பிரெஞ்சிலிருந்து தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா
[லெ கிளேசியோ கடந்த ஆண்டின் இறுதியில் இலக்கியத்திற்கான நோபெல் பரிசைப்பெற்றவர். தேசாந்திரி, மானுடத் தேடலில் ஆர்வங்கொண்டவர். அதன் தாக்கம் படைப்புகளிலும் உண்டு. அவரது சிறுகதைகளுள். ‘மோந்தோ’ முக்கியமானதொரு சிறுகதை. கதையின் நீளத்தைக் கணக்கில் கொண்டால் குறுநாவலுக்கான தகுதியைக் கொண்டது. சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு முதல் வாசிப்பு தந்த ஏமாற்றாங்கள் இன்றில்லை. வேறு அனுபவங்களத் தந்தன. திண்ணை நண்பர்களுக்கு அவ்வனுபவத்தை பகிர்ந்துகொள்வதும் அவசியமாயிற்று -நா.கி]
– 1 –
மோந்தோ எங்கிருந்து வந்தான் ஒருவருக்கும் தெரியாது. ஒருவர்கண்ணிலும் படாமல் திடீரென்று ஒருநாள் எங்கள் நகரத்திற்குள் நுழைந்ததுபோலத்தான் தெரிந்தது, பிறகு எங்களுக்கும் பழகிப் போனான். சாயல் பார்வையுடன் கூடிய அழகான இரு கருவிழிகள், அமைதியான வட்டமுகம், காண்பவர் எவரும் பையனுக்கு பத்துவயதென்று சட்டென்று மதிப்பிட்டுவிடுவார்கள். பழுப்பு மற்றும் சாம்பல் நிறத்திலிருக்கிற அவனது தலைமயிரானது பகற்காலங்களில் அந்தந்த நேர ஒளியின் தன்மைக்கேற்ப நிறங்கொள்வதையும், இரவானால் முற்றிலும் சாம்பல்நிறத்திற்கு தன்னை மாற்றிக்கொள்கிற விந்தையையும் இங்கே குறிப்பிட்டாகவேண்டும்.
அவன் குடும்பம் எது, பெற்றோர்கள் யார், வீடு எங்கே ஒருவரும் அறிந்ததில்லை, அப்படியொன்று இல்லையோ என்னவோ, யார் கண்டார்கள். நீங்கள் எதற்கோ, யாருக்கோ காத்திருப்பீர்கள் அல்லது அவனை அந்த இடத்தில் நினைத்துப் பார்த்திருக்கக்கூட மாட்டீர்கள், தெருவின் மூலையில், கடற்கரையில், நாளங்காடி என்று எதுவாக வேண்டுமானாலும் அந்த இடமிருக்கக்கூடும் தீடீரென்று எதிர்ப்படுவான். எப்படி? ஒருவிதத் தீர்மானத்துடன், அவ்வப்போது தன்னைச்சுற்றிப் பார்வையை ஓட்டியபடி தனித்து நடந்து வருவான். நீலநிறத்தில் ஒரு டெனிம், டென்னிஸ் ஷ¥க்கள், பச்சைக்கலரில் தொளதொளவென்று ஒரு டீஷர்ட் இதுதான் அவனது தினசரி ஆடை அலங்காரம், இன்றைய தேதிவரை அதில் மாற்றங்களில்லை.
உங்களிடத்தில் வந்ததும், உங்களை ஏறிட்டுப் பார்ப்பான், சிறிய அவனது கண்களிரண்டும் மெல்லிய ஒளிக்கீற்றுபோல பிரகாசிக்கும். அப்படி நடந்தால் உங்களுக்கு தனது வணக்கத்தைச் சொல்கிறான் என்று பொருள். எதிர்ப்படும் நபர்களில் எவராகிலும் அவனுக்குப் பிடித்திருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள், மேலே நகரமாட்டான், மிக எளிதாக கேள்வி பிறக்கும்:
– என்னை தத்து எடுத்தீப்பங்களா?
சம்பந்தப்பட்ட நபர் இப்படியொருகேள்வியை அவனிடம் எதிர்பார்த்திருக்கமாட்டார், அவர் திகைத்து மீள்வதற்கு முன்பாக, அவன் வெகுதூரம் நடந்திருப்பான்.
