சோதிப் பிரகாசம்
(சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் (26-02-2004) குறித்து…)
ஜெய மோகனின் தீவிரம்
மார்க்சியம் ‘காலாவதி ‘ ஆகி விட்டது என்று ஜெய மோகன் கூறுகிறார். ஜெய மோகன் கூறினால் அது உண்மையாகத்தான் இருந்திட வேண்டும் என்று நாம் நினைக்கின்ற அளவுக்கு அவர் தீவிரம் ஆனவர்—-எங்கும் எதிலும் எப் பொழுதும்!
ஆனால், இந்தத் தீவிரமோ இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகளின் வாதங்களுக்கு அப்பால் விரிவு அடைந்திட முடிய வில்லை. இதனால்தான், அவர்களின் ஸ்தாலினிசத்தை மார்க்சியமாக இவர் புரிந்து கொள்ள நேர்ந்து விட்டு இருக்கிறது.
ஒரு வேளை, ஈரோப்பில் இவர் பிறந்து இருந்தால், திரோத்ஸ்கியிசத்தை மார்க்சியமாக இவர் புரிந்து கொள்ள நேர்ந்து இருக்கலாம். எங்கே, எந்தக் கருத்து ஆதிக்கம் செலுத்துகிறதோ, அங்கே அந்தக் கருத்தை அப்படியே எடுத்துக் கொண்டு, அதற்கு எதிராகத் தமது வாதங்களை அவர் நிகழ்த்தி விட்டால் போதும், தீவிரமான ஒரு கலகக் காரராக அவர் திகழ்ந்து விட முடியும்; மிகவும் தீவிரமான ஒரு சிந்தனை யாளராக அறியப் பட்டு விடவும் முடியும்.
எப்படியும், அறியப் படுவதை விட ஓர் எழுத்தாளனுக்கு வேறு என்னதான் ஒரு பேறு இருந்திடவும் முடியும் ?
லெனினிசம், மாவோயிசம், திரோத்ஸ்கியிசம், ஆண்-பெண் கம்யூனிசம், என்று எல்லாம் புரட்சிகரமான சிந்தனையாளர்கள் பேசிக் கொண்டு வருகிறார்களே, மார்க்சியத்துடன் இவற்றை எல்லாம் தொடர்பு படுத்திக் கொண்டும் அவர்கள் வருகிறார்களே, அப்படி என்றால், மார்க்சியம் என்பதுதான் என்ன ? என்று அறிந்து கொள்வதற்கு எந்த முயற்சியையும் இதனால்தான் ஜெய மோகன் எடுத்துக் கொள்ள வில்லை போலும்!
ஏனென்றால், ‘அறிவது ‘ அல்ல, ‘அறியப் படுவது ‘தான் அவருக்கு மிகவும் முக்கியம், அதுவும் தீவிரமான ஓர் எழுத்தாளராக!
இல்லை என்றால், ஓர் அரசியல் காரராகவோ, திரைப் படக் காரராகவோ அவர் ஆகி இருந்து இருக்க முடியும்; இன்னும் அதிகமாக அறியப் பட்டு இருந்து இருக்கவும் முடியும்!
ஆனால், உலகின் தலை சிறந்த கதைஞராகத் திகழ்ந்திட வேண்டும் என்பதுதான் அவரது தீவிரமான கனவு! இந்தத் தீவிரமான கனவினை நனவு ஆக்கிக் கொள்வதற்காக அவர் கையாளுகின்ற கருவிகள்தாம் அவரது தேடல்கள்!
சரி, அக்கம் பக்கத்து வீடுகளுக்கு உள்ளும் இதயங்களுக்கு உள்ளும் அத்து மீறியோ அல்லது அனுமதியுடனோ உற்றுப் பார்த்துத் தமக்குத் தேவையான தகவல்களை அவர் சேகரித்துக் கொள்வதுதான் அவரது ‘தேடல் ‘ என்றால், அதற்கு எந்த எதிரீடும் நமக்கு இல்லை; அதில் குறுக்கிடுவதற்கோ அல்லது அதைக் குறை சொல்வதற்கோ எந்த உரிமையும் கூட நமக்கு இல்லை!
அதற்காக, அணுவளவும் தாம் தேடிப் பார்த்திடாத அல்லது தேடிப் பார்த்திட விரும்பாத பொருள்களைப் பற்றிப் பேசுகின்ற உரிமையினை எப்படி அவர் எடுத்துக் கொள்ள முடியும் ? அதில்தான் என்ன நாணயமோ, நேர்மையோ அல்லது ஞாயமோ இருந்திடவும் முடியும் ?
மார்க்சியம்
‘காலாவதி ஆகி விட்டது ‘ என்று ஒற்றை வரியில் இவர் ஊதித் தள்ளி விடுவதற்கு மார்க்சியம் என்பது என்ன, ஒரு நுனிப் புல் சருகா ? அல்லது பதறா ? கதை-கவிதைகளின் எல்லைகளுக்குள்தான் அது அடங்கி விடவும் முடியுமா ?
