கே.கணேஷ்
தேயிலை ஏற்றுமதி வணிகர்கள் தூளைத் தரம்பிரித்து தேர்ந்தெடுக்கச் சுவைஞர்களை Tea Tasters அமர்த்தியிருப்பார்கள். இவர்கள் தொழில் விற்பனைக்கு வரும் தேயிலைகளின் சுவையறிந்து தகுந்தபடி தரப்படுத்துவதாகும்.
மொழி பெயர்ப்பாளனும் சுவை பார்த்துத்தான் படித்தவரைப் பதம் பார்த்து ‘யான் பெற்ற இன்பம் இவ் வையகமும் பெறுக ‘ என எண்ணித்தான் தரமானது எனக் கருதுவனவற்றைத் தன் மொழியில் ஆக்கித்தர முயல்கின்றான்.
ஆக்கல் இலக்கிய ஆக்கியோனை விட மொழிபெயர்ப்பாளன் பணி பல வகையில் சிக்கலான தொண்டாகும். சிறுகதை, நடப்புச் சித்திரம், நவீனம் ஆகிய துறைகளில் உலகப் புகழ் பெற்றவரும் நோபல் பரிசுக்காக பரிந்துரை செய்யப்பட்டவரும் மக்சயயா விருது பெற்றவருமான ஆங்கிலத்தில் எழுதும் தமிழ் எழுத்தாளர் ஆர்.கே.நாராயணன் நாம் நாற்பது ஆண்டுகட்கு முன் நேரிற் கண்டு அளவளாவியபொழுது தமிழகத்துச் சிறுகதை எழுத்தாளர் குறித்து தெரிவித்த சிறு குறிப்பு நெஞ்சிலே பதிந்துள்ளது.
‘வாய் நிறைய வெற்றிலையைக் குதப்பிக்கொண்டு எச்சி தெறிக்க ‘ஏன் சார், என்னுடைய ‘……….. ‘ தலைப்புள்ள சிறுகதையைப் படித்தீர்களா ? அந்த ‘………… ‘ பாத்திரப் படைப்பு எப்படி ? அது தனி அமைப்பு சார்! தமிழுக்கே புது முயற்சி…. என்றெல்லாம் தன் படைப்பு குறித்தே சுயபுராணம் படிப்பார்களேயன்றி மற்றையவர்கள் குறித்து அறியாமையோ, அறிந்துகொள்ள மறுத்த நிலையோ தான் நிலவுகிறது. சிறுகதை எழுதுவது என்பது அப்படியொன்றும் பெரிய முயற்சி அல்ல. ஆழ்ந்து அமர்ந்து முயன்றால் அரைமணி நேரத்தில் ஆகக்கூடியது. ‘
மொழிபெயர்ப்பு பணியோ இங்ஙனம் கால நேரத்துக்குள் அமையக்கூடியதன்று. மொழிபெயர்ப்பாளன், மொழிபெயர்க்கும் – மொழிபெயர்க்கப்படும் இரு மொழிகளிலும் நல்ல பயிற்சி பெற்றிருக்கவேண்டும். தவிரவும் நாட்டு, மொழி மரபுகள்: வரலாறு, சமூக அமைப்பு இயல் அனைத்திலும் ஓரளவேனும் அறிமுகமானவராக இருத்தல் வேண்டும். இவற்றைப் பெற பல நூற்களில் பயிற்சியும் பல மக்களிடையே பெற்ற பயிற்சி அனுபவமும் பெற்றிருக்கவேண்டும்.
