.. ஒருவாறு கதை சொல்ல முயற்சித்தேன்.
*
“ஒரு சித்தருக்கு மடம் எழுப்பறாங்கா.. ஒரு போலிஸ் ஆபிசர் அதை பத்தி தகவல் தேடிப்போறாரு.. அவரால ஆசிர்வதிக்கப்பட்ட சில கதாபாத்திரங்கள் வழியா. அவர் பயணப்படராரு.. இதுல ஒரு ஆங்கிலேய கனவான் வர்றான்.. நோய் வந்து செத்துபோறான்.. வருகிற கதாபாத்திரங்களுக்குள்ளும், கதை நிகழ்வுகளுக்குள்ளும் ஒரு லிங்க் மாதிரி ஒன்னுயிருக்கு.. “
மாமாவுக்கு பொறுமையில்லை.
”இந்திரா செளந்தர்ராசர்னு ஒரு புத்தகம் எழுதுவாரே.. அது மாதிரியாடே..
அந்த டிவில.. வந்ததே..விடாது கறுப்பு அதுமாதிரியா.’
’இல்ல.. இது ஒரு தேடலான கதை.. வாழ்க்கையையே ஒரு கேள்விக்குள்ளாக்கிற கதை.. ’ நான் வேகமாய் மறுதலிக்க முயல்கிறேன்.
’ஹீம்.. என்னயிருந்தாலும் காதுல பூதானே. ..” அவரின் தொனி என்னை தொந்திரவு செய்கிறது. நான் அதுமாதிரி புத்தகங்கள் படிக்கிறவன் இல்லை என்பதே அந்த அவஸ்தைக்கு காரணம். எதாவது பதில் சொல்லவேண்டும்.
”ஆதி தர்க்கத்தை தகர்க்கும் கேள்விகளை கொண்டு முன்னகர்கிறது. மனிதப்பிறவி ஏன், அதற்கு முன்னும் பின்னும் என்ன, காலம் என்ற ஒன்றின் பயன்பாடு என்ன, என்கிற கேள்விகளை சதையும், நகமுமான மனித வாழ்க்கை மூலமாக ஆராய அறிந்து கொள்ள முற்படுவது இதன் எண்ணம”
மாமா ஒரு மாதிரி பார்த்தார்.
“ சரி..நான் கொஞ்சம் டீடெய்லா சொல்றேன் .. கேளுங்க..” கதை சொல்ல ஆரம்பித்தேன்.
*
காலம் கணிப்பவர்களை பற்றி காரெல் சொன்னாராம், ’காலம் என்ற
பரப்பு சாதரண கண்களுக்கு தரை தெரிவதுபோல பருண்மையான
பெளதிகப்பரப்பு ஆகிவிடுகிறது என்றல்லவா ஆகிறது’
அந்த நூலிழையை கொண்டு தனது ஆடையை நெய்தி கொள்கிறது இந்தக்கதை. தனது பிறப்பிற்கு முன், பிறப்பிற்கு இறப்பிற்கும் நடுவில், அப்புறம் இறப்பிற்கு பின் என்று தொடரும் கண்ணிகள் என்னவாகயிருக்கும் என்கிற கேள்விகளை கேட்டுக்கொண்டே அதற்கான விடைகளை எல்லா பக்கத்திலிருந்தும் தேட முயற்சிக்கிறது.
பின்னுரையில் ஆசிரியர் தனது அநுபவம் பற்றியும், தனது வாசக அநுபவமான கார்லோஸ் காஸ்டெடெனாடா மற்றும் டான் ஜீவான் என்பவர்களையும் பற்றியும் குறிப்பிடுகிறார். அந்த விதையை தனது லோக்கல் மண்ணில் விதைத்து தன் மீது எழுந்த மரம்,செடி, கொடி அது படர்தல், அதன் கிளைகள் பரவல் என பாய்கிறது கதை.
*
ஒருவாறு முடித்தேன்.
”ஓஸ்.. கண்ண கட்டுதேப்பா.” வடிவேலு ஸ்டைலில் சொல்லிவிட்டு
கோபு மாமா கொட்டாவி விட்டார்.
