யுக தர்மம் அறியாதவரா சின்னக் கருப்பன்?

This entry is part [part not set] of 36 in the series 20060818_Issue

மலர் மன்னன்


சில மாதங்களுக்கு முன் ஒரு கூட்டத்தில் பேசுமாறு என்னை அழைத்திருந்தார்கள். நான் பேசும்போது யுக தர்மங்கள் குறித்தும் பேசவேண்டியதாயிற்று. களத்தில் ஆயுதம் இழந்து நின்ற ராவணனிடம் இன்று போய் நாளை வா என்று மர்யாதா புருஷோத்தம் ஸ்ரீ ராமச்சந்திரப் பிரபு சொன்னது ஒரு யுகம். அச்வத்தாமா ஹதஹ: என்று உரக்கச் சொல்லிவிட்டுப் பிறகு மெதுவான குரலில் குஞ்சரஹ என்று ஆயிரங்களான நீதி; அவையறிந்த தருமன் சொன்னது இன்னொரு யுகம். அந்தந்த யுகங்களுக்குரிய தருமத்தின் பிரகாரம் இயங்கத் தவறினால் அழிவு நிச்சயம். இதுதான் மஹா யோகியும் மஹா போகியுமான ஸ்ரீ கிருஷ்ண பகவான் நமக்குத் தந்திருக்கிற உபதேசம். இதனைப் புரிந்துகொள்ளாமல் யுக தர்மத்திற்குப் பொருந்தாத வகையில் நாம் செயலாற்றிக் கொண்டிருப்பதால்தான் அடிமேல்அடி வாங்கிக் கொண்டிருக்கிறோம் என்று எனது பேச்சில் குறிப்பிட்டேன். மர்யாதா புருஷோத்தமனை மெய்சிலிர்க்க வணங்குவோம். அதே சமயம் பகவான் கண்ணபிரான் காட்டிய வழியில் நடப்போம் என்று சொன்னேன்.

மரியாதைக்குரிய சிந்தனையாளர் சின்னக் கருப்பன் நேசக்குமாருக்கு எழுதிய கடிதத்தையும் முன்னதாக நம்முடைய பாரத சமுதாயத்தில் இரண்டறக் கலந்துள்ள முகமதிய சகோதரர்களைப் பற்றி அவர் தெரிவித்திருந்த கட்டுரையினையும் படித்தபோது முன்பொருநாள் ஒரு கூட்டத்தில் அவ்வாறு பேசியதுதான் எனக்கு நினைவு வந்தது.

பயங்கரவாதத்தால் நீண்ட நெடுங்காலமாக வேறெந்த நாடும் அனுபவித்திராத அளவுக்கு பாரதம் உயிர்ச் சேதமும் பொருள் சேதமும் அடைந்து வந்துள்ள போதிலும், மேலும் மேலும் இத்தகைய சேதாரங்கள் தொடர்கின்றன என்றாலும் பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கான நமது செயல்பாட்டில் எவ்வித விறுவிறுப்பும் ஏற்பட்டாகவில்லை. அண்டையி லுள்ள சுண்டைக்காய் நாடுகளுக்கெல்லாம் இளப்பமாகிப் போய்விட்டதுதான் இந்த அறுபதாண்டு சுயராஜ்ஜிய வாழ்க்கையில் நாம் கண்ட பலன். தொடக்கத்திலிருந்தே பின்னடைவுக்கான பொருளாதாரக் கொள்கையை வரித்துக்கொண்டு அழிவுப்பாதையில் கன வேகமாகப் பயணித்த போதிலும், தனிமனித சுய முயற்சிகளால் தாக்குப்பிடித்த நாம், திவாலாகி விடப்போகிறோம் என்பதைச் சிறிது காலதாமதமாகவேனும் புரிந்துகொண்டு சுதாரித்ததால் தென்னமெரிக்க பனானா குடியரசுகளின் கதி நேராமல் தப்பித்தோம். இந்த அறுபது ஆண்டுகளில் ஒரு தடவைகூட நாம் யுக தர்மத்தின் பிரகாரம் நடந்து கொள்ளவில்லை. எனினும் ஸ்திரமான அஸ்திவாரத்தால் தாக்குப் பிடித்து வருகிறோம். இந்த அஸ்திவாரம் இப்போதல்ல, ஆயிரமாயிரமாண்டுகளுக்கு முன் போடப்பட்டதாகும்.

1947 ஆகஸ்ட் 15 க்குப் பிறகு சூட்டோடு சூடாகவே பாகிஸ்தான் சூதாகக் காஷ்மீரை அபகரிக்க முற்பட்டது. அந்த நாட்களில் ஹஸ்கே லியா பாகிஸ்தான் லட்கே லேங்கே ஹிந்துஸ்தான் என்பதுதான் முஸ்லிம் லீகர்களின் கோஷமாக இருந்துவந்தது. சிரித்துக் கொண்டே எடுத்துக்கொண்டோம் பாகிஸ்தான், போராடிப்பெறுவோம் ஹிந்துஸ்தான் என்பதுதான் அதன் அர்த்தம். இன்றைக்கு அதுதான் நடந்துகொண்டிருக்கிறது. நேருக்கு நேர் போரிட்டு ஜயிப்பது சாத்தியமில்லை என்பது புரிந்துவிட்டதால் அனாமத்தான புறமுதுகுப் போர் நடந்து வருகிறது.

