மொழிவது சுகம்: ஹைத்திசொல்லும் உண்மை.

This entry is part [part not set] of 35 in the series 20100121_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


இரவுகள் நிலையானதல்ல விடியத்தான் வேண்டும். ஆக்கல், காத்தல், அழித்தலெனும் ஈஸ்வர நெறிகளுக்குள் உலக இயக்கம் வழிநடத்தப்படுகிறது. நம்புவோர்க்கு கடவுள், நம்பாதவர்க்கு இயற்கை. எப்படி அழைத்தாலென்ன, இயற்கை அல்லது கடவுள் துணயின்றி எம்மால் தனித்து சாதிக்கக் கூடியதென்று ஒன்றில்லை. பேரெடுகளில் எழுதப்பட்ட வரவும் செலவும் நேரற்றதென்கிறபோது, புண்ணியத்திற்குப் பலனுண்டாவென தெரியவில்லை. பாவத்திற்குச் சம்பளமுண்டு, அதாவது நமக்கு மன்னிப்பில்லையென்பதுதான் பேரழிவுகள் மனித இனத்திற்குச் சொல்லும் நீதி.

மருத்துவமனைகளில் உயிருக்குப் போராடிக்கொண்டு, எந்நேரத்திலும் மரணம் சம்பவிக்கலாம் என்ற நிலையிலுள்ள உறவுகளையோ நண்பர்களையோ பார்க்கச்சென்றால் அப் பார்வைகளை தவிர்த்திருக்கிறேன். இழவுக்குக்காக செல்கிறபோதுகூட உயிரற்ற உடல்களின் மௌனத்தினை சகித்துக்கொள்ள எனக்குப் போதாது. முடிவின்றி அவை நிகழ்த்தும் கதையாடல்கள் என்னை அச்சுறுத்துவன. மௌனத்திற்குப் பெரும்பாலும் வெல்லும் திறனுண்டென்ற வாழ்க்கை அனுபவமும் அவற்றிடமிருந்து என்னைப் பிரிக்கிறது. உயிரற்ற உடல்களென்றால் எனக்குள் நேரும் சங்கடங்களை விவரிக்கப்போதாது. சிறுவனாக இருந்தபோது நடந்தது. இரவு பிரியாமலிருந்த நேரம், காலைக்கடனுக்கென்று ஒதுங்கியிருந்தேன். புளியமரத்தின் கிளையொன்றில் விறைத்துக்கொண்டு தொங்கும் உடலைப் பார்க்கிறேன். எனது வாழ்நாளில் அதற்கு முன்பும் பின்பும் அப்படி ஓடியதில்லை. ஆனால் இப்போதெல்லாம் ஊடகங்கள் உயிரற்ற உடல்களை வீட்டு வாசற்படிகளில் மலைபோல குவித்துவைக்க சகித்துக்கொள்ள பழகிக்கொண்டிருக்கிறோம்.

கடந்த வாரம் (ஜனவரி மாதம் 12ந்தேதி) உள்ளூர் நேரம் மாலை ஐந்துமணி அளவில் ஏற்பட்ட நில நடுக்கம் ஹைத்தி நாட்டின் தலைநகரையும் அதன் சுற்றுப்புறங்களையும் தரை மட்டமாக்கியிருந்தது. மக்கள் மாத்திரமல்ல, அரசாங்கமும் உறைந்து போயிருக்கிறது. அரசு எந்திரங்கள் செய்வதறியாது கலங்கி நிற்கின்றன. வாய்புள்ளவர்கள் நாட்டைவிட்டு வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள். பதினைந்து இலட்சம் மக்கள் அநாதைகளாக்கபட்டுள்ளனர். ஒன்றிரண்டல்ல 70000 உயிர்களுக்கு இறந்த தேதியில் ஒற்றுமையென்பது கொடுமை. மரணங்கூட தனிமையை விரும்பாது போலிருக்கிறது. குவியல் குவியலாக உடல்கள். மருத்துவமனைகளிலும், பொதுவிடங்களிலும் செத்தப்பின்னரும் உறவுகளையும் சுற்றத்தையும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் கொடூரம். அழிவுச் சரித்திரங்களை வாசித்த நமக்கு ஹைத்தியில் நடந்திருப்பது அதிசய நிகழ்வல்ல. உலகவரலாறு பல பேரழிவுகளைக் கண்டிருக்கிறது. சுணாமியும் பூகம்பமும் இணைந்து உலகில் பல பிரதேசங்களை சுவடின்றி புதைத்திருக்கின்றன. வரலாறு பேரழிவுகளாலும் தீர்மானிக்கபடுகின்றன. வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்பது மனித தர்மமாக இருக்கிறபோது இயற்கைக்குள்ள இதுபோன்ற கோபதாபங்களை புரிந்துகொள்ள முடிகிறது. இடிபாடுகளில் ஒன்றாக ஹைத்தி அதிபரின் மாளிகையைக் காட்டியபொழுது இயற்கை சார்பற்று காரியம் ஆற்றியிருக்கிறதென்ற அருவருப்பான திருப்தி எனக்குள் உண்டாயிற்று. குடிசைவாசிகளைக்காட்டிலும் மாளிகைவாசிகள் இவ்விஷயத்தில் அதிகப் பாதுகாப்பின்றி இருப்பதில் எனக்கு வக்கிரம் கலந்த சந்தோஷம்.