“இது இந்திரா செளந்திர் ராசன் புக்கு மாதிரி தாண்டே. அதுல கூட காக்கை வரும்டே.. பாத்தேன்ன..” மாமா ஆரம்பித்தார்.
நான் காதுகளை மட்டும் திறந்து வைத்து மனதில் குள்ளச்சித்தன் சரித்திரத்தை அசை போட துவங்கினேன். இது வெறும் பூர்வ சென்ம கதை மட்டுமல்ல. அதை தர்க்க ரீதியாகவும், மற்றொரு பகுதியுமிருக்கலாம் என்று வாதிடும் ஒரு குரலாகவும் அணுகவேண்டும் என்று எண்ணிக்கொண்டேன்.
சாரை பாம்பின் பகுத்தறிவில் உயரம் இல்லாததால் உயரம் என்கிறதே இல்லாமல் எப்படி போகிவிடும். இயற்கை பிரம்மாண்டத்தில் நியூட்டனும், ஐன்ஸ்டினும் சொன்னவை வெறும் கடலோரத்தில் நின்று கால் நனைத்தவைதானே. இல்லாத ஓன்றை அணுக, அது இருக்கென்று ஒரு அநுமானம் கொண்டுதானே முன்னகரவேண்டும். ( Let us consider that as X )
மனிதன் அறியப்படாததை அறிந்து கொள்ள அறிவியலும், ஆன்மீகமும் வெவ்வேறு பாதையில் ஓரே நோக்கத்தோடு பயணிக்கிறதா. தெரியவில்லை என்பதால் இல்லையென்றாகிவிடுமா.. பகுத்தறிவுப்பஜனையால் அப்படி இன்னொரு அறிவியலும் இருக்கிறதென்பதை பேசுவதே பிற்போக்குத்தனமாகி விடுகிறதே..
’என்னயிருந்தாலும் அது காதுல பூதானேடே..’ என்று மாமா சொல்லலாம். அது வெகுஜன பகுத்தறிவு தளத்தில் உண்மை தான். எப்படி இந்தக்கதை அதில்லை என்று அவரிடம் சொல்வேன் ? மாமா போன்ற வாசகர்களுக்கு ஏன் யுவனின் கதை எங்கயோ தொங்குகிறது. ஒரு வேளை அமானுஸ்யமான தன்மை சாதாரண கதை மாந்தர்கள் கிட்டயிருந்து வர்றதுனாலே இருக்கலாமோ..
ஒரு அசாதாரண கேள்விகள் சில சாதரண கதை மாந்தர்கள் வாழ்க்கையினோடு எழுப்பப்பட்டு அதற்கான விடைகளை அந்த கதை மாந்தர்கள் மூலம் அடைய முயல்கிறார் கதை சொல்லி. இரண்டு நாவல்களிலும் கிட்டத்தட்ட மையக்கரு இதே தான். தேடல் இதே தான். களமும், பாத்திரங்களும் வேறுபட்டாலும்.
*
ஒரு மூன்று நாள் கழிச்சு, மாமா சொன்னார். அதற்குள் யுவனின் இரு நாவல்களையும் படித்து முடித்திருந்தார்.
” டேய் ரமணி, ” கூப்பிட்டார். அவர் கையில் இன்னம் புத்தகமிருந்தது. படுத்துக்கொண்டே, குடித்துக்கொண்டே ஒரு அமானுஸ்யமான(!) நிலையில் இருந்தார். உண்மையான இலக்கிய விசாரங்கள் செய்கிற நேரமிது.
”ஏய் மக்கா.. நொம்ப கதையளம்பறானேடே.. ”
அப்படியான நிராகரிப்போடுதான் மாமா ஆரம்பிப்பார். அவர் பயணம் நிராகரிப்பிலிருந்து ஆமோதிப்பு நோக்கிய தன்னுள்ளான விமர்சன பயணம். மாமா சொன்னதை பதில் ஏதும் சொல்லாது செவி முடியிருந்தேன். மெல்லிய புன்னகையால் நிராகரித்தேன். மெல்லியதாய் அவர் நாவலால் உலுக்கப்பட்டிருந்தார். அவர் குடைக்குள் மழை பெய்திருக்கிறது. எங்கயோ அது அவரை அசைத்திருக்கிறது. நான் கேட்டுக்கொண்டே கேட்காமலிருந்தேன்.