பிரிவினைக்குப் பிறகும் ஹிந்துக்களும் சீக்கியர்களும் மேற்குப் பாகிஸ்தானிலிருந்தும் கிழக்குப் பாகிஸ்தானிலிருந்தும் அடித்து விரட்டப்பட்டார்கள். அவர்கள் விட்டு வந்த உடமைகள் பிறரால் ஆக்கிரமித்துக்கொள்ளப்பட்டன. அவற்றுக்கெல்லாம் இழப்பீடு தருமாறு வலியுறுத்தும் கண்டிப்பு நம்மிடம் இருக்கவில்லை. பின்னர் மியன்மார் என்று இப்போது அழைக்கப்படும் பர்மாவிலும் இதுதான் நடந்தது. பாரதியர்களான தமிழர்கள் அதுகாறும் அரும்பாடு பட்டு உழைத்துச் சம்பாதித்த உடமைகளையெல்லாம் போட்டுவிட்டு உயிரைக் கையில் பற்றிக்கொண்டு ஓடிவரவேண்டியதாயிற்று. இதுகுறித்து நமக்குச் சிறிதளவும் சொரணை வரவில்லை. இலங்கையில் பாரத வம்சாவழித் தமிழர்களின் நிலையும் இவ்வாறேயானது. அவர்கள் தொடர்பாக பண்டாரநாயகவுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் இலங்கைக்குத்தான் சாதகமாக அமைந்தது. பின்னர் கச்சத் தீவு ஆதாரப் பூர்வமாக பாரதத்தின் நிலப்பரப்பு என்பது தெரிந்தே சில நிபந்தனைகளுடன் இலங்கைக்குத் தாரை
வார்க்கப்பட்டது. நிபந்தனைகளை இலங்கை கிள்ளுக் கீரையாகக் கூட மதிப்பதில்லை. நம்முடைய ராமேஸ்வரத்து மீனவ சகோதரர்கள் இலங்கைக் கடற்படையினரல் சூறையாடப்படுவதும் கொல்லப்படுவதும் இன் றளவும் தொடர்கிறது. ஆனால் எதுவுமே நடவாததுபோல் இலங்கை அரசின் பிரதிநிதிகள் அரசு விருந்தினராக இங்கு வந்து ஆலோசனை செய்வதும் உதவிகள் கோருவதும், நமது அரசும் அவற்றுக்குச் செவிசாய்ப்பதும் தொடர்கிறது. ஜனத்தொகை மிகவும் அதிகரித்துவருவதால் மனித உயிர்களுக்கு மதிப்பே இல்லாது போயிற்று போலும், நமக்கு. மக்கள் தொகை அதிகரித்தால் அது மனித ஆற்றல் பெருகும் ஆதாயம் என்று புரிந்துகொண்டு அதைப் புத்திசாலித்தனமாகப் பயன் படுத்திகொள்வதல்லவா அறிவுடமை?

மேற்கு பாகிஸ்தானத்து அராஜக அரசு ராணுவத்தை ஏவி கிழக்குப் பாகிஸ்தானத்தைச் சித்திரவதை செய்து இன அழிப்பில் இறங்கிய சமயம் பெரும் பொருளாதாரச் சுமைகளைச் சுமந்துகொண்டு மனிதாபிமான அடிப்படையில் கிழக்குப் பாகிஸ்தான் வங்க தேசமாக விடுதலைபெற நமது ராணுவத்தின் ரத்தம் சிந்தவைத்தோம். பின்னர் நிர்வாக வசதியை முன்னிட்டு இடைப்பட்ட நிலப்பரப்பை வங்கதேசம் கேட்டபோது பெருந்தன்மையுடன் சில நிபந்தனைகளுடன் விட்டுக் கொடுத்தோம். வங்கதேசம் அந்த நிபந்தனைகளைப் பொருட்படுத்துவதே இல்லை. நாமும் அதுபற்றிக் கவலைப் படுவதில்லை. விளைவாக இன்று வங்கதேச எல்லைக் காவல் படை நம் காவலர் மீதும் நம் கிராம மக்கள் மீதும் சர்வ சாதாரணமாகத் தாக்குதல் நடத்துகிறது. எனினும் அண்டை அயலாருடன் நட்புறவுடன் இருக்கவேண்டும் என்று நமக்கு நாமே கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டு வங்க தேச அரசுடன் சுமுகமாகப் பழகிவருகிறோம். நம்முடைய ராணுவ வீரரும் பிரஜைகளும் கொல்லப்படுவதுபற்றி நமக்குப் பதற்றமே ஏற்படுவதில்லை. ராணுவத்திற்கு ஆள் எடுப்பதே எதிராளியிடம் சாகக்கொடுப்பதற்குத்தான் என்கிற மனோபாவம் வந்து
விட்டிருக்கிறது, நமக்கு. இதேபோல் பயங்கரவாதத் தாக்குதல் அன்றாட நிகழ்ச்சி
யாகிவிட்டதாலும் மரத்துப் போய்விட்டிருக்கிறோம். தாக்குதல் நிகழ்ந்த உடனுக்குடன் சகஜ நிலை திரும்பிவிட்டதாக ஜம்பம் அடித்துக்கொள்கிற அளவுக்கு நமது தோல் மரத்துவிட்டிருக்கிறது!