சரி இந்த நகரத்தில் அவனுக்கு என்ன வேலை, எதற்காக வந்தான்? எப்படி வந்தான்? சரக்கு விமானமொன்றில் பொதியோடு பொதியாக வெகுதூரம் பயணித்து கடைசியில் இங்கே வந்திருக்கக்கலாமா?. அல்லது சரக்கு இரயிலொன்றில் மெதுமெதுவாக நாட்டில் ஒரு திசையிலிருலிருந்து மறு திசைக்கு இரவு பகலென்று பயணித்து ஒருவழியாக இங்கே சேர்ந்திருப்பானா? அல்லது நீண்டபயணத்திற்கிடையில் இங்கு மட்டுமே சூரியன், கடல், வெள்ளைவெளேரென்றிருக்கிற பெரியவீடுகள், ஒருவிதமான கடற்கரை பனைகள் என்றிருக்க தங்கிவிடுவதென உத்தேசித்திருக்கலாமோ? ஆனால் இந்தப்பக்கத்து ஆளல்ல, அதாவது கடலுக்கு மறுபக்கம், மலைகளுக்கு அப்பாலென கண்காணாதப் பிரதேசத்திலிருந்து வந்தவனென்பது நிச்சயம். அவனைப் பார்த்த மாத்திரத்தில் இந்நகரத்தைச் சேர்ந்தவனல்லவென்றும், இங்கே வருவதற்கு முன்பு பல நாடுகளையும் சுற்றிப் பார்த்தவவனென்றும் நீங்கள் முடிவுக்கு வரக்கூடும் என்பது போலத்தான் அவனுடைய தோற்றமும் இருந்தது. தீர்க்கமும், பிரகாசமும் கொண்ட கண்கள், செப்பு நிறத்தில் உடல்வாகு, மெல்ல, அமைதியாக கால்போனபோக்கில் ஒரு நாய்போல நடந்துவருவான். ஆனாலும் அதிலொரு மிடுக்குண்டு, பார்க்க நம்பிக்கை தரும் தோற்றம், அவன் வயதில் வேறு பையன்களிடத்தில் சாதாரணமாக நாம் பார்க்க முடியாது. எழுதவோ வாசிக்கவோ தெரியாதென்றாலும், அவனுடைய கேள்விகளை காதில் வாங்கியதும், மூக்கின் மீது விரலை வைப்பீர்கள்.
எங்கள் நகரத்திற்கு அவன் வந்து சேர்ந்தது கோடை பிறப்பதற்கு முன்பு. அப்போதே கடுமையான வெக்கை தொடங்கிவிட்டது, இரவு நேரங்களில் மலைப்பகுதி தாவரங்கள் திடீர்திடீரென்று தீப்பிடித்து எரிகின்றன. காலையிலோ நீல நிறத்தில் வியாபித்திருக்கும் சாதுவான வானத்தைப் பார்க்க முடிகிறது, கையளவு மேகங்கூட ஒட்டிக்கொண்டிருப்பதில்லை அத்தனை சுத்தமாயிருக்கிறது. கடற்பகுதியிலிருந்து வீசும் வெப்பமான உலர்ந்த காற்று பூமியை மேலும் வறட்சியாக்கி, தீ விபத்திற்கு துணை போகிறது. அன்றைக்குச் சந்தை கூடுந்தினம். மோந்தோ வந்திருந்தான். சந்தையில் கடைபோடும் காய்கறிகாரர்களின் நீலநிற சரக்குவாகனங்களுக்கிடையில் திரிய ஆரம்பித்தான், காரணமிருந்து. அவன் முயற்சி வீண்போகவில்லை. சந்தை வியாபரிகள் அவர்களது பொதிகளை வாகனங்களிலிருந்து இறக்குவதற்கு எப்போதும் ஆட்களைத் தேடிக்கொண்டிருப்பவர்கள். எனவே சுலபமாக அவனுக்கொரு வேலை கிடைத்தது.
முதலில் ஒரு வாகனத்திகிருக்கிற காய்கறிக் கூடைகளை இறக்கிவைப்பான். முடித்த வேலைக்கு காய்கறிகடைக்காரன் கொடுக்கின்ற காசை கையில் வாங்கிக்கொண்டு அடுத்த வாகனத்தைத் தேடிசெல்வான். சந்தையில் கடைபோடுகிற அத்தனை பேருக்கும் அவனை நன்றாகத் தெரியும். நேரத்திற்கு வந்தால் இப்படியான வேலைகள் கிடைக்குமென்று தெரியும் எனவே வந்துவிடுவான், காய்கறி ஏற்றிய வாகனங்கள் ஒவ்வொன்றாக சந்தைக்கு வந்து சேரும், வியாபாரிகள் அவன் சுற்றித் திரிவதைப் பார்த்து விடுவார்கள், அவனை பெயரைச் சொல்லி சத்தமிட்டு கூப்பிடுவார்கள்:
– “மோந்தோ! டேய் மோந்தோ!..”
சந்தை முடிந்ததும், மிச்சம் மீதியென்று வியாபாரிகள் போட்டுவிட்டுப் போகிற பொருட்களிலிருந்து, தனக்கானதைப் பார்த்து எடுத்துக்கொள்வது அவனுக்குப் பிடித்தமான காரியம். கடைகளின் நடைபாதைகளுக்கிடையே நடந்து செல்வான், தரையில் கிடக்கிற ஆப்பிள்கள், ஆரஞ்சுகள், பேரீச்சைகள் ஆகியவற்றை பொறுக்கிக் கொள்வான். அவனைப்போல வேறு சில பிள்ளைகளும், ஏன் பெரியவர்களுங்கூட கையில் பெரிய பைகளை வத்துக்கொண்டு சந்தைகளில் அவனைபோலவே சிந்திக்கிடக்கும் பொருட்களுக்காக அலைவதுண்டு, அவர்கள் சாலட் கீரைகள், உருளைக் கிழங்குகளென்று பைகளில் திணித்துச் செல்வார்கள். காய்கறி கடைகாரர்களுக்கு மோந்தோவைப் பிடிக்கும். அவனை ஒன்றும் சொல்லமாட்டார்கள். சில நேரங்களில் பழங்களை மொத்த வியாபாரம் செய்யும் ரோஸா, தமது கடையிலிருந்தே ஆப்பிள்களையும், வாழைப்பழங்களையும் இவனுக்குக் கொடுத்திருக்கிறாள். சந்தை ஆக இரைச்சலுடன் நடக்கும். உலர்ந்த திராட்சைகளிலும், பேரீச்சை பழங்களிலும் ஒருவகை தேனீக்கள் மொய்த்திருக்கும்.