அதை புரிந்து கொண்டு அடுத்த தளத்திற்கு என்னோடுனான விவாதத்திற்கு வந்தார்.
ஆனால் விமர்சனம் தாண்டி, எனக்குள் குள்ளச்சித்தன் சரித்திரம் நிறைய ஊறிப்போயிருந்தது. அதிலும் சில காட்சிகள் பிரேம்களாய் தங்கியிருந்தன. சில அமானுஸ்யமான தருணங்கள், சில சொற்பிரவாகங்கள், சில தத்துவ குறிப்புகள் என மொழிநடை பொங்கி புனைவுலகம் நனைந்து வெளிப்படும் எழுத்து குறிப்பிட வேண்டிய முயற்சி, மிக அசாதரணமான சாதனை.
பிரமாதமான மொழிநடை.. சரளமாய் மாறும் ., சிறந்த பரிசோதனை முயற்சிகள்.. வெகுசன வாசகனையும் கொஞ்சம் கைபிடித்து தூக்கிவிடுகிறது. இல்லறங்களை துறந்து புதிய உலகத்தை கண்டுபிடிக்க போகும் ரிஸித்தன்மையை இந்திய மனதிற்கு வெகு அருகாமை கொண்டு செல்லும் சவாலோடு களம் புகுகிறது யுவனின் எழுத்துநடை. நிறைய பாராட்டுப்பெற்ற அவரின் கதைக்குள் கதை, மாறும் மொழிநடை – எவ்வளவுதான் பாராட்டினாலும், இன்னும் ஏதோ சொல்லாமா விட்டுட்டோமே என்கிற அளவிலான நடை. தனது பலம், பலவீனம் தெரிந்து அவர் எடுத்துக்கொண்ட களம் – இந்த பிரமாதமான நடைக்கு காரணமாயிருக்கலாம்.
மொத்தத்தில் நல்ல சரக்கு.
அதற்குள் முழ்கி மறுபடியும் அசைபோடுவது அதற்கான வார்த்தைகளை நானே சேர்த்துக்கொள்வதே நல்ல நாவல் நமக்குள் ஏற்படுத்தும் சில ரசாயன மாற்றங்கள். தமிழ் இலக்கியத்தில் மிக சின்னதான பிரமாண்டங்களாய் படைக்கப்பட்டவை தெரிகின்றன.
என்னை கவர்ந்த சில நிகழ்வுகள், அமானுஸ்யமான தருணாங்கள், சொற்பிரவாகங்கள், தத்துவங்கள் கீழே :
சில நிகழ்வுகள்:
1. சாகப்போகுமுன் சாமியாராயிருந்தாலும் சடாரான பெயர் சொல்லியழைக்கும் காட்சி விசுவரூபமெடுத்தது.
2. மிலேச்சனிடம் நீங்கள் அழிந்துபோவீர்கள் என பேசும் விலைமாது, அவனது சுபாஸி அப்பா, ஒரு பாசமான குடும்பம்
3. மிலேச்சன் நோய்வந்து கப்பலிருந்து தள்ளிவிடப்படும் காட்சி
4. காசின்றி எதிர்நிச்சல் ஹோட்டலிருந்து வரும் அப்பா.
சில அமானுஸ்யமான தருணங்கள் :
பழனியப்பன் வீட்டின் தானம் கொடுக்கும் பாத்திரம் கோமியத்தால் கழுவப்படாத போது யாரோ ஒரு இளைஞன் அந்தச் செய்தியை சொல்லிவிட்டு போகிறான்.
சாமி : முதலியார் + மனைவி (அவர்களின் குழந்தை)
மவுல்வி, துபாசி, பாடியே சாகும் பாடகன், மிலேசன், பைராகி, கேட்கும் காசி, அவன் பழைய பிறவி தொடர் ஞாபகங்கள்
சில சொற்பிரவாகங்கள் :
சதை வேகம் கொண்டு விழித்திருந்த இரவுகள்
வேறு எந்த ஜீவராசிக்கும் இனப்பெருக்கம் இத்தனை பெரிய மனச்சுமையாக இருக்குமா.. ?
