மெய்மையின் மயக்கம்-17

This entry is part [part not set] of 45 in the series 20040916_Issue

சோதிப் பிரகாசம்


(சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் [26-02-2004] குறித்து…)

களங்கம்

ஒருவர் மீது ஒருவர் களங்கம் கற்பிப்பது சட்டப் படி ஒரு குற்றம்! இந்தியத் தண்டனைச் சட்டத்தில் இது வரையறுக்கப் பட்டு இருக்கிறது. களங்கச் சட்டங்கள் இல்லாத நாடு எதுவும் உலகில் இன்று இருப்பதற்கும் வாய்ப்புகள் இல்லை. ஏனென்றால், ஒருவரது சமுதாயத் தரத்தினை மற்றவர்கள் குறைத்து மதிப்பிடுவதற்குக் களங்கங்கள்

முற்படுகின்றன.

ஆனால், ஒருவரது சிந்தனைத் தரத்தினை மற்றவர்கள் குறைத்து மதிப்பிடுகின்ற

வகையில், அவரது கருத்துகளைச் சிதைத்தும் திரித்தும் இன்னோர் எழுத்தாளர் எழுதுவது களங்கச் சட்டத்தின் கீழ் வருகின்ற ஒரு குற்றம் ஆகுமா ? இல்லையா ? என்பது நமக்குத் தெரிய வில்லை. துக்ளக் சோவிடம் ஒரு கேள்வியைக் கேட்டு இதற்கான விளக்கங்களை யாரும் பெற்றுக் கொள்ளவும் முடியும்.

இப்படித்தான் ஒரு நாள், ‘புதிய கோடாங்கி ‘யில் ஒரு கேள்வியை வாசகர் ஒருவர் கேட்டு இருந்தார்—-பன்றி இறைச்சியைப் புத்தர் உண்டது உண்மைதானா ? என்று!

வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பதற்காகப் புதிய கோடாங்கியில்

நியமிக்கப் பட்டு இருக்கின்ற ‘முனிமா ‘ என்பவர் இதற்குப் பதில் அளித்து

இருந்தார்—-பன்றி இறைச்சியைப் புத்தர் உண்டது உண்மைதான் என்று!

எப்படியோ, பன்றி இறைச்சியைப் புத்தருக்குச் சமைத்துக் கொடுத்ததே நான்தான் என்று உரிமை கொண்டாடாமல் ‘முனிமா ‘ விட்டு விட்டதற்காக அவருக்கு நாம் நன்றி

தெரிவித்துக் கொள்ளலாம். கோவை ஞானிக்கு நாம் வருவோம்.

ஒரு சமுதாயத்தின் பொருளாதார நிலவரங்களுக்கும் அச் சமுதாயத்தில் கலைகள் எய்துகின்ற உச்சத்திற்கும் இடையே எந்த ஒரு தொடர்பும் இல்லை என்று கார்ல்

மார்க்ஸ் கூறி இருந்தாராம்; கோவை ஞானி கண்டு பிடித்து இருக்கின்ற இந்த மா பெரும் உண்மையைக் கேட்டு மார்க்சிய வாதிகள் அதிர்ச்சி அடைந்து விடவும்

கூடுமாம்!

பட்டு உற்பத்தியில் ஈடு பட்டு இருக்கின்ற பட்டுப் புழுவுக்கு மிகவும் நன்றாகத்

தெரியுமாம்—-பட்டு உற்பத்தியில் அது இறந்து போய் விடும் என்று! இப்படித்தான், ‘உம்பரின் இழப்பினை ‘ மில்ட்டனும் எழுதிக் கொண்டு வந்து இருந்தாராம்; தன்னை இழந்துதான் உயர்வான ஒரு கதையினை ஒரு கதைஞன் எழுதிடவும் முடியுமாம்!

கோவை ஞானி கூறுகிறார்.

கோவை ஞானி குறிப்பிடுவது போல, மார்க்சிய வாதிகள் அதிர்ச்சி அடைந்திடக் கூடிய ஒரு விசயம்தான் இது என்பதில் நமக்கு ஐயம் எதுவும் இல்லை. ஏனென்றால், கார்ல் மார்க்ஸ் கூறி இருப்பதற்கு வாய்ப்பு எதுவும் இல்லாத ஒரு கருத்தினைக் கோவை

ஞானி இங்கே முன் மொழிந்து இருக்கிறார்.

