மு. தளைய சிங்கத்தின் இலக்கியப்பார்வை

This entry is part [part not set] of 30 in the series 20020610_Issue

எம். வேத சகாய குமார்.

தமிழிலக்கிய மரபில் மு. தளைய சிங்கத்திற்கான இடம் தனித்துவமானது. இந்தியத் தமிழிலக்கிய மரபோ/ ஈழத்தமிழிலக்கிய மரபோ அவருக்கு முன்பும் பின்பும் அவரளவிற்குச் சிந்தனை கனம் கொண்ட படைப்பாளியை எதிர்கொண்டதில்லை. தமிழ்ப் படைப்பாளிகளுள் மிகப் பெரும்பான்மையோரும் தத்துவ நிலைபாடு கொண்டவர்களே சிந்தனையும் தத்துவநிலைபாடும் வெவ்வேறானவை – இவையிரண்டும் தமிழில் ஒன்றாகக் கருதப்படினும் கூட இவர்கள் ஏதேனும் ஒரு தத்துவத்தின்பால்/ ஏதோ ஓர் அளவிற்கு நம்பிக்கைக் கொண்டவர்கள். இந்த நம்பிக்கையின் அளவு வேறுபடக்கூடும். அதுபோலவே தத்துவமும். இவர்கள் பழமையான இந்தியத் தத்துவங்கள் முதல் மார்க்சியம் வரையிலான புதிய ஐரோப்பிய தத்துவங்கள் வரை நம்பிக்கைக் கொண்டவர்கள். சிலர் இதனையும் கடந்து பயணித்திருக்கக்கூடும். இன்று உலகின் மிக இளமையான தத்துவம் ஒன்றின் சாயலைக் கூட இளந்தமிழ்ப் படைப்பாளிகளின் எழுத்தில் இனங்கண்டுவிட முடியும். தத்துவம் எதுவானாலும் அது படைப்பாளிக்கு வெளியிலமைந்தது. ஏதேனும் ஒரு காரணத்தின் நிமித்தம் தன் கால்களை அதன்மீது அவன் ஊன்றிக்கொள்கிறான்.

படைப்பு இனங்காட்டும் படைப்பாளியின் சிந்தனை இதிலிருந்து வேறானது. இச்சிந்தனை படைப்பாளியின் அகத்திலிருந்து ஊற்றெடுப்பது. தெளிவு இதன் இலக்கணமாக அமைய வேண்டுமென்பதில்லை. தான் அறிந்த தத்துவங்கள் மீது தவறான புாிதல்களைக் கூட அவன் கொண்டிருக்கக் கூடும். தத்துவம் பொதுமை குணம் கொண்டதென்றால்/ சிந்தனை தனித்துவமானது. அது குறிப்பிட்ட அப்படைப்பாளிக்கு மட்டுமே சொந்தமானது. வாழ்வுடனான அவன் உறவில் வேர்கொள்வது. தேடல் சிந்தனை கனம் கொண்ட படைப்பாளியைக் குறித்ததென்றால்/ தமிழ்ப் படைப்புலகம் மிகுந்த ஏமாற்றத்தினையே தரக்கூடும்.

மு.தளையசிங்கத்திற்கு முன்னோடியாகப் பாரதியைக் குறிப்பிட வேண்டும். இருவருமே தம்மக்களின் நிகழ்கால வாழ்வின் மீது அதிருப்தியும் துக்கமும் கொண்டிருந்தவர்கள். இவர்கள் சிந்தனை உலகில் சிறகடிப்பதற்கு இவையே காரணமாக அமைந்தன. தளையசிங்கத்தினைப் போலவே பாரதியும் இந்தியத் தத்துவங்கள் மீது ஆழ்ந்த பிடிப்பு கொண்டிருந்தார். என்றாலும் இவர்கள் மேலை தத்துவங்களை எதிர்கொள்ள நோிட்டபோது அஞ்சி பின் ஒதுங்கவில்லை. இந்தியத் தத்துவத்தில் கால்களை உறுதியாக ஊன்றிவிட்டு மார்க்சியத்தைச் சாதகமாக எதிர்கொள்ளவும் முயன்றுள்ளனர் – இதில் தளைய சிங்கம் எட்டிய எல்லையைப் பாரதி தொட்டிராவிடினும் கூட உலகளாவிய வரலாற்று நிகழ்வுகளைச் சிந்தனை களத்தில் கணக்கிலெடுத்துக் கொள்ள இருவராலும் முடிந்துள்ளது. இவையனைத்தும் இவ்வகையில் பாரதியின் வாாிசாகத் தளைய சிங்கத்தினைத் தெளிவாகவே இனங்காட்டி விடுகின்றன.

இந்தியத் தமிழிலக்கிய மரபில் பாரதிக்கு இவ்வகையிலான வாாிசு என எவரையும் சுட்டிவிட முடியும் எனத் தோன்றவில்லை. சிந்தனைக் கனம் கொண்ட படைப்பாளி என்று பாரதியைக் குறித்த விமர்சனப் புாிதல் இன்றுள்ளதா என்பதே ஐயத்திற்கிடமானது. பாரதியை வலிந்து ‘கார்ட்டூன் ‘ வரைய வைத்தவர்களுக்கு இவ்வகையில் அவரைப் புாிந்து கொள்ளும் படியாக அவர் தோற்றமளிக்காததில் வியப்பில்லை. அவாிடமிருந்து உரைநடையை மட்டுமே பெற்றுக்கொள்ளத் தீர்மானித்தவர்களுக்கு இது குறித்து அக்கரையுமிருந்ததில்லை.

புதுமைப்பித்தனைச் சிந்தனை கனம் கொண்ட படைப்பாளி எனச் சுட்டிவிட இயலாது. அதற்கான ஒழுங்கு உழைப்பு எதுவுமே அவாிடம் இருந்ததில்லை. உள்ளுணர்வின் ஒளியில் சில பாய்ச்சல்களைப் படைப்புகளில் அவரால் நிகழ்த்த முடிந்துள்ளது. இன்றளவும் இதில் அவருக்கு நிகரான மற்றொரு படைப்பாளியைத் தமிழில் காண்பதாிது. பாரதியும் தளைய சிங்கமும் நிகழ்த்தியது இதை அல்ல. சிந்தனையை மேலெடுத்துச் செல்வதற்கான நிதானமும் உழைப்பும் இவர்களிடமிருந்துள்ளது. தமிழ் நவீனத்துவமோ எலியட்டின் மொழியினைத் தமிழ்ப் படுத்துவதிலேயே ஓடி ஓடி இளைத்தது. ஜெயகாந்தன் போன்றவர்களுக்கோ சிந்தனாவாதி என்ற பாவனையைக் காப்பாற்றிக் கொள்ளத்தான் முடிந்துள்ளது. இந்நிலையில் ஈழத்தமிழ் இலக்கிய மரபுதான் இவ்வகையிலான பாரதியின் வாாிசினைப் பெற்றுள்ளது.

பாரதிக்கும் தளையசிங்கத்திற்குமான இடைவெளியும் அதிகம். பாரதி படைப்பாளி என்ற எல்லையை ஒருபோதும் கடக்க விரும்பியதில்லை. தளையசிங்கத்துடன் ஒப்பிடும்போது அவர் சிந்தனையின் பரப்பும் சிறியதுதான். ஆனால் தன் சிந்தனைத் தேடல்களைப் படைப்பியக்கத்திற்கு உரமாக்கிக் கொண்டவர். இதனால்தான் அவர் படைப்பினூடாக மட்டுமே அவர் சிந்தனை உலகின் பாிமாணங்களைத் தாிசிக்க முடிகிறது. மு.தளையசிங்கத்தின் நிலைபாடு இதுவல்ல. ஒரு சிந்தனாவாதியாக முன்செல்லவே அவர் விரும்பியுள்ளார். தன் பாதையைத் திட்டமிட்டு அமைத்துக்கொள்ளவும் அவரால் முடிந்துள்ளது. இதனால் தான் ஒரு படைப்பாளியாக அவர் சாதனையை அவருடைய துவக்ககால படைப்புகள் தான் உணர்த்தி நிற்கின்றன. ‘ஒரு தனி வீடு ‘/ ‘புதுயுகம் பிறக்கிறது ‘/ ‘ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி ‘ போன்றவையே அவரைக் கலைஞனாக இனங்காட்டுகின்றன. ஆனால் அவர் சிந்தனையின் தீவிரத்தை ‘போர்ப்பறை ‘/ ‘மெய்யுள் ‘ ஆகியவற்றில் தான் இனங்காண முடிகிறது.

ஈழத்தமிழிலக்கியம் குறித்தான விமர்சனப் புாிதலைக் கட்டமைக்க விரும்பும் இந்தியத் தமிழ் வாசகன் எதிர்கொள்ளும் சிக்கல்கள் பல. மொழி ஒன்றாக இருப்பினும் கூட/ ஈழத்தமிழ: வாழ்வு அவனுக்கு முற்றிலும் அந்நியமானது. இந்நிலையில் ஈழத்தமிழ்ப் படைப்பின் மீதான அவன் பார்வை புறப்பர்வை என்ற நிலையில்தான் அமைய இயலும். ஈழத்தமிழ்ப் படைப்போ இந்தியத் தமிழ் வாசகனால் எட்ட இயலாத தன் நுட்பங்களை ஈழத்தமிழ் வாசகனுக்குச் சுலபமாக உணர்த்தக்கூடும். இங்கு ஈழத்தமிழ் வாசகனின் பார்வை அகப்பார்வையாக அமைந்து

விடுகிறது. இவ்விரு பார்வைகளுக்கிடையிலும் வேறுபாடுகள் இருந்தே தீரும். இன்று இந்தியத் தமிழ் வாசகன் தன் சிந்தனையைத் தெளிவுபடுத்த தேர்ந்தெடுக்கும் ஈழத்தமிழ்ப் படைப்பாளியின் படைப்புக்களின் முழுமையையும் தன் வாசிப்பிற்குள்ளாக்கிவிட முடியும் என்பதல்ல. இன்றையச் சூழலில் இது நடைமுறைக்குச் சாத்தியமானதுமல்ல. பத்மநாபஐயரும்/ இயேசுராஜாவும்/ குலசிங்கமும் இப்போது கையெட்டும் தூரத்தில் இல்லை. அதுபோலவே ஈழத்தமிழ்ப் படைப்பாளியின் படைப்புக்கள் வெளியான காலவாிசைக் குறித்த அறிவும் இந்தியத் தமிழ் வாசகனுக்கு எட்டா கனிதான். துல்லியமான விமர்சனப் புாிதலுக்கு இவையெல்லாம் இன்றியமையாதன. என்றாலும் இருப்பதைக் கொண்டு திருப்திபட்டு விட்டு இயங்குவது அவசியம். ஈழத்தமிழ்ப் படைப்புகள் மீது விமர்சனப் புாிதலை முன்வைப்பது/ விமர்சன மதிப்பீட்டினை எழுப்புவது காலத்தின் தேவை சார்ந்தது. சமூக உணர்வு கொண்ட விமர்சகன் இன்று செயல்பட்டாக வேண்டும். எந்த விமர்சகனுக்கும் தன் உணர்வுகளைச் செம்மைப்படுத்திக் கொள்ள காலம் தொடர்ந்து வாய்ப்பளித்துக் கொண்டே இருக்கும். உணர்வுகளிலேற்படும் மாறுதல்களை மொழிப்படுத்துவதே விமர்சகனின் நேர்மையான இயக்கம். மு.தளையசிங்கம் படைப்புக்கள் மீதான தன் விமர்சனப் புாிதலைக் கட்டமைக்கவிரும்பும் இந்தியத் தமிழ் வாசகன் யாரானாலும் இது பொருந்தும்தான்.