மனிதர்களின் சமுதாய உறவுகளைப் பற்றிய, குறிப்பாக, முதலாண்மைச் சமுதாயம் பற்றிய ஓர் ஆய்வுதான் மார்க்சியம்! மனிதனை—-மனிதச் சமுதாயத்தினை—-புரிந்து கொள்ளுகின்ற ஒரு தேடல் இல்லாமல் அதனை யாரும் புரிந்து கொள்ள முடியாது; கதை-கவிதைகளைப் போல அனுபவ அறிவிற்குள் அடங்கி விடுகின்ற ஓர் ஆய்வும் அது கிடையாது.
எனவேதான், இம் மாதிரியான ஒற்றை வரி மறுப்புகளைத் தங்கள் ஆயுதங்களாகத் தூக்கிப் பிடித்துக் கொண்டு வருகின்ற ‘தேடல் வேடர் ‘களை எதிர் கொள்கின்ற பொழுதுகளில் எல்லாம் நமக்குச் சிரிப்பு வந்து விடுகிறது. ஏனென்றால், இவர்கள் மேல் இவர்கள் வைத்துக் கொண்டு இருக்கின்ற நம்பிக்கை அல்ல இவர்களது ஒற்றை வரி மறுப்புகளுக்கு அடிப்படை; மாறாக, இவர்கள் மேல் இவர்களின் வாசகர்கள் வைத்துக் கொண்டு இருக்கின்ற நம்பிக்கைதான் அடிப்படை!
எப்படியும், அறிவதை விட அறியப் படுவதுதான் முக்கியம் என்கின்ற ஒரு சூழ் நிலையில், வாசகர்களை எழுத்தாளர்கள் ஏமாற்றுவது என்பது தவிர்த்திட முடியாததுதான் போலும்! அரசியல் காரர்களிடம் இருந்து எழுத்தாளர்கள் கற்றுக் கொண்டு இருக்கின்ற ஒரு கரசியம் இது எனலாம்—-ஆம், வெற்றியின் கரசியம்!
வெற்றி என்பதுதான் முக்கியம் என்று ஆகி விட்டதன் பின்னர், வரலாற்றின் குற்ற வாளிக் கூண்டுகளைப் பற்றி எல்லாம் எழுத்தாளர்கள், அதுவும், புனைவாளர்கள் கவலைப் பட்டுக் கொண்டு இருந்திட முடியுமா, என்ன! ஆனால், அரசியல் காரர்களைக் கிண்டல் அடிப்பதற்கு மட்டும் என்றும் இவர்கள் தவறுவது இல்லை.
ஸ்தாலினிசமாக மார்க்சியத்தைப் புரிந்து வைத்துக் கொண்டு இருக்கின்ற ஓர் ‘ஒற்றை வரிச் சிந்தனையாளர் ‘தாம் ஜெய மோகன் என்பது நமக்குத் தெரியும்; எனவே, மார்க்சியம் காலாவதி ஆகி விட்டது என்று அவர் கூறுகின்ற பொழுது, ஸ்தாலினிசம் காலாவதி ஆகி விட்டது என்று கூறுவதற்குதான் அவர் முற்படுகிறார் என்று அவரது ஒற்றை வரிச் சிந்தனைகளை நாம் எடுத்துக் கொள்ளலாம்தான் என்ற போதிலும், நமக்கோ அது தேவை இல்லாத ஒரு விசயம்!
ஏனென்றால், தாம் தேடிப் பார்த்திடாத கருத்துகளைத் தயக்கம் இன்றி வெளிப் படுத்திக் கொண்டு வருகின்ற ‘சிந்தனையாளர் ‘களால் சமுதாயத்தில் விதைக்கப் பட்டு வந்து இருப்பவை வெறும் களைகள் மட்டும்தாம்! எனினும், எதற்காக இத் தகு உத்திகளை இவர்கள் கையாண்டு கொண்டு வருகிறார்கள் என்பதுவும் நமக்குத் தேவை இல்லாத விசயம்தான்!
வெறி பிடித்துப் போன ஒருவன்—-இந்து மதத்தைச் சேர்ந்தவனாக இருந்தால் அவனது கொலை வெறிக்கு இந்து மதம்தான் காரணம் என்று புரிந்து கொள்வதும் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவனாக இருந்தால் அதற்கு இஸ்லாம் மதம்தான் காரணம் என்று புரிந்து கொள்வதும் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவனாக இருந்தால் அதற்குக் கிறிஸ்தவம்தான் காரணம் என்று புரிந்து கொள்வதும், எந்த அளவுக்குப் பிறழ்ச்சி ஆனவையோ, அந்த அளவுக்கும் அதிகமாகப் பிறழ்ச்சியான ஒரு புரிவுதான் ஸ்தாலினிசத்திற்கு மார்க்சியம்தான் காரணம் என்று நாம் புரிந்து கொள்வது!
எதற்கும் எதையாவது காரணம் காட்டி விட்டு, அறிவு முயற்சிகளில் இருந்து நாம் நழுவிக் கொண்டு விடுகின்ற ஒரு சுகம்தான் இது எனல் வேண்டும்.