எனினும், ஞானியிசத்தைப் புரிந்து கொண்டு இருப்பவர்களுக்கு இதில் அதிர்ச்சி அடைவதற்கு எதுவும் இல்லை. ஏனென்றால், இருப்பதை இல்லாததாகவும்

இல்லாததை இருப்பதாகவும் காட்டிக் கொள்வதுதானே, ஞானியிசம்!

கார்ல் மார்க்சைக் கொஞ்சம் நாம் அணுகிப் பார்ப்போம்.

கார்ல் மார்க்ஸ் கூறியது என்ன ? (1)

குடிசையில் மட்டும்தான் குந்தி இருந்திட வேண்டும்; நல்ல ஒரு சட்டையை எந்த ஒரு நேரத்திலும் அணிந்து விடக் கூடாது; எக் காரணத்தைக் கொண்டும் தன்னுடைய மகன் மருத்துவன் ஆகி விடக் கூடாது; என்பதில் எல்லாம் மிகவும் எச்சரிக்கையாக இருப்பவன்தான் ஒரு மார்க்சிய வாதியாக இருந்திட முடியும் என்று கூறுகின்ற

கோவை ஞானி, தன்னை இழந்து ஒரு கதைஞன் எழுதுகின்ற கதைதான் சாகா வரம் பெற்ற ஒரு கதையாக நிலைத்திட முடியும் என்றும் கூறி, மார்க்சிய வாதிகளையும் கதைஞர்களையும் மிரட்டுவது எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்! அவரது நல்

எண்ணத்தின் வெளிப்பாடுதான் இது என்பதும் மறு புறம் இருக்கட்டும்!

இதற்காக, தமது பட்டியலில் கார்ல் மார்க்சையும் இவர் சேர்த்துக் கொள்வதுதான்

கொடுமையினும் கொடுமை!

‘முதல் ‘ என்னும் நூலை எழுதுவதற்கு முன்னர் கார்ல் மார்க்ஸ் எழுதி இருந்த ஒரு நூல், ‘அரசியல்-பொருளாதாரத்தின் திறனாய்விற்கு ஒரு பங்களிப்பு ‘ என்னும் நூல்! இந்த நூலினை விட இதற்கு அவர் எழுதி இருக்கின்ற முன்னுரைதான் சிறப்பு ஆனது என்பது எனது கருத்து—- ‘கைமாற்று மதிப்பு ‘ என்பதற்கும் ‘மதிப்பு ‘ என்பதற்கும் இடையே உள்ள வேறுபாடுகளை இந் நூலில் கொஞ்சம் அவர் குழப்பி இருக்கிறார் என்பதால்; வரலாற்றின் நிகழ்ப்பாடு பற்றிய தமது கருத்துகளை மிகவும் தெளிவாக இந் நூலின் முன்னுரையில் அவர் நிரல் படுத்தி இருக்கிறார் என்பதால்!

இந்த முன்னுரையின் இறுதியில் தாண்டேயின் கவிதை வரிகளைப் பின் வருமாறு அவர் மேற்கோள் காட்டுகிறார்:

நரகத்தின் வாசலில் போல அறிவியலின் வாசலிலும் ஒரு வேண்டுகோள் விடுக்கப் படுதல் வேண்டும்: ‘

‘அனைத்து அவ நம்பிக்கையும் இங்கே விலகி நிற்கட்டும்!

அனைத்துக் கோழைத் தனமும் இங்கே மடிந்து போகட்டும்! ‘ என்று!

இந்த நூலினை வெளியிட்டு இருக்கின்ற மாஸ்கோ பதிப்பகத்தினர், இந்த நூலின்

அறிமுகமாகப் பின்னர் சேர்த்திடும் பொருட்டுக் கார்ல் மார்க்ஸ் எழுதி இருந்த சில

குறிப்புகளையும் இதனுடன் இணைத்து இருக்கிறார்கள்.

இந்த இணைப்பின் இடையில், ‘உற்பத்தி ‘ என்னும் துணைத் தலைப்பின் கீழ், ‘இந்த இடத்தில் குறிப்பிடப் பட வேண்டியவை பற்றிய குறிப்புகள் ‘, ‘மறந்து விடக் கூடாது ‘ என்று எழுதி, எட்டுக் குறிப்புகளைக் கார்ல் மார்க்ஸ் எழுதி வைத்து இருக்கிறார்.