காசி.. நகரம் என்பதைவிட நம்பிக்கைகளின் தொகுப்பு என்று சொல்லலாம்.
யாகம் மாதிரி ஒரு நாள் முழுதும் மணிக்கணக்காக வார்த்தைகள் துப்பும் சித்தர் ( நிறைய வார்த்தைகள் )
இந்தக்கணத்தில் இருக்கிறேன் என்ற உணர்வுதான் எத்தனை பேரானந்தமாய் இருக்கிறது – மிலேச்சன்
இருள் கனத்து அடர்ந்து நகரும் தெருவின் தான் மட்டும் தனியாக நின்று கொண்டிருப்பதாய் உணர்ந்தார் ஹாலாஸ்யம்.
யாரோ நம்மை கவனிக்கிறார்கள் என்று தெரிந்த மாத்திரத்தில் இயல்பு நிலை பிற்ழ்ந்து விடுகிறது.
காலம் இடம் பற்றிய அவதானங்கள் எத்தனை எத்தனை உண்டான பின்னும் முழுக்க திறக்கப்படாத கர்ப்பகிரஹம் போலவே மர்மம் நிரம்பினதாய் இருக்கிறது அவற்றின் அந்தரங்கம்.
எந்த விதமான தர்க்கத்துக்குள்ளும் அடங்க மறுக்கும் ஒன்று நடந்திருக்கிறது. காரண காரியங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு சுழலின் மையத்தில் சிக்கி மூச்சு திணறுவதாக உணர்ந்தார் பழனியப்பன்.
யாரும் தெரிந்து கொள்ளக்கூடிய ஆனால் யாருமே தெரிந்து கொள்ள ஆசைப்படாத ஒர் திறந்த ரகஸ்யம் இருக்கிறது ஆலாஸ்யம். அதை அறிவதுக்கு முயலப்போகிறேன் – முத்துசுவாமிகள்
விடுபட்ட சரித்திரத்தை அறிவதற்கு உள்ளுணர்வைத்தான் உபயோகப்படுத்தவேண்டும் என்று தோன்றுகிறது.
உணர்ச்சி உச்சமா முட்டும்போது அதை அறிவாலே சமனப்படுத்துகிறதும் அறிவோட பார்வை எல்லாத்தையும் அபத்தம், அர்த்தமில்லாததுன்னு காட்ட ஆரமிச்சதும் உணர்ச்சியாலே அதை மூடப் பாக்கறதும் எல்லாரும் செய்யறதுதானே – செய்யது..
சில தத்துவங்கள் சிறு சொற்களின் வழியே :
‘சாரைப்பாம்பின் பாசையில் உயரம் என்ற பதமே கிடையாது. ‘
‘Presently it flew off and the branch was swinging up and down from the pressure of flight’
ஜே.கே.
‘உம்முடைய அறையில் நாற்காலி இருக்கிறதல்லவா. இடத்தை அடைத்திருக்கிறது அது என்பது ஒரு பார்வை. நாற்காலி இட்மாகவே இருக்கிறது என்பது மற்றோரு பார்வை. இரண்டு பார்வைகளுமே ஒரு அடிப்படை உண்மையை மறுக்கவில்லை இடம் என்ற ஓன்று உண்டு என்பதை.’
‘இதற்கு மாறான பார்வை ஓன்றேதான் உண்டு. இடம் என்ற ஓன்றே இல்லை என்பது. அவர்களின் நோக்கமும் உயர்வானதுதான். பிசாசை ஓழிக்க வேண்டுமானால், கடவுளை ஒழித்தாக வேண்டும் என்கிறார்கள் அவர்கள். நியாயம்தானே.’
‘ஆனால் பாமர ஜனங்களுக்கு வேண்டியிருக்கிறது. காப்பதற்கு கடவுளும் மிரட்டுவதற்கு பிசாகம் இல்லாது போனால் அவர்களுடைய மனங்கள் சிதறிவிடும் “
தங்கள் பிரக்கைவெளியின் கவனிக்கப்படாத மூலையில் காத்துக்க கொண்டிருக்கும் மரணம் என்ற விசப்பூச்சியை சதா சர்வகாலமும் தர்சிப்பவர்களாகி விடுவார்கள்.
