ஹெச்.ஜி.ரசூல்
மதுரையில் 2006 ஜுன் மாதம் நடைபெற்ற இஸ்லாமிய கருத்தியல் கலந்துரையாடல் துவக்கவிழா அமர்வுக்கு புதிய காற்று ஆசிரியர் ராஜாஹசன் தலைமை தாங்கினார். கவிஞர் சேஞதுகுடியான் வரவேற்புரை வழங்கினார். முனைவர் அஜ்மல்கான் புனிதப் பிரதிகளை சமய எல்லைக்கு உள்ளேயும். வெளியேயும் அர்த்தம் கொள்ளுதலை விவரித்தார்.
கவிக்கோ அப்துரகுமானின் உரை திருக்குர்ஆன். ஹதீதுகளை வாசித்து புரிந்து கொள்ளும் முறையியல் பற்றிய ஒரு நவீனத்துவ விளக்க உரையாடலாக இருந்தது. ஏழுவானம், பிரபஞ்சம், மற்றும் உயிரின தோற்றம் குறித்தான படைப்புக் கொள்கையை திருக்குர்ஆனின் மூலப்பிரதியிலிருந்து விவாதிக்கத் துவங்கி காலம் மிகச்சிறந்த அறிவாளியாக இயங்குவதாகக் கூறினார். பின்நவீனத்துவ வாசிப்பு குறித்த மறுதலிப்பும் குர்ஆனின் இயற்கை விஞ்ஞானப் பார்வையை. வலுக்கட்டாயமாக நிரூபன விஞ்ஞானமாக்கும் தொனியும் அவரது பேச்சில் வெளிப்பட்டது. காலந்தோறும் மாறிக் கொண்டிருக்கும் விஞ்ஞான உண்மைகளின் நிலையற்ற தன்மை குறித்து நாம் மிகவும் கவனம் கொள்ள வேண்டியிருக்கிறது.
இஸ்லாமிய இலக்கியப் பேரவைத் தலைவர் இதயத்துல்லாவின் துவக்கவுரை ஆய்வாளர்களையும், பங்கேற்பாளர்களையும் உற்சாகமூட்டியது. முதல் அமர்வு இஸ்லாமும் தலித்தியமும் தலைப்பில் நிகழ்ந்தது. முனைவர் முத்துமோகன் நெறிப்படுத்துகை உரையில் இஸ்லாத்தின் வரலாற்றுக் காலத்தை சுட்டிக்காட்டினார். இந்திய சமூகச் சூழலில் கோவில் சார்ந்த உள்காலனீய சாதீய குடியிருப்பு, தெருக்களின் கட்டமைப்பிற்கு மாற்றமாக இஸ்லாம் நிகழ்த்திய அனைவரும் நுழையும் இடம்சார் திறந்த வெளிகட்டமைப்பு இயக்கம், முஸ்லிம் மன்னர்களை காலத்தில் தோல், நெசவு தொழில்சார்ந்து வணிகப் பொருளாதாரமும் நகர்ப்புறப் பண்பும் கொண்ட இஸ்லாத்தின் சமூகச் செயல்பாட்டு தன்மையையும் விவரித்தார்.
பேரா. அப்துல்ரசாக் இஸ்லாத்தின் தத்துவம், விடுதலை இறையியல் சார்ந்த அடித்தளத்திலிருந்து இஸ்லாமியம் / தலித்தியம் உரையாடலைத் துவக்கினார். இதன் மீதான கருத்தாடல் உரையை கதையாளர் முஜிபுர்ரகுமான் விளிம்பு நிலை இஸ்லாம் என்பதாக பிறிதொரு கோணத்தில் முன்வைத்தார். உலக அளவில் மைய நீரோட்டத்திலிருந்து விலக்கப்பட்டு இஸ்லாமியர்கள் ஆக்கிரமிப்புகளாலும், வாழ்தல் நிலைகளாலும் ஓரங்கட்டப்பட்டிருப்பதும், இந்திய அளவில் பெருநகரச் சேரிப் பகுதிகளில் பொருளாதாரத்திலும், சமூக பண்பாட்டு இருப்பிலும் மிக மோசமாக பின்தங்கியிருக்கும் முஸ்லிம்களின் விளிம்பு நிலை வாழ்வு பற்றிய பதிவாக இது அமைந்திருந்தது. இதைத் தொடர்ந்து விவாதங்கள் பங்கேற்பாளர்களால் நிகழ்த்தப்பட்டது. கறுப்பு இறையியலின் அடையாளம் ஹசரத் பிலாலை முன்வைத்து, இஸ்லாத்திற்குள் தலித்தியம் உண்டா, இஸ்லாம் குறித்து அம்பேத்கர் முன்வைத்த விமர்சனங்களை இஸ்லாமிய சிந்தனையாளர்கள் எப்படி எதிர் கொள்கிறார்கள் … வகாபிகள் தர்கா மரபாளர்களை முஸ்லிம்களல்ல என்று கூறுவதன் வழியாக நவீன வடிவில் தெளகீது பிராமணீயம் எப்படி கட்டமைக்கப்படுகிறது, வடமாநிலங்களில் அஷ்ரப், அஜ்லப் அர்சால் என்பதான மேல் கீழ் பிரிவுகளின் அடிப்படையில் முஸ்லிம்கள் தலித் முஸ்லிம்களாகவும் பகுக்கப்பட்டிருப்பதை புறந்தள்ள முடியுமா என்பதான தற்கால சமூக வாழ்வியல் சார்ந்த பிரச்சினைகள் மிகுந்த உணர்ச்சிகரமான விவாதத்திற்கு உள்ளானது.
இரண்டாம் அமர்வுக்கு முனைவர் தொ. பரமசிவம் தலைமையேற்று முஸ்லிம்களும், திராவிட இயக்கங்களுக்குமான வரலாற்று ரீதியான உறவினை முன்வைத்தார். பெரியாரியச் சிந்தனை இந்து மதக்குறியீடுகளை எதிர்த்த விதத்தினையும் வெளிப்படுத்தினார். கவிஞர் சுகுணா திவாகர் திராவிட இயக்கங்களும் முஸ்லிம்களும் என்ற பொருளில் முஸ்லிம்களின் நடைமுறைச் சார்ந்த சமூக அரசியல் சிக்கல்களையும், இன இழிவு தீர இஸ்லாமே மருந்து என்றுரைத்த சிந்தனைத் தடங்களையும், பண்பாட்டு நிலையில் சமஸ்கிருதத்திற்கு எதிராக தமிழ் அடையாளத்தை முன்னிறுத்தியதையும் கூறினார். இசையறிஞர் நா. மம்மது இக்கட்டுரை மீதான விவாதக் கருத்துரையை நிகழ்த்தினார். தமிழறிஞர் தாவூத் ஷாவின் தமிழ்ச் செயல்பாடு, திருக்குர்ஆனை தமிழில் மொழி பெயர்த்தபோது எழுந்த பிரச்சினைகள், தமிழிசைக்கும் இஸ்லாமியருக்குமான பிணைப்பு என பலவகைகளில் இக்கருத்துரை அமைந்திருந்தது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலில் இஸ்லாமியர் மீதான பெரியாரின் விமர்சனம் சார்ந்த நிலைப்பாடு, பிற்காலத்தில் முஸ்லிம்கள் மீது அவர் வைத்த விமர்சனம். இஸ்லாமிற்கும் தமிழுக்குமான உறவு, தமிழ் வழி தொழுகை உள்ளிட்ட பகுதிகளிலும் விவாதங்கள் தொடர்ந்தது.
மூன்றாவது அமர்வுக்கு இதயதுல்லா தலைமை தாங்க அருட்தந்தை டேனியல் இஸ்லாமியரும் இதர சிறுபான்மையினரும் என்ற பொருளில் உரையாற்றினார். கிறிஸ்தவர்கள் மற்றும் இயக்கங்களின் செயல்பாடு, ஆன்மீக பொருள் முதல்வாதம், அடிப்படைவாதம், ஆட்கொள்ளப்பட்ட மனித நேயம் (Engaged Humanism) கோட்பாடுகள் குறித்து விளக்கினார். கதையாளர் களந்தை பீர்முகமது இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர் உறவும் முரணும் குறித்து தனது பால்யகால அனுபவம் சார்ந்ததொரு கருத்துரையை வழங்கினார்.
நான்காம் பகுதி இரவு அமர்வாக நடைபெற்றது. நவீன ஊடக வரலாற்று ஆய்வாளர் அன்வர் கலந்து கொண்டார். தமிழக இஸ்லாமியர் வரலாற்று ஆவணப் படத்தை திரையிட்டு விளக்கவுரை நிகழ்த்தினார். கல்வெட்டுகள், செப்பேடுகள் உள்ளிட்ட தரவுகளோடு இந்து மன்னர்களுக்கும், சூபிகளுக்கும், இஸ்லாமிய மன்னர்களுக்கும், இந்து கோவில்களுக்கும் இடையிலான உறவுகளை ஆதாரங்களோடு வெளிப்படுத்தினார். இது இஸ்லாமியர்களின் ஆய்வு முறையியலில் நிகழ்ந்ததொரு வரவேற்கத்தக்க புதிய மாற்றமாகும். இந்த ஆவணப்படத்திற்கே அதிகப்படியான பங்கேற்பாளர்களின் பாராட்டுரைகள் கிடைத்தன.
முதல்நாள் முழுவதும் நடைபெற்ற விவாதங்களில் பக்ருதீன் அகமது, ஹெச்.ஜி.ரசூல், பேரா.அப்துர் ரசாக், பேரா.அ.மார்க்ஸ், ஹாமீம் முஸ்தபா, நாவலாசிரியர். மீரான் மைதீன், கவிஞர் சுபகுணராஜன், முஜிபுர் ரகுமான், மெளலவி. அ.பீர் முகம்மது பாகவி…. உள்ளிட்ட பலர் மிக ஆக்கபூர்வமான விவாதங்களை முன்வைத்தனர். கவிஞர். தேவேந்திரபூபதி, அழகு பாரதி, சுந்தர்காளி…. உள்ளிட்ட ஏறத்தாழ எண்பதுக்கும் மேற்பட்டவர்கள் இந்த அமர்வுகளின் கலந்து கொண்டனர்.
இரண்டாம் நாளின் முதல் அமர்வுக்கு கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ் தலைமையேற்றார். மார்க்ஸியமும் இஸ்லாமும் தலைப்பில் முனைவர் முத்துமோகன் தனது உரையாடலைத் துவக்கினார். மார்க்ஸ் ஏங்கெல்ஸின் இஸ்லாம் குறித்த மதிப்பீட்டினை முன்வைத்து மக்காமாநகரின் பதூயீன் இனக்குழு மக்களின் நலன்களுக்கும், மதிநாவின் வணிக உடமை நலன்களுக்குமிடையிலான சமநிலைப் பிறழ்வை நபிமுகமது எவ்வாறு சரி செய்ய முயன்று இஸ்லாமியக் கோட்பாட்டை உருவாக்கினார் என்பதை தெளிவுபடுத்தினார். ரஷ்ய கம்பூன்கள், பெளத்தத்தின் சங்கம், இஸ்லாத்தின் உம்மத் என்பதான கூட்டு வாழ்க்கையின் வடிவம் குறித்து பேசினார். இஸ்லாத்தின் வரலாற்றை அதன் ஒன்றிணைவு பண்பாட்டு (Complex culture) அம்சக்கூற்றினை பாகிஸ்தானிய சிந்தனையாளர் தாரிக் அலியின் வழியாக விளக்க முற்பட்டார். இதற்கான கருத்துரையை சிவகங்கை ஸாகித் நிகழ்த்தினார். இதைத் தொடர்ந்து இஸ்லாமியனாக இருப்பவன் மார்க்சீயவாதியாக இருக்க முடியுமா. இஸ்லாமும் மார்க்ஸீயமும் வெவ்வேறு துருவங்களா, பண்பாட்டு மார்க்ஸீயத்தையும், லத்தீன் அமெரிக்க நாடுகளின் வெகுஜன மார்க்ஸியத்தையும், (Popular marxism) எப்படி புரிந்து கொள்வது, மேற்கத்திய மார்க்ஸியமும் அரசியல் இஸ்லாமும் (Political Islam) அமெரிக்கமயமாதலுக்கு எதிராக எப்படி ஒன்றிணைகின்றன என்பதான பல விவாதங்கள் தீவிரமாக அலசப்பட்டன.
அடுத்து பேரா.அ.மார்க்ஸ் முஸ்லிம்களின் அடையாள உருவாக்கம் குறித்த உரையை நிகழ்த்தினார். உலக அளவில் இஸ்லாமியர்களிடத்தில் நிகழ்ந்து வரும் புதுப்புது சிந்தனை மாற்றங்களை குறிப்பதாக அது அமைந்திருந்தது. இஸ்லாமியப் பெண்ணியச் சிந்தனையாளர்கள் ஹிர்ஸ் அலி, இர்ஷத் மஞ்சி மேற்கத்திய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் சிந்தனையுலகை வெளிப்படுத்தினர். ஒரு பால் புணர்ச்சியாளர் நிலை குறித்த மதிப்பீடு, பெண்களுக்கான மசூதி இயக்கம், சார்ந்த பல தகவல்களை அறிமுகப்படுத்தினார். 18-ம் நூற்றாண்டிற்கு பிறகான அறிவுவாத விவாதம் இஸ்லாமிய நிலைபாடுகளில் இடம் பெற்றதையும் தேவ்பந்த், மற்றும் பரெல்வி சிந்தனைகளுக்குமான மோதலை அடையாளப்படுத்தி விட்டு, தர்கா பண்பாட்டு அடையாள அரசியலுக்கு மாற்றான வகாபிய நவீனத்துவ பார்வையை முன்வைத்தார். இதற்கான கருத்துரையை முஜிபுர் ரகுமான் நிகழ்த்தினார். அரபு பெயரடையாளம், மற்றும் தர்கா அடையாளத்தை விலக்கி வைக்கும் தெளகீது பிராமணீயத்தின் கருத்தியல் உருவாக்கம் குறித்து விளக்கிப் பேசினார். தொடர்ந்த கலந்துரையாடலில் அரபு கலாச்சார சூழலில் பிறந்த இஸ்லாம் எவ்வாறு தனது பண்பாட்டு அடையாளங்களை அரபு வட்டார நாட்டார் மரபுகளிலிருந்து உள்வாங்கிக் கொண்டது போன்ற விவரங்கள் இடம் பெற்றன.
தொடர்ந்து இஸ்லாத்தில் பெண் விடுதலைக் கூறுகள் தலைப்பிலான அமர்வு நடைபெற்றது. சகோதரி ஷமீம் இந்த அமர்வை நெறிப்படுத்தினார். முனைவர் பட்ட ஆய்வாளர் அருணா இஸ்லாமிய கோட்பாடுகள், பாலியல் சமத்துவமின்மை, வாரிசுரிமைச் சட்டம், தலாக், பர்தா- ஆடை விதிகள் உள்ளிட்டவைகள் பற்றியும், நடைமுறையில் பெண் ஒடுக்குதலுக்கு உள்ளாவதற்கும் உள்ள பிரச்சினைகள் பற்றியும் எவ்வித தயக்கமுமின்றி கருத்துக்களை முன்வைத்தார். இஸ்லாமிய இயக்கவாதிகளில் சிலர் மிகவும் பதட்டத்தோடும் சலசலப்போடும் இவ்விவாதத்தை எதிர்கொண்டனர். இதற்கான கருத்துரையை அவாஸ் அமைப்பின் வழிகாட்டுதலில் இஸ்லாமிய மக்களிடையே ஐந்தாண்டாக களப்பணியாற்றிய உமாஸ்ரீ அனுபவங்களாகப் பகிர்ந்து கொண்டார்.
ஆய்வாளர் அருணா விமர்சன பூர்வமாக முன்வைத்த விவாதங்களைக் கேட்டு உறைந்து போயிருந்த அவையின் மெளனத்தை புதிய காற்று ஆசிரியர் ராஜாஹசன் மெல்ல கலைத்து விவாதத்தை துவக்கினார். திருக்குர்ஆன் பெண்ணை – ஆணின் அதிகாரம் செலுத்தப்படும் விளைநிலமாக ஒரு பொருளாக பார்க்கிறது என்பது போன்ற கூற்றுகளுக்கு மெளலவி அ.பீர்முகம்மது பாகவி விளக்கமளிக்க முற்பட்டார். தொடர்ந்து பல பதில்கள் விவாதிக்கப்பட்டன என்றாலும் அவைக்கு உள்ளும் புறமும் இவ்விவாதங்கள் பெருத்த அதிர்வுகளை ஏற்படுத்தியதை உணர முடிந்தது.
அடுத்து நடைபெற்ற அமர்வில் பேரா.முரளி ரோலண்ட்பர்த்தின் ஆசிரியனின் மரணம், லியோதர்த்தின் பெருங்கதையாடல்களின் தகர்வு, கட்டுடைத்தல் கோட்பாடு உள்ளிட்ட கருத்தாக்கங்கள் குறித்த முன்னுரையோடு அமர்வை நெறிப்படுத்தினார். பின் நவீனத்துவ வாசிப்பில் இஸ்லாம் பிரதிகள் குறித்த தனது உரையை ஹெச்.ஜி.ரசூல் முன்வைத்தார். தொழுகை, ஜிகாத் உள்ளிட்ட சொல்லாடல்களின் ஆன்மீகத்துவம் தாண்டிய பிற பன்மைத்துவ அர்த்தங்கள் குறித்து விளக்கினார். யதார்த்தவியல், வரலாற்றுக் காலச் சூழலில் திருக்குர்ஆனை புரிந்து கொள்ளாததால்தான் அதன்மீது கட்டமைக்கப்பட்ட புனிதங்களும், கற்பிதங்களும் அடிப்படைவாதத்தையும் தீவிரவாதத்தையும் உருவாக்குகின்றன எனவும் உரையாடினார்.
இறுதி அமர்வினை சிந்தனைச்சரம் ஆசிரியர் அ.பீர்முகம்மது பாகவி நெறிப்படுத்தினார். முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டு அரசியல் குறித்த உரையை ‘பிறப்புரிமை’ குறும்பட இயக்குநர் ஆளுர் ஷாநவாஸ் நிகழ்த்தினார். பேரா.ஷாகுல் ஹமீது கல்வி, வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு கிடைக்க வேண்டிய பங்கீடு குறித்து பேசினார். தொடர் உரையாடலில் இடஒதுக்கீட்டில் முஸ்லிம் பெண்களுக்கான பங்கீடு, உலகமய, தனியார்மய சூழலில் வேலைகளில் இடஒதுக்கீட்டுக்கான சாத்தியப்பாடு, மத்திய தரவர்க்க முஸ்லிம்களின் பிரச்சனையாக உருவாகியுள்ள இடஒதுக்கீடு அடித்தள. விளிம்புநிலை முசுலிம்களின் கவனத்தை பெறாதது, தமிழக முஸ்லிம்கள் குறித்த அடிப்படையான புள்ளி விவரங்கள் (Primary Data) எந்த அமைப்புகளிடத்தும் இல்லாத நிலை, இடஒதுக்கீடு கோரும் முஸ்லிம் இயக்கங்களின் தெளிவற்ற அணுகுமுறை எனப் பல பகுதிகள் விவாதிக்கப்பட்டன.
தமிழகச் சூழலிலே மிகவும் சுதந்திரமாகவும், ஜனநாயகத் தன்மையோடும் இஸ்லாமிய கருத்தாடல் இருநாள் நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன.
தமிழகத்தில் இன்று சுன்னத்துல்ஜமாஅத் கொள்கை சரியா, வகாபிச கொள்கை சரியா என இஸ்லாமிய சமுதாயமும், இளைஞர்களும் இருகூறாக்கப்பட்டுள்ளார்கள். ஜுன் மாத முதல்வாரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் விவாத அரங்கின் இருபுறமும் நூற்றுக்கணக்கில் கிதாபுகளை, புத்தகங்களை அடுக்கி, லேப்டாப் கம்ப்யூட்டர்கள் உதவியுடன் பி.ஜெய்னுல் ஆப்தீன் தலைமையில் வகாபிகளும், ஸைகு அப்துல் ஜமாலி தலைமையில் சுன்னத்துல் ஜமாஅத்தினரும் இருநாட்கள் விவாதித்துள்ளனர். ஒவ்வொரு தரப்பினருக்கும் இருநூறுபேர் வீதம் ஆடிட்டோரியம் ஒன்றில் வரையறுக்கப்பட்ட பார்வையாளர்களோடு இஸ்லாமிய அகீதா விவகார விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டன. அந்த விவாத மேடையிலேயே வகாபிகளின் தர்க்க விவாதங்கள் உடைபட்டுப் போனதும் மவ்லிது, மத்ஹபு, தர்கா மரபுகள் உள்ளிட்ட ஒரு கலாச்சாரத்தின் அடையாளங்களை, அவற்றின் குறியீட்டு மொழியை புரிந்து கொள்ள முடியாத அவலமும், அந்த மேடையிலேயே தென்பட்ட வகாபிய மிரட்டல்களும் கூடவே ரவுடியிசமும், இஸ்லாமிய பெண் நிலைவாதம் குறித்த சுன்னத்துல் ஜமாத்தினரின் பின்னடைவுப் பார்வையும் துல்லியமாக வெளிப்பட்டதை நேரடியாக பார்க்க முடிந்தது.
இத்தருணத்தில் புதிய காற்றும், இஸ்லாமியப் பேரவையும் இணைந்து நடத்திய இந்த இருநாள் நிகழ்வுகள் இன்றைய காலத்துக்கு தேவையான ஒரு மூன்றாவது பார்வையை வழங்கியுள்ளது. பல கல்வியாளர்கள், இளந்தலைமுறை ஆய்வாளர்கள், மற்றும் சுன்னத்துல் ஜமாஅத்தினர், ஜமாஅத்தே இஸ்லாமிமினர், மனித நீதிப்பாசறையினர், கலை இலக்கியப் பெருமன்றத்தினர், மார்க்ஸ்யர்கள் என பன்மைத் தன்மையோடு பல பகுதி சிந்தனையாளர்களை இஸ்லாமிய உரையாடலுக்காக ஒன்றுபடுத்தியுள்ளது. இதுவே இந்நிகழ்வின் வெற்றியாகும்.
——————————————————————————————————-
mylanchirazool@yahoo.co.in
- கடித இலக்கியம் – 12
- கசாப்புக்காரனிடம் வாலாட்டுகிறது குறும்பாடு
- பி ன் வா ச ல்
- தமிழுக்கும் அழிவென்று பேர்?
- கண்ணகியும் ஐயப்பனும்
- திருப்பாலைத்துறை – திருத்தலப் பெருமை
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-8)
- உடன்படிக்கையில் இரு மறுப்புகள்
- புத்தக விமரிசனம்: ஹெச்.ஜி.ரசூலின் ‘இஸ்லாமியப் பெண்ணியம்’
- தமிழ் விடுகதைகள்
- கிளிகளின் தேசத்தில்
- நியாயமான கேள்விகள்
- நாஞ்சிலனின் பார்வைக்கு
- உள்ளே இருப்பதென்ன?
- தேசிய பாரம்பரியக் கலை பாதுகாப்பு மையம்
- பாரதத்தின் பூஜ்யக் கண்டுபிடிப்பு ஏற்கப்பட்ட வரலாற்று உண்மை
- விதிகள்
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 28
- மூன்றாவது பார்வை – இஸ்லாமிய கருத்தாடல் சங்கமம்
- மவ்லிதுகளின் அர்த்த பரப்புகள்
- செர்நோபில் விபத்துபோல் சென்னைக் கூடங்குள அணுமின் நிலையத்தில் நேருமா? -11
- சிட்டுக்குருவியின் கூடு தேடல்
- கவிதைகள்
- கீதாஞ்சலி (80) கடும் புயலில் பயணம்!
- பெரியபுராணம்- 95 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- துளிப் பூக்கள்….
- சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 7. மெய்யியல்
- ஒரு மகாராணியின் அலுவலகவழி (அல்லது) தமிழ்ப் பெண்ணியத்தின் எதிர்காலம்
- நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு! – அத்தியாயம் பத்து: பண்டைய தமிழர்களின் ஆலய, துறைமுக, கோ நகரங்கள்!
- ரிச்சர்ட் டாகின்ஸ் ஆவணப்படம் – மதம் – முதல் பகுதி