விரிவாகப் பின்னர் எழுதப் பட வேண்டிய அவரது கருத்துகள் பற்றிய குறிப்புகள் இவை! எங்கோ இருந்து கோவை ஞானி பொறுக்கி எடுத்து இருக்கின்ற இந்த வாசகத்தை அதன் மூலத்தில் இருந்து நாம் மொழி பெயர்த்துக் கொள்ளலாம்:

கார்ல் மார்க்ஸ் (1)

‘8. இயற்கையாகத் தீர்மானிக்கப் பட்ட நிகழ்வரங்கள்தாம் (factors) தொடக்கப் புள்ளி; அகமை வயம் மற்றும் புறமை வயம் ஆகியவை! குலங்கள், பந்தவங்கள் (races),

முதலியவை!

கலையைப் பொறுத்த வரை, அதன் ஒரு சில உச்சங்கள், சமுதாயத்தின் பொதுப் படையான வளர்ச்சியுடன் எந்த வகையிலும் பொருந்தி வருபவை அல்ல; எனவே, அதன் பருமையான உட்கட்டுமானத்திற்கும், அதாவது, சமுதாய அமைப்பின் சட்டகத்திற்கும் (skeleton) பொருந்தி வருபவை அல்ல!

எடுத்துக் காட்டாக, ஷேக்ஸ்பியர் உடனோ, புதினத் (தேசங்கள்) உடனோ

:க்ரீக்கர்களை ஒப்பிடுகையில்!

கலை உற்பத்தி என்று சொல்லக் கூடிய வற்றின் தொடக்கத்திற்குப் பின்னர்,

கலையின் சில கிளைகள், குறிப்பாக, எழுதப் படாத காவியங்கள், அவற்றின்

யுகக் கட்டமான செவ்வை வடிவத்தில் மீண்டும் உருவாக்கப் பட முடியாது என்பது ஏற்றுக் கொள்ளப் பட்டு இருக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவது என்றால், கலை வளர்ச்சியின் முந்திய கட்டங்களில் மட்டும்தான் கலைப் பரப்பிற்குள் அடங்கிய

முக்கியமான படைப்புகள் அனைத்தும் இயல்வது ஆகும்.

கலை உலகத்திற்கு உள்ளேயே, கலையின் வேறு பட்ட கிளைகளைப் பொறுத்த வரை, இதுதான் நிலைமை என்றால், கலை உலகம் முழுவதன் நிலையும் சமுதாயத்தின்

பொதுப் படையான வளர்ச்சியுடன் உள்ள அதன் உறவும், இத் தகையனவாகத்தான் இருந்திட வேண்டும் என்பது குறிப்பிடத் தக்கதாக இல்லையா ? (இங்கே, Is it not so remarkable… ? என்பது It is not so remarkable… . என்று பிழையாக அச்சிடப் பட்டு இருக்கிறது—-சோதிப் பிரகாசம்.)

இந்த முரண்பாடுகளின் பொதுப் படையான வடிவாக்கத்தைப் (புரிந்து கொள்வதுதான்) கடினம்! குறிப்பிட்ட கேள்விகளாக இவற்றைச் சுருக்கிக் கொண்டால் போதும்,

எளிதாக அவற்றை விளக்கி விடலாம். :க்ரீக் கலைக்கும் இந்தக் காலத்திற்கும், ஷேக்ஸ்பியருக்கும் இந்தக் காலத்திற்கும், இடையே உள்ள உறவினை நாம் எடுத்துக் கொள்வோம்.

:க்ரீக் கலையின் படைக் கலன் மட்டும் அல்ல, அதன் அடிப்படையே கூட :க்ரீக் மாயக் கதைகள்தாம் என்பது நமக்குத் தெரியும். தானியங்கி நூற்புக் கருவிகளும் தொடர் வண்டி… எந்திரங்களும் மின்சாரத் தந்திகளும் வந்து இருக்கின்ற இந்தக் காலத்தில், :க்ரீக் கற்பனையினுள் ஊடாடி நிற்கின்ற கருத்தமைவு—-இயற்கை மற்றும் சமுதாய உறவுகளைப் பற்றிய கருத்தமைவு—-எனவே, :க்ரீக் [கலை]—-இயலக் கூடியதுதானா ?