*
இந்தக்கதையை வாசிப்பவர்கள் அதன் பின்னுரையை படித்துவிட்டு படிப்பது நலம் பயக்கும். அது ஆசிரியர் யோசிக்கும் தளத்திற்கு சின்னதான கட்டியமும், கைகாட்டும் (மற்றும் சப்பை கட்டுகிற) வேலையையும் செய்கிறது என்று விமர்சகர்கள் வாதிடலாம்.
மாற்று மெய்யமைய்யின் மெய்மைத்தன்மையை விட அதில் கலந்திருக்கும் பேன்ட்டஸி அம்சம் எனக்கு கவர்ச்சியூட்டுகிறது என்கிற ஆசிரியர், வாசகனுக்கு தனது எழுத்துபரப்பின் சட்டங்களை ஓரளவு கோடிட்டு காட்டிவிடுகிறார்.
இந்தநாவல் வெறும் பேண்ட்டஸி அம்சம் மட்டும்தானா.. நான் என்னவோன்னுல்ல நினைச்சேன் என்று ஒரு வாசகன், விமர்சகன் நினைத்தால் அது அவரது வாசக, விமர்சன ஆழத்தை காட்டும்.
எல்லோரும் ஆன்மீகம் பேசுகிறார்கள். பக்கம் பக்கமாக கதை சொல்லியின் வாயாக அவர்கள் மாறுகிறார்கள். நாடி சோசியம், காந்தி இறந்த கதை, தாயரம்மா சிரிப்பு என்கிற நிகழ்வுகளும், கதையிடங்களும் சாதரண அறிவியல் பார்வை யதார்த்தம் கொண்ட தளத்தை முற்றிலும் நிராகரிக்கின்றன.
சாதரண தளத்தில் கதை போகாமலிருக்க, தத்துவ ஆன்மிக தளத்தில் நிற்கவும், அதோடு வாசிப்பின்பம் அளிக்கவும் நிறைய முயற்சிகள் செய்யப்பட்டிருக்கிறது. இந்த புத்தகம் அதுபோகும் இடங்களுக்கெல்லாம் ஒரு மாய்த்தோற்றத்தை கொடுத்துவிடுகிறது என்பதை புனைவுதான் என்றாலும் எழுதுவதற்கே ஒரு துணிவு வேண்டும்தான்.
[”இந்த புத்தகத்தை படித்துவிட்டு 16 நாட்களுக்குள் யாருக்கும் கொடுக்காவிட்டால் உங்களை சர்வ வல்லமை சார்ந்த ஆவி சூழும். கொடுத்துவிட்டால் குள்ளச் சித்தன் ஆசி வழங்கி ,தடை பட்டு போன H1 விசா கிடைக்கும். மற்றும் கீரின் கார்டு கிடைக்கும்னு ஒரு இமெயில் தட்டுடே.. நம்ம மக்கா எல்லாம் வாங்கிருவாண்டே..” கோபு மாமா.. ]
*
இந்த பிரபஞ்ச கேள்வி, காலம் பற்றிய கதைகள் இதெல்லாம் தேவையாயென்ன, இதைப்பற்றி கவலைப்படுவது மானுட நிகழ்கால துரோகமல்லவா.. இப்போதய பிரச்சனைகளை விடுத்து வரலாற்று கடந்த கால, எதிர்கால தொகுப்புகள் வெறும் அறிவு ஜீவி பசிக்குத் தீனிதானேயொழிய அதனால் அளவிடக்கூடிய பலன்கள் எதுவும் கிடைக்கப்போவதில்லையே, என்ற யதார்த்த கேள்வியை நீங்கள் எழுப்பலாம்.
அந்த சமூகத்தை பற்றித்தானே ஒரு இலக்கியவாதி தன் பொருட்களுக்கான கச்சா பொருளை தேர்ந்தேடுத்துக்கொள்ள வேண்டும். அந்த சமூகத்தின் வலிகளை, வளர்ச்சியை, முரண்களை பற்றித்தானே அவன் பதிவும், பதிலும், கேள்வியும் செய்ய வேண்டும். இல்லாத ஓன்றிற்காக அவன் மெனக்கெடுவது, காற்றில் பந்தல் போடுவது ஆன்மீக மடாதிபதிகளின் வேலையாயிற்றே என்கிறதான கேள்விகளை தாண்டி இப்போதய அறிவு உலகம் ’எல்லாவற்றிகும் இடமுண்டு’ என்று ஓரளவு புரிந்துகொண்டிருக்கிறது.
