யஸ¤குனி ஆலயம் – பாகம் 1

This entry is part [part not set] of 31 in the series 20060929_Issue

கே.ஜே.ரமேஷ்


சென்ற வாரம் டோக்கியோ சென்ற அமெரிக்க காங்கிரஸ் செயற்குழு ஒன்று ஜப்பானின் அடுத்த பிரதமர் யஸ¤குனி ஆலயத்திற்கு செல்லும் வழக்கத்தைக் கைவிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டது. யஸ¤குனி ஆலயத்தைப் பற்றிய சர்ச்சை பல மாதங்களாகவே செய்திகளில் அடிபட்டுக் கொண்டிருக்கும் வேளையில் அதன் வரலாறு பற்றியும் ஜப்பானியப் பிரதமரின் அவ்வாலய விஜயத்தினால் சீனா, தென் கொரியா, வட கொரியா ஆகிய நாடுகள் கொதிப்படைய வேண்டிய காரணத்தைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

யஸ¤குனி ஆலயம் நிறுவப்பட்டதற்கான காரணங்களை அறிந்து கொள்ள நாம் கொஞ்சம் – சுமார் 140 வருடங்கள்- பின் நோக்கி செல்ல வேண்டியிருக்கிறது. சர்வாதிகார நிலப்பிரபுத்துவ ஷோகுனேட்டுக்கும் ஏகாதிபத்திய அரச குடும்பத்திற்கு விசுவாசமான ராணுவத்திற்கும் 1868ம் ஆண்டு போஷின் (Boshin) போர் தொடங்கியது. எண்ணிக்கையில் மிக அதிகமாக இருந்தும், போரில் படு தோல்வி அடையவே ஷோகுனேட் சரணடைய வேண்டியதாயிற்று. இதன் விளைவாக சக்கரவர்த்தி மெயிஜி மீண்டும் அரியணை ஏறினார். போஷின் போரில் இறந்தவர்களுக்கு கவுரவமளிக்கவும் அவர்களது நினைவை பேணிக்காக்கவும் 1869ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட இந்த ஆலயத்திற்கு ‘டோக்கியோ ஷொகோன்ஷா’ என்று பெயரிடப்பட்டது. பின்பு 1879ம் ஆண்டு ‘யஸ¤குனி ஆலயம்’ என்று பெயர் மாற்றம் கண்டது. நாட்டிற்காக போரிட்டு உயிர்த்தியாகம் செய்தவர்களின் நினைவுகளைப் பேணிக்காத்து வழிபடுவதற்காக தோற்றுவிக்கப்பட்ட ஆலயம் இது. இது பல்வேறு உள்நாட்டுக் கலகங்கள், முதலாம் சீன ஜப்பானியப் போர், ரஷ்ய ஜப்பானியப் போர், முதலாம் உலகப்போர், மஞ்சூரியன் மோதல், இரண்டாம் சீன ஜப்பானியப் போர், பசிபிக் போர் ஆகியவற்றில் நாட்டிற்காக உயிரிழந்த சுமார் 2.5 மில்லியன் மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டு வழிபாட்டுக்குரிய இடமாகத் திகழ்கிறது.

யஸ¤குனி ஆலயத்தில் பொதிந்து வைத்த இறந்தவர்கள் ‘காமி’ என்றழைக்கப்படுகிறார்கள். தேசிய தெய்வங்களாகப் போற்றப்படும் காமிகளின் ஆத்மாக்கள் இன்றும் நாட்டைக் காப்பதாக ஜப்பானியர்கள் நம்பிக்கைக் கொண்டுள்ளனர். இரண்டாம் உலகப்போரில் போரிட்ட ஜப்பானிய வீரர்கள் தமக்குக் கிடைக்கக்கூடிய அதிகபட்ச கௌரவம் யஸ¤குனி ஆலயத்தில் இடம்பெறுவது தான் என்று தீவிரமாக நம்பியதுடன் சக வீரர்களிடம் விடை பெறுமுன் ‘யஸ¥குனியில் சந்திப்போம்’ என்று கூறி விடை பெறும் வழக்கத்தைக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. நாட்டிற்காக உயிரிழப்பதும் யஸ¤குனியில் இடம் பெறுவதும் மிகப்பெரிய கௌரவம் என்று சிறு வயதிலிருந்தே குழந்தைகளிடம் போதிக்கும் வழக்கமும் இருந்து வந்துள்ளது. 19ம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் நம்ம ஊர் பரமபதம் போன்ற விளையாட்டுகளில் ஒரு கட்டத்திற்குள் நுழைந்தால் வீரமரணம் எய்வதும் உடனடியாக யஸ¤குனியில் இடம் பெறுவதுமான அமைப்பு இருந்திருக்கிறது. இது போன்ற விளையாட்டுக்களினாலும் யஸ¤குனியைப் போற்றும் பாடல்கள் மூலமாகவும் குழந்தைகளிடம் தேசபக்தியை வளர்க்கும் வழக்கம் இருந்திருக்கிறது.

இது வரைப் பார்த்த விஷயங்களோ ஜப்பானியர்கள் யஸ¤குனியில் வழிபடுவதிலோ எந்த ஒரு சர்ச்சையும் இருக்க முடியாது. ஆனால் 1978ம் ஆண்டு இரண்டாம் உலகப் போரில் குற்றம் புரிந்தவர்கள் என்று தீர்ப்பளிக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்களின் பெயர்களை யஸ¤குனியில் உள்ள ‘புக் ஆ·ப் சோல்ஸ்’ (Book of Souls) என்கிற புத்தகத்தில் சேர்த்ததின் விளைவாகவே சர்ச்சைகளும் ஆரம்பமாயின. அதிலும் புதிதாகச் சேர்க்கப்பட்ட பெயர்களில் இரண்டாம் உலகப்போரில் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளுக்கும் அக்கிரமங்களுக்கும் காரணமான 14 பேர்களின் பெயர்களையும் சேர்த்ததும் ஒரு காரணம். மதச்சார்புடைய அமைப்புகளும், அரசியல் கட்சிகள் சிலவும், ஜப்பானில் வாழும் ஜப்பனியரல்லாதவரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கினர். இதை அவர்கள் நாட்டை பழையபடி ஏகாதிபத்திய முறைக்கு இட்டுச் செல்ல முனையும் செயலாகவே நம்பினர். ஜப்பானிய உச்ச நீதிமன்றமும் அரசியல் சட்ட அமைப்பின் 20ம் ஷரத்தை மீறும் செயல் என்ற காரணம் காட்டி அரசாங்கம் யஸ¤குனிக்கு நிதியுதவி அளிப்பதை சட்ட பூர்வமாகத் தடை செய்தது.

இது ஜப்பானின் உள்நாட்டு விவகாரம். இதில் சீனா, தென் கொரியா, வட கொரியா போன்ற நாடுகள் கொதிப்படைய வேண்டிய காரணம் என்னவாக இருக்க முடியும்? என்று கேட்பவர்களுக்கு இதோ சில தகவல்கள்:
இரண்டாம் உலகப்போரில் ஜப்பானிய ராணுவத்திடம் சீனாவும் கொரியாவும் பட்ட கொடுமைகள் நினைத்துக் கூடப் பார்க்கமுடியாதவை. பல ஆயிர கணக்கான அப்பாவி மக்கள் ஜப்பானிய ராணுவத்தினரால் எந்த ஒரு காரணமுமின்றி கொல்லப்பட்டனர். நான்ஜிங் (அல்லது நான்கிங்) என்ற பகுதியில் 1937ம் ஆண்டு டிசம்பரில் தொடங்கிய வெறியாட்டம் 1938ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை தொடர்ந்ததாக சரித்திரம் கூறுகிறது. ‘நான்ஜிங் கற்பழிப்பு’ என்று கூறப்படும் இந்த வெறியாட்டத்தில் பல ஆயிர சீனப் பெண்கள் கற்பழிக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். சிறுவர் சிறுமியர்கள், முதியோர்கள், பெண்கள், ஆண்கள் என்ற எந்த பேதமுமின்றி கூட்டம் கூட்டமாக எரியூட்டப்பட்டனர். ஜப்பானிய ராணுவம் கற்பழிப்பு, கொள்ளை, கொலை, சித்திரவதை, உடைமைகளுக்கு தீ மூட்டுதல் என்று எல்லாவிதமான வெறியாட்டங்களையும் நடத்தியதினால் அந்நாடு இன்றளவும் தலைகுனிய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இக்கொடுமைகளுக்கு காரணமானவர்களை போற்றக்கூடிய உயரத்தில் யஸ¤குனியில் சேர்த்திருப்பதிற்கு சீனா சம்பிரதாயமான தன் எதிர்ப்பை அவ்வப்போது தெரிவித்து வந்திருக்கிறது. ஜப்பானிய பள்ளிப் பாட புத்தகத்தில் வரலாற்றை திரித்துக் கூற முற்பட்டபோதும் சீனா தனது எதிர்ப்பை கடுமையாக தெரிவித்தது.