ஆக, மார்க்சியம் காலாவதி ஆகி விட்டது என்று ஜெய மோகன் குறிப்பிடுவது வெறுமனே அவர் கேலி பேசிக் கொள்கின்ற ஒரு விசயம் அல்ல என்பது தெளிவு.
எனினும், மிகவும் மகிழ்ச்சியான ஒரு விசயம் அது!
ஏனென்றால், மார்க்சியம் காலாவதி ஆகி விட்டது என்றால்—-முதலாண்மை காலாவதி ஆகி விட்டது என்றுதான் அதற்குப் பொருள்; எனவே, பருப் பொருள் வயமான கேவல வாழ்க்கைக்கு மனிதர்கள் முற்றுப் புள்ளி வைத்து விட்டார்கள் என்று பொருள்; விடுதலையான தனி மனிதர்களின் விடுதலையான உறவுகளாகத் திகழ்ந்திடத் தக்க ஒரு சமுதாயம் முகிழ்த்து வந்து விட்டது என்றும் பொருள்!
இப்படி, நமது காதுகளில் சுற்றி விடுவதற்கு என்று ஜெய மோகன் வனைந்து கொண்டு வந்து இருக்கின்ற தாள் பூக்களைச் சற்றே கிள்ளி எறிந்து விட்டு, அவரது ஆழ் மனத்தின் உரையாடலுக்குள் இனி நாம் நுழைவோம்.
பொழுதும் போக்கும்
ஆழ் மனம் என்பதை எப்படி நாம் புரிந்து கொள்வது என்பது நமது முதல் சிக்கல்! ஆனால், அதற்கும் முன்னரே இன்னொரு சிக்கல் எழுந்து வந்து நம்மை மருட்டுகிறது—-மனம் என்றால் என்ன ? என்று!
இது மட்டும்தானா, நெஞ்சம் என்றால் என்ன ? உள்ளம் என்றால் என்ன ? என்னும் கேள்விகளும் கூடவே எழுந்து வந்து விடுகின்றன.
எனினும், ஜெய மோகனுக்கு இவை எல்லாம் ஒரு சிக்கலே அல்ல—-எதையும் அறிந்து கொள்வதற்கு நம்மால் முடியாது என்று நமக்குப் பூச்சாண்டி காட்டி விட்டு, எந்தப் பொருளிலும் எதையும் எழுதி நம்மை அவர் குழப்பி விட்டு விட முடியும் என்பதால்!
இந்தக் குழப்பத்தில், எதையும் புரிந்து கொள்வதற்கு நம்மால் முடியாதுதான் போலும் என்று தலையில் கை வைத்துக் கொண்டு நாம் உட்கார்ந்து விட்டோம் என்றால், அதுதான் ஜெய மோகனின் வெற்றி—-பாமரர்களுக்கு எதிரான படித்தவர்களின் வெற்றி; வாசகர்களுக்கு எதிரான எழுத்தாளர்களின் வெற்றி; சிந்திக்கத் தெரியாதவர்களுக்கு எதிரான சிந்தனை யாளர்களின் வெற்றி!
ஆனால், இவர்களுக்குதான் புரிவது இல்லை—-ஒரு பொழுது போக்கிற்காகத்தான் இவர்களது கதைகளையும் கதை-அளப்புகளையும் படித்துக் கொண்டு நாம் வருகிறோம் என்பது; வினயமான விசயங்களுக்கு வேறு நூல்களை நாம் நாடிக் கொள்கிறோம் என்பது!
உள்ளம்: மனம்: நெஞ்சம்
மற்றவர்களின் பொருள்களைத் திருடிக் கொள்ளலாம் என்று உள்ளத்தால் நாம் உள்ளுவது கூட தீதுதான் என்று திரு வள்ளுவர் கூறுகிறார்.
இங்கே, ‘கரசியமாக ‘ நினைத்தல், ‘அச்சத்துடன் ‘ எண்ணிப் பார்த்தல், தவறாக ‘ஆசை ‘ப் படுதல், என்று ‘உள்ளுதல் ‘ என்னும் சொல் பொருட் படுத்தப் பட்டு இருக்கிறது.
அப்படி என்றால், நமது உணர்ச்சிகள், உணர்மங்கள், கரசியங்கள், முதலிய வற்றினால் குணவரைப் படுத்தப் பட்டு இருப்பதுதான் ‘உள்ளம் ‘ என்று நாம் எடுத்துக் கொள்வதில் தவறு எதுவும் இல்லை.
இனி, நமது நெஞ்சத்தைப் பொறுத்த வரை, அதன் உரத்தைப் பற்றி நாம் பேசுகிறோம்; சூள் உரைக்கின்ற நேரங்களில் அதனைத் தட்டிக் கொண்டும் நாம் பேசுகிறோம்.