நீல நிற வாகனங்கள் புறப்பட்டுப் போகும்வரை, சந்தையிலேயே மோந்தோ இருப்பான். சந்தை கூடிய இடத்தைக் கழுவி சுத்தம் செய்யவரும் நகரசபை ஊழியர் ஒருவர் அவனுக்குப் பழக்கம். அவர் வரட்டுமெனக் காத்திருப்பான். ஆஜானுபாகுவான அம்மனிதர் கடல் நீல நிற சீருடையில் வருவார். இரப்பர் குழாயை அவர் கையாளும் விதம் அவனுக்குப் பிடித்தமானது, ஆனால் அவரிடம் ஒருபோதும் உரையாடியதில்லை. அந்நபர் தரையில் கிடக்கும் அசுத்தப் பொருட்களின் மீது குழாயைத் திருப்பி, நீரைப் பீச்சி அடிப்பார். நீரின் வேகத்தில் குப்பைகள் ஒடுங்கியொதுங்கும் காட்சி பரிதாபமானது. நீர்த்துமிகளாலான மேகமொன்று மெல்ல எழுந்து காற்றில் கலக்கும். இடியுடன் மழைபெய்வது போல சத்தமெழும். உடைப்பெடுத்ததுபோல வீதியெங்கும் நீர்ப்பாய்ச்சல்கள். வீதியோரங்களில் நிறுத்தப்பட்டுள்ள மோட்டார் வாகனங்களுக்கு மேலே வானவில்களைக்கூடப் பார்க்கலாம். நகரசபை ஊழியரிடம் மோந்தோ சிநேகிதனாக இருப்பதற்கான காரணம் உங்களுக்குப் இப்போது புரிந்திருக்குமென நினக்கிறேன். மிக நுண்ணிய துளிகள் தெறித்து மேலெழுவதும், மழைபோல சடசடவென அங்குள்ள நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களில் அவை திரும்ப விழுவதும் அவனுக்குப் பிடித்தமான காட்சி. சாலையில் தண்ணீர்விட்டு சுத்தம் செய்யும் நகரசபை ஊழியருக்கும் மோந்தோவென்றால் விருப்பம், ஆனால் அந் நபருங்கூட மோந்தோவிடம் பேசி நாங்கள் பார்த்ததில்லை. தவிர தண்ணீரை பீச்சி அடிக்கும்பொழுது எழும் சத்தத்தில் அப்படி என்னதான் பேசிவிடமுடியும். கறுப்பு நிறத்தினாலான இரப்பர் குழாய் பாம்புபோல் நெளிவதையும் அசைவதையும் மோந்தோ வேடிக்கைப் பார்ப்பானே தவிர, நகரசபை ஊழியனிடமிருந்து இரப்பர் குழாயைப் பெற்று அக்காரியத்தினைச் செய்ய விரும்பியதில்லை. நின்றபடி வெகுநேரம், குழாயைப் பிடித்திருக்கவும் இவனால் ஆகாது அத்தனை வேகமாக நீர் பீச்சியடிக்கும்.
மோந்தோ, நகரசபை ஊழியன் கழுவி முடிக்கும்வரை அங்கிருப்பான். நீர்துமிகள் படிந்து அவன் முகமும், சிகையும் ஈரத்துடனிருப்பதுண்டு, ஈரப்பதத்துடனான மூடுபனி போன்று உடலில் ஏற்படுத்தும் அவ்வனுபம் அவனுக்கு சுகமானது. தனது வேலை முடிந்ததும் குழாயை சுருட்டிக்கொண்டு, வேறு இடங்களுக்குப் ஊழியர் புறப்பட்டுப் போய்விடுவார். அதற்கென்றே காத்திருந்ததுபோல சிலர் வருவார்கள், நனைந்திருக்கும் சாலையையும் சந்தை கூடிய இடத்தையும் பார்ப்பவர்கள் சும்மா இருக்க மாட்டார்கள்.
– என்ன, இங்கே மழையா பெய்தது? எனக் கேட்பார்கள்
பிறகு கடலிருக்கும் திசைக்காய் மோந்தோ பயணப்பட்டிருப்பான். அல்லது தீவிபத்தில் கருகிக்கிடக்கும் மரங்களையும் செடிகொடிகளையும் காணவென்று மலைப்பகுதியை நோக்கி புறப்பட்டிருப்பான், தவறினால் அவனுக்கு நண்பர்கள் ஏராளம், அவர்களில் ஒருவரைத் தேடிப்போயிருப்பான்.
