மூப்பனார் வழியில் இளங்கோவன் ?

This entry is part [part not set] of 28 in the series 20050729_Issue

அக்னிப்புத்திரன்


சரியாக செயல்படாத தமிழக அமைச்சர்களை மந்திரிசபையில் இருந்து நீக்க பிரதமர் மன்மோகன்சிங் முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் அந்தப் பட்டியலில் மத்திய அமைச்சர் இளங்கோவன் பெயரும் இருப்பதாகப் பரவலாகச் செய்தி கசிகின்ற இன்றைய சூழலில் திரு.இளங்கோவனின் நடவடிக்கைகள் அதை உறுதிப்படுத்தும் நிலையில் உள்ளன.

எதையாவது பேசி தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் திரு.இளங்கோவன் முன்பு திமுக தலைவரை வம்புக்கு இழுத்து வாங்கிக் கட்டிக் கொண்டார்.  அடுத்ததாக, தமிழுக்கு எதிராகப் பேசி பாமாகவை வம்புக்கு இழுத்து சர்ச்சைக்கு வித்திட்டார். தற்போது சேது சமுத்திரத்திட்டத்திற்கு எங்களைத் தவிர வேறு யாரும் உரிமை கொண்டாட முடியாது என்று கூறுகின்றார். இப்போது திமுக மற்றும் மதிமுகவை வஞ்சகமாகப் பேசி வீண்வம்புக்கு இழுக்க நினைக்கின்றார்.

மத்திய மந்திரிசபையில் மாற்றம் என்ற செய்தி வரும்போது எல்லாம் இளங்கோவன் இப்படிச் சர்ச்சைக்குரிய வகையில் ஏதாவது பேசுவது கவனிக்கத்தக்கது. இரவில் சர்ச்சைக்குரிய வகையில் பேச வேண்டியது பின்பு காலையில் தானே அதற்கு ஒரு புதிய வியாக்கியானம் தர வேண்டியது. இளங்கோவனின் இந்நிலை அண்மைய காலத்தில் ஒரு தொடர்கதையாகத் தொடர்கின்றது.

தமிழக காங்கிர ? கட்சி, தன்னையும், தமது ஆதரவாளர்களைத் தொடர்ந்து புறக்கணிப்பதாக கருதும் இளங்கோவன், மந்திரிசபையில் இருந்தும் நீக்கப்படும் ஒரு நிலை ஏற்பட்டால், தேர்தல் சமயத்தில், முன்பு 1996-ல் நடந்ததைப்போல, மூப்பனார் பாணியில் காங்கிர ? கட்சியிலிருந்து இருந்து விலகி புதிய அமைப்பு ஒன்றை நிறுவி அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் ஒரு திட்டத்தில் இருக்கின்றாரோ என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது.

அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிக்கத் துடிக்கும் இளங்கோவனின் எண்ணம் ஈடேறுமா அல்லது வெற்றியை அது பெற்றுத்தருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். சர்ச்சைக்குரிய காங்கிர ? சட்டமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி & கும்பலின் அண்மைய இரகசியக் கூட்டம் இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

அண்மையில் நடந்த இடைத்தேர்தலில் அதிமுகவின் மகத்தான வெற்றி இளங்கோவன் மனசை இளகச் செய்துவிட்டது. காங்கிர ? கட்சியில் தாம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டாலோ அல்லது மந்திரி பதவி பறிக்கப்பட்டாலோ திரு. இளங்கோவன்

அதிரடி அரசியலில் ஈடுபட வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டார் என்றே தோன்றுகின்றது. இவர்களின் கூட்டணியில் விடுதலைச்சிறுத்தை அமைப்பை சேர்ந்த திருமாவளவனும் இடம் பெறுவார் என்று தெரிகின்றது.

திருமாவளவன் மற்றும் இளங்கோவன் மறைமுக கூட்டு நடவடிக்கையே அண்மைய அரசியல் நிகழ்வுகளாகும். திமுக கூட்டணியைப் பிளக்கும் ஒரு முயற்சியே இளங்கோவனால் ஏற்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய தமிழ் எதிர்ப்புப் பேச்சும் அதை திமுக தலைவர் கருணாநிதிதான் தூண்டிவிட்டார் என்ற திருமாவளவன் அறிக்கையும் ஆகும்.

இப்போது மீண்டும் சேதுசமுத்திரத்திட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு களம் இறங்கியுள்ள திரு. இளங்கோவன் திமுக மீது மறைமுகமாகத் தாக்குதலைத் தொடங்கியுள்ளார்.

ஆக, தமிழக அரசியல் களம் சூடுபிடித்துவிட்டது. தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் பலவிதமான அந்தர்பல்டிகளும் அதிரடிக்காட்சிகளும் அமோகமாக அரங்கேறும். ஆனால் ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிகின்றது, 2006 தேர்தலின் ஜோக்கர் என்ற பெருமையை, திரு.இளங்கோவன்தான் தட்டிச்செல்வார் போலிருக்கின்றது.

-அக்னிப்புத்திரன்.

agniputhiran@yahoo.com

Series Navigation

அக்னிப்புத்திரன்

அக்னிப்புத்திரன்