அப்படி என்றால், வீரத்தால் குணவரைப் படுத்தப் பட்டு இருப்பதுதான் நெஞ்சம் என்று நாம் எடுத்துக் கொள்ளலாம் என்ற போதிலும், நமது இதயம் அல்லது நுரை ஈரலின் வலிமையினைச் சுட்டுவதாகத்தான் அது அமைந்திட முடியும் என்பதால், நெஞ்சம் என்பதை ஈண்டு நாம் புறக்கணித்து விடுவதைத் தவிர நமக்கு வேறு வழி இல்லை.
அப்படி என்றால், நமது உள்ளத்தின் ஒதுக்குப் புறத்தைதான் ‘ஆழ் மனம் ‘ என்று ஜெய மோகன் குறிப்பிட்டுக் கொண்டு வருகிறார் போலும்! இந்த ஒதுக்குப் புறத்தைப் பற்றிய ஆய்வுதான் ‘உள்ள வியல் ‘ என்பதும் போலும்!
உள்ளத்தைப் பற்றிய ஆய்வினை ‘உள வியல் ‘ என்று நாம் குறிப்பிடுவதற்குத் தமது எதிரீட்டினைத் தெரிவிக்கிறார் புலவர் வெற்றி அழகனார்! ‘உளவு ‘ வேலைகளைப் பற்றிய ஆய்வுதான் உளவியல் என்பதும் உள்ளத்தைப் பற்றிய ஆய்வுகளை ‘உள்ளத்து இயல் ‘ என்று நாம் குறிப்பிடுவதுதான் பொருத்தம் என்பதும் அவரது வாதங்கள்!
இங்கே, ஆழ் மனம் என்பதைக் கொஞ்சம் புரிந்து கொள்வதற்கு நாம் முயல்வோம்
ஆழ் மனம்
ஐந்து அறிவுகளோடும் கூடிய ஆறாவது அறிவுதான் மனம் என்று தொல் காப்பியர் கூறுகிறார்.
அறிவு ஆற்றல் மட்டும் இன்றி, நினைவு ஆற்றல், சிந்தனை ஆற்றல், ஆகிய வற்றினையும் மனத்தின் ஆற்றல்களாக நாம் வகைப் படுத்திக் கொள்ளலாம். ஏனென்றால், அறிதல், அறிகின்றன வற்றை நினைவில் பதித்து வைத்தல், அவற்றை நினைவு படுத்திச் சிந்தித்துத் தெளிவு அடைதல், என்கின்ற வகையில்தான் நமது அறிவு வளர்ந்து கொண்டு வந்து இருக்கிறது; வளர்ந்து கொண்டும் வருகிறது.
இது பற்றிய விரிவிற்கும் எதிரீடுகளுக்கும் ‘மனத்தின் விடுதலை ‘யைச் சற்றே புரட்டிப் பார்த்துக் கொள்வது ஆர்வலர்களுக்கு நல்லது.
எப்படியும், அறிவு, நினைவு, சிந்தனை, ஆகியவற்றினை மனத்தின் ஆற்றல்களாகவும் உணர்ச்சி, உணர்மம், உணர்மை, ஆகியவற்றினை இவ் ஆற்றல்களின் விளைவான சாயைகளாகவும் நாம் எடுத்துக் கொள்வதில் தவறு எதுவும் இல்லை. எனினும், உணர்ச்சி, உணர்மம், முதலிய மனத்தின் சாயைகளை உள்ளம் என்று தனியாக நாம் வகைப் படுத்தி வைத்துக் கொண்டு இருப்பதால், அறிவு, நினைவு, சிந்தனை, உணர்மை, உள்ளம், ஆகிய வற்றின் ஒரு தொகுப்பாக மனம் என்பதை நாம் வரையறுத்துக் கொள்ளலாம்.
மனித இயல்பிற்கு அயன்மையான நமது நோக்கங்கள், செயற்பாடுகள், உணர்மைகள், ஆகியவற்றினைத் திண்மையான மனித இயல்பின் குணவரைகள் என்றும் இந்த அயன்மைப்பாட்டின் விளைவாக உள்ளடங்கிப் போன மனித இயல்பினை நுண்மையான மனித இயல்பு என்றும் ஏற்கனவே நாம் வகைப் படுத்திக் கொண்டு இருக்கிறோம்.
இப்படி, ‘திண்மையான மனம் ‘ என்றும் ‘நுண்மையான மனம் ‘ என்றும் பிளவு பட்டுக் கிடக்கின்ற ‘மனித மனத்தில் ‘, ‘ஆழ் மனத்தின் ‘ இடம் எது ? என்பதுதான் இங்கே கேள்வி.
ஆழ் மனத்துடன் உரையாடல்
ஆழ் மனம் என்பது நிச்சயமாக ஒரு ‘வெளி மனம் ‘ அல்ல என்பது வெளிப்படை! எனவே, வெளியில் சொல்வதற்கு நாம் வெட்கப் படுகின்ற நமது ஆசைகள், ஏமாற்றங்கள், சதிகள், குற்றங்கள், என நமது கபடங்களை மூடி மறைத்து நாம் புதைத்து வைத்துக் கொள்கின்ற நமது மனத்தின் ஒதுக்குப் புறம்தான் ஆழ் மனம் என்பதில் ஐயம் இல்லை.