அந்த நேரத்தில், அவனுக்கு நிரந்தர முகவரியென்று எதுவுமில்லை. கடலோரங்களில் உடைமாற்றவென்று உபயோகத்திலிருக்கும் மறைவிடங்களில் உறங்குவான் அல்லது சில நேரங்களில் நகரத்திற்கு வெளியே சற்று தள்ளியிருக்கிற வெண்ணிற பாறைகளில் கூட அவனைப் பார்க்கலாம். பல நேரங்களில் ஒளிந்திருக்கவும் அவைதான் சரியான இடம், ஒருவராலும் அவனை கண்டுபிடிக்க முடியாது. காவல் துறைக்கும், அரசாங்கத்தின் சமூகத் துறைக்கும் இதுபோன்ற வாழ்க்கை நடத்தும் சிறுவர்களை ஆகாது, அதாவது கிடைத்ததை உண்டு, முடிந்த இடத்தில் உறங்கிச் சுதந்திரமாக சுற்றித் திரியும் பிள்ளைகளைக் கண்டால் அவர்கள் விடுவதில்லை. ஆனால் மோந்தோ தந்திரசாலி, அவர்கள் அவனைத் தேடுகிறபோதெல்லாம் தப்பித்துவிடுவான்.
ஆபத்தெதுவும் இல்லையென்கிறபோது, நடக்கும் சம்பவங்களை வேடிக்கைபார்த்தபடி நாள்முழுக்க நகரத்தை வலம் வருவான். கால்போனபோக்கிலே நடப்பதென்றால் அவனுக்கு விருப்பம்: தெருக்கோடிவரை நடப்பான், திரும்புவான்; மீண்டும் இன்னொரு தெரு, இன்னொரு திருப்பம்; குறுக்குவழிகளில் புகுந்து வெளியில் வருவான்; பூங்காக்களோ, தோட்டங்களோ கண்ணிற்பட்டால் போதும் கொஞ்ச நேரம் ரசிப்பான், பிறகு மீண்டும் தொடர்ந்து நடப்பான். அவனுக்குப் பிடித்த நபர்கள் யாரேனும் எதிர்ப்படுவார்கள், அமைதியாக அவர்களிடம்:
– வணக்கம். என்னை தத்தெடுக்கவேண்டுமென்ற ஆசை எதுவும் உங்களுக்கில்லையா?- என்பான்.
வட்டமான முகமும், மின்னும் கண்களுமாக, தோற்றத்தில் நல்லவன்போல தெரிந்த மோந்தோவை கூடுதலாக நேசித்த மனிதர்களும் எங்கள் நகரத்தில் இல்லாமலில்லை. ஆனால் அவர்கள்கூட திடுதிடுப்பென்று அவன் கேட்டமாத்திரத்தில் அவனைத் தத்தெடுக்க முடியுமா என்ன? நிறைய கேள்விகளுக்கு அவன் பதில் சொல்லியாகவேண்டும்: வயது, பெயர், முகவரி, பெற்றோர்கள் இருக்குமிடம்… மோந்தோவிற்கு இது மாதிரியான கேள்விகளுக்கு பதில்சொல்லி அலுத்துபோய்விட்டது. எல்லா கேள்விகளுக்கும் ஒன்றுதான் பதில்:
– எனக்குத் தெரியாது, தெரியாதென்றால் தெரியாது, – பிறகு அங்கே நிற்பதில்லை, ஓட்டம்..
மோந்தோவுக்கு நிறைய நண்பர்கள். அனைவருமே வீதிகளில் கிடைத்த சிநேகிதர்கள்தான். கண்களை சிமிட்டி, கையை அசைத்து வீதிக்கு மறுபக்கம் அல்லது எத்தனை தூரத்தில் அவன் இருந்தாலுங்கூட அவர்களைப் பார்க்கிறபோது நலம் விசாரிக்கவேண்டும், அதற்காகத்தான் அவர்கள் வேண்டும், மற்றபடி கிடைத்த எல்லா சிநேகிதர்களிடமும் அவன் பேசுவதுமில்லை, விளையாடுவதுமில்லை. பிறகு சிலருடைய சிநேகிதம் வயிற்றுப் பசிக்கு உதவுகிறது. ரொட்டிக்கடை வைத்திருக்கும் பெண்மணியின் சிநேகிதம் அப்படிபட்டதுதான். ஒவ்வொரு நாளும் ஒரு துண்டு ரொட்டியாகிலும் அவள் கொடுப்பாள். இத்தாலிய சிலையைப்போல அவளுக்கு ரோஜா நிறத்தில் வனப்புடன் கூடிய நல்ல வடிவான முகம். கறுப்பு ஆடைதான் உடுத்துவாள், சுருள்சுருளான அவளது நரைத்த முடியை படியசீவி கொண்டை போட்டிருப்பாள். ‘இடா’ என்ற அவள் பெயர்கூட இத்தாலியை நினைவுபடுத்தகூடியதுதான். மோந்தோ, அவளுடைய கடைக்குள் நுழைவதற்குத் தயங்குவதில்லை. அண்டை அயலில் இருக்கும் கடைகாரர்களுக்கு ரொட்டிகொண்டுபோய் கொடுப்பதுபோன்ற சின்ன சின்ன வேலைகளை சிற்சில சமயங்களில் அவளுக்காகச் செய்யவேண்டியிருக்கும். ரொட்டியைக் கொடுத்துவிட்டுத் திரும்புகிறபோது, இவனுக்கென்று வட்ட ரொட்டியிலிருந்து ஒரு துண்டினை மெல்லிய காகிதத்தில் சுற்றி வைத்திருப்பாள். அவளிடம் தன்னை தத்து எடுத்துக்கொள்ளமுடியுமாவென மோந்தோ கேட்பதில்லை. அதற்கு இரண்டுகாரணங்களிருந்தன: அவளை மிகவும் நேசித்தான் என்பது முதலாவது, கேள்வி அவள் மனதை புண்படுத்தக்கூடுமென்பது இரண்டாவது.
கையிலிருந்த ரொட்டித் துண்டை பிய்த்து தின்றபடி கடலை நோக்கி நடந்துகொண்டிருந்தான். உடனே தின்று முடித்திடக்கூடாது, முடிந்தமட்டும் வெகுநேரம் கையில் வைத்து சாப்பிடவேண்டும் என்பதுபோல, சிறு சிறு துண்டுகளாக பிய்த்து வாயில் போட்டபடி மெதுவாக நடந்தான். ரொட்டிதுண்டுகளால் மட்டுமே உயிர்வாழ்கிறான் என்பது போலத்தான் நாங்களும் அப்போது நினைத்தோம். கிடைக்கிற ரொட்டித் துண்டுவின் அளவு என்னவாக இருக்கட்டும், அதிலொரு பகுதியை சிநேகிதர்களாகிய கடற்காகங்களுக்கு விநியோகிப்பது மட்டும் தவறாது.
அலைகளெழுப்பும் பிரத்தியேக சப்தத்துடன் சட்டென்று காற்றில் எதிர்ப்படும் கடலின் இருப்பை உணர்த்தவென்று வாசமொன்றுண்டு, அதனை உணர்வதற்கு முன்பு நிறைய வீதிகள், திடல்கள், பூங்காக்களை கடந்தாகவேண்டும்.
பொதுப்பூங்காவில் மறுகோடியில், இதழ்கள் சஞ்சிகைகள் விற்கிற கடையொன்றிருந்தது. அங்கே சிறிது நேரம் தயங்கி நிற்பான். படக்கதையுள்ள புத்தகமொன்றை தேர்வு செய்தாகவேண்டும். அக்கீம் என்பவனைக் நாயகனாகக் கொண்ட படக்கதைகள் அவனுக்கு விருப்பமானது, வழக்கமாக அதிலொன்றைத்தான் தேர்வு செய்வான். ஆனால் அன்றைக்கு கிட் கார்சன் என்பவனைப் பற்றிய படக்கதையொன்றை வாங்கினான். காரணம் புத்தகத்தின் அட்டையிலிருந்த கிட்கார்சன் அவனுக்கு பிடித்த தோலாடை அணிந்திருந்தான். உட்கார முடிந்தால் படிக்கலாம், எங்கேயாவது நீள் இருக்கையொன்று தென்படுகிறதாவென தேடினான். தவிர அந்த இருக்கையில், கிட்கார்சன் கதையில் என்ன சொல்கிறான் என்பதைப் பொறுமையாகப் படித்துக்காட்ட அவனுக்கு ஒரு நபரும் தேவை, அது அத்தனை சுலபமல்ல. பன்னிரண்டு மணிக்கு முன்பென்றால் அது சாத்தியம், பணி ஓய்விலிருக்கும் அஞ்சலக ஊழியர்களில் ஒன்றிரண்டுபேர் சுருட்டு பிடித்தபடி பொழுதை ஓட்டிக்கொண்டிருப்பார்கள். அப்படி ஒருவர் கிடைத்ததும், இவன் போய் பக்கத்தில் அமர்ந்துகொள்வான், அந்நபர் படிக்க இவன் படங்களை பார்த்தபடி கேட்டுக்கொண்டிருப்பான்:
கிட்கார்சனுக்கும் முன்னாலிருந்த சிவப்பிந்தியன் அவனிடம் கூறினான்:
-பத்து பௌர்னமி வந்திட்டுது, எங்கள் மக்களுடைய பொறுமைக்கு ஓர் அளவு இருக்கு, எங்கள் முன்னோர்களின் கோடரியை கையிலெடுக்கவேண்டிய நேரம்!
கிட் கார்சன் கையை நீட்டி உயர்த்தினான்.
– பைத்தியக்கார குதிரையே (செவ்விந்தியனின் பெயர்) அவசரம் வேண்டாம். வெகு சீக்கிரம் உங்களுக்கு நியாயம் கிடைக்கும்.
– காலம் கடந்த பதில், அங்கே பார்- பைத்தியக்கார குதிரை என்று அழைக்கப்படும் செவ்விந்தியன் கோபத்துடன் சொன்னான்.
மலை அடிவாரத்தில் சண்டைக்கு ஆயத்தமாய் அவனுடைய வீரர்கள் நிற்கின்றனர்.
– போதும் போதும் என்கிற அளவிற்கு நாங்க பொறுமை காத்துவிட்டோம், போருக்கு நாங்க தயார், உங்கள் அனைவரையும் கொல்லப்போகிறோம், கிட்கார்சன் நீயும் தப்பமுடியாது.
செவ்விந்தியனின் கட்டளைக்கு அவனுடைய வீரர்கள் கீழ்ப்படிந்தார்கள், சூழ்ந்த வீரர்களைத் தள்ளிவிட்டு கிட் கார்சன் சட்டென்று குதிரையில் தாவி ஏறினான். குதிரையிலிருந்தபடி செவ்விந்தியனைப் பார்த்து சத்தமிட்டான்.
– திரும்பவும் வருவேன், உரிய பதில் கிடைக்கும்.
