மௌனத்தின் அலறல்

This entry is part [part not set] of 34 in the series 20061026_Issue

கே ஆர் மணி


சொந்தங்களின் அழுக்கும், அழகும், முடிச்சும் – அவிழும், கரையுமிடங்களில் ஒன்று – பிரசவம்.
பிரசவம் பெரும்பாலும் மனைவியின் மறுபிறப்பாய் போய்விடுவதால் பிரசவத்தை சுற்றி நடக்கிற நிகழ்வுகள் அதிகம் பதியப்படாமலே போவதுண்டு. குழந்தை பிறப்பு சார்ந்த நிகழ்வும், சம்பிட்தாயங்களும், மதிப்பீடுகளும், விழுமியங்களும் இந்திய கலாச்சாரத்தில் ஏறத்தாழ ஒன்றாகவேயிருக்கிறது. அம்மாவின் அறிவுறுத்தல், அம்மா வீட்டில் தலைப்பிரசவம், வளையிடுதலோ சீமந்தமோ – ஏதோ ஒன்று, கருவுற்றலுக்கு பிறகான ஒரு விசேடம், முதல் பிரசவத்திற்கான அப்பா செலவு, குழந்தை கொண்டுவிடுதல், பெயரிடும் விழா, மாமாவின் உறவு, ஆணா, பெண்ணா விவாதம், பிறக்கிற குழந்தையை எப்படியோ தம் குலவரிசையில் சேர்ந்து விடுவது, பெயரிடுதலில் ஆளுமை – இப்படி பொதுவாய் பற்பல.

இப்போது புதிதாய் சேர்ந்திருக்கும் அமெரிக்க பிரசவத்தில் – யார்போய் உதவி செய்வது என்கிற பனிச்சண்டைகள், கீரின்கார்டு சம்பிராதாயங்கள், இந்தியா மருந்துக்கும், அமெரிக்க மருந்துக்குமான போட்டிகள், இந்தியா கலாச்சாரத்தை இரத்ததில் ஏற்றி விடுவதற்கான வீரசபதங்கள், உறவுகளின் உன்னதம் பற்றிய பயங்கள், குழந்தை பற்றிய அறிவை தாயிடமிருந்து பெறுவது கூடவே வருகிற கூகிள் தகவலின் முரண்பாட்டுக் குழப்பம், பிரசவத்தில் கணவன் கூடவேயிருப்பது, வருசம் முடிந்து பிரார்த்தனை சுற்றுலா, இப்படியான கூடுதல் இத்தியாதிகள்.

மற்ற இந்திய இனங்களிலும் ஏறத்தாழ பழக்கவழக்கங்கள் ஒன்றேதான். குஜராத்தி, மராத்தி, தமிழ் குடும்பங்களிலும் அடிப்படையில்
பெரியதாய் வேறுபாடொன்றுமில்லை – நான் பார்த்தவரைக்கும். எத்தனைதான் மருத்துவம் வளர்ந்த்துவிட்டாலும் பிறப்பு, இறப்பு பற்றிய பயமும், சூட்சுமமும் அதை அணுகையில் தத்துவம்சார்ந்த தேடலும் மானுடகுலத்தை புதுப்பிக்கத்தான் செய்கிறது. அவைதானே மனிதகுலத்தின் மையஅச்சுகள்.

பெண் பத்துமாதம் சுமக்கிறாள். வலியுடன் குழந்தை கவிதை பிறப்பிக்கிறாள். அவளின் வலி, இரத்தம், பயம் – தொப்புள்கொடியின் தூய்மை எல்லாமே ஒரளவு இலக்கியத்தில் எழுதிக்குவிக்கப்பட்டது. ஆனால் பதிவுசெய்யப்படாத, வாசிக்கப்படாத பல பக்கங்களும் பிரசவத்தை சுற்றி உண்டு. அந்த பக்கங்களில் ஒன்று, பிரசவமாதத்தில் கணவன் நிலை. பிரசவத்திற்குமுன் (பி.மு) மற்றும், பிரசவத்திற்கு பின் (பி.பி) அவன் மன,உடல் சம்பந்தப்பட்ட அவஜ்தைகள், பயங்கள் – சற்று கூர்மையாய் பதிவு செய்யப்படவேண்டுமென்பது என் எண்ணம். அந்த பதிவுகள் அவன் அறியாத, புரிந்து கொள்ளமுடியாத காலகட்டத்தை அவன் அறிவுப்பூர்வமாய் அணுக அது உதவிசெய்யும். ஆணின் பக்க நிலைகளும் ஒரளவு மற்றவர்க்கு புரிய உதவிசெய்யும்.

ஒரு குறை, ஒரு நிறை – பிரசவம். மனைவியின் வலிபுரியாத, உணர முடியாத கணவன், கணவனின் குழப்பமறியாத உலகம் என சிலகாட்சிப்பிழைகளையும் (கருத்து பிழைகளையும்) பார்ப்போம்.

நிறைபிரசவம் :

” தலை பெருசாயிருக்குமோ – ஏன் வலி வரலை ” நானும் என் மாமானாரும் குழம்ப,

” இதெல்லாம் பாக்கக் கூடாது.. நாளைக்கு நல்ல நேரத்திலே. சீசீரியன் பண்ணிரலாம்.. ” என் மாமியார் முடிவெடுத்தார்.

அவர் கொள்கைகள், முடிவுகள் இராணுவ முடிவு சார்ந்தவை. மற்றவர்களுக்கு அவை வெறும் செய்திமட்டும்தான். முடிவெடுக்கும் உரிமை என்பது எனக்கு மட்டுமே உரித்தானது என்பதான தொனி. ஆனால் பிரசவம் பற்றிய பயந்து, முடிவினால் விழைகிற பயனை, தப்பாய்போனால் ஏற்கத்தயாராய் இல்லாத இரு ஆண்களுக்கு அந்த கட்டளை தேவையாயிருந்தது. காலை வயிறு கிழிக்கப்பட்டு, குழந்தை – வெகு ஆரோக்கியமான குழந்தை – வெளியே எடுக்கப்பட்டது.

“ஆண்குழந்தை ” என்று என் மாமியார் வந்து சொன்னபோது, நாங்களிருவரும் ஒரு நிமிடம் அழுதோம்.

அதைவெறும் ஆனந்தக்கண்ணீர் என்று மட்டும் எழுதிவிட்டுபோவது கருத்துக்கொலை. ஏதோஒன்று, இருவரையும் இணைத்தது. ‘என் குழந்தை சுகம்’ என்பதில் அவருக்கும், ‘எனக்கும் குழந்தை’ என்ற சுகத்தில் நானும் ஓரே புள்ளியில் இணைந்தோம். உணர்வுகள் மெய்யான சில தருணங்கள் வாழ்க்கையில் அவ்வப்போது வருவதுண்டு. பொதுவாகவே, முறைத்துக்கொள்ளும் முரண்பட்ட இருவரும் – சேர்ந்த அந்த ஆனந்தபுள்ளியில் எல்லா எழுத்துக்களும், வெறும் வார்த்தைகளுக்கும் உயிரற்றதாய் போய்விடுகிறது. மருத்துவமனை வாடை, ஒளிரும் காரிடர், அழுதகண்ணோடு என் மாமியார், என்னையறியாது அசிங்கப்படாமல் அழுகும் நான், மெளனமான ஐசிஐ யூனிட் இவை என்னில் ஆழமாய் பதிந்த பிம்பங்கள்.

குறைபிரசவம்:

இதே மருத்துவமனையில் என் மனைவியின் குறைமாத கருகலைந்தபோது – இங்கிருக்கவே பயப்பட்டேன். மனிதமுகம் பார்க்கவே வெறுத்தேன். வெறுப்பின் அடியில் இழப்பின் பயம். வெறுமை. நான் காரணமா இல்லையா என்று தெரியாது, குழப்பநினைவுகளோடும்,
தகர்க்கப்பட்ட கனவுகளோடும் – டாக்டரை, மாமியாரை, மனைவியை வெறுத்தது அதே மருத்துவமனையில்தான். வெறும் பஞ்சுப்பொதி
போன்று கண்ணாடியில் காட்டப்பட்ட அழுகிய முட்டையா எனது வாரிசு. அந்த அழுகிய முட்டை எனக்கு கவிதை சொன்னது.

http://www.thinnai.com/?module=displaystory&story_id=30610067&format=html

மெளனத்தின் அலறல்

தேர்தலில் நிற்காமலே
கரைந்துவிட்ட அரசியல் கட்சிபோல
ஜனிக்காமலேயே மரணித்த
பாக்கியவான் – நான்.

நான் கொஞ்சம் உயிர்
கொஞ்சம் உடம்பு.
கொஞ்சம் பிணமும் கூட.