இந்த ஆழ் மனத்துடன் நாம் நடத்திப் பார்த்துக் கொள்கின்ற ஓர் உரையாடல்தான் புனைவு இலக்கியங்களின் வாசிப்பு என்று ஜெய மோகன் கூறுகிறார். அவரது அனுபவ அறிவின் கூற்று இது! அனுபவ அறிவிற்கும் அப்பால் உறுதியாக அறிவதற்கு எதுவும் இல்லை என்பதுதான் அவரது முடிபும் ஆகும்.
எனினும், இவரது கூற்றில் அரை-குறையான ஓர் உண்மை இல்லாமல் இல்லை! ஏனென்றால், வெளி மனத்துடன் மட்டும் இன்றி நமது உள் மனத்துடனும்—-நமது நினைவுகள் அனைத்துடனும்—-நாம் நடத்திக் கொள்கின்ற ஓர் உரையாடல்தான் புனைவு இலக்கியத்தின் வாசிப்பு என்பது!
ஆன்மிகம், இறைமை, என மனித நேயத்தால் நிரம்பி வழிந்து கொண்டு இருப்பதுதான் நுண்மையான மனித இயல்பு என்பது நமக்குத் தெரியும்.
இந்த மனித நேயத்தை யாரும் மூடி மறைப்பது இல்லை. ஏனென்றால், வெளியில் சொல்வதற்கு வெட்கப் படுகின்ற கேவலம் எதுவும் இதில் இல்லை—-தற்பெருமைத் தனமாகவும் சில சமயங்களில் அது வெளிப் படுத்தப் பட்டு விடுகிறது என்பதைத் தவிர!
ஏன், ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்டு கொண்டு வந்து இருந்த மனித நேயர்கள், இறுதியில் ஆட்சியைக் கைப் பற்றி அரியணையில் அமர்ந்து கொண்டு, ஏழைகளின் உயிர்களைத் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலி ஆக்கிக் கொண்டு வந்து இருந்த அடக்கு முறைக் காட்சிகளை நாடு கண்டு வந்தது இல்லையா ?
எனவே, மனிதர்களின் நுண்மையான மனத்தில் ஆழ் மனம் என்று ஒன்று அமைவு உறுவதற்கு வாய்ப்பு எதுவும் இல்லை. ஆனால், மனிதர்களின் திண்மையான மனத்தில் அந்த வாய்ப்பு ஏராளமாக உண்டு.
வெளி மனமும் உள் மனமும்
தான் என்றும் தனக்கு என்றும் தங்கள் நோக்கங்களை வகுத்துக் கொண்டுதான் எல்லா மனிதர்களாலும் இன்று வாழ்ந்திட முடிகிறது என்பது வெளிப்படை! எனவே, பொதுவானது ஆக்கப் பட்ட தன்னலம் என்பதைத் தவிரப் பொது நலம் என்று எதுவும் இன்று இருப்பதற்கு வாய்ப்பு இல்லை என்பதும் வெளிப்படை!
இப்படி, தன்னைப் பற்றி மட்டும் கவலைப் பட்டுக் கொள்கின்ற மனிதனின் அயன்மையான இயல்பினைத்தான் திண்மையான மனித இயல்பு என்று நாம் அழைக்கிறோம். பொதுப் படையான மனித இயல்பிற்கு அயன்மையான இந்தத் திண்மை வாழ்க்கையின் பாற் பட்ட மனிதனின் மனம்தான் திண்மையான மனம் என்பதும் ஆகும்.
இந்தத் திண்மையான மனத்தில்தான் உள் மனம் என்றும் வெளி மனம் என்றும் ஒரு பிளவு ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
அதாவது, தன்னலமான ஒரு வாழ்க்கைதான் மனிதர்களின் திண்மையான வாழ்க்கை என்ற போதிலும், தங்களின் தன்னலப் பான்மைகளையும் தன்னலமான தங்களின் வெற்றிகளையும் வெளியில் சொல்வதற்கு யாரும் வெட்கப் படுவது இல்லை; மாறாக, உழைப்பால் உயர்ந்த தங்களின் கதைகளை மற்றவர்களும் கற்றுக் கொள்ள வேண்டிய படிப்பினைகளாக அவர்கள் எடுத்து உரைத்துக் கொண்டு வருகிறார்கள்.
ஏனென்றால், யாரும் குற்றம் சாட்டிட முடியாத அவர்களின் வெற்றி இது; மூடி மறைத்திட வேண்டிய அவமானம் எதுவும் இதில் இல்லை.
இது போலத்தான், ஞாயமான தங்களின் கோவங்கள், கவலைகள், களிப்புகள், முதலிய உணர்ச்சிகளையும் உணர்மங்களையும் யாரும் மூடி மறைத்து வைப்பது இல்லை; அதற்கு அவசியமும் இருப்பது இல்லை. ஏனென்றால், காலத்தின் ஞாயம் இவர்களின் பக்கம் இருக்கிறது.