கிட் கார்சன் கதையை படித்து முடிந்ததும், ஆசாமிக்கு நன்றிசொல்லிவிட்டு புத்தகத்தைத் திரும்ப வாங்கிக் கொண்டான்.
– பிறகு பார்க்கலாமா? – ஆசாமி.
– ம். – மோந்தோ.
கப்பல்கள், படகுகள் நிறுத்துவதற்கென்று கடலுக்குள்ளே பாலம்போல நீண்டிருந்த கல்லணை முடியும் இடத்திற்குக் கடைசியாய் வந்து சேர்ந்தான். எதிர்வெய்யிலில் கண்கள் கூசின, கண்ணிமைகளை குறுக்கிக்கொண்டு சிறிது நேரம் நின்று கடலை அவதானித்தான். மேகங்களேதுமின்றி கருநீல நிறத்தில் வானம். விட்டு விட்டு மின்னுகிற சிற்றலைகள்.
சிறிய கடலலைகள் மோதித் சிதறும் அணையின் கீழ்ப்பகுதிக்கு சிறிய படிகட்டுகளைப்பிடித்து இறங்கினான். அவ்விடத்தின் மீது அவனுக்குக் கூடுதலாக விருப்பம். அப்பகுதியில் கனமான நீள் சதுர சிமெண்ட் கற்களை ஓரத்தில் பாதுகாப்பிற்கு அடுக்கியிருந்தார்கள். அணை முடியுமிடத்தில் கலங்கரைவிளக்கிருந்தது. கடற் பறவைகள் காற்றில் வழுக்கி, சிறகை விரித்து சிறிது நேரம் அமைதியாகப் பறக்கின்றன, பிறகு குழந்தைகளின் அழுகுரலையொத்த சப்தத்தை எழுப்பிக்கொண்டு மெல்ல திரும்பி மீண்டும் பறக்கின்றன. இப்பொழுது அவை அவனது தலைக்கருகே கூடிவிட்டன. தாங்கள் வரவை சொல்லவிரும்பியதைப்போல, அலகுகளால் அவனை மெல்லச் சீண்டுவதும் பறப்பதுமாய் இருக்கின்றன. பறவைகள் அலகுகளால் கவ்விக்கொண்டு பறந்துசெல்ல, ரொட்டித் துண்டுகளை பிய்த்து பிய்த்து முடிந்த உயரத்திற்கு மேலே தூக்கிப்போடுகிறான்.
அலைகள் மோதிச் சிதறும் இப்பகுதியிலும் மோந்தோ நடப்பதற்கு தயங்குவதில்லை. கடலை பார்த்தவண்ணம் ஒவ்வொரு கல்லாக தாவிக்குதிக்கிறான். வலதுகன்னத்தில் காற்றினை சற்று அழுந்த உணர்ந்தான், அவனது தலைமயிரும் காற்றில் ஒதுங்கியது. காற்றிருந்தும் வெயில் தகித்தது. அணைக்கரையில் மோதிச் சிதறிய அலைகள் ஒளியுடன் இரண்டறகலந்து தெறிக்கின்றன.
அவ்வப்போது எதிரே தூரத்தில் தெரியும் கடற்கரையை ஏறிட்டுப் பார்க்கிறான். இன்னும் வெகுதூரம் இதுபோல தாவிக்குதிக்கவேண்டும், கடற்கரை அருகிலில்லை. பழுப்பு நிற குழப்ப வரிசையில் அங்காங்கே வெண்ணிற நீள்சதுரத்தில் வீடுகள். வீடுகளுக்கு மேலே பச்சையும் சாம்பல் நிறமுமாக மலைகள். தாவரங்கள் தீப்பற்றி எரிந்த பகுதிகளில் புகை மண்டிக்கிடக்கும் வானம் வித்தியாசமாகக் காட்சி அளிக்கிறது. தீச்சுவாலைகள் ஏதும் கண்ணிற்படவில்லை.
– அருகில் சென்று பார்க்கவேண்டும், – மோந்தோ சொல்லிக்கொண்டான்.
அடர்ந்த புதர்களும், சோற்றுக்கருங்காலிமரக்காடுகளும் சிவந்த பெரிய ஜுவாலையுடனான தீயில் கருகும் காட்சியை நினைத்துப்பார்த்தான். தீயை அணைப்பதற்கென்று சாலைகளில் கொண்டுவந்து நிறுத்தப்படுகிற தீயணைக்கும் வாகனங்களும் கண்முன்னே தெரிகின்றன. சிவப்பு நிறத்தில் இருக்கிற அவ்வாகனங்கள் அவனுக்கு மிகவும் விருப்பமானவை, அவற்றை அத்தனை சுலபமாக அவனால் மறக்க முடியாது.
மேற்கிலும் தீபற்றி எரிகிற காட்சியுண்டு, ஆனால் இங்கு பற்றி எரிவது கடல், அதாவது மேற்கில் மறையும் சூரியனின் பிரதிபலிப்பு அது. மோந்தோ அசையாமல் நிற்கிறான். சின்ன சின்ன தீ ஜுவாலைகள் இப்போது இவனது இ¨மைகளில் ஆட்டம்போடுவதைபோல உணர்கிறான், நீர்தடுப்புக்கென்று அடுக்கியிருந்த கற்களில் தாவி குதித்தபடி தொடர்ந்து நடந்தான்.