ஆங்கில வல்லரசு நம்மவர்கட்கு, இழைத்த குறைபாடுகள் பல இருக்க நமக்கு விட்டுச் சென்ற நன்மைகள் சில. வாணிப இயல் நிர்வாக அமைப்பு, நடு நிலைமை, கடமை உணர்வு, இப்படிச் சில. தவிரவும் ஷேக்ஸ்பியரையும் அவரது மொழியையும் நமக்கு அளித்து உதவினார்கள். உலகமெல்லாம் பரவிய அவர்களது மொழியின் மூலமாக வெளிவந்த அறிவியல், நுண்கலை, இலக்கியம் போன்ற பல்துறை நூற்களும் பன்மொழிகளில் ஆக்கப்பட்டு பல நாட்டினர் பயனடைந்தனர். பல நாட்டவர்களின் சீரிய படைப்புகள் பலருக்கு அறிமுகமாகும் வாய்ப்பினை நல்கியது. இவ்வாங்கில மொழியின் துணையினாலேயே நம் நாடுகளிலும் பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டுகளில் ‘பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் ‘ வரத் தலைப்பட்டன. சில சமயங்களில் மேலை நாட்டு உடை மாறி உள் நாட்டு வேட்டி சட்டை அணிந்து வந்ததுமுண்டு. புகழ் பெற்ற எழுத்தாளர்கள் எட்கார் வாலசையும், அகதா கிறிஸ்டியையும் உருமாற்றினர். ஷெர்லக் ஹோம்ஸ் துப்பறியும் துரைசாமி ஆனார். மாப்பசானின் ‘அட்டிகை ‘ சிறுகதை தமிழகத்து அக்கிரகாரத்துக்குள் புகுந்தது. ஜெரோம் கே ஜெரோம், ஒ ஹென்றி பாத்திரங்கள் உருமாறின. எனினும் பி.எஸ். ராமையா சிட்டி நடத்திய மணிக்கொடி தோன்றியதும் இப் பம்மாத்துக்கள் மாறி பல வெளி நாட்டுப் படைப்புகள் தமிழாக்கம் பெறுவதில் மதிப்பைப் பெற்றன. மொழிபெயர்ப்புக்கும் ஒரு அந்தஸ்து தோன்றியது. கலாரசிகன் சொ.விருத்தாசலமான ‘புதுமைப்பித்தன் ‘ போன்றவர்கள் மேலை நாட்டு இலக்கியங்களையும், புரசு பாலகிருஷ்ணன், தி.ஜ.ர, அ.கி.ஜெயராமன், கு.அழகிரிசாமி, தா.நா.குமாரசுவாமி, ப.ராமசாமி போன்றோர் முன்னணியில் நின்றனர். சிதம்பர ரகுநாதன் ரஷ்ய இலக்கியங்களையும், கவிதைகளையும் உயர்ந்த முறையில் தமிழ்ப்படுத்தினார்.
இலங்கையில் சிறிதுகாலம் வீரகேசரியில் ஆசிரிய பீடத்தில் இருந்த எச்.நல்லையா சிறிது காலம் இல்லாதிருந்த இடைக்காலத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்த வ.ரா அவர்கள், இலங்கை Times of Ceylon (டைம்ஸ் ஒஃப் சிலோன்) பண்டித நேருவின் தன் வரலாற்றினை வெளியிட பதிப்புரிமை பெற்றிருந்தது. எனவே வீரகேசரி அவர்களின் மூலம் உரிமை பெற்று நாளேட்டில் நாளும் தொடர்ச்சியாக வெளிவரும் வண்ணம் சிறப்பாக மொழிபெயர்த்து வெளியிட்டார்.
இதே போல பன் மொழி வழங்கும் இந்திய நாட்டிலும் தெலுங்கு, மலையாளம், இந்தி, வங்காளம், கன்னடம் போன்ற மொழிகளில் தோன்றிய படைப்புகளும் தமிழில் தோன்றவும் இறவாத புகழுடைய தமிழ் நூல்கள் அவ்வம் மொழிகளில் தோன்றவும் ஆங்கில மொழி கருவியாகவிருந்தது. திருக்குறள், திருவாசகம் போன்ற தமிழ் உயர் இலக்கியங்களின் பெருமையும் ஜி.யு.போப் மொழிபெயர்த்து வெளிநாட்டவர் புகழ்ந்தபின்னரே தமிழர்களின் கண்ணும் திறக்கத் தொடங்கின. அயர்லாந்துக் கவிஞரான W.B.Yeats தாகூரை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நோபெல் பரிசுக்கு முன்மொழிந்து பெற்றுத் தந்தபின்னரே வங்காளிகளும் அவரை ஆகூ எனப் புகழத்தொடங்கினர்.