அவ்வளவு ஏன், தங்கள் உணர்ச்சிகளது எழுச்சியின் விளைவான குற்றங்களைக் கூட மனிதர்கள் மூடி மறைத்து விடுவது இல்லை—-மனித நேயத்தின்—-ஞாயத்தின்—- விளைவான எழுச்சியாக அவை இருக்கும் என்றால்!
ஆனால், தங்களின் திரை-மறைவு நடவடிக்கைகளை—-உதட்டில் ஒன்றும் உள்ளத்தில் ஒன்றும் ஆன தங்களின் கயமைகளை—-சதிகளும் கவடங்களும் நிரம்பிய தங்களின் கரசியங்களை—-வெளிப்படையாக யாரும் எடுத்து உரைத்துக் கொண்டு வருவது இல்லை. ஏனென்றால் காலத்தின் ஞாயங்களை மீறிய அவமானங்கள் அவை; தண்டனைகளுக்கு உரிய குற்றங்கள் அவை!
ஆக, நாம் பெருமைப் பட்டுக் கொள்ளக் கூடிய—-மூடி மறைத்து வைப்பதற்கு அவசியம் இல்லாத—-நமது நினைவுகளின் தொகுப்பினை ‘வெளி மனம் ‘ என்றும் வெளியில் சொல்வதற்கு நாம் வெட்கப் படுகின்ற—-அவ மானகரமான—-கரசியமாக நாம் பாது காத்துக் கொண்டு ஆக வேண்டிய—-நமது நினைவுகளின் தொகுப்பினை ‘உள் மனம் ‘ என்றும் நாம் வகைப் படுத்திக் கொள்ளலாம் என்பது தெளிவு.
எனவே, நமது ஆழ், அல்லது உள் மனத்துடன் மட்டும் அல்ல, நமது வெளி மனத்துடனும் நாம் நடத்திப் பார்த்துக் கொள்கின்ற ஓர் உரையாடல்தான் புனைவு இலக்கியங்களின் சுவனிப்பு என்பது முடிபு.
எனினும், ஜெய மோகனின் சொல் ஆட்சிகளுக்குள் நம்மை முடக்கிக் கொள்ளாமல் பிரச்சனையை அணுகி நாம் பார்ப்போம் என்றால், ‘நினைவு ‘ என்பதைத் தவிர நமது வெளி மனத்திலும் உள் மனத்திலும் வேறு எதுவும் இல்லை.
ஆக, வெளிப்படையும் கரசியமும் ஆன நமது நினைவுகளைத்தாம் முறையே வெளி மனம் என்றும் உள் மனம் என்றும் வகைப் படுத்திக் காட்டி நம்மை மருட்சி அடையச் செய்து கொண்டு வந்து இருக்கிறார்கள் போலும் அறிஞர் பெரு மக்கள்!
சரி, போகட்டும்! அப்படித்தான் இருப்பார்கள் அவர்கள்! அறிஞர்கள் என்றால் சும்மாயா, என்ன ?
போதைப் பயன்
நமது நினைவுகளின் நேரலடியான சிந்திப்பு என்பதுதான் புனைவுச் சுவனம் என்பது இப் பொழுது நமக்குத் தெளிவு ஆகி இருக்கிறது.
இந்தச் சிந்திப்பினால் நாம் பெறுவதோ ஒரு போதைப் பயன்தான் என்பதால், போதைப் பொருள்கள்தாம் புனைவு இலக்கியங்கள் என்னும் ஒரு தெளிவும் நமக்கு ஏற்பட்டு இருக்கிறது.
எனினும், நமது ‘கரசியமான நினைவு ‘களின் நேரலடியான சிந்திப்பு என்பதுதான் உச்சமான ஒரு போதையினை நமக்கு அளித்திட முடியும் என்பதால்—-எனவே, நமது ஆழ் மனத்துடன் நம்மை உரையாட வைக்கின்ற புனைவுகள்தாம் உச்சமான புனைவுகளாக இருந்திடவும் முடியும் என்பதால்—-ஜெய மோகனின் கருத்தினையும் நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.
இனி, நண்பர் ஜெய மோகனுக்கு நாம் வருவோம்.
புனைவு இலக்கிய உலகின் தலை மக்கள்
புனைவு இலக்கியச் ‘சுடரின் தரம் ‘ பற்றியும் அணைய விடாமல் அதனை எல்லோரும் பாது காத்திட வேண்டும் என்றும் ஜெய மோகன் பேசுகின்ற பொழுதுகளில் எல்லாம், ஸ்தாலினிஸ்ட்டுகள் உள்ளிட்ட பல தரப்புகளில் இருந்தும் சல-சலப்பான சில முனகல்கள் எழுந்து கொண்டு வந்து இருப்பதை அவ் அப்போது நாம் கண்டு கொண்டு வந்து இருக்கிறோம்.
ஜெய மோகன் என்ன, புனைவின் தலை மகனா ? அனைத்துப் புனைவுகளின் மீதும் தீர்ப்புக் கூறிடத் தக்க அறிவாளனா ? புனைவின் காவலனா ? என்று எல்லாம் கொஞ்சம் இவர்கள் கிசு-கிசுத்துக் கொள்கிறார்கள்; பின்னர் அடங்கியும் போய் விடுகிறார்கள். நிறைய பேருக்கு இவர் மீது பொறாமை கூட உண்டு என்பது வெட்ட வெளிச்சம்!
ஆனால், புனைவின் தலை மக்களாக அவ் அப்போது ஒரு சிலர் தோன்றிக் கொண்டுதான் வந்து இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை—-திரைப் பட நாயகர்கள் மற்றும் நாயகிகளைப் போல! எல்லாவற்றிலும் இருப்பது போல இதிலும் பலப் பல தலைகள் உண்டு என்பதும் உண்மை!
பாரதியார், கல்கி, அண்ணா துரையார், மு. வரதராசனார், சாண்டில்யன், கருணா நிதியார், ஜெய காந்தன், கண்ன தாசன், தீபம் பார்த்த சாரதி மற்றும் பிறர், எனப் பல் வேறு தலை மக்களைக் கலை-இலக்கிய உலகில் தமிழகம் கண்டு கொண்டுதான் வந்து இருக்கிறது.
இப்படிப் பல தலை மக்களில் ஒருவராக இன்றைய சூழலில் தம்மை ஜெய மோகன் வெளிப் படுத்திக் கொண்டு வந்து இருக்கிறார் என்பதில் யாருக்கும் ஐயம் இருந்திட முடியாது. தன் நம்பிக்கை மிகுந்த இவரது கருத்துகளால் இவர் வரவழைத்துக் கொண்டு வந்து இருக்கின்ற வசைகளிலும் அனைவருக்கும் உடன்பாடு உண்டு என்றும் நாம் சொல்லி விட முடியாது.
எனினும், புனைவு இலக்கிய உலகில் இன்று நிலவிக் கொண்டு வருகின்ற
மூடு-மந்திரங்களுக்கும் தந்திரங்களுக்கும் உட்பட்டவராகவே இவரும் இருந்திடலாம் என்பது வேறு விசயம்! அதே நேரத்தில், பொது நாயகப் பண்பாட்டினை மீறிய இத் தகு அத்து மீறல்களுக்கு எல்லாம் முடிவு கட்டிட வேண்டிய பொறுப்பு வாசகளுக்கு உரியது என்பதுவோ எல்லா வற்றையும் விட முக்கியமான ஒரு விசயம்!
எனினும், சரியானதாகத் தமக்குத் தோன்றுகின்ற எந்த ஒரு கருத்தினையும் முக்காடு போட்டு இவர் மூடி மறைத்து விடுவது இல்லை என்பதை யாரும் மறுத்து விடுவதற்கு இல்லை.
வீதியில் விளையாட்டு
கதை-கவிதைகளைச் சாராயம் என்றும் புரட்சிக் கதை-கவிதைகளைக் கள்ளச் சாராயம் என்றும் சுமார் 25 ஆண்டுகளாக நான் கூறிக் கொண்டு வந்து இருக்கிறேன்.
தொடக்கத்தில் எனது கருத்துகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்துக் கொண்டு வந்து இருந்தவர்களுள் மிகவும் முக்கியம் ஆனவர் கவிஞர் இன்குலாப்தாம் ஆவார். புனைவு இலக்கியத்தின் போதைப் பயன் பற்றிய எனது கருத்துகளை நான் வளப் படுத்திக் கொண்டு வந்ததற்கு உறு துணையாக எனக்கு இருந்தவரும் அவர்தாம்!
பின்னர், 1980-இன் தொடக்கத்தில், ஓர் இலவச வெளியீடாக சி.டி.ஆர்.ஏ. நிறுவனத்தினர் வெளியிட்டு இருந்த ‘வாழ்க்கையின் கேள்விகள் ‘ என்னும் எனது நூலில், கலை-இலக்கியங்களின் போதைப் பயன் பற்றிய எனது கருத்துகளை உறுதியாக நிலை நிறுத்தி வாதங்களை நான் நிகழ்த்தி இருந்தேன்—-மார்க்சியத்தில் ஆர்வம் கொண்டு இருப்பவர்களின் கவனத்தைக் கதை-கவிதைகளில் இருந்து மார்க்சின் நூல்களின் பால் ஈர்த்திட முடியும் என்னும் எண்ணத்தில்!
கோவை ஞானி, கவிஞர் இன்குலாப், முதலிய பலருக்கும் ‘வாழ்க்கையின் கேள்விகள் ‘ கிடைத்து இருந்தது. கவிஞர் ஜாப்சனின் மூலமாக அஸ்வ கோஷ் அவர்களையும் சென்று அடையாமல் அது இருந்து இருக்க முடியாது.