எவருடைய மனமோ புண்பட்டுவிடும் என்கிற கரிசனம் காரணமாக உண்மையை வெளிப்படையாகப் பேசவும் தயங்குகிறோம். தேவையில்லாமலேயே சப்பைக்கட்டு கட்டிக்கொண்டு திரிகிறோம். இன்றைக்கு நமது தேசத்தின் நிலவரம் என்ன என்பதை நிதானமாக யோசித்தால் எளிதில் தெளிவு பெறமுடியும்.

பொது மக்களைப் பொருத்தவரை அவர்கள் எந்த மதத்தவராயினும், மொழியினராயினும், அரசியல் கட்சி ஆதரவாளராயிருப்பினும் தமது அன்றாட வாழ்க்கையின் அமைதி சிறிதளவு பாதிக்கப்படுவதையும் விரும்புவதில்லை. எனவே பாரதத்தில் வசிக்கும் நம் முகமதிய சகோதரர்களில் பெரும்பாலானோர் பயங்கரவாதத்தை ஆதரிப்போர் அல்ல என்று எவரும் வக்காலத்து வாங்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். பெரும்பாலான மக்கள் அமைதி விரும்புவோராயினும் அமைதி குலைவதற்கான சந்தர்ப்பங்கள் தமக்கு மத்தியில் நிகழ்கையில் நமக்கு ஏன் வம்பு என வாளாவிருப்பவர்
களாகவே உள்ளனர். முகமதிய சகோதரர்கள் விஷயத்தில் இத்தகைய மனோபாவத்தோடு, கண் மூடித்தனமான மத ஒற்றுமையுணர்வும் சேர்ந்துகொள்கிறது. பாகிஸ்தானிய முகமதியரை வேறுபடுத்திப் பார்க்கும் எண்ணம் அவர்களுக்கு இருப்பதில்லை. பாகிஸ்தானிலிருந்து வரும் பலருடன் திருமண உறவு கொள்ளும் பாரதிய முகமதியக் குடும்பங்களை பாரதம் முழுவதும் பரவலாகக் காணலாம். இத்தகைய குடும்பங்களுக்கு பாகிஸ்தான் வேற்று நாடு என்பதோ அதற்கு பாரதத்துடன் இணக்கமான உறவு இல்லை என்பதோ உறைப்பதில்லை.

சில ஆண்டுகளுக்கு முன் தென் ஆப்பிரிக்காவில் நடந்த கிரிக்கெட் ஆட்டத்தின்போது பாரதம் பாகிஸ்தானை வென்றது நினைவிருக்கிறதா? அப்போது நான் பெங்களூரில் இருந்தேன்.

அந்த வெற்றிச் செய்தி இரவில்தான் வந்தது. உடனே ஆர்வம் மிக்க இளைஞர்கள் சிலர் நமது தேசியக்கொடியை ஏந்தியவாறு, பாரதம் வெற்றி, பாகிஸ்தான் தோல்வி என முழங்கியபடி சைக்கிளில் ஊர்வலம் சென்றனர்.

பெங்களூரில் டேனரி ரோடு என்ற பெயரில் ஒரு சாலை உள்ளது. தோல் பதனிடும் சாலை என்று பொருள். இங்கு முகமதியர்தான் மிகப் பெரும்பாலானவர்கள். இந்தத் தெருவில் இளைஞர்கள் ஊர்வலம் சென்றபோது சிலர் வழிமறித்து தேசியக் கொடிகளைப் பிடுங்கிக் கொண்டு கொடி கட்டிய கழிகளால் இளைஞர்களைத் தாக்கத் தொடங்கினார்கள். இளைஞரில் எனக்கு அறிமுகமான ஒருவர் உடனே தகவல் தெரிவித்தார். நான் நடமாடும் காவல்துறையான ஹொய்சளாவுக்குத் தகவல் கொடுத்துவிட்டு துணைக்குச் சிலரையும் அழைத்துக்கொண்டு டேனரி சாலைக்கு விரைந்தேன். நான் அங்கு சென்ற போது எண்ணிக்கையில் குறைவான இளைஞர்களை டேனரி சாலை ஆட்கள் பலர் தாக்கிக் கொண்டிருந்தனர். இளஞர்கள் முடிந்தவரை திருப்பித்தாக்கிக் கொண்டும் தற்காத்துக் கொண்டும் இருந்தனர். நானும் என்னோடு வந்த சிலரும் உள்ளே புகுந்து கைகலப்பைத் தடுக்க முற்பட்டோம். அதன் விளைவாக எங்கள் மீதும் தாக்குதல் நடைபெறலானதும் நாங்களும் தற்காப்பின் நிமித்தம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கலானோம். இதற்குள் காவல் துறையினர் ஒரு துணை ஆணையர் தலைமையில் வந்து நிலைமையைச் சரிசெய்தனர். விலகிச் சென்ற டேனரி சாலை நபர்களில் சிலர் தம் கையில் சிக்கியிருந்த பாரத தேசத்து மூவண்ண தேசியக்கொடியை லைட்டரால் தீவைத்துக் கொளுத்தினார்கள். காவலர் சிலர் பாய்ந்து சென்று தீயை அணைத்தனரேயன்றி வேறு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