உலகம் இப்போதய தேவைக்கு மட்டும் தேவையான உடலை, மட்டும் ஆதாரமாய் கொண்டு வளர்ந்து விடவில்லை. மனம், தொடமுடியாத சூட்சுமம், எண்ணம், ஏதோதோ பெயர்கொடுத்து அதை அறிய முயல்கிறது. அதை அறிய அறிவியல் குடுவைகளும், தொலைநோக்கிகளும் மட்டும் போதாது. மனம் என்பதன் வளர்ச்சியே மானுட வளர்ச்சி. அதை தொடர்ந்து செய்துகொண்டிருப்பது அடுத்த கட்ட வளர்ச்சிக்கு தேவையான ஓன்றே. அதில் நிகழ்காலத்திற்கான இடம் சொற்பமே, மற்றும் அது இதுவரை பயணப்படாத பாதையை நோக்கி பயணப்படவேண்டியிருப்பதால் அதன் நோக்கில் சிறிய விடயங்களை புறம்தள்ளி முன்னகரவேண்டியிருக்கும். இது சமூகத்திற்கான உடனடி தேவையை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையல்ல. அடுத்த கட்ட வளர்ச்சிக்கான பரிசோதனை நிலையம். தங்களையே சோதனை கருவிகளாக்கி கொண்டு முன்செல்லும் ஆன்மீக, தத்துவ அறிவியல். இது படரக்கூடிய தளம் (canvas) மிக பிரமாண்டமானது.
சாதரண மனிதர்களுக்குத்தானே நேற்று, இன்று, நாளை, மணி, நொடி, தேச எல்லைகள் எல்லாமே.. அதையெல்லாம் தாண்டி பாய்கிறது மனது. மனதிற்கு இவையெல்லாம் சுமையாகிறது. சிலுவையாகிறது. தொலைந்த குண்டூசியாகிறது.
அதை தேட யாராவது யானையை கூப்பிடுவார்களா ? அப்படித்தான் யுவன் நாவலின் முக்கிய கதாபாத்திரங்கள் பெரும்பாலும் எண்ணுகின்றன. அப்படித்தான் சொல்கிறார் முத்துசுவாமிகள். எவ்வளவு பெரிய கேள்வி ? விடை கிடைக்குமா என்று தெரியாத கேள்வி. அதுதான் அவர் சமூகம் மீது ஏற்றும் கேள்வி ?
அளவிடமுடியாத, தெரியாத, தொட முடியாத, இல்லாத சில விடயங்களை பேச ஆரம்பிப்பதே கடினமான முயற்சி.அது சரியான தளத்தில், தரத்தில் இல்லாவிட்டால் சரியான கதாபாத்திரம் மூலம் கதை சொல்லி பேசாவிட்டால் அது அர்ஜீனன் கண்களுக்கு, குறி தாண்டி எல்லாவற்றையும் காட்டிவிடுகிறது.
அப்படியாக நேர்ந்துவிடுகிற அதிகபட்ச வாய்ப்புகளோடன் தான் இந்தக்கதை பயணிக்கிறது. தத்துவங்களையும், தர்க்கங்களையும் எடுத்துக்கொள்கிற எல்லா கலை வடிவங்களுக்கும் நேர்ந்துவிடுகிற விபத்து தான் இது.