மோந்தோவுக்கு நீள்சதுர சிமெண்ட் கற்கள் அத்தனையும் பழகியிருந்தன. அவைகளைப் பார்க்க ஏதோ பெரிய விலங்குகள் தங்கள் பரந்த முதுகை வெயிலில் உலர்த்தியபடி நீரில் படுத்துக்கிடப்பதுபோல இருந்தன. அவற்றின் முதுகில் அதிசயத்தக்கவகையில் குறியீடுகள் தெரிகின்றன, கிட்டத்தில் பார்க்க சிவப்புப் பழுப்புமாக, சிமெண்ட் கற்களில் கடித்துக்கொண்டிருப்பவை அனைத்துமே கிளிஞ்சல்கள். அலைகள் மோதும் இடங்களில் படற்பாசி படிந்து பச்சைக் கம்பளம் போல இருக்கிறது, பிறகு நத்தைகளும் கிளிஞ்சல்களும் ஒட்டிக்கிடக்கின்றன. கிடக்கிற அவ்வளவு சிமெண்ட் கற்களிலும், ஒன்றை நன்றாக தெரிந்து வைத்திருந்தான். ஏறக்குறைய அணை முடியுமிடத்தில் அக்கல் இருந்தது. அவ்விடத்திற்கு வருகிறபோதெல்லாம் வழக்கமாக மோந்தோ அமரும் கல். அத்தனை கற்களிலும் அவனுக்கு என்னவோ அந்த இடம்ந்தான் பிடித்திருந்தது. கல் கொஞ்சம் சரிந்தாற்போல கிடக்கும். கல்லிலிருந்த சிமெண்ட் அரிக்கப்பட்டு மேற்பரப்பு வழவழவென்று இருக்கும், மிகவும் சாதுவானது. மோந்தோ பார்த்தவுடன் காலை மடித்து உட்கார்ந்தான், தாழ்ந்த குரலில் அக்கல் மோந்தோவிடம் நலம் விசாரிப்பதுண்டு. சில நேரங்களில் புறப்பட விருப்பமில்லாமல் மோந்தோ உட்கார்ந்திருக்கும்போது, பொழுது போகவேண்டுமல்லவா அதற்காக இவனுக்குக் கதைகளெல்லாங்கூட அது சொல்லும். இவனும் பதிலுக்கு சொல்வான், இவனது கதைகளில் பயணங்கள், படகுகள், கடலென எல்லாமுண்டு. அக்கல் இவனிடம் எதுவும் பேசாது, அசையவும் செய்யாது. ஆனால் மோந்தோ சொல்லும் கதைகள் எதுவென்றாலும் விருப்பமுடன் கேட்கும். அது அவனிடம் சாதுவாக இருப்பதற்கு மோந்தோவின் கதைகள்தான் காரணம்.
மினுக்கும் கடல் நீரை பார்ப்பதற்கென்றும் அலைகளிடும் முழக்கத்தை கேட்பதற்கென்றும் கல்லின் மீது வெகு நேரம் அமர்ந்திருப்பான். சூரியன் கடுமையாக இருக்கிற அந்தி நேரத்தில், வெதுவெதுப்பாக இருக்கிற கல்லின்மீது கன்னத்தை வைத்து காலை நீட்டி ஒருக்களித்து படுத்திருப்பான், கொஞ்சம் கண்ணை மூடி குட்டித் தூக்கமும் போடுவான்.
அப்படியானதொரு பிற்பகலில்தான் தூண்டில் போட்டு மீன்பிடிக்கிற ழியோர்தான் அறிமுகம் கிடைத்தது. அன்றும் இப்படித்தான் படுத்திருந்தான். சிமெண்ட் கற்களில் யாரோ நடந்து வரும் சப்தம் கேட்டது. பயந்து போனான், படுத்திருந்தவன் விருட்டென்று எழுந்து உட்கார்ந்தான், ஒளிவதற்குக்கூட தயாரானான். அப்போதுதான் தோளில் தூண்டிற் கம்பை போட்டபடி ஐம்பது வயது மதிக்கக்கூடிய மனிதர் ஒருவர் நடந்து வருவது தெரிந்தது. இவனைக்கண்டு அந்த நபர் பயப்படவில்லை. நெருங்கி வந்தவர், இவனைப்பார்த்து கை அசைத்ததில் தோழமை வெளிப்பட்டது.
– இங்கே என்ன செய்யற?
– வந்த மனிதர் மோந்தோவுக்கு அருகில் தனக்கென்று ஒரு கல்லை தேர்வு செய்துகொண்டார். முரட்டுத் துணிப்பை ஒன்றிலிருந்து தூண்டில்போட உதவும் சுருட்டப்பட்ட நரம்புக்கயிறுகளையும் தூண்டிற் முட்களையும் எடுத்து வெளியில் வைத்தார். வந்த நபர் தூண்டில் போடப்போகிறார் என தெரியவந்ததும் மோந்தோ பக்கத்தில் வந்தமர்ந்து, அவர் தூண்டிலுக்கு செய்யும் ஆயத்தங்களை ஆர்வத்துடன் கவனித்தான். இரையை தூண்டில் முள்ளில் எப்படி சொருகவேண்டும், தூண்டிற் கழியை எப்படி வீசவேண்டும். ஆரம்பத்தில் நிதானமாகவும் பின்னர் மெல்ல மெல்ல நரம்புக்கயிற்றைத் தேவைக்கேற்ப எவ்வாறு உபயோகிப்பதென்றெல்லாம் தூண்டில் ஆசாமி அவனுக்கு விளக்கினார். தூண்டில் கழியை அவனிடம்கொடுத்து, நரம்புக்கயிறுள்ள சிறு ராட்டினத்தை முன்பின்னாக சுழற்றுவது, தூண்டில் கழியை தடுமாறாமல் சிறிதுநேரம் வலம் சிறிது நேரம் இடமென்று தேவைகேற்ப லாவகமாக பிடிப்பதெப்படி என்றும் கற்றுக்கொடுத்தார்.