இவர்கள் போன்ற பலருக்கும் எனது கருத்துகளின் மேல் ஒரு கோவம் இருந்ததுதான் என்ற போதிலும், அவற்றை எதிர்க்கின்ற அறிவாண்மையோ, துணிச்சலோ அல்லது நாணயமோ இருந்திட வில்லை. வரலாற்றின் முரண் இயக்கத்திற்குக் கருத்துரை எழுதுகின்ற வாய்ப்பினைக் கவிஞர் இன்குலாப்பிற்கு நான் அளித்து இருந்த போதிலும், புனைவு இலக்கியங்களின் போதைப் பயன் பற்றிய எனது கருத்துகளை எதிர் கொண்டு ஆக வேண்டிய அறிவாண்மை வீறு அவரது சொல்லாடலில் இல்லாமல் போயிற்று!
எனினும், புனைவு இலக்கியப் புலிகளாகத் தங்களைக் கருதிக் கொண்டு வந்து இருப்பவர்கள்தாம் இவர்கள் என்பது ஊர் அறிந்த ஒரு கரசியம்!
ஆனால், ஜெய மோகனோ வீதியில் நின்று கொண்டு விளையாடுகிறார்; வெளிப்படையாகத் தமது வாதங்களை நிகழ்த்தி எதிர்க் கருத்துகளை எதிர் கொள்ளுகிறார்; புனைவு இலக்கிய உலகின் சார்பாக நின்று பேசுகிறார்.
இப்படி, வீறுடன் தமது வாதங்களை நிகழ்த்திய வண்ணம் நிமிர்ந்து நின்று கொண்டு இருக்கின்ற நண்பர் ஜெய மோகனுக்கு நமது வாழ்த்துகள்!
21-11-2004
(முற்றும்)
- துயருறும் இலங்கை மக்களின் நிவாரணத்திற்கு அவசர வேண்டுகோள்!
- சங்கீதமும் வித்வான்களும்
- மக்கள் தெய்வங்களின் கதைகள் – 15. வன்னியன் கதை
- மெய்மையின் மயக்கம்-32
- ஓவியப் பக்கம் – பதினொன்று – ஜார்ஜ் கிராஸ்ச்- ஓவியமும் அரசியலும்
- ரெஜி
- உடன் பயின்ற நண்பனுக்கு ஒரு மடல்!
- கடிதம் டிசம்பர் 30,2004 – பத்திரிகைகளின் தவறான போக்கு!
- திரு பத்மநாப ஐயருக்கு 2004 ஆம் ஆண்டிற்கான இயல் விருது
- கடிதம் டிசம்பர் 30, 2004-எஸ். அரவிந்தன் நீல கண்டன்: அருள் செல்வன் கந்த சுவாமி: சலாஹுத்தீன்: ஜோதிர் லதா கிரிஜா
- கடிதம் டிசம்பர் 30,2004
- சாகித்ய அக்காதமி விருதுகள் – தமிழன்பனும் சகரியாவும்
- ஒரு வேண்டுகோள்
- மார்க்ஸ், டார்வின் மற்றும் பிரச்சாரம்
- கடிதம் டிசம்பர் 23,2004
- சுனாமி
- சுனாமி
- பத்மநாபஐயர்
- விடுபட்டவைகள்-3 -தீர்க்கம்
- ‘சும்மா வருவாளா சுகுமாரி ? ‘ – இசை விழா விமர்சனம் – II
- சதாத் ஹசன் மண்டோ நூல் வெளியீடு
- Reporting from Chennai about the Relief efforts on the Tsunami hit areas.
- கடற்கோள்
- நீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் – 52
- வாரபலன் டிசம்பர் 30,2004 – தோழர் நிர்பன் , யசோதர – யமுனா, அரசாங்க விருந்து ,கொலைகள் அலைகள்
- பெரானகன்
- சூசன் சாண்டாக் – ஒரு வாசகனின் அஞ்சலி
- சமஸ்கிருதமயமாதலும் நடுக்காட்டு இசக்கி அம்மனும்
- கடல்கோள் அழிவிற்கு உதவுவோர் கவனிக்க வேண்டியது!
- சுனாமி அழிவு :: உரிமையும் கடமையும்
- இராக்கில் இஸ்லாமிய மக்களாட்சி ? – பகுதி 2
- கடல் கொந்தளிப்பைக் குறித்த எச்சரிக்கையில் குளறுபடி
- இன்று புதிதாய்ப் பிறந்தோம்.. ?
- அறிவியல் சிறுகதை வரிசை 7 – நம்பிக்கையாளன்
- ஞானக்கோமாளி – கவிதாப் பிரசங்கம்
- கவிக்கட்டு 42
- பெரியபுராணம் – 24
- தவறான திருப்பம் (ஆங்கில மூலம் : ஆகா ஷாஹித் அலி)
- கடற்கோள்
- அழுகிறபோது எழுதமுடியுமா ?
- கடலம்மா….
- இந்து மாக்கடல் பூகம்பத்தில் எமனாய் எழுந்த பூத அலை மதில்கள்! (Earth Quake Giant Sea Waves Attack South Asian Countries 2004)
- விலங்குகளுக்கு ஆறாம் அறிவு உண்டு என்ற நம்பிக்கையை வலுப்படுத்துகிறது ட்சுனாமி
- தெற்காசிய இந்து/இஸ்லாமியப் பண்பாடுகள் – ஒரு மறுசிந்தனை -1