கற்பனையிலும் கற்பனையின் மூலமாகவும் இயற்கைத் திறல்களை அடக்கிக் கட்டுப் படுத்தி வடிவமைப்பவைதாம் மாயக் கதைகள்; எனவே, இந்தத் திறல்களைக் கட்டுப் படுத்துகின்ற மெய்மையான ஆதாரங்கள் நிலைநிறுத்தப் பட்ட உடன் அவை மறைந்து போய் விடுகின்றன… :க்ரீக் மாயக் கதைகள் இல்லாமல் :க்ரீக் கலை இல்லை… ‘

(அரசியல் பொருளாதாரத்தின் திறனாய்விற்கு ஒரு பங்களிப்பு, மாஸ்கோ ஆங்கிலப்

பதிப்பு (1969), பக்.215-16.)

கார்ல் மார்க்சின் குறிப்புகள் இவை; அதாவது, விரிவாகப் பின்னர் எழுதுவதற்காக முன்னர் அவர் குறித்து வைத்து இருந்த வெறும் குறிப்புகள் இவை; இவற்றின் உள்ளடக்கங்களைப் பின்னர் விளக்கிக் கொள்ளலாம் என்னும் வகையில் அமைந்து இருந்த குறிப்புகள் மட்டும்தாம் இவை!

வினயமான எழுத்தாளர்கள் பலரும் இம் மாதிரியான குறிப்புகளை எழுதி வைப்பது உண்டுதான் என்ற போதிலும், மார்க்சின் கருத்துகளைப் புரிந்து கொள்வதற்கு இந்தக் குறிப்புகளே போதும் ஆனவை என்பதுதான் இங்கே நமக்கு முக்கியம். மற்ற படி,

மார்க்ஸ் சொல்லி விட்டார் என்பதற்காக எல்லா வற்றையும் ஒரு மார்சிய வாதி ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என்கின்ற ஸ்தாலினிச மூடம் எதுவும் நமக்குத் தேவை இல்லை. வேண்டும் என்றால், இடை வெளிகளை நிரவல் செய்து மார்க்சியத்தை நாம் வளப் படுத்திக் கொள்ளலாம், அவ் அளவுதான்!

மார்க்சின் கருத்து

‘ஜெர்மன் கோட்பாடு ‘ என்னும் தமது நூலில், ‘உணர்மையின் வடிவங்கள் ‘ என்று ஒரு துணைத் தலைப்பினை எழுதி விட்டு, அது பற்றி எதுவும் எழுதாமல் கார்ல் மார்க்ஸ்

விட்டு விடுவார். ‘மனத்தின் விடுதலை ‘யில் விவரிக்கப் பட்டு இருக்கின்ற உணர்மை

நிலைகள் எல்லாம், இந்த விடுபாட்டினை நிரவல் செய்கின்ற ஒரு முயற்சிதான் ஆகும்.

இப் பொழுது, மார்க்சின் குறிப்புகளைக் கொஞ்சம் புரிந்து கொள்வதற்கு நாம் முயல்வோம்.

கன்னடம், தெலுங்கு, மலையாளம், முதலிய திரவிட மொழிகளின் கலைச் செல்வங்களைச் சங்கக் காலத்துத் தமிழ் இலக்கியங்களில்தாம் நாம் தேடியாக வேண்டும் என்பது போல, ஈரோப்பிய மொழிகளின் கலைச் செல்வங்களைக் :க்ரீக் கலைகளில்தாம் நாம் தேடியாக வேண்டும் என்பது அனைவரும் அறிந்தது.

அதாவது, ப்ளேட்டோவிலும் அரிஸ்ட்டாட்டிலிலும், இவர்களுக்கும் முந்திய :க்ரீக்

சிந்தனையாளர்களிலும், தங்கள் மெய்ப் பொருண்மைத் தடயங்களைத் தேடுவது

ஈரோப்பிய மெய்ப் பொருண்மை யாளர்களுக்கு இயல்பாக இருந்ததைப் போல,

ஈரோப்பியக் கலையின் தடயங்களை ஹோமர் மரபில் இருந்து தொடங்குவது

ஈரோப்பியக் கதை-கவிஞர்களுக்கும் இயல்பாக இருந்து கொண்டு வந்து இருந்தது.

இத் தகு தேடல்களில் ஈடு பட்டுக் கொண்டு வந்து இருக்கக் கூடிய ஒரு சிலர்,

:க்ரீக்கின் சமுதாய நிலவரங்களுக்கும் கலைகளுக்கும் இடையிலான உறவுகளைப் பற்றிக் கேள்விகளை எழுப்பிக் கொண்டு வந்து இருக்க வேண்டும் என்பதில் ஐயம் இல்லை.

நிச்சயமாக, கோவை ஞானியைப் போன்றவர்களாக இவர்கள் இருந்து இருக்க

முடியாது என்பதிலும் ஐயம் இல்லை.

ஹோமர் என்பவர் தனி ஒரு மனிதர் அல்லர்; மாறாக, ஹோமர் மரபின் கவிஞர்கள்; என்று பி. :டி. சீனிவாசனார் கூறுகிறார். இது போல, வியாசர் என்பவர் கூட தனி ஒரு மனிதர் அல்லர்; வியாசர் மரபு கவிஞர்கள்தாம் ஆவர்!

இன்னமும் இவர்களது காலங்கள் தீர்மானிக்கப் பட வில்லை என்பது இங்கே நமக்கு

முக்கியம் அல்ல! எனினும், அவரவர் கற்பனைகளுக்கு ஏற்ப ஒவ்வொரு காலத்தை இவர்களுக்கு என்று ஒவ்வொருவரும் தீர்மானப் படுத்திக் கொண்டு வந்து

இருக்கிறார்கள்; எனினும், இங்கே நமக்கு இதுவும் முக்கியம் அல்ல!

‘எழுதாக் கிளவி ‘ மரபு எதுவும் தமிழில் இருந்ததாக நமக்குத் தெரிய வில்லை என்ற

போதிலும், :க்ரீஸில் அப்படி ஒரு மரபு இருந்தது என்று மாக்ஸ் முல்லர் கூறுகிறார். முன்னர் எழுதப் படாமல் இருந்த வட இந்திய இலக்கியங்களை வியாச மரபினர் எழுத்தில் வடித்துக் கொண்டு வந்து இருந்ததைப் போல, :க்ரீஸின் எழுதப் படாத

இலக்கியங்களை எழுத்தில் வடித்துக் கொண்டு வந்து இருந்தனர் ஹோமர்

மரபினர்!

இப்படி, (1) எழுதாக் கிளவிக் காலம், (2) எழுத்துக் கிளவிக் காலம், என்று :க்ரீஸின் கலை-இலக்கிய மரபில் இரண்டு காலக் கட்டங்களை வகைப் படுத்திக் கொண்டு இருந்த :க்ரீக் இலக்கிய வரலாற்றாளர்களின் நடுவே, கலைகளின் செவ்வை வடிவம் பற்றிய ஒரு கேள்வி எழுந்தது, அல்லது எழுந்து இருக்க வேண்டும்; ‘கலையின் உச்சம் ‘ பற்றியும் அவர்கள் பேசிக் கொண்டு வந்து இருக்க வேண்டும்.

எனவேதான், கலையைப் பற்றிக் குறிப்பிட வேண்டிய அவசியம் கார்ல் மார்க்சுக்கு ஏற்பட்டு இருந்தது என்றால் அது பிழை ஆகாது. மற்ற படி, கலை-இலக்கிய

ஆய்வுகளில் வினயமாக அவர் ஈடு பட்டு இருந்ததாக நமக்குத் தெரிய வர வில்லை; ஈடு பட்டு இருந்ததும் இல்லை.

முன்னர் எழுதப் படாமல் இருந்து, பின்னர் எழுதப் பட்டு இருந்த :க்ரீக்

கதை-கவிதைகளில், கலையின் உச்சத்தினைக் கண்டு கொண்டு வந்து இருந்த

கலை-ஆர்வலர்கள் இடையே, அந்த உச்சத்தின் நிலவரங்கள் பற்றிய கேள்விகள் எழுந்தன.