தளையசிங்கம் படைப்புக்களின் முழுமையை இந்தியத் தமிழ் வாசகன் இன்று தன் வாசிப்பிற்கு உட்படுத்திவிட இயலாது. ‘ஒரு தனிவீடு ‘/ ‘புதுயுகம் பிறக்கிறது ‘/ ‘ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி ‘/ ‘போர்ப்பறை ‘/ ‘மெய்யுள் ‘ ஆகியனதான் இன்று வாசிப்பிற்குக் கிடைக்கின்றன. ‘விமர்சன விக்கிரங்கள் ‘/ ‘மூன்றாம் பக்கம் ‘/ ‘முற்போக்கு இலக்கியம் ‘ போன்ற அவருடைய விமர்சன ஆக்கங்களும்/ ‘கல்கிபுராணம் ‘/ ‘யாத்திரை ‘/ ‘ஒளியை நோக்கி ‘ போன்ற அவருடைய நாவல்களும்/ அவரே தன் கட்டுரைகளில் சுட்டிச்செல்லும் ஆரம்பகால சிறுகதைகளும் எப்போதுமே இந்தியத் தமிழ் வாசகனின் பார்வைக்குக் கிடைத்ததில்லை. தளையசிங்கத்தின் படைப்புக்களின் முழுமையை உள்ளடக்கிய பெருந்தொகுப்பு ஒன்றின் தேவை உணரப்பட்டாலும்/ சமகாலச் சூழலில் இதற்கான சாத்தியமில்லை என்றே கூறவேண்டும்.

தளையசிங்கம் என்னும் பெயர் இந்தியத் தமிழ் வாசகனுக்கு முற்றிலும் அந்நியமானதல்ல. தளையசிங்கம்/ எஸ்.பொன்னுத்துரை போன்ற ஈழத்தமிழ்ப் படைப்பாளிகள் இந்தியத்தமிழ் வாசகர்களுக்கு ஓரளவு அறிமுகமானவர்களே. ஆனால் இவ்வறிமுகம் இந்தியத் தமிழ் வாசகர்கள் நன்கறிந்த ஈழத்தமிழ் விமர்சகர்களான கைலாசபதி/ சிவத்தம்பி போன்றவர்களின் விமர்சன செயல்பாட்டின் மூலம் நிகழ்ந்தவையல்ல. சி.சு.செல்லப்பாவின் எழுத்து இதழுடன் தளையசிங்கத்திற்கு தொடர்பிருந்தது. எஸ்.பொன்னுத்துரையின் ‘தீ ‘ நாவல் தொடர்பான விவாதத்தில் தளையசிங்கத்தின் பங்களிப்புமிருந்தது. 1985 ‘யாத்திராவில் ‘ வெங்கட் சாமிநாதனுக்கு அவர் எழுதிய கடிதங்கள் வெளிவந்துள்ளன. அவருடைய

மரணத்திற்குப் பின் எழுபதுக்களின் இறுதியிலும்/ எண்பதுக்களின் ஆரம்ப வருடங்களிலும் தளையசிங்கத்தின் எழுத்துக்கள் இந்தியத்தமிழ் வாசகர்களின் கவனிப்பிற்குள்ளாயின. ‘காகங்களின் ‘ இலக்கியக் கூட்டத்தில் தளையசிங்கத்தின் எழுத்துக்களும் விவாதிக்கப்பெற்றன. எண்பதுக்களின் ஆரம்ப வருடங்களில் தமிழ் நவீனத்துவம் அதன் உச்ச நிலையை எட்டியபோது/ தளையசிங்கத்தின் படைப்புகள் தீவிர வாசிப்பினைப் பெற்றன. தளையசிங்கத்தின் படைப்புகளில் இயல்பாக அமைந்துள்ள நவீனத்துவத்தின் சாயல் இதன் காரணமாகலாம். அவருடைய ‘புதுயுகம் பிறக்கிறது ‘ தொகுப்பிலடங்கிய சிறுகதைகள் முன்வைக்கும் ‘மரபு எதிர்ப்பு ‘ நவீனத்துவம் சார்ந்தது. என்றாலும் தளையசிங்கத்தை நவீனத்துவ படைப்பாளியாக இனங்காண்பதில் இடையூறுகளிருக்கின்றன. ‘ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி ‘ சுட்டும் ‘பொதுப்பின்னணிக்கு ‘ முரணான எழுத்தியக்கம் மீதான எதிர்ப்புணர்வு நவீனத்துவத்திற்கு வெகு அருகில் அவரைக் கொண்டு வந்து விடுகிறது. எழுத்தைச் சமூக மாற்றத்திற்கான கருவியாகக் கீழிறக்கும் போக்கினோடு இவ்வெதிர்ப்பு நவீனத்துவத்தைப் போலவே முரண்படுகிறது. ஆனால் ‘பழைய ஞானிகளுக்குப் பதிலாக இன்றைய உலக சமூகத்தில் அதிகமாக இருப்பவர்கள் இந்தக் கலைஞர்களும்/ எழுத்தாளர்களுமே ‘ என ஞானிகளையும் எழுத்தாளர்களையும் நேர்க்கோட்டில் காணும் அவருடைய கருத்தாக்கம் நவீனத்துவத்துடன் முரண்பட்டு நிற்கின்றது.

இந்தியத் தமிழ்ச் சூழலில் எண்பதுக்களில் தளையசிங்கம் எழுத்துக்கள் கவனிக்கப்பட்டமைக்கான மற்றொரு காரணத்தினையும் இங்குக் குறிப்பிடவேண்டும். கட்சி சாரா மார்க்சியர்களின் நெருக்குதலை நவீனத்துவம் எதிர்கொள்ளும்படி நேர்ந்த காலமிது. குறிப்பாக மார்க்சியப் போக்கிலிருந்து அந்நியப்பட்டு நவீனத்துவத்தை அரவணைத்துக் கொண்ட சுந்தரராமசாமி/ ஜ.நாகராஜன் போன்றவர்களுக்கு முற்றிலும் அறிவுதளத்தில் இயங்கும் மார்க்சியர்களை எதிர்கொள்ளும்படியானது. இதற்குத் தளையசிங்கத்தின் எழுத்துக்கள் தகுந்த கேடயமாகப் பயன்பட்டன. மார்க்சியத்ததை ஏற்றுக்கொண்டு அதனையும் கடந்து பயணித்தாக வேண்டுமென்ற அவருடைய சிந்தனை காலப்பொருத்தம் கொண்டதாக அமைந்தது.

தளையசிங்கம் குறித்தான சுந்தர ராமசாமியின் விமர்சனப் பதிவுகள் இச்சந்தர்ப்பத்தில்தான் முன்வைக்கப்பட்டன. 1982-ல் கோவை இலக்கு மாநாட்டில் ‘தளையசிங்கத்தின் பிரபஞ்ச யதார்த்தம் ‘ கட்டுரை வடிவில் சுந்தர ராமசாமியால் முன்வைக்கப்பட்டது. ‘ஒரு விவாதத்திற்கான குறிப்பு ‘ என இக்கட்டுரைக்கு அன்று மகுடமிடப்பட்டிருந்தாலும் எவ்வித விவாதங்களையும் தொடர்ந்து இது எழுப்பவில்லை. ஈழத்தமிழ்ப் படைப்பாளிகள் குறித்த இந்தியத் தமிழ் விமர்சனப் பதிவுகள் அபூர்வமானவை என்னும் காரணத்தினால் இக்கட்டுரையை ஒதுக்கிவிட்டு முன் செல்ல இயலாது.

சுந்தரராமசாமி தன் கட்டுரையின் முற்பகுதியில் தளையசிங்கத்ததைச் சிந்தனையாளராக இனங்காண்கிறார். பிற்பகுதியில் அவரை விமர்சகராக எதிர்கொள்கிறார். ‘உள்ளடக்க ஆராய்ச்சி சார்ந்து படைப்பை மதிப்பிட்டதில் பெற்ற கோணல் ‘ என தளையசிங்கத்தின் விமர்சனப் பார்வையில் ஒருவித கோணலை இனங்காண்கின்றார். இத்தகைய ஒரு முடிவிற்குச் சுந்தரராமசாமி வருவதற்கான காரணம் போர்ப்பறை நூலுக்கு தளையசிங்கம் தந்த முன்னுரையின் ஒரு பகுதியும்/ கலை விஞ்ஞானக் கணக்கெடுப்பு என்னும் கட்டுரையும்தான். முன்னுரையின் ஒரு பகுதியில் தளையசிங்கம் புதுமைப்பித்தனையும் ஜெயகாந்தனையும் ஒப்பிடுகிறார். அதுபோல் கலை விஞ்ஞானக் கணக்கெடுப்பு கட்டுரையில் ஞானியையும் படைப்பாளியையும் நேர்கோட்டில் காணும் தளையசிங்கம் ஞான அலையின் எழுச்சியை புதுமைப்பித்தன் படைப்புக்களில் அல்ல ஜெயகாந்தன் படைப்புக்களில்தான் இனங்காண்பதாகச் சுட்டுகிறார். புதுமைப்பித்தன் படைப்புகள் ஆத்ம வீழ்ச்சியைக் கேலிக்குள்ளாக்க மட்டுமே செய்கின்றன – ஜெயகாந்தன் படைப்புகளோ அதன் பிறப்பை உணர்த்துவதாகக் கூறுகிறார். ஜெயகாந்தனின் எல்லா படைப்புகளையும் முன்வைத்த விமர்சனப் பதிவு அல்ல ‘பிரம்மோபதேசம் ‘/ ‘விழுதுகள் ‘/ ‘பிரளயம் ‘ என்னும் மூன்று கதைகளை மட்டுமே கணக்கில் கொண்ட விமர்சனப் பதிவு என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

‘கலை – ஒரு விஞ்ஞானக் கணக்கெடுப்பு ‘ கட்டுரையில் தளையசிங்கம் தனக்கென்று ஒரு விமர்சன அடிப்படையை உருவாக்கிக் கொள்கின்றார். இதனடிப்படையில் தளையசிங்கத்திற்குப் புதுமைப்பித்தனை விட ஜெயகாந்தன் முக்கியமானப் படைப்பாளியாகப்படுகிறார். குறிப்பிட்ட ஒரு படைப்பாளியைக் குறித்த விமர்சகனின் மதிப்பீடு அவன் விமர்சன அடிப்படையைப் பொறுத்தது. தளையசிங்கத்தின் விமர்சன அடிப்படையைத்தான் எதிர்கொள்ள வேண்டும். முடிவை அல்ல. ஏழாண்டு இலக்கிய வளர்ச்சியில் தளையசிங்கம் புதுமைப்பித்தனையே மரபின் முன்னோடிக் கலைஞனாகக் காண்கிறார் என்பதையும் இங்கு நினைவில் கொள்ள வேண்டும். மெய்யுள் காலகட்டத்தில் புதுமைப்பித்தன் மட்டுமல்ல ஜெயகாந்தனும் அவர் மதிப்பீட்டில் உயர்விடத்தில் இல்லை.