*
யானையை யாராவது குண்டூசி தேட கூப்பிடுவார்களா. ?? இந்தக்கதை காட்டும் யானை நாம் கடைவீதியில் கலர் சட்டை போட்டு சலாம் போட்டு, துட்டு வாங்கி தலைவனிடம் கொடுத்து, கால் கட்டவிழத்து விட்ட பின்னும், சங்கிலிச்சுமையை மனதில் எண்ணி மெல்ல மெல்ல அதன் தூரத்திலே காலசைக்கும் துரும்படி யானையல்ல.. குண்டூசி தேட யானைகள் அழைக்கப்படும்போது அவை வெறும் இயந்திர குரல்களாகவும், நிறுவனங்களாகவும், கேட்டால் கொடுக்க கடமைப்பட்ட தெய்வங்களாகவும் மனித வழிபாட்டு அடிமைகளாகவும் கருத்துருவாக்கம் பெறுகின்றன. அப்படிப்பட்ட யானைகள் தான் கோபு மாமா சொல்லும் இந்திர செளந்தர் ராசன் கதைகள். யுவனின் கதை யானை அதன் நிஜ உருவத்திலே அதன் பிறப்பகமான கானகத்தையே தேட முயற்சிக்கிறது.
துரும்படியிலும் யானை படுத்திருக்கிறது. கானகத்திலும் நிமிர்ந்து கனத்து நடக்கிறது. எதை எழுத்தாளன் எடுத்துக்கொள்கிறான் என்பது அவனது சாய்ஸ், விருப்பம், மிகவும் அந்தரங்கமான, சில சமயம் ஏன் என்று பதில் சொல்லமுடியாத விருப்பமும் கூட.
இதில் ஏன் யானையை எடுத்துக்கொண்டீர்கள், பூனையை எடுத்துக்கொள்ளவில்லை என்று ஒரு விமர்சகன் எப்படி கேட்க முடியும்.
ஆதி தர்க்கத்தை தகர்க்கும் கேள்விகளை தாங்கிய யானை மாற்று மெய்மைத்தன்மையோடு நாவலில் குண்டூசி விடுத்து எதையோ தேடுகிறது. நாமும் யானையை, அது விட்டுச்சென்ற தடத்தை தடவி தடவி புரிந்து கொள்கிறோம்.
)அடுத்த பக்கத்தில்(
- அணு ஆயுதப் போரில் விளையும் பேரழிவுகள். (கட்டுரை: 2)
- அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்தும் சர்வதேச தமிழ்ச் சிறுகதை, கவிதைப் போட்டி.
- தீபச்செல்வனின் ‘ஆட்களற்ற நகரத்தைத் தின்ற மிருகம்’ கவிதை நூல் வெளிவருகின்றது.
- ஈரம் – ஆன்ட்டி கிளைமாக்ஸ்
- பைக்காரா
- இ.பா வின் ‘வேதபுரத்து வியாபாரிகள்’- ஒரு அரசியல் அங்கத நாவல்.
- யுவனின் குண்டூசி தேடாத யானைகள்= நாவல் விமர்சனம் (2)
- யுவனின் குண்டூசி தேடாத யானைகள் – நாவல் விமர்சனம் (1)
- சினிமா கட்டுரை யஸ்மின் அமாட் சினிமா : “sepet” ஒரு சீன வாலிபன் – ஒரு மலாய்க்காரப் பெண் – மறக்க முடியாத காதல் கதை
- திலகபாமாவின் மறைவாள் வீச்சு
- 67 வயதில் சிறுவனான மாயம்
- குலாபி தியேட்டர் சினிமாவை முன்வைத்து
- மிருதங்க வித்வான் T.K.மூர்த்தி நேர்காணல் (முடிவுப்பகுதி)
- மிருதங்க வித்வான் T.K.மூர்த்தி நேர்காணல்
- “கரப்பான் பூச்சி பிரபஞ்சம்” (cosma…a cocoon of cockroch)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மழை பாடும் கீதம் >> கவிதை -21 பாகம் -2
- வேத வனம் –விருட்சம் 64
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -2 பாகம்-3 மதுக்குடி அங்காடி (The Tavern)
- பனி சூழ்ந்த பாலை!
- நூலகத்தில் பூனை
- நிச்சயமாக உனதென்றே சொல்
- காதல்
- இரவினில் பேசுகிறேன்
- அதிகாரத்துவத்தின் நீட்சியும் ஆளுமையின் வலிமையும்
- கலைஞர் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்..
- வார்த்தை டிசம்பர் 2009 இதழில்…
- வாடகை
- மூன்று கதைகள்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) நாலங்க நாடகம் அங்கம் -4 காட்சி -2
- டிராகன்