பாவண்ணன்
துங்கபத்ரா நதிப்படுகையில் உள்ள ஊர் ஹோஸ்பெட். நதிக்கரை ஓரத்திலேயே நாங்கள் வசித்து வந்த வாடகை வீடு இருந்தது. வீட்டுக்குப் பக்கவாட்டில் மிகப்பெரிய ஆலமரங்கள் நாலைந்து இருந்தன. ஓய்வுப் பொழுதுகளில் நதிக்கரையில் உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பதும் ஆலமர நிழலில் உட்கார்ந்து படிப்பதும் உண்டு. தற்செயலாகத்தான் ஆலமரத்துக்கு மற்றொரு சிறுமியும் வழக்கமாக வருவதைக் கவனித்தேன். ஒல்லியான தேகம். பல இடங்களில் கிழிபட்டு ஒட்டுப்போடப்பட்ட சட்டை. எப்போதும் கலவரம் படிந்த கண்கள். அவற்றில் துாக்கம் மிதந்தபடி இருக்கும். ஒட்டிய கன்னங்கள். தயங்கித் தயங்கி ஆலமர மேடையை நோக்கி வந்ததும் ஒரே ஒரு நொடி சுற்றுமுற்றும் பார்ப்பாள். அடுத்த நொடியே படுத்துத் துாங்கி விடுவாள்.
ஒரு குறிப்பிட்ட நேரவரையறையெல்லாம் இல்லாமல் ஒருநாள் பத்துமணி வாக்கில் அவளைப் பார்த்தேன். இன்னொரு நாள் நண்பகல் இரண்டு மணிவாக்கில் பார்த்தேன். மற்றொரு சந்தர்ப்பத்தில் சாயங்காலம் நான்கரை வாக்கிலும் பார்த்ததுண்டு. யாரோடும் அவள் சேர்வதில்லை. பேசுவதுமில்லை. ஆடுவதுமில்லை. மற்ற பிள்ளைகள் ஆடுகிற ஆட்டங்களைக் கூடச் சிரத்தையாகக் கவனிப்பதில்லை. எல்லா நேரங்களிலும் அவள் அந்த ஆலமர மேடையை நோக்கி வருவது துாங்குவதற்காக மட்டுமே என்பது ஆச்சரியமாக இருந்தது.
ஒருநாள் அவளிடம் பேச்சு கொடுத்தேன். தயங்கித் தயங்கிப் பேசினாள். சொந்த ஊர் குல்பர்கா பக்கம். வீட்டு வேலைக்காக அழைத்து வரப்பட்டிருக்கிறாள். மாதாமாதம் சம்பளப்பணத்தை அம்மாவுக்கு அனுப்பி விடுவார்களாம். அழைத்து வரும்போது கைக்குழந்தையைப் பார்த்துக் கொள்ள என்று சொல்லித்தான் அழைத்து வந்தார்களாம். ஆனால் இங்கு வந்தபிறகோ, குடும்ப வேலைகள் அனைத்தும் இவளுடைய தலையில் கட்டி விட்டார்களாம். வீடு துடைத்தல், பாத்திரம் கழுவுதல், தண்ணீர் நிரப்புதல், துணி துவைத்தல், நான்கு குழந்தைகளையும் கவனித்துக் கொள்தல், சமையலுக்குக் காய்கறி நறுக்குதல் என ஏகப்பட்ட வேலைகள். இரவில் ஒருநொடி கூட துாங்க விடுவதில்லை. மாற்றி மாற்றி யாராவது ஒரு குழந்தை அழுதபடி இருக்கும். உடனே எழுந்து அவள்தான் கவனிக்க வேண்டும். கொஞ்ச நேரம் குழந்தையின் அழுகுரல் அதிகமாகக் கேட்டால், ‘குழந்தை அழுவறது கூட தெரியாம என்னடி தடிமாடு மாதிரி துாக்கம் ? ‘ என்று முதுகிலேயே உதைப்பார்கள். அவளை அடிப்பதற்காகவே ஒரு பிரம்பு அவர்கள் வீட்டில் இருக்கிறது. பழையது. எஞ்சியது என்றுதான் சாப்பாடு கொடுப்பார்களே தவிர நல்ல உணவுகளைத் தருவதே இல்லை. அவர்கள் அனைவரும் வெளியே போகும் சந்தர்ப்பத்தில் இவளை வெளியே தள்ளிச் சாத்திக் கொண்டுதான் செல்வார்கள். ‘அதுவும் ஒருவகையில் நல்லதா போச்சி, நிம்மதியா துாங்கிக்கலாம் ‘ என்று சிரித்தாள் அச்சிறுமி.