ஹைத்திமக்கள் ஒரு சபிக்கப்பட்ட இனம். இலங்கைத் தமிழர்களைப்போல. தனிமனிதனோ, இனமோ திக்கற்றமக்கள் அனைவருமே சபிக்கப்பட்டவர்கள். நில நடுக்கத்திற்குப் பிறகு ஹைத்திக்கு உதவிக்கரம் நீட்டியவர்களில் அமெரிக்காவும் பிரான்சும் முன்னால் நிற்கிறார்கள். இருவருக்கும் வரலாற்று அடிப்படையில் தீர்க்கவேண்டிய கடன்கள் இருக்கின்றன. காலனிய எஜமானர்களுக்கெதிராக அடிமைகள் கிளர்ந்தெழுந்து விடுதலைவாங்கித்தந்த முதல் கறுப்பரின தேசமான ஹைத்திக்கு, கறுப்பரினத்திலிருந்து வந்த முதலாவது அமெரிக்க அதிபர் என்ற வகையில் ஒபாமா உதவுவது வரலாற்றை மீள் பதிவு செய்வதாகும். விடுதலைக்கு முன்பாக ஹைத்தி இரண்டு நூற்றாண்டுகள் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தால் சுரண்டப்பட்ட நாடு. சம்பவத்திற்குப் பிறகு பிரான்சு நாடு அவசர அவசரமாக ஹைத்திக்கு வழங்கிய கடன்களை ஒட்டுமொத்தமாக ரத்து செய்தது. வரலாற்றை அறிந்தவர்களுக்கு யார் யாருக்குக் கடன்பட்டவர்கள் என்பது புரியும்