அவர்களின் கண்ணீர்
என் கரைதல் பொருட்டுல்ல.
என் கருவறையே
கல்லறையாய் போனதால் அல்ல.

அவர்களின் நம்பிக்கைகோட்டை
நசுங்கிப் போனதால்.

ஒருபெரும் அழுகை
சில தொடரும் விசும்பல்கள்
வருத்தம் தெரிவிக்கும் கார்டுகள்
வாயிலிருந்து சோகமாய் பல ‘சாரி’க்கள்
இப்படியான ஆடம்பரங்களில்
கரைந்தே காணமல் போகும்
என் மெளன அலறல்.

அதன் பயமும், சத்தமும், வருத்தமும் – எந்த ஆறுதலாலும் துடைக்கப்படமுடியாதது. யாரிடமும் சொல்லமுடியாததும் கூட. மறுபடி எப்போது புண் ஆறும் வரை காத்திருந்து, பயந்து, பயந்து.. பெண்போல் வெளியே சொல்லமுடியாது, பயத்தோடும் ஆண் குழப்பத்தோடும்.. மறுமுயற்சியில் அடுத்த பத்துமாதங்கள் பயமாயும், அதீத கவனமாயும்.. ஒரு புள்ளி.. முழுக்குழந்தையாய் வரும்வரை. புருஷனின் காத்திருப்பு, பரிதவிப்பு பெண்ணின் பங்களிப்புக்கு இணையானதில்லை என்றாலும் அது ஒரு தனி உலகம். பேசப்படாத, கவனிக்கப்படாத இருண்ட உலகம். யாரிடமும் வெளிப்படையாய் பகிர்ந்து கொள்ளமுடியாத உலகம். வெளிச்சொல்ல வெட்கப்பட்டு தனக்குள்ளே ஜீவசமாதியாகும் கருத்துச்சுருள்கள். ஒவ்வொரு ஆணின் இதயத்திலும் எங்காவது அது ஒட்டிக்கொண்டுருக்கும்போல. அப்படிப்பட்ட இருண்ட உலகத்தைப்பற்றிய ஒரு சின்ன ஒளி, ‘முருகன் அண்ணாவிடம்’ பேசிக்கொண்டிருக்கும்போது கிடைத்தது.

முருகன் அண்ணா- என் தூரத்து உறவினர். என்னைவிட வயதில் மூத்தவர். நாற்பதை தாண்டிய வயது. இரு குழந்தைகள். நன்றாய் வெளிஉலகம் படித்தவர். படிப்பாளி. வாழ்க்கைபோராளி. அவரின் மூலம்தான் ராஜேஷ்குமார், சுபாவிலிருந்து பாலகுமாரனுக்கும், ஜே.கேக்கும் படிப்புலகில் என்னால் தாவமுடிந்தது. எனது 12 வயதில் அவரின் படிப்புகள், பார்வைகள் மிக உயரத்திலிருந்தது. என் படிப்பு சிறகுகளும் படபடத்து அந்த உயரத்திற்கு நானும் பறக்க ஆசைப்பட்டு விழிகள் அகன்று, இதயம் திறந்து, காது விரித்து கருத்து உள்வாங்கினேன். அந்த வயதிற்கு அது அதிகம். ஆனாலும் வயதிற்கு மீறிய படிப்பும், கனவுகளும் என்ற எண்ணத்தீயில் நெய்யிட்டவர்களில் அவரும் ஒருவர். புத்தகம்மட்டுமே கைமாறியதோழிய என் சிறுவயது பொருட்டு கருத்துபரிமாற்றம் எதுவும் நடக்கவில்லை. எனக்கு அப்போது அதிகமாய் புரியவுமில்லை. பின் புரியாத எழுத்துக்களையும் படித்து புரிந்துகொள்ள நல்ல பயிற்சியாய் அது அமைந்தது. ஒரு இருபது வருடம் கழித்து அவரிடம் ஒரு இராத்திரி முழுக்க பேசக்கிடைத்தது. என் வளர்ச்சிகண்டு ரொம்ப ஆனந்தப்பட்டார். என் படிப்பும், எழுத்தும் நினைத்து தன் மனதை கொஞ்சம் திறந்தார். வெளிச்சொல்ல வெட்கப்பட்டு தனக்குள்ளே ஜீவசமாதியாகும் கருத்துக்சுருள்கள் என்றேனே, அந்த இருண்ட உலகத்தின் ஒரு சின்ன ஒளி.