மறுநாள் அவள் சாப்பிடுவதற்காக வீட்டிலிருந்து கொஞ்சம் உணவை எடுத்துச் சென்றிருந்தேன். முதலில் தயங்கினாலும் பிறகு ஆவலாக வாங்கிச் சாப்பிட்டாள். விக்கல் வந்தது. உடனே தன் தலையில் தட்டிக் கொண்டபடி ‘எங்க முதலாளி அம்மாதான் திட்டறாங்க போல, வந்தா இன்னைக்கு உதை இருக்கும் ‘ என்று சொன்னாள். ‘வந்ததும் நான் இனிப்பு சாப்பிடுவேன் ‘ என்று சொல்வது போல சர்வசாதாரணமாகச் சொன்னாள். பையிலிருந்த துணியொன்றை எடுத்து அவளிடம் தந்தேன். வேகவேகமாக தலையை அசைத்து வாங்க மறுத்து விட்டாள். ‘நல்ல சட்டைம்மா, புதுசு. உனக்காகன்னு வாங்கி வந்தது ‘ என்றேன். ‘வேணாங்க. மொதலாளி அம்மா பார்த்தா வேற வெனையே வேணாம். அவுங்களுக்கு நான் இப்பிடி இருந்தாத்தான் புடிக்கும் ‘ என்று மறுத்து விட்டாள். ‘பெல்லாரி போயிருக்காங்க. சாயங்காலம்தான் வருவாங்க. அதுக்குள்ள ஒரு துாக்கம் போட்டுடறேன். ராத்திரியெல்லாம் துாக்கமே இல்ல ‘ என்று சொன்னபடி படுத்து விட்டாள். மறுநொடியே சீரான சுவாசத்தோடு அவள் நித்திரையில் ஆழ்ந்து விட்டாள். அந்த ஊரை விட்டுப் புறப்படும் போதாவது அவளுக்கு ஒரு சட்டை வாங்கிக் கொடுத்துவிட்டுச் செல்ல வேண்டும் என்கிற எண்ணத்தை அவள் நிறைவேற்றச் சம்மதிக்கவே இல்லை. அந்தக் கண்கள், அவற்றில் மிதந்த கலவரம், துாக்கம் எல்லாம் என் நெஞ்சில் அப்படியே உறைந்து விட்டன.
அச்சிறுமியின் முகம் நினைவுக்கு வரும் போதெல்லாம் மற்றொரு சிறுவனுடைய முகமும் நினைவுக்கு வரும். அது அந்தோன் சேகவ் வடித்த வான்கா என்னும் சிறுவனுடைய முகம். மொழி, தேசம், இனம் எல்லா எல்லைகளையும் தாண்டி வறுமையின் முகமும் வலியின் முகமும் ஒன்றாகவே இருக்கின்றன.
கதையில் இடம்பெறும் சிறுவன் வான்கா. வேலை பயில்வதற்காக என்று புதைமிதி தயாரிப்பாளர் ஒருவரின் கண்காணிப்பில் விடப்பட்டிருக்கிறான். அவரோ மோசமான எஜமானனாகி அச்சிறுவனைக் கசக்கிப் பிழிகிறார். நல்ல உணவும் நல்ல துாக்கமும் இல்லை. ஆனால் குறையாத உழைப்பு மட்டும் வேண்டியிருக்கிறது. அந்தப் பிஞ்சு உள்ளத்தால் அந்த வலியையும் வேதனையையும் தாங்க முடியவில்லை. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்திய இரவு எல்லாரும் தேவாலயத்துக்குச் சென்றிருக்கையில் துாக்கம் வராத வான்கா துக்கம் பெருகத் தன் நிலையையெல்லாம் விவரித்து ஊரிலிருக்கும் தாத்தாவுக்கு மடல் எழுதத் தொடங்குகிறான். நடுநடுவே தாத்தாவின் நினைவுகளும் ஊர் நினைவுகளும் பெருகிக் கண்ணீர் வடிக்கிறான். உடனே புறப்பட்டு வந்து தன்னை அழைத்துச் சென்று விடும்படி திரும்பத் திரும்பத் கோரிக்கையை வலியுறுத்தி எழுதுகிறான். ‘எந்நேரமும் என்னை அடிக்கிறார்கள், துன்பம் தாளாமல் எந்நேரமும் அழுதபடி இருக்கிறேன். எந்நேரமும் நான் பசியாய் இருக்கிறேன். தயவு செய்து வந்து அழைத்துச் சென்று விடு தாத்தா ‘ என்று கெஞ்சி எழுதுகிறான். ஒட்டப்பட்ட உறையின் மீது எப்படி முகவரியை எழுதுவது என்று கூட அக்குழந்தைக்குத் தெரியவில்லை. தாத்தா, கன்ஸ்தன்தீன் மக்காரிச் கிராமம் என்று எழுதி அஞ்சல் பெட்டியில் போட்டு விடுகிறான். இதன்பின் ஒருமணிநேரத்துக்கெல்லாம் இனிய நம்பிக்கைகள் இதமாய்த் தட்டிக் கொடுக்கத் துாங்கி விடுகிறான் சிறுவன்.
