மோரியோடான செவ்வாய்க்கிழமைகள் – புத்தக அறிமுகம்

This entry is part [part not set] of 42 in the series 20080207_Issue

விழியன்



புத்தகத்தின் பெயர் : Tuesdays with Moorie (ஒரு வயோதிகர், ஒரு இளைஞர், வாழ்வின் மிகப்பெரிய பாடம்)
ஆசிரியர் : மிட்ச் ஆல்பம்
பக்கங்கள் : 192

“Tuesdays with Moorie” – ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள இந்த புத்தகம் மிகச்சிறந்த புத்தகங்களில் ஒன்றாக பேசப்படுகின்றது. சித்தார்த்தின் பதிவில் இந்த புத்தகத்தினை பற்றி படித்து ஈர்க்கப்பட்டு வாங்கிய ஒரே நாளில் முடித்துவிட்டேன்.

மோரியும், அவரின் முன்னாள் மாணவரான மிட்ச் ஆல்பமும் சந்தித்து பேசிக்கொள்ளும் விஷயங்களே இந்த புத்தகத்தின் கரு. மோரி தன்னுடைய எழுபத்தி எட்டாவது வயதி ALS என்னும் கொடிய நோய்க்கு ஆளாகின்றார். சிறுக சிறுக நோய்க்கு உணவாக்கப்பட்டு மரணத்தை தைரியமாக எதிர்கொள்ள காத்திருக்கிறார் மோரி. பதினாறு ஆண்டுகள் கழித்து தன் ஆசிரியரின் நிலையினை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் காண நேரிட்டு, மோரியை நேரில் சந்திக்க வருகின்றார் மிட்ச். இன்னும் சில மாதங்களில் இறக்க போகும் மோரியும், மிட்சும் துவங்கும் கடைசி ப்ராஜெட் இந்த புத்தகம்.

மோரி சிறுவயதிலேயே தன் தாயினை பறிகொடுக்கின்றார். தாயின் மரணம் நீங்காத காயத்தினை உண்டு செய்கின்றது. தந்தை மறுமணம் புரிகின்றார். புதிய தாயின் அரவணைப்பில் அவர் வளர்கிறார். படித்துவிட்டு நேராக ஒரு மனநல காப்பகத்தில் ஆராய்ச்சி ஒன்று செய்ய துவங்குகிறார். பல்வேறு அனுபவங்கள். அங்கிருந்து கல்லூரிக்கு செல்கிறார். பல புத்தகங்கள் எழுதுகிறார். ஏராளமான மாணவர்களுக்கு உந்துதலாக இருக்கிறார். மனைவி மக்களோடு ஆனந்தமாக வாழ்கிறார். தன் வாழ்கையின் மூலம் வாழ்வின் பொருளினை உலகிற்கு சொல்ல விழைகிறார். ALS என்கின்ற நோய் தாக்கப்பட்டதும், மரணத்தை வா வா என்று அழைக்கிறார். தான் இயற்கையோடு கலக்க போவதில் ஆனந்தம் கொள்கிறார். அவர் நினைத்தது போலவே ஆனந்த மரணம் அடைகின்றார், யாருக்கும் எந்த தொந்தரவும் தராமல், அமைதியாக இறக்கிறார்.

மோரியும், மிட்சும் உரையாடும் பதினாங்கு தலைப்புகளே வாழ்க்கை பாடங்கள். ஒவ்வொரும் தலைப்பின் கீழும் வாழ்வின் ரகசியங்கள். வலிகளை அனுபவிப்பது, குடும்பம், பணம், வாழ்வில் எது முக்கியம், சக மனிதர்களிடத்தே பாசம், விட்டுக்கொடுத்தல், மெல்லிய உணர்வுகள் என்று நம்மை உள்ளே இழுத்துக்கொள்கின்றது இப்புத்தகம். இது நிச்சயம் கதையோ, நாவலோ அல்ல. இவர்கள் விவாதிப்பது ஏதோ நடைமுறை சாத்தியமற்ற விஷயங்கள் அல்ல.

திறந்த மனதோடு எந்த புத்தகத்தை வாசித்தாலும் நிறைய செய்திகளை உள்வாங்கி கொள்ளலாம். பின்னர் அவற்றினை அலசி ஆராய்ந்து, கேள்விகளை தொடுத்து, மடக்கி வெளியேற்றுவதென்றாலும் உள்ளேயே வைத்துக்கொள்வது என்பது அவரவரை சார்ந்தது. இந்த புத்தகத்தினை அப்படி வாசித்தால், ஏராளமான செய்திகள் உள் தங்கும் என்பது நிச்சயம். கடினமான எழுத்துக்கள் அல்லாமல் மிக சாதாரண வார்த்தைகளில் கோர்வையாக்கி தந்திருப்பது புத்தகத்தின் மற்றொரு அம்சம்.

ஏதோ அந்த மூன்று மாதமும் மோரி மிட்சுடன் நாமும் வாழ்ந்த ஒர் உணர்வு. தேவையில்லாத அலட்டிக்கொள்ளும் எந்த உணர்வும் கதையில் தென்படாதது மற்றொரு மகிழ்ச்சி. முக்கிய இழை நடுவே பழைய நினைவுகள் அழகாக சொருகப்பட்டுள்ளது. சலிப்பினை ஏற்படுத்தவில்லை. மோரி கேட்கும் சில கேள்விகள் நம்மை அதிரவைக்கின்றன. சாதாரண கேள்விகள் தான் என்றாலும், அதனை நாம் தினசரி வேக வாழ்வில் சிந்திக்க தவறிவிடுவது நிஜம்.

புத்தகத்தில் ஈர்த்த மற்றொரு விஷயம் மெல்லிய நகைச்சுவை, மெல்லிய உணர்வு எங்கும் தூவி கிடைப்பது. இசை மழையில் நனைவது போன்ற உணர்வு. மனம் லேசாகி போகின்றது. இழந்ததற்கு வருத்தம் கொள்ளாதே என வலியுறுத்தும் இடங்கள், வாழ்வை எப்படி எதிர்கொள்வது, எதை நோக்கி நாம் ஓடுகிறோம்..சின்ன சின்ன விஷயங்கள் என்றாலும் சுகம்.

மரணத்தை எதிர்கொள்ளும் இடமும் அதனை பற்றிய மோரி பேசுவது சற்றே சிந்திக்க தூண்டும். தான் இறந்து போகும் கடைசி நாள் வரை புதிய புதிய செய்திகளை கற்றுக்கொள்கிறார். சக மனிதனை மதிப்பது தான் மதி. அன்புகொள் அல்லது மரித்து போ. சில வாசகங்களை எழுதி வீட்டில் தினம் தினம் பார்வைபடும் இடத்தில் மாட்டிக்கொள்ளலாம்.

மோரி இறக்கபோகிறார் என்று புத்தக ஆரம்பத்திலேயே தெரிந்துவிடுவதால் அவர் இறந்து போகும் சமயத்தில் எந்த பாதிப்பும் வாசகனுக்கு இருக்காது என நினைத்தது, கடைசி சில பக்கங்களில் தவறாய் போனது.

உங்களின் வாசிப்பிற்கும் கொஞ்சம் மிச்சம் வைக்கிறேன். நேரம் கிடைக்காவிட்டாலும் நேரம் ஒதுக்கி ஒரு முறை வாசித்துவிடுங்கள்.


விழியன்
http://vizhiyan.wordpress.com

Series Navigation

விழியன்

விழியன்