சின்னக்கருப்பன்
மூப்பனார் ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். நான் முன்பே சொல்லிவருவதுதான் இது. போபர்ஸ் ஊழலை ஆத்மார்த்த தலைவியாக ஏற்றிருக்கும் மூப்பனாருக்கு வேட்டி சட்டை ஊழலில் என்ன பெரிய குறை இருக்க முடியும் ? ஐக்கிய கூட்டணி ஆதரவுக்கு பதிலாக ஆயிரக்கணக்கான சொத்துள்ள அரசாங்க நிறுவனங்களில் அடாவடித்தனமாக ஆயுள்தலைவியாக தன்னைத்தானே நியமித்துக் கொண்ட சோனியா ஆணையிட்டு தஞ்சாவூர் ஜமீன்தார் மூப்பனார் ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
ஜெயலலிதாவின் கலாச்சாரப் படையால் அடிக்கப்பட்ட ப சிதம்பரம் மெளனம் காக்கிறார். சிலர் தமாகவிலிருந்து விலகியிருக்கிறார்கள்.
மூப்பனார் ஒரு முறை திராவிடக் கட்சிகளின் முதுகில் காங்கிரஸ் சவாரி செய்யாமல் தனியாக கட்சி நடத்தினால் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக காங்கிரஸ் வளரும் என்று ராஜீவ் காந்தி காலத்தில் பேசி இடைத்தேர்தலில் டெப்பாஸிட் போனவுடன் மீண்டும் திராவிடக் கட்சிகளிடம் தஞ்சம் புகுந்தவர்.
திராவிடக் கட்சி என்று திமுக மட்டுமே தமிழ்நாட்டில் இருக்கிறது. அதிமுக, மதிமுக போன்ற கட்சிகள் பெயரளவில் மட்டுமே திராவிடக் கட்சிகள். அதை திராவிடக் கட்சி என்று சொல்வது மனசாட்சிக்கு விரோதம். ஆனாலும் திமுகவின் மீது உள்ள பகையாலும், கருணாநிதி மீது எம்ஜியாரால் உருவாக்கப்பட்ட விரோதம் காரணமாகவும் திமுகவிலிருந்து விலகியவர்களால் மக்களை ஏமாற்ற உருவாக்கப்படும் ஆனா ஆவண்ணா கட்சிகள்தான் இவை.
எனவே காங்கிரஸ் தொடர்ந்து அதிமுகவிடம் தஞ்சம் அடைவது ஆச்சரியமானதல்ல. நடுவில் மூப்பனார் கருணாநிதியிடம் சேர்ந்தால் பயனடைந்தவர் மூப்பனாரே அன்றி கருணாநிதி அல்ல. அது ஒரு பிரழ்வு மட்டுமே. அதுவும் எதிர்ப்பதற்கு நரஸிம்மராவ் இருந்ததால் நடந்தது. அதுவே அப்போது ராஜீவ் காந்தி இருந்திருந்தால் நடந்திருக்காது. இப்போது சோனியா தீவிர அரசியலுக்கு வந்ததும் மீண்டும் ராஜவிசுவாசம் மூப்பனாரை அழைக்கிறது. அவ்வளவுதான்.
இந்த ராஜவிசுவாசக் கூத்து எல்லாம் பார்த்துவிட்டு, இந்திய ஜனநாயகத்திலும், இந்திய மக்களிடமும் நம்பிக்கை இழக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்திய மக்களும் இந்திய அரசியல்வாதிகளும் ஜனநாயகத்தை நோக்கிய ஒரு நீண்ட பாதையில் செல்கிறார்கள். 200 வருடங்கள் ஜனநாயகப் பாதையில் இருக்கும் அமெரிக்க மக்களுடன் சற்றே 50 வருடங்கள் ஜனநாயகத்தில் வாழும் இந்திய மக்களை ஒப்பிடுதல் அதுவும் காங்கிரஸ் ஆட்சியாளர்களால் படிப்பறிவு மறுக்கப்பட்ட, இந்திரா காந்தியால் ஜனநாயக அமைப்புகள் அழிக்கப்பட்ட இந்திய மக்களை ஒப்பிடுதல் பொருத்தமில்லாததுதான். இருந்தாலும் இந்திய மக்கள் ஜனநாயகத்தை முடிந்த அளவு சரியான முறையிலேயே பயன்படுத்தி வருகிறார்கள்.
***
இந்திய அரசியலமைப்புச்சட்டத்தை பாஜக அரசும் , வாஜ்பாயியும் புனருத்தாரணம் செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். வரவேற்கத்தக்க செய்தி.
இதன் தேவை ஆயிரக்கணக்கான காரணங்கள் இருந்தாலும் நான் ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன். உத்தரபிரதேசத்தில் கடந்த இரண்டு முறைகளாக தொங்கு நாடாளுமன்றம் அமைந்திருக்கிறது. பாஜகவும், மாயாவதி கட்சியான பகுஜன் கட்சியும், முலயாம்சிங் கட்சியும் மூன்றில் ஒரு பாகத்தை வென்றிருக்கின்றன, ஒரு கட்சியும் இன்னொரு கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்ய மறுத்ததன் காரணமாக மக்களாட்சியே நடக்காமல் தேர்தல் நடந்து ஆறுமாதத்துக்கு மேல் கவர்னர் ஆட்சி நடந்தது.