மனிதர்கள்தான் புத்தகத்தைவிட ஆழமானவர்கள். அவர்களின் உணர்வுகளும், எண்ணக்குவியலும் எந்த இலக்கியக்கியத்திற்கும் குறைந்ததில்லை. அவைகள் குழப்பங்களும், சிக்கல்களும் குறையாத அட்சயபாத்திரங்கள். மனிதனின் வாழ்க்கை அவைகளின் போராட்டத்திலேயே பெருமளவு கழிந்துவிடுகிறது. கொஞ்சம் ‘சுருதியோடு’ இதயம் திறந்த அவரின் பேச்சும் எண்ணமும் என்னில் சில, பல பெருத்த வினாக்களை எழுப்பி விடைகாண தூண்டின. தனது மனைவி பற்றி, ரொம்ப பெருமையாய் பேசினார். நல்ல மனைவி, கணவனுக்கு எத்தனை பெருமை, சந்தோசம், பாதுகாப்பு என்று பெரும்பாலான மனைவிகளுக்கு தெரிவதில்லை. பாதுகாப்பான கணவன்வேண்டி செய்யும் லசுமி விரதங்கள்போல, கணவர்களும் நல்ல மனைவிக்காய், நல்ல துளசிக்கு தண்ணிவிடவேண்டுமோ என்னமோ. நல்ல மனைவி கணவனுக்கு பெரும்வரம். இதை வெளியே சொல்லும்போது வெளிப்படும் கொஞ்சம் ஈரம் கலந்த திமிர், ஆணாதிக்கம் அதிகமான இளவயசில் வெட்கம் கருதி அவ்வளவாய் வருவதில்லை. அண்ணியும் எங்களோடு உட்கார்ந்திருந்தார். அவருக்கு கணவனின் காயங்கள் தெரிந்திருந்தது. அவர் உள்ளே போனபோது, சொன்னார். ‘ பிள்ளை பெத்து 40 நாள்ல அவளோடு படுக்கவிடலைனு என் மாமானர், மாமியாரோடு சண்டை போட்டிருக்கேண்டா தம்பி.. ” மேலும் பேசினார். பாட்டிலோடு இதயமும் காலியாகியது.

எனக்கு பகீரென்றது. அந்த தொனியில் தெரிந்தது வெறும் காமம் மட்டுமல்ல. உறவுகள் பற்றிய குழப்பமும், தனது ஆணாதிக்க வீரியத்தின் பயமும். ‘பச்சை உடம்புகாரிட்ட படுக்கணுமாடா.. நீயெல்லாம் மனுஷனாடா ‘ நீங்கள் அவரை திட்டலாம். ஆனால் ஒரு ஆணின் பிரசவத்திற்கு முன் மற்றும் பின்னுள்ள வேதனைகள் வெறும் காமம் சார்ந்ததுமட்டுமல்ல. அவன் திரைப்படக்கதாநாயகன் போல் மருத்துவமனை காரிடரில் கைபிசைந்து நடந்துவிட்டு ஆனந்தகண்ணீர் சொறிவதோடு நின்றுவிடுவதில்லை. இப்போது எழும் ஏராளமான கர்ப்பப் பிரச்சனைகள் காரணமாய் – அவளின் அலுவலகப்பாதிப்பு, நல்லபடியாய் நடக்கவேண்டிய பயம், புதிதாய் வரும் செலவுகள் பற்றிய நடுத்தர, மேல்தட்டு நடுத்தர வர்க்கத்தில் கண்ணோட்டம், பிறந்த உடனே அவர்களது டாக்டர் படிப்புக்கு பணம் போடவைத்து ஆசைகாட்டு பினான்சியல் கன்சல்ட்டண்ட், இந்த அவசரத்தில் பயத்தில் – மறந்து போகும், மறத்துபோகும் மனைவி கூடல்கள்.

‘சேந்து படுத்தா.. எட்டா. மாசத்தில.. சுகப்பிரசவமாகலாம்னு.. எங்ககாலத்திலே.. சொல்லுவா..’ அம்மா சொல்லுவாள்.
‘முடிஞ்சா அவாய்ட் பண்ணுங்களேன்..’ அறிவுறுத்தலான மொழியில் டாக்டர்.

முருகன் அண்ணா அனுபவம் ஆணுலகத்திற்கு பொதுவென எண்ணுகிறேன். இதுவெறும் காமம் மட்டுமல்ல.

‘பச்சை உடம்புக்காரியோட படுத்துகணும்கிறது எனக்கு வெறும் உடம்புமட்டுமல்ல.. தம்பி.. நான்.. சொல்றது புரியுதா..’

புரிகிறது. உணர்கிறேன். புரியமுயற்சிக்கிறேன். இது மெளனத்தின் அலறல்.

சீசீரியன் பற்றிய பயம், அடுத்தமுறை அடிவயிற்று தொடலில் பயங்கரமான பயம், ஈரமான யோனியும், முயக்கம் மறந்துபோன உணர்வுகளின் ரீங்காரம், இப்படி எல்லாவற்றையும் கடந்து, தெறிக்கிற ஆண்மை ஈரத்தின் ஆசுவாசத்தில் – தன் வாழ்க்கையின் ஆதார சுருதியே அமைதிப்பட்டுப்போனதான உணர்வு. தன் பிரபஞ்சத்தின் வடிகாலின் மயான அமைதியுடன் ஆனந்த நர்த்தனம் தொடரும். ( காமத்துக்குமுன்னே ருத்ர தாண்டவம், முயக்குத்துக்குபின் ஆனந்த தாண்டவம்.. ருத்ரமும், ஆனந்தமும் வெறும் காமம் மட்டும்தானா ? ) ஆண்மையின் பயம், வீறிட்டு அலறுகிற விந்துக்களின் உந்துதல், தன்னைத்தானே பொசுக்கிகொண்டபின்னும் உயிரோடுக்கிற குளிர்ந்த அனுபவம். சுழலின் மையத்தில் எப்போதுமே பேரமைதிதான் என்பார் ஓஷோ. ( Centre of cyclone is always dead silence..) அந்த மயான அமைதி – ஆண்மைக்கு முயக்குத்துக்கு பின்னால்தான்கிடைக்கிறதா ? . அந்த நீளும் அமைதி மோட்சத்துக்கு இட்டுச்செல்லும் என்பது ஓஷோவின்
நம்பிக்கை.

‘பச்சை உடம்புக்காரியோட படுத்துகணும்கிறது எனக்கு வெறும் உடம்புமட்டுமல்ல.. தம்பி.. நான்.. சொல்றது புரியுதா..’
புரிகிறது. உணர்கிறேன். புரியமுயற்சிக்கிறேன். இது ஆணுலக மெளனத்தின் அலறல்.

அந்த புரிதலிக்கும், என் உள்மன தத்துவவிசாரணைக்கும் உதவியது, ஜெயந்தியின் ‘தையல்’ கதை.

தலைப்பு : நாலேகால் டாலர் ;
ஆசிரியர் : ஜெயந்தி சங்கர் மின்னஞ்சல் : jeyanthisankar@gmail.com
விலை : 70 /- (ரூ) ; 10/- ( சிங்கை டாலர்)
பதிப்பாளர்: மதிநிலையம் தொலைபேசி : 044-24311838 ; 09444463612
ஆசிரியரின் மற்ற இணைய பதிவுகள் :
http://www.nilacharal.com/tamil/interview/jayanthi_shankar_255.asp
http://www.tamiloviam.com/unicode/authorpage.asp?authorID=jayanthi
http://jeyanthisankar.blogspot.com

ஜெயந்தி சங்கரின் – தையல் கதை உண்மையானதுபோல இருக்கும் நம் வீட்டு/ பக்கத்து வீட்டு கதை. தாய் வீட்டு பிரசவம், தூக்கத்திலும் ஆனந்தமாய் வாய் திறந்து தூங்கும் குட்டி ரோசா, குழந்தை காண வந்த கணவனின் முகம் கொடுக்காது பேசும்தன்மை, முறுக்கிக் கொண்ட மாமியார், நாசுக்காய் குத்தும் இடம்தேடி அலையும் நாத்தனார், சீசீரியனால் உண்டான தையல் , கவலையினால் வரும் சின்னவலிப்பு, மருந்து சுகத்தினால் அயர்ந்த தூக்கம், தூக்கத்தில் வரும் குழலூதும் கண்ணணாய் கணவன். நிஜத்தில் நுழைந்த கணவன், கனவைப்போல குழலூத நுழையவில்லை. அதை ஜெயந்தியின் வரிகளிலே படிப்போம்.

” சுதாவின் அறைக்குள்ளே அவள் ஆசைப்பட்டபடியே பின்னரவில் ரகு வந்தான். ஆனால் அவள் ஆசைப்பட்டபடி அவளுடன் மனம்விட்டு பேச நினைத்தல்ல..”

அவள் கேட்பதென்ன.. என் வலியை பாதி சும என்றா ? ‘தேங்க்ஷ்டா.. செல்லம்.’ என்ற சின்ன தோள் தாங்கலைத்தானே ?
அவன் கொடுத்ததென்ன.. தையல் வலியோடு தையலுக்கு இன்னொரு வலியும்..ரகுவுக்கும் முருகன் அண்ணாபோல் பதிவுசெய்யப்படாத வலியிருக்குமோ ? தைக்கும் கதை. ஒவ்வொரு பிரசவமும், பிரசவம் சார்ந்த மக்களும் வெகு எளிதில் தங்களை கதையின் கதாபாத்திரங்களோடு நேரிடையாகவோ, மறைமுகமாகவோ தொடர்பு படுத்திக்கொள்ளும் கதை. என் குழந்தை முத்தமிடும்போதெல்லாம் மனைவியின் தையலும் தெரிகிறது. பிரசவகாலத்தில் ஆண் பெண் இருவரும் படிக்கவேண்டிய கதையிது என்பேன். தையல் ஈரமான, உண்மையான தைக்கிற கதை.

ஜெயந்தி சங்கர் – சிங்கை எழுத்தாளர், நல்ல மனுஷி. இளகியமனது. இளமையில் வடமொழிபடிப்பு. தமிழை இரண்டாவது மொழியாக படித்தவர். தமிழார்வமும், நல்ல தமிழ் எழுத்து படிப்பும் அவரை தமிழ் எழுத்துக்கு தூண்டியிருக்கிறது. இணைய எழுத்தாளர். ஜெயந்தியின் கதைகள் எல்லாமே நமக்கு அருகில் நிகழ்பவை. சிறுகதையை அடுத்த தளத்திற்கு எடுத்து சென்றுவிடவேண்டுமெனவோ, அவற்றை எப்படியாவது புகுத்தி வெற்றி ஆனந்த நடனம் ஆடிவிட வேண்டுமெனவோ துள்ளுகிற கதைகளுமில்லை. போகிற போக்கில், சொல்லிவிட்டுபோகிற சின்ன உணர்ச்சிக் கதைகள்.

நம் வீட்டு மூத்த சகோதரி ‘ தெரியுமாடா.. உனக்கு.. ” என்று பேசுகிற தொனியிலான கதை கருக்கள். லசுமி, ரமணிச்சந்திரன் வரிசையில் வருகிற சமையலறை அம்மாமிக்கதைகள் – என்று என்னை விட என் வீட்டுதாய்க்குலம் படிக்கிறது. ஆனாலும் என்ன, உலகத்து கதைகளெல்லாம் ஒத்தல்லோவாகாவோ, யாருக்காக அழுதவையாகவும், சில குறிப்புகளாகவும் இருக்கவேண்டியதில்லை. எனக்கு தனிப்பட்ட முறையில் புதிய தளம் நோக்கிய கதைகள்தான் பிடிக்கும். சமையலறைக்கதைகளை சின்ன வயசில் பக்கத்துவீட்டு அக்காக்களோடு படித்ததோடு சரி.. ஆனாலும் ஜெயந்தியின் கதைகளில் ( தையல், ஈரம், நுடம், திரிசங்கு,நாலேகால் டாலர்..) சில கதைகள் நன்றாய் வந்திருப்பதாய்படுகிறது. மற்ற கதைகள் மிகச் சாதரணமாகவும், சில கதைகள் முதல் வாசிப்பிலேயே அலுப்புதருவதாகவும் அமைகிறது. என் வாசகப் பார்வையில் பானைச் சோற்றில் ஒரு சில சோறுமட்டும் பதமாய் வந்திருப்பதாய் எண்ணுகிறேன். அடுத்த சமையலில் ஜமாய்ப்பார் எனவும் நம்புகிறேன்.