தன்னிடத்தில் கேள்விகள் கேட்காத தூண்டில் மனிதரை மோந்தோவுக்கும் பிடித்தது. அவரது முகம், தகிக்கும் வெப்பத்தால் மேலும் சிவந்து சுருக்கங்களுடனிருந்தன, கண்கள் பச்சை நிறத்திலிருந்தது இவனை வியப்பிலாழ்த்தியது.
சூரியன் மேற்குதிசையில் அடிவானத்தை நெருங்கும்வரை தூண்டில் போட்டுக்கொண்டிருந்தார். மனிதர் கவனம் முழுக்க முழுக்க தூண்டிலில் இருந்தது, அதிகம் வாய்திறக்கவில்லை, துண்டிலை நெருங்கும் மீன்களை பயமுறுத்திவிடக்கூடாதென்பதுதான் காரணம். தூண்டிலில் மீன் சிக்குகிறபோதெல்லாம் அவருக்கு மகிழ்ச்சி. சிக்கிய மீனின் தாவாகட்டையை தூண்டிலிலிருந்து சேதமின்றி விடுவிப்பது, அகப்பட்ட மீன்களை தனது பையில் பத்திரப்படுத்துவதென அனைத்தையும் கச்சிதமாக செய்தார். அவரது தூண்டில் இரைக்கென்று சாம்பல் நிற நண்டுகளை அவ்வப்போது தேடிக்கொண்டுவருவது மோந்தோவாக இருக்கும். அலைகள் தொட்டு விளையாடுகிற கற்களில் கீழ்ப்பகுதி அவனது தேடும் வெளி, கடற்பாசிகளுக்கிடையே கண்கள் ஆராயும், அலை கற்களைத் தொட்டு விலகியதும் குறுநண்டுகள் ஓடி ஒளிய முற்படும், நொடியில் அவைகளைப் பிடித்துவிடுவான். தூண்டில் மனிதர் அவற்றை கற்களில் தட்டி உடைத்து, கையிலுள்ள துருபிடித்த சிறு கத்தியின் துணைகொண்டு சதைப்பகுதியைப் பிரித்தெடுப்பார்.
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் !பிரபஞ்சத்தின் கருமைப் பிண்டம் சுட்ட பிண்டமா ? அல்லது சுடாத பிண்டமா ?
- கவிஞர் வைதீஸ்வரனுக்கு விளக்கு பரிசு!
- தாகூரின் தமிழ்க் கீதாஞ்சலி நூல் வெளியீடு
- இறுதிப் பேருரை
- நீர்வளையத்தின் நீள் பயணம் -2
- நீர்வளையத்தின் நீள் பயணம்-1
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865) காட்சி -3 பாகம் -2
- மகாத்மா காந்தியின் மரணம் [1869-1948]
- கலில் கிப்ரான் கவிதைகள்: என்மேல் பரிவு காட்டு என் ஆத்மாவே !-கவிதை -1
- வார்த்தை பிப்ரவரி 2009 இதழில்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -21 << பெருவியன் கழுகு ! >>
- அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்: 1 தமிழ்த் தென்றல் திரு.வி.க (பகுதி இரண்டு)
- குழந்தை வரைந்த என் கோட்டுச் சித்திரம்
- விஸ்வரூபம் – அத்தியாயம் இருபத்தைந்து
- வார்த்தையுள் ஒளிந்திருக்கும் கிருமி
- பின்னற்தூக்கு
- ஹாங்காங் இலக்கிய வட்டக் கூட்டம்- ‘அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்’
- ‘எதிர்காலம் என்ற ஒன்று’ -அச்சம் அல்லது நம்பிக்கையின் பிரதிபலிப்புகள்
- மகாத்மா காந்தி – ஒரு கலை அஞ்சலி
- SlumDog Millionaire a must see film
- மோந்தோ- 1
- இம்சைகள்
- வேத வனம் விருட்சம்-21
- மோந்தோ- 2
- மயிலிறகுக் கனவுகள்
- வெள்ளைக் கனவின் திரை
- சிறகடித்து…
- என்னை தேடாதே
- அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்: 1 தமிழ்த் தென்றல் திரு.வி.க (பகுதி ஒன்று)
- பின்னை காலனிய எழுத்தும்,மொழிபெயர்ப்பும்
- கோயில் என்னும் அற்புதம்
- நினைவுகளின் தடத்தில். – (24)
- ஆர்.வி என்ற நிர்வாகி
- ஊழ்கத்தின் வழி தெளிவுறுத்தமும் தொலைவிலுணர்தலும்!
- குறளின் குரல் : காந்தி
- உள்ளும் புறமும் – குறுங்கதை