பிரெஞ்சுக்காரர்களிடமிருந்து விடுதலைப் பெறுவதற்கு முன்பு ஹைத்தி நாட்டிற்குப்பெயர் செயிண்ட் டொமிங்(Saint Domingue). கரீபியன் கடற்பிரதேசங்களில் ஒன்றான ஹைத்தி அங்குள்ள பிறதீவுகளுடன் பொதுப்பண்பில் ஒத்திருந்த போதிலும் மொழியால் வேறுபட்டது. க்யூபா, டொமினிக்கன் குடியரசு, போர்த்தரிக்கோ நாடுகள் ஸ்பானிஷ் மொழியையும்; கிரிக்கெட்டால் அறியப்பட்ட மேற்க்கிந்திய தீவு உறுப்புநாடுகள் ஆங்கிலமும் பேச; இவர்கள் விதிவிலக்காக தங்கள் முன்னாள் எஜமானர்களின் (பிரெஞ்சு)மொழியை ஆட்சிமொழியாகக் கொண்டவர்கள். ஹைத்தி நாடு அடிமை வியாபாரத்திற்கும், கடற்கொள்ளையர்களுக்கும் உகந்த பிரதேசமாகவும் இருந்திருக்கிறது. 17ம் நூற்றாண்டில் பிரெஞ்சுக்காரகளின் கீழ்வந்த ஹைத்தி, பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் கொல்பெர் அறிமுகப்படுத்திய காலனிக் கொள்கைகளால் பாதிக்கப்பட்ட நாடுகளிலொன்று-நீலக்கடல் நாவலில் இவரைப் குறிப்பிட்டிருக்கிறேன். தாய்நாட்டை வளப்படுத்துவதே காலனி நாடுகளின் பயன்பாடென்பது இவரது தீர்க்கமான முடிவு. காலனிநாடுகளில் தொழில் தொடங்கத் தடை, காலனி நாடுகள் தங்கள் அண்டை நாடுகளில் வணிபத் தொடர்பு கொள்ளக்கூடாது. காலனிநாடுகள் தாய் நாட்டில் உற்பத்தியாகும்பொருட்களுக்கான சந்தை. காலனி நாட்டில் விற்பனையாகும் பொருட்களையும் விலையையும் தீர்மானிக்கும் பொறுப்பும் தாய் நாட்டிற்குரியது என்பவை அக்கொள்கைகளிற் சில. பிரெஞ்சு காலனியாகவிருந்த ஹைத்தி உலக உற்பத்தியில் ஐம்பது விழுக்காடு சர்க்கரையை உற்பத்திசெய்த நாடு. காப்பி உற்பத்தியிலுலும் முன்னணிலிருந்தது. அவ்வளவையும் பிரெஞ்சுக்காரர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை சுரண்டி வந்தனர். தோட்ட முதலாளிகளுக்குச் சாதகமாகவிருந்த கறுப்பரினச் சட்டம் (Le Code Noir) ஹைத்தி மக்களை விலங்கினும் கேவலமாக நடத்தியது. 1789ம் ஆண்டு தாய் நாட்டில் அறிவித்த மனித உரிமை பிரகடனத்தில் ‘சட்டத்தின் முன் மனிதராகப் பிறந்த அனைவரும் சமம்’ என்று அறிவித்தது காலனிநாடுகளுக்குப் பொருந்தாதென்றார்கள். ஓர் விமர்சகர் கிண்டலாக ‘வெள்ளையாரக் பிறந்தவர்கள் மட்டுமே சட்டத்தின்முன் சமம்’ என திருத்தம் கொண்டுவரலாமென்றார். ஆக 1791ம் ஆண்டு தொடக்கம் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஹைத்தியர்கள் அணிதிரண்டார்கள். பன்னிரண்டு ஆண்டுகள் நடந்த விடுதலைப்போரில் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்திற்கு மாபெரும் நட்டம். தங்கள் வளத்திற்கு ஆதாரமாக இருந்த நாடு கைவிட்டுப்போனதை பிரான்சு இன்றளவும் மறக்கவில்லை. இடதுசாரி பிரெஞ்சுக்காரகள்கூட ஹைத்தியென்றால் முகஞ் சுளித்தார்கள்.

நில நடுக்கத்திற்குப் பிறகு அறிவிஜீவிகளில் ஒரு பிரிவினர், இனியும் நாம் பாராமுகமாக இருப்பத்தில் பொருளில்லை என விமர்சனம் செய்ததின் விளைவாக பிரான்சு அரசாங்கம் ஹைத்திக்கு உதவ முன்வந்திருக்கிறது. ஹைத்திமக்கள் பிரான்சுடன் தொப்புட்கொடி உறவுகொண்டவர்களல்ல, ஐரோப்பிய இனமுமல்ல. ஹைத்தி மக்கள் பிரெஞ்சுமொழியை அரசாங்க மொழியாகக் கொண்டிருக்கிற காரணம் அவர்கள் உந்துதலைத் துரிதப்படுத்தி இருப்பதாகச் சொல்கிறார்கள். பிரெஞ்சும்சரி ஆங்கிலமும்சரி உலகளவில் முக்கிய மொழிகளாக வளந்ததற்குச் சொல்லப்படும் காரணங்களுள் இதுபோன்ற தந்திரங்களும் அடங்கும். எனினும் தாரைத் தப்பட்டி மாநாடுகளை நடத்தி தங்கள் மொழிகளை அவர்கள் வளர்த்ததாகச் சான்றுகளில்லை.

———————————————————–

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா