மெக்காவில் துருக்கிய கோட்டை இடிக்கப்பட்டதற்கு துருக்கிய அரசு பலத்த கண்டனம் தெரிவித்திருக்கிறது.

This entry is part [part not set] of 19 in the series 20020113_Issue

பிபிஸி


சென்ற வாரம் சவூதி அரேபிய அரசாங்கம், மெக்கா நகரத்தின் மீது இருந்த பழம்பெரும் கோட்டை ஒன்றை இடித்துத் தள்ளினார்கள். அந்த இடத்தில் வீடுகள் கட்டப்போவதாக அறிவித்தார்கள்.

இந்த பழம்பெரும் கோட்டை மெக்காவின் பெரிய மசூதியை காவல் காப்பது போல மலை மீது அமைக்கப்பட்டிருந்தது. இது இந்த மக்கா நகரத்தைப்பாதுகாக்கவும், வெளியிலிருந்து வரும் ஆக்கிரமிப்பாளர்களைத் தடுக்கவும் 1780இல் துருக்கிய ஒட்டோமான் அரசர்களால் கட்டப்பட்டது.

ஒட்டோமான் துருக்கிய அரசர்கள் அரேபிய தீபகற்பத்திலிருந்து, வட ஆப்பிரிக்காவிலிருந்து பால்கன் பிரதேசங்கள் வரை பெரிய முடியரசை 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை ஆண்டு வந்தார்கள். 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், அரேபியர்களாலும், அவர்களுக்குத் துணை வந்த ஆங்கிலேயர்களாலும் மேற்கத்திய அரசாங்கங்களாலும் துருக்கிய அரசு உடைக்கப்பட்டது. இஸ்லாமிய அரசரான கலிபா தோற்றதும், நவீன துருக்கி அரசு முஸ்தபா கமால் அதாதுர்க் அவர்களால் மதச்சார்பற்ற அரசாக அமைக்கப்பட்டது. ஒட்டோமான் பேரரசின் கலாச்சார சின்னங்கள் எல்லோராலும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று துருக்கிய அரசு வலியுறுத்தி வந்திருக்கிறது. ஆனால், சவுதி அரேபியர்கள் இந்தக் கோட்டையை துருக்கியர்கள் அரேபியாவை ஒரு காலத்தில் ஆண்டதன் வருந்தத்தக்க நினைவாக பார்க்கிறார்கள் என்று துருக்கியர்கள் சந்தேகப்படுகிறார்கள்.

மெக்காவிற்கு அருகில் இருந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கோட்டையை உடைத்ததற்காக, சவூதி அரேபியா ‘கலாச்சாரப் படுகொலை ‘ செய்வதாகத் துருக்கி குற்றம் சாட்டி இருக்கிறது.

அங்காரா (துருக்கிய தலைநகர்) யுனெஸ்கோவிடம் முறையிடப்போவதாக தெரிவித்திருக்கிறது. இந்த யுனெஸ்கோவே கலாச்சார சின்னங்களை பாதுகாக்கும் பொறுப்பில் உள்ள ஐக்கியநாடுகள் நிறுவனம்

‘இது மனிதகுலத்துக்கு எதிரான குற்றம். கலாச்சார படுகொலை ‘ என்று துருக்கிய கலாச்சார அமைச்சர் இஸ்டெமிஹான் டாலய் கூறுகிறார்.

துருக்கி சவூதி அரேபியாவின் செயலை தாலிபான் அரசாங்கம் பாமியான் புத்தச்சிலைகளை உடைத்ததற்குச் சமானமாக துருக்கி அரசு பார்க்கிறது. சவூதி அரசாங்கத்தினர், இந்த அல்-அஜ்யாத் கோட்டையை உடைத்து அங்கு பலமடிக் குடியிருப்புகள் கட்டப்போவதாகவும், பெருகி வரும் முஸ்லீம் யாத்ரீகர்களுக்கு தங்குவதற்கு இடம் தேவை என்றும் கூறியிருக்கிறது.

மேற்கத்திய அரசாங்கங்களுக்கு ஆதரவாக இருக்கும் இரண்டு முஸ்லீம் நாடுகளின் இடையே இருந்த நல்லுறவை இது பலவீனப்படுத்திக்கொண்டிருக்கிறது என்று பலர் கருதுகிறார்கள்.

மெக்காவின் பெரும் மசூதியைப் பார்த்தவண்ணம் , மலை மீது எழுப்பப்பட்ட இந்தக் கோட்டை முஸ்லீம் புனித இடங்களைப் பாதுகாக்கவும், படையெடுத்து வருவோரைக் கண்காணிக்கவும் 1780-ல் கட்டப் பட்டது.

சவூதி அதிகாரிகள் இந்தக்கோட்டை உடைப்பை இன்னும் ஊர்ஜிதப்படுத்தவில்லை.

சென்றவருடம் அரேபிய அரசாங்கம் இந்தக்கோட்டையை உடைக்கப்போவதில்லை என்று உறுதிமொழி கொடுத்ததாக துருக்கிய அரசாங்கம் கூறுகிறது.

இந்தக்கோட்டை உடைப்பு துருக்கியில் உள்ள பலரை கோபப்படுத்தியிருக்கிறது.

‘ஒட்டோமான் பேரரசின் கலாச்சார சின்னங்களை அழிப்பதே தலையாய வேலையாக இந்த சவூதி குடும்பத்தினர் கொண்டுள்ளது போலத் தோன்றுகிறது ‘ என்று இஸ்லாமிய கட்சியான க்ரேட் யூனிட்டி கட்சித்தலைவர் ஓர்ஹான் அர்ஸலான் கூறுகிறார்.

ஹரியத் என்ற பத்திரிக்கையின் தலையங்கம் ‘அரசர் ஃபாட் துருக்கிய காலடிச்சுவடுகளை அழிக்கிறார் ‘ என்று எழுதியிருக்கிறது.

‘எல்லா நாடுகளிலும் இருக்கும் கலாச்சார பாரம்பரியச் சின்னங்கள் எல்லோருடைய பொதுச்சொத்து ஆகும் – அவை எங்கிருந்து வந்தாலும் , எந்தக் காலத்தியதாக இருந்தாலும் ‘ என்று துருக்கிய கலாச்சார அமைச்சர் கூறுகிறார்.

Series Navigation

பிபிஸி

பிபிஸி