ஆனால் சுந்தரராமசாமி இத்தகைய முடிவிற்கு வரவில்லை. தளையசிங்கம் வடிவம் குறித்த உணர்வற்ற விமர்சகர் என்ற நிலைப்பாட்டினை மேற்கொண்டு விடுகிறார். ‘படைப்பின் உள்ளடக்கத்தை அலசி ஆராயும் முடிவுகள் சிந்தனை உலகைச்சார்ந்த விஷயம். இலக்கிய விமர்சனம் அல்ல. படைப்பில் உள்ளடக்கத்தைப் பார்ப்பது உள்ளடக்கத்தைப் பார்ப்பதாகுமே தவிர படைப்பைப் பார்ப்பதாகாது. உள்ளடக்க ஆராய்ச்சியில் படைப்பு கீழ்நிலைக்கு இறக்கப்படுகிறது. படைப்பில் உள்ளடக்க உருவக்கூறுகள் உருகி இறுகி புதியவடிவம் எடுத்து விடுகின்றன. இந்த வடிவத்தைச் சிதைக்காமல் இதன் கூறகளைப் பிாிக்க முடியாது. இம்முழுமையை மறந்து படைப்பின் உள்ளடக்கத்தில் கொள்ளும் கருத்து வேற்றுமையினால் கருத்தொற்றுமை கொண்ட மற்றொரு படைப்பை முந்தைய படைப்புக்கு மேலாக வைப்பது

மிகத்தவறான முடிவுகளுக்கு இட்டுச்செல்லும் ‘. (சுந்தரராமசாமி/ தளையசிங்கத்தின் பிரபஞ்ச யதார்த்தம்/ காற்றில் கலந்த பேரோசை/ ப 113) இங்கு தளையசிங்கத்தின் இலக்கிய அணுகுமுறையை விாிவாகவே ஆராய்;ந்துள்ளார்.

தளையசிங்கம் குறிப்பிடும் ‘ஞான அலை ‘ சுந்தர ராமசாமி குறிப்பிடுவதுபோல் உள்ளடக்கம் சார்ந்ததல்ல. படைப்பில் துலங்கும் படைப்பாளியின் பார்வை தொடர்பானது. உள்ளடக்கம் சமூகம் சார்ந்ததென்றால் பார்வை படைப்பாளியைச் சார்ந்தது. படைப்பின் முழுமையிலிருந்து/ சுந்தரராமசாமி குறிப்பிடுவதுபோல் உள்ளடக்க உருவக்கூறுகள் உருகி இறுகி உருவான படைப்பின் முழுமையிலிருந்து உணரமுடிவது. உள்ளடக்கம் சார்ந்துதான் தளையசிங்கத்தின் விமர்சன இயக்கம் அமைந்திருந்தது என்பது உண்மைக்கு மாறானது. ஏழாண்டு இலக்கிய வளர்ச்சியில் தளையசிங்கம் உருவக்கூறான மொழியின் செயற்கைத் தன்மையைக் கொண்டே எஸ்.பொன்னுத்துரையை எதிர்கொண்டுமிருக்கிறார். ‘போர்ப்பறை ‘ தொகுப்பிலேயே ‘புதிய வார்ப்புகள் ‘ கட்டுரையில் தளையசிங்கம் ‘புதிய வார்ப்புகள் பெரும்பாலும் உள்ளடக்கத்தின் புதுமையை அழுத்துமளவிற்கு உருவத்தின் புதுமையை அழுத்துவதாய் இல்லை ‘ என ஜெயகாந்தன் கதைகள் குறித்தான தன் பதிவை முன்வைத்துமுள்ளார். ‘உள்ளடக்கத்தையும் உருவத்தையும் பிாித்து பார்க்க முடியாது. உள்ளடக்கம் தன்னியல்பாகவே உருவத்தையும் எடுக்கிறது ‘ என வடிவம் குறித்தான தன்பார்வையையும் தெளிவுபடுத்தியுமுள்ளார். இருப்பினும் சுந்தரராமசாமி வடிவ உணர்வற்றவராகவே தளைய சிங்கத்தைக் காண்கின்றார். ‘கலை: ஒரு விஞ்ஞானக் கணக்கெடுப்பு ‘ கட்டுரையில் மெளனி கதைகள் குறித்த அவருடைய விமர்சனப் பதிவுகளை முன்வைத்துள்ளார். உள்ளடக்க ஆராய்ச்சி சார்ந்தே தளையசிங்கம் படைப்புகளை மதிப்பிடுகிறார் என்ற சுந்தரராமசாமியின் அவதானிப்பை உறுதிசெய்யும்படியாக இதுவும் அமையவில்லை. ஒருவகையில் சுந்தரராமசாமி கொண்டிருந்த நவீனத்துவ நிலைபாட்டினை இத்தவறான புாிதலுக்குக் காரணமாகச் சுட்ட வேண்டும். நவீனத்துவம் எழுத்தின் மூலம் சமூக மாற்றம் என்பதனை உறுதியாக மறுத்தது. எழுத்தின் இறுதி இலக்காக அது அடையும் துல்லியத்தையே கண்டது. தன்னிலிருந்து வெளியே எதனையும் காண விரும்பாத/ மாறுதல்களை எதிர்கொள்ள மறுக்கும் வறட்டு நவீனத்துவம் வறட்டு மார்க்சியத்தை விட ஆபத்தானது.

சிந்தனை உலகில் பயணித்துக் கொண்டிருந்தாலும்/ தளையசிங்கம் இலக்கியத்தை முன் நிறுத்தியே இயங்கியுள்ளார். இலக்கியத்தினூடாகச் சிந்தனை உலகில் கால்தடம் பதிக்கும் தளையசிங்கம் தன்பயணத்தின் முடிவில்/ ‘இலக்கியத்ததை அழிக்கும் இலக்கியம் ‘ என்னும் இலக்கினை நோக்கி முன் நகர்ந்துள்ளார். இவ்விரண்டிற்குமிடையில் இலக்கியம் குறித்தான அவர் பார்வையில் பெரும் மாறுதல்கள் நிகழ்ந்துள்ளன. மேலோட்டமான ஒரு பார்வையில்

இம்மாறுதல்கள் முரண்பாடுகளாகக் காட்சி தந்தாலும்/ ஆழ்ந்து நோக்கும்போது/ முரண்பாடுகளல்ல என்ற முடிவிற்குத் தான் வரமுடிகிறது. அவர் பார்வையில் அவ்வப்போது நிகழும் மாறுதலுக்கான விதைகளை இறந்த காலத்தில் இனங்கண்டு படிமுறை வளர்ச்சி நிலைகளாக இம்மாறுதல்களை ஒழுங்குபடுத்தி விடவும் முடிகிறது.

வாசக அணுகலுக்குத் தளையசிங்கம் படைப்புலகம் எளிமையானதல்ல. கட்டுரைகளில் தனக்கே உாித்தான ஒருவித தர்க்க ஒழுங்கைக் கட்டமைத்துக் கொண்டுள்ளார். படைப்பாக்கத்தில் வாசகப்புாிதலில் மிகுந்த நம்பிக்கைக் கொண்டியங்கியவர் தளையசிங்கம். இதனால் வாசகனின் தகுந்த ஒத்துழைப்பின்றி/ அவர் படைப்புக்கள் மீதான வாசிப்பு முழுமை அடைய இயலாது. நாவல்/ சிறுகதை/ கவிதை/ விமர்சனம் இவை ஏதுமில்லா இலக்கிய வடிவம் என அவர் படைப்புலகம் விாிந்தும் உள்ளது. வாசக வசதிக்காக அவர் படைப்புலகை வகை செய்து கொள்வதும் இன்றியமையாததாகிறது. ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி/ போர்ப்பறை/ மெய்யுள் என நூல்கள் வெளிவந்த கால அடிப்படையில் தளையசிங்கம் படைப்புக்களை வகைமை செய்து கொள்வது மொருத்தமானதாக அமைகிறது. இவற்றுள் ‘மெய்யுள் ‘ அவருடைய இறப்பிற்குப் பின்னரே தொகுக்கப்பட்டது. என்றாலும் இத்தொகுப்பிலடங்கிய படைப்புக்களின் பொதுத்தன்மை கருதி தனிக்காலப் பகுதி சார்ந்ததாக வகை செய்வதில் தவறேதுமில்லை.

ஏழாண்டு இலக்கிய வளர்ச்சியைத் தளையசிங்கம் என்னும் இலக்கிய ஆளமையின் துவக்கப் புள்ளியாகக் கருதிவிட இயலாது. 1964-க்கும் 1965-க்குமிடையே இவ்விமர்சனக் கட்டுரை ‘செய்தி ‘ இதழில் தொடராக வெளிவருவதற்கு முன்னமே புதுயுகம் பிறக்கிறது. தொகுப்பிலடங்கிய கதைகள் முதலான சிறுகதைகளும்/ ‘ஒரு தனிவீடு ‘ முதலான நாவல்களும்/ வேறு சில விமர்சனக் கட்டுரைகளும் வெளிவந்துள்ளன. ஓர் இலக்கிய ஆளுமையை இனங்காண இவை போதுமானவையே என்றாலும் தளையசிங்கத்தின் ஒருகால கட்டத்து இலக்கியப் பார்வையைத் தெளிவுபடுத்திக் கொள்ள ‘ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி ‘யின் பங்களிப்பே முதன்மையானது.

‘ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி ‘ கைலாசபதி என்ற ஈழத்தமிழ் விமர்சகாின் இலக்கிய செயல்பாடுகள் மீதான விமர்சனமே. என்றாலும் தனிமனிதனின் பலவீனங்கள் குறித்த பதிவுகளாகக் குறுகிவிடாமல்/ ஒரு காலகட்டத்து இலக்கியம் முழுமையின் மீதான விமர்சனமாக/ ஈழத்து கலை சாதனை குறித்தான கணக்கெடுப்பாக விஸ்வரூபம் கொண்டுள்ளது. இதற்கிணையான விமர்சனப் படைப்பை இந்தியத் தமிழ் விமர்சன மரபில் கூட அவ்வளவு எளிதாகச் சுட்டிவிட இயலாது. கைலாசபதி க.நா.சு. குழு மீது வைத்த விமர்சனத்தோடு இதனை ஒப்பிடுவோமானால் தளையசிங்கம் எந்த அளவிற்கு நேர்மையான பரந்த மனம் கொண்ட விமர்சகராகச் செயல்பட்டுள்ளார் என்பதனை உறுதிப்படுத்த இயலும்.