நம் இந்திய எழுத்தாளர்களின் புத்தகங்கள் பொதுவாய் – குருவிபோல் சேர்த்து, கூடிகட்ட, லோன்வாங்கி வீடுகட்டுவதுபோல் –
இங்கொன்றும் அங்கொன்றுமாய் எழுதி ஒரளவு வந்தபின் புத்தமாய் போட்டுவிடத்துடிக்கிறார்கள். அந்த புத்தகத்தின் அளவு சிறியதாய் வந்தாலும் தமக்கு சரியென தனது மறுவாசிப்பில் பட்டதை, சிறப்பாய் வந்ததை மட்டும் புத்தகமாய் போட்டால் – அவை புத்தக வாசக உலகத்திற்கு நல்ல முன்னேற்றமாய் படலாம்.

ஜெயந்தியின் கட்டுரைகள்தான். என்னை திகைக்கவைக்கின்றன. அவரின் பரந்த படிப்பு, விசாலப்பார்வை, சிங்கை கொடுத்த அநுபவங்கள் எல்லாம் கலந்து மானிடச்சாயம் பூசி, அனுபவ பெட்டியில் அடைத்து சிரித்தபடி அவர் கொடுப்பது – புலம் பெயர்ந்த மனிதர்களின் தெளிவான பதிவுகள். அவரது பலமே இந்த இரு உலக அறிவுகள்தான். அவரது சீனப்பெண்களின் அடிமைத்தனம்பற்றிய கட்டூரை ஒரு சிறந்த ஒன்று (அவரின் வலைப்பதிவை படிக்க ). அவர்களின் கால்கட்டு எப்படி ஆணாதிக்க தந்திரத்தைக்காட்டுகிறது என்பதை அழகாய் விவரிக்கிறது.

சாதரணத்தமிழில் புரியும் நடையில் பவனி வருகிற கட்டுரைகள் நல்ல செறிவான ஆழமான கட்டுரைகள். சிங்கை போகும் இலக்கிய
பிடிப்புள்ள எவரும் இவரது கதை, கட்டுரைகளை ஒரு வாசிப்பு செய்தல் நல்லது. சாலைகளோடு மனிதர்களையும் தெரிந்துகொள்ளும்போது நம் புரிதலின் எல்லைகள் விரிகிறது.

ஒரு ஆசிரியரை கட்டுரைகள் மட்டுமே எழுதுங்கள் என்று சொல்ல, விமர்சன வாசனுக்கு எந்த உரிமையும் கிடையாது. ஆயினும், அவரது அறிவுப்பார்வை, திறனாய்வு நோக்கு, அவருக்கு வாழ்க்கை கொடுத்திருக்கிற வசதிகள் – எல்லாம் கொண்டு ஒரு நீளமான ஆய்வுக்கட்டுரை வரையலாமே என்று தனது ஆசையை பதிவு செய்யலாம். தமிழர்களின் சிங்கை தொடர்பு, சீன-இந்திய கலாச்சார ஒற்றுமை – என பலபலத் தலைப்புகளில் அது கடந்த இரண்டு நூற்றாண்டுகளின் ஆய்வாக அது அமையலாம். எந்த யுவான் – சுவாங் இனி நம்மை எழுதப்போகிறார்..? இனிமேல் இப்படியான முயற்சிகளில்தான் நமது காலப்பதிவும், உலகமயமாக்கலின் கலாச்சர கலப்பும் – வரப்போகிற தலைமுறைகளுக்கான ஒரு பூளு-பிரிண்டு ( Blue Print ) அமையும் என்பது என் திண்ணம். எட்டுதிக்கில் – ஒரு சிங்கைத்திக்கிலிருந்து கலைச்செல்வத்தை சேர்த்து, வளரும் தமிழனத்திற்கு படைப்பார் என நம்புவோம். அதற்கான பொருள், மன,உடல் நலன்கள் எய்ய பிரார்த்தனை ! கட்டுரைகளின் பலம், செய்திகளின் உண்மை, சாதாரண தமிழ், அதிகம் அரசியல் நுழையாத ஆசிரியர் பார்வை, வெறும் நிகழ்ச்சியாய் அறிவுப்பதிவாய் பார்ப்பது பலம் மற்றும் சிறப்பு. பலவீனம் : இன்னும் கொஞ்சம் கோர்வையாய், இறுக்கமாய் நெய்யப்பட்டிருக்கலாம்.

மொத்தத்தில் ஜெயந்தியின் வருங்கால கட்டுரைகள் அகலமாகவும், ஆழமாகவும் உழப்படும் என நம்புவோம்.


Series Navigation

கே ஆர் மணி

கே ஆர் மணி