எனவேதான், (1) கலை வளர்ச்சியின் முந்திய கட்டம், (2) கலை வளர்ச்சியின்

பிந்திய கட்டம், அதாவது, ‘கலை உற்பத்தி என்று சொல்லக் கூடிய வற்றின்

தொடக்கக் கட்டம் ‘, என்று இரண்டு கட்டங்களைக் கார்ல் மார்க்ஸ் வகுக்கிறார்.

(1) எழுதாக் கிளவிக் காலம், (2) எழுத்துக் கிளவிக் காலம் என்பவையும் இவைதாம் ஆகும்.

இவற்றுள், ‘கலையின் யுகக் கட்டமான செவ்வை வடிவத்தின் காலமாக ‘க் கருதப் பட்டு வந்து இருந்தது, எழுதாக் கிளவிக் காலம், அதாவது, ‘கலை வளர்ச்சியின் முந்திய

காலக் கட்டம் ‘தான் ஆகும்.

இந்த எழுதாக் கிளவிக் கலைகளின் செவ்வை வடிவத்தினது உச்சத்தினை, எழுத்துக்

கிளவிக் காலக் கட்டத்தின், அதாவது, கலை வளர்ச்சியின் பிந்திய காலக் கட்டத்தின்

நிலவரங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்திட முடியாது என்பதுதான் மார்க்சின் கருத்து.

இதைச் சொல்வதற்கு இவ்வளவு தூரம் கார்ல் மார்க்ஸ் சுற்றி வளைத்து இருக்க வேண்டாம் என்று இங்கே நமக்குத் தோன்றிடலாம் என்ற போதிலும், அவர் எழுதி இருந்ததோ வெறும் குறிப்புதான் ஆகும். இந்தக் குறிப்பை வைத்துக் கொண்டு குட்டையைக் குழப்பி விடுவதற்கு நினைத்து இருந்த மேற்கோள் பொறுக்கிகளால் ஏற்பட்டு இருந்ததுதான் இந்தக் குழப்பமும் ஆகும்.

இயற்கைத் திறல்களைக் கட்டுப் படுத்திடத் தக்க தொழில் நுட்பங்கள் வளர்ந்திடாத ஒரு நிலையில், அவற்றைக் கட்டுப் படுத்தி விடுகின்ற கற்பனைகளின்—-கனவுகளின்—-ஆசைகளின்—-விளைவான புனைவுகள்தாம் மாயக் கதைகள்! இந்த மாயக் கதைகள் இல்லாமல், :க்ரீக் கலைகள் இல்லை! இந்த மாயக் கதைகளின் புனைவிற்குக்

காரணமான அறியாமை களையப் பட்டு, தொழில் நுட்பங்கள் கண்டு பிடிக்கப் பட்ட உடன், இந்த மாயக் கதைகளும் மறைந்து விடுகின்றன. இதுதான் மார்க்சின் கருத்து.

ஆக, கலையின் உச்சமாக நாம் கருதுகின்ற முந்திய கலைகளை—-செவ்வைக்

கலையாக அவை ஏற்றுக் கொள்ளப் பட்டு இருக்கின்ற பிந்திய காலத்துடன்—ஒப்பிட்டு நாம் பார்த்திட முடியாது என்பதுதான் கார்ல் மார்க்சின் கருத்து என்பது தெளிவு.

எனவேதான், :க்ரீக் கலைக்கும் இந்தக் காலத்திற்கும்—-ஷேக்ஸ்பியருக்கும் இந்தக்

காலத்திற்கும்—-இடையே உள்ள உறவினை ஓர் எடுத்துக் காட்டாக அவர்

கொள்கிறார்; கலை வளர்ச்சியின் முந்திய கட்டங்களில் மட்டும்தான் கலையின் உச்சம் பற்றி நாம் பேசிட முடியும் என்றும் அவர் கருதுகிறார்.

ஆக, மார்க்சியத்தை வீழ்த்திடத் தக்க மேற்கோள்களை மார்க்சிடம் இருந்தே பொறுக்கி எடுத்து, நமக்குத் தந்து இருப்பவராகத் தம்மைக் காட்டிக் கொள்வதற்கு முயன்று இருக்கின்ற கோவை ஞானியின் நாடகத்தில், நடிப்பும் நளினமும் இருந்த போதிலும், உண்மை மட்டும்தான் இல்லை என்பது தெளிவு.

கார்ல் மார்க்ஸ் கூறியது என்ன ? (2)

முதலாண்மைப் பொருளாதாரத்தைப் பொறுத்த வரை, முதலாளிகள்தாம்

‘உற்பத்தியாளர்கள் ‘; உழைப்பாளர்கள் அல்லர்! அதாவது, உழைப்பாளர்களைக் கூலிக்கு அமர்த்தி உற்பத்தியில் ஈடு பட்டு ஆதாயத்தை அடைந்து கொள்பவர்கள்

முதலாளிகள்தாம் என்பதால், அவர்கள் மட்டும்தாம் உற்பத்தியாளர்களாக இங்கே கருதப் பட்டு வருகிறார்கள்!

எனவே, முதலாளிகளின் ஆதாயத்திற்காக உழைப்பாளர்கள் உழைக்கின்ற உழைப்பு மட்டும்தான், ‘உற்பத்தி உழைப்பாக ‘ முதலாண்மையில் கருதப் பட்டு வருகிறது. சரக்குகளை விற்கின்ற ஒரு விற்பனையாளரின் உழைப்பு கூட இங்கே உற்பத்தி உழைப்பு அல்ல.

இது போல, ஒரு வழக்கறிஞரின் உழைப்போ அல்லது மருத்துவரின் உழைப்போ, உற்பத்தி உழைப்பு அல்ல. ஆனால், இவர்களைக் கூலிக்கு அமர்த்தி ஒரு மருத்துவ முதலாளியோ அல்லது வழக்குத் தொழில் முதலாளியோ ஆதாயத்தை அடைந்து

கொள்ளுகின்ற பொழுது, இவர்களின் உழைப்பு ‘உற்பத்தி உழைப்பு ‘ ஆகிறது.

இப்படி, ‘உற்பத்தி உழைப்பிற் ‘கும் ‘உற்பத்தி இல்லா உழைப்பிற் ‘கும் இடையே உள்ள வேறுபாட்டினைச் சுட்டிக் காட்டுகின்ற வகையில்தான், மில்ட்டனையும் பிற

எழுத்தாளர்களையும் கார்ல் மார்க்ஸ் ஒப்பிட்டுக் காட்டுகிறார்.

ஒரு பத்தரிகையாளனுக்கு அந்தப் பத்தரிகையின் முதலாளி கூலி கொடுக்கிறார்; அந்தக் கூலிக்காக உழைக்கின்ற அந்தப் பத்தரிகையாளனின் உழைப்பில் இருந்து

ஆதாயத்தையும் அவர் பெற்றுக் கொள்கிறார். அதாவது, தமது ‘உழைப்பு ஆற்றலை ‘ப்

பத்தரிகையாளர் விற்கிறார் என்றால், அவரது முதலாளியோ பத்தரிகையை விற்கிறார்.

எழுத்தைத் தொழிலாகக் கொண்டு இருக்கின்ற எழுத்துத் தொழிலாளர்களைப் பொறுத்த வரை, அவர்கள் ‘உழைப்பாளர் ‘களும் அல்லர்; ‘முதலாளர் ‘களும் அல்லர்; மாறாக,

‘தொழில் ஆளர்கள் ‘! தங்கள் உழைப்பினை அவர்கள் விற்பது இல்லை, மாறாக, தங்கள்

உழைப்பின் விளைவினை விற்கிறார்கள். இவர்களுக்குக் கிடைப்பது ஆதாயமும் இல்லை; கூலியும் இல்லை; இரண்டும் இல்லாத ஒரு வருவாய்! எனவே, முதலாண்மைப்

பொருளாதாரத்தைப் பொறுத்த வரை, இவர்களது உழைப்பு ‘உற்பத்தி இல்லா உழைப்பு ‘!

இதனைச் சுட்டிக் காட்டுகின்ற வகையில்தான், மில்ட்டனைப் பற்றிக் கார்ல் மார்க்ஸ் பேசுகிறார். மற்ற படி, கலையைப் பற்றிய தனித்த கணிப்பு எதுவும் அவரிடம் இல்லை.

இனி, கார்ல் மார்க்சின் கூற்றினை அவர் வாயிலாகவே நாம் கேட்போம்.