பின்னர் பாஜகவும் மாயாவதி கட்சியும் ஒவ்வாத கூட்டணி அமைத்து ஆறுமாதம் மாயாவதி ஆட்சி செய்தபின்னர் பாஜகவுக்கு ஆதரவு கொடுப்பதாக இருந்ததை மறுதலித்து அரசியலமைப்புச் சட்டமே கேலிக்குள்ளாகியது.
மத்தியிலும் இது போன்ற பல கூத்துகள் நடைபெற இந்த அரசியலமைப்புச் சட்டம் இடங்கொடுத்தது. இது அரசியலமைப்பு சட்டம் எழுதியவர்களை குறை சொல்வதாகாது. அவர்கள் காங்கிரஸ் தவிர ஒரு கட்சி மத்தியில் ஆட்சி செய்யும் என்பதையும், மாநிலக் கட்சிகள் பலம் பொருந்தியதாக ஆகும் என்பதையும், காங்கிரஸ் நேரு குடும்பச் சொத்தாகும் என்பதையும் யூகிக்க முடியாமல் போனது அவர்கள் தவறல்ல. சுதந்திரம் வாங்கும்போது இருந்த சூழ்நிலை அப்படி.
நிரந்தரமான சட்டங்கள் என்று ஒன்றும் இல்லை. இந்தியாவின் பழமையான சட்டமான மனு நீதி சாஸ்திரம் இறுதிப் பகுதியில் எவ்வாறு மனுநீதி சாஸ்திரம் மாறலாம் என்று குறிப்பிடுகிறது. வேதங்கள் நன்கு படித்த முதிர்ந்தவர்கள் 10 பேருக்குமேல் சேர்ந்து மனு தர்மத்தில் குறிப்பிட்ட ஒன்றையோ குறிப்பிடாத ஒன்றையோ குறித்து ஒரு புது சட்டம் இயற்றலாம் என்று கூறுகிறது.
இந்தியாவில் 540க்கு மேற்பட்ட பிரதிநிதிகள் இணைந்து சட்டங்கள் இயற்றவும், அவற்றை அமல் படுத்தவும் மத்தியிலும் மாநிலங்களிலும் குவிந்திருக்கிறார்கள். (அந்த பிரதிநிதிகள் நன்கு படித்த முதிர்ந்தவர்களா என்று பார்த்து தேர்ந்தெடுப்பதே மக்களின் வேலை). அவர்கள் அதை செய்யக்கூடாது என்று காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்கள் முனைந்திருக்கிறார்கள்.
பாஜக, புதிய அரசியலமைப்புச் சட்டத்தை தனக்குச் சாதகமானதாக உருவாக்கிக் கொள்ளும் என்பதே இவர்களது பயம். நியாயமானதே. ஆனால் அப்படி ஒரு வரி இருந்தாலும் அந்தச் சட்டம் பாராளுமன்றத்தை தாண்டாது என்பதே எனது எதிர்பார்ப்பு. நியாயமான தேவையான மாற்றங்களை செய்வதை தடுக்கக் கூடாது.
***
அமெரிக்க ஜனாதிபதி, இந்தியாவுக்கு வரும்போது, பாகிஸ்தானுக்கும் போகவேண்டும் என்று விழைகிறார். ஆனால் அமெரிக்கர்களே சொல்வது போல, பாகிஸ்தான் அதற்கு உதவ மறுக்கிறது. ஹர்கத்-உல்-அன்ஸார் என்ற தீவிரவாத அமைப்பை தடை செய்ய வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். பாகிஸ்தான் ஜெனரல் மறுத்துவிட்டார்.
இந்த அமைப்புத்தான் விமானக் கடத்தல் செய்தது என்பதும் இந்த அமைப்பு பாகிஸ்தானிய உளவுஸ்தாபனத்தின் உருவாக்கம் என்பதும் எல்லோரும் ஒத்துக் கொள்ளும் விஷயம். இருந்தாலும் பாகிஸ்தான் உனக்கும் பெப்பே, உங்க அப்பனுக்கும் பெப்பே என்று சிரிக்கிறது.
இதற்கு நடுவில் பாகிஸ்தான் ஜெனரல் சீனாவுக்கு சென்று ஒத்துழைப்பை உறுதி செய்து கொண்டு வந்து விட்டார். மேற்கு சீனாவில் இருக்கும் உகைர் மாநிலத்தில் சமீபத்தில் ஒரு பாகிஸ்தானியரை தூக்கில் இட்டார்கள். காரணம் அவர் அங்கிருக்கும் முஸ்லீம் மக்களை தூண்டி தனிநாடு கேட்டு போராட்டம் செய்ய தூண்டினார் என்பதுதான்.
இருந்தும் சீனா பாகிஸ்தானை ஆதரிப்பதன் காரணம் இந்தியாவை அடக்கி வைக்க பாகிஸ்தான் தேவை என்று சீனாவும் மற்ற பல நாடுகளும் நினைப்பதுதான்.
***
திண்ணை
|