இலக்கியத்திற்கும் அம்மொழி பேசும் மக்கள் வாழ்வின் பொது பின்னணிக்குமிடையே இருந்தாக வேண்டிய உறவே ஏழாண்டு இலக்கிய வளர்ச்சியில் துலங்கும் தளையசிங்கத்தின் இலக்கியப் பார்வையின் மையமாக அமைகிறது. தளையசிங்கம் 1965-ஐ ஈழ சாித்திரத்தில் ‘ஒரு புதிய ஓட்டத்தின் ஆரம்பம் ‘ என கணிக்கின்றார். பண்டாரநாயக்கா அரசு சிங்களத்தை ஆட்சி மொழியாக்கி/ துயிலில் ஆழ்ந்திருந்த ஈழத்தமிழரை உலுக்கி எழச்செய்தது. ‘ஈழத்தமிழன் தன் உாிமைக்காகப் போராடத் துவங்கிய நேரத்தில் இலக்கியத்திலும் தன் தனித்தன்மையைக் காட்டத் தொடங்கினான் ‘. இங்கு 1956-க்குப்பின் தோற்றம் கொண்ட ஈழத்தமிழ் இலக்கிய மரபின் புது எழுச்சியை வாழ்வின் பொதுப் பின்னணியுடன் தொடர்புப் படுத்திக் காண்கிறார் தளையசிங்கம். இந்திய விடுதலைப்போர் தோற்றுவித்த இலக்கிய எழுச்சியாக மணிக்கொடி மரபை இனங்காணும் தளையசிங்கம்/ ஈழத்தமிழ் இலக்கிய மரபின் இப்புது எழுச்சியை இதனோடு ஒப்புமைப்படுத்தவும் செய்கிறார். ஆனால் ஈழ இலக்கிய மரபில் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படும் ஒரு இலக்கியப் போக்கு இப்பொதுப் பின்னணிக்கு முரணாக அமைவதை இனங்காணும் தளையசிங்கம் கைலாசபதி வடிவில் வந்த ‘சந்தர்ப்ப விபத்தையே ‘ இதன் காரணமாகக் காண்கிறார். ஈழத் தமிழிலக்கிய மரபு புதுவளர்ச்சியின் பலனை முழுமையாக அனுபவிப்பதற்கு கைலாசபதி தோற்றுவிக்கும் இச்செயற்கையான சூழல் தடையாக அமைந்து விடுவதையும் தளையசிங்கம் அழுத்தமாகவே சுட்டுகிறார்.

கைலாசபதியைக் கடுமையான விமர்சனத்திற்குள்ளாக்கும் தளைய சிங்கம்/ ஈழ இலக்கிய மரபில் அவர் சாதனைகளைச் சற்றும் குறைவாக மதிப்பிடவுமில்லை. ஆனால் அவர் ‘புராணமாக்கபங்படுவதை மட்டுமே கடுமையான சொற்களில் எதிர்கொள்கிறார். நேர்மையான இலக்கியக் கணக்கெடுப்பில் நியாயமான இடம் யார்யாருக்கெல்லாம் கொடுக்கப்பட வேண்டுமோ அதனை அளிக்கவும் அவர் தயங்கவில்லை. இந்த நேர்மை கைலாசபதி தோற்றுவித்த போக்கிற்கும் அவருடைய இலக்கியப் பார்வைக்கும் இல்லை என்பதே கைலாசபதியின் மீதான தளையசிங்கத்தின் விமர்சனக் குற்றச்சாட்டாக அமைகிறது. எனினும் கைலாசபதியின் சொந்த வாழ்வை விமர்சனத்திற்குள்ளாக்கும் கீழான உத்தியைத் தளையசிங்கம் கையாண்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏழாண்டு இலக்கிய வளர்ச்சியில் விதிவிலாக்காக ஒரே ஒரு சிறுகுறிப்பு மட்டுமே அமைந்துள்ளது. ‘பத்திாிகைக் கொம்பனியின் பங்குதாரர்களின் உறவின் காரணமாய் ‘ தினகரன் இதழுக்குக் கைலாசபதி ஆசிாியரானார் என்பதே அது. ஆனால் க.நா.சு-வின் சொந்தவாழ்வைப் பயன்படுத்தி கைலாசபதி அவர்மீது சுமத்தியுள்ள அவதூறுகளோடு ஒப்பிடும்போது இது பொருட்படுத்துதலுக்கு அருகதை அற்றதே.

‘ஏழாண்டு இலக்கிய வளர்ச்சியில் ‘ கைலாசபதியை எதிர்கொள்வதினால் தளையசிங்கத்தை மார்க்சிய எதிர்ப்பாளராக இனங்காண வேண்டுமென்பதில்லை.

தன்னையும் தன்போன்றவர்களையும் இடதுசாாி சிந்தனையாளர்கள் என்றே குறிப்பிடவும் செய்துள்ளார். தமிழர்களின் இறுதி தீர்வு மார்க்சியர் சுட்டும் சமூகப்புரட்சியில்தான் அமைய இயலும் என்பதிலும் அவருக்கு நம்பிக்கையுள்ளது. என்றாலும் தமிழர்களின் நம்பிக்கையை அது பெறமுடியாமல் போனதிற்கான காரணங்களையும் அவர் ஆராயாமலில்லை. ‘கொம்யூனிஸ்ட் கட்சிக்குத் தமிழர்களின் நிலையைவிட மொஸ்கவ்வின் நிலைதான் பிரதானம். தூதுவராலயம் ஒன்றை அது ஓர் இனத்தின் உாிமைகளின் செலவில் கூடப்பெறத் தயாராயிருந்தது ‘. கைலாசபதியை மார்க்சியர் என்ற காரணத்தினால் அவர் எதிர்க்கவுமில்லை. இன்னும் சொல்லப்போனால் தளையசிங்கம் அவரை மார்க்சியராக இனங்காணவுமில்லை. ‘சிவில் சேவையில் சேர்ந்திருந்தாலோ அல்லது ஆரம்பத்திலேயே சர்வகலாசாலை விாிவுரையாளராக வந்திருந்தாலோ இன்றைய இலக்கிய வட்டாரத்தில் கேள்விபட்டிருக்கக் கூட மாட்டோம் ‘ என்றுதான் கைலாசபதியை மதிப்பிடவும் செய்துள்ளார். கைலாசபதியுடன் இணைந்து செயல்பட்ட சிவத்தம்பியையும்/ ஏ.ஜே.கனகரத்னாவையும் கூட ‘துரைத்தன அறிவாளி வர்க்க பிரதிநிதிகளாகத்தான் ‘ தளையசிங்கம் மதிப்பிடுகிறார். காவலூர் ராசதுரை/ சில்லையூர் செல்வராசன் போன்றவர்களும் சந்தர்ப்பவிபத்தால் உள்ளே புகுந்தவர்கள் என்றே குறிப்பிடுகிறார். ஆக வாழ்வின் பொதுப்பின்னணி தோற்றுவித்த எழுச்சியின் அடிப்படையிலான இயக்கம் இவர்களுடையதல்ல.

தளையசிங்கத்தைப் பொறுத்தவரையில் இலக்கிய செயல்பாடு என்பது படைப்பு சார்ந்தது. கைலாசபதி எப்போதுமே எழுத்தின் மூலம் தன்னை வெளிப்படுத்திக் கொண்டவரல்ல. தன்னை உயர்த்திப் பிடிக்கும் ஒரு குழுவைத் தோற்றுவித்து/ அது சிதைவடையாமல் பாதுகாத்தது மட்டுமே அவருடைய இலக்கிய செயல்பாடு. தலைவன் – தொண்டன் என்ற உறவு நிலை இலக்கியம் சார்ந்ததல்ல. அது அரசியல் தொடர்பானது. இதன் இலக்கு அதிகாரமே. இதனால்தான் அறிவாற்றலில் தன்னைவிட மேலான ஏ.ஜே.கனகரத்னாவை வெளியேற்றும்படி கைலாசபதிக்கு நேர்ந்தது. தன்னை உயர்த்துபவர்களுக்குப் பிரசுர வசதியைச் சாதகமாக்கி/ தன் நிலையை உறுதிசெய்து கொண்டார் கைலாசபதி. பிரசுர வசதி பெற்றவர்களும் கைலாசபதியை ஆதாித்து தங்கள் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டனர். 1956-க்கு முன்னமே முற்போக்கு இலக்கிய மரபில் செயல்பட்டு/ அதன் எதிர்கால நம்பிக்கையுமாகத் திகழ்ந்த எஸ்.பொன்னுத்துரை அதனை உதறிவிட்டு வெளியேறும்படி நிர்ப்பந்திக்க கைலாசபதிக்கு அவருடைய படைப்பாற்றலே காரணமாக அமைந்தது என்பதனையும் ஏழாண்டு இலக்கிய வளர்ச்சியில் தளையசிங்கம் நிறுவுகிறார். ‘கைலாசபதியை விட கெட்டிக்காரர்களான கனகரத்னா/ பொன்னுத்துரை போன்றவர்கள் மெதுவாக கட்சியிலிருந்து அதே ராஜதந்திர முறையில் அகற்றப்பட்ட பின் அதன் வளர்ச்சிக்கு உத்திரவாதம் கிடைத்து விட்டது. கடைசியில் க.கைலாசபதி என்ற பெயர் கைலாசபதியின் பெருநிழலுக்கு மட்டும் உாித்தாகிவிட்டது ‘. இங்கு தான் கைலாசபதி வளர்ச்சியைத் தடுக்கும் பேய் நிழலாக உருவெடுக்கிறார்.

ஈழத்தமிழ்ச் சமூகத்தில் சிறுபான்மையினரான தாழ்த்தப்பட்டவர்களின் இலக்கிய செயல்பாட்டையும் இலக்கியத்திற்கும் வாழ்வின் பொதுப் பின்னணிக்குமான உறவு நிலையில் தான் எதிர்கொள்கிறார். கைலாசபதியின் வருகைக்கு முன் ஈழத்தமிழ்ச் சூழலில் முற்போக்கு இலக்கிய மரபில் இயங்கிய படைப்பாளிகளுள் மிகப்பெரும்பான்மையோரும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினைச் சார்ந்தவர்களே என்னும் உண்மையை முன்வைத்து தளையசிங்கம் தன் பார்வையை விாிக்கின்றார். வாழ்வின் பொதுப்பின்னணியிலிருந்து அதற்கான நியாயமான காரணங்களையும் சுட்டுகிறார். சாதியை முன்நிறுத்தி இலக்கியத்தினை அணுகும் இப்போக்கு/ சாதியை மறுக்கும் (வெளிப்பார்வைக்கேனும்) சமகாலச் சூழலில் ஏற்கத்தக்கது தானா என்ற ஐயம் எழக்கூடும். ஆனால் தளையசிங்கம் சாதியைக் குறிப்பது பொதுப்பின்னணியிலிருந்து வேறான அவர்கள் வாழ்நிலையைச் சுட்டவே. ‘தாழ்த்தப்பட்ட சமூகநிலை ஆத்திரத்தையும்/ வெறுப்பையும் தூண்டி அதிகாரத்தை நாடச் செய்வது இயற்கை. அந்த அதிகாரத்தேடல் இல்லாவிடில் அதற்குப் பதிலாக நசிந்த குணமும்/ நக்கல் கலந்த பேச்சும்/ தருணத்துக்கு ஏற்ற மாதிாிச் சமாளித்துக் கொள்ளும் தந்திரமும் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் ஆயுதங்களாக இருக்கும் ‘. தளையசிங்கத்தின் இச்சிந்தனை எளிதில் புறக்கணித்து விடமுடியாதது. இச்சிறு வட்டத்தினைச் சார்ந்த எஸ்.பொன்னுத்துரையிடம் இயல்பாகக் குடி கொண்டிருந்த அதிகார விருப்பம் இம்மையத்திலிருந்து ஊற்றெடுப்பதாகவே தளையசிங்கம் கணிக்கின்றார். இந்த அதிகார விருப்பம் ஒருவகையில் படைப்பு திறனை முன்னெடுத்துச் செல்வது. மற்றொரு கோணத்தில் படைப்பு சக்திக்கே எதிரானது. எஸ்.பொன்னுத்துரையின் இலக்கிய செயல்பாட்டில் இரண்டையுமே தளையசிங்கத்தால் எதிர்கொள்ள முடிகிறது. ‘ஆத்திரத்தையும் வெறுப்பையும் வெளிக்காட்ட இலக்கியம் பயன்படுத்தப்படும்போது/ இலக்கியம் இலக்கியப் பண்பை இழக்கும் படியாகிறது ‘. ஆனால் வாழ்க்கை சூழல் எதுவாக இருப்பினும் அது கலையில் பிரதிபலித்தே தீரும் என்ற உண்மையையும் தளையசிங்கம் புறக்கணிக்கவில்லை. அது இலக்கியத்தின் கலைத்தன்மைக்கு எதிரானதாக அமைந்துவிடக்கூடாது என்பதே அவருடைய எதிர்பார்ப்பு.

எஸ்.பொன்னுத்துரையின் படைப்புத் திறனில் மிகுந்த நம்பிக்கை வைக்கும் தளையசிங்கம் கைலாசபதியின் முற்போக்கையும்/ அதற்கெதிரான பொன்னுத்துரையின் நற்போக்கினையும் ஒருபோலவே காண்கிறார். இரண்டுமே நேர்மையான இலக்கியச் செயல்பாடுகளுக்கு எதிரானவை. அதிகாரத்திற்கான கட்டமைப்புகளை உருவாக்குபவை. அதிகாரத்தையும் பிராபல்யத்தையும் கட்சிக்குள்ளாகவே அடக்க முயல்வது; அதற்காக எந்தவிதமான குறுக்கு வழிகளையும் ஏற்க தயாராக இருப்பது; சுய வழிபாடு நடத்திக் கொண்டு படைப்பின் மீதான விமர்சன எதிர்கொள்ளலை மறுப்பது என்பனவற்றையே இரண்டிற்குமான செயல்பாடாக தளையசிங்கம் இனங்காண்கின்றார். இவற்றுள் எதுவுமே இலக்கியம் தொடர்பானவையல்ல. எனவேதான் முற்போக்கு/ நற்போக்கு இவற்றிற்கிடையிலான

மோதலை அதிகாரம் பிராபல்யம் தொடர்பானது என்ற முடிவிற்கு வருகிறார். பழமைவாதிகளுடன் கைலாசபதியை எதிர்க்க பொன்னுத்துரை கூட்டு சேர்வது சூழலின் அவலத்தை இன்னும் அதிகாிப்பதாக தளையசிங்கம் மதிப்பிடுகின்றார். தளையசிங்கமும் கைலாசபதியுடனும் முற்போக்குடனும் முரண்படுகிறார்தான். ஆனால் இவை இரண்டுமல்லாத மூன்றாவது கோணத்தினையே தேர்வு செய்கிறார். இது கலைஞனின் கோணம்.

முற்போக்கினையும் நற்போக்கினையும் சமமாகக் கருதினாலும் கைலாசபதியையும்/ எஸ்.பொன்னுத்துரையையும் சமமானவர்களாக தளையசிங்கம் ஒருபோதும் கருதவில்லை. எஸ்.பொன்னுத்துரையைச் ‘சிருஷ்டித்திறன் கொண்ட உண்மையான எழுத்தாளனாக ‘ மதிக்கும் தளையசிங்கம் அவரை முற்போக்கிலிருந்து வெளியேற்றியவர்களை ‘மலட்டு வாத்திமாராக ‘த்தான் காண்கிறார். அவரைப் பொறுத்தவரையில் பொன்னுத்துரை புதிய பரம்பரைக்குாிய ஆயதடிச எழுத்தாளர். ‘உலக இலக்கியத் தரத்தைத் தொடுவதற்கு ஓடிக்கொண்டிருக்கும் ஒரு எழுத்தாளன் ‘. இவையனைத்தும் பொன்னுத்துரை மீதான வெற்று புகழ் மொழிகள் அல்ல. பொன்னுத்துரை படைப்பாளுமையின் பலம் பலவீனம் குறித்தான நீண்ட அலசலுக்குப் பின்வரும் முடிவுகளே.

ஏழாண்டு இலக்கிய வளர்ச்சியில் ஒரு ஆரோக்கியமான இலக்கிய மரபின் தொடர்ச்சியை பாரதி புதுமைப்பித்தனிலிருந்து தொடர்வதாக தளைய சிங்கத்தால் குறிப்பிட முடிந்துள்ளது. பாரதி புதுமைப்பித்தன் என்ற இணைப்பு இந்தியத் தமிழ்ச் சூழலில் எழுபதுக்களில்தான் முன்வைக்கப்பட்டது. தளையசிங்கத்தின் கலைப்பார்வையில் அறுபதுக்களின் முதற்பகுதியிலேயே இது விாிந்துள்ளது.

‘வாழ்வின் பொதுப் பின்னணிக்கிசைவான இலக்கியம் ‘ என்னும் தளைய சிங்கத்தின் இப்பார்வையை இன்னும் அழுத்தமாகத் துலக்குவனவாகவே அவருடைய இக்காலகட்டத்து இலக்கியப் படைப்புகளும் அமைந்துள்ளன. ‘ஒரு தனிவீடு ‘ நாவலும் தொழுகை/ கோட்டை/ இரத்தம் போன்றச் சிறுகதைகளும் ஈழத்தமிழ்ச் சமூகத்தின் ஆழ்மனதில் உருப்பெறும் குமறல்களை நுட்பமாக உணர்த்தி விடுகின்றன. பிரச்சாரகனின் ஓலமிடும் குரலோசையில் அல்ல. ஒரு கலைஞனின் மொழியில் உருக்கொள்ளும் அனுபவப்பதிவுகளாக.

‘தொழுகை ‘ கதையில் 14/ 12 வயதான இரு பெண் குழந்தைகளின் தாயான செல்லம்மாள்/ கணவன் மார்கழி விரதமிருந்து கோவிலுக்குச் சென்றிருக்கும் அதிகாலைப் பொழுதில்/ பனையேறி முத்துவுடன் உடல் புணர்ச்சி கொள்கிறாள். கதையில் சித்திாிப்பு கொள்ளும் ஒரே நிகழ்வு இந்த புணர்ச்சிதான். பின்னணியில் அவ்வப்போது கோவிலிலிருந்து வந்து விழும் பாவைப்பாடல்கள்/ அதுவும் அவள் கணவரான ஆறுமுகம் மாஸ்டர் குரலில் – எல்லா நிகழ்வுகளுக்கும் ஆன்மீகப் பாிமாணம் ஒன்றினை ஏற்றியபடி.

வாசகன் மனதில் செல்லம்மாள் மீது எவ்விதமான இழிவான உணர்வோ/ அதன் காரணமான வெறுப்புணர்வோ எழாததைக் குறிப்பிட்டாக வேண்டும். ஒழுக்க உணர்வு என்னும் வேலிக்கப்பால் வாசக மனதை நகர்த்திவிட படைப்பாளிக்கு முடிந்துள்ளதையே இதன் காரணமாகச் சுட்டவேண்டும். புணர்ச்சியின் முடிவில் முத்துவிற்குக் கூட அவள்மீது இழிவான எண்ணம் எதுவுமில்லாததை இங்கு குறிப்பிட வேண்டும். செல்லம்மாள் தங்கத்தால் செய்த அம்மன் சிலையின் அருள் செறிந்த தோற்றமாகவே காட்சி தருகிறாள். அவன் உடலும் புல்லாிக்கிறது. காதில் விழும் பாவைப்பாடலுக்கிசைவாக அவன் வாயும் எதையோ முணுமுணுத்தது. உடல் புணர்ச்சிக்குப் பின் ஆண் மனம் கொள்ளும் உணர்வல்ல இது. எதையோ முத்து நிறைவாக பெற்றுக்கொண்டதின் அடையாளம்.

செல்லம்மாளை எது தூண்டிவிடுகிறது. முத்துவை அவள் சந்தித்ததே பத்து நாட்களுக்கு முன்தான். அதுவரை அவளிடம் இத்தகைய எண்ணம் எதுவும் இருந்ததில்லை. வைரவர் கலை அவ்வப்போது வருவதுண்டு. அவருடனான பதினாறு வருட வாழ்க்கை ஒரு போல்தான். காலையில் எழுந்து குளிப்பது/ படத்துக்கு பூசை செய்து கும்பிடுவது/ அவர் பள்ளிக்கூடம் போகுமுன் சைவ சாப்பாடு ஆக்குவது/ பிள்ளைகளை பள்ளிக் கூடத்திற்கு விடுவது… ‘ சடங்காகிப் போன இவ்வாழ்வில் சலனங்களுக்கும் இடமில்லைதான். முத்துவைச் சந்திப்பது வரை இவ்வாழ்வில்/ அவாிடம் குறைகளிருப்பதாக அவளுக்குப் பட்டதுமில்லை. முத்துவுடனான இந்த உறவில் முதல் பாலியல் முனைப்பு அவளுடையதே என்னும்போது ஏன் என்ற கேள்வியின் பாிமாணம் இன்னும் கூடுகிறது. ஈழத்தமிழ்ச் சமூகம் கட்டிக்காத்த ஒழுக்கமரபு/ சமூக ஏற்றத்தாழ்வு எல்லாம் ஒரு கணத்தில் இற்று நொறுங்கி மண்மேடாக மாறுகின்றன.

‘தெறிச்சிருவ இளிக்கிறியே பேய் மாதிாி அமத்தியிற்று> ‘

‘பனையில் ஏர்ற பழக்கம் போகாது விடு விளக்க வைக்க. ‘

‘விடு மூதேசி விளக்க வைக்க ‘

முத்துவைத் திட்டுவது செல்லம்மாளிற்குச் சுவைத்தது. அப்படித் திட்டும்போது செல்லம்மாளிற்கு தலையில் ‘கிறுக்கம் ‘ ஏற்பட்டு விடுகிறது. இப்போது அவள் மனம் ஆறுமுகம் மாஸ்டரோடு அவனை ஒப்பிடுகிறது. அவள் அவரோடு பேச முடிவதில்லை. அவாிடம் நல்ல குணங்கள் மட்டுமே. மிகமிக நல்லவர்/ மிகமிக கடவுள் பக்தி. இப்போது இவை தான் அவாிடம் அவள் காணும் குறை. ‘முத்துவில் அவளுக்கு ஏற்படும் இப்படியான ஒரு பைத்திய வேகத்தோடு வரும் வெறிகலந்த ஆசை மட்டும் அவர்மேல் அவளுக்கு ஏற்படுவதில்லை. ‘ அவருக்கு முன் அவளுடைய நிலை இரந்து வாழும் பிச்சைக்காாியின் நிலைதான். கொடுத்து வாங்கும் சமத்துவ வியாபாரம் இருப்பதில்லை. ஒரு நாளும் இப்படி விளக்கு எாிந்ததில்லை.

தாம்பத்திய வாழ்வில் கூட மனித இயல்பையே மறைக்குமளவிற்கு மேல்பூச்சா> அவளுக்குள்ளாகத் துயின்று கொண்டிருந்த மனிதம் பெற்ற விழிப்பின் புறத்தோற்றம்தான் இது. இப்புறத்தோற்றத்தை விட காலம் காலமாய்த் துயின்று கொண்டிருந்த மனிதத்தின் எழுச்சி முக்கியமானது.

‘அவாில எனக்கு உயிர் ஆனா உன்னிலதான் எனக்கு ஆசை. ‘

‘நான் மாட்டம் அவரட்டன்போ. ‘

பேரம் பேசும் முத்து. பனையேறி முத்து. தன் முக்கியத்துவத்தை இப்போதுதான் அவனால் உணர்த்த முடியும். மகத்தான எழுச்சியின் முன் முத்து மனிதனாக நிற்கின்றான். தன்னை உணரும் நிலை இது.

வாசக மனதில் செல்லம்மாள் வடிவில் இப்போது ஈழச் சமூகமே விகசித்து நிற்கின்றது. காலம் காலமாய் மேல்பூச்சு வாழ்வில் தன் உணர்வுகளை இழந்த சமூகம். வாழ்வையே வெறும் சடங்காக பாவித்த சமூகம். சிறுபுறத்தாக்குதலில் அது தன் பலவீனங்களைக் களைந்து எழத்துடிக்கிறது. அது தன்னை உணர்கின்றது. இங்கு வாழ்வின் பொதுப்பின்னணிக்கும் இலக்கியத்திற்குமான உறவை உணர்ந்து கொள்ள முடிகிறது.

ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி எழுதப்பட்ட காலகட்டத்தில் தளையசிங்கம் முழுமையாக ஒரு கலைஞூனாகவே இயங்கியுள்ளார். அவர் வகுத்துக் கொண்ட வாழ்வின் பொதுப்பின்னணிக்கு இசைவான இலக்கியம் என்னும் விமர்சன அடிப்படை/ வாழ்வின் பொதுப்பின்னணிக்கும் கலைஞனுக்குமான உறவு குறித்தக் கேள்வியை இயல்பாகவே எழுப்புகிறது. இதற்கான தேடல் தளையசிங்கத்தை அடுத்த காலகட்டத்தினை நோக்கி முன்நகர்த்தியுள்ளது. தளையசிங்கத்தின் வாழ்வின் நிகழ்ந்த முக்கிய நிகழ்வான குருவுடனான அவருடைய சந்திப்பு 1966-ல் நிகழ்ந்தது. இதுமதல் தளையசிங்கம் சிந்தனை மீதான குருவின் பாதிப்பினை அவருடைய படைப்புலக வாழ்வு நெடுகிலும் உணரமுடிகிறது. ‘எழுத்தாளராக இருப்பதற்கு எல்லாவற்றையும் துறந்து விடத் தயாராய் இருந்ததுண்டு. உண்மையான பிறஸ்ற்றேஷன் அல்லது விரக்தி எனக்கு வருமென்றால் அது இலக்கியத்தைத் துறந்தால்தான் வரும் என நான் நினைத்திருக்கிறேன். ஆனால் இலக்கியம் என்னில் வளர்த்த துறவு இலக்கியத்தையே துறக்குமளவுக்கும் வந்துவிடும் என்பதை இப்பொழுதுதான் உணர்கிறேன் ‘. இதன்பொருள் தளையசிங்கம் இலக்கியத்தைத் துறந்துவிட்டார் என்பதல்ல. மனிதகுல மேன்மையின் பொருட்டு இலக்கியத்தை விட மேலான ஒன்றைத்தேட இலக்கியத்தையும் துறக்கலாம் என்பதே. ‘எழுத்தை மட்டும் பொிதாக நினைத்துக் கொண்டு

பிறதுறைகளிலிருந்தும் பிறவேலைகளிலிருந்தும் விடுபட்டிருப்பது எனக்குப் பிடிக்காத ஒன்றாக மாறிவருகிறது ‘ என தன்னுள் நிகழும் மாற்றத்தினை அவர் பதிவும்செய்துள்ளார். மாற்றுத் துறையாக தத்துவம் குறித்தான தேடல் அவருள் முனைப்பு கொண்டுள்ளது. என்றாலும் ஒரு கலைஞனின் சிந்தனையாகவே அது இப்போதும் பாிமளிக்கிறது.

படைப்புச் சூழல் குறித்த/ படைப்பாளிகள் குறித்த விமர்சனமாக ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி அமையும்போது/ இலக்கியத்தின் சில அடிப்படைகள் குறித்த விவாதங்களாக போர்ப்பறை இலக்கியக் கட்டுரைகள் அமைகின்றன. ஒரு வகையில் தளையசிங்கம் ஈழத்தமிழ்ப் படைப்புச் சூாலிலிருந்தே விடுபட்டும் நிற்கிறார். இலக்கிய அடிப்படைகள் குறித்த தெளிவிற்காக அவர்முன் வைக்கும் படைப்பாளிகள் கூட பெரும்பாலும் இந்தியத் தமிழ்ப் படைப்பாளிகளே. அல்லது உலகச் சாதனையாளர்கள். இலக்கியம் மொழி நாடு இனம் கடந்து மனித பொதுமையுடன் நிலைகொள்கிறது என்ற உணர்வு அவருக்கு இருந்திருக்கலாம். கைலாசபதியைக் கூட பெரும்பாலும் அவர் பொருட்படுத்தவில்லை என்றே கூறவேண்டும். இலக்கியத்தை உலக அளவிற்கு எடுத்துச் செல்லும்போது/ கைலாசபதி கண்ணில் படாத அளவிற்கு சிறுத்து போயிருக்க வேண்டும்.

கலைக்கும் தத்துவத்திற்குமிடையிலான தொடர்பினைக் குறித்தத் தேடலை சமூக வளர்ச்சியில் கலைஞனுக்கான பங்கிலிருந்து துவங்குகிறார். கலைப்படைப்புக்கள் சமூகத்தின் பொதுச் சொத்துக்கள். சுயமனதின் குறுகிய எல்லையைக் கடந்து சென்றவை. அவை பொதுச்சொத்துக்களாக மாறுவதனால் சமூகத்தின் பொது முன்னேற்றத்தைக் குறிப்பனவாகவும்/ துாிதப்படுத்துவனவாகவும் அமைகின்றன. கலை சமூகத்தின் பொதுச்சொத்து என்பது ஏற்கத்தக்கதான தர்க்கமே. ஆனால் அவை பொதுச்சொத்துக்களாக மாறுவதினால் பொது முன்னேற்றத்தைக் குறிக்கின்றன துாிதப்படுத்துகின்றன என தர்க்கத்தின் அடுத்த நிலையைக் கட்டமைத்துக் கொள்கிறார். தர்க்கத்தின் முதல்நிலையோடு உடன்படுபவர்கள் அதன் இரண்டாவது நிலையைையும் ஏற்றுக்கொண்டாக வேண்டுமென எதிர்பார்க்கின்றார்.

இத்தர்க்கத்தின் அடிப்படையில் சமூகத்தின் பொது முன்னேற்த்தில் கலைஞனின் பங்களிப்பினை ஏற்பதாக இருந்தால்/ கலைஞனின் முழுத்தொண்டுக்கும் வழிவகுக்கும் பார்வையையும் அதனை அடிப்படையாகக் கொண்ட இயக்கத்தினையும் தோற்றுவித்தாக வேண்டும். இதற்குக் கலையின் நோக்கம்/ சமூகச் சூழலின் போக்கு இவற்றினைக் குறித்த அறிவையும் பெற்றாக வேண்டும்.

சத்தியத்தைப் பற்றிய தாிசனங்கள் அறிவுக்குள் சீராக இறக்கப்பட்டு/ அறிவின் உதவி மூலம் வியாக்கியானப்படுத்தப்படும் போதுதான் கலைஞனுக்குப் பார்வை விாிவு

ஏற்படுகின்றது. இன்று நடைமுறையிலுள்ள ஒரே தத்துவம் மார்க்சியமே. எனவே கலைஞன் மார்க்சியவாதியாக இருந்தாக வேண்டும். இல்லையெனில் அதனை வெல்லும் வேறு தத்துவத்தைத் தேடிக் கண்டுபிடிப்பவனாக இருக்க வேண்டும்.

தமிழ்ச் சூழலில் மார்க்சியத் தத்துவத்தை ஏற்பவர்களை விட ஏற்க மறுப்பவர்களே திறமையான படைப்பாளிகளாக விளங்கும் நிதர்சன உண்மையையும் தளைய சிங்கம் கணக்கில் கொள்கிறார். புதுமைப்பித்தன்/ மெளனி/ க.நா.சு. போன்றவர்கள் மார்க்சியத்தை ஏற்றுக் கொண்டிருந்தால் இன்னமும் சிறப்பாக எழுதியிருக்க முடியும் என்ற தர்க்கத்தைக் கட்டமைத்துக் கொள்கிறார்.

எல்லா தத்துவங்களும் தத்துவங்களைக் கடந்த ஒரு நிரந்தரமான சத்தியத்தின் காலம் சார்ந்த வெளிக்காட்டல்களே. காலத்திற்கேற்ப அதனைப் பயன்படுத்துபவர்கள் கூட அதனையும் மீறி சத்தியத்தில் தன்னை நிலைநிறுத்தியாக வேண்டும். இங்குக் கலைஞனுக்குத் தத்துவம் இன்றியமையாததாகிறது.

கலைஞன் ஒரு தத்துவத்தை ஏற்றுக் கொண்டாக வேண்டுமா> தத்துவ எல்லைக்குள் தங்களை அடைத்துக் கொள்வது கலைஞர்களைக் கொன்று விடுவதாகாதா> என்ற கேள்வியையும் தளையசிங்கம் எதிர்கொள்கிறார். படைப்பாளிகளுக்கென்று இயல்பான பார்வை கோணம் அமைந்திருப்பதைச் சுட்டும் தளையசிங்கம்/ அப்பார்வை கோணம் ஆழமான தத்துவ பார்வையாகவும்/ தர்சன வீச்சாகவும் இருக்கும்போதுதான் ஆழமான கலைப்படைப்புக்கள் பிறக்கின்றன என்கிறார். பாரதிக்கும் பாரதிதாசனுக்கும்/ அகிலனுக்கும் ஜெயகாந்தனுக்குமிடையிலான தரவித்தியாசத்தை முன்னிலைப்படுத்தி இதை நிறுவிவிடவும் செய்கிறார். இதே அடிப்படையில் புதுமைப்பித்தனையும் ஜெயகாந்தனையும் ஒப்பிடும்போது ஜெயகாந்தன் முதன்மை பெறுவதும் தவிர்க்க இயலாததாகிறது. தளையசிங்கம் பயன்படுத்தும் தர்க்கமே அவரை இம்முடிவிற்கு இட்டுச் செல்கிறது. தத்துவ தேர்ச்சி பெற்றவர்கள் அனைவரும் ஏன் கலைஞர்களாக பாிமளிக்கவில்லை என்ற கேள்வியைத் தளையசிங்கம் எழுப்பவில்லை.

போர்ப்பறையில் தளையசிங்கம் விவாதிக்கும் இரண்டாவது இலக்கிய அடிப்படை காலத்திற்கேற்ற வடிவம்.

சிறுகதையின் செல்வாக்கு குறைந்து நாவலின் செல்வாக்கு வளர்வதற்கு சமூக மாற்றமே காரணம் என மார்க்சிய இலக்கியக் கோட்பாடான சோசலிஸ எதார்த்தம் முன்வைக்கிறது. கைலாசபதி இதனை ஒரு சூத்திரமாகத் தொடர்ந்து முன்வைப்பதாகத் தளையசிங்கம் குறிப்பிடுகிறார். (போர்ப்பறையில் இந்த ஒரு இடத்தில் மட்டுமே கைலாசபதி என்னும் பெயர் சுட்டப்படுகிறது.) ஆனால் நாவலில் சிறுகதை என்னும் வடிவங்கள் பதினாறாம்

நூற்றாண்டிலிருந்து துவங்கிய சிந்தனை மாற்றத்தினால் தோற்றுவிக்கப்பட்டவை. இவையே முதலாளித்துவ பொதுஉடைமை அமைப்பிலும் தொடர்ந்துள்ளது. இதிலிருந்து சமூக மாற்றங்கள் இலக்கியத்தின் உள்ளடக்கத்தில் மட்டுமே மாறுதல்களைத் தோற்றுவிக்கின்றன. உருவத்தில் அல்ல என்ற முடிவிற்குத் தளையசிங்கம் வருகிறார். இதன் மாற்றுதரப்பாக சிந்தனை மாற்றமே உருவ மாற்றத்தினை பிரதிபலிக்கும் என்ற தர்க்கநிலையைக் கட்டமைத்துக் கொள்கிறார். தர்க்கத்தின் இரண்டாவது நிலையாக புதிய சிந்தனை மாற்றத்தை கலை இலக்கிய தத்துவ துறைகளில் முதலில் இனங்காண முடியும் என்ற முடிவினை மேற்கொள்கிறார்.

புதுயுகத்திற்கான சிந்தனை மாற்றத்தினை இந்திய தத்துவங்களை முன்வைத்து தளையசிங்கம் தேடலை நிகழ்த்துகிறார். அரவிந்தாின் ‘தாிசனம் ‘ இங்கு அவருக்குக் கைகொடுக்கிறது. பேரறிவு அறிவுக்குள் இறங்கி தன்னை வெளிக்காட்டும் நிலை. இலக்கியங்களில் தான் முதலில் உணரமுடியும். அடிப்படையான உருவ உள்ளடக்க மாற்றங்களை இது கொண்டிருக்கும். அறிவுவாதத்திற்கு முந்திய இலக்கியப் படைப்புக்கள் உள்ளுணர்வு செறிந்த கற்பனைக் காவியங்களாய் இருந்தன. அறிவுவாதத்திற்குப் பிந்திய படைப்புகள் புலன் உணர்வும் அறிவும் செறிந்த எதார்த்த படைப்புகளாய் அமைந்தன. வரப்போகும் புதுயுகத்தில் பிரபஞ்ச உணர்வும் எதார்த்த உணர்வும் இணைந்திருக்கும். தளையசிங்கம் இதனைப் பிரபஞ்ச எதார்த்தம் என்கிறார். பிரபஞ்ச எதார்த்தத்தையே தளையசிங்கத்தின் இலக்கிய கோட்பாடாகக் கொள்ள வேண்டுமென்பதில்லை. ஒரு காலகட்டத்தில் அவருள் இது செல்வாக்குப் பெற்றிருந்தது. ஆனால் இச்சிந்தனையே அடுத்த காலகட்டத்திற்குள் அவரை முன்நகர்த்தியுமுள்ளது. இலக்கியத்தையே மறுக்கும் நிலை அது.

கலை/ கண்டுபிடிப்பு – ஒத்துழைப்பு – ஒத்தோடல் விவாதிக்கப்படும் மூன்றாவது அடிப்படை. விவாதிக்கப்பட்ட இம்மூன்று அடிப்படைகளிலும் இம்மூன்றாவது அடிப்படையே முக்கியமானது. இலக்கியப் படைப்புகளை முன்நிறுத்தி விவாதிக்கின்றார் இங்கு.

மேல்மனம்/ அடிமனம்/ பிரபஞ்ச மனம்/ அனைத்தையும் தாண்டிய பேரானந்தநிலை என மனித மனதை நான்கு நிலைகள் கொண்தாகத் தளையசிங்கம் கட்டமைத்துக் கொள்கிறார். தளையசிங்கம் இதனை விஞ்ஞான ாீதியான கோட்பாட்டுத் தளம் என்கிறார். மேற்கத்திய விஞ்ஞானம் மனம் அடுக்குகளிலானது என்று மட்டுமே கூறுகிறது. அடுக்குகளின் எண்ணிக்கையில்/ குணங்களில் விஞ்ஞானிகளுக்கிடையே கருத்து வேறுபாடும் உண்டு.

தளையசிங்கத்தைப் பொறுத்தவரையில் சமயத்திற்கு அடுத்தபடியாகக் கலையே அகத்தின் ஆழம்வரை செல்லும் தொழிலாகவும்/ தொழுகையாகவும் அமைகிறது.

கலை எழுப்பும் பரவச நிலையே அதன்குறி. கனவும் பரவசநிலையை எழுப்பலாம். ஆனால் நிரந்தர பரவசம் அல்ல. எந்த அளவிற்கு நிரந்தர அடித்தள பரவச நிலையோடு தொடர்புடையதாக அமைகிறதோ அந்த அளவிற்குப் படைப்பு தரம் வாய்ந்ததாக அமைகிறது.

கலைதரும் பரவசம் அடித்தளத்தினை அடைந்து மீண்டும் மேல்தளம் நோக்கித் திருப்பப்படும் போது கலை மனிதனைச் செயல்படத்தூண்டும். இதுவே கலையின் உன்னத நிலை. தளையசிங்கம் முன்வைக்கும் இந்த இலக்கிய செயல்பாட்டினை விளங்கிக் கொள்ள அவர் சுட்டும் இலக்கியத்தின் மூன்று அடிப்படை நிலைகளைக் குறித்து அறிந்திருத்தல் அவசியம்.

கண்டுபிடிப்பு என்பது சத்தியத்தின் மாற்றங்கடந்த நிலையைக் கண்டுபிடிப்பது. மேலும் மாற்றங்களுக்குக் காரணமாக இருக்கும்போது மாற்றங்கள் எவ்வாறு வளர்ந்து வருகின்றன என்பதையும் கண்டுபிடிப்பது.

ஒத்துழைப்பு என்பது சமூக பொருளாதார அரசியல் கலாச்சாரத் துறைகளில் தர்ம வளர்ச்சிக்கு உதவுவது.

ஒத்தோட மறுப்பது என்பது சமூக அமைப்பு தர்ம வளர்ச்சிக்கு உதவாது பிற்போக்கு கொண்டதாய் இருக்கும்போது படைப்பாளி அதனோடு ஒத்தோட மறுப்பது. புதுமைப்பித்தன்/ மெளனி/ சித்தர் பாடல்களில் இம்மூன்றாவது நிலையைக் காண்கிறார். தளையசிங்கம் இதன் பொருட்டே இவர்களை அங்கீகாிக்கின்றார்.

தளையசிங்கம் முன்வைத்துள்ளவை அனைத்தும் ஏற்கனவே தனித்தனியாக இலக்கியத்துடன் தொடர்புபடுத்தி பேசப்பட்டவைகள்தான். தளையசிங்கம் செய்வதெல்லாம் பொருளைப் புதிதாய் வரையறுத்து/ ஒரு ஒழுங்கில் இவை அனைத்தையும் இணைப்பதுவே.

இம்மூன்று நிலைகளையும் படைப்பியக்கத்தில் உணர்ந்து செயல்படுகிறார்கள் என்பதல்ல. புதுமைப்பித்தன் மெளனி போன்றவர்கள் உள்ளுணர்வின் உந்துதலுக்கு உருவம் கொடுப்பவர்களாகவே இருக்கின்றனர். உள்ளுணர்வின் இந்த உந்துதலை தளையசிங்கம் படைப்பாற்றலுக்கு அடிப்படையான பிரபஞ்ச சக்தியின் உந்துதலாகவே காண்கிறார். அவரைப் பொறுத்த வரையில் கலைஞனல்ல அதுவே கலைஞனிடம் உந்திக் கொண்டு நின்று செயல்படுகிறது. ஆனால் இது அறிவுாீதியாக விளக்கப்படவேண்டும். விளக்கப்படும்போதே நாகாீக வளர்ச்சி ஏற்படுகின்றது. இங்கு விமர்சனத்தின் தேவை எழுகிறது.

சிந்தனை தந்த இப்புதிய ஒளியில் தளையசிங்கம் சில இந்தியத் தமிழ்க் கலைஞர்களை எதிர்கொள்கிறார்.

மெளனியின் கதைகள் கண்டுபிடிப்பின் ஒரு பக்கத்தினையே எட்ட முயல்கிறது. அறிவிற்குள் இறங்காத உந்தலாகவும் தேடலாகவுமே நிற்கின்றன. சத்தியத்தின் தர்சனத்தை நோக்கிய உந்துதல்கள். இந்த உந்துதலைக் காட்டுவதற்கே மெளனி தன் கலைத்திறமையைக் கட்டுப்படுத்தியுள்ளார். வாசகன் அடையும் இனங்காண இயலாத தேடலின் அருட்டுணர்வு இதன் விளைவே. கூடவே ஒத்தோட மறுத்தலையும் எதிர்கொள்கிறான். மெளனியின் விமர்சகரான தருமு சிவராமு இந்த அருட்டுணர்வையே கலைக்கோட்பாடாக மாற்றுவதாகத் தளையசிங்கம் சுட்டுகிறார். இங்கு விமர்சனம் அறிவு ாீதியாகச் செயல்படவில்லை என மதிப்பிடும் தளையசிங்கம் மெளனியின் கதைகளுக்குாிய மதிப்பும் கெடுவதாகச் சுட்டுகிறார். க.நா.சு-வை மட்டுமே மெளனி கதைகளுக்குாிய ஆழத்தை உணர்ந்தவராகக் கருதும் தளையசிங்கம் அவரும் விமர்சன ாீதியாக விளக்குபவராய் இல்லை என்கிறார்.

விஞ்ஞான யுகத்தின் அறிவுக் கூர்மை ஏறிய எழுத்து நடையையும்/ சமூகத்தை அவதானிக்கும் போக்கையும்/ கதைகளை உருவாக்கும் திறனையும் புதுமைப்பித்தனிடம் காணும் தளையசிங்கம் ஜெயகாந்தனில்தான் காலத்திற்கேற்ற பார்வை விாிவைக் காண்கின்றார். ஜெயகாந்தன் கதைகள் அடித்தள பரவசம் இல்லாவிட்டாலும் மேல்மன எல்லைக்குள் தெளிவை ஏற்படுத்துவதாகக் கருதுகிறார். சமூகத்தை எவ்வாறு வளர்க்க வேண்டுமென்ற என்ற திசை காட்டும் போக்கும் அதற்கான தத்துவ ஆமோதிப்பும் ஜெயகாந்தனோடு ஒப்பிடும்போது புதுமைப்பித்தனிடம் இல்லாததை ஒரு குறையாகவே மதிப்பிடுகிறார். மெளனியின் முழுகதையையும் ஜெயகாந்தனின் விழுதுக்கள் பின்னணியில் வைத்து பார்த்தால் மெளனியின் போதாமைகளை விளங்கிக் கொள்ள முடியும் என்றும் தளைய சிங்கம் தன் சிந்தனைகளை முன்வைக்கின்றார். இந்தியத் தமிழ் விமர்சகர்கள் தளையசிங்கத்தின் மேல் கொண்ட கோபத்திற்கு இதுவே உண்மையான காரணம். ஆனால் தளையசிங்கத்தைப் போல் இதை வெளிப்படையாகக் கூறும் நேர்மை அவர்களுக்கு எப்போதுமே இருந்ததில்லை. சுய பாதுகாப்பு குறித்த அவர்கள் உணர்வு இதை அனுமதிப்பதுமில்லை. ஆனால் தளையசிங்கத்தின் பதிவுகள் அவராக வகுத்துக்கொண்ட சிந்தனை அடிப்படையைச் சார்ந்தது. இச்சிந்தனையை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டுமென்பதில்லை. முரண்படவும் முடியும். வேண்டும்.

தளைய சிங்கத்தின் இலக்கியப் பார்வை பெற்ற புதிய பாிமாணங்களையே அவருடைய இக்காலகட்டத்துப் படைப்புகளும் பிரதிபலிக்கின்றன. ஆழ்ந்த தத்துவ தேடலுக்கு முன் தூக்கம் தரும் படைப்புகள் படைப்பின் கலைத் தன்மையையே குலைத்து விடுமளவிற்கு தேடல் அவருள் தீவிரம் கொண்டுள்ளது.

புனைகதை வடிவங்களை மட்டுமல்லாது கவிதை வடிவையும் தளையசிங்கம் இக்கால கட்டத்தில் கையாண்டுள்ளார். செவ்வியல் இலக்கியங்களைப் புதுப்பார்வைக்கு உட்படுத்தும்போக்கு புதுப்பாிமாணமாக அவர் படைப்புலகை அடைந்துள்ளது. கவிதையிலும் புனைகதையிலும் அவர் இராமாயண உலகில் வெகுதூரம் பயணம் செய்திருப்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.

‘உள்ளும் வெளியும் ‘ அகல்யை தொன்மம் மீதான தளையசிங்கத்தின் புதிய வாசிப்பினை முன் வைத்துள்ளது. ஒரு வகையில் இது புதுமைப்பித்தனின் சாபவிமோசனத்தின் மீதான வாசிப்பும் கூட. புதுமைப்பித்தனின் சாபவிமோசனம் உலகியலின் முன் ஆன்மீகத்தின் வீழ்ச்சியை உணர்த்துகிறதென்றால் உள்ளும் வெளியும் ஆன்மீகத்தின் வெற்றியை நிறுவுகிறது. புதுமைப்பித்தனின் சாபவிமோசனத்தில் அகல்யை மீண்டும் கல்லானாள். இங்கு கல்லாக மாறுவது கெளதமனே. அகல்யைத் தன்னைக் கல்லாக்கிய கெளதமரை கல்லாகவும் எல்லாவுமாக மாற்றிவிட்டு தானும் கனியாக இருந்தாள். கெளதமன் உண்மையைத் தனக்குள் உணர்ந்தபோது மாயை அகன்றுவிடுகிறது. ஆன்மீகமும் வென்று விடுகிறது.

தளையசிங்கம் படைப்பில் தத்துவமுடிச்சுகளூடாக நீண்ட பயணம் மேற்கொள்கிறார் வாசகமனம் பின் தொடர இயலாது இரைத்து மூச்சு வாங்குமளவிற்கு.

‘ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி ‘ காலகட்டத்து படைப்புகளோடு ஒப்பிடும்போது தளையசிங்கம் என்ற கலைஞனை முன்னவைதான் இனங்காட்டுகின்றன.

மூன்றாவது காலகட்டமான ‘மெய்யுள் ‘ தளையசிங்கத்தை ஒரு சிந்தனையாளராகவே இனங்காட்டுகிறது. சிந்தனையாளரான தளைய சிங்கத்தின் சிந்தனையில் அவ்வப்போது இலக்கியம் தொடர்பான விஷயங்களும் இடம் பெறுகின்றன என்ற அளவிற்கே இலக்கியம் முக்கியத்துவம் பெறுகிறது. சிந்தனை மாற்றத்திற்கேற்றதான வடிவம்/ கலைதரும் பரவசம் என்னும் விதைகள் தளையசிங்கத்தை அடுத்த படி நிலை வளர்ச்சிக்கு உந்தியுள்ளன. ‘கலை இலக்கியமும் இனிச் சாகிற காலம் முழுவாழ்க்கையே கலையாகவும் தொழுகையாகவும் பெரும் பரவசத் தொழிலாகவும் வளரும்போது போலியான ஒரு கலை இலக்கியம் என்ற தனிப்பிாிவு எதற்கு> ‘ தளையசிங்கத்தின் மனசாட்சியின் குரலான நல்லசிவம் எழுப்பும் கேள்வி இது. இதையே கலை இலக்கியம் குறித்தான தளையசிங்கத்தின் இறுதி நிலையாகக் கொள்ளவேண்டும்.

‘பூரண இலக்கியம் ‘ என்னும் புதிய இலக்கு நோக்கி அவர் சிந்தனை நகர்கிறது. மொழியில் போர்ப்பறை கட்டமைத்த தர்க்கங்கள் கழன்று விட்டுள்ளன. கேள்விகளை

முன்வைத்து தேடல் நீட்சி பெறுகிறது. இலக்கியம் எதற்கு என்ற கேள்வியோடு தேடல் துவங்குகிறது. ‘தரமான இலக்கியங்களும் கலையும்தான் உண்மையான நிரந்தர மன அமைதிக்கும் மன ஓய்விற்கும் பரவசத்திற்கும் வழி வகுக்கும் ‘. இங்கு பொழுது போக்கு என்பது குறித்த கேள்வி இயல்பாக எழுகிறது. பொழுதுபோக்கு என்ற தேவை மனோதத்துவம் உறுதி செய்தபடி மனிதன் இன்னும் நோயாளியாக இருப்பதையே சுட்டுகிறது. பூரணத்தை மனிதன் அடையும்போது நோய் அகன்றுவிடும். இதற்கான மருந்து இலக்கியம்தான். காலம் காலமாக இலக்கியம் இந்திய மரபில் சமயத்தோடு வளர்க்கப்பட்டது இதனால்தான் என்கிறார் தளையசிங்கம்.

‘கலை கலைக்காக ‘இ ‘கலை கட்சிக்காக ‘ என்பனவற்றையெல்லாம் முதலாளித்துவ சமூக அமைப்பின் நோய்களாகக் காணும் தளையசிங்கம் இவற்றையும் நிராகாிக்கிறார். ‘இன்றைய இலக்கியம் விஞ்ஞானமாகவும் அரசியல் பொருளாதார கோட்பாடாகவும் சுதந்திரமாகவும் உண்மையான கலையாகவும் அமையும். ஆனால் அது தன் தனித்தன்மையை இழக்காது ‘. தளைய சிங்கத்தின் தேடல் இலக்கை எட்டிவிடுகிறது. மெய்யுள் என்னும் புதிய வடிவமாக உருவெடுக்கிறது.

போர்ப்பறையில் ஈழத்துப் படைப்புச் சூழலை முழுவதுமாகப் புறக்கணித்த தளையசிங்கம் மீண்டும் சூழலுக்குள் வருகிறார். ஏழாண்டு இலக்கிய வளர்ச்சியில் தான் கண்ட முடிவுகளை மறுபாிசீலனைக்கு உள்ளாக்குகிறார்.

ஈழத்தமிழிலக்கிய மரபு அவரைப் பொறுத்த வரையில் 1956-க்கும் 72-க்குமிடையே சில சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளன. கைலாசபதியின் சில கட்டுரைகளும் இவற்றுள் அடங்கும். பல முற்போக்கு மரபினைச் சார்ந்த படைப்பாளிகளின் சாதனைகள். எஸ்.பொன்னுத்துரை இப்போது உலகத்தரத்தை எட்ட முயலும் கலைஞனல்ல. எழுத்தாற்றல் உள்ள எஸ்.போ-வை மேல்தள ஆசார மரபு கையாளாகப் பயன்படுத்திவிட்டது. எஸ். போ குறித்தான இந்த மதிப்பீட்டு மாற்றம் அவருடைய தத்துவ சாயல் இன்மையின் காரணமாக அமையலாம். தத்துவ போக்கில்லாதவர்களை விட தத்துவ போக்குக் கொண்டவர்கள் தளையசிங்கத்திற்கு இப்போது மேலானவர்கள். ஈழத்து ஆசார மரபுடனான எஸ்.பொ கூட்டுறவு மற்றொரு காரணமாகலாம்.

தளையசிங்கத்தின் மெய்யுளான கலைஞனின் தாகம் ஈழத்துப் படைப்புச் சூழலையே தளமாகக் கொள்கிறது. கதையாக கட்டுரையாக செய்தித் துணுக்காக/ கவிதையாக இவை அனைத்தும் அல்லாத ஒன்றாக பரந்து செல்கிறது. ஒரு வகையில் பாரதியின் ஞான ரதத்திற்கு ஒப்பாகக் கூறவேண்டும். புதிய வடிவம் மரபில் வழித்தோன்றல்களைத் தோற்றுவிக்காத வரையில் ‘தெருவடைச்சான் சந்துகளே ‘.

முழுமையான பார்வையில் தளையசிங்கத்தின் நீண்ட பயணம் வியப்பூட்டுகிறது. ஈழத்தமிழ் சமூகத்தின் உட்குமுறலை அவரால் மட்டுமே அன்று கேட்க முடிந்துள்ளது. ஒரு வகையில் அதன் துரத்தலின் விளைவே இந்த நீண்ட பயணம். பயணத்தின் துவக்கத்தில் மேற்கத்திய மனதைத்தான் அவாிடம் இனங்காண முடிகிறது. இடையில் அது கீழை தேய தத்துவங்களை அரவணைத்துக் கொள்வதில் தீவிரம் கொள்கிறது. இறுதியில் முழுமையான கீழ்திசை மனமாக தன்னை மாற்றிக் கொள்கிறது. மேற்கு தந்த வடிவங்களைக் கூட உதறிவிட முற்படுகிறது.

தளையசிங்கம் தமிழ்ச் சூழலால் மறுக்கப்பட்ட அல்லது மறக்கப்பட்ட ஒரு கலைஞன். இம்மறுப்பிற்கான நியாயமான காரணங்கள் ஏதுமில்லை. அவருடைய பிற்காலப் படைப்புகள் விமர்சன மதிப்பீட்டில் கீழிறங்கக் கூடும். என்றாலும் இலக்கிய உலகில் அவர் சாதனைகள் மிகப்பொிது. ஈழத்துப் படைப்புச் சூழலில் ஒரு மரபைத் தோற்றுவித்த பெருமை அவருடையது. தளையசிங்கத்தின் துவக்ககால புனைகதைகள் இன்றும் நாளையும் அப்பெருமையைத் தக்கவைத்துக் கொள்ளும்.

***

Series Navigation

முனைவர்.எம்.வேதசகாயகுமார்