மொழியறியா மொழிபெயர்ப்பாளர்களும், விழிபிதுங்கும் தமிழர்களும்…………

This entry is part [part not set] of 28 in the series 20081127_Issue

மா.சித்திவினாயகம்



அந்தமண்டபம் அனைத்துலக மொழி ஆர்வலர்களால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. பல்லினமொழி மாந்தர்களின்”மொழி வளர்ச்சி’ என்னும் அக்கருத்தரங்கு ஆங்கிலத்தில் தொகுக்கப்பட்டு இந்தி, பஞ்சாபி, தமிழ் என பல மொழிபெயர்ப்பாளார்கள் மொழியாக்கம்
செய்துகொண்டிருந்தார்கள். உண்மையில் தாய் மொழிப்பயன்பாடும் அதன் தேடலும் பற்றியதானதாகவும், சிறார்களுக்கு எவ்வாறு தாய்மொழிப்புரிந்துணர்வை ஊட்டுவது என்பது பற்றியதானதாகவும், அமைந்த அக்கருத்தரங்கில் கல்விச்சபை சார்ந்தவர்கள்
,பெற்றார்கள், அரசியலாளர்கள்,ஊடகவியலாளர்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தார்கள். ஆங்கில மொழிவறிவற்ற பெற்றார்களை மையப்படுத்தியஇவ்வாய்வில் ஆங்கில மொழியில் சொல்லப்படும் வாக்கியங்களை அப்படியே தமிழில் மொழிபெயர்க்க வேண்டிய
கட்டாயம் தமிழ் மொழிபெயர்ப்பாளருக்குமிருந்தது. ஆனாலும் அவரின் மொழி வறுமையினால் ஆங்கிலத்தில் தொகுப்பவர் ஒன்றைக்கூற தமிழ்மொழி பெயர்ப்பாளர் ஒன்றைக்கூறி பசைதடவிக் குழையடித்தார். உண்மையில் இவ்வாறான மொழிவறுமையாளர்கள் மொழிபெயர்ப்பாளர்களாக மாறியிருப்பது தமிழின் துரதிஸ்ட வசமானதாகும்.வைத்தியன் இல்லாதவன்
எப்படி அறுவை வைத்தியம் செய்வானோ அதேபோல்த்தான் மொழியறிவில்லாதவன் மொழிபெயர்க்க நினைப்பதும். மணித்தியாலங்களுக்கு மொழிபெயர்ப்பால் வருகின்ற ஊதிபத்தை மட்டுமே சிந்திக்கின்ற இத்தகு மொழிபெயர்ப்பாளர்களால் தமிழர் தலைவிதி அதல பாதாளத்திற்குத் தள்ளப்படுகின்றது.

இது மட்டுமன்றி கார்விபத்து, பாடசாலைக்கல்வி,மரணவிசாரணை, நோயாளிகளின் நோய்களை கேட்டறியும் வைத்திய ஆலோசனை அகதி அந்தஸ்த்துக் கோரும்விசாரணைகள் எனப் பலவழிகளிலும் அச்சொட்டாக மொழிபெயர்க்க வேண்டிய முக்கிய விடயங்கள் மொழியறியா மொழிபெயர்ப்பாளர்களால் மழுங்கடிகப்பட்டு முடக்கப்படுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் “ரை” கட்டி, கோட் போட்டு பூக்குத்தி வருவதில்தான் இம்மொழிபெயர்ப்பாளர்கள் அதிக சிரத்தையெடுக்கின்றார்களே தவிர தங்கள் மொழிவளத்தை பெருக்க வேண்டுமென்பதிலோ, அல்லது தன்னிடம் மாட்டிகொண்டுள்ள
அன்னியமொழியறியாத் தமிழனின் வாழ்வைப்பற்றியோ கிஞ்சித்தும் அவர்கள் அலட்டிக்கொள்வதில்லை. கேட்கிற கேள்விகளுக்கு “ஆம்” அல்லது “இல்லை” என்றுமட்டும் பதில் சொன்னால் போதும் என்று பலமொழிபெயர்ப்பாளர்கள்
மொழிபெயர்க்கும் மனிதர்களை எச்சரிக்கின்றார்களாம். ஆம், இல்லை என்று சொல்வதற்கு ஒரு மொழிபெயர்ப்பாளர் அவசியம் தானா? உதாரணத்திற்கு உங்களுக்கு இப்போது தலைவலி உண்டா? என்ற கேள்விக்கு இல்லை என்று பதிலளித்தால் அவருக்கு வருத்தம் இல்லை என்றாகிவிடுகிறது. ஆனலும் தலைவலி இப்போது இல்லயே தவிர அவருக்கு இரவில் வரும் ஒற்றைத்தலைவலி இவரின் பொல்லாத மொழிபெயர்ப்பால் காணாமல் போய் அவன் நிரந்தர நோயாளியாகின்றான்.

இதனைவிட தமிழ்படிப்பித்த அதிபர்கள், ஆசிரியர்கள்,பட்டதாரிகள் எனத் தமிழறிந்த பலரும் வீட்டிலே முடங்க, அரசியல் எடுபிடிகளின் உதவியோடு “அ” தெரிந்த அல்லது தெரியாத எல்லோரும் தமிழ் படிப்பிக்கும் ஆசிரியர்களாக கனடா, அமெரிக்கா,மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடெங்கும் தெரிவு செய்யப்பட்டிருத்தல் தமிழிற்க்குக் கிடைத்திருக்கும் மாபெரும் அவலமாகும். இவைகளை யாரினதோ காள்ப்புணர்வின் பேரில் இங்கே நான் எழுதவில்லை. கண்ணால் கண்டு ,கேட்டு, அறிந்தவற்றை
எழுதுகின்றேன். தயவு செய்து நீங்களும் வாழ்ந்து தமிழையும், தமிழர்களையும் வாழவிடுங்கள் என்பதே என் வேண்டுகோளாகும்.


elamraji@yahoo.ca

Series Navigation

மா.சித்திவினாயகம்

மா.சித்திவினாயகம்