இத்தாலியரான மறைந்த தந்தை பெஸ்கியான வீரமாமுனிவர், தமிழ்ப்பணியாலும் வின்ஸ்லோ போன்ற மேலைநாட்டு சமய குரவர்களின் தாக்கத்தாலும் தமிழில் வசன நடை வந்துற்றது. ஆறுமுக நாவலர், வடலூர் இராமலிங்க வள்ளலார், வேதநாயகம் பிள்ளை, உ.வே.சாமிநாத ஐயர், மறைமலை அடிகள், திரு வி. கல்யாணசுந்தர முதலியார், தமிழிலே உரைநடையினை உரம்படச் செய்தனர். ஆங்கிலப் படிப்பின் காரணமாக ஷேக்ஸ்பியர், மில்டன், வாட்ஸ்வர்த், ஷெல்லி, பைரன் போன்ற புலவர்களின் ஆக்கங்களும் நவீனத்துறையில் முன்னின்ற சார்ல்ஸ் டிக்கன்ஸ், வோல்டர் ஸ்கொட், பிரெஞ்சு எழுத்தாளர்கள் அலெக்சாண்டர் டூமாஸ், விக்தர் ஹ்யூகோ, ருஷ்ய மேதை லியோ தோல்ஸ்தோய், அன்டன் செகோவ், தொஸ்தொவ்ஸ்கி போன்றோரின் படைப்புகளின் ஆங்கில மொழி பெயர்ப்புகளும் தமிழில் நவீனம் என்ற புனைகதைத் துறையை உருவாக்க உதவின.
இங்ஙனமாக ஆங்கிலத்தின் சாயலில் வளர்ந்த தமிழ் உரை நடையில் மொழிபெயர்க்கும் பொழுது இரு நாட்டு மரபுகளறியாமையால் தமிழாக்கங்களில் சில வேடிக்கைகள் நிகழ்வதுண்டு. twin the table போன்றவை மேசையைத் திருப்பு என்பதாகவும் வந்ததுண்டு.
இடையே ஒரு மிளகாய்ப் புராணம். அறுசுவையில் ஒன்றான காரச்சுவைக்காக நம் மூதாதையர்கள் மிளகாயையே பயன்படுத்தினர். நாட்டில் விளைந்த பயிர் அது. தவிரவும் யவனம், மிசிரம் எனப் பிறநாட்டு வணிகர்கள் கொள்முதல் செய்தனர். இவை மலபார் என வழங்கிய மலையாளமான தற்பொழுதைய இந்திய கேரள நாட்டின் துறைமுகமான கொச்சியில் ஏற்றுமதி இறக்குமதிகள் நடந்தன.
சோனகர்கட்குப் போட்டியாகக் கடல் வாணிபத்தில் போர்த்துக்கீசியர் தென்னமெரிக்க நாடாம் லத்தீன் அமெரிக்கா என வழங்கப்படும் கண்டத்தின் பகுதியை ஆட்சி செய்த பொழுது அப்பகுதிப் பொருள்கட்குப் பண்டமாற்றுப் பெற்றுச் சென்றனர். அங்ஙனம் தென்னமெரிக்க நாடான சிலி Chile யிலிருந்து கொச்சியில் இறங்கியதால் கொச்சிக்காய் ஆகியது. ஆங்கிலத்தில் Chilli மேலைநாடுகளில் Pepper பெப்பர் எனப் பொதுப்பெயர் பெற்றது. மிளகு அந்நாடுகளில் இறக்குமதியானதும் கருப்பு நிறத்தினதாயுள்ள இவை Black Pepper எனவும், பச்சை மிளகாய் Green Pepper எனவும், பழுத்தவை Red Pepper எனவும் வழங்கி வந்தன. நம்மவர் இவற்றை மிளகு + காய் = மிளகாய் ஆக்கியதுபோல தோல் நீக்கப்பட்ட மிளகு White Pepper என விளங்கியது. இவை மிளகு, மிளகாய்களின் வரலாற்றுக் கூறுகள்.
இவ்வாறிருக்க, அண்மையில் வெளிவந்த மொழிபெயர்ப்பில் Red Pepper என்பதை சிவப்பு மிளகு என்று தமிழாக்கி விட்டார்கள். மிளகாய் என்று குறிப்பிட்டு வாசகர்களின் எண்ணத்தில் குழப்பத்தை தோற்றுவிக்காதிருந்திருக்கலாம்.