கடிதம் எழுதிக் கொண்டிருக்கும் போதே, வான்கா இடையிடையே தாத்தாவின் வீட்டிலிருக்கும் கணப்படுப்பையும் வீட்டு நாயையும் வேலை செய்யும் பெண்களையும் நினைத்துக் கொள்கிறான். அவர்கள் அனைவரும் தன்னிடம் எவ்வளவு அன்பு மிகுந்தவர்கள் என அவன் மனம் ஒருகணம் நினைத்து மீளுகிறது. புதைமிதி தயாரிக்கும் வேலையைப் பயில வந்தவனுக்கு ஒரு புதைமிதி கூட இல்லை. குளிருக்கு இதமாக கணப்பின் அருகில் உட்கார அனுமதி இல்லை. கடிதத்தை அஞ்சல் பெட்டியில் போட்டுத் திரும்பியதும் துாங்கி விடும் அவன் கனவில் முதலில் தோன்றுவது கணப்படுப்புதான்.
வான்கா கடிதம் எழுதும் இடத்துக்கருகே இருந்த மெழுகுவர்த்தியை வலிமையான படிமமாக்குகிறார் சேகவ். வான்கா போன்ற பல சிறுவர்களும் சிறுமிகளும் வெளிச்சத்தைப் பொழிந்துத் தன்னையே அழித்துக் கொள்ளும் மெழுகுவர்த்திகள் என்று சூசகமாகக் குறிப்பிடுகிறார். இச்சூசகக் குறிப்பே கதையின் தளத்தை விரிவடையச் செய்து காலம் கடந்த ஒன்றாக மாற்றி விடுகிறது.
*
ரஷ்யச் சிறுகதை எழுத்தாளர்களுள் சிறுகதை மேதை என்று அழைக்கப்படுபவர் அந்தோன் செகாவ். செகாவ் எதையும் பலத்த குரலில் பிரகடனம் செய்வதில்லை. வாசகர்களுக்கு நேரிடையாக அறிவுறுத்தவும் முற்படுவதில்லை. ஆயினும் அவரது கதைகளைப் படிக்கும் வாசகர்கள் படித்து முடித்ததும் தம் மனத்தில் ஒரு குரல் ஒலிப்பதை உணராமல் இருக்க முடியாது. இதுவே அவர் கதைகளின் மிகப்பெரிய வலிமை. ரஷ்யாவின் முன்னேற்றப் பதிப்பகத்தின் வெளியீடாக 1975 ஆம் ஆண்டில் வந்த ‘அந்தோன் சேகவ் சிறுகதைகளும் குறுநாவல்களும் ‘ என்ற நுாலில் ‘வான்கா ‘ என்னும் கதை இடம்பெற்றுள்ளது. தமிழில் மொழிபெயர்த்தவர் ரா.கிருஷ்ணையா
***
- சமயவேல் கவிதைகள்
- ஒரு மனிதன் 500 ஆண்டுகள் வாழ்வது எப்படி ?
- தலைகளின் கதை (Hayavadana – Girish Karnad)
- மருதம் – புதிய இணைய இதழ்
- மெழுகுவர்த்திகளும் குழந்தைகளும் (எனக்குப் பிடித்த கதைகள் -30 அந்தோன் செகாவின் ‘வான்கா ‘)
- சமோசா
- கடவுளும் – நாற்பது ஹெர்ட்ஸும்
- காசநோய்க்கு எதிராக அதிகப்படியான வேலை
- பாரத அணுகுண்டைப் படைத்த டாக்டர் ராஜா ராமண்ணா
- நள பாகம்
- கவலையில்லா மனிதன்
- நம்பிக்கை
- நான்காவது கொலை !!! (அத்யாயம் 10)
- எனதும் அவளதுமான மழைபற்றிய சேகரிப்புகள்
- ஜனனம்
- ஓட்டம்
- காவிரி ஆறு – ஒரு சோகக் கதை
- இந்த வாரம் இப்படி – சூலை 28 2002
- சீன மொழி – ஒரு அறிமுகம் புத்தகம் பற்றி
- நீ. அரவிந்தனின் வீரசவர்க்கார கருத்தியல் குறித்து..
- சீனம் கற்க தமிழில் முதல் நூல்
- எழுதப்படாத தீர்ப்புகள் (ஹெகலின் தீர்ப்புகள் குறித்து)
- வேஷம்