கார்ல் மார்க்ஸ் (2)

‘ ‘ஒரே வகையான ‘ உழைப்பு கூட, ‘உற்பத்தி உழைப்பாகவோ ‘ அல்லது ‘உற்பத்தி இல்லா உழைப்பாகவோ ‘ இருக்கலாம்.

எடுத்துக் காட்டாக, ஐந்து பவுன் பணத்திற்காக ‘உம்பரின் இழப்பினை ‘ எழுதிய

மில்ட்டன், ‘உற்பத்தியற்ற ஓர் உழைப்பாளர் ‘தாம் ஆவார். ஆனால், தொழிற் சாலைப்

பாணியில், தமது வெளியீட்டாளருக்காக எழுத்துச் சரக்கினை உற்பத்தி செய்து

கொடுக்கின்ற எழுத்தாளரோ, ஓர் ‘உற்பத்தி உழைப்பாளர் ‘ ஆகிறார்.

என்ன காரணத்திற்காகப் ‘பட்டினை ‘ ஒரு பட்டுப் புழு உற்பத்தி செய்கிறதோ, அதே

காரணத்திற்காகத்தான் ‘உம்பரின் இழப்பினை ‘ மில்ட்டன் உற்பத்தித்தார். ‘அவரது ‘ இயல்பின் ஒரு நடவடிக்கை அது. அதன் பின்னர், ஐந்து பவுன் பணத்திற்கு அதனை அவர் விற்றார்.

ஆனால், தமது வெளியீட்டாளரின் கட்டளைக்கு ஏற்பப் புத்தகங்களைப் புனைகின்ற…. இலக்கியப் பாட்டாளியோ, ஓர் உற்பத்தி உழைப்பாளர் ஆகிறார். ஏனென்றால்,

தொடக்கத்தில் இருந்தே முதலின் இயக்கத்திற்கு அவரது உற்பத்தி உட் பட்டு

விடுகிறது; முதலினைப் பெருக்கிக் கொள்வதற்காக மட்டும்தான் உற்பத்திக்கவும்

படுகிறது.

தனக்காகத் தனது பாட்டை விற்கின்ற ஒரு பாடகர், உற்பத்தியற்ற உழைப்பாளர்!

ஆனால், ஒரு முதலாளிக்காகப் பாடுகின்ற—-அவருக்குப் பணம் பண்ணிக் கொடுக்கின்ற —-ஒரு பாடகரோ ஓர் உற்பத்தி உழைப்பாளர்! ஏனென்றால், முதலினை அவர் உற்பத்தி செய்கிறார். ‘ (மிகை-மதிப்பின் தேற்றங்கள், பாகம் ஒன்று, மாஸ்கோ ஆங்கிலப் பதிப்பு (1969), பக்.401.)

ஞானியிசம்

மிகவும் தெள்ளத் தெளிவாக நமக்கு விளங்கி விடுகின்ற இந்த மார்க்சின் கருத்துக்கு

விளக்கம் எதுவும் இங்கே தேவை இல்லை.

ஆனால், கதை-கவிதைகள் பற்றிய தமது மாய்மைகளை மார்க்சின் மண்டைக்குள்

திணித்து, அதன் மூலம், நமது மண்டைகளை உருட்டி விட்டு விடலாம் என்று

கோவை ஞானி கருதிக் கொண்டு வந்து இருப்பது தெள்ளத் தெளிவாக இங்கே

நமக்குப் புரிந்து போய் விடுகிறது.

எனினும், ஞானியிசம் என்பதும் இதுதானே!

‘அயன்மைப்பாடு ‘ என்பதை அணுவளவும் புரிந்து கொள்ளாமல், ‘அந்நியமாதல் ‘ எழுதிய எஸ். வி. இராஜ துரை மட்டும் இன்றி, மார்க்சியத்தினுள் ‘ஆணியத்தை ‘யும்

‘பெண்ணியத்தை ‘யும் கண்டு பிடித்து இருப்பவராகக் கோவை ஞானி குறிப்பிடுகின்ற எஸ். என். நாகராஜன் கூட, ஞானியிசத்தின் பாற் பட்டவர்தாம் ஆவார். எனினும், இத்துடன் இது நிற்க!

இனி, ஜெய மோகனுக்கு நாம் திரும்புவோம்.

07-08-2004

தொடரும்

Series Navigation

சோதிப் பிரகாசம்

சோதிப் பிரகாசம்