மேல்நாட்டவர்க்கு விளக்கமாகத் தலைப்பாகையை வர்ணித்த முல்க்ராஜ் ஆனந்த் தமது தீண்டாதான் நூலில் பல அடி நீளமிக்க துணியை இத்தனை புரி மடித்துச் சுற்றிச் சொருகவேண்டும் என விரிவாக எழுதியிருந்தார். நம்மவர்க்கு இதனை மொழிபெயர்க்கும்பொழுது தலைப்பாகை அணிந்திருந்தான் என்றால் போதுமானதல்லவா ?
இவ்விதமான சந்தர்ப்பங்களில் மொழிபெயர்ப்பாளன் தன் யுக்தியைப் பயன் படுத்தவேண்டும்.
இதே போன்று சமூக இயல் வரலாறு போன்றவற்றில் மொழிபெயர்ப்பாளன் உணர்ந்திருக்க வேண்டிய நிலைக்கு ஒரு எடுத்துக்காட்டு. சீன நாட்டில் ஆடவர்கள் நம்மவர்கள் கொண்டை வளர்த்ததுபோல சடை போட்டிருந்தனர். கொண்டை கர்நாடகமாக கருதப்பட்டதுபோல் புதுமைக் கருத்துக்கள் தோன்றிய காலத்தில் சடை வளர்த்தவர்கள் பழமை வாதிகளாகக் கருதப்பட்டனர். 1911ல் தோன்றிய புரட்சிக்கு முற்பட்ட காலங்களில் சடை வளர்ப்பவர்கள் பிற்போக்குவாதிகளாகக் கருதப்பட்டனர்; முடியாட்சியை ஆதரிப்பவர்களாகக் கருதப்பட்டனர். சடையை அகற்றியவர்கள் குடியாட்சியைப் போற்றுபவர்களாக இருந்தனர். இத்தகைய சின்னமான சடை ஆங்கிலத்தில் Pig Tail என்று வழங்கப்பட்டது. இதை பன்றி வால் என்று மொழிபெயர்த்தனர் சிலர். உண்மையில் இம்முடி மாற்றத் தத்துவத்தை உணர்ந்து மொழிபெயர்ப்பாளன் தன் வாசகர்கட்கு உணர்த்தும் தன்மை பெற வரலாறு அறிந்திருத்தல் வேண்டும்.
மேல்நாட்டு மரபுச் சொற்களை மரபு வழியறியாது நேரடியாக மொழிபெயர்க்கும்பொழுது வேடிக்கையாக அமைந்துவிடலாம். அர்த்தத்தை அனர்த்தமாக்கிவிடுவதுமுண்டு. ‘Go to hell ‘ என்பதைத் தமிழ்ப் படுத்திய ஒருவர் ‘நரகத்துக்குப் போ ‘ என்று தமிழ்ப்படுத்தியிருந்தார். ‘தொலைந்து போ ‘, ‘நாசமாகப் போக ‘ என்பன போன்று மொழிபெயர்த்திருந்தால் நம் மரபை ஒட்டியதாக இருந்திருக்கும். தவிரவும், ஆங்கிலத்தில் Uncle, Cousin என்பன தாய்வழி, தந்தை வழி உறவினர்களை வேறு வேறு உணர்த்துபவை அல்ல. இந்தியப் பண்பாட்டை உணர்த்தும் நெடுங்கதை மொழிபெயர்ப்பில் தன் உடன் பிறந்தவரின் மகனை அதாவது சிற்றப்பன் தன் அண்ணன் மகனை அழைத்துச் செல்லும் பொழுது சில தாயைக் குறிக்கும் வகைச் சொற்களை உதிர்க்கிறான். அவனை Uncle என்றே மூலத்தில் குறிப்பிட்டதால் மாமன் என்றே மொழிபெயர்ப்பாளர் குறிப்பிடுகிறார். உண்மையில் மாமன் அவ்வாறு கூறான், அவ்விடத்தில் ஒரு சிற்றப்பனோ பெரியப்பனோதான் கூறமுடியும். இத்தகைய நம் மரபுகளையும் நோக்கி வெறும் நேரடியாகச் செய்யாது இடம் பொருள் ஏவல் அறிந்து கையாள வேண்டி வரும்.