கண்ணெதிரே தேசியக்கொடிக்குத் தீ வைத்தவர்களைக் கைது செய்யாமல் நிற்பது ஏன் என்று துணை ஆணையரிடம் கேட்டேன். விவகாரம் பெரிதாகிச் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாகிவிடும் என்று அவர் அதற்குச் சமாதானம் சொன்னார். அவர் தமது கடமையிலிருந்து தவறுவதைச் சுட்டிக் காட்டினேன். இல்லை, ஏனெனில் சிறுபான்மையினர், குறிப்பாக முகமதியர் இம்மாதிரியான செயல்களில் இறங்கும்போது அவற்றைக் கவனியாது விட்டு விடுமாறு தங்களுக்கு வாய் மொழியாக உத்தரவிடப்பட்டுள்ளது என்று அவர் பதிலிறுத்தார். இவர்கள் விஷயத்தில் கைகள் கட்டப்பட்ட நிலையில்தான் நாங்கள் பணியாற்ற வேண்டியுள்ளது என்று சிறிது குற்ற உணர்வோடு ஒப்புக்கொண்டார். இதுபோன்ற சம்பவங்களை செய்தியாக்கி விவகாரத்தைப் பெரிதாக்கிவிட வேண்டாம் என்று பத்திரிகைகளுக்கெல்லாம்கூட அரசு வேண்டுகோள் விடுத்திருக்கிறதே, பத்திரிகைக்காரரான உங்களுக்குத் தெரியாதா என்றார். நான் எந்தப் பத்திரிகையிலும் இப்பொழுது வேலை பார்க்கவில்லை, வெளியிலிருந்து எழுதுவதோடு சரி என்றேன்.

மறுநாள் முதலமைச்சர் எஸ் எம் கிருஷ்ணாவைச் சந்தித்து முதல் நாள் இரவு நடந்ததைச் சொன்னேன். அவருடைய அரசு சிறுபான்மையினர் மீது நடவடிக்கை எடுப்பதில் நிதானப்போக்கைக் கடைப்பிடிக்குமாறு காவல் துறைக்கு வாய்மொழியாக உத்தரவிட்டிருப்பது உண்மைதானா என்று விசாரித்தேன். ஆமாம் என்று அவர் ஒப்புக்கொண்டார். குறிப்பாக முகமதியருக்கு சகிப்புத்தன்மை குறைவு; எளிதில் உணர்ச்சிவசப்பட்டு கூட்ட சுபாவிகளாகச் செயல்படத்தொடங்கிவிடுவது அவர்கள் வழக்கம்; நாம்தான் பொது அமைதியை உத்தேசித்துப் பொறுமையாகப் போகவேண்டும் என்று சமாதானம் சொன்னார்.

இத்தகைய மனோபாவம்தான் இன்று நம்மிடையே பொதுவாக நிலவிவருகிறது. அன்று பெங்களூர் டேனரி சாலையில் எண்ணிக்கையில் குறைவான சில இளைஞர்களை வளைத்துக்கொண்டு பலர் முரட்டுத்தனமாகத் தாக்கியதை தெருவாசிகள் அனைவரும் வெளியே நின்று வேடிக்கை பார்த்து ரசித்தனரேயன்றி ஒரு பெரியவராவது வந்து தடுக்க முற்படவில்லை. தேசியக் கொடி எரிக்கப்பட்டபோது கூட அவர்களில் எவரும் மனம் பதறவில்லை. இதுவும்தான் இன்று பொதுவாக நமது தேசம் முழுவதும் காணப்படும் நிலவரம்.

1965லும் 1971 லும் நாம் வெகு எளிதாகப் பாகிஸ்தானை முடக்கிப்போட்டிருக்க முடியும். 1971 லேயே காஷ்மீர் பிரச்சினையை ஒன்றுமில்லாமல் செய்துவிட்டிருக்க முடியும். செய்யத்தவறி மெத்தனமாக இருந்தோம். அணு ஆயுத வசதியுள்ள நாடாகப் பாகிஸ்தானை நாமே வளரவிட்டோம். போதாக்குறைக்கு இரு தேச மக்களிடையே நல்லுறவை வளர்க்க முற்படுவதாகக் கூறிக்கொண்டு பாகிஸ்தானியருக்கு விசா வழங்குவதைத் தாராளமாக்கினோம். விளைவு, உள்ளே நுழைந்த ஆயிரக்கணக்கான பாகிஸ்தானியர் திரும்பிச் செல்லாமல் இங்கே உள்ள முகமதிய சமுதாயத்தினரோடு இரண்டறக் கலந்து கரைந்துபோய் விட்டனர். நம்முடைய சர்க்கார் சிறிதும் கூச்சமில்லாமல் சுற்றுலா விசாவில் வந்த பல்லாயிரம் பாகிஸ்தானியர் மாயமாய் மறைந்துவிட்டதாக அறிக்கை சமர்ப்பிக்கிறது. இதில் பாகிஸ்தானியருக்கு உள்ள சௌகரியம், அவர்களை பாரத முகமதியரிடமிருந்து வேறுபடுத்திப் பார்ப்பது சாத்தியமல்ல. இங்கேயே தங்கிச் சில பெண்களையும் மனைவிமார்களாக்கிக் கொண்டு பாரதப் பிரஜைகளாகவே வாழத் தொடங்கியுள்ள பாகிஸ்தானியர் மிகப் பலர். இந்த அடிப்படையிலேதான் இன்றைய பாரத்த தேசத்து முகமதிய சகோதரர் சமூகத்தைக் காண வேண்டியுள்ளது. காஷ்மீர் முதல் பாரதத்தின் தென்கோடிவரை முகமதிய சமூகத்தவர் மத்தியில் பாகிஸ்தானத்து உளவுப் பிரிவு தனது நாற்றுகளை நடமுடிந்துள்ளது இதனாலேதான். அச்சம், ஆசை, உறவுமுறை, பந்த பாசம், மத ஒற்றுமை எனப் பல காரணங்களால் களைகளான அந்த நாற்றுகள் இன்று நன்கு செழித்து வளர்ந்துகொண்டிருக்கின்றன. சிறுபன்மையினர் மனம் புண்படலாகாது என்ற பெருந் தன்மையுடன் இதனைக் கண்டும் காணாமல் நடந்துவருகிறோம்! இது நமது வருங்கால சந்ததியினருக்கு நாம் இழைக்கும் மிகப்பெரிய துரோகம் என்பது நமக்கு உறைப்பதே யில்லை.

