மூங்கில் இலைப் படகுகள்

This entry is part [part not set] of 46 in the series 20040520_Issue

பிரதாப ருத்ரன்,தருமபுரி.


நோபல் பரிசு (1969) பெற்ற முதல் ஜப்பானிய எழுத்தாளரான யாசுனாரி கவாபட்டா-வின் தேர்ந்தெடுத்த கதைகளையும், நோபல் உரையையும் லதா ராமகிருஷ்ணன் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறார்.

லதா ராமகிருஷ்ணன் எற்கனவே கவாபட்டாவின் ‘தூங்கும் அழகிகள் இல்லம்’ (2001) என்ற நாவலையும், பிரம்மராஜனின் ‘பதினைந்து ஐரோப்பிய நவீனவாதிகள்’ என்ற கட்டுரைகள் எற்படுத்திய ஆர்வத்தினால் இதாலிய-யூத எழுத்தாளரான ‘பிரைமோ லெவியின்’ கதைகளையும் (2002) தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

இத்தொகுப்பில் உள்ள பெரும்பான்மையான கதைகள் ஜப்பானிய மரபு சார் ஆக்கக்கூறுகளை நவீனத்துவத்துடன் இணைத்து புனையப்பட்டிருக்கின்றன.

பலவீன பாண்டம்- இக்கதை ஒரே சம்பவத்தின் தொடர் பாதிப்பிற்குள்ளாகும் ஒரு பாதசாரியின் அனுபவங்களை விவரணையாக்குகிறது. மேலும், ஒரு மண்பாண்டம் உடைந்து சிதறும் சாதாரண நிகழ்வுடன் பைபிளின் பாடல் வரி மற்றும் அந்த பாண்டத்தின் உடைந்த சிதறல்களை சேகரித்துக்கொண்டிருக்கும் பெண், முதல்பார்வையிலேயே அவள் இழந்த அவளையே சேகரிப்பதாகவும் யதேச்சையாய் தொடர்புபடுத்துகிறது.

கடவுளின் எலும்புகள்- யூமிகோ என்ற திருமணமாகாத பணிப்பெண், குறைப்பிரசவத்தில் பிறந்து இரண்டே நாட்களில் இறந்துபோன தன் குழந்தையின் சாம்பல்களை பொட்டலங்களாக கட்டி தன்னுடன் உறவு கொண்டவர்களுக்கு அனுப்பிவிடுகிறாள். அக்குழந்தை அவள் சாயலிலோ அல்லது அவளுடன் உறவு கொண்டவர்களில் யாரோ ஒருவர் சாயலிலோ இல்லாததினால், தன்னுடன் உறவுகொண்ட அனைவருக்கும் அக்குழந்தையின் சாம்பலை சிறுசிறு பொட்டலங்களாக கட்டி அவரவர் பங்குக்கு அனுப்பிவைத்துவிடுவது ஒருவித யதார்த்தை மீறிய மன அதிர்வினை உண்டாக்குகிறது.

மோதிரம்- தான் அணிந்திருக்கும் மோதிரத்தையும், தன் அசாதாரண அழகிய ரோஜா வண்ண உடலழகையும் பிறருக்கு தெரிவிப்பதிலேயே குறியாய் இருப்பவள், தான் நிர்வாணமாக இருப்பதையும் பொருட்படுத்தாது ஒரு ஆடவனுக்கு தன் மோதிரத்தின் வேலைப்பாடுகளை காட்டுவதற்கு அவன் மடிமீதும் அமரத் தயங்காத பெண்ணைப் பற்றிய கதை.

ஜோடிப் பறவைகள்- காதலி தனக்கு அவள் நினைவாகக் கொடுத்த ஒரு ஜோடிப் பறவைகளை பராமப்பதிலிருந்து கதை தொடங்குகிறது. தன் மனைவி தன் வாழ்வின் மறுபாதியில் தலையிடாததாலும், தனிமனித சுதந்திரத்திற்கு மதிப்பு கொடுத்து நடந்துகொண்டமையாலும் மற்றும் அவள் மறைவிற்குப்பின் பறவைகளின் பொருட்டும் ஞயாபகப்படுத்தப்படுகிறான். காதலியின் நினைவுகளோடு பறவைகளையும் சேர்த்து கொன்றுவிடுவது என்ற முடிவோடு கதை முடிகிறது. தொகுப்பிலேயே மிகச்சிறிய கதை இதுதான்.

புகைப்படம்- மனைவியைப் பிரிந்து வாழும் கவிஞன் பற்றிய கதை. மனைவியைப் பிரிந்திருந்தபோதிலும், அவனுக்குள்ளாக மனைவியை பற்றிய ஒரு வெறுப்பு கலந்த இனிமையான நினைவு இருந்துகொண்டுதானிருக்கிறது. தினசரியில் வெளியாகும் தனது புகைப்படத்தை பார்த்துவிட்டு மீண்டும் தன் மனைவி தன்னிடம் வந்துவிடுவாளோ என்ற பயத்துடனேயே இருக்கிறான். இக்கதை கவிஞனின் மனதின் நுண்ணுணர்வினை மையப்படுத்தி சித்தரிக்கப்பட்டுள்ளது.

குடை – ஒரு மழைகாலத்தில், குடையின்வாயிலாக ஒரு இளம் ஜோடியின் நட்பு ஆரம்பமாகிறது. புகைப்பட நிலையத்தில் நிகழும் சம்பவங்களினால் அவர்களது நட்பு திருமணத்தில் முடிகிறது. ஒரு சாதாரண குடையைக் கொண்டு அவர்களது மனதின் செயல்பாடுகள் விவரணையாக்கப்படுகின்றன.

தொப்பிச் சம்பவம்- ஒரு விநோதமான நகைச்சுவை ரீதியில் புனையப்பட்ட கதை. யுயெனோ ஷினோபாசு குளத்தின் மீதான பாலத்தில் நடந்த வெகு சுவாரசியமான ஆனால் நடந்திருக்குமா ? என்கிற கேள்விக்குள்ளாகிற சம்பவம். தொப்பியை தவறவிட்டவனுக்கு வேறு ஒருவன் உதவுவதாய் ஆரம்பித்து அவனைச் சுற்றியுள்ளவர்களையும், தொப்பியை தவறவிட்டவனையும் கேளிக்குள்ளாக்குவதாய் எழுதப்பட்டிருக்கிறது.

கோடைக் காலணிகள்- நம்மூர் மாட்டுவண்டிச் சங்கதிபோல், குதிரை வண்டியின் பின்னால் தொங்கிக் கொண்டுவரும் சிறுமியின் கால் சாலையில் தேய்ந்துகொண்டே வருவதால் அவளது காலில் ரத்தம் வழிகிறது. அதனை கண்ட குதிரை வண்டிக்காரன் வண்டியில் எறிக்கொள்ளும்படி கூறுகிறான். கோடைகாலத்தில் மட்டுமே அணியக்கூடிய காலுறைகளை குளிர்காலத்திலும் உபயோகப்படுத்துகின்ற மற்றும் தன்மீதான அனுதாபத்தை எற்க மறுக்கின்ற மனத்திடம் படைத்த ஒரு சீர்திருத்தப்பள்ளி சிறுமியை பற்றிய கதை.

கழிவறை போதிசத்வம்- தான் கடன்பட்டு கட்டிமுடித்த ஒரு கட்டண கழிப்பிடத்தை பிரபலப்படுத்தவேண்டும் என்பதற்காக வேறொரு கட்டண கழிப்பிடத்தில் நுழைந்து வெளிவராமல் தாமதப்படுத்தியதில் தன்ணுணர்விழந்து இறந்துவிடும் ஒரு அப்பாவி பற்றிய கதை.

மூங்கில் இலைப் படகுகள்- இக்கதை, அகிகோ என்ற இளம்பிள்ளைவாதத்தினால் பாதிக்கப்பட்ட பெண்ணை பற்றியும் அவளது முயற்சியையும், இயற்கையை ரசிக்கும் ரசனையையும் முன்னிறுத்தி பேசுகிறது.

பாலுறவுகளைப் பற்றி கவாபட்டா எழுதியிருந்தாலும் அந்த கதைகள் அனைத்தும் தெளிவாக ஆனால் வாசகர்களின் எண்ணங்களில் விரசங்களை எற்படுத்தாது புனைந்திருக்கிறார். ஆரம்பத்தில் உள்ள சில கதைகள் ஒரு பயணியின் அனுபவங்களாகவும், பின்வரும் கதைகள் ஜப்பானிய குடும்பங்களின் மரபுவழி வாழ்க்கை அனுபவங்களாகவும் கதையின் தளம் விரிகிறது.

‘கோழிக்குஞ்சுகளும் நாட்டியப் பெண்ணும்’ மற்றும் ‘இறைவன் இருக்கிறான்’ போன்ற கதைகளில் கவாபட்டா எளிமையான முறையையே கையாண்டிருந்தாலும், கதையில் புரிந்துகொள்ளப்பட முடியாத மிச்சங்கள் உள்ளன.

கவாபட்டா கூறுவது போல் உள்ளங்கை அளவிலே உள்ள இச்சிறுகதைகள், அதன் ரேகைகளைப்போலவே பன்முகப்பட்ட இயங்குதளங்களைக் கொண்டுள்ளது. பெரும்பான்மையான கதைகள் ஒன்றரை பக்கத்திலேயே முடிந்துவிடுகின்றன. கதைகள் அளவில் மிகச்சிறியவைகளாகவே இருந்தபோதிலும் மனதின் நுண்ணுணர்வுகளை பல அர்த்த பரிமாணங்களில் வெளிப்படுத்துவதாய் உள்ளது.

—-

புத்தக வெளியீடு – ஸ்நேகா,

348, டி.டி.கே. சாலை,

இராயப்பேட்டை,

சென்னை – 600 014.

புத்தகத்தின் விலை – ரூ. 90

Series Navigation

பிரதாப ருத்ரன்,தருமபுரி.

பிரதாப ருத்ரன்,தருமபுரி.