இங்ஙனம் கூடுவிட்டுக் கூடு பாய்ந்து உருமாறி உடைமாறி உணர்வுகளை ஒருமைப்பட உணர்த்தி மூல ஆசிரியரின் கருத்தை கற்பு நிலை மாறாது காப்பாற்ற வேண்டிய கடமை உணர்வுள்ளவனாக மொழிபெயர்ப்பாளன் இருக்கவேண்டும். இத்தகைய மாற்றப்போக்கில் நாடு, பண்பாடு இவற்றிற்கு ஏற்ப உணர்த்தவேண்டிய நிலை தோன்றும். வால்மீகியின் ‘சக்கரவர்த்தித் திருமகன் ‘ காவியத்தின் மிதிலைக் காட்சி கம்பனின் கைவண்ணத்தால் தமிழகத்து அகத்துறை மரபின் வழி இன்பச் சுவையை ஊட்டுகிறது.
பாரசீகக் கவிஞரான உமர்கயாமின் ருபாயத்துகள் ஆங்கிலேயப் புலவனான எட்வர்ட் ஃபிட்ஸ்ஜெரால்டின் ஆங்கில மொழிபெயர்ப்பால் உலகத்துக்கு அறிமுகமாகின.
A book of verse underneath the bough
A jug of wine, a loaf of bread and thou
Beside me singing in the wilderness
O wilderness were paradise enow.
என்ற வரிகள் ஆங்கில மாணவர்கள் இன்ப உணர்வுடன் உச்சரித்தவை. பாரசீக மொழியில் வல்லுனரான ஏ.ஜே.அர்பெரி (A.J.Arberry) என்ற அறிஞர் இவ்வரிகள் குறித்த மொழியாக்கம் மூல ஆசிரியரின் கற்பு நெறியினை வழுவிவிட்டதாகக் குறைகூறியுள்ளார். அவர் தந்துள்ள உரைநடைக் கவிதை மொழிபெயர்ப்பு இது.
If there be available a loaf of the heart of wheat
And a two pint flagon of wine and the thigh of lamb
With a little sweetheart seated in a desolation
That is a pleasure which is not the attainment of any sultan.
கோதுமை அளித்திடு ரொட்டி ஒன்றுடன்
கூடிடும் இரண்டு மிடா மதுவுடனே
ஆட்டுக் குட்டியதன் தொடையும்
அமைதியுறு இடத்தில் அழகிய நங்கை அமர்ந்திருக்க
சுல்தானும் பெறாத சுகமன்றோ அது!
என்ற வகையில் அமைந்தது மூலம். எனினும் மொழிபெயர்த்த கவிஞர் ஃபிட்ஸ் ஜெரால்ட் தமது ஆங்கில ஆக்கத்தில் புத்தகத்தையும் மரநிழலையும், பாடலையும் வருவித்துக்கொண்டாரென்றும், காட்டினை வைகுந்தத்திற்கு நிகராக்கினார் எனவும் குறிப்பிட்டதுடன், மொழிபெயர்ப்பாளர் பாரசீக நாட்டுப் பழக்கத்தை ஆட்டுக்குட்டியின் தொடையை ரசிப்பதை குறிப்பாக எடுத்துக்காட்டும் பகுதியை சேர்க்காது விட்டார் எனவும், அமைதியற்ற ஆடம்பர சுல்தானின் வாழ்க்கைக்கு அமைதி மிகுந்த காதலர் ஒதுப்பிடம் என்ற கவிதையின் அடிப்படைக் கருத்துணர்வை எடுத்துக்காட்டவில்லை என்பதாகவும் குறிப்பிடுகின்றார்.
மொழிபெயர்ப்பு குறித்த குறைகள் பல கூறினாலும் எப்படியோ ஃபிட்ஸ் ஜெரால்ட் மொழிபெயர்ப்பின் காரணமாகவே உமர்கயாம் பாடல்கள் உலகப் புகழ் பெற்றன. இவ்வாங்கில ஆக்கத்தினின்று இவ்வரிகளைத் தமிழாக்கிய நம் இரு புலவர்களைப் படியுங்கள்.
வெய்யிற் கேற்ற நிழலுண்டு
வீசும் தென்றல் காற்றுண்டு
கையிற் கம்பன் கவியுண்டு
கலசம் நிறைய மதுவுண்டு
தெய்வ கீதம் பலவுண்டு
தெரிந்து பாட நீயுமுண்டு
வையந் தருமிவ் வனமன்றி
வாழும் சொர்க்கம் வேறுண்டோ ?
