நாகரத்தினம் கிருஷ்ணா
தனிமனிதனென்பவன் சமுதாயமென்ற மனிதமந்தையில் ஒர் உயிரி. அவனது இயக்கத்தை அநுமானிப்பதில் காரணிகளும் இருக்கின்றன.
பிறந்தவுடன் அழவும், பிறந்த சில நாட்களில் சிரிக்கவும் என்றிருந்த அவனது உயிரியல் சுதந்திரத்தில் பிறர் குறுக்கீடென்பது முதன்முதலாக அவனைப் பெற்றவள் ஊடாகத் தொடங்குகிறது. தாயின் முலைக்காம்பில் தமது வயிற்றுப்பசிக்கான நிவாரணம் இருக்கிறதென்கிற முதற் புரிதலில் தனிமனிதனின் சுதந்திரம் நிறம் இழக்கிறது. சுதந்திரத்திற்கான எதிரிகளை இருவகைப்படுத்தலாம்: ஆணைகள், சட்டம், விதிமுறைகள், அதிகாரம், ஏகாதிபத்தியம், முதலாளித்துவம், தலைமை, மூத்தவன், உயர்ந்தவனென்கிற எதிரணி அதிகார வகைமைகளால் தீர்மானிக்கப்படுபவை என்பதொருவகை. அன்பு, பாசம், காதல், சமயம், உதவி, ஊதியமென்ற நட்பு அணி அதிகார வகைமைகளால் தீர்மானிக்கப்படுபவை பிறிதொருவகை. எஜமானர்கள் யாராயிருந்தாலென்ன சேவகத்திற்குப் பலனிருக்கவேண்டும். வைகுந்தத்திலோ, கைலாசத்திலோ ஓரிடம் கிடைப்பது உறுதியெனில் அன்ன சத்திரம் ஆயிரம் கட்டலாம். இதுபோன்ற உத்தரவாதங்களைக் கைய்யளித்தே பின்லாடன்களுக்கும் நித்யானந்தாக்களுக்கும் தமதிருப்பை அவரவர் சீடர்களிடத்தில் நியாயப்படுத்த முடிந்திருக்கிறது. மனிதனுக்கு நரகம் வேறெங்குமில்லை, இச் சமூகமே அல்லது பிறரே நரகம் என்கிறார் சார்த்ரு. நமது சுதந்திரமென்பது பிறரால் தீர்மானிக்கப்படுவது. வீடு, பள்ளி, அலுவலகம், நாடென்று நிறுவனங்கள் பிரம்பினை கையில் பிடித்தபடி நம்மை ஆட்டுவிக்கின்றன. சற்று கொச்சையாக சொல்வதெனில் நமது சுதந்திர யாப்பு அடிமைச் சொற்கள் கொண்டு நிரப்பப்பட்டது. எஜமானர்களுக்காக எதையும் செய்ய தயாரென்ற மன நிலை. இந்த எஜமான விசுவாசம் தொடக்கத்தில் குறிப்பிட்டதுபோன்று பசியறிந்து பாலூட்டுகிற தாயிடம் ஆரம்பித்து தமது எஜமானனை மேடையில் வைத்து விமர்சிப்பதைத் தாங்கவொணாத அடிமையாகத் தம்மை முன்னிருத்திக்கொள்ளும் மனோபாவத்துடன் தொடர்கிறது.