1990களின் மத்தியில் தன்னார்வமிக்க செய்திப்படத் தயாரிப்பாளர் ஒருவர் (மினோரு மட்சுயி) பழைய ஜப்பானிய ஏகாதிபத்திய அரசின் ராணுவ வீரர்களைப் பற்றிய செய்திப் படமொன்றை எடுக்க முனைப்பு காட்டியபோது எந்தவொரு தொலைக்காட்சியோ, அரசு சார்ந்த அமைப்போ, தனியார் அமைப்புகளோ அவருக்கு நிதியுதவி அளிக்க முன் வரவில்லை. தனது சொந்த முயற்சியினால் பல இன்னல்களுக்கிடையே அவர் காமிராவும் கையுமாக அலைந்து திரிந்து நான்ஜிங்கில் நடந்த அட்டூழியத்தில் பங்கு பெற்று உயிருடன் இருக்கும் பல ராணுவத்தினரையும் பேட்டி கண்டார். அவர்களில் பலரும் அங்கு நடந்த கொடுமைகளை எந்த ஒரு சலனமுமின்றி விவரித்ததை மட்சுயி இவ்வாறு கூறுகிறார்:
‘மனித மனங்கள் வினோதமானவை. எந்த ஒரு குரூரத்தையும் பழக்கத்தினால் மிகச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் தன்மையைப் பெற்று விடுகிறது. அதனால் தான் சீனாவில் ஜப்பானிய ராணுவத்தினர் எந்த ஒரு குற்றவுணர்ச்சியுமின்றி கலகத்தில் ஈடுபட முடிந்திருக்கிறது. முதல் கொலையில் ஏற்பட்ட குற்ற உணர்ச்சி, அடுத்தது, அடுத்தது, அடுத்தது என்று கொலைகள் தொடரும் போது மழுங்கடிக்கப்பட்டு விடுகிறது’.
பலரையும் பேட்டி கண்ட தனக்கே அந்த அனுபவம் ஏற்பட்டதென்று விவரிகின்றார். முதல் பேட்டியாளர் தான் ஒரு குடும்பத்தையே சுட்டுக் கொன்ற கொடூர நிகழ்ச்சியை விவரிக்கும் போது ஏற்பட்ட பாதிப்பு மற்றவர்களையும் பேட்டி கண்டபோது மெதுவாகக் குறையத் தொடங்கி விட்டது என்று கூறுகிறார். ‘ஜப்பனீஸ் டெவில்ஸ்’ (Japanese Devils) என்ற அந்தப் படத்தில் பேட்டியாளர் ஒருவர் உண்மையில் நடந்த கொடுமைகளை இவ்வாறு கூறுகிறாராம் – “எந்த ஒரு வீட்டைப் பார்த்தாலும் அதைக் கொளுத்தினோம். எந்த ஒரு நபரைப் பார்த்தாலும் அவரை சுட்டுக் கொன்றோம். எந்த ஒரு கூட்டத்தைப் பார்த்தாலும் மெஷின் கன் கொண்டு கூட்டத்தையே சின்னாபின்னமாக்கினோம்”
அவர்களின் அட்டூழியங்களில் சித்திர வதை, கற்பழிப்பு, கொலை, கொள்ளை மட்டுமின்றி நோய் உண்டாக்கும் நுண்மங்களைப் பரிசோதனை செய்ததும், உயிருள்ளவர்களை வெட்டி ஆய்வுக்காகப் பரிசோதனை செய்ததும் அடக்கம்.

இப்படத்தை மிட்சுயி எட்டு சமூக நிலயங்களில் திரையிட்ட போது மிகச் சிலரே அப்படத்தை பார்த்தனர். ஆனால் பெர்லினில் நடந்த திரைப்பட விழாவில் அப்படத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய வரவேற்பும் அங்கீகாரமும் டோக்கியோவிலும் சலனங்களை ஏற்படுத்தி பல ஜப்பானிய இளையர்களை ஈர்த்தது.

…தொடரும்.

கே.ஜே.ரமேஷ்

kjramesh@pacific.net.sg

Series Navigation

கே.ஜே.ரமேஷ்

கே.ஜே.ரமேஷ்