எனக் கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை கையில் கம்பன் கவிதை நூலைத் தமிழ் மரபுப்படி கொடுத்துள்ளார்.
பாலபாரதி சு.து. சுப்பிரமணியயோகியார்,
மாதவிப் பூங்கொடி நிழலில்
மணிக்கவிதை நூலொன்றும்,
தீதறு செந்தேன் மதுவும்
தீங்கனியும் – பக்கத்தில்
காதலி நீ பாட்டிசைத்துக்
கனிவோடு கூடுவையேல்
ஏதும் இனிக் கவலையில்லை
இதுவன்றோ பரமபதம்.
வாசகர்களின் கவிதை அனுபவ சுகமே இவற்றில் எவை தகுந்தவை என முடிவு தருபவை.
இவ்விதமாக ஆங்கிலத்தினின்று தமிழாக்கப்படும் சொற்கள் – நேரடி மொழிபெயர்ப்புக்கள் தமிழ் மரபில் ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டியதுபோல ஆய்விடுவதுமுண்டு. பழந்தமிழ்ச் சங்ககாலமுதல் வழிவழியாக வழங்கும் அருவி என்ற அழகிய சொல்லிருக்க water falls என்பதன் நேர் மொழிபெயர்ப்பான நீர் வீழ்ச்சி என்ற நீண்ட சொல்லும் தமிழில் இடம் பிடித்துக் கொண்டதை நோக்குக.
மொத்தத்தில் இக் கூடுவிட்டுக் கூடு பாயும் பணியில் யாருக்காக இலக்கியம் ஆக்கப்படுகின்றதோ அவர்களுக்கு மூல ஆசிரியரின் உட்கருத்தை மொழிபெயர்ப்பாளன் அனைவரும் புரிந்துகொள்ளும் நடையில் சுவைபட உணர்த்துவதே பெருங்கடமையாகும்ம்.
தட்டச்சு : ரஞ்சனி
**
வழி
muttu@earthlink.net
- கண்ணிலென்ன கார்காலம் ?
- அறிவியல் மேதைகள் யூக்ளிட் (Euclid)
- விண்கோள் நகர்ச்சி விதிகளைக் கணித்த ஜொஹானஸ் கெப்ளர் [Johannes Kepler] (1571-1630)
- விடைகளால் நிறைவுறாத கேள்வி (எனக்குப் பிடித்த கதைகள் – 39 -சம்பத்தின் ‘நீலரதம் ‘)
- மொழிபெயர்ப்புக்கலை – சில அனுபவங்கள்
- ஊடறு – ஓர் பார்வை
- பித்தான ஆர்வம் பற்றிய பித்தான ஆர்வம் (ADAPTATION (தழுவல்) திரைப்பட விமர்சனம்)
- கட்டியம் – உலகத் தமிழர் அரங்க ஆய்விதழ்
- ஈராக் அட்டவணை – டிசம்பர் 9 2002
- நாற்காலி
- அனகொண்டா
- மீண்டு(ம்) வருவேன்…
- தேடல்…
- எல்லாம் உன் பார்வை
- சுமைகளும் சுகங்கள் ஆகும்
- ஓ-ஹிப்
- உறைந்த இரத்தங்கள்
- மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது.. 7 (தொடர்கவிதை)
- இரண்டு கவிதைகள்
- பின்னல் பையன்:இரண்டாம் பாகம்
- டெபோனேரும் ப்ளேபாயும்
- மொழிபெயர்ப்புக்கலை – சில அனுபவங்கள்
- ஜின்னாவும் இஸ்லாமும்
- வரவிருக்கும் தண்ணீர் யுத்தங்கள் – பகுதி 1
- தமிழ் நாடு உருப்பட வேண்டுமா ? போடுங்கள் ஓட்டு காங்கிரசுக்கு!!!
- மலேசியாவின் இனப் பிரசினை
- Europe Movies Festival
- வினை
- கொடியது வறுமை..
- Lord Siva
- கட்டிய நெறி
- நினைத்துப் பார்க்கிறேன்
- அனைத்தும் ஒன்றே !
- அவிரோதம்
- இரண்டு ஹைக்கூக்கள்