சேவகமென்பது ஒருவகை போதைநிலை. காமம், மது, போதைமருந்து..ஆகியவற்றைப்போலவே, தனிமனிதனை மயக்கநிலையில்வைத்து காரியத்தைச் சாதிக்கிற பேரின்பமோ சிற்றின்பமோ ஏதோவொன்று. பிறமனிதர்களைக்கொண்டு நமக்கு விருப்பமான காரியங்களை நிறைவேற்றிக்கொள்வது எப்படி? கீழ்ப்படிதல் என்ற சொல்லை இயக்குவதற்கான வழிமுறைகள் என்ன? என்பது போன்ற எஜமான கேள்விகளுக்குப் பதில்கள் சேவகத்திலிருக்கின்றன. ‘உத்தரவு இடுங்கள், காத்திருக்கிறேன் என்கிற மனப்பாங்கினை நேரடியாகவோ மறைமுகமாகவோ குறிப்பிட்டதொரு தேவையின் அடிப்படையில் சமூகம் தனிமனிதனிடம் திணிக்கிறது. கட்டளையைப் பிறப்பிக்க பல நுண்மைகள் இருக்கின்றன. உரத்த குரல், தோற்றம், எழுத்தினாலான ஆணைகள் என்ற அப்பட்டியலில் கைஅசைவுகள், கண் அசைவுகள் ஆகியவற்றையும் கணக்கில் சேர்த்துக்கொள்வோம். இப்பட்டியல் சாராத வேறொன்றும் இருக்கிறது. ‘தான் செய்யும் பாதகத்திற்குத் தண்டனையில்லை, தன்னைப் பாதுகாக்க அண்ணன் இருக்கிறார், தலைவர் இருக்கிறார், அதிகாரி இருக்கிறார் என்ற நம்பிக்கை தரும் கொழுப்பு.
ஏவல் என்ற சொல்லோடு தொடர்புடைய பிற மூன்று சொற்கள் அதிகாரம், கீழ்ப்படிதல், மறுப்பு. இச்சொற்களுக்கிடையேயான பந்தமென்ன, பண்புகளென்ன என்றறியும் பொருட்டு ஓர் உளவியல் நிகழ்ச்சியொன்றை அண்மையில் பிரெஞ்சு தொலைக்காட்சி யொன்று ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சி 1963ம் ஆண்டு ஸ்டான்லி மில்கிராம் (Stanley Milgram) என்பவர் அமெரிக்காவில் மேற்கொண்ட உளவியல் பரிசோதனையை ஆதாரமாகக் கொண்டது. நிகழ்ச்சியின் நோக்கம் அதிகாரத்திற்குள்ள பலத்தை அளவிடுவது. அதிகாரம் நமக்கு உத்தரவாதம் அளிக்குமெனில் அல்லது துணைவருமெனில் கொலை வாளினை எவரும் உயர்த்துவரென்ற உண்மை அச்சோதனையூடாக நிரூபணமாயிற்று. சுமார் ஐம்பது ஆண்டுகளுப்பிறகு 2010ல் பிரான்சு நாட்டில் ஒளிபரப்பப்பட்ட இந்நிகழ்ச்சி, தொலைகாட்சி ஊடகமும் ஒருவகையான எஜமானனென்றும், வெகுசனத்தின் மீதான அதன் அதிகாரபலமும் குறைத்துமதிப்பிடக்கூடியதல்ல என்பதை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்திருந்தது. நிகழ்ச்சியின் பெயர் ‘jeu de la mort’ அதாவது மரண விளையாட்டு. எல்லா நிகழ்ச்சியிலும் நடப்பதுபோலவே பொதுமக்களிலிருந்து போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இருவர் பங்கேற்கும் இவ்விளையாட்டில் ஒருவர் வினா தொடுப்பவர், மற்றவர் பதிலிறுப்பவர். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும், கேள்வியாளருக்கு பதில்சொல்லும் நபரை மின்சாரம் பாய்ச்சித் தண்டிக்க உரிமையுண்டு. இப்போட்டிக்கென தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இரண்டு உண்மைகள் மறைக்கப்பட்டிருந்தன: தொலைகாட்சி ஒளிபரப்புக்கென இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யபட்டிருப்பதென்றபோதிலும், அது மனிதர்மீது நடத்தப்படும் உளவியல் சோதனையை நோக்கமாகக்கொண்டதென்பது முதலாவது. பதில் சொல்வதற்காக சம்மதித்து போட்டியில்கலந்துகொண்டுள்ள நபர் நிஜத்தில் ஒரு தொழிமுறை நடிகரென்பது இரண்டாவது. நாடுமுழுக்க 80 நபர்களை அங்கொருவர் இங்கொருவரென தேர்வுசெய்து நேரடியாக ஒளிபரப்பவிருக்கிற விளையாட்டு நிகழ்ச்சியொன்றில் அவர்கள் கலந்துகொள்வதாக