1971ல் தொண்ணூறாயிரம் பாகிஸ்தானிய ராணுவத்தினரைப் போர்க்கைதிகளாகப் பிடித்து, சர்வ தேச மரபின் பிரகாரம் அவர்களுக்கு ஒரு குறைவும் வராமல் சுகபோகத்துடன் வைத்திருந்தோம். கைதிகளான அவர்களை வசதியான கட்டிடங்களில் வைத்துவிட்டு, நமது ராணுவ வீரர்கள் கிழிந்துபோன கூடாரங்களில் குளிரையும் மழையையும் சகித்துக்கொண்டு காவல் காத்தார்கள்! பிற சந்தர்ப்பங்களில் பாகிஸ்தானில் பிடிபட்ட நம் வீரர்களோ கண்கள் பிடுங்கப்பட்டும், காதுகள் அறுபட்டும் சித்திரவதை செய்யப்பட்டு வெறும் சடலங்களாகத் திருப்பித்தரப்பட்டார்கள். சின்னக் கருப்பன் ஸ்ரீராமனை நினைவூட்டியதைப்படித்தபோதும், அவர் எழுதியதற்குப் பொருத்தமாக மர்யாதா புருஷோத்தமனின் சித்திரம் வெளியானது கண்டபோதும் மெய் சிலிர்த்துச் சில நிமிடங்கள் நினைவிழந்து செயலற்றுப் போனேன். ஓரளவு பிரக்ஞை வரப் பெற்ற பிறகே பிரத்தியட்ச நிலவரம் உணர்ந்து யுக தர்மம் இன்னதன்றோ என யோசிக்கலானேன்.

உத்தரப் பிரதேசம் தொடங்கி, மேற்கு வங்கம், பிஹார், மத்தியப் பிரதேசம், கர்னாடகம், தமிழ் நாடு என பாரதத்தின் பல்வேறு பகுதிகளிலும் வசித்திருக்கிறேன். எனக்கு இல்லாத முகமதிய நண்பர்களா? எனக்குத் தெரியாதா அவர்களின் பொது மனோபாவம்? அவர்களில் மிகப் பெரும்பாலானோர் தனிமையில் எவ்வளவுதான் அன்னியோன்னியமாகப்பழகினாலும் தம் கூட்டத்தோடு இருக்கையில் எளிதில் சலனப்பட்டுப்போய்விடுகிறவர்களாகத்தான் உள்ளனர். மத ஒற்றுமை என்கிற மாயைக்கு உட்பட்டு மயக்கத்தில் ஆழ்ந்துவிடுகிறார்கள். உருது மிகவும் இனிமையான மொழி, காதல் பாடல்களுக்கு மிகவும் பொருத்தமான மொழி என்று நான் சிலாகிக்கும்போதும், பேகம் அக்தர், ஸோரா பேகம், ஷம்ஷாத் பேகம், நூர்ஜஹான், சுரையா, படே குலாம், சோட்டே குலாம், அலி சோதரர், தலத் முகமத், தலத் அஜீஸ், நஸ்ரத் அலி, என்றெல்லாம் பெயர்களை அடுக்கி நான் புகழ்கையிலும் அகமகிழும் அவர்கள், பயங்கர வாதம் பற்றிப் பேசினால் மட்டும் முகம் கறுத்துப் போகிறார்களே, அது ஏன்?

இப்போது நான் பணியாற்றி வரும் தொண்டு நிறுவனத்தில் சில முகமதியரும் உள்ளனர். அவர்களில் ஒருவருக்குச் சமீபத்தில் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. உணவு அருந்தும் வேளையில் அவரைச் சந்திக்க நேரும்போதெல்லாம் என் பேரன் எப்படியிருக்கிறான் என்று அவரிடம் விசாரிக்க நான் தவறுவதேயில்லை. அவரும் என்னைப் பார்க்க நேர்கையில் மகிழ்ச்சியுடன் உங்கள் பேரன் சௌக்கியம் என்பார். என்ன செய்ய, இப்படிப்பட்டவரின் மனோபாவமும் குழு மனோபாவத்திலிருந்து மீளமுடியவில்லைதான். ஒருமுறை என்னோடு பணியாற்றும் இன்னொரு நண்பர் மத மாற்றம் என்பது ஒரு ஹிந்து நல்ல ஹிந்துவாகவும், ஒரு முகமதியர் நல்ல முகமதியராகவும் ஒரு கிறிஸ்தவர் நல்ல கிறிஸ்தவராகவும் மாற்றமடைவதாக இருக்க வேண்டுமேயல்லாது ஒரு ஹிந்து முகமதியராகவோ கிறிஸ்தவராகவோ மாறுவதாக இருத்தலாகாது என்றார். மெத்தப் படித்திருந்தும் எம்முடன் இருந்த அந்த முகமதிய சகோதரரால் அதன் நுட்பத்தைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. ஒருவர் தாமாக முன் வந்து மதம் மாறுவதில் தவறே இல்லை என்றே அவர் கருதினார். விரும்பிய பெண்ணை மணப்பதற்காக மதம் மாறினும் அது ஒரு வகை வற்புறுத்தலே என்றேன். ஆன்மிக உணர்வின் காரணமாக ஒருவர் வேறு சமயக் கோட்பாட்டில் மனம் லயிக்கப் பெற்றால் அதற்காக லௌகீகமாக மதம் மாறவேண்டிய அவசியமில்லை என்று சொன்னதும் அவருக்குப் புரிபடவில்லை. இதுதான் இன்றைக்கு மிகப் பெரும்பாலான மக்களிடையே உள்ள மனப்பான்மை. நுட்பங்கள் அவர்களுக்குப் புரிவதில்லை என்பது மட்டுமல்ல அவற்றை அவர்கள் பொருட்படுத்துவதுமில்லை.

பல்வேறு சமய நம்பிக்கை உள்ள மக்கள் வாழும் இடங்களில் அன்றாடம் மசூதிகளில் அதிகாலை தொடங்கி ஐந்து வேளையும் அல்லா தவிர வேறு தெய்வமில்லை என்றும் முகமதைத் தவிர வேறு இறைத் தூதரில்லை என்றும் ஒலிபெருக்கி மூலம் முழங்குவதே கூட பிற சமயத்தார் மனம் புண்படச் செய்வதாகும் என்கிற உணர்வு இல்லை. பிற சமயத்தாரின் சகிப்புத்தன்மையினால்தான் இது தங்களுக்கு சாத்தியமாகிறது என்கிற பிரக்ஞையும் இருப்பதில்லை. நம்முடைய முகமதிய சகோதரகளின் சமூகத்தில் மிகப் பெரும்பாலானோரின் மனநிலை இவ்வாறிருக்க, பெரும்பாலான முகமதியர் பயங்கரவாதத்தை ஆதரிப்பவரல்ல என்று எவ்வித அவசியமும் இன்றி ஆக்ரோஷத்துடன் நற்சான்றிதழ் அளிக்கவேண்டிய கட்டாயமென்ன? அப்படியொரு நற்சான்றிதழுக்காக இங்கு எவரும் காத்திருக்கவில்லை என்று முகத்தில் அடிப்பதுபோல் தனக்கு பதில் வரக்கூடும் என்கிற பிரத்தியட்ச நிலவரம்கூடப் புரியாமல் போனது ஏன்?

கார்கில் மோதலை நினைத்துப் பார்க்கவேண்டும். அதன் கதா நாயகன்தான் இன்று பாகிஸ்தானின் அதிபர். பாரதம் பாகிஸ்தானுடன் நல்லுறவு கொள்ள முற்பட்டிருந்த தருணத்தில்தான் அந்த நய வஞ்சகம் நிகழ்ந்தது. அனாவசியமாக ஏராளமான இளநிலை ராணுவ அதிகாரிகளையும், வீரர்களையும் அப்போது பலிகொடுத்தோம். பிறகு சிக்கிக் கொண்ட பாகிஸ்தான் ராணுவத்தினரைப் பெருந்தன்மையுடன் பத்திரமாகத் திரும்பிச் செல்ல அனுமதித்தோம். ஆனால் இன்று பாகிஸ்தானில் நிலவிவரும் கருத்து என்ன தெரியுமா?

பாகிஸ்தான் பாரதத்திற்கு கார்கில் பாடம் கற்பித்ததாம்; அதனால்தான் எத்தனை சோதனைகள் வந்தாலும் இரு நாடுகளுக்கிடையே அமைதி நிலவுவதில் பாரதம் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறதாம்! இதுதான் நம் பெருந்தன்மைக்குக் கிடைத்திருக்கிற மரியாதை!

நேசக் குமாருக்கு சின்னக் கருப்பன் எழுதியுள்ள கடிதத்தில் ஷியா சுன்னி விவகரம் பற்றியெல்லாம் குறிப்பிட்டிருப்பது நமது இன்றைய பிரச்சினைக்கு அப்பாற்பட்ட விஷயம். ஈராக்கில் ஷியா பிரிவினர் பெரும்பான்மையினராக இருப்பினும் ஆயுத பலங்கொண்டு சுன்னி பிரிவினர் அவர்களை அடக்கியாண்டு வந்ததுதான் ஈராக்கின் கடந்த கால சரித்திரம். இன்றும் ஆயுத பலங் கொண்டு சுன்னி பயங்கரவாதிகள் ஷியா பிரிவினர் வழிபாட்டில் ஈடுபட்டிருக்கும் நேரம் பார்த்து ஷியா மசூதிகளைக் குண்டு வைத்துத் தகர்ப்பது தொடர்கிறது. சந்தர்ப்பம் வாய்க்கும்போது ஷியா பிரிவினரும் இதே அணுகுமுறை
யினைத்தான் சுன்னிபிரிவினர் மீது கையாள்வர் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் மாற்று சமயநம்பிக்கை உள்ளோர் மீது வன்முறைப் பிரயோகம் செய்வது அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. காந்திஜியே ஒருமுறை முகமதியர் வன்முறையில் ஈடுபடுவது பற்றிக் குறிப்பிடுகையில் அதற்கு அவர்களுக்கு அவர்களின் சமய அங்கீகாரம் உள்ளது என்று சமாதானம் சொன்னதுண்டு!

ஆகையினால் பாரத தேச நலனில் அக்கரை உள்ளவர் எவராயினும் இந்தச் சந்தர்ப்பத்தில் நம் தேசத்துப் பெரும்பாலான முகமதியரின் மனப்பான்மை குறித்தெல்லாம் கவலைப்பட்டு பிரச்சினையைத் திசை திருப்பிக்கொண்டிராமல் யுக தர்மத்தின் பிரகாரம் செயல் படுவது பற்றி யோசிப்பதே உசிதம்.

மும்பை ரயில்களில் நடந்த தொடர் வெடிகுண்டு சம்பவங்களையொட்டி பயங்கரவாதச் செயல்களை எப்படி எதிர்கொள்வது என்பதுபற்றி தொலைக்காட்சிகளில் பட்டிமன்றம் நடத்தாத குறையாகக் கும்பலாக விவாதம் செய்தது கண்டு வெட்கக்கேடாக இருந்தது. நாம் வாய்ச்சொல் வீரர் என்பதற்கு அவையே அத்தாட்சிபோல் இருந்தன. நாம் பயங்கரவாதிகளை எல்லை தாண்டிச் சென்று தேடித் தாக்கினால் பாகிஸ்தான் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தும் என்று சிலர் எச்சரித்ததைக் கேட்டபோது மானக்கேடாக இருந்தது. அப்படியே தாக்குதல் நடந்தால்தான் என்ன? இப்போது மட்டும் இழப்பில்லாமலா உள்ளது? பாகிஸ்தான் அணு ஆயுதப் பிரயோகம் செய்யத் துணிந்தால் அதையே சாக்கிட்டு அதனை உலக வரைபடத்திலிருந்தே அழித்தெறிந்துவிடுவதற்கான அணு ஆயுத வலிமை நமக்கு உள்ளதே? நமக்கு வேண்டுவது பொலிடிகல் வில் என்று சொல்லப்படுகிற ராஜீய திட சங்கற்பம். அரசாங்கத் தலையீடு இன்றி, ராணுவம், உளவுத்துறை, காவல் துறை ஆகியவற்றைச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்தால் போதும்; அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். அதனை அவர்கண் விடல். அதுவே வேண்டுவது. வாக்குகள் பெறவேண்டுமென்கிற கட்டாயத்தில் இருக்கிற அரசியல்வாதிகளிடமிருந்து தேசப்பாதுகாப்பு என்கிற பொறுப்பைச் சில காலத்திற்கேனும் பறித்து ராணுவம் உளவுத் துறை ஆகியவற்றிடம் ஒப்படைத்துவிட்டால் போதும்; பிரச்சினைக்குச் சுலபமாகத் தீர்வு கிடைத்து விடும். பஞ்சாபில் முளைத்த பயங்கரவாதம் இப்படித்தான் கிள்ளி எறியப்பட்டது. சீக்கியர் சிறுபான்மையினர், அவர்களின் மனம் புண்படலாகுமோ என எவரும் அப்போது அங்கலாய்க்கவில்லை. பெரும்பான்மை சீக்கியர் பயங்கர வாதத்தை ஆதரிக்கவில்லை என எவருக்கும் வக்காலத்து வாங்கத்தோன்றவில்லை.

பொõறுப்பை இவ்வாறு விட்டுக்கொடுப்பதால் சில தவறுகள் நிகழுந்தான், அப்பாவிகள் பலர் பாதிக்கப்படக்கூடும்தான். அவையெல்லாம் தவிர்க்க இயலாத சங்கடங்கள்தாம். நமது தயக்கத்தாலும் மெத்தனத்தாலும் சிறுபான்மை பெரும்பான்மை காம்ப்ளெக்ஸாலும் பாரதத்தில் இதுவரை எழுபதாயிரத்திற்கும் அதிகமான அப்பாவிகள் பயங்கரவாதத்திற்குப் பலியாகியுள்ளனரே, அது மட்டும் பரவாயில்லையா?

இன்று லெபனான் முழுவதும் அங்கிங்கெனாதபடி மத அடிப்படையிலான முகமதிய பயங்கரவாத அமைப்பான ஹிஸபுல் பயங்கரவாதிகள் பரவிக்கிடக்கிறார்கள். லெபனானுக்குத் தனது மக்கள் நலனில் அக்கரை இருக்குமானால் அந்த பயங்கர மதவாத இயக்கத்தை வேரடி மண்ணோடு பெயர்த்தெறியவேண்டும். அதைவிட்டு, ஒளிந்திருந்து தமக்குத் தொல்லை தரும் ஹிஸபுல்லைப் பூண்டோடு அழிக்கப் புறப்பட்டுள்ள இஸ்ரேல் மீது குறைகாண்பதால் என்ன லாபம்? தனது மன்ணிலிருந்து ஹிஸபுல் பயங்கர வாதிகள் இஸ்ரேல் மீது திடீர்த் தாக்குதல் நடத்த மாட்டார்கள் என்று லெபனான் அரசு உத்தரவாதம் கொடுக்க வேண்டியதுதானே? தனது மண்ணில் இயங்கும் அந்த பயங்கர வாதக் கும்பலை லெபனான் ஒப்புவித்துவிடுமானால் பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும்.

பாலஸ்தீனத்தைப் பாண்டவர்களுடன் சின்னக் கருப்பன் ஒப்பிடுவதைப் படிக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. உண்மையில் தமக்கென ஒரு தேசம் இல்லாமல் அலைக்கழிந்த யூதருக்காக பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் என்கிற தேசம் உருவாக்கப்பட்டபோது, சுற்றியிருந்த அரபு தேசங்கள் யாவும் சகிப்புத்தன்மையின்றி அதனைக் கபளீகரம் செய்ய முற்பட்டதால்தான் அங்கு போர்ச் சூழலும் பதட்ட நிலையும் உருவாகி இன்றளவும்நீடிக்கின்றன. மேற்கு ஆசியாவில் போரைத் தொடங்கியது இஸ்ரேல் அல்ல. வாழ்வா சாவா என்று இஸ்ரேல் இறுதி மூச்சைப் பிடித்துப் போரிட்டு அத்தனை அரபு தேசங்களையும் மண் கவ்வ வைத்து உலக அரங்கில் தனி கவுரவத்தைத் தேடிக்கொண்டது.

நேரடி மோதல் தம்மால் இயலாது எனப் புரிந்துகொண்ட பாலஸ்தீன விடுதலை இயக்கம் நடத்திய புறமுதுகுத் தாக்குதல்களின் தொடர்ச்சிதான் இன்று பல ரூபங்களில் தொடர்கிறது. அன்று முதல் பயங்கரவாதத்திற்கு இஸ்ரேல் கொடுத்த இரைக்கு அளவே இல்லை. முதல் போரில் புத்திளம் இஸ்ரேல் மட்டும் நாலாபுறங்களிலிருந்தும் ஓநாய்களைப் போலப் பாய்ந்த அரபு தேசங்களால் விழுங்கப்பட்டிருக்குமெனில் சின்னக் கருப்பனின் பாண்டவர் உதாரணத்திற்கு அவசியமேற்பட்டிருக்காது!

இன்றைய யுக தர்மம் அறிந்த இஸ்ரேல் அதற்கேற்ப நடந்துகொள்கிறது. அதன் காரணமாகவே உலக அரங்கில் மரியாதையுடன் பார்க்கப்படுகிறது. தலையிட்டால் தங்கள் கதி என்ன ஆகும் என்பது தெரிந்திருப்பதால்தான் சுற்றியுள்ள அரபு தேசங்கள் யாவும் முன்போல் பாயாமல், புலம்புவதும் அங்கலாய்ப்பதுமாக உள்ளன என்பதை அறியாதவரா, சின்னக் கருப்பன்?

என்ன கரணத்திற்காக நடந்தாலும் யுத்தம் ஈவிரக்கமற்ற கொடுஞ்செயல்தான். பலரும் மரிப்பதும் உடல் ஊனமாகிப் போவதும் சகிக்கவொண்ணாத கொடுமைதான். இவ்வாறான கொடுமை இஸ்ரேல் மக்களுக்கும் நிகழ்வதுதான். இதில் இன்னாருக்குச் சேதம் என்று பார்த்து மனம் பொருமுவதில் பொருள் இல்லை. அரபு நாடுகள் இஸ்ரேலுக்கு எதிராகத் தங்கள் மண்ணிலிருந்து பயங்கர வாதம் இயங்க அனுமதிப்பதில்லை என்று உறுதியாக முடிவெடுத்து அதனைச் செயலிலும் காட்டினாலன்றி மேற்கு ஆசியாவில் உயிர்ச் சேதங்களுக்கும் பொருள் சேதங்களுக்கும் முடிவில்லை.

இன்று பயங்கர வாதம் உலகமயமாக்கப்பட்டிருப்பதற்குக் காரணம் முகமதிய நாடுகள் பலவும் மத அடிப்படையில் அதற்குப் பலவாறு ஊக்கமளித்து வருவதுதான் என்பதை மறைப்பதில் பயனில்லை. இதற்கெல்லாம் மூலவேர் என்னவோ அமெரிக்காதான் என்பது நேற்றைய நிலவரம். அதை இப்போது பேசிப் பயனில்லை. உலகம் முழுவதும் சகல வசதிகளுடன் பயங்கர வாதம் பவனி வருவதை முடக்க வேண்டுமெனில், முகமதிய நாடுகளி லுள்ள அதன் ஊற்றுக்கண்களை எல்லா தேசங்களும் ஒன்று சேர்ந்து அடைப்பது தவிர வேறு வழியில்லை.

பாகிஸ்தானில் பராமரிக்கப்படும் லஷ்கர் தொய்பா அல் கொய்தாவின் அங்கமேயன்றி வேறல்ல; அதனால் பாரதத்திற்கு பாதிப்பு எனில் நமக்கென்ன என்று அசட்டையாக இராமல் லஸ்கர் தொய்பாவைத் தேடிப் பாகிஸ்தான் சென்று அதனை அழிப்பதில் அமெரிக்காவும் இங்கிலாந்தும் முனைப்பு காட்டவேண்டும். அப்படி அவ்விரு நாடுகளும் பாகிஸ்தானில் பறந்து பூச்சிகொல்லி மருந்து தெளித்தாக வேண்டிய சூழ் நிலை வெகு வேகமாக உருவாகி வருகிறது என்பதென்னவோ வாஸ்தவம். எனினும் நாம் செய்ய வேண்டிய வேலையை நமக்காக இன்னொருவர் வந்து செய்துமுடிப்பார் என்று நாம் காத்திருப்போமேயானால் அது கோழைத்தனமே தவிர வேறல்ல.
+++

Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்