ஏற்பாட்டாளர்கள் நம்ப வைத்தனர். இந்நிகழ்ச்சிக்கென தேர்வு செய்யப்பட்ட 80 போட்டியாளர்களும் செய்யவேண்டியது, தமக்கு எதிரே அமர்ந்திருப்பவரிடம் கேள்விகள் கேட்பது. கேட்கின்ற கேள்விகளுக்குப் பதில் சொல்ல ஒருவர் பெயர் ழான்-போல் (தொழில்முறைநடிகர்), நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க ஒரு தொகுப்பாளினி, அடுத்து வழக்கம்போல இந்நிகழ்ச்சிக்கும் பார்வையாளர்களுண்டு. கேள்வியாளர்கள் கேட்கின்ற கேள்விக்கு சரியான பதிலை ழான்-போல் கூறவேண்டும், தவறினால் 20 வால்ட்டிலிருந்து 460 வால்ட்வரையான மின்சாரத்தை படிப்படியாக கேள்வியாளர்கள் அவர் உடலில் பாய்ச்சுவார்கள். இதில் வியப்பு என்னவெனில் வந்திருந்த 80பேரும் அறிமுகமற்ற புதிய நபர்மீது காட்சிக்காக அதாவது தாங்கள் தொலைகாட்சியில் இடம்பெறக் கிடைத்தவாய்ப்பிற்காக (உண்மையில் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள எந்த சன்மானமும் இல்லை) மின்சாரம் செலுத்த தயக்கமின்றி உடனே சம்மதித்தனர். அதுமட்டுமல்ல அவர்களில் 64பேர் முதலில் தயங்கியபோதிலும், நிகழ்ச்சி தொகுப்பாளினி செலுத்தலாம் விளைவுக்கு நாங்கள் பொறுப்பு என்று உருதியளித்ததும் 460வால்ட் கணிசமான மின்சாரத்தை (ழான்-போல் இறக்கக்கூடும் என்று தெரிந்தும்) சங்கடமின்றி பாய்ச்சினர். இடைக்கிடை கத்தி கூச்சலிட்டு துடித்த நடிகரின் அபயக்குரல் அவர்களிடத்தில் எவ்வித பாதிப்பினையும் ஏற்படுத்தவில்லை. இச்சோதனைமூலம் தெரிந்துகொண்ட உண்மைகள்: நம்மில் அறுதிப் பெரும்பான்மையோர் அதிகாரத்திற்கு வளைந்துகொடுக்கிறவர்கள் என்பதும், அதிகாரத்தின் ஆதரவு உண்டெனில் எவரையும் கொல்ல தயாராக இருக்கிறவர்களென்பதுமாகும்.
எஜமான மனங்களைக் காட்டிலிலும் சேவகமனங்கள் ஆபத்தானது. தமக்கு மேலாக ஒருவனை எஜமானனாகக் கற்பித்து அவன் ஏவல்களுக்குக் கேள்வியின்றி அடிபணிவதும், எத்தகையை வன்கொடுமையையும் செய்யத்தயாராக இருப்பதும் சேவகமனத்திற்குரியது. எல்லோர்க்கும் நன்றாம் பணிதல், அடக்கம் அமரருள் உய்க்கும் என்றெல்லாம் போதித்து, நம்மைச்சுற்றியுள்ளவர்களை ஏவலாட்களாக நிறுத்தும் விழைவு பெரும்பாலான மனிதர்களுக்கு இருக்கிறது. இவர்கள் போதிக்கும் அடக்கம் யாருக்கென்று யோசித்துப் பாருங்கள்
கு? முதலாளி என்றால் தொழிலாளிக்கு, கணவன் என்றால் மனைவிக்கு, ஆசிரியர் என்றால் மாணவனுக்கு, தலைவனென்றால் தொண்டனுக்கு, ஆணென்றால் பெண்ணுக்கு, ஏகாதிபத்தியமென்றால் காலனி நாடுகளுக்கு, வல்லரசுகள் என்றால் ஏழை நாடுகளுக்கு. அடக்கத்தை எதிர்பார்க்கிறவர்கள் தங்களை மேலாக நினைத்துக்கொள்பவர்கள் அல்லது சமூக அமைப்பின் காரணமாகவோ, உயிரியல் சார்ந்தோ தங்களை மேலாக நிறுவிக்கொள்கிறவர்கள். அடக்கம் என்ற சொல்லுக்கு அகராதியில் பொருள் தேடினால் அதன் பின்னே பணிவு, கீழ்ப்படிதல் என்ற சொற்கள் வருகின்றன. கீழ்ப்படிபவர்கள் தங்கள் எஜமானர்களுக்கு விசுவாசமென்ற பெயரில் தம்மை முற்றாக ஒப்படைக்கிறபோது, அதன் விளைவாகப ‘பிறர்’ மட்டுமல்ல, கீழ்ப்படிகிற வர்களுக்கும் நேரும் சேதங்கள் அதிகம். துரோணர் ஏகலைவனின் கட்டை விரலை வாங்கியதும், கணவனைப் பரத்தைகள் வீட்டுக்கு சுமந்து சென்ற கதைகளும் மேற்குறிப்பிட்ட எஜமானர்களின் வக்கிர மனங்கள் வேண்டுகிற அடக்கப் பண்பினை நியாயப்படுத்துபவைதான்.
இத்தொலைகாட்சி உளவியல் பரிசோதனையில் கேள்வியாளர்களாகக் கலந்து கொண்டவர்களில் ‘என்னால் தொடர்ந்து மின்சாரம் பாய்ச்ச முடியாதென’ அதிகார உத்தரவாதத்திற்கெதிராக தங்கள் மறுப்பினைத் தெரிவித்த பதினாறுபேர் எனது கவனத்தைப் பெற்றனர். மானுட அறம் இச்சிறுகூட்டத்தால்தான் காக்கப்படுகிறதென நம்புகிறேன். வயிறு பிழைக்க அல்லது உயிர்வாழ பலநேரங்களில் பெரும்பாலோருக்கு ‘கீழ்ப்படிதல்’ ஓரு சந்தர்ப்ப சடங்கு. ஆனால் மானுடத்தைக் காக்க, ஒன்றிரண்டுபேருக்கு அதிகாரத்தை மறுத்தல்(‘முரண்கள்’, ‘ஒத்துழையாமை’, போராட்டம்…) ஓர் அறப் பண்பு. காந்திபோன்ற மகாமனிதர்களால் மட்டுமல்ல, தினன்மென் சதுக்கத்தில் டாங்கியை வழிமறித்த கணத்தில் விஸ்வரூபமெடுத்த அந்த முகமற்ற மனிதனைப்போன்றவர்களாலும்* இவ்வுலகம் மேன்மையுறுகிறது. நம்மிலுள்ள அந்த ஒன்றிரண்டு பேருக்கு நன்றி.
—————————————————————————————-
*http://www.dailymotion.com/video/x2fvur_histoire-letudiant-de-tiananmen_events
- மொழிவது சுகம்: நம்மிலுள்ள அந்த ஒன்றிரண்டு பேருக்கு நன்றி
- கருத்தற்ற காதல் மற்றும் (வாழ்வு) குறித்து
- மழையோன் கவிதைகள்
- பேராசை
- புறநானூற்றில் மனித நேய கொள்கைகள்- பெருஞ்சோறு கொடுத்தது குறித்து…
- கவிமாலை 118
- முத்தமிழ் விழா 2010
- அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
- Ameeraga Thamiz Mandram proudly presents “Ini Oru Vithi Seivom”
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -7
- மகளுக்கு…
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) ஐந்து உரைகளை மொழிவேன் கவிதை -5 பாகம் -5
- வேத வனம் -விருட்சம் 78
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -10
- இருப்பவன் இல்லாதவனைவிட சிறியவன்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) பேச முடியாத விலங்கு ! கவிதை -25 பாகம் -1
- கவனிக்கப்படாத கடவுளே!!!
- பின் தொடரும் வாசம்
- வேம்பும் வெற்றிலைக் கொடியும்
- 27 வருட போர் _ சத்ரபதி ஷாம்பாஜிக்குக் கீழ் மராத்தாக்கள்.(1680 to 1689):
- சுப்பு அவர்களின் “திராவிட மாயை – ஒரு பார்வை” பற்றிய என் பார்வை
- முள்பாதை 22
- வாசமில